ஃபுட்பாலும் ‘இஜட்’-ன் குட்டிக்கதையும்

‘எங்க ‘K.R.C’ நடத்தும் ஃபுட்பால் மேட்ச் பற்றி எழுதுங்க நானா’ என்றார் ஷாஹாமாலிம். ’53வது தென்னிந்திய எழுவர் கால்பந்து தொடர்போட்டி’ பற்றி கொஞ்சம் எழுதலாம்தான்.  மூன்று நாட்களுக்கு முன் , நடக்கவிருந்த முக்கிய மேட்சை ரத்து செய்துவிட்டு, ‘ஆங்காங்கே அமர்ந்திருக்கும்’ நாகூர் ரசிகப் பெருமக்களுக்கு எவ்வித அறிவிப்பையும் முன்னரே வெளியிடாததை (அட, பள்ளிவாசல் மைக்’-ல் சொல்லலாம் இல்லையா, ‘இன்று நடைபெற வேண்டிய மேட்ச்.. ‘மவுத்’ என்று?) வெடைக்க வேண்டிவரும் என்றேன். ‘விமர்சனம் இல்லாமலா? தாராளமா செய்ங்க..’ .  நான்தான் இன்னும் செய்யவில்லை. உண்மையில் , அங்கே போனால் வீசியடிக்கும் காற்றும் கூத்துமாக ஜாலியாகத்தான் இருக்கும். SDPI கவனிக்கச் சொல்லும் பிரச்னைகளை சற்றே மறக்கலாம்…

பாருங்கள், சரிந்துவிழும் நிலையில் சதா இருக்கிற ‘கேலரி’யில் உட்கார பயந்துகொண்டு தரையில் அமர்ந்து ‘மேட்ச்’ பார்த்துக்கொண்டிருந்த நண்பன் பாக்கர்சாபுவை ‘பால்’ தாக்கிவிட்டது நேற்று. ‘எங்கேடா அடி?’ என்றதற்கு ‘பாலு’லதான்’ என்கிறான் அவன்!

முட்டை போண்டாக்களுக்காக வரும்  பையன்களின் கமெண்ட்களும் பிரமாதம். முந்தாநாள் சென்னை சிட்டி போலீஸ் டீமும் நீரோடி (இது எங்கே இருக்கு?) டீமும் மோதியது. படு சுமாரான ஆட்டம். ‘டாய்… போலீஸ் டீம் போலீஸ் டீம் மாதிரியே தெரியலையே.’ என்று கத்திய பையனிடம். ‘ஏன்?’ என்று கேட்டதற்கு ‘வெறி புடிச்ச மாதிரில ஆடுவானுவ அவனுவ..’ என்றான். விவரம் தெரிந்த பையன் போல.

‘என்னாப்பா டீம் இதெல்லாம்..  எங்க ஊருக்கு வந்து பாரு. சூடான் , நைஜீரியால்லாம் வந்து ஆடுது..’ என்று பக்கத்து கூத்தாநல்லூர் இக்பால் கடுப்பேத்துகிறானே என்று விசாரித்தால் கல்லூரிகளில் படிக்கவரும் பையன்களைப் பிடித்து டீம் செட் செய்து விடுகிறார்களாம்! விரைவில் பிரேஜிலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையே கூட நடக்கலாம் அங்கே.

எப்பேர்ப்பட்ட கால்பந்தாட்ட வீரனாக இருக்கட்டும், காலிகட் டீமில் , கட்டையாக, காதில் கடுக்கண் மாட்டிக்கொண்டு. வரும் ‘ஷ்யாம்’தான் என் ஃபேவரைட்.. சரியான வாய்ப்பு இருந்தால் மெஸ்ஸி அளவுக்கு வரவேண்டியவன். இம்முறை அவனைப் பார்க்க இயலாது. ஓரிரு நாளில் துபாய் போகனும், அரபி என்னை உதைக்க.

சரி, ஃபுட்பாலுக்கும் ஜபருல்லாவின் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?

அவர் வசிக்கும் புதுமனைத்தெரு வீட்டைத் தாண்டிக்கொண்டுதான் ‘K.R.C’ கிரவுண்ட் செல்கிறேன்!

“முகவரி –
சரியில்லாத கடிதம்
அனுப்பிய இடத்துக்கே
திரும்பிவிடும்”
———————
(தொழுகையும் அப்படித்தான்.!’)

என்று இடித்துரைக்கும் நானாவின் குட்டிக்கதையை இத்துடன் இணைக்கிறேன். கட்டுக் கட்டாக அவர் வைத்திருக்கும் சின்னச் சின்ன டைரிகளிலிருந்து உருவியது இது, எங்கே போவேன் என்று தெரியாமலேயே.. – ஆபிதீன்

***

சொர்க்க மரியாதை – ‘இஜட்’-ன் குட்டிக்கதை

சொர்க்கத்தில், நன்மைகள் நிறைய செய்த ஒரு ஏழை வர தேவதைகள் அழைத்துச் சென்றனர்.

மறுநாள் ஒரு செல்வந்தன் வந்தான், தாரை/தப்பட்டையுடன் , பூச்சொரிந்து சீரும் சிறப்புமாக வரவேற்கப்பட்டபின் தேவதைகள் வரிசையாக நின்று பாடினர் போற்றி.

இதைப் பார்த்த ஏழை, ‘சொர்க்கத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என் அறியாமல் போனேனே..!’ என வருந்தினான்.

அதைக் கேட்ட தேவதை ஒன்று, ‘இங்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. உன்னைப் போல ஏழைகள் சொர்க்கத்திற்கு அடிக்கடி வருவார்கள். அவனைப் போன்ற செல்வர்கள் எப்போதாவதுதான் வருவார்கள். அதனால்தான் அத்தனை வரவேற்பு’ என்றது.

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ் | Tel : 0091 9842394119

மெஸ்மரைஸ் செய்த மெஸ்ஸி

Messi seals status as best of his generation  – Gulf News . சந்தோஷத்தில் என்னை உதைக்க ஆரம்பித்துவிட்டார் சாதிக் – நேற்றிரவு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தபோது! மேலும் நான் உதைபட மெஸ்ஸியை வேண்டுகிறேன் 🙂

« Older entries