மாதருக்கு மட்டும்…

இந்த கார்ட்டூனையும் வேறொரு குறும்பான ஃபோட்டோவையும் அனுப்பி, கூடவே புர்காவின் சிறப்புகளைச் சொல்லும் ஒரு சுட்டியையும் அனுப்பிய அண்ணன் ஹமீது ஜாஃபருக்கு பொன்.சுதாவின் ‘மறைபொருள்’ குறும்படச் சுட்டியையும் புலவர் ஆபிதீன் காக்காவின் இந்தப் பாடலையும் ( நூல் : ‘தேன்கூடு’) அனுப்பி வைத்தேன். தர்காவை மட்டுமல்ல புர்காவையும் இடிப்பார் ஆபிதீன் காக்கா. சகோதரர்களின் ‘பிர்கா’க்களை எதிர்பார்க்கிறேன். 

இன்று உண்டு எனக்கு தர்ம அடி!

*

மாதருக்கு மட்டும்
புலவர் ஆபிதீன்

கணவன் தலையணைப் போல – வெகு
காலம் கடத்தினீர் அந்தோ!
மணவினைச் செய்வித்த போது – மாய
மயக்கம் மிகுந்ததோ சொல்வீர்!

முக்காடு என்றொரு திரையை – யிட்டு
மூலையில் குந்தினீர் பாபம்!
எக்கேடு கெட்டாலு மென்ன – என்று
எண்ணிய தாணினம் போலும்!

காப்பெனப் பெயரிட்டு ஐயோ! – நும்
காலுக்கு விலங்கிட்டார் – காளை
தோப்புக் கிளிகளே உங்கள் – காதில்
தொளாயிரம் பொத்தல்க ளேனோ?

வளையலுக் கவசியம் ஏதோ? – ஆணின்
வசைமொழி யானது அல்லால்
களையவும் மனமில்லையானால் – என்றும்
கட்டியே அழுகிவீர் பெண்காள்!

பிள்ளைப் பெறும்யந்ர மல்ல – என்று
பிரியமாய் ஆணிடம் சொல்வீர்
கொள்ளைப் போய்விடவில்லை – உரிமை
கொட்டிக் கிடக்குது பாரீர்!

போனது போகட்டும் தோழீ – காலப்
போக்கில் திருந்தியே கல்வித்
தேனது உண்டினி வாழ – பெண்
தெய்வங்கள் முன்னேறி வாரீர்..

**
ஆபிதீன் காக்காவின் தற்சிறப்புப் பாயிரம் (நேரிசை வெண்பா) :

‘அன்பாலே யாவரையும் ஆதரிக்கும் வல்லவனே!
என்பாலே நீயிரங்கி என்னாளும் – பண்பெய்த
வான்கூடு மேகங்கள் வாரிமழைப் பெய்தற்போல்
தேன்கூடு பேரோங்கத் தா.’

Advertisements