அன்புள்ள அம்மா – வாசு பாலாஜி

டேப் காதர் – காரைக்குடி மஜீத்

சஹர்பாவா பற்றிய சம்பவத்தை அவர் வர்ற அதே நேரத்துல அடிச்சி வெளியேத்துன மஜீது பாய் 2020க்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பொறவு இங்கே தட்டியிருக்கார். இன்னும் தட்டனும். –  AB.

*

டேப் காதர் – மஜீத்

சின்னப்புள்ளையா இருக்கும்போது – என்ன ஒரு மூனுநாலு வயசிருக்கும் – நோம்புநாளைல வீட்ல விடியக்காலைல சஹரு வைக்கிறதுக்கு எந்திரிப்பாய்ங்களா, எங்கிட்ருந்துதான் முழிப்பு வருமோ எந்திரிச்சிருவேன்…. சஹரு வைக்கத்தான்…
அதேமாதிரி சாயந்தரம் எங்கேர்ந்தாலும் நோம்புதிறக்குறதுக்கும் தவறமாட்டேன்…

பெரும்பாலும் படுக்கப்போகும்போது நாம போடுற கண்டிசனோட எஃபக்டா, காலைல எழுப்பிவிட்ருவாய்ங்கெ.. ஃபுல்கட்டு கட்டிட்டு – முக்கியமா அந்த தயிரு வாழைப்பழம் – தூங்கிறவேண்டியதுதான். சமயத்துல வெருகுமாதிரி கரெக்ட் டயத்துக்கு, சாப்பாடு வச்சவொடனே எந்திரிக்கிறதும் உண்டு.

அப்டி ஒருதடவை தன்னால எந்திரிச்ச அன்னிக்கு, திடீர்னு ஒரு சந்தேகம்… இவய்ங்கெல்லாம் எப்டி முன்னாலயே எந்திரிச்சு சமைச்சி ரெடியாகுறாய்ங்கென்னு… அலாரம்லாம் அப்ப ஃபேஷன் இல்லை.. அவய்ங்கெட்டயே கேட்ருவோம்னு கேட்டா, சஹர்பக்கிரிசா வந்து எழுப்பிவிட்ருவாருன்னு சொல்லவும்.. அவரு வந்து எப்டி எழுப்புவாருன்னு இன்னொரு சந்தேகம் வந்தாலும் கேக்கலை… நாமளே பாத்துருவோம்னு முடிவு பண்ணியாச்சு.. அடுத்தநாள் உசாராவே தூங்கிக்கிட்ருந்தேன்.. சஹருப்பக்ரிசா டேப்படிக்கிற சத்தம் வீட்டுவாசல்ல கேக்கவும் ஒரே ஒட்டமா ஓடி கதவைத்திறந்து என்ன சொல்றாருன்னு பாக்குறதுக்கு நின்னா அவருபாட்டுக்கு பாடிக்கிட்டே போய்ட்டாரு.. உள்ளே வந்தா, எல்லாரும் எந்திரிச்சுட்டாய்ங்கெ.. வெருகு தன்னால எந்திரிச்சிருச்சு பாருன்னு சொல்லிக்கிட்டே, எதுக்குடா வாசக்கதவைத் தொறந்தேன்னு கேட்டாய்ங்கெ… சஹர்ப்பக்ரிசா வந்து எழுப்புவாருன்னு சொன்னிய.. அவருபாட்டுக்கு டேப்படிச்சுக்கிட்டே போய்ட்டாருன்னு கொறைப்பட்டுக்கிட்டேன்.. அவரு வர்ற சத்தங்கேட்டு நாமதான் எந்திரிக்கனும்கவும் புஸ்ஸுன்னு ஆயிருச்சு..

பல பக்ரிசாக்கள் வந்தாலும் அப்போ வந்த அந்த வயசான சஹர்பக்ரிசா மேல சின்னப்புள்ளைகளுக்கு ஒரு பிரியம்தான்.. வெளையாடுற வெளையாட்ட விட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடி அரிசியோ காசோ வாங்கிக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை… பெரியபெரிய பாசிமணி மாலைலாம் கலர்கலரா போட்டுருப்பாரு.. அதீத சாந்தமா ஒரு முகம்.. கொஞ்சநாளைக்கப்பறம்  அவரைக்காணலை… சஹருக்கு இன்னோரு சாந்தமுக வயசான பக்கிரிசா வந்தாரு… கருப்புநெறம்…அவரைவிட இவரு நல்ல உயரம், குரலும் கணீர் ரகம். பிற்பாடு அவரை நான் பாட்டிவீட்டுக்குப் போகும்போது சிவகங்கைல பாத்தேன்.. நன்னி வீட்டுக்கு பக்கத்துலயே. எங்க நன்னிட்ட விசாரணையைப் போட்டா, அவரு இந்த ஊருதாண்டா, அந்தா பள்ளியாசலுக்கு எதுத்தாமாதிரி ஒரு ’கோரி’ (சமாதி) இருக்குல்ல? அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டடம் இருக்குபாரு, அங்கதான் இருக்காருன்னு சொல்லவும், நூறு தொணைக்கேள்வி கேட்ருப்பேன்…(இவரு எப்டி அங்கெ எங்க ஊர்ல?)

இப்பதான் மேட்டர்… அவரு குடும்பத்துல மொத்தம் அஞ்சுபேரு.. அவரு அவரோடமகன் காதர், காதரோட அம்மா, அப்பறம் காதரோட சின்னம்மாமாரு ரெண்டுபேரு… காதருக்கு அப்ப பதினஞ்சு வயசிருக்கும்… மாநெறம்.. கண்ண்ண்ணீர்னு ஒரு குரல்.. நல்ல ஒயரம்… டேப் அடிச்சிக்கிட்டுப் பாடுனா எல்லாருக்கும் புடிக்கும்… பகல்ல பாடுற சூஃபிப் பாட்டுகளுக்கும், பாடாதபோது ரெண்டு சின்னம்மாக்கள்ட்ட வம்பிழுத்து வலுச்சண்டை போடும்போது பேசுற லாங்குவேஜுக்கும் இடைவெளி ஏழுகாத தூரத்துக்கும் மேல… யாரும் ஏண்டா இப்டி கெட்டவார்த்தையா பேசுறே மூதேவின்னு கேட்டுப்புட்டா அம்புடுத்தேன்.. ஒன்னையாடி கேட்டேன், அவளுகளைத்தானடி கேட்டேன்னு ஆரம்பிச்சு, சின்னம்மாக்களைக் கேட்டமாதிரி ஒரு பத்துமடங்கு கேள்வி, அவுகளுக்குக் கெடைக்கும்.., அப்டி ஒரு அடங்காத குணம்… அவங்க அம்மாவும் பாவாவும் அவரைத் திருத்த முயற்சி பண்ணி, அவ்ளோ திட்டு வாங்கினதுக்கப்பறம், எப்டியோ தொலைன்னு விட்டுட்டாக…

இஷாவுக்கு அப்பறமா, சாப்ட்டுக்கீப்ட்டு எல்லாரும் படுத்தவொடனே, டேப்பை எடுத்துருவாரு காதரு…. கம்பீரமான குரல்ல சும்மா ஒரு மணிநேரம் சினிமாப் பாட்டாப் பாடுவாரு.. வித்தியாசமான ப்ளேலிஸ்ட்டு… பழசு, புதுசு, ஹிட்டு, யாரும்கேட்டே இருக்காத பாட்டுன்னு சும்மா கலக்கி எடுத்துப்புடுவாரு… இதுல என்ன விசேசம்னா, அப்பப்ப பாட்டுகளுக்கிடைல அவுக சின்னம்மா ரெண்டுபேரையும் நைஸா நொழைச்சுருவாரு.. அது நல்லமாதிரியும் இருக்கும், கெட்டமாதிரியும் இருக்கும்… அவர்ட்ட யாருபோய்க் கேக்குறது? இப்டித்தான் ஒருநாள் ராத்திரி பாடிக்கிட்டே இருக்காரு, இடையில ஒன்னும் செருகல் இல்லை, என்ன ஆச்சு இன்னிக்கு? ஏன் இன்னும் சின்னம்மாக்களை இன்னிக்கு கோர்த்தூடலைன்னு அந்த ஏரியாவைவே யோசிக்க வச்சிட்டாருன்னா பாத்துக்கிங்க… மணி பத்தை நெருங்கவும், யாரோ (ஒரு சின்னம்மாவாத்தான் இருக்கனும்) போதும் படுடான்னு சொல்றதும் கேட்டுச்சு.. நீ பொத்திக்கிட்டு தூங்குடி டேஷ்டேஷ் ன்னு சொல்லிட்டு கடேசிப்பாட்டு ஒன்னு பாடுனாரு பாருங்க: (அப்ப புத்தப்புதுசா ரிலீசான பாட்டு)

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..
முழுப்பாட்டையும் பாடிட்டாரு… அப்பவும் சின்னம்மாக்களைப்பத்தி ஒன்னும் சொருகலை…
பாட்டையும் முடிச்சாரு… இப்டி…..:
என் காலம் வெல்லும்; வென்றபின்னே வாங்கடா வாங்க
வாங்……கடா வாங்க…
ஐசா வா…………ங்கடா வாங்க…
சவுரு வா………ங்கடா வாங்க….
ஐசா (ஆயிஷா)
சவுரு (ஸஹர்பான், இல்லைனா ஜஹுபர்னிசாவா இருக்கும்)
ரெண்டும் அவுக சின்னம்மாக்களோட பேரு….

கொஞ்சநாள்ல காதருதான் எங்க ஊருக்கு சஹர்ப்பக்ரிசாவா வந்தாரு.. அப்பறமா ரொம்பநாளா அவரைப் பாக்கலை.. சுமாரா ஒரு அஞ்சு பத்து வருசம் இருக்கும்.. எதிர்பாக்காத வகைல எதிர்பாக்காத இடத்துல அவரை சந்திச்சோம்.. எங்கத்தாவும் நானும்…

அந்த ஏரியாவுலேயே ஒரே வண்டிங்கிற ரேஞ்சுல எங்கத்தா எங்கூர்ல ஒரு மோட்டார் சைக்கிள் வச்சிருந்தாரு.. பிற்பாடு அவருதான் ரொம்ப்பேருக்கு வண்டியோட்டப் பழகிக்கொடுத்தாரு.. பலமாதிரி வண்டிகள்லாம் வச்சிருந்துட்டு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்ல செட்டில் ஆன நேரம் அது.. அவரு வண்டியை யாரையும் தொடக்கூட விடமாட்டாரு… அப்டியாப்பட்டவரு அவரு ஃப்ரண்டு ஒருத்தருக்கு வண்டியைக் கொடுத்துட்டாரு.. அதுவும் எந்த ஊருக்குன்னா, கிட்டத்தட்ட அறுபத்தஞ்சு கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற திருவாப்பாடிங்கிற ஊருக்கு,, இவரு சின்னப்புள்ளைல அம்மாபட்டினத்துல இருக்கும்போது அவரு பழக்கமாம்.. வயசு இவரைவிட ரொம்ப அதிகம்..அப்பப்ப அவரு எங்கவீட்டுக்கு வந்துட்டுப் போவாரு.. ஏதோ ஒரு கணக்குல வண்டியை மூனுநாளைக்குன்னு கொடுத்துவிட்டுட்டாரு.. வண்டி அஞ்சுநாளாகியும் வரலை.. சரி இனிமே சரியா வராதுன்னு கெளம்பிட்டாரு… பஸ்ல திருவாப்பாடிக்கு… வர்றியாடா தம்பின்னு என்னயக் கேக்கவும், நமக்கு கசக்குமா என்ன? தொத்திட்டேன்… மத்தியானம் கெளம்பி, சாயந்தரம் போய்ச்சேந்தோம்..

வண்டியைப்பாத்தா பாவமா இருந்துச்சு… ஸ்டாட்டாகலய்யான்னு சொன்னாரு… மெக்கானிக்கை வரச்சொல்லிருக்கேன் இன்னும் வல்லைன்னும் சொன்னாரு.. எங்கத்தா உக்காந்துட்டாரு… பிரிபிரின்னு பிரிச்சு என்னென்னவோ பண்ணி, சிகரெட் ஃபாயில் பேப்பரையெல்லாம் ஊஸ் பண்ணி, ஒரு மணிநேரத்துல வண்டியை ஸ்டாட் பண்ணிட்டாரு… ஒரேஒரு சின்ன சிக்கல்… எங்கெயோ அவரு விழுந்து எந்திரிச்சதுல ஹெட்லைட்டு கண்ணாடி, பல்பெல்லாம் ஒடைஞ்சிருந்துச்சு… சரிபண்ண முடியாது.. பரவால்ல போயிரலாம்னு கெளம்பிட்டோம்.. அரைவெளிச்சத்தோட கெளம்புனா ஆவுடையார்கோயில் வந்து சேரும்போதெல்லாம் நல்ல இருட்டு… எங்கெ சாப்டம்னு இப்ப நெனைப்பில்லை… டீக்குடிச்சிட்டு, சிகரெட் அடிச்சிட்டு கெளம்புனா இருட்டிருச்சு…. ஊர் எல்லை தாண்டுற வரைக்கும் ஒன்னுந்தெரியலை… ஒரு ரெண்டு கிலோமீட்டர் தாண்டுனவொடனே ரோடு தெரியலை.. வண்டில லைட்டும் இல்லை.. (இருந்தாலும் பிரமாதமாத்தான் இருக்கும்னு வைங்க)… அடுத்த ஊருன்னு எடுத்துக்கிட்டா ஏம்பல்தான்… ஆனா அதுவரைக்கும் போகமுடியான்னு இப்ப அவருக்கே யோசனையாப் போச்சு… என்னடா தம்பி பண்ணலாம்னு எங்கிட்ட கேட்டாரு.. போங்க பாப்போம்னு சொல்றேன் நான், பெரியமனுசன் மாதிரி… இன்னும் கொஞ்சதூரம் ஸ்லோவா போனோம்.. திடீர்னு ஒரு வெளிச்சம் தெரிஞ்ச்சிச்சு.. சுமாரா ஒரு மைலுக்கு அங்குட்டு… தம்பீ, என்னமோ லைட்டு தெரியுது ஆனா அங்கெ எதுவும் பெரிய ஊரு இல்லயேடான்னாரு… நான் மறுபடியும், போங்க பாப்போம்னு சொன்னேன்.. கிட்டக்க நெருங்க நெருங்க மைக்செட் லவுடுஸ்பீக்கர்ல பாட்டுன்னு ஒருமாதிரி சூழ்நிலை மாறிருச்சு… ஒரு ஆள் சைக்கிள்ல வந்தாரு.. அவர்ட்ட இது எந்த ஊரு என்ன விசேசம்னு கேட்டா, இந்த கிராமத்துக்குப் பேரு பாக்குடி… திருவிழா… வள்ளிதிருமணம் நாடகம் ஆரம்பிக்கப்போறாகன்னாரு…  போனா, ரோட்லேர்ந்து இருபது அடி ஆழத்துல, ஆறோ,கம்மாயோ தெரியலை, தண்ணி இல்லை, மணல்ல கூத்துக்கொட்டகை.. தம்பி, ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு, இருந்து கூத்துப்பாத்துட்டு விடியக்காலம் கெளம்பலாம்டான்னாரு.. ஆகா, ஊர்ல கூத்துப்பாக்கப் போனா என்னமாதிரி திட்டுவிய… இப்ப என்ன பண்ணுவியன்னு எனக்கு உள்ளுகுள்ள கும்மாளம்.. நாடக செட்டும் அப்ப ஃபேமசா இருந்த செட்டுகள்ல ஒன்னு…
எஸ்.எம் சொர்ணப்பா ராஜபார்ட் முருகன், பாக்கியலட்சுமி ஸ்ரீபார்ட் வள்ளி (ஒரு காது கருப்பாயிருக்கும்.. அந்தப்பக்கம் நெறைய பூ வச்சு மறைச்சிருக்கும்,,,) கேஎம்பி சண்முகசுந்தரம் ஆர்மோனியம் பின்பாட்டு, நடராசன் மிருதங்கம் அன் டோலக், தங்கவேலு பபூன் காமிக், டேன்ஸ் காமிக் யாருன்னு நெனப்பில்லை.. முக்கியமா நாரதர் கலைச்செல்வி.. எனக்கு ரொம்பநாளா பாக்கனும்னு ஆசை.. பொம்பளை எப்பிர்றா நாரதர் வேசம் போடும்னு… அன்னிக்கு எனக்கு செம லக்கு… நாங்க இருந்த சைடுல இருந்து இந்த வாத்தியகோஷ்டி உக்காந்த பகுதி தெரியாது… சென்டர்ஸ்டேஜுதான் தெரிஞ்சிச்சு..

ஒரு ரெண்டுமணி நேரமிருக்கும்… வள்ளி வந்தாச்சு, நாரதரும் வள்ளியும் தர்க்கம் ஆரம்பிச்சாச்சு…
திடீர்னு அண்ணே,,,,,,,ன்னு ஒரு கம்பீரக்குரல்… பாத்தா ஜிப்பாப்போட்டுக்கிட்டு நம்ம டேப் காதரு..
என்னண்ணே இந்தப்பக்கம், நாடகம் பாப்பியன்னு தெரியும், அதுக்காக இம்புட்டுத் தூரமா வருவிய?
தம்பீ, நல்லாருக்கியாடான்னு எனக்கு ஒரு வரவேற்பு… வண்டி லைட்டு எரியமாட்டேங்க்குதுடா காதரு,,, அதான் விடிஞ்சதும் போகலாம்னு உக்காந்துட்டோம்… அது சரி, நீ எப்டி இங்கெ வந்தே? உனக்கென்ன இங்கெ வேலைன்னு கேட்டாரு… என்னண்ணே இப்டிக்கேட்டுட்டிய? நான் இப்ப நாடகத்துக்கெல்லாம் டேப் வாசிக்கிறேன்ல? என்ன நாடகம் பாக்குறிய நீங்க….? எல்லா நாடக நோட்டிஸ்லயும் இருக்குமேண்ணே….

இப்பல்லாம் எம்பேரு வெறும் காதர் இல்லைண்ணே… டேப் காதர்
*

நன்றி : டேப்பு மஜீது

தண்டனை (சிறுகதை) – ஆசிப் மீரான்

’குங்குமம்’ இதழிலிருந்து நன்றியுடன்…

தண்டனை (சிறுகதை) – ஆசிப் மீரான்

‘‘அதெல்லாம் முடியாது…’’ என்றார் பெரியவர் மம்மூச்சா.‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’ என்றேன் நான்.‘‘பரவால்ல. நான் சொல்ற வரை அப்படியே இருங்க…’’துபாயில் பணி புரிந்தாலும் அங்கிருப்பதைவிட வாடகை குறைவு என்பதால் ஷார்ஜாவில் தங்கி வேலைக்குப் போகும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் நான்.

குடும்பங்களை ஊரில் விட்டுவிட்டு புலம் பெயர்ந்து உறவுகளுக்காக வாழும் லட்சக்கணக்கானவர்களிலும் ஒருவன் நான்.அலுவலகமொன்றில் கணக்கராகப் பணிபுரிவதால் குடும்பத்தை அழைத்து வர வாய்ப்பிருந்தாலும் குடும்பத்தை அழைத்து வந்தால் சம்பளம் முழுதும் செலவழிந்து சேமிப்பு இல்லாமல் போய்விடுமென்று வாழ்க்கையை பணத்திடம் அடமானம் வைத்து விட்டுப் புலம்பும் அன்றாடங்களில் ஒருவன்.

சேவல் பண்ணைகள் போல ஒரே அடுக்ககத்தில் பத்துப் பேரோடு அடைந்து வாழும் வாழ்க்கையிலிருந்தாவது விடுபடுவோம் என்று இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்ககத்தில் ஓர் அறையில் வாடகைக்கு இருக்கிறேன். இது இங்கு வழக்கம்தான். வாடகைச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு பகுதியை உள்வாடகைக்கு விடுவது.

கோவாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்கியிருந்த வீட்டில்தான் நான் உள்வாடகைக்கு இருந்தேன். அறைக்கு வெளியே இருந்த சின்ன கழிப்பறை எனக்கானது. அவர்களைக் காண வரும் விருந்தினர்களுக்கும் அதுதான். சிக்கல் சமையலறைதான். காலை ஐந்து முதல் ஏழுவரை சமையலறையை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். எனவே நான் சமைப்பதாக இருந்தால் ஐந்து மணிக்கும் முன்னரே எழுந்தாக வேண்டும். ஏழு மணிக்குப் பின்னரென்றால் அலுவலகம் போகத் தாமதமாகி விடும்.

சுயமாக சமைக்கத் தெரிந்தாலுமே கூட நேரமின்மையும் இந்தச் சூழலும் காரணமாகி விட, கூடவே இரவில் சமைக்க சோம்பலும் சேர்ந்து விட உணவகங்களையே நாட வேண்டிய சூழல்.நான் தங்கியிருக்கும் ‘மஜாஸ்’ பகுதியில் ஏராளமான உணவகங்கள் இருந்தன. இந்திய உணவு வகைகள், பாகிஸ்தானிய உணவு வகைகள், லெபனிய உணவு வகைகள் என்று எல்லா வகையான உணவு வகைகளும் விரவிக் கிடந்தன.

இந்திய உணவகங்களில் பெரும்பான்மையாக மலையாளிகள் நடத்தும் உணவகங்கள். கூட்டத்தில் உயர்தர சைவ உணவகமென்ற பெயரிலும் ஒன்று. வீட்டுக்கு அண்மையில் இத்தனை உணவகங்கள் இருந்தும், எல்லா உணவகங்களிலும் ஏறி இறங்கியும் எதுவும் மனதிற்குகந்ததாக இல்லை.
ஒன்றில் உணவு சரியிருக்காது அல்லது சுத்தமாக இருக்காது. பெரும் கூட்டமாகக் கடமைக்கெனப் பரிமாறப்படும் உணவகங்களோடு மனது ஏனோ உடன்படுவதேயில்லை.

சில உணவகங்களில் நுழைந்தாலே ‘எதற்கு வந்தாய்?’ என்ற மனோபாவத்தோடு அணுகும் அவர்களது உடல்மொழி எனக்குப் பிடிப்பதில்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தபோதுதான் தற்செயலாக அந்த உணவகத்திற்குள் நுழைந்தேன்.

கல்லாவில் அமர்ந்திருந்த முதியவர் தலையிலிருந்து முடி உதிராமல் இருப்பதற்கான வலை அணிந்திருந்த சமையல்காரரிடம் ‘‘ஏன் பரோட்டா அளவு சிறுசா இருக்கு? அம்பது ஃபில்சிலிருந்து ஒரு திர்ஹாமா மாத்தியிருக்கோம். ஒரு திர்ஹாமுக்கு ரெண்டு பரோட்டா தின்னவனுக்கு ஒரு பரோட்டாதான் கொடுக்கப் போறோம். பாதி வயிறுதான் நிறையும் அவனுக்கு. அது அவனோட வயித்தெரிச்சல். அவனுக்கு முக்கால் வயிறு நிரம்புற அளவுக்காவது பெருசா போடு…’’ என்று மலையாளத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்.

வாடிக்கையாளர்கள் மீதான அவரது அந்தக் கரிசனை பிடித்திருந்தது. அவரே சட்டென்று இறங்கி வந்து ‘‘என்ன வேண்டும்?’’ என்று கேட்டதும் தேவையானதைச் சொன்னேன்.மலையாளிகளின் உணவகத்தில் மட்டும் நான் கவனித்த விசயம் இது.

கல்லாவில் இருந்தாலும் கடையில் வாடிக்கையாளரைக் கவனிக்க ஆளில்லையென்றால் உடனே களமிறங்கி விடுவார்கள். அது மேசை துடைக்கும் செயலாக இருந்தாலும்.ஏனோ முதல் பார்வையிலேயே அவரைப் பிடித்து விட்டது எனக்கு. சிலர் அப்படித்தான். நாமறியாமலே நமக்குள் சிம்மாசனமிட்டுக் கொள்வார்கள். முகலட்சணமென்பது இதுதானோ?

பரோட்டா உடல்நலனைக் கெடுத்து விடுமென்று உலகமே சத்தம் போட்டாலும் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சொல்லி வைத்ததுபோல பரோட்டாவை அவரவருக்கு விருப்பமான கறிகளோடு உண்டு கொண்டிருந்தார்கள். சிலர் உடல் நலத்தைப் பேணுவதாக எண்ணிக்கொண்டு கோதுமை பரோட்டாவும்.

அப்போதுதான் அந்த ஆள் உள்ளே வந்தார். நெடுநாள் வாடிக்கையாளர் தோரணையில், ‘‘ஹாஸிம் எவிடெ?’’ என்றார்.
‘‘இவிட உண்டல்லோ…’’ என்றவாறே சமையலறையிலிருந்து வெளியில் வந்தார் அவர்.
‘‘பெட்டெந்நு ரெண்டு பூரி…’’

‘‘இங்க சாப்பிடவா… கொண்டு போகவா?’’
‘‘கொண்டு போகத்தான்…’’

சரியென்று தலையாட்டி விட்டுத் திரும்பியவர் சமையலறை நோக்கி ‘‘ரெண்டு பூரி…’’ என்று குரலெழுப்ப வாடிக்கையாளர் இடைமறித்து ‘‘ஓயில் கொறச்சு…’’ என்றார்.ஒரு வினாடி கூட இடைவெளி விடாமல் ‘‘பச்சை வெள்ளத்தில் ரெண்டு பூரி…’’ என்று ஹாஸிம் குரலுயர்த்திச் சொன்னதும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த நான் சிரிப்பை அடக்க முடியாமல் நீரைக் கொப்பளிக்கையில் நாசி வழியே நீரேறி எனக்குப் புரையேறி விட்டது.
ஹாஸிம் உடனே ஓடி வந்து ‘‘எந்து பற்றி?’’ என்று கேட்டுக் கொண்டே தலையில் தட்டி ஆசுவாசப்படுத்தி, மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் செய்தார்.

எனக்குக் கொஞ்சம் கூச்சமும் வருத்தமுமாக இருக்க ஹாஸிம் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நகன்றார்.
சாப்பிட்டு விட்டுப் பணம் கொடுக்கும்போது முதியவர் ‘‘பிரச்னை ஒண்ணும் இல்லையே..?’’ என்று அக்கறையோடு விசாரித்தது எனக்குப் பிடித்திருந்தது.போகிற இடமெல்லாம் அன்பைத் தேடும் மனித மனதினை சுய கழிவிரக்கத்திலிருந்து காப்பாற்றுவதும் இதைப்போன்ற எதிர்பார்ப்புகளற்ற ஆறுதல் மொழிகள்தானே?

‘‘அந்த எருமை மாடு இப்படித்தான் எப்பவும் தமாஷ் பண்ணிட்டே இருப்பான்…’’ என்றார் ஹாஸிமை சுட்டிக்காட்டியவாறே.
ஆனால், எனக்கு ஹாஸிமை வெகுவாகப் பிடித்து விட்டது. பணிச்சூழலை இயல்பான நகைச்சுவையால் மெருகூட்டும் அவரை யாருக்குத்தான் பிடிக்காது?சுற்றி நிறைய உணவகங்கள் இருந்தபோதும் ‘முஸ்தஃபால்’ மட்டும் பிடித்துப் போனதற்கு அவர்களது உணவின் சுவை மட்டுமல்லாமல் சிநேகிதமான இந்நிகழ்வுகளும் காரணமாயிற்று.

உணவகத்தில் நுழைந்த முதல் நாளே இப்படி ஒரு சிறப்பான சம்பவம் நடந்துவிட்டதால் உணவகப் பணியாளர்கள் அனைவருக்கும் என் முகம் நன்றாகப் பதிந்துவிட்டது போல. அடுத்தடுத்த நாட்களில் ‘அண்ணனுக்கு என்ன வேணும்..?’ என்பதிலிருந்து ஒரு வார அவகாசத்துக்குள்ளேயே ‘தலைவரா’க்கி இருந்தார்கள் என்னை. நாட்டில் இப்படித்தான் அநாமதேயமாகத் தலைவர்கள் உருவெடுக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்புலம் பெயர்ந்து உறவுகளை விட்டு வெகு தொலைவில் வாழ்க்கையில், உணவின்போது அக்கறையோடு பரிமாறுகிறவர்களிடம் இனம் புரியாத ஒரு வாஞ்சை தோன்றிவிடுகிறது இயல்பாகவே.

‘முஸ்தஃபால்’ உணவக ஊழியர்கள் இப்படித்தான் நெருக்கமாகிப் போனார்கள்.தொடர்ந்து அங்கேயே சென்றதில் கடையின் உரிமையாளர்தான் அந்த முதியவரென்பதும் முகமது அஸார் என்ற பெயரைச் சுருக்கி மம்மூச்சா என்றழைக்கிறார்கள் என்பதும் அவரது மகன்தான் ஹாஸிம் என்பதும் தெரிய வந்தது. ஹாஸிம் எப்போதும் கலகலப்பாக இருக்க, மம்மூச்சா ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் தனிப்பட்ட முறையில் கவனமாகப் பேசி வாடிக்கையாளர்களிடம் மரியாதையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

அவர் ஊருக்குப் போகும் காலத்தில் ஹாஸிம் கல்லாவில் இருந்தால் ‘‘மம்மூச்சா எவிடெ..?’’, ‘‘சாச்சா கிதர் ஹை..?’’ என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுமளவுக்கு விசாரணைகள் தொடர்வதைக் கவனித்திருக்கிறேன்.மம்மூச்சா உயரம் குறைவானவரென்பதால் அவரை ஹாஸிம் கிண்டலாக கவாஸ்கரென்றுதான் அழைப்பார்.‘‘நம்முடெ கவாஸ்கர் ஒரு விரமிச்ச தாரம் (ஓய்வு பெற்ற நட்சத்திரம்) கேட்டோ?’’ என்று ஹாஸிம் தன் தந்தையைக் குறித்து கிண்டல் செய்தாலும் அதிலோர் பெருமிதம் நிறைந்திருக்கும்.

இந்தக் காலகட்டத்தில் நான் உணவுக்கட்டுப்பாட்டில் ஈடுபடத் துவங்கினேன். உடல் எடையைக் குறைக்க, காலை வேளைகளில் முட்டை மட்டுமே உண்ணத் துவங்கியிருந்தேன். இரண்டு முட்டைகளும் சர்க்கரை இல்லாத தேநீரும் என் காலை உணவுப்பழக்கமாகியிருந்தது.அன்று காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்தேன். சமயங்களில் வேலை காரணமாக இரவு தாமதமாகத் திரும்பினால் காலையில் தாமதமாக அலுவலகம் செல்வதை மேலாளர் அனுமதிப்பார்.வழக்கம் போலக் காலை உணவாக இரண்டு முட்டைகளையும் ஒரு தேநீரையும் அருந்தியபின் கல்லா அருகில் சென்றேன்.

சலாம்கள் பரிமாறியதும் ‘‘இன்னைக்கு அலுவலகம் போகலியா?’’ மம்மூச்சாவின் குரலில் எப்போதுமிருக்கும் அதே வாஞ்சை.
‘‘இனிதான் மம்மூச்சா. இன்னைக்கு தாமதமாகப் போகணும்…’’
‘‘என்ன சாப்பிட்ட இன்னைக்கு?’’
‘‘முட்டைதான்…’’‘‘அட என்னப்பா நீ! காலைல நல்லா சாப்பிட்டாத்தானே நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க முடியும்? இந்தக் கட்டுப்பாடெல்லாம் என்னை மாதிரி வயசானவங்களுக்குத்தானே?’’நான் மெல்லமாகப் புன்னகைத்தேன்.

‘‘என்னமோ போங்கப்பா. இந்த ஹாஸிமைப் பாரு. 24 மணி நேரமும் தின்னுட்டுத்தானே இருக்கான்…’’
என் புன்னகை சிரிப்பாக மாறியது. சிரித்துக்கொண்டே ஐந்து திர்ஹாம்களை மம்மூச்சாவிடம் கொடுத்தேன். ஒரு திர்ஹாம் திருப்பிக் கொடுத்தார்.
‘‘அஞ்சு திர்ஹாம்தான்…’’‘‘ரெண்டு முட்டையும் சாயாவும் நாலுதான்…’’‘‘இல்லையே… அஞ்சுதான்…’’ என்றேன் நான்மம்மூச்சா பதற்றமாகி, ‘‘ஹாஸிம் எருமை மாடே! இங்க வா…’’ என்றார். ‘‘ரெண்டு முட்டையும் ஒரு சாயாவும் எவ்வளவு?’’

‘‘நாலு திர்ஹாம்…’’‘‘அச்சச்சோ! தப்பாகிடுச்சே…’’ பதறியவர் சட்டென்று கல்லாவிலிருந்து இறங்கி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டார். ‘‘மாப்பு…’’நான் பதறிப்போய், ‘‘என்னாச்சு மம்மூச்சா?’’ என்றேன்.‘‘நாலு திர்ஹாமுக்குப் பதிலா அஞ்சு வாங்கியிருக்கேனே?’’ அவர் குரலில் வருத்தம்.
‘‘அதனாலென்ன?’’ ‘‘என்னவா..? உழைக்காம வரக்கூடிய வருமானம் ஹராம். எவ்வளவு நாளா அஞ்சு திர்ஹாம் கொடுக்குறீங்கன்னு தெரியுமா?’’
எனக்கும் நினைவில்லை. உணவுக்கட்டுப்பாடு தொடங்கி ஒரு மாதமிருக்கக் கூடும்.

‘‘சரி விடுங்க! நானே கணக்குப் போட்டுக்கறேன். இன்னைலருந்து நான் சொல்லும் வரை நீங்க காசு கொடுக்க வேணாம்…’’ என்றார் மம்மூச்சா
‘‘ஏன்?’’‘‘உங்ககிட்ட கூடுதலா காசு வாங்கியிருக்கேன். தப்பில்லையா? அதை சரிபண்ற வரைக்கும் நீங்க காசு தரவேண்டாம். உங்க கிட்ட காசு வாங்கக் கூடாதுன்னு ஹாஸிம் கிட்டயும் சொல்லி வச்சிடுறேன்…’’எவ்வளவோ சொல்லியும் காசு வாங்க மறுத்து விட்டார். இப்படியே ஒரு வாரம் ஓடிப் போனது. எனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

‘‘இல்லைங்க… எத்தனை நாள்தான் இப்படியே காசு கொடுக்காமலேயே சாப்பிடுறது?’’அசைந்து கொடுக்கவில்லை மம்மூச்சா.‘‘சரி… நாம ஒரு ஒப்பந்தம் வச்சுக்கலாம். என் கிட்ட காசு வாங்காம இருக்குறதுக்கு பதிலா எங்க அடுக்ககத்துல வேலை செய்ற காவலாளி முத்துவுக்கு உணவு கொடுங்க. சம்மதமா?’’ என்றேன்.‘‘அல்ஹம்துலில்லாஹ்! ஆண்டவன் காப்பாத்திட்டான். இப்படி ஒரு தப்பு செஞ்சிட்டோமே? இதுக்குண்டான அபராதத்ைத எப்படி செலுத்துறதுன்னு யோசிச்சிட்டே இருந்தேன். அவரும் சாப்பிடட்டும்…’’ என்றார் மகிழ்ச்சியாகஅந்தச் சிறிய உருவத்தின் முன் மேலும் சிறிதானவனாக உணர்ந்தேன். கடையிலிருந்து வெளியேறும் போது மழைத்துளிகள் விழத் துவங்கின.ரசாயனப் பொடி தூவி செயற்கை மழை பெய்விப்பதாக கடந்துபோன சேட்டன் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் நம்பவில்லை.

*

நன்றி : ஆசிப் மீரான்

 

 

‘தீண்டாய் மெய் தீண்டாய்’

புதுவருட வாழ்த்துகள்! 12 வருடங்களுக்கு முன்பு ஆசியாநெட் சேனல் மூலம் நான் ரிகார்டிங் செய்த இசை நிகழ்ச்சிகளில் ஒன்றைப் பகிர்கிறேன். அந்த வருட Asia Net Star Singer Winner இந்த நஜிம் அர்ஷாத் (இறுதிச் சுற்றில் பாலமுரளி சார் பரிசளித்தார்). இந்தச் சுற்றில்,  ‘என் சுவாசக் காற்று’ படத்திலிருந்து வைரமுத்துவின் அட்டகாசமான பாட்டைப் பாடும் அர்ஷாதைத் தேர்ந்தெடுக்க வழக்கமான எம்.ஜி.ஸ்ரீகுமார் – சரத் – உஷா உதுப்புடன் பிரதான விருந்தினராக வித்யாதரன் மாஸ்டரும் அன்று வந்திருந்தார். அப்படி ரசித்தார். Enjoy.

குறிப்பு : ஏ.ஆர். ரஹ்மானின் இசை பிடிக்காதவர்கள் ‘ஆடபில்ல வலப்பா இதி லேடி பில்ல பிலுப்பா’ பாட்டைக் கேட்கப் போகலாம்! நன்றி.

*

Bonus : ‘Devaanganagal’ by Thushar

« Older entries Newer entries »