கலைப்பொருள் – ஆன்டன் செக்காவ்

மொழியாக்கம்: வேங்கட சுப்புராய நாயகர் (‘A Work Of Art’ by Anton Chekhov) . மணல்வீடு இதழில் (எண்: 37-38) இடம்பெற்ற புகழ்பெற்ற சிறுகதை, நன்றியுடன் இங்கேயும்…
*

கலைப்பொருள் – ஆன்டன் செக்காவ்

பங்குசந்தைச் செய்திகள் வெளிவரும் ‘ஸ்டாக் எக்ஸ்சேஞ் நியூஸ்’ஸின் 223ஆம் இதழினால் சுற்றப்பட்டிருந்த அந்தப் பொருளை, தன் தாய்க்கு ஒரே மகனான சாஷா ஸ்மிர்நோவ் மிகக் கவனமாகத் தன் கக்கத்தில் தாங்கியபடி வந்தான். சோகமான முகத்துடன் இருந்த மருத்துவர் தோஷெல்தோவின் அலுவல் அறைக்குள் அவன் நுழைந்தான்.

“அட, தம்பியா வா! இன்று எப்படி? எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?” என்று அவனை மருத்துவர் வரவேற்றார்.

கண்களைச் சிமிட்டிய சாஷா, தன் மார்பின்மீது கைகளை அழுத்தி, நடுக்கத்துடன் உணர்ச்சிவசப்பட்டு பேசினான்:

“டாக்டர், அம்மா உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார்கள். உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்கள். அந்த அம்மாவின் ஒரே பையன் நான். என் உயிரை நீங்கள் காப்பாற்றிவிட்டீர்கள்.அபாயகரமான நோயிலிருந்து என்னை மீட்டுவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே என் அம்மாவுக்கும் எனக்கும் தெரியவேயில்லை.”

“உளறாதே” என்று இடைமறித்த மருத்துவர், உள்ளூர மகிழ்ச்சியில் அசட்டுத்தனமாகச் சிரித்துக்கொண்டே “என் இடத்தில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்” என்றார்.

“நான் என் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர், நீங்கள் செய்த சிகிச்சைக்கு எங்களால் பணம் செலுத்த முடியவில்லைதான் என்றாலும், அம்மாவும் நானும்,அதாவது அவரது ஒரே பிள்ளையான நான் உங்களை மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான். இதோ இந்தப் பொருளை எங்கள் சார்பாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது ஒரு பழமையான வெண்கலக் கலைப்பொருள்; அற்புதமான கலை நயம், வேலைப்பாடு கொண்டது”.

“முடியாது. உண்மையாகத்தான் சொல்கிறேன். என்னால் இதனை…” எனப் புருவத்தை நெறித்தபடி மருத்துவர் மறுத்தார்.

“இல்லை. இல்லை நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்” என முணுமுணுத்தபடியே தான் கொண்டு வந்திருந்த பொருளைச் சுற்றியிருந்த தாளை பிரிக்கத் தொடங்கினான்.

“நீங்கள் முடியாது என்றால் அம்மாவுக்கும் எனக்கும் மனது புண்படும். இது ஒரு அருமையான பொருள். பழைய பொருள். வெண்கலத்தாலானது. அப்பா இறந்தவுடன் இது எங்களுக்குக் கிடைத்தது. இதனை விலை மதிப்பற்ற நினைவுப் பொருளாக நாங்கள் பாதுகாத்து வந்தோம். இது போன்ற பழைய வெண்கலப் பொருட்களை வாங்கி கலைப் பொருள் சேகரிப்பவர்களுக்கு விற்பதை என் அப்பா தொழிலாகச் செய்து வந்தார். இப்பொழுது அம்மாவும் நானும் அந்தத் தொழிலைப் பார்த்துக்கொள்கிறோம்…”

அப்பொருளைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்து முடித்த வுடன் அங்கிருந்த மேசை மீது அதனை எடுத்து வெற்றி கரமாக வைத்தான். மெழுகுவத்திகள் வைப்பதற் தென அழகாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்ட பழைய வெண்கலக் கொத்துவிளக்குத் தண்டு அது. அதன் பீடத்தில் இரண்டு பெண் உருவங்கள் பிறந்த மேனியாக காட்சியளித்தன. அவை எப்படி நின்றிருந்தன என்பதை விவரிக்குமளவு துணிச்சலோ, பாலுணர்வோ எனக்கு இல்லை. அந்த உருவங்கள் பசப்புகின்ற முறை யில் சிரித்துக்கொண்டிருந்தன. மெழுகுவத்திகளைத் தாங்க வேண்டிய வேலையை விடுத்து அவை அந்தப் பீடத் திலிருந்துத் தாவிக் குதித்து இந்த அறை முழுவதும் மோசமான காட்சியை உண்டாக்கக்கூடும் என்பதைப் போல் தோன்றியது. அதை நினைக்கும் மாத்திரத்திலேயே, இனிய வாசகரே, உங்களுக்கு வெட்கத்தால் கன்னம் சிவந்து போய்விடும்.

அந்தப் பரிசுப் பொருளை ஒரு முறை நோட்ட மிட்டவுடன், தன் காதின் பின் பகுதியை மருத்துவர் லேசாகச் சொறிந்துகொண்டார். தொண்டையை செருமிக்கொண்டு பெருமூச்சு விட்டார்.

“உண்மைதான். இது ஓர் அழகான கலைப்பொருள் தான். ஆனால், இதை நான் எப்படி வைக்க முடியும்? இது ரசனை என்று நீ சொல்ல முடியாது. அதாவது, கழுத்து தெரிய இறக்கி வெட்டப்பட்ட சட்டை ஒருபுறம் இருக்க, இது உண்மையில் எல்லை மீறிய…”

“எல்லை மீறிய என்றால், என்ன சொல்ல வருகிறீர்கள்?”

“உணர்வுகளைத் தூண்டும் அந்தப் பாம்புக் கூட இந்த அளவு பண்பாடு குறைவாக எதையும் நினைத்திருக்காது. மேசை மீது இத்தகைய சாதாரண அலங்காரப் பொருளை வைப்பதனால், இந்த வீடு முழுவதும் கெட்டு விடுவதாக நான் ஏன் நினைக்கவேண்டும்?”

“டாக்டர், தலை மீது ஏன் உங்களுக்கு இத்தகைய வினோதமான பார்வை இருக்கிறது?” சாஷாவின் மன வருத்தம் பேச்சில் எதிரொலித்தது.

“இது உத்வேகத்தை அளிக்கக்கூடிய வேலைப்பாடு உடையது. இதன் ஒட்டுமொத்த அழகையும் நேர்த்தியையும் பாருங்கள், அப்படியே பயபக்தி ஏற்பட்டு உங்கள் தொண்டை அடைக்கவில்லையா? இது போன்ற அழகை ரசிக்கும்போது இந்த பூமியில் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு மறந்து போகும். அதோ அந்த அசைவைப் பாருங்கள் டாக்டர். அந்தத் தோற்றத்தை, முகபாவத்தைப் பாருங்கள்.” என்று சாஷா சொல்லிக்கொண்டே போனான்.

“நான் அதை மிகவும் ரசிக்கிறேன், பாராட்டுகிறேன்,” என்று சுதாரித்துக்கொண்ட மருத்துவர், “ஆனால் ஒரு விஷயத்தை நீ மறந்துவிட்டாய். நான் ஒரு குடும்பத் தலைவன். இங்கு வந்து விளையாடப் போகும் என் சிறு பிள்ளைகளைப் பற்றியும் பெண்கள் பற்றியும் யோசித்துப்பார்” என்றார்.

“உண்மைதான். சாதாரண மக்களின் பார்வையில், இந்த மாபெரும் கலைப்படைப்பு வேறு மாதிரியாகத்தான் தெரியும். ஆனால், டாக்டர் நீங்கள் இவர்களை விட ஒருபடி மேலே நின்று பார்க்கவேண்டும். குறிப்பாக, அம்மாவும் நானும் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் மிகவும் வருத்தமடைவோம். நான் அம்மாவின் ஒரே மகன். நீங்கள்தான் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். எங்களிடம் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த பொக்கிஷத்தை உங்களுக்குத் தருகிறோம். இதனை ஜோடியாக தருமளவு எங்களிடம் இதேபோல் வேறு ஒன்று இல்லையே என்ற ஒரே குறைதான் எனக்கு இருக்கிறது” என்றான் சாஷா.

“நன்றி, தம்பி. அம்மாவை நான் மிகவும் கேட்டதாகச் சொல். ஆனால் என் இடத்தில் கொஞ்சம் இருந்து பார். இங்கு வரக்கூடிய குழந்தைகள், பெண்கள் பற்றி யோசித்துப் பார்… சரி, விடு, அது இங்கேயே இருக்கட்டும்! உன்னைச் சமாதானப்படுத்த முடியாது என நான் நினைக்கிறேன்” என்று மருத்துவர் கூறினார்.

“என்னைச் சமாதானம் செய்ய ஒன்றுமில்லை.” என சந்தோஷமாக சொன்ன சாஷா, “இதோ, இந்தப் பூச்செடியின் பக்கத்தில் இந்தக் கொத்து விளக்குத் தண்டை நீங்கள் வைக்கவேண்டும். என்ன, இது ஜோடியாக இல்லை! வருத்தமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, சரி! போய் வருகிறேன் டாக்டர்!” என விடை பெற்றான்.

சாஷா சென்ற பிறகு, நீண்ட நேரம் அந்தக் கொத்து விளக்கையே உற்று நோக்கியபடி இருந்த மருத்துவர், காதின் பின்புறத்தைச் சொறிந்துகொண்டே யோசித்தார்.

“இது ஒரு அற்புதமான பொருள்தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இதனை வாங்காமல் விட்டிருந்தால்தான் அவமானம். ஆனால், இதனை இங்கு வைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹும்! பிரச்சனைதான்! யாரிடம் இதனைக் கொடுப்பது அல்லது தள்ளி விடுவது?” என யோசித்தார்.

நீண்ட நேர யோசனைக்குப் பின், அவருடைய சிறந்த நண்பரும் வழக்கறிஞருமான ஹர்தீன் நினைவுக்கு வந்தார், மருத்துவருக்கு நிறைய சட்ட உதவிகளைச் செய்தவர் அவர்.

” ஆம், இதுதான் சரியான தீர்வு” என மருத்துவர் முடிவெடுத்தார்.

‘நண்பர் என்ற முறையில் நான் தரும் பணத்தை ஏற்றுக்கொள்வது சங்கடமாக இருக்கும். ஆனால், இந்தப் பொருளை அன்பளிப்பாகத் தந்தால் அது முறையானதாக இருக்கும். ஆமாம், இந்தக் கொடூரமானப் பொருளை நேராக அவரிடம் கொண்டு போய் கொடுக்கவேண்டும். எப்படிப் பார்த்தாலும் அவர் திருமணமாகாதவர்தானே. வாழ்க்கையினை அப்படி ஒன்றும் பெரிதாகச் சட்டை செய்யாதவர்’ எனப் பலவாறு சிந்தித்தபடியே இருந்தார்.

இதற்கு மேல் காலம் தாழ்த்தாமல், தன் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு, அந்தக் கொத்து விளக்கை எடுத்துக்கொண்டு ஹர்தீன் வீட்டை நோக்கி விரைந்தார்.

அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், “வணக்கம்” என்றார் மருத்துவர். “நீ எனக்கு செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன். நீ பணம் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இந்தச் சிறிய அன்பளிப்பை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பாய் என நினைக்கிறேன். இதோ இதுதான். உண்மையிலேயே இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.” என்று அப்பொருளை வழக்கறிஞரிடம் மருத்துவர் வழங்கினார்.

அந்தச் சிறு அன்பளிப்பினைப் பார்த்ததும் வழக்கறிஞர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.

“ஆமாம் நிச்சயமாக! எப்படியெல்லாம் யோசிக் கிறார்கள். அருமை! அபாரம்! இது போன்ற பொக்கிஷம் உனக்கு எங்கு கிடைத்தது?” என்று உற்சாகத்தில் குதித்தார் வழக்கறிஞர்.

தன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் தொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே, “நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடும். இதனை நான் வைத்துக்கொள்ள முடியாது” என வழக்கறிஞர் கூறினார்.

“ஏன்? என்ன காரணம்?” எனப் பதறினார் மருத்துவர்.

“எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்.

“இல்லை , இல்லை , இதை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசைவைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்.” என்று  வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.

“மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை …” என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டைவிட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.

நண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்தீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர், மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.

‘இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்லவிட்டிருந்தால் அவமானம்தான். ஆனால், இதை இங்கே வைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்து விடுவதுதான் உத்தமம். ஆமாம், இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம். எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இது போன்ற பொருட்கள் பிடிக்கும்…’ என முடிவு செய்தார் வழக்கறிஞர்.

உடனடியாக அங்குப் புறப்பட்டுச் சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்தக் கொத்துவிளக்குத் தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப் பாக அன்று மாலை அளிக்கப்பட்டது.

அன்று மாலை முழுவதும் அந்த நடிகரின் ஒப்பனை அறையில் இருந்த அன்பளிப்பினைப் பார்வையிட ஆண் பார்வையாளர்கள் மொய்த்தனர். அந்த ஒப்பனை அறை, ஆச்சரியத்தில் எழும்பிய உற்சாகமான ஆரவாரத்தாலும், குதிரை கனைப்பது போன்ற சிரிப்பொலியாலும் நிரம்பியிருந்தது. நடிகைகளில் யாராவது ஒருவர் உள்ளே வர கதவைத் தட்டினால், நடிகர் தன் காந்த குரலில், “தற்சமயம் வேண்டாம் டார்லிங், உடை மாற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று சமாளித்துவிடுவார்.

நாடகம் முடிந்ததும் தன் தோள்களை வளைத்துக் கொண்டு, குழப்பத்தில் கைகளை உதறிக்கொண்டிருந்தார்.

“இந்தப் பாழாய் போன விகாரத்தை நான் எங்கு வைப்பது? நான் இருப்பதோ தனியார் விடுதியில், என்னைப் பார்க்க வரும் நடிகையை நினைத்துப் பார்க்கிறேன். சட்டென எடுத்து மேசைக்குள் போட்டு மூட இது ஒன்றும் புகைப்படம் இல்லை .!” எனப் புலம்பிக்கொண்டிருந்தார்.

அவரது உடைகளைக் களைய உதவி செய்து கொண்டிருந்த ஒப்பனைக்காரர், “ஏன் சார், இதை விற்றால் என்ன?” என்று கேட்டார். இந்தப் பகுதியில் இது மாதிரியான பழைய வெண்கலப் பொருட்களை வாங்கும் வயதான பெண் ஒருவர் இருக்கிறார். திருமதி. ஸ்மிர்நோவா என்று கேளுங்கள். எல்லோருக்கும் தெரியும்.” என அவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அவரது ஆலோசனைப்படியே நகைச்சுவை நடிகர் நடந்து கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, பித்தநீர் குறித்த சிந்தனையில் இருந்த மருத்துவர், நெற்றியில் ஒரு விரலை அழுத்தியபடி, தன் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தார். திடீரென கதவைத் திறந்துகொண்டு, சாஷா ஸ்மிர்நோவ் உள்ளே நுழைந்தான். உற்சாகமாகச் சிரித்தபடி வந்த அவன் முகம் முழுக்க சந்தோஷத்தால் நிரம்பி வழிந்தது. அவன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருள், செய்தித்தாளால் சுற்றப்பட்டு இருந்தது.

“டாக்டர்,” எனப்பேசத் தொடங்கும்போதே மூச்சு வாங்கியது. அப்படியே தொடர்ந்தான்.

“நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டத்தை உங்களால் நம்ப முடியாது. எப்படியோ உங்களுக்கு அன்று கொடுத்த கொத்து விளக்குத்தண்டுக்கு ஒரு ஜோடி கிடைத்துவிட்டது. அம்மாவுக்கு ரொம்ப திருப்தி. நான் அம்மாவுக்கு ஒரே பிள்ளை. நீங்கள்தான் என்னைக் காப்பாற்றினீர்கள்…”

மிகவும் நன்றி விசுவாசத்துடன், அந்தக் கொத்து விளக்குத் தண்டை மருத்துவர் முன் சாஷா வைத்தான். வாயைப் பிளந்த மருத்துவர், ஏதோ சொல்ல முயன்று பார்த்தார். ஆனால், வார்த்தை எதுவும் வரவில்லை . வாயடைத்து நின்றார்.

(END)
*
குறிப்பு : இக்கதை முதன்முதலில் வெளிவந்த 1886-ஆம் ஆண்டிலேயே பெரும் வரவேற்பினைப் பெற்றது. ஆன்டன் செக்காவ் (1860-1904), ரஷ்ய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவராவார். பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுப் பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்த அவருடைய சிறுகதைகள், பல இளம் எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளன. முதன் முதலில் 1886இல் எழுதப்பட்ட இக்கதை, 1967இல் வெளியான அவருடைய கதைகள் அடங்கிய பிரஞ்சு மொழியாக்கத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

*


நன்றி : வேங்கட சுப்புராய நாயகர்

நன்றி : ‘மணல்வீடு’ ஆசிரியர் மு. ஹரிகிருஷ்ணன்

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

வைக்கம் அவர்களின் சிறுகதை ஒன்றைத்தாருங்கள்.வாசித்து கனநாளாச்சி’  என்று சொன்னார் வாழைச்சேனை அமர். ஞாபகம் வந்தது. மூக்கைத் தேடினேன். பஷீரின் மூக்கு. தமிழோவியம் / சமாச்சார் தளங்களில் இருந்த அவருடைய அழகான  மூக்கை யாரோ கடித்து எடுத்துவிட்டார்கள். எனவே எனது (பழைய) கூகுள் பக்கத்திலிருந்த மூக்கை எடுத்து இங்கே நுழைக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் கடித்த, மன்னிக்கவும், மொழிபெயர்த்த நாகூர்ரூமிக்கு நன்றி. மூலத்தைப் பார்க்காமலேயே மொழிபெயர்ப்பதில் இவர் முதன்மையானவர் (ஓய், எனக்கு யாசீன் ஓதுனதுக்கு பழி!) . அவரது பெயர்ப்பை உயிர்மை இதழும் வெளியிட்டிருந்தது (2004). சுட்டி இப்போது கிடைக்கவில்லை. உண்மையில் , பஷீரின் 21 கதைகள் என்று தலைப்பிட்டு 20 கதைகளுக்கான சுட்டிகளை  நண்பர் சிங்கமணியின் தமிழ்த்தொகுப்புகள் தளத்திலிருந்தும் (சகோதரர் ராம்பிரசாத்தின் அழியாச்சுடர்கள் தளம் போலவே இங்கும் நிறைய விசயங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்கிருந்து எடுத்தது / மொழிபெயர்ப்பாளர் யார் என்ற அவசியமான விபரங்களெல்லாம் இல்லை.) 21வது கதையாக ’மூக்கை’யும் சேர்க்கலாம் என்றால் அது காணோம்! அப்படியும் சொல்ல முடியாது. கீற்று தளத்தில் இப்போதும் இருக்கிறது. (ஆங்கிலம் வழி தமிழாக்கம் : கூத்தலிங்கம்).  எனக்கு ரூமியின் மொழிபெயர்ப்புதான் பிடிக்கிறது…  குளச்சல் மு. யூசுபின் மொழிபெயர்ப்புதான் மிகச் சிறந்தது என்கிறார்கள் நண்பர்கள். காலச்சுவடு வெளியீடு எனக்கு கிடைக்கவில்லையே, காசும் இல்லையே, என்ன செய்வேன்?  போகட்டும், ’மூக்கு’க்கு கீழே அவசியமான மற்ற அவயவங்களையும் சேர்த்திருக்கிறேன். அதெல்லாம் பார்க்க முடியாது  என்றால் பஷீரின் பூவன் பழத்தையாவது ருசியுங்கள் . நன்றி. – ஆபிதீன்

***

உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு

வைக்கம் முஹம்மது பஷீர்
ஆங்கிலத்திலிருந்து தமிழில் : நாகூர் ரூமி

***

அதிர்ச்சியான செய்திதான். அதாவது, அறிவுஜீவிகள் மத்தியிலே மூக்கு ஒன்று விவாதப் பொருளாகிவிட்டது என்பது.

அந்த மூக்கைப் பற்றிய உண்மையான கதையை இங்கே நான் பதிவு செய்கிறேன்.

இந்த கதை ஆரம்பிக்கும்போது உலகப் பிரசித்தி பெற்ற அந்த மூக்கின் சொந்தக்காரனுக்கு இருபத்தி நான்கு வயது பூர்த்தியாகிவிட்டிருந்தது. அதற்கு முன் அவனை யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இருபத்தி நான்காவது ஆண்டுக்கு ஏதேனும் சிறப்பு முக்கியத்துவம் இருக்கிறதா என்ன? யாருக்குத் தெரியும்? இந்த உலகின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல மாமனிதர்களுடைய வாழ்வில் இருபத்து நான்காவது ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்திருப்பது தெரியவரும். வரலாற்று மாணவர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல வேண்டியதே இல்லை.

நம்முடைய கதையின் நாயகன் ஒரு சமையல்காரன். வேண்டுமானால் அடுப்பங்கரை வேலைக்காரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்டுச் சொல்லும்படி அவன் ஒன்றும் சூட்டிகையானவனல்ல. அவனுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. அவனுடைய உலகம் அந்த சமயலறையினால் ஆனது. அதற்கு வெளியே நடப்பவற்றைப் பற்றி அவனுக்கு அக்கறை ஏதும் இல்லை. அதைப்பற்றி அவன் ஏன் கவலைப்பட வேண்டும்? திருப்தியாகச் சாப்பிடுவான். விரும்பிய அளவு மூக்குப்பொடியை உறிஞ்சுவான். தூங்குவான். வேலை பார்ப்பான். அவனுடயை அன்றாட அலுவல்கள் இந்த செயல்பாடுகளில் முடிந்து போயின.

ஒரு ஆண்டின் ஒரு மாதத்தின் பெயர் என்ன என்று அவனுக்குத் தெரியாது. அவனுடைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நாள் வரும்போது அவனுடைய அம்மா வந்து அதை வாங்கிச் செல்வாள். மூக்குப்பொடி வேண்டுமென்றால் அந்த கிழவியே அதையும் அவனுக்கு வாங்கிக்கொடுப்பாள். ஒரு திருப்திகரமான வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். தனது இருபத்து நான்காம் வயது வரை. அதன் பிறகு ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது.

அவனுடைய மூக்கு லேசாக நீளவாக்கில் வளர ஆரம்பித்தது. அவனுடைய வாயைக் கடந்து தாடை வரை அது சென்றது.

ஒவ்வொரு நாளும் அது நீண்டுகொண்டே சென்றது. அதை மறைக்கத்தான் முடியுமா என்ன? ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. தொப்புள்வரை அவனுடைய மூக்கு வளர்ந்துவிட்டது. அவனுக்கு ஏதாவது அசௌகரியமாக இருந்ததா என்றா கேட்கிறீர்கள்? கிடையவே கிடையாது. நிம்மதியாக அவனால் மூச்சுவிட முடிந்தது. மூக்குப்பிடிக்க மூக்குப்பொடியை இழுக்க முடிந்தது. பலவிதமான வாசனைகளை தரம்பிரித்து சொல்ல முடிந்தது. சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு அசௌகரியமும் அவனுக்கு இல்லை.

எனினும், இந்த மூக்கின் பொருட்டு, பாவம் அந்த ஏழை சமையல்காரன் வேலையை விட்டு நீக்கப்பட்டான்.

என்ன காரணம்?

“பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியனை திரும்பவும் அழைத்துக்கொள்” என்று முழங்கியபடி எந்த குழுவும் அவனுக்காக பரிந்துகொண்டு வரவில்லை. இந்த அநியாயத்தைப் பார்த்தும் அரசியல் கட்சிகள் தங்கள் கண்களை மூடிக்கொண்டன.

“அவனை ஏன் வேலையை விட்டு நீக்கினீர்கள்?” எந்த மனிதகுல காதலனும் இவ்விதமான கேள்விகளைக் கேட்டு முன்வரவில்லை.

பாவம் அந்த சமையல்காரன்!

தனக்கு ஏன் வேலை போனது என்று யாருமே அவனுக்கு சொல்லவேண்டியதில்லை. அவனுடைய வீட்டுக்காரர்கள் அவன் பொருட்டு நிம்மதியாக இருக்க முடியாமல் போனதுதான் அதற்குக் காரணம். நீளமூக்கனையும் அவனுடைய மூக்கையும் பார்ப்பதற்காக மக்கள் இரவு பகல் பாராமல் வந்தவண்ணமிருந்தனர். நிழல்படமெடுப்பவர்கள் வீட்டுக்காரர்களுக்கு தொல்லை கொடுத்தனர். பத்திரிகை நிருபர்கள் வேறு. இப்படி வந்து அவஸ்தைப்படுத்தியவர்களால் அது போதாதென்பதுபோல வீட்டிலிருந்து பல பொருள்கள் திருட்டும் போயின.

பணி நீக்கம் செய்யப்பட்ட சமையல்காரன் தனது தனிமையான குடிசையிலே உட்கார்ந்து யோசித்தான். அவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாக புரிந்தது. அவனுடைய மூக்கு ரொம்ப பிரபலமடைந்துவிட்டது !

தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் அவனைக் காண வந்தார்கள். அவனுடைய நீண்ட மூக்கைப் பார்த்து அனைவரும் மூக்கில் விரலை வைத்தனர். சிலர் அவனுடைய மூக்கைத் தொட்டுப் பார்த்தனர். ஆனால் “இன்னிக்கி சாப்டியா?” “ஏன் இப்படி பலவீனமா இருக்கே?” என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை. குடிசையில் பணம் ஏதுமில்லை. ஒரு சின்ன மூக்குப்பொடி டப்பா வாங்கும் அளவுக்குக் கூட. பட்டினி போட்டு சாகடிக்க அவனென்ன காட்டு மிருகமா? அவன் முட்டாளாக இருக்கலாம். ஆனாலும் அவன் மனிதன். ஒரு நாள் அவன் தன் வயதான அம்மாவை தனியே அழைத்து காதில் கிசுகிசுத்தான் : “இந்த பயங்கரமானவர்களையெல்லாம் வெளியே தள்ளி கதவை மூடு”

அவன் சொன்னபடியே அவன் அம்மாவும் உடனே செய்தாள்.

அன்றிலிருந்து அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் நல்ல நேரம் உண்டானது. மகனுடைய மூக்கை தரிசிப்பதற்காக மக்கள் அம்மாவுக்கு லஞ்சம் கொடுக்க ஆரம்பித்தனர்! இந்த ஊழலுக்கு எதிராக சில நியாயவாதிகள் எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் இந்த செயலின்மையை எதிர்த்து பலர் அரசை அழிக்க புரட்சிக் கழகங்களில் சேர்ந்தனர் !

நீளமூக்கனது வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. அதிகமானது என்று மொட்டையாக ஏன் சொல்லவேண்டும்? ஆறு ஆண்டுகளில் அந்த ஏழை சமையல்காரன் ஒரு கோடீஸ்வரனாகிப் போனான்.

மூன்று முறை திரைப்படங்களில் அவன் நடித்தான். ‘மனித நீர்மூழ்கிக் கப்பல்’ என்ற அந்த டெக்னிகலர் படத்தைப் பார்ப்பதற்குத்தான் எவ்வளவு ரசிகர்கள்! நீளமூக்கனது உயர்ந்த குணங்களைப் பற்றி ஆறு கவிஞர்கள் காவியமெழுதினர் ! பிரபலமான ஒன்பது எழுத்தாளர்கள் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதி பணமும் புகழும் சம்பாதித்தனர்.

அவனுடைய அரண்மனை போன்ற வீடும் பலர் வந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. யாரும் எந்த நேரத்திலும் அதற்குள் போகலாம். ஒரு வேளை சாப்பிடலாம். ஒரு இழுப்பு மூக்குப்பொடியும் பெற்றுக்கொள்ளலாம்!

அவனுக்கு இரண்டு காரியதரிசிகள் இருந்தனர். இரண்டு அழகான தேர்ந்த பெண்கள். இரண்டு பேருமே அவனைக் காதலித்தனர். மதித்து வணங்கினர். இரண்டு அழகான பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைக் காதலித்தால் எப்போதுமே பிரச்சனைதான். நீளமூக்குக்காரனின் வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது.

அவர்கள் இருவர் மட்டுமின்றி அவனைப் பலரும் விரும்ப ஆரம்பித்தனர். தொப்புள்வரை தொடர்ந்த அந்த நீண்ட மூக்கு உன்னதத்தின் குறியீடாக பார்க்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி நீளமூக்கன் தனது கருத்துக்களைச் சொன்னான். பத்திரிக்கைகள் அவனுடைய கருத்துக்களைப் பிரசுரித்தன :

“மணிக்கு 10,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானம் உருவாக்கப்பட்டது. நீளமூக்கர் அதைப்பற்றி இப்படிச் சொன்னார்..”.

“டாக்டர் பண்ட்ரோஸ் ·புராசிபுரோஸ் இறந்த மனிதன் ஒருவனை உயிர்ப்பித்தார். அதைப்பற்றிக் குறிப்பிடும்போது நீளமூக்கர் தனது உரையில் …”

உலகின் மிக உயரமான சிகரம் ஏறப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன் மக்கள் இப்படிக் கேட்டனர் : “நீளமூக்கர் அதைப்பற்றி என்ன சொல்கிறார்?”

நீளமூக்கன் ஒரு நடப்பைப் பற்றி ஏதும் சொல்லவில்லை என்றால், ப்பூ… அது ஒன்னுமில்லாத விஷயம் என்றாகிப்போனது. எனவே எதைப்பற்றியும் எல்லாவற்றைப் பற்றியும் நீளமூக்கன் எதாவது சொல்லியாக வேண்டியிருந்தது ! ஓவியம், வாட்ச் வியாபாரம், மெஸ்மரிஸம், புகைப்படக்கலை, ஆன்மா, வெளியீட்டு நிறுவனங்கள், நாவல் எழுதுதல், இறப்புக்குப் பிறகான வாழ்க்கை, பத்திரிக்கைகளின் போக்கு, வேட்டையாடுதல் இப்படி.

இந்த சமயத்தில்தான் நீளமூக்கனைப் பிடிப்பதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒன்றைப் பிடிப்பது — அதாவது உடல்ரீதியாக பிடிப்பது — என்பது ஒன்றும் புதிதல்ல. இந்த உலக வரலாற்றில் முக்கால்வாசி இப்படிப்பட்ட பிடிப்புகளையும் அதனால் ஏற்பட்ட வெற்றிகளையும் பற்றியதுதானே!

இந்த பிடித்தல் என்பது என்ன? தரிசாகக் கிடந்த ஒரு நிலத்தில் தென்னங்கன்றுகளை நடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்துக்கு நீரூற்றி அதை உரமிட்டு வளப்படுத்துகிறீர்கள். அதற்கு வேலி போடுகிறீர்கள். எதிர்பார்ப்பில் ஆண்டுகள் பல கழிந்து கன்று வளர்ந்து மரமாகி பலன் தர ஆரம்பிக்கிறது. அப்போது திடீரென்று உங்கள் தோட்டத்தை உங்களிடமிருந்து யாரோ பிடுங்கிக்கொள்கிறார்கள்.

எல்லாருக்கும் முதலில், நீளமூக்கனைப் பிடிப்பதற்கு அரசுதான் முயற்சி செய்தது. ஒரு நம்பிக்கை தந்திரத்தை அது கையாண்டது. ‘நீளமுக்கர்களின் தலைவன்’ என்று ஒரு பட்டத்தை அவனுக்கு வழங்கியது. ஒரு மெடலையும் பரிசாகக் கொடுத்தது. அந்த தங்க மெடலை அவன் கழுத்தில் ஜனாதிபதியே அணிவித்தார். அதன் பிறகு கைகுலுக்குவதற்கு பதிலாக, அவனுடைய நீண்ட மூக்கை லேசாக செல்லமாகக் கிள்ளினார். இது பத்திரிகையாளர்களால் படமாக்கப்பட்டு எல்லாத் திரையரங்குகளிலும் காண்பிக்கப்பட்டது.

இந்த நேரத்தில்தான் நாடு முழுவதிலும் இருந்த அரசியல் கட்சிகளும் ரொம்ப ஆர்வமாக முன்வந்தன. “மக்கள் போராட்டத்துக்கு தோழர் நீளமுக்கர்தான் தலைமை ஏற்று நடத்தவேண்டும்!” “தோழர் நீளமூக்கரேதான்!”

யாருடைய தோழர்? எதில் தோழர்? அட ஆண்டவனே! பாவம் அந்த நீளமூக்கன்!
நீளமூக்கன் ஒரு கட்சியில் சேரவேண்டும்! எந்த கட்சி? அப்போது நிறைய கட்சிகள் இருந்தன. எப்படி நீளமூக்கனால் ஒரே நேரத்தில் பல கட்சிகளில் சேர முடியும்?

அவனே சொன்னான் : “நான் ஏன் கட்சிகளில் சேரவேண்டும்? நானா? எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கிறது”

அதன்பின் அவனுடைய காரியதரிசிகளில் ஒருத்தி சொன்னாள் : “தோழர் நீளமூக்கர் என்னை விரும்பினால் என்னுடைய கட்சியில் சேரவேண்டும்”

அதற்கு நீளமூக்கன் எதுவும் சொல்லவில்லை.

“நான் எதாவது கட்சியில் சேரவேண்டுமா?” என்று இன்னொரு காரியதரிசினியைக் கேட்டான். அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட அவள், “ஏன் சேரவேண்டும்?” என்று பதில் சொன்னாள்.

அந்த நேரத்தில் ஒரு கட்சி இந்த முழக்கத்தோடு வந்தது : “எங்கள் கட்சி நீளமூக்கரின் கட்சி. நீளமூக்கரின் கட்சி மக்களின் கட்சி”

மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் இதைக்கேட்டு கொதித்தெழுந்தனர். நீளமூக்கனின் காரியதரிசினிகளில் ஒருத்தியை வளைத்துப் போட்டு அவள் மூலமாக ஒரு அறிக்கை விட்டனர். “நீளமூக்கர் நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். இதுநாள்வரை அவர் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்தார். தன்னுடைய நடிப்பில் என்னையும் ஒரு பகடைக்காயாக பயன்படுத்திவிட்டார். இப்போது ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நீளமான மூக்கு உண்மையில் ரப்பரால் ஆனது”

வாவ்! எல்லா பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியானது. நீளமூக்கனின் நீளமூக்கு ரப்பரால் ஆனது!

அதன்பிறகு மக்கள் அமைதியாக இருப்பார்களா என்ன? கோபமாக இதற்கு எதிர்வினை செய்யமாட்டார்களா என்ன? தந்திகளும், தொலைபேசிகளும், கடிதங்களும் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்தன! ஜனாதிபதிக்கு நிம்மதியோ அமைதியோ இல்லாமல் போனது. “நீளமூக்கனின் ரப்பர் மூக்கு அழிந்து போகட்டும்! நீளமூக்குக் கட்சி ஒழிக! புரட்சி வாழ்க!”

நீளமூக்குக்கு எதிரான அரசியல் கட்சி இவ்விதமாக ஒரு அறிக்கைவிட்டதும் அதை எதிர்த்து எதிர்க்கட்சி அவனுடைய இன்னொரு காரியதரிசினி மூலமாக எதிர் அறிக்கை விட்டது : “அன்புள்ளம் கொண்ட நாட்டுமக்களே! குடிமக்களே! அவள் சொன்னது ஒரு பச்சைப்பொய். தோழர் நீளமூக்கர் அவளை காதலிக்கவில்லை. அதனால் அவள் இப்படி பழிவாங்குகிறாள். நீளமூக்கரின் புகழையும் செல்வத்தையும் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவளுடைய பேரவாவில் விளைந்த பொய் அது! அவளுடைய சகோதரர்களில் ஒருவர் எதிர்க்கட்சியில் இருக்கிறார். அந்த கட்சியின் உறுப்பினர்களின் உண்மையான நிறத்தை இப்போது காட்டுகிறேன். தோழர் நீளமூக்கரின் நம்பிக்கையான காரியதரிசினி நான்தான். அவருடைய மூக்கு ரப்பரால் ஆனதல்ல. எனது இதயம் உள்ளே துடித்துக்கொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல அவருடைய மூக்கும் உண்மையானதே. இந்த மாதிரி எசகுபிசகான சூழ்நிலையில் தோழர் நீளமூக்கரை ஆதரிக்கும் கட்சி நீடூழி வாழட்டும்! மக்கள் முன்னேற்றத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த குறிக்கோளுமில்லை. புரட்சி நீடூழி வாழ்க!”

இப்போது என்ன செய்வது? மக்கள் மனதில் ரொம்ப குழப்பம் ஏற்பட்டது. நீளமூக்கனுக்கு எதிரான கட்சியின் தலைவர்கள் ஜனாதிபதியை குற்றம் சொல்ல ஆரம்பித்தார்கள் : “முட்டாள் அரசு! ‘நீளமூக்கர்களின் தலைவன்’ என்ற பட்டத்தை மக்களை ஏமாற்றிய ஒருவனுக்கு கொடுத்திருக்கிறார்கள்! தங்கமெடல் வேறு! இந்த ஏமாற்று வேலையில் ஜனாதிபதிக்கும் பங்கு உண்டு. தேசிய நலனுக்கு இதில் குந்தகம் ஏற்பட்டுள்ளது. தேசநலனை அவமதித்துவிட்டனர். ஜனாதிபதி ராஜினாமா செய்யவேண்டும். ரப்பர் மூக்கன் கொல்லப்பட வேண்டும்!”

இதற்கு ஜனாதிபதி கோபமாக எதிர்வினை செய்தார். ஒரு நாள் காலை ராணுவமும் டாங்கிகளும் நமது பாவப்பட்ட நீளமூக்கனின் வீட்டைச் சுற்றி வளைத்தது. அவனைக் கைது செய்து கூட்டிச்சென்றனர்.

கொஞ்ச காலத்துக்கு நீளமூக்கனைப் பற்றி எந்தச் செய்தியும் வரவில்லை. அவனுடைய இருப்பை மக்கள் மறந்தும் போயினர். பிறகுதான் அணுகுண்டின் விளைவுகளைப் பற்றிய செய்தியுடன் புது செய்தி வந்தது. என்ன நடந்தது தெரியுமா? எல்லாவற்றையும் மக்கள் மறந்திருந்த அந்த சமயத்தில்தான் ஜனாதிபதியின் அந்த அறிக்கை வந்தது : “மார்ச் 9ஆம் தேதி நீளமூக்கர்களின் தலைவனின் வழக்கு நடைபெறும். 48 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவ நிபுணர்கள் அவரைப் பரிசோதிப்பார்கள். உலகின் அனைத்து பத்திரிக்கைகளின் கரஸ்பாண்டெண்டுகளும் அதில் கலந்துகொள்வர். நடப்பதனைத்தும் படமெடுக்கப்பட்டு உலகின் உடனடி பார்வைக்கு வைக்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்”

மக்கள் எப்போதுமே மக்கள்தான். அவர்களால் அமைதியாக இருக்க முடியாது. மாநகரத்துக்கு பெருமளவில் அவர்கள் வந்து சேர்ந்தனர். தங்கும் விடுதிகளை முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கான வாகனங்களுக்குத் தீ வைத்தனர். காவல் நிலையங்களை எரித்தனர். அரசு கட்டிடங்களை உடைத்து அழித்தனர். வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டன. நீளமூக்கனுக்கான இந்த போராட்டத்தில் பல ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டு தியாகிகளாயினர்.

மார்ச் 9. காலை பதினோறு மணி. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னிருந்த சதுரவடிவ இடம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. லௌடு ஸ்பீக்கர்கள் அலறின. “மக்கள் அமைதி காக்க வேண்டும். பரிசோதனை ஆரம்பித்து விட்டது”

ஜனாதிபதி மற்றும் அவரது காபினட் அமைச்சர்கள் முன்னிலையில் மருத்துவர் குழு கூடி நீளமூக்கனைச் சுற்றிவளைத்தது. ஒரு டாக்டர் அவனது மூக்குத் துவாரத்தினை மூடினார். உடனே அவன் தன் வாயை விரியத்திறந்தான். இன்னொரு டாக்டர் ஒரு ஊசியை எடுத்து அவன் மூக்கு நுனியில் குத்தினார். அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அவனது மூக்கின் நுனியிலிருந்து ஒருதுளி ரத்தம் வந்தது.

டாக்டர்கள் தங்களது ஒருமித்த தீர்ப்பை வழங்கினர் : “இந்த நீளமூக்கு ரப்பரால் ஆனதல்ல. இது உண்மையானதுதான்.”

நீளமூக்கனது காரியதரிசினிகளில் ஒருத்தி அவனது மூக்கின் நுனியில் முத்தமிட்டாள்.

“தோழர் நீளமூக்கர் நீடூழி வாழ்க! நீளமூக்கர்களின் தலைவர் நீடூழி வாழ்க! நீளமூக்கரின் மக்கள் முன்னேற்றக் கழகம் நீடூழி வாழ்க !”

இந்த ஆரவாரமும் ஆனந்தமும் முடிந்தபோது, ஜனாதிபதி இன்னொரு தந்திரவேலை செய்ய நினைத்தார். பாராளுமன்ற உறுப்பினராக நீளமூக்கனைத் தேர்ந்தெடுத்தார் ! நீளமூக்கன் கதையின் முடிவு அதுதான்.

ஆனால் நீளமூக்கன் உறுப்பினராகாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஐக்கிய முன்னணி என்ற அமைப்பைத் துவக்கின. “மந்திரிசபை ராஜினாமா செய்ய வேண்டும். பொய்மை எப்படி தொடர்கிறது என்று பாருங்கள்! மக்கள் சிந்தனையில் குழப்பம் உண்டாகாதா? பாவம் இந்த அறிவுஜீவிகள் என்ன செய்வார்கள்?” என்று முழங்கத் தொடங்கின.

***

— (மார்ச் 2004, உயிர்மை)

கதாசிரியரையும் கதையையும் பற்றிய குறிப்பு

அரசியல் விமர்சனம் செய்யும் கதைகளை சுவாரசியமாக, வெற்றிகரமான இலக்கியப் படைப்பாக உருவாக்குவது லேசான காரியமல்ல. ஜார்ஜ் ஆர்வெலின் மிருகப்பண்ணை (Animal Farm) நாவல் ஒரு நல்ல உதாரணம். இக்கதையில் இவ்விஷயம் பஷீருக்கு எவ்வளவு எளிதாகக் கூடிவந்திருக்கிறது ! இலக்கியக் குன்றின் மேலிட்ட விளக்கு பஷீர். இந்தக்கதையும் அப்படியே.

***

நாகூர் ரூமி

நன்றி : நாகூர் ரூமி

***

சுட்டிகள் :

எனது பஷீர் – சுகுமாரன்

பஷீர்: பூமியின் உரிமையாளர் – சுகுமாரன் / காலச்சுவடு

பஷீர் : மொழியின் புன்னகை – ஜெயமோகன் / காலச்சுவடு

கதைகளைத் தின்னும் ஆடு – எஸ். ராமகிருஷ்ணன்

பஷீரின் ‘மதிலுகள்’ – பிரவீன்குமார்

Mathilukal (Walls) (ml: മതിലുകള്‍) , directed by Adoor Gopalakrishnan Part 1

Mathilukal (Walls) (ml: മതിലുകള്‍) , directed by Adoor Gopalakrishnan Part 2

பஷீரின் சில சிறுகதைகள் :

இதயதேவி  (தமிழில் : சித்தார்த்)

தங்கம்  (தமிழில்: ஏ.எம்.சாலன் )

தேன் மாம்பழம்  (தமிழில்: சுகுமாரன் )

ஜென்ம தினம்  (தமிழில்: குளச்சல் மு. யூசுப் )

’சுரா’ மொழிபெயர்ப்பில்…

பழைய ஒரு சிறிய காதல் கதை  

வெள்ளப்பெருக்கு 

நீல வெளிச்சம் 

மந்திரப் பூனை

உமறு பாஷா யுத்த சரித்திரம்

கணையாழி , மார்ச் 2002 இதழிலிருந்து…

*

உமறு பாஷா யுத்த சரித்திரம்

ஹ.மு. நத்தர்சா

‘உமறு பாஷா’ என்னும் பெயர், நாயகத் தோழர் கலீபா உமர் காலக்கட்டத்தில் நடந்த யுத்த சரித்திரமோ என்ற மயக்கத்தைத் தந்தாலும், உண்மையில் இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் துருக்கிப் பேரரசுக்கும், இரஷ்யப் பேரரசுக்கும் இடையே தொடர்ந்து பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘ஒமர்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

விக்டோரியா காலத்தின் இடைப்பகுதியைச் சேர்ந்த ஜி.வி.எம்.ரைனால்ட்ஸ் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிக் குவித்திருப்பவர். இவருடைய நாவல்களின் தாக்கம் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களில் காணப்படுவதாக இலக்கியத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆங்கிலத்தில் மூன்று பாகங்களாக வெளிவந்த இந்த பிரமாண்டமான வரலாற்று நூலை, தமிழில் நான்கு பாகங்களாக, பல்வேறு காலக்கட்டங்களில் மொழிபெயர்த்து , நூறாண்டுகளுக்கு முன்பே வெளியிட்டவர், நாகூர் மகாவித்வான் குலாம்காதிறு நாவலர். தமிழ், ஆங்கிலம், அரபி மொழிகளில் புலமைபெற்று விளங்கிய குலாம் காதிறு நாவலர் , கவிதை, உரைநடை, மொழியாக்கம் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் தன் முத்திரையைப அழுத்தமாகப் பதித்துள்ளார்.

வழக்கறிஞர் சரவனப்பெருமாள் ஐயரிடம் இவர் பெற்ற ஆங்கில அறிவின் பெருமித வெளிப்பாடாக அமைந்து, படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது, ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்’ என்னும் பிரம்மாண்டமான இவ்வரலாற்று நூல்.

இன்றைக்கும் சரித்திர சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடல்கள் தீபகற்பத்தைச் சேர்ந்த குரோஷியா நாட்டில் இருந்த கதைக்களம் தொடக்கம் பெறுகிறது.

அன்றைய குரோஷியா நாட்டின் சரிபாதி, ஆஸ்திரியா நாட்டின் அதிகாரத்திலும், மறுபாதி துருக்கிப் பேரரசின் பிடியிலும் சிக்கியிருந்த்போது நிகழ்ந்த சில சம்பவங்களைத் தீப்பொறியாக்கி, அத்தீ கொழிந்து விட்டு எரியத் தொடங்கியபோது ஆசிய ஐரோப்பா கண்டங்களுக்கிடையே இருந்த பல சிறுநாடுகளும், நகரங்களும் கருகிச் சாம்பலாகிய காட்சியை சரித்திரக் கதைக்கே உரிய சஸ்பென்ஸ் உத்தியுடன் உருக்கமாகச் சித்தரித்துள்ளார், ஆங்கில வரலாற்று நாவலாசிரியர் ரைனால்ட்ஸ். மூலநூலின் சுவாரஸ்யம் சிறிதும் கெடாத வகையில் மொழிபெயர்ப்பு நூல் என்று உணரமுடியாதபடி, தனக்கே உரிய கம்பீர நடையைக் கையாண்டு இவ் வரலாற்று நூலைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் குலாம் காதிறு நாவலரின் கைவண்ணம் பாராட்டத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், மத்திய ஆசியாவில் மிகப்பெரிய போர் மூண்டு, இரஷ்யப் பேரரசு ஒருபுறமும், பிரிட்டனையும் பிரான்சையும் கூட்டணி அமைத்துக்கொண்டு துருக்கிப் பேரரசு மறுபுறமும் நிகழ்த்திய சண்டையில் வடிந்த இரத்த வாடையை படிப்பவர் மனதிலும் படியச் செய்கிறது இம்மாபெரும் வரலாற்று நூல் என்பது ஒரு நெருடலான உண்மை.

மொழி பெயர்ப்பில் சித்து விளையாட்டு நிகழ்த்தியிருக்கிறார் நாவலர். ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது, பொருத்தமான இடங்களில் புதிய சொற்களை ஆய்வது, இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு வழக்குச் சொற்களை உரிய இடங்களில் கையாள்வது, வர்ணிக்கும் இடங்களில் தூய தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துவது என கதையின் நடையில் பல திருப்பங்களை தன் விருப்பத்தின் அடிப்படையில் கையாண்டுள்ளார்.

குரோஷியாவை ஆண்ட பான் என்னும் சர்வாதிகாரியால் வேண்டுமென்றே வம்புக்கிழுக்கப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்பட்ட ஒரு சாதாரண சுதேச பட்டாள வீரனாகிய தியோடர் லட்டோஸ் என்ற போர் வீரன், தன்னை சவுக்கால் அடித்து துன்புறுத்திய சர்வாதிகாரியை குதிரையில் இருந்து இழுத்து நிலத்தில் புரட்டி அவமானப்படுத்தி, காவலர்களால் மரணதண்டனை நிறைவேறும் தருணத்தை விடுத்து, துருக்கிப் பேரரசிடம் ஒப்படைத்து, உமறுபாஷா என்ற ஒப்பற்ற வீரனாக உருமாறிய அற்புத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இப்புதினத்தில், ஏராளமான சக மனிதர்களின் காதல் கதைகளும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் தொன்னூற்றி மூன்று அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கதையாசிரியரால் கையாளப்படும் சஸ்பென்ஸ் உத்தியே, அடுத்த அத்தியாயத்தை நோக்கி வாசகனை அடித்து விரட்டுகிறது என்பதும் சுவையான உண்மை.

இரஷ்யாவை ஆட்சி செய்த ஜார் மன்னரின் பரம்பரை, பதவி வெறிபிடித்து, ஒருவரையொருவர் நயவஞ்சகமாகக் கொன்று ஆட்சிக் கட்டில் ஏறிய கதையையும் நூலாசிரியர் பட்டியல் போட்டுக் காட்டத் தவறவில்லை.

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நிலவிய ஜன்மப்பகை மறைந்து இருநாட்டைச் சார்ந்தவர்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வும், காதல் உணர்வும் அரும்பத் தொடங்கியது என்பதையும் நூலாசிரியர் சுவைபடச் சொல்லிக் காட்டியுள்ளார்.

துருக்கி ஒரு காலக்கட்டத்தில் ஐரோப்பிய – ஆசிய நாடுகளுக்கு ஒரு சவால் விடும் சக்தியாகத் திகழ்ந்தது என்பதற்கு இந்தப் பிரமாண்டமான நூல் ஒரு எடுத்துக்காட்டு!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் உலக வரலாற்றை சுவைபடத் திரும்பிப் பார்க்க விரும்பும் ஒவ்வொருவருக்கும், இந்த நூலை உரிமையுடன் பரிந்துரை செய்யலாம்.

*

நன்றி : ஹ.மு. நத்தர்சா , கணையாழி

*

உமறு பாஷா யுத்த சரித்திரம்
(விலை ரூ. 185 | பக்கம் 896)
நூல் கிடைக்குமிடம் :

கல்தச்சன் பதிப்பகம்
பு.எண்.21
மேயர் சிட்டிபாபு தெரு
திருவல்லிக்கேணி
சென்னை – 5

‘குஞ்ஞிக்கா’வின் கன்யாவனங்கள் – யுவன் சந்திரசேகர்

Punathil Kunjabdulla‘குஞ்சு’ பற்றி இன்னொரு பதிவு!. ‘குஞ்ஞிக்கா’ என்று அழைக்கப்படும் பிரபல மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நேர்காணலை சென்ற ஞாயிறன்று கைரளி தொலைக்காட்சியில் பார்த்தேன். பேட்டி கண்ட ஜான் பிரிட்டாஸ், ‘ஏன் இவ்வளவு ‘ஹராமி’யாக இருக்கிறீர்கள்?’ என்றே ஜாலியாகக் கேட்டார். ‘குஞ்ஞிக்கா’ அலட்டிக்கொள்ளணுமே.. ஊஹும். ‘University-ஐ விட்டுட்டு ஏன் யு.கே.ஜிக்கு வந்தாய்?’ என்று கமலா சுரையாவை கேட்ட ஒண்ணாம் நம்பர் ஹராமி!  தமிழ்நாட்டில் அப்படிக் கேட்க இயலுமா? குறைந்தது ‘ஊர்விலக்கம்’ நடக்கும். 70 வயதை நெருங்கும் குஞ்ஞப்துல்லா அதிகபட்சம் 50 வயசுக்காரர் மாதிரிதான் இருந்தார். ஆனால் தன் மனசு பதினெட்டு பையனுடையது என்று இளமை பொங்க விவரித்தார் , மதுவைக் குடித்துக்கொண்டே. அல்லது அது தண்ணீரா? ‘குஞ்ஞிக்கா’வுக்கு பெண்கள் என்றால் பெரும் இஷ்டம். பார்த்தால் தோளைப் பிடித்துக் கொள்வாராம். ‘அட, தோளைத்தானே பிடிக்கிறேன், வேறு எதையும் பிடிக்கவில்லையே!’ என்று தமாஷ் வேறு. ‘இவ்வளவு குள்ளமாக இருக்கிறீர்களே.. பிரச்சனையாக இல்லையா?’ – மற்றொரு கேள்வி. ‘மூர்க்கன் (நாகப்பாம்பு) எவ்வளவு நீளம், உயரம்! சின்ன கீரியிடம் அது தோற்று ஓடிவிடுகிறதே?’ என்றது குஞ்சு! சுவாரஸ்யமான பேட்டி. வரும் ஞாயிறும் அதன் தொடர்ச்சி இருக்கிறது. இந்திய நேரம் மாலை 4: 30க்கு. பார்க்கவேண்டும். அவருடைய நாவல்களை இதுவரை படிக்கவில்லை. படிக்க வேண்டும்.

2007 வருட இறுதியில் நடந்த ‘உயிர்மை’யின் நாவல்கள் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு , புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கன்யாவனங்கள்’ நாவல் (மலையாள நாவலின் தமிழாக்கம்) பற்றி  யுவன் சந்திர சேகர் பேசியதில் கொஞசம் பதிகிறேன். ‘குஞ்ஞிக்கா’வை விட ‘மொழிபெயர்ப்பு’க்கா  பற்றிதான் அதிகம் பேசியிருக்கிறார். யுவனின் எழுத்து எனக்கு பிடிக்கும். கதைக்குள் கதையாக அவர் சிருஷ்டிக்கும் மாயலோகம் இன்பமானது. அவருடைய ‘ஒளி விலகல்’ஐ ரசித்துப் படித்திருக்கிறேன். யுவனின் இந்த கருத்துரையில் என் பெயரும் வந்து தொலைவதால் பதிவிட இதுவரை கூச்சமாக இருந்தது. ‘குஞ்ஞிக்கா’வுக்காக அதை இன்று ஒதுக்கி விடுகிறேன். யுவனுக்கும் , MP3 வடிவில் யுவனின் பேச்சைத் தந்த ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்திற்கும் நன்றி.

***

Yuvan_Chandrasekar

‘கன்யாவனங்கள்’  – யுவன் சந்திரசேகரின் கருத்துரை

‘ஒரு பெரும்போக்காக தமிழில் வந்திருக்கக்கூடிய மொழிபெயர்ப்புகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று,  பொதுஓட்டம் சார்ந்த மொழிபெயர்ப்புகள். பெரும்பத்திரிக்கைகளில் அவர்களுடைய தேவை கருதியும் அவர்களுடைய வாசகர்களின் தேவை கருதியும் மொழிபெயர்க்ககூடிய விஷயங்கள். பெரும்பத்திரிக்கைகளில் கதைகள் , கட்டுரைகள், சுயமுன்னேற்றத்திற்கான புத்திமதிகள் இதுபோல அவ்வப்போது,  எது செலாவணி ஆகுமோ அதைத் தொடர்ந்து மொழிபெயர்த்து போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் அந்த மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் என்னவென்றால் – ஜூனியர் விகடனோ நக்கீரனோ , இதுமாதிரி பத்திரிக்கைகளை எடுத்தீர்கள் என்றால் – பல்வேறு நிருபர்கள், பல்வேறு சம்பவங்கள் , பலவிதமான களங்கள்… இதை எல்லாவற்றையும் பற்றி எழுதக்கூடிய – அந்த articles எல்லாமே – ஒரே மொழியில் இருக்கும். முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரைக்கும் ஒரே மொழி. அப்படியென்றால் ஒரு பொதுமொழியை உருவாக்கும்போதுதான் அந்தப் பத்திரிக்கைக்கு ஒரு அடையாளமும் விற்பனைக்கான உத்தரவாதமும் கிடைக்கும். இப்படியான இடத்துக்கு அவர்கள் சிறுகச் சிறுக சிறுக தன்னை ‘செட்டில் பண்ணிக்கொள்கிறார்கள். அந்த பொதுமொழியில்தான்  இந்த மொழிபெயர்ப்புகளும் நடக்க முடியும். மூலமொழியில் எழுதிய ஆசிரியன் , எந்தவிதமான மொழியமைப்பு, பிரயோகங்கள் பயன்படுத்தியிருந்தாலும் கூட , எந்த பத்திரிக்கை அதை வெளியிடுகிறதோ அதன் பொதுமொழி அமைப்புக்குள்ளே வந்தால் மட்டுமே இதெல்லாம் பிரசுரமாகும். ஆனால் அங்கேயே மொழிபெயர்க்கக்கூடிய , பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் இருப்பார்கள் என்று சொன்னால் – ரா.கி.ரங்கராஜனோ சுஜாதாவோ , அவர்கள் மொழிபெயர்த்தார்களென்றால் – வேறு ஒரு விபத்து நடக்கும். அவர்கள் தன்னுடைய அசல் எழுத்துக்களை என்ன மொழியில் எழுதுகிறார்களோ அந்த மொழியில்தான் மூல நூலையும் மொழிபெயர்ப்பார்கள். இதைத்தாண்டி கறாரான சில சட்டதிட்டங்களையெல்லாம் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ‘பாபிலான்’ , குமுதத்தில் – ரா.கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் –  தொடராக வந்தது.. ஆனால் அதேமாதிரியான சாகசத்தன்மையுள்ள அதேமாதிரியான வித்யாஸமான களம் கொண்டவைகளை…அவர்கள் மொழிபெயர்க்க மாட்டார்கள்.. இதைவிட்டு வெளியில் – சிறுபத்திரிக்கை என்கிற குறுவட்டத்துக்குள்ளே நடக்கக்கூடிய அல்லது மொழிபெயர்ப்பு சம்பந்தமான பிரக்ஞையோடும் அக்கறையோடும் வருகிற மொழிபெயர்ப்புகள், அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்ந்த மொழிபெயர்ப்புகள், தனிநபர் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.. அரசாங்க நிறுவங்கள் என்று சொன்னால்  சாஹித்ய அகாடமி , NBT மொழிபெயர்த்து தரக்கூடிய புத்தகங்கள். புத்தகங்களை எந்த அடிப்படையில் தேர்வுசெய்து எடுக்கிறார்கள், எந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர்களை தேர்ந்து எடுக்கிறார்கள், அவரும் எந்த தைரியத்தில உட்கார்ந்து மொழிபெயர்க்கிறார்.. இது எதுவுமே நமக்கு தெரியாது. சாஹித்ய அகாடமி மாதிரியான நிறுவனம் வேறு சில காரியங்களும் செய்யும். நாம் காலம்காலமாக இங்கே கல்வியாளர் என்று ஒருவரை நினைத்துக்கொண்டிருப்போம். சமூக சீர்திருத்தவாதி என்று ஒருவரை நினைத்துக்கொண்டிருப்போம். அவர்கள் (சாஹித்ய அகாடமி) நமக்கு அவரை அறிமுகப்படுத்துவார்கள் :’இலக்கியச் சிற்பி’ என்று!  இது மாதிரியான விபத்துகள், இந்த நிறுவனங்கள் வழியாக.. இதையெல்லாம் தாண்டிதான்…  பைரப்பாவுடைய ‘பர்வ’ போன்றவைகள் மொழிபெயர்க்கப்பட்டு வந்து சேருகிறது. இதுபோக தனியார் நிறுவனங்கள் மொழிபெயர்க்ககூடிய , பிரசுரிக்ககூடிய புத்தகங்கள் இருக்கிறது –  ‘க்ரியா’ போல. அதேமாதிரி அங்கங்கே அங்கங்கே ஒரு அமைப்பு சார்ந்த மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டே  இருக்கிறது.  இதுபோன்ற மொழிபெயர்ப்புகள்தான் இங்கே இருக்கக்கூடிய சீரிய வாசகச் சூழலுக்கு ஏதாவது ஒரு உதவி பண்ண முடியும். ‘அந்நியன்’ வந்த மாத்திரத்தில் தமிழ் எழுத்துச் சூழலில் இருந்த மொழிநடை வேகவேகமாக மாற்றமுற்றதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான மொழிபெயர்ப்புகள்.. இதுபோன்ற தனியார் நிறுவனங்களிலிருந்து நமக்கு கிடைக்க முடியும் . இதற்கு அடுத்தகட்டமாக தனி நபர்கள் அவர்களுடைய ஆசை சார்ந்து , விளைவு சார்ந்து மொழிபெயர்க்ககூடிய புத்தகங்கள் இருக்கிறது. அதுவும் இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று, ஒரு ‘கன்விக்ச’னோடு – இந்த புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தே தீரணும் என்பதற்காக – அந்த புத்தகம் தனக்கு விடுக்கக்கூடிய சவால்களை எல்லாம் சந்தித்து.. இன்னொரு தரப்பு , எது வாகாக இருக்கிறதோ அதை மட்டும் செய்யும். வாகாக இல்லாத வாக்கியங்களை, வாகாக இல்லாத பத்திகளை , பகுதிகளை விட்டுவிட்டு மொழிபெயர்க்கும்.  இன்னொரு தரப்பு மொழிபெயர்ப்பு என்று சொன்னால் , தான் நம்பக்கூடிய கோட்பாடு சார்ந்த விஷயங்களை மொழிபெயர்ப்பது. இவ்வளவு பெரிய வட்டத்தில் இலக்கியத்திற்கான இடம், இலக்கிய அக்கறைகளுக்கான இடம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிதான் நமக்கு சில நல்ல புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் , புன்னத்தில் குஞ்ஞ்ப்துல்லா இந்த (கன்யாவனங்கள்) புத்தகம் வந்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு அயல்மொழி எழுத்தாளருடைய மூன்று புத்தகங்கள் தமிழில் வருவது மிகப்பெரிய விஷயம். நான் (காலச்சுவடு வெளியீடான) ‘மீஸான் கற்கள்’, ‘மஹ்சர் பெருவெளி’ – அந்த இரண்டு புத்தகங்களையும் ஆசையாக வாங்கிப் படித்தேன். அந்த புத்தகங்களில் தெரியக்கூடிய குஞ்ஞ்ப்துல்லா இந்த புத்தகத்தில் இல்லை. முதல் இரண்டு புத்தங்களிலும் – விஸ்தாரமாக ஒரு களத்தை எடுத்துக்கொண்டு சௌகரியமாக உட்கார்ந்து கதை சொன்ன குஞ்ஞ்ப்துல்லா இதில் வேகவேகமாக வேறு ஒரு கதை சொல்லியிருக்கிறார் அப்படியென்று சொல்லலாம். இந்தக் களம் தமிழுக்கு ரொம்ப புதிது. இதேமாதிரியான தன்மையுள்ள இன்னொரு புத்தகம் தமிழில் வந்திருக்கிறது. ஆபிதீனுடைய ‘இடம்’ என்கிற புத்தகம்.  ‘இடம்’,  இங்கேயிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைபார்க்கப் போகிறவர்கள் , அவர்கள் படக்கூடிய சிரமம் – கீழ்நிலைத் தொழிலாளர்கள் – அவர்களைப்பற்றியது. குஞ்ஞ்ப்துல்லா புத்தகம் அப்படி இல்லாமல் ஒரு அரபி முதலாளி அவன் வேலைக்கு எடுத்துக்கொண்டவர்கள், அவனைச் சுற்றியிருக்கக்கூடிய குடும்பம், அவனுடைய சம்பாத்தியம் , அவனுடைய தொழில் முறைகள்.. இது சம்பந்தமான ஒரு புத்தகம். இந்த புத்தகம் பாலைவனத்தை களமா வைத்து எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகம் முழுக்கவே தகிப்பு, அந்த வெட்கை இருந்துகொண்டே இருக்கிறது. வெளியில் புறச்சூழலில் இருக்கக்கூடிய வெயில், மணலோடு வெக்கையாகவும் இதில் வருகிற கதைமாந்தர்கள் எல்லோருமே ஒருவிதமான பாலியல் வறுமைக்கு, பாலியல் அழுத்தத்துக்கு ஆளானவர்களாகவும் இருக்கிறார்கள். உள்ளும் புறமும் இருக்கக்கூடிய தகிப்பு தொடர்ந்து இந்த நாவலில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இரவுகள் இந்த புத்தகத்தில் வர்ணிக்கப்படும்போதும் கூட அதுவும் பகலுக்கு உண்டான வெளிச்சத்தோடும்  வெக்கையோடும் இருக்கிறது . நான் சொன்ன (அவருடைய ) மற்ற இரண்டு புத்தகங்களை படிப்பதற்கு முன்னால் ஒருவர் இதைப் படிப்பாரானால் புன்னத்தில் குஞ்ஞ்ப்துல்லாவோட படைப்புலகத்துக்குள்ளே அவருடைய எழுத்து முறைக்குள்ளே நுழைவதற்கான மிகச்சிறந்த நுழைவாசலாக இந்த புத்தகம் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.  இதற்கு அடுத்து ‘மீஸான் கற்கள்’ படிக்கலாம், அடுத்து ‘மஹ்சர் பெருவெளி’.. அப்படி நான் ஆலோசனையாக சொல்கிறேன். நான் அப்படித்தான்  படிக்க விருப்பப்படுவேன்…. ஒரு பொறுப்புள்ள சீரிய வாசகன், அக்கறையாக எடுத்துப் படிக்க வேண்டிய புத்தகம் ‘கன்யாவனங்கள்’.

***

நன்றி : யுவன் சந்திரசேகர், ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்.

**

‘கன்யாவனங்கள்’ – உயிர்மை விளம்பரம் :
70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது. 

**

சில சுட்டிகள் :

Punathil Kunjabdulla – Wikipedia

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி”  – சுரேஷ் கண்ணன்

« Older entries