மௌலானா வாஹிதுதீன் கான்

‘தனிமைப்படுத்திக் கொண்டால் தேங்கித்தான் போவீர்கள்’ என்ற தலைப்பில் , ‘திண்ணை’ (Jun’2002) மற்றும் சொல்புதிது – இதழ் 10-இல் வெளியான பேட்டி. சந்திப்பு : யோகீந்தர் சிகந்த் (Source : The Milli Gazette, Vol. 3 No. 11)

***

மௌலானா வாஹிதுதீன் கான் அவர்கள், அல் ரிஸாலா என்ற உருதுப் பத்திரிக்கையின் ஆசிரியர். உருது மொழியிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான புத்தகங்களை எழுதிய இவர், இந்தியாவின் முன்னணி இஸ்லாமிய அறிஞராக கருதப்படுகிறார். மதங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தைக்கும், மதநல்லிணக்கத்துக்கும் உரத்த குரலெழுப்பும் இவர், பரந்த விஷயங்களைப் பற்றியும், மதவாதம் பற்றியும், மத சகிப்புத்தன்மை பற்றியும், இஸ்லாமிய மதச்சிந்தனைப் பற்றியும், ஒரு மதத்தினர் மற்ற மதங்களைப் புரிந்து கொள்வதைப் பற்றியும் யோகிந்தர் சிகந்த் அவர்களிடம் பேசினார்.

***

கேள்வி : பல முஸ்லிம் நாடுகளில் இருக்கும் மக்களிடம் அமைதியின்மைக்கான காரணம் என்று என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : இன்றைய முஸ்லிம் உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஒரு காலத்தில் முஸ்லிம்கள் ஸ்பெயினிலிருந்து இந்தியா, இன்னும் இந்தியாவுக்குக் கிழக்கே வரை நீண்டிருந்த பேரரசை வைத்திருந்தார்கள் என்பதை நினைவு கூறவேண்டும். இவை எல்லாப் பிரதேசங்களும் ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தின் கீழ் வந்தன. அன்றைய முஸ்லீம் சிந்தனையாளர்கள் சரியான முறையில் ஐரோப்பிய சவாலை எதிர்கொள்ளத் தவறி விட்டார்கள். அன்றைய அவர்களது சமூகத்துக்குத் தேவையான ஒரு தலைமையைக் கொடுக்கத் தவறி விட்டார்கள். அவர்கள் ஐரோப்பியக் காலணி ஆதிக்கத்தை முஸ்லீம்களுக்கு எதிரான சதியாகவும், சிலுவைப்போர்களின் தொடர்ச்சியாகவும் கண்டார்கள். மனக்கசப்புடன் ஐரோப்பியர்களை இஸ்லாமின் எதிரிகள் என விமர்சித்தார்கள். ஆனால் ஐரோப்பிய வெற்றிக்கு அது முழுக்க முழுக்க தவறான விளக்கம் என்று நான் நினைக்கிறேன்.உண்மையில் ஒரு சக்தி மிகவும் வலிமையுள்ளதாக வளர்வதும் பிறகு மெல்ல மெல்ல நசிந்து இன்னொரு சக்தி அதன் இடத்தில் தொன்றுவதும் வரலாற்றின் விதிகளில் ஒன்று. ஆகவே, இந்தியாவின் முன்பு ராஜாக்கள் இருந்தார்கள். பிறகு மொகலாயர்கள் வந்தார்கள். பிறகு இறுதியில் பிரிட்டிஷ்காரர்கள் வந்தார்கள். பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது.

இப்போதும் சில சமயங்களில் காங்கிரஸ் ஆள்கிறது. சில சமயங்களில் பா.ஜ.க ஆள்கிறது. ஆகவே என் பார்வையில் ஐரோப்பியர்கள் முஸ்லிம் உலகத்தைக் கைப்பற்றியதன் காரணம் இஸ்லாமுக்கு எதிரான சதி இல்லை. ஐரோப்பியர்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருந்ததுதான் காரணம். நாம் தண்ணீரைத் தண்ணீர் என்று மட்டும்தான் பார்க்கிறோம்.. இன்னும் அதிகமாகப் போனால் தண்ணீரைக் கொண்டு ஓடும் தண்ணீரின் சக்தியைப் பயன்படுத்தி வாட்டர்மில் – நீரினால் செலுத்தப்படும் சக்கர யந்திரம் – வைத்து மாவரைக்க உபயோகப்படுத்துகிறோம். ஆனால் ஐரோப்பியர்கள் இன்னும் முன்னேறி தண்ணீரை நீராவியாக்கி அதன் சக்தியை உபயோகப்படுத்தினார்கள். நாம் கத்திகளைக் கொண்டு சண்டை போட்டோம். அவர்கள் துப்பாக்கிகளைக் கொண்டு சண்டை போட்டார்கள். இயற்கையாகவே நம்மை அவர்கள் வெற்றி கொண்டார்கள்.

இப்போது, நாம் முன்பு சொன்னதுபோல், சென்ற நூற்றாண்டுகளாக, முஸ்லீம் மேலாண்மையும் பெரும் இஸ்லாமிய எதிர்ப்பு சதியாகப் பார்க்கிறார்கள். ஆகவே, இதைத்தான், முடிவே இராத வன்முறைச் சுழற்சியாக முஸ்லீம் உலகமெங்கும் நீங்கள் பார்க்கிறீர்கள். சாதாரண முஸ்லீம்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது கொண்டிருக்கும் அளவு கடந்த வெறுப்பு உண்மையிலேயே எனக்கு பெரும் பயத்தைக் கொடுக்கிறது.

நான் சிறுவனாக இருந்தபோது பிரிட்டிஷார் எல்லோரும் கொடுமையான தீயவர்கள் என்றும், எந்த நல்ல விஷயத்தையும் அவர்களின் பார்க்க முடியாது என்றும் படிப்பிக்கப்பட்டு வளர்ந்தேன். பிறகுதான் நான் அவர்கள் நவீன பள்ளிகள், ரயில்வேக்கள் என்று ஏராளமான நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். நமது சிந்தனையாளர்கள் முஸ்லீம் சக்தியின் நசிவுக்குக் காரணம் இஸ்லாமுக்கு எதிரான சதி அல்ல என்பதையும், மேற்கின் தொழில் நுட்பச் சிறப்புதான் காரணம் என்பதையும் ஆரம்பத்திலிருந்து சொல்லி வந்திருந்தார்கள் என்றால் இப்போது காணப்படும் முஸ்லிம் வன்முறைவாதத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன்.

ஐரோப்பிய வளர்ச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான சதி என்று காணும் இந்தச் சிந்தனை முறை இப்போதும்  முஸ்லிம் உலகத்தில் உறுதியாக இருக்கிறதா?

நிச்சயமாக. இஸ்லாமிய புத்தகங்கள் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் எந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமுக்கு எதிரான சாத்தான்கள் என்றும் அவர்களின் ஒரே குறிக்கோள் இஸ்லாமை ஒழிப்பதுதான் என்றும் பேசும் இப்படிப்பட்ட சதிப்பேச்சுதான் பரப்பப்பட்டு வருகிறது என்பதைக் காணலாம். நேற்றுதான் எனக்கு காஷ்மீரிலிருக்கும் ஒருவரிடம் இருந்து கடிதம் வந்தது. சமீபகாலம்வரை அவர் இஸ்லாமிய புத்தகங்கள் என்ற வன்முறைவாதக் கும்பலின் புத்தகங்களிப் படித்துவிட்டு இந்துக்கள் எல்லோரும் , பொதுவாக எல்லா முஸ்லீம் அல்லாதவர்களும் முஸ்லீம்களின் நிரந்தர விரோதிகள் என்று நம்பியிருந்ததாகவும், பிறகு சமீபத்தில் என்னுடைய புத்தகங்கள் கிடைக்கப்பெற்று, தன்னுடைய உலகப் பார்வையை புரட்சிகரமாக மாற்றிக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். முழுக்க முழுக்க மனமாற்றம் பெற்றும் அவர் இப்போது இந்துக்கள் கடவுளின் குழந்தைகள்தான் என்றும் அவர்களையும் நாம் நேசிக்க வேண்டும் என்று உணர்வதாக அவர் எழுதியிருந்தார்.

ஆனால், இஸ்லாம் பார்ப்பதுபோல, முஸ்லிம் அல்லாதவர்கள் எல்லோரும் கா·பிர்கள் இல்லையா? அது பாரபட்சமான விசயம் இல்லையா?

இல்லவே இல்லை. கா·பிர் என்ற வார்த்தைக்கு ‘ஒரு விஷயத்தை மறுக்கிறவர்’ என்றுதான் பொருள். நான் உங்களிடம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; நீங்கள் அதனை நம்பவில்லை என்றால் அந்த விஷயத்தைப் பொறுத்தவரை நீங்கள் கா·பிர். அது திட்டும் வார்த்தை அல்ல. அது ஒரு விஷயத்தை விளக்கும் வார்த்தை. ஆகவே , நீங்கள் மறுபிறப்புக் கொள்கையை நம்பினீர்கள் என்றால் , நான் அதனை மறுத்தேன் என்றால் , அந்தக் கொள்கையைப் பொறுத்தமட்டில் நான் கா·பிர்

முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு மத பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருக்கிறதா?

மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமான தேவையான ஒன்று. இஸ்லாம் அதனை வலியுறுத்துகிறது. சொல்லப்போனால் , வரலாற்றில் முன்னேற்றம் நடந்ததெல்லாம் வெவ்வேறு மக்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை உறவு முறைகள் வளர்ந்தபோதுதான். இது பள்ளிக்கூட அளவிலிருந்து தொடர்ந்து நடக்க வேண்டும். குழந்தைகளுக்கு வேறு மதங்களைப்பற்றிச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் இஸ்லாமை விட்டுச் சென்றுவிடுவார்கள் எனச் சில மௌல்விகள் கூறுகிறார்கள். மற்ற மதங்களைப் பற்றி உண்மையைச் சொன்னால் தங்களூடைய மதத்தை விட்டுவிடும் அளவுக்கு வலிமையற்றதா இஸ்லாமின் மீதான நம்பிக்கை? இஸ்லாம் எளிதில் தூள் தூளாக உடைந்துவிடும்  ஒரு கண்ணாடிப் பாத்திரமல்ல.  இது வலிமையான இரும்புப் பாத்திரம் போன்றது. நாம் உண்மையிலேயே மற்றவர்களது மதங்களைப் பற்றி உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதுதான் நமக்குள் வந்துவிட்ட தவறான எண்ணங்களைக் களையவும் முடியும். ஏனெனில் நமது மனச்சாய்வு நம் அறியாமையாலும், தவறான சித்தரிப்புகளாலேயே கட்டப்பட்டது. இஸ்லாமைப் பொறுத்தமட்டில் குரான் வலியுறுத்தும் ஒரு கடமை, மதங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை. தனது இறுதி  மெக்கா பிரயாணத்தின்போது , நபிகள் நாயகம் சுமார் 1,25,000 சீடர்களிடம் உலகெங்கும் சென்று இஸ்லாமைப் பரப்ப வேண்டி கேட்டுக் கொண்டார். ஆகவே அவர்கள் உலெகெங்கும் சென்று இஸ்லாமை போதித்தார்கள். ஆனால் அது அவர்களது வேலையில் ஒரு அம்சம்தான். அவர்கள் அறிவைத் தேடியும் பல்வேறு மக்களுடன் விவாதிக்கவும் மற்றவர்களோடு பழகவும் அவர்கள் உலகெங்கும் பிரயாணித்தார்கள்.

ஆகவே, உதாரணமாக சில ஆரம்ப கால முஸ்லிம்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அவர்கள் இங்கு சம்ஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டு சம்ஸ்கிருத புத்தகங்களை அராபிய மொழியில் மொழிபெயர்த்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ஸ்பெயின் முஸ்லிம் ஆட்சியின் கீழ் இருந்தபோது பல கிருஸ்தவர்கள் அங்கு முஸ்லிம் படிப்பாளிகளிடமிருந்து விவிலியத்தைக் கற்றுக்கொள்ள அங்கு வந்தார்கள்.

இந்த மதங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக மதறஸா பள்ளி மாணவர்களும் மற்ற மதங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் எனக் கருதுகிறீர்களா?

நிச்சயமாக. மதறஸா பள்ளி அமைப்பை புணருத்தாரணம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. நவீன பாடங்கள் அங்கு சொல்லித்தர வேண்டும். ஆனால் பிரச்சனை புதிய பாடங்களை சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை. மதறஸாக்களுடன் இணைந்த சில மௌல்விகள்  இதுபோன்ற பேச்சுவார்த்தை முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, லக்னோவில் இருக்கும் நத்வாத் உல்உலீமா மதறஸாவை நடத்தும் அலி மியான் (அபுல் ஹஸன் அலி) வழக்கமாக இந்து சிந்தனையாளர்களைத் தன்னுடைய பள்ளிக்கூடத்துக்கு அழைத்து செமினார்களில் பேசவைக்கிறார். ஆனால் இது அவ்வளவு முக்கியமல்ல. ஏனெனில் இவர்கள் பிரச்சனை அற்ற இந்துக்கள். இவர்கள் ஏற்கனெவே இந்து முஸ்லிம் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள். நாம் பிரச்னையான இந்துக்களை அணுக வேண்டும். அதாவது ஆர்.எஸ்.எஸ்-ல் இருக்கும் இந்துக்களை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். இதற்காக பல முஸ்லீம்கள் என்னைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள். உண்மையில் நான் பல ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் முஸ்லிம் எதிர்ப்பாளர்களாக இருப்பதன் காரணம் அவர்களிடம் உள்ள இஸ்லாம் பற்றிய அறியாமையும் தவறான புரிதலும்தான் என்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களோடு பேச்சுவார்த்தை கொள்வதால் அவர்களிடம் இஸ்லாம் என்றால் உண்மையில் என்ன என்பதை விளக்குவதால் அவர்கள் தங்களுடைய மனச்சாய்வை மெல்ல மெல்ல உதறுகிறார்கள். அப்புறம் ஏராளமான முஸ்லீம்கள் தங்களது குழந்தைகளை முஸ்லீம்கள் நடத்தும் மதச்சார்பற்றப் பள்ளிகளுக்கு அனுப்ப விழைகிறார்கள். பெரும்பாலானவை தரமற்றவை. இங்கும், எல்லா முஸ்லீம் அல்லாதவர்களும்  முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் என்ற கருத்தே வேலை செய்கிறது. இது கெட்ட மனவிளைவை உருவாக்குகிறது. இதன் விளைவாக, பல முஸ்லீம் குழந்தைகள் முஸ்லீம் அல்லாத குழந்தைகளோடு  எந்தவித பழக்கமும்  இல்லாமல் வளர்வது, இன்னும் மற்றவர்களைப் பற்றிய அறியாமைக்கும் தவறான புரிதலுக்கும் உரம் போடுகிறது. நான் இது மாற வேண்டும் எனத் தீவிரமாக விரும்புகிறேன். முஸ்லீம் குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு வளரவேண்டும் எனத்தான் விரும்புகிறேன். நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் நீங்கள்தான் தேங்கிப் போவீர்கள்.

சூ·பிகள், முஸ்லீம் துறவிகள் மத நல்லிணக்கத்துக்கும் மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கும் பெருமளவில் உதவி இருக்கிறார்கள், இல்லையா?

நிச்சயமாக. சூ·பிஸம் அல்லது இஸ்லாமிய துறவியம் மைய நீரோட்டமாக , முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சூ·பி சத்திரங்களில் (Khangah) முஸ்லீம்களும் `துக்களும் இணைந்து உட்கார்ந்து சாப்பிடுவதை  ஊக்குவிக்க சைவ உணவுதான் பரிமாறப்படுகிறது. தீண்டாமை மிகவும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட அந்நாட்களில் இது மிகவும் புரட்சிகரமானது.  ஆனால் துரதிர்ஷ்டவசமாக , சூ·பிஸம் இன்று நசிந்து விட்டது.

***

நன்றி : The Milli Gazette & திண்ணை

சுட்டிகள் :

http://www.milligazette.com/Archives/01062002/0106200230.htm

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20206234&edition_id=20020623&format=html

http://en.wikipedia.org/wiki/Maulana_Wahiduddin_Khan

http://www.alrisala.org/Al_Risala_Eng_Monthly/Archv_Eng_AlRisala.html

 

 

ஆதவன் தீட்சண்யாவின் செவ்வியிலிருந்து…

athavantheetchanya.jpg 

மக்கள் வணக்கம்!

‘எப்படி மாட்டுக்கு ’மாடு’ண்டு பெயர் வைத்திருப்பது மாட்டுக்குத் தெரியாதோ அந்த மாதிரி என் படைப்புகளுக்கு ‘பிரச்சாரம்’டு பெயர் வச்சீங்கண்டா அதுக்கு நான் பொறுப்பில்லே..அப்படி வகைப்படுத்தறதுதான் பிரச்சாரம்டு நான் நெனைக்கிறேன்’ என்று சூடாகப் பேசும் ஆதவன் தீட்சண்யா எனக்குப் பிடித்த படைப்பாளிகளுள் ஒருவர் (எனக்கு யாரைத்தான் பிடிக்காது, என்னைத் தவிர?!).

காலச்சுவடு கதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற ’கடவுளுக்குத் தெரியாதவர்கள்’ எனும் அவருடைய சிறுகதை , என் கணிப்பில் , முதல் பரிசுக்குரியது.

ஆதவன் தீட்சண்யாவின் செவ்வியிலிருந்து கொஞ்சம் நான் கவ்வியதை இங்கே பதிகிறேன். செவ்வி, மக்கள் டி.வியில் (நன்னன் ஐயா மொழியில் : ’மக்கள் தொ.கா’!) 29.1.2008 அன்று ஒளிபரப்பானது.

ஆதவன் தீட்சண்யா :

’(பலமாதிரி) இஸங்களெல்லாம் வெளியிலிருந்து வந்ததாக பெரிய ஆரவாரம் எல்லாம் இருக்கு. ஆனா  நம்முடைய மரபுலெ இருக்கு இது எல்லாமே. அதுக்காக, ‘மரபை கொண்டாடுற பழமைவாதி’ன்டு (என்னை) முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லேண்டு நெனைக்கிறேன். அப்படி அவசரப்பட்டு குத்தினா – ரப்பர் ஸ்டாம்புகளோட நெறய பேரு திரியிறாங்க! – அதுக்கு நாம பொறுப்பில்லெ. ஆனா..நம்ம பாட்டி வடை சுடுற கதைய எடுத்தீங்கன்னா அதே காக்கை, அதே நரி, அதே பாட்டி, அதே மரத்தடி, அதே வடை – இத்தனை வருஷமா அந்த கதை நீடிச்சிருக்குறதுக்கு என்ன காரணம் அப்படீண்டு பாத்தீங்கன்னா.. என்னட பாட்டி எங்கிட்டெ சொன்ன அதே கதையை பின்னாலெ என் நண்பனோட பகிர்ந்துகொள்ளும்போது என் பாட்டி சொன்ன அதே காக்கையைப் பத்தி நான் பேசலே; என் பாட்டி சொன்ன அதே மரத்தைப் பத்தி நான் பேசலே; எனக்குத் தெரிஞ்ச ஒரு மரத்தை , காக்கையை, நரியை எனக்குத் தெரிந்த வகையில் உருவகப்படுத்திக் கொண்டு அதை நான் விஸ்தாரமா சொல்றேன் (என் காலகட்டத்துக்கு மாத்துறேன்).  பாட்டி சொன்ன உடனேயே – ‘ஆசிரியன் இறந்து விட்டான்’டு பிரகடனப்படுத்துற மாதிரி – ’பாட்டி இறந்து விட்டாள்; பேரன் கதை சொல்லிக்கொண்டிருக்கிறான்’ அப்படீண்டா…  பேரன் வந்து… கதையை செழுமைப்படுத்துகிறான். இது வந்து தொடர்ச்சியா நம்ம மரபுலே இருக்குது. மரபுலெ இருக்கக்கூடிய இந்த ஒரு விஷயத்தை வெளிலேர்ந்து ஒருத்தர் வந்து சொல்லிட்டாரு – ’ஆசிரியன் இறந்து விட்டான்; வாசகன் தான் பூர்த்தி செய்கிறான்; அவன் தான் பிரதிக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறான்’டு- ஏதோ அவங்க சொன்னதைக் கேட்டு எங்க பாட்டி கதை சொல்ல ஆரம்பிச்ச மாதிரி சொல்லிக்கிட்டிக்கிறதுலெ எந்த அர்த்தமும் கிடையாது’

நன்றி : மக்கள் தொலைக்காட்சி, ஆதவன் தீட்சண்யா, கஜேந்திரன்

தொடர்புடைய சில சுட்டிகள் :
1. ஆதவன் தீட்சண்யா நேர்காணல் / கீற்று
2. ஆதவன் தீட்சண்யா கட்டுரை : கற்பிதம் செய்யப்பட்ட காயத்திற்கு காலச்சுவடு வைத்தியம்:
3. சாதிய தேசியப் போர் (ஆதவன் தீட்சண்யா கதைகளை முன்னிறுத்தி) – மறவன்
4. இன்றைய தமிழ்ச்சிறுகதை – அழகிய பெரியவன் 

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

தமிழுக்கு இஸ்லாத்தின் பங்களிப்பு

முனைவர் பர்வீன் சுல்தானா

**

தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி..!

நோன்புப் பெருநாளன்று (14-10-2007) , மக்கள் தொலைக்காட்சியின் ‘சங்கப்பலகை’ நிகழ்ச்சியில் , தோழர் தியாகுவுடன் முனைவர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடலை இங்கே பதிகிறேன். சித்தி ஜூனைதா ஆச்சியைப் பற்றி , ‘இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்னால்’ என்று பர்வீன் சுல்தானா சொன்னது மட்டும் கொஞ்சம் திடுக்கிட வைத்தது. ஏனெனில் அப்போது ஜூனைதா ஆச்சி பிறக்கவே இல்லை! அதை திருத்தியிருக்கிறேன். அவர் சொன்ன மற்ற தகவல்கள் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எதற்கும் நீங்கள் ‘இஸ்லாமும் தமிழிலக்கியமும்’ என்கிற முனைவர்.பீ.மு. அஜ்மல்கான் அவர்களின் கட்டுரையை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சித்தி ஜூனைதாவைப் பற்றி சொல்லும்போது மட்டும் மகிழ்ந்து போகிற இஸ்லாமிய இலக்கியவாதிகளிலிருந்து மாறுபட்டு,  ‘சல்மா’வின் மறுக்கமுடியாத பங்களிப்பையும் சேர்த்துச் சொல்லும் அந்த ஒரு விஷயத்துக்காகவே பர்வீன் சுல்தானாவைப் பாராட்டுவேன்.

மக்கள் தொலைக்காட்சிக்கும் தியாகுவுக்கும் முனைவர் பர்வீன் சுல்தானாவுக்கும் நன்றிகள்.

– ஆபிதீன் –

***
பர்வீன் சுல்தானா : …பதிமூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு அதாவது பதினான்காம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட பகுதியில் , பல்சந்த மாலை என்கின்ற ஒரு நூல் கிடைப்பதாக களவியற்காரிகை நமக்குச் சொல்கிறது. ஆனால் அது முழுமையான நூல் வடிவத்தில் கிடைக்கவில்லை. ஒரு  எட்டுப் பாடல்கள் மட்டுமேதான்
கிடைக்கின்றன. ஆக , எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னமேயே தமிழகத்திற்கு இஸ்லாமியர்களுடைய வருகை இருந்திருக்கிறது; அல்லது அரேபியர்களுடைய வருகை இருந்திருக்கிறது. அரேபியர்களுக்கே இஸ்லாம் அறிமுகமானதற்குப்  பிறகு – அவர்கள் வணிகம் பொருட்டு தமிழகத்திற்கு வருகின்றபோது –  அந்த  இஸ்லாத்தை பற்றி அவர்கள் இங்கே சொல்லி இங்கே இருக்கின்றவர்களும் இஸ்லாமாகியிருக்கிறார்கள்; அவர்களும் இங்கே குடும்பத்தை விருத்தி செய்திருக்கிறார்கள்.

தியாகு : அதனால்தான் இவங்க இஸ்லாம் ‘ஆனவர்கள்’?

ப : ஆமாம்.. இஸ்லாமியர்கள் என்று சொல்லுகின்ற வார்த்தையை விட தமிழகத்தில் பரவலாக நாம் கேட்கின்ற சொல் – ‘இஸ்லாம் ஆனவர்கள்’ – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்கின்ற பொருளில். ஆனால் ஒரு குறிப்பு என்னவென்றால் , இஸ்லாத்தைப் பரப்புகின்ற பொருட்டு அரேபியர்கள் தமிழகத்திற்கு வரவில்லை. அவர்கள் வணிகத்தின் பொருட்டுத்தான் வந்தார்கள். இவர்களுடைய மார்க்கத்தினுடைய செய்திகளைக் கேட்டு – எப்பொழுதும் ஒரு மாற்று விசயத்திற்காக தயாராகக்கூடிய சமூகச் சூழல் – இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது; அப்படித்தான் பார்க்க முடியும்.
பதினான்காம் நூற்றாண்டின் நடுவிலே கிடைத்த நூல் (பல்சந்த மாலை) முழுமையாக கிடைக்காதபோது , முழுமையாக கிடைக்கக்கூடிய முதல் இஸ்லாமிய இலக்கியம் எது என்றால்… 1572ஆம் ஆண்டு கிடைத்த ஒரு நூல். ‘ஆயிரம் மஸ்லா’ என்ற அந்த நூலுக்குப் பெயர். இந்த மஸ்லா என்ற சொல்லடைவு தமிழுக்குப் புதியது. இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள்..- இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, வேறு எந்த மார்க்கத்திற்கு உரியவர்களாக இருந்தாலும் –  அந்த மார்க்கம் மூலமாக அவர்களுக்கு ஒருமொழியானது கொடையாக கிடைக்கிறது.  அப்படி கொடையாக கிடைத்த அந்த மொழிதான் இஸ்லாமியர்களுக்கு அரபி மொழி. அது மட்டுமல்லாமல் பாரசீக (ஈரான்) மொழி அவர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறது. இந்த பாரசீக மொழியிலும் அரேபிய மொழியிலும் கவித்துவம் பெற்ற அளவுக்கு பாண்டியத்தியம் பெற்றவர்களாக இஸ்லாமியப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தப் புலமைகளை தமிழுக்குக் கொண்டு வருவதற்காக தமிழிலும் அவர்கள் பாண்டியத்தியம் பெற்று , தமிழிலே அவர்கள் பல சிந்தனைகளை கொண்டு வருவதன் மூலமாக இஸ்லாத்தினுடைய கொடையாக தமிழுக்குப் பல புதுவகை இலக்கியங்களை தந்து சென்றிருக்கிறார்கள். தமிழுக்கு இத்தனை பிரபந்த வகை என்று பண்ணிருபாட்டியல் நமக்கு ஒரு பட்டியல் தருகிறது. 96 வகை பிரபந்தங்கள் என்று நமக்கு பல இலக்கண நூல்கள்.. தண்டியலங்காரமும் அதைச் சொல்கிறது. 96 வகை பிரபந்தங்களைக் கடந்த நிலையில் , நூற்றுக்கும் மேற்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் படைத்திருப்பதாக நமக்கு அறிய வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய வடிவங்களை , ஆயிரக்கணக்கான இலக்கியங்களை தமிழுக்கு அவர்கள் தந்திருக்கிறார்கள்.

தி : அரபிமொழி கற்று அரபி மொழிப் புலமையோடு தமிழுக்கு வருகிறார்கள்; தமிழையே அரேபியில் எழுதுவதாகச் சொல்கிறார்களே. அரபித்தமிழ் இலக்கியம்..அதைப்பற்றிச்  சொல்லுங்கள்

ப : குர் ஆன் என்ற வேதநூல் அரேபிய மொழியில்தான் வாசிக்கப்படுகிறது. அந்த அரேபிய மொழி என்பது இறைவனோடு அளவளாவக்கூடிய ஒரு மொழியாக, ஒரு மொழியிலேயே மிக அதிகபட்ச மரியாதைக்குரிய மார்க்கமொழியாக , இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். புனித மொழியாகக் கருதுகிறார்கள். புனிதமாக அந்த மொழியைக் கருதுவதன் விளைவாக இஸ்லாமிய செய்திகளை எழுதுகின்றபோது – இவர்களுக்கு அரபியை வாசிக்கத் தெரியும்;எழுதத் தெரியும்; பேசத் தெரியாது – இந்த பிரச்சனை உண்டு. தமிழகத்திலே எல்லா இஸ்லாமியக் குழந்தைகளும் குர் ஆன் ஓதும். எல்லோருக்கும் அரபி வாசிக்கத் தெரியும். இதைப் போல எழுத்து லிபியும் தெரியும். ஆனால் பேசத் தெரியாது. எழுத்தை வாசிக்கவும் எழுதவும் மட்டுமே அறிந்திருப்பவர்கள் , இஸ்லாமிய எழுத்துக்களை இலக்கியமாக தமிழில் எழுதுகின்றபோது அரேபிய லிபியைப் பயன்படுத்துகிறார்கள். Ttransliteration என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்; ஒலிபெயர்ப்யாக – மொழி பெயர்ப்பாக அல்ல –  அரேபிய இலக்கியங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பல கையெழுத்துப் பிரதிகள்.. ஆனால் பிற்காலங்களில் அது குறைந்து போனது. சிலர் இதிலேயே உயில் எல்லாம் எழுதி வைத்திருப்பார்கள். அரேபியிலெ வாசிக்கிறதுக்காக எழுதுகின்றபோது , புனிதமாக விசயத்தை எழுதுகிறோம்; தன்னுடைய சந்ததிகளுக்காக எழுதுகிறோம் என்று.. அப்படி எழுதிவச்ச பிரதிகளும் காணக் கிடைக்கின்றன.

தி : சிற்றிலக்கியங்கள்..

ப: சுவையான விசயம் இதுலெ என்னவென்றால்..பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமக்கு இஸ்லாமிய இலக்கியங்கள் அறிமுகமாகின்றன – தமிழகத்தில். ஆக, அரேபியர்கள் இங்கே வேரூன்றி, தமிழ் கற்று, அல்லது தமிழகத்தில் இருக்கக்கூடியவர்கள் இஸ்லாத்தை ஏற்று, கல்வி பெற்று மேலே போவதற்கு ஒரு நான்கு ஐந்து நூற்றாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிலே அவர்கள் எழுதத் தொடங்குகின்றபோது – அந்தக் காலகட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய ஓட்டம் என்பது சிற்றிலக்கிய காலமாகத்தான் இருந்திருக்கிறது. காப்பிய காலம் அப்போது இல்லை. காப்பிய காலத்ததை நாம் கடந்திருக்கிறோம். பக்தி இலக்கிய காலத்தையும் கடந்து , அந்த சிற்றிலக்கிய காலக்கட்டத்தில் இஸ்லாமியப் புலவர்கள் எழுதுகோலை கையில் எடுத்தபோது பலவிதமாக இஸ்லாமிய இலக்கியங்களை அவர்கள் எழுதுகிறார்கள். கோர்வை, அந்தாதி, கீர்த்தனை, இசைப்பாடல்கள், ஞான நூல்கள், தூது, குறவஞ்சி என்று பல இலக்கிய வடிவங்களை பயன்படுத்திக் கொண்டு இஸ்லாமிய இலக்கியங்களாக படைக்கிறார்கள். படைத்துக்கொண்டிருந்த அவர்கள் தங்களுக்கு இயல்பாக வாசிக்ககூடிய பிறமொழி அறிவை, சிந்தனையைப் பயன்படுத்தி புதிய இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்கிறார்கள். இதில் ஐந்து புதுவகை வடிவங்கள் நமக்கு கிடைக்கிறது. அந்த ஐந்தில் ஒன்றைத்தான் என்னுடைய ஆய்வுத் தலைப்பாக நான் எடுத்தேன். அந்த ஐந்து என்பதில்,  ஒன்று : ‘மஸ்லா’, மஸ்லா என்பது புதிர். கேள்விகள் கேட்டு பதில் வரக்கூடிய இலக்கியம் – விடுகதை போல. அடுத்தது : ‘நாமா’. ‘நாமா’ என்றால் பெயர். இறைவனுடைய பெயர்களைச் சொல்லி பல பாடல்கள் எழுதப்பட்ட ஒரு இலக்கியம் – ‘நாமா’. அடுத்ததாக கிடைக்கும் இலக்கியம் : ‘கிஸ்ஸா’. கிஸ்ஸா என்றால் கதை. கதை வடிவம். பழையான கதை வடிவங்கள் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டவை இந்த கிஸ்ஸாக்கள். பிறகு வருவது : ‘முனாஜத்’. முனாஜத் என்பது இறைவேட்கை பாடல்கள். முழுமையாக இறைவனிடத்தில் வேட்கை நிகழ்த்துகிற பாடல்கள். வழிபாடு வேறு, வேட்கை வேறு. இறைவனிடத்தில் மன்றாடுதல். அடுத்ததாக வந்த இலக்கியம்தான் ‘படைப்போர் இலக்கியம்’. படையும் போரும். போர்க்கதைப் பாடல்களாக பல இலக்கியங்கள் கிடைக்கிறது. இதில் செவ்வியல் இலக்கியமும் கிடைக்கிறது, நாட்டார் இலக்கியமும் கிடைக்கிறது – பரணி இலக்கியம் மாதிரி. ஆனால் பரணி இலக்கியத்திற்குப் பிறகு தமிழகத்தில் எந்தப் போரும் தோன்றவில்லை என்பதனை மாற்றி அமைக்கும் பொருட்டு இவர்கள் இந்த இலக்கிய வகையை அறிமுகப்படுத்தினார்கள். பரணியிலிருந்து இதை ஒப்பிட்டுப் பார்த்தால் படைப்போர் இலக்கியம் தனித்த வகை. இதன் இலக்கண வடிவமைப்புகள் எல்லாம் வேறு வேறு. தமிழுக்கு இவைகள் புதுவரவு. இஸ்லாம் தந்த கொடையாக அதை சேர்த்துக் கொள்ளலாம்

தி : நீண்ட இலக்கியங்கள்… உமறுப்புலவருடைய சீறாப்புராணமெல்லாம் நெடுங்காப்பியத்தினுடைய தன்மைகளில் இல்லையா?

ப: ஆமாம், படைப்போர் இலக்கியத்தை பார்த்திர்கள் என்றால் சிற்றிலக்கிய வகை. அளவால் சின்னது; அதுதான் சிற்றிலக்கியம்டு சொல்ல முடியாதபடிக்கு வகைகள் வருகிறது. படைப்போர் இலக்கியங்களிலேயே சல்ஹா படைப்ப்போர், சைதத்து படைப்போர் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் ‘சல்ஹா படைப்போர்’ என்பது காப்பியம்.  படைப்போர் இலக்கிய வகையை புதுவகை இலக்கியமாக, கண்ணிகளாக , பாடல்களாக எழுதியிருக்கிறாகள். முழுக்க விருத்தங்களால் ஆன செவ்வியல் இலக்கியமாக அது இருக்கிறது. நாட்டார் பாடல்களாகவும் எழுதியிருக்கிறார்கள். பலவகையான வடிவங்களில் இந்த பாடல்கள் நமக்கு கிடைக்கிறது. நீண்ட இலக்கியங்களாகவும் அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள்.

தி : இதனுடைய காலம் எப்படி..உமறுப்புலவருடைய..

ப: அது பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். முதல்லே கிடைக்கிற இலக்கியமென்று – மஸ்லாவை – 1572ஐ சொல்லிட்டோம். பதினாறாம் நூற்றாண்டில்தான் இது (சீறாப்புராணம்) கிடைக்கிறது.

தி : சீறாப்புராணம் அனைவரும் அறிந்து பெயரென்று வைத்துக் கொள்ளாலாம். அதே போல பெயர் தெரியாமல் போன இலக்கியங்கள்..

ப: என்னுடைய வேதனையான இன உணர்வுகளை இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள். என்னவென்றால், இஸ்லாமிய இலக்கியங்கள் என்று பார்த்தீர்கள் என்றால் ஆயிரக்கணக்கான இலக்கியங்கள்.. பதிப்பிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே இருக்கின்றன இன்னும்.. இந்த இலக்கியங்களையெல்லாம் வாசிக்கும் தோறும் அந்த இலக்கியத்தினுடைய செழுமை வசீகரிக்கிறது. செம்மொழியாக இருப்பதற்கு அவ்வளவு தகுதிப்பாடுகளும் இந்த இலக்கியத்திற்கு உண்டு.  சீறாப்புராணம் போல அனைத்துத் தகுதிகளும் பெற்ற பல (இஸ்லாமிய) இலக்கியங்கள் இருந்தாலும் வாசிப்புப் பயிற்சி இல்லாத காரணத்தால் அல்லது அவைகள் அறிமுகம் செய்யப்படாத காரணத்தால் அவை மக்களைப் போய்ச் சேரவில்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து

தி : சீறாப்புராணம் என்பது நபிகள் நாயகத்தினுடைய வரலாறுதானே?

ப: சீரத்து வரலாறு என்பதுதான் பொருள்.

தி : அதை எழுதுவதற்கு சீதக்காதியின் கொடை துணையாக இருந்தது இல்லையா?

ப: ஆமாம். நிச்சயமாக.

தி: சீதக்காதி ஒரு புரவலர். கம்பருக்கு ஒரு சடையப்ப வள்ளல் போல், உமறுப்புலவருக்கு ஒரு சீதக்காதி. சரி, அச்சு வடிவம் பெறாத இலக்கியங்களும் ஏராளமாக இருக்கிறது என்கிறீர்கள்

ப: என்னுடைய ஆய்வுக் களத்திற்காக நான் தேடித்திரிந்தேன். கள ஆய்விலே படைப்போர் இலக்கியத்திற்காக தேடி அலைகின்றபோது …’இபுறாஹிம் படைப்போர்’ என்கின்ற ஒரு நூல் கீழ்த்திசை சுவடி நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. மூவாயிரம் கண்ணிகள் இருக்கக்கூடிய அந்த நூலை நான் வாசிக்க நேர்ந்தபோது… ஏர்வாடியில் இருக்கக்கூடிய அந்த இபுறாஹிம் பாதுஷாவைப் பற்றிய வரலாறு – தீன் விளக்கம்டு ஏற்கனெவே ஒரு நூல் வந்திருக்கிறது – அதை அடியொட்டி படைப்போர் இலக்கியமாக இந்த இபுறாஹிம் படைப்போர்  இயற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நூல் இன்னும் பதிக்கப் படவில்லை. என்னுடைய தனித்த முயற்சியின் காரணமாக , நான் சேகரித்த அத்தனை நூல்களையும் – அது மிகப் பழமையாக , xerox என்கிற நகலெடுத்தபோது உதிர்ந்து விழுந்த காரணத்தால்  பொடிப்பொடியாகப்போன அந்த நிலையில்கூட – நான் பதிப்பித்திருக்கிறேன் –  பார்க்கர் பதிப்பகம் என்ற என்னுடைய பதிப்பகத்தின் மூலமாக. தமிழியல் ஆய்வு நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் அடிப்படையில் இதை நான் முழுக்க பதிப்பித்திருக்கிறேன். ஆனால் இன்னும் பதிக்கப்படாமல் இன்னும் சற்றுவேலை பாக்கியிருக்கூடிய ஒரு..

தி: அதெல்லாம் தாள் சுவடிகள்தான், இல்லையா?

ப: இல்லையில்லை. ஓலைச் சுவடிகள்!

தி: எழுத்து முறையிலே அதில் வேறுபாடு இருக்கிறதா?

ப: ஆமாம். புள்ளி வைத்திருக்காது. இஸ்லாமிய இலக்கியங்களை வாசிப்பதென்பது சற்று சிரமமான விஷயம். நான் சுவடி இலக்கியத்தைத் தேடித்தான் என்னுடைய ஆய்வுப் பணியைத் தொடங்கினேன். இஸ்லாமிய இலக்கியத்திற்கு வந்து நின்றேன்.  என்ன காரணம் என்றால்,  இதை நான் செய்யாமல் யார் செய்வது என்கிற பெரிய கேள்வி எனக்குள் எழுந்து விட்டதுதான் காரணம். என்னவென்றால் நீங்கள் வாசிக்கும்போதும் – இப்படி இருக்குமென்று வைத்துக்
கொள்ளுங்களேன் ஒரு வார்த்தை – ‘அவன் சபுர் செய்து கொண்டிருந்தான்’, ‘மக்ரிப் நெருங்கிக் கொண்டிருந்தது’… ‘சபுர்’ என்றால் என்னவென்று தெரியாமல் வாசிப்பைத் தொடர முடியாது. இஸ்லாமிய இலக்கியங்களில் இருக்கக்கூடிய வாசிப்புச் சிக்கல்களில் இஸ்லாமிய இலக்கியங்கள் புகழ்பெறாமல் போவதற்கு , அல்லது மற்றவகளுடைய வாசிப்பிற்கு  காரணாமாகாமல் இருப்பதற்கு இதைக் கூடச் சொல்லலாம். ‘மக்ரிப்’ என்பது தொழுகைக்கான நேரம் , அது ஆறு மணிக்கு மேல் தொழக்கூடிய நேரம், ‘சபுர்’ என்பது பொறுமையாக இருக்கக்கூடிய அந்த நிலைப்பாடு.. இதைப் புரிந்தால்தான் சரியாக வாசிக்க முடியும்.

தி: சமயம் என்றில்லை, மீனவர்கள் குறித்து ஒரு புதினம் வருகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள்; அந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய சொற்களில் பரிச்சயமில்லையென்றால் அதைப் படிக்க முடியாது.

ப: ‘ஆழி சூழ் உலகு’ என்கிற புத்தகம் படித்தேன்.

தி: அதைத்தான் சொல்ல வருகிறேன். ஜோ.டி. குரூஸ¥டைய அந்த நூலை நான் முழுமையாகப் படித்தேன். அதைப் படிக்கும்போது நிறைய அவர்களின் புழக்கச் சொற்கள்… அவங்க தனியா பெயர் வச்சிருக்காங்க!

ப: ஆமாம்…’நீவாடு’ண்டு ஒரு சொல் வரும்…நமக்குத் தெரியாது.

தி: அதுபோல கடல் நீரோட்டங்களுக்கு அவர்கள் வைக்கிற பெயர்கள்.. இதெல்லாம் தெரியாம நாம  வாசிக்கவே இயலாது.

ப: ஆனால் ஒரு உள்ளன்போடு, இது நம்ம தமிழ் சார்ந்ததென்று அக்கறையோடு வாசிக்க ஆரம்பித்தால் புரிந்து விடும்.

தி: நிச்சயமாகப் புரியும். போகிற போக்குல படித்துவிட முடியாது. முயற்சி தேவை.

ப: வாசிப்பு முயற்சி

தி: எழுதுகிறவனுக்கு முயற்சி தேவைப்படுகிறமாதிரி வாசிப்புக்கும் ஒரு முயற்சி தேவை

ப: இந்த முயற்சி இருந்தா இஸ்லாமிய இலக்கியங்கள் பிரபலமாவதற்கும் மற்றவர்கள் கையில் அது தவழ்வதற்கும் அதிக காலம் கிடையாது.

தி: வாசகன்  வசதிக்காக வேண்டி இந்த தனித்தன்மைகளை விட்டுடக்கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த தனித்தன்மையை பாதுகாத்துக்கொண்டுதான் வாசகனை பழக்கிக்கிட்டு வரணும். அந்த வார்த்தைகளை நீர்த்துப்போக விடக்கூடாது. சரி, நவீன இலக்கிய வடிவங்களிலே இஸ்லாத்திண்டைய பங்களிப்பு என்று எதை நினைக்கிறீர்கள்?

ப:  ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். ‘இஸ்லாமிய இலக்கியம்’ என்பது எது? நிறைய பேர்கள் என்ன சொல்கிறார்கள், ‘இது இஸ்லாமியப் புலவர் எழுதினார்; அதற்காக அது இஸ்லாமிய இலக்கியம்’ என்று. அப்படியல்ல. எழுதப்படக்கூடிய பொருள் , அது இஸ்லாமுடைய வாழ்வியல் நெறிமுறைகளுக்கும், அந்த கோட்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கின்றபோது அது இஸ்லாமிய இலக்கியமாக பெயர் பெறுகிறது. இப்படிப் பெயர் பெறுகிற நேரத்தில் உலகியல் விசயங்களை நிறைய பாடக்கூடிய வாய்ப்பில்லாமல் பல எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தினுடைய குறிக்கோள்களாக சில விசயங்களை காட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நிகழ்த்துதல்கள், நிகழ்த்துக் கலைகள்..இவைகள் இஸ்லாத்தில் இல்லை; ஆனாலும் வாழ்வியல் நிலையிலே நம்முடைய மண்ணிற்குரிய விசயமாக நிகழ்த்துதல் இருக்கின்றபோது அதைத் தவிர்க்க முடியாமல் போகின்ற சூழலையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக, மார்க்கம் சொல்கின்ற ஒரு விசயம் இருக்க , உலகியலோடு ஒத்துவாழக்கூடிய பண்பாட்டு ரீதியான ஒரு விசயம் இருக்க , இரண்டு நிலையிலும் இஸ்லாமியர்கள் தன் நிலையை வழுவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

தி: செயற்கையாக இல்லாமல் இயற்கைப் போக்கிலேயே ஒரு மண்ணின் பண்பாடும், மதத்தின் பண்பாடும் கலந்துவிடுகிறது. நீங்கள் இஸ்லாமியர் என்பதாலேயே தமிழ் பேசுகிறவர்கள் தமிழரல்லாதவராகவும் அரேயியர்களாகவும் ஆகிவிட மாட்டீர்கள். எங்கள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் சந்தனக்கூடு என்பதற்கும் கோயில் திருவிழாவிற்கும் பெரிய வேறுபாடு இருக்காது. எல்லோரும் போய் மகிழ்ச்சியாக கலந்து கொள்வார்கள். இதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்கிறார்போல் அதுலெ ஒரு உற்சவமூர்த்தி இருக்காது. அவ்வளவுதான் வித்தியாசம்.

ப: சந்தனம் நிறைந்த கூடு இருக்கும்.

தி: அதேபோல் இங்கே ஒரு கோயில் திருவிழா என்றால் ஒருநாளைக்கு மண்டகப்படி – மாமா வீட்டு மண்டகப்படிண்டு சொல்வார்கள் – மாமா மச்சான் என்று பழகுவார்கள். ஒன்னும் வேற்றுமை இருக்காது; எல்லோரும் மண்ணின் மக்கள் என்கிற உறவுமுறையிலே பழகுவார்கள்.

ப: இன்றைக்கும் வேற்றுமை இல்லே.  வேற்றுமை என்பது அவர்களுடைய வாழ்வியலோடு இல்லாமல் இருக்கிறது. அது ஏதோ அரசியல் தளத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்களின் வாழ்வியலோடு அது ஒன்றுகலக்கவே இல்லை என்பதுதான் தமிழகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன்.

தி: மதம், அந்த மதத்தைப் பேசுகிற பிறந்த ஒரு பகுதி, அந்த மதம் அதிகப்பேர் கடைப்பிடிக்கிற ஒரு பகுதி என்றால் அந்த பகுதிக்குரிய தேவைகளுக்கேற்ப உடைகள் , அந்த பழக்க வழக்கங்கள் வருது. ஒரு மணல் வீசுகிற பாலைவனத்தில் உடுத்துகிற அந்த உடையையே வெயில் கொளுத்துகிற இன்னொரு நாட்டிலேயோ வேறொரு இடத்திலேயோ போய் பயன்படுத்த முடியாது. அதனாலேயே அது மத உடை ஆகிவிடாது. மண்ணின் தேவைக்கேற்பத்தான் உடை மாறுபடுகிறது. அதிலேயே சில வேறுபாடுகள் – சமயத்துக்கு சமயம் – இருக்கலாம். அந்த முறையில் பார்க்கிறபோது இஸ்லாத்திற்கென்று , இஸ்லாத்தினுடைய கோட்பாடுகளின் அடிப்படையில் , மார்க்கத்தைப் பரப்புவதற்கென்று உருவான பல்வேறு இலக்கியங்கள் – அவை இந்த மண்ணுக்குரிய இந்த மொழிக்குரிய தன்மைகளை உள்வாங்கிக்கொண்டு இந்த மண்ணுக்கும் மொழிக்கும் ஒரு பண்பாட்டுப் பங்களிப்பை செய்திருக்கிறது. நான் என்ன கேட்கிறேன் என்றால், அப்படி வரும்போது – இஸ்லாத்தினுடைய தாக்கத்தினால் – இஸ்லாம் அல்லாதவர்கள் படைத்திருக்கிற இஸ்லாமிய இலக்கியங்கள் இருக்கலாம் இல்லையா?

ப: நிச்சயமா இருக்கும். நீங்க கேட்ட இந்த கேள்விக்கு முதலில் பதில் சொல்லிட்டு அப்புறம் நவீன இலக்கியங்களுக்கு  வருகிறேன். இஸ்லாம் என்கின்ற மார்க்கத்தின் அடிப்படையான விசயங்களை உள்வாங்கிக்கொண்ட பிறமார்க்கத்து சகோதரர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்கிறேன்: ‘நபிநாதர் பிள்ளைத்தமிழ்’ என்கிற நூலை மு. சண்முகனார் என்கிற ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார். அற்புதமான ஒரு நூல். இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளையோ கோட்பாடுகளையோ ஒழுகலாறுகளையோ முழுக்க உள்வாங்கிக்கொண்டு எழுதப்பட்ட ஒரு இலக்கியமாக அது திகழ்கிறது. அதே போல ‘கோட்டாற்றுக் கலம்பகம்’ என்கின்ற ஒரு நூலை கருத்தையா பாவலர் என்பவர் எழுதியிருக்கிறார். இவருடைய தமிழ் பங்களிப்பு என்பது இஸ்லாத்தினுடைய உலகத்தில் மிக அருமையான ஒன்றாக கருதப்படுகின்றது.

தி: இதை இஸ்லாமிய வாசகர்கள் மதித்து ஏற்றுக் கொள்கிறார்கள்?

ப: நிச்சயமாக. நான் ஒரு விசயத்தை தெளிவாக்குகிறேன். இஸ்லாமிய இலக்கியம் என்பது எழுதப்படுபவர்களைப் பொறுத்து பெயர் பெறுவதல்ல. எழுதப் படுகின்ற பொருளை வைத்து பெயர் பெறுவது. அடுத்ததாக, நவீன இலக்கியங்கள் என்று வரும்போது இஸ்லாமிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு , இஸ்லாமியர்களுடைய குடும்ப வாழ்க்கையையோ அல்லது மனிதர்களுடைய மேம்பாட்டு நிலையையோ சொல்லக்கூடிய வகையில் மீட்டுருவாக்கத்தையோ அல்லது மறு வாசிப்பிற்கோ உட்பட்ட பல இலக்கியங்கள் இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறன.  அதை இல்லையென்றே சொல்லிவிடமுடியாதபடி பல நவீன இலக்கியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நவீன இலக்கியங்கள் இஸ்லாமியர்களுடைய வாழ்வியல் நிலைகளை நவீன நோக்கோடு பார்க்கக்கூடிய சூழலை இன்றைக்கு நாம் காணமுடிகிறது. இன்னும் ஒரு விசயம் என்னவென்றால் , பல விசயங்கள் பேசக்கூடாது என்கின்ற நிலை இருந்தது; இதற்கு மதப்பூச்சு வைத்திருந்தார்கள்; ஆனால் , மதத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதனை இன்றைய நவீன இலக்கியங்கள் சொல்லிக் காட்டுகின்றன. ஏனென்றால் ஒருவர் எழுத வருகின்றபோது – அது நவீன இலக்கியமாக இருக்கின்றபோது – சமயமும் மதமும் எந்த விதத்திலும் அதனால் பாதிக்கப்படாது என்பதனைப் புரிந்துகொண்ட படைப்பாளிகள் இன்றைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அது ஒரு மிக நல்ல விசயமாகத்தான் எனக்குப் படுகிறது.

தி: அவர்கள் உலகியல் அரங்கிலும் பங்களிப்பு செய்கிறார்கள்..

ப: நிச்சயமாக. இதுவே பெரிய உலகியல் பங்களிப்புதானே.. ஒரு சாதாரண இஸ்லாமியனுக்கும் வேற்று மார்க்கத்தவருக்கும் என்ன வித்தியாசம் என்னவென்றால் இஸ்லாமியர்கள் , காலையில் எழுந்திருப்பதிலிருந்து ராத்திரி தூங்கும் வரைக்கும், முழுக்க முழுக்க இஸ்லாமியராகவே இருக்கிறார்கள். எப்படி? நாட்களைத் தொடங்குகின்றபொழுது, யாரேயேனும் சந்திக்கிறபொழுது , சாப்பிடுகின்றபொழுது, படுக்கின்றபொழுது, பேசுகின்றபொழுது… எங்கே போனாலும் அவர்கள் இறைவனை மறப்பதில்லை. இறைவார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கல்யாணத்திற்கு கூப்பிடுங்கள், ‘இன்ஷா அல்லாஹ். வருகிறேன்’ என்பார்கள்.  ‘இறைவன் நாடினால் வருகிறேன்’ என்று அர்த்தம். ‘இந்தப் பொருள் நல்லாயிருக்கா?’ என்றால் , ‘மாஷா அல்லாஹ். நல்லாயிருக்கே’ என்பார்கள். ‘இறைவன் படைப்புக்கு நன்றி’ என்று சொல்வது அது. சாப்பிடுவதற்கு ஏதாவது நீங்கள் கொடுங்கள், ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி சாப்பிடுவார்கள் – ‘இறைவன் பெயரால் தொடங்குகிறேன்’ என்று. ஆக, அவர்கள் முழுக்க முழுக்க இறைவேட்கையோடும் இறை எண்ணங்களோடும் வாழக்கூடியவர்களாக
இருக்கிறார்கள். அவர்களின் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள்ளாக நடக்கின்ற சிக்கல்களை பேசுகிற இலக்கியம் என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்போது வந்திருக்கிறது ‘ரெண்டாம் ஜாமத்துக் கதைகள்’ மாதிரி. சல்மா அவர்கள் அதை எழுதியிருக்கிறார்கள். ஒரு முஸ்லீம் சமூகத்தின் உள்ளேயிருக்கக்கூடிய விடயங்களை அந்தப் பெண் தைரியமாக எழுதியிருக்ககூடிய ஒரு நூலாக அது இருக்கிறது. ஆனால், இஸ்லாத்திற்கும் இதற்கும் முரண்பாடு இருக்கிறதா என்றால் ஒண்ணும் கிடையாது. ஏனெனில் மார்க்கக்கருத்துகளுக்கு எதிராக எதுவும் அதில் பேசப்படவில்லை. பதிலாக , அந்த சமயத்தைச் சார்ந்த மக்களுடைய
சிக்கல்களை அந்த நூல் பேசுகிறது. இப்படிப் பார்த்தால் நிறைய கவிதைகள்.. இன்றைக்கு பல கவிதைகள் வருகின்றன..ஏன், இலங்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் , இப்போது அங்கே முஸ்லீம்கள் காணும் பிரச்சனைகள் என்று பல கவிதைகள், பல இலக்கியங்கள், பல புதினங்கள்.. இன்றைக்கு வந்துகொண்டேயிருக்கின்றன… அதையும் நாம் இஸ்லாமிய இலக்கியங்களிலே சேர்க்கலாம்.

தி: கடைசி கேள்வி.. தமிழுக்கு இஸ்லாத்தினுடைய பங்களிப்பு என்பதில் சமூகத்தில் சரிபாதியான பெண்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது?

ப: என்னைப்பார்த்து தொடுக்கப்படும் பழகிப்போன கேள்விகளில் இதுவும் ஒரு கேள்வி! எப்போதும் பெண்களுக்கு இரண்டாம் நிலையான பார்வைதான் சமூகம் தந்திருக்கிறது. அதில் நான் இஸ்லாத்தைப் பற்றி சொல்வதற்கு பெருமைப்படுகிறேன். என்ன காரணம் என்றால், இஸ்லாம் ஆண்-பெண் என்கின்ற வித்தியாசத்தை எப்போதும் பேணவில்லை. கல்வி , இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. எனக்கு நிரம்பப் பிடித்த ஒரு ஹதீஸ் : ‘தலபுல் இல்மி ·பரீதத்துன் அலாகுல்லி முஸ்லிமின் வ முஸ்லிமத்தி’. ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்திருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கு கல்வி என்பது கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடியது. அந்தக் கல்வித் தளத்தைக் கையில் எடுத்துக்கொண்ட பெண்கள் , எழுதுவதற்காக வருகின்றபொழுது தன்னுடைய உள்ளக்கிடக்கை படைப்பாளியாக நின்று எழுதுகின்றபொழுது , அதை வாசிப்பதற்கான பயிற்சியோ ஏற்றுக்கொள்வதற்கான பயிற்சியோ இன்னும் சமூகத்திற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. (1917ம் ஆண்டு நாகூரில் பிறந்த) சித்தி ஜூனைதா பேகம் என்கின்ற ஒரு பெண்… அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு போனது கிடையாது; மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறார்கள்; வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து உட்கார்ந்து தனக்குக் கிடைத்த தாள்களிலெல்லாம் எழுதியெழுதி வைத்திருக்கிறார்கள். அப்படி நீங்கள் தேடிப்பார்த்தீர்கள் என்றால் பெண்களுடைய ஆக்கங்கள் நிறைய இருக்கின்றன. ஓலைச் சுவடிகளில் கூட அது இருக்கலாம், சொல்ல முடியாது. ஆனால், பெண்கள் எழுதுகிறார்கள். என்னுடைய உள்ளக்கிடைக்கையும் வேட்கையும் என்னவென்றால் அந்தப் பெண்களுடைய எழுத்துக்களை அவர்களுடைய மொழியை புரிந்துகொண்டு வாசிப்பதற்கான பயிற்சி வந்தால் பெண்கள் இன்னும் எழுத ஆரம்பிப்பார்கள். நிறைய பெண்கள் வருவார்கள்.

தி: எழுத்தைக்கூட இறுதியாக தீர்வு செய்வது சமூகம்தான். சமூகம் எந்த அளவுக்கு தகுதி படைத்ததோ அந்த அளவுக்குத்தான் அதற்கு இலக்கியங்கள் கிடைக்கும். ‘சங்கப்பலகை’யின் சார்பாக உளமார்ந்த நன்றி.

***

தொடர்புடைய சில சுட்டிகள்:
1 : இஸ்லாமும் தமிழிலக்கியமும் / முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

2 : சித்தி ஜூனைதா பேகம்

3 : சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ பற்றி நாகூர் ரூமி

4. நாகூர் ரூமி மொழிபெயர்த்த ஹோமரின் ‘இலியட்’ பற்றி பர்வீன் சுல்தானா

5. தமிழில் சிறுபான்மை இலக்கியம் – ஜெயமோகன்

6. பல்சந்தமாலை பற்றி – நாகார்ஜுனன்

குங்குமத்தில் நாகூர் ரூமி

rumi_kunkumam1.jpg

குங்குமம் 4/10/2007 இதழில்  வெளிவந்த நண்பர் நாகூர் ரூமியின் நேர்முக (தொகுத்தவர் : மு.வி.நந்தினி) சுட்டிகளை இங்கே பதிகிறேன்.

‘பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது தீவிரவாதத்திற்கு முன்னால்’ இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?’ – நாகூர் ரூமி

சுட்டி : குங்குமத்தில் நாகூர் ரூமி 

– ஆபிதீன் –

**

இஸ்லாமிய தீவிரவாதம்! 
 

உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். ‘தீவிரவாதம்’ ‘வன்முறை’ என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்று சொல்லுகிறார்களே அது என்ன?

இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் ‘இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?

ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை ‘இந்து தீவிரவாதி’ என்றோ, ‘கிறிஸ்தவ தீவிரவாதி’ என்றோ ஏன் அழைப்பதில்லை? தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது’ என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்? 

‘பழிக்குபழி  ரத்தத்துக்கு ரத்தம்’ என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது, தீவிரவாதத்திற்கு முன்னால் ‘இஸ்லாமிய’ என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?
 
சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்! அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம். 

எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது. வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர, இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன். 

அவன் இந்துக்களை ஒடுக்கினான்’ என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல  முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள். 

எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், ‘இந்தியன் ஹிஸ்டரி’ என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்! 

‘ஆரியர்கள் வருகை’ என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் ‘முகலாயர்களின் படையெடுப்பு’ என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.  

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். ‘முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்’ என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். 

‘இஸ்லாம்’ என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது’ என்பதுதான். ‘ஜிகாத்’ என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை. அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன? 

இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது “சச்சார் கமிட்டி” அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம   ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை. எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள். 

காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. ‘அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்’ என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம். எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை. இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வர ப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன. 

ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்… மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை. 

தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு. 

‘உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை’  

இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்! 

**

நன்றி: குங்குமம் , சத்தியமார்க்கம் 

« Older entries Newer entries »