தாடகை (சிறுகதை) – நந்தகுமார்

ஒட்டக மனிதர்கள்‘சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை, நன்றியுடன்..

தாடகை – நந்தகுமார்

அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின் மென்னிருளை ஸ்பரிசித்து நாசிகளில் மணத்தியது. சாரைப்பாம்பு அசைவை மெதுவாய் உள்ளிளுத்து நீரோட்டத்தில் கரை தாண்டத் திமிறி, தலை உந்தி பின் நீருக்குள் முழுகியது. படித்துறையில் பாசி நெடியினுள், நத்தைகள் குமுழிக் கொண்டே தனித்தனியாய் மோனத்தினுள் ஆழ்ந்து கற்படியில் விக்கித்திருந்தது. வீடுகளின் கண்கள் அணைந்து கொண்டிருந்தன. ஆல மரத்தின் கிளைகளில், இரவை அணங்காமல் அழைத்துக் கொண்டிருக்கும் பல நூறு நாக்குகள்.

பிருஷ்டம் போலவா, கூம்பா, இளம் முலைகளா, மூக்கு, முண்டிய வயிறு, கால்கள். எனக்கு முன்னால் வியாபித்துப் படர்ந்திருக்கிறது அந்தக் கருமை. உண்மையில் அதன் கோட்டு வெளிச்சம். வானம் இணையும் எல்லையில் சர்ப்ப நெளிவைப் போல. வடிவில்லாத காலமாய் உந்தி நிற்கிறது. காலம் கொண்டு அதனைப் பறண்டிக் கொண்டிருக்கிறேன். திகைத்து நிற்கையில் இந்தக் கதையின் ஞாபகம்.

ஆரண்யத்தில் பெரும் முலைக்காரியை யாவருமறிவர். இருளின் நிறத்தில் அவள் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். வானத்துடன் புணர்ந்து பெற்றாளா இல்லை ஓயாது சமரிட்டுக் கொண்டிருக்கும் கரிய காலனை ஆலிங்கனித்து அவர்களுக்கு உருக்கொடுத்தாளா தெரியவில்லை. அவர்கள் பிறவியிலேயே அங்கங்கள் வளர்ந்த உருளைக்கற்களால் தேகம் வார்த்த பெரும் ரூபங்களாக வனம் படர்ந்து கிடந்தனர்.  தம் பிள்ளைகள் சப்பிய பால் போக மிச்சப்பால் வனாந்தரத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் ஒழுகி வளம் நிரப்பியது. சாகா வரமடைந்த பூக்களையும், வண்டுகளையும், வானமுந்தி அழைக்கும் நீள் மரங்களையும், வேர்களே உயிர்களாய் பச்சை நிரப்பும் புற்பூண்டுகளையும், கிழங்குகளையும். வனப்படைந்த ஓராயிரம் முலைக்காம்புகளாய் சக்கைகளையும், தன் கனாக்களைக் கொண்டு எண்ணற்ற சிறகுகளையும், மத நீர் கொண்டு வண்ணத்துப்பூச்சிகளையும், அக்குள் வியர்வை கொண்டு சுனைகளையும், தடாகங்களையும் உருவாக்கி வளம் பெருக்கினாள்.

தனி ராஜ்ஜியம் நடத்தும் அவளது பிரதேசத்தில், அங்கிங்கெனாத படிக்கு பிள்ளைகள் நிரம்பி வளர்ந்தன. ஆரண்யம் தாண்டியும் அவளது கால் விரல்கள் வெகுதூரத்திற்கு நீண்டு கிடந்தது. கோப முனி எறிந்த வெட்டுக்குத்தியால் அகழ்ந்த நிலத்தில் தன் மைத்துனன் நீலாழியைத் தழுவிக் கொண்டு காலமற்று ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெயரில்லை. சூட்சுமமாய் தன் கோவிக் கைகளால் பிள்ளையைத் தழுவிக் கொள்ளும் அம்மையைப்போல, கன்னியம்மையின் ஒளிர் மூக்குத்தி போல, வராகன் அகழ்ந்தெடுத்த தேவியைப் போல, வட்ட வடிவினளாய், வளைந்து தடாகையாய் கொழித்து செழித்திருந்தாள்.

தன்னைத்தானே அழித்தெடுப்பவள், தீக்கனல் சொரியும் இசக்கியவள். தன் பிள்ளைகளைக் கடித்து விழுங்கும் அவளது தழல் நாக்குகளை நான் கண்டிருக்கிறேன். ஆனி ஆடி மாதங்களில் அவளுக்கு வெறி பிடிக்கும். மலைகளையெல்லாம் தன்னுள் விழுங்கிக் கொள்வாள். நிலத்தையெல்லாம் தன் செண்பக விரல்களால், கசக்கியெறிவாள். கால் விரல்களின் கூர் உகிர்களால் உயர்ந்தனவற்றையெல்லாம் நெட்டித்தள்ளி பொடியாக்குவாள். அடங்காச் சினம் உருளும் அவள் நாசிகளில், உஷ்ணத்தின் தீக்கங்குகளாக இருள் தெறிக்கும். பிள்ளைகளை தன் அடங்காப்பசிக்கு வாரி வாரித் திம்பாள். ஒழுகும் கொதி மத நீர் அப்பொழுது சாரை சாரையாக கரு நாகங்களாய் உருவெடுத்து விடம் கக்கி, சூழ்ந்த பசுமையினைக் கரித்துக் கொண்டே செல்லும். எதுவும் மிஞ்சாது பாலையாவது வரை அவளின் உமிழ் நீர் திராவகமாய் பொழிந்து உயிர்களை வதைத்து சிதைத்து அழிக்கும்.

பின் அடங்குவாள். கருமையினைக் குடித்துக் கொண்டு, தனிமையில் தன் செந்தழல் கண்களால் உடலை நோக்குவாள். வறண்டு தொங்கும் முலைகளையும், காரை எலும்புகளையும், வெறித்து, காய்ந்திருக்கும் தன் அல்குலையும் காண்பாள். வானத்தை விழுங்க அண்ணாந்து கிடந்தாள். பொறுமையின்றி புரண்டு உருண்டாள்.  அந்த சமயம் தான் கட்டைமுனி அவள் பிரதேசத்திற்குள் நுழைந்தார். அதுவும் ஒரு கருக்கல் நேரம். அந்தகாரம் தன் மேற் போர்வையை குமிழ் குமிழாக திறந்தும் மூடியும் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. கதிரவன் சென்னிறக் கோழையாய் பாலையின் வெண் சாம்பலில், உழைந்து கொண்டிருந்தான். தாகமெடுத்த முனி கமண்டல நீரை கைகளில் ஊற்றினார். விஷம் சூழ்ந்த சூழ், உஷ்ணத்தில் நீர் வற்றி விட்டது. தடாகங்கள் கிடந்த சதுப்பு, வறண்டு அவளது உப்புக்குத்தியின் வெடிப்பாய்க் கிடந்தது. அங்கு இரு கரு உருவங்கள், ராஜ நாகங்களைத் தோலுரித்து சவைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். உடும்பின் தலையை ஒடித்து அதன் மென் அடித் தோலை தன் வீரப்பற்களால் இழுத்து கரும்பை மெல்வது போல அதன் சூடான குருதி ஒழுக சுவைத்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கு உருவமில்லை. ஒரு வேளை இருந்ததோ. ஆம்! அவர் திகைத்து விட்டார், இது வரை அவர் அறிந்த அவரது முன் முடிவுகளில் உதித்த எந்த உருவமும் அவர்களுக்கில்லை. ஆனால் ஏதோ ஒரு த்வனியில் அவர்களை ஆண்கள் என்று மட்டும் கணித்து விட்டார். மேலும் அவர்கள் சிறுவர்கள் தான் என்பதும். ஆனால் ஊகிக்க முடியாத கொடும் நாற்றம் அந்தச் சூழலை அவரின் கண்களிலிருந்து மறைத்தது.

கருமையின் கார்வை அங்கு மெல்ல ஒரு பிணத்தைப் போர்த்துவதைப் போல அவரை முழுக்கடித்தது. அவர்கள் தான். இப்பொழுது இரை கிடைத்த குதூகலத்தில் பாலையின் செம்போத்துகளாய் கீறினர். மானுட ரத்தத்தின் வாசனை, புளித்த தேனைப் போல கிறங்கடித்தது. அவர்களின் வயிறு இருக்குமிடத்தில் இருளாய், நிரம்பாத பிலங்கள். இருளுக்குள்ளிருக்கும் முனி பெரிதாகிக் கொண்டே இருந்தார். இவர்கள் விழுங்க முடியாத அளவு, ஆனால் இவர்களும் தத்தமது தாடைகளை விரித்துக் கொண்டே இருந்தனர். அவர் முடிவிலி வரை உந்தியிருந்தார். தழல் நாக்குகளின் சிவந்த உள்ளறைகளிலிருந்து, நெருப்பு ஒரு பாதாள நீரோட்டமாய் அலையாடிக் கொண்டிருந்தது. பிளந்த வாயை மூட இயலாது கதறினர். தாடை கிழிந்து கொடிக்கம்பம் சருகி விழுவதாய், உதிர் சருகுகளாய், தலை வெட்டிய அரவங்களாய், காட்டு நாய்களின் முணங்கல்களாய், பிளிறலாய், உறுமலாய், விதிர்த்தலாய், கேவலாய், அதட்டலாய் பல்லாயிரம் விளிகள். மல்லாந்து கிடந்த வறுமுலை அம்மையின் காதுகளில் கீரிச்சிடலாய் அணங்கிக் கொண்டிருந்தது.

கட்டைமுனி பிள்ளைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டு, பசித்து சாக சபித்து நிலத்தை விட்டு அகல எத்தனித்தான். எல்லை தாண்ட முயல்கையில் அம்மையின் அழைப்பு. அவள் கட்டை முனியை நன்கறிவாள்.

எங்க போறியோ…!

என்னய இங்கன சாவ உட்டுட்டு போவாதியோ…!

கேளும் வே…

அவள் அழகிய ரூபமெடுத்து அவர் முன் சிருங்கரித்தாள்.

என்னத் தெரியலயா…

லோபமுத்திரை. வெகு நாள் தேடியலையும் அவள் இங்கெப்படி வந்தாள். கட்டை முனி திடுக்கிட்டார்.

இங்கெப்படி வந்தாய்.

அன்னைக்கு கடைசியா நீங்க என்ன உட்டுட்டு போன பொறவு, பயங்கர மழை, ஒரு நாகம் வீட்டுக்குள்ள வந்து குட்டி போட்டுச்சு. அது ஒரு ராத்திரிலேயே நம்ம குடில் அளவுக்கு வளந்துட்டு. நான் பயந்துட்டு ஓடப்பாத்தேன். ஒங்கள விளிச்சேன். அது என்ன முழுங்கிட்டு. ஆனா, அதாலே முழுசா திங்க முடியல. இங்கன என்னத் துப்பிட்டு போய்ட்டு. நான் நீங்க வருவீங்கனு இத்தன நாள் காத்துக்கெடந்தேன். எப்படியோ இந்தா வந்துட்டேள்ளா. என்ன இங்கருந்து கூட்டிட்டு போய்ருங்கோ.

ஆனால் அவள் தந்திரமாக அவரை மயக்கி இங்கேயே இருத்தி, தன்னை மீட்டு விட முடிவு செய்திருந்தாள். காமத்துடன் அவரை நெருங்கித் தழுவினாள். மலை அருவிகளின் சுகந்தம் அங்கு நிரம்பியது. அருகில் நெருங்க நெருங்க கட்டை முனி விடைத்தார். பாசியுடன் இணைந்த மென் துமி ஒரு சரச நாதமாய், ஒலி புனைந்து நிலத்தில் புரண்டது. தீராக் காமத்துடன் அவர்கள் சர்ப்பங்களாய் பிணைந்து புணர்ந்தனர். தன் சூட்சும உடலை விட்டு கட்டை முனி ஒரு சிறுவனாய் உணர்ந்தார். அவரது குழந்தைமையை முத்தி இறுக்கினாள். அடுக்குகளாய் பிரிந்திருந்த அவரது அகக் கட்டுமானத்திற்குள் தாகம் இறைக்க, அவளது கேசம் அனல் நீரோட்டமாய் தொண்டைக் குழியில் இறங்கியது. அவர் நீலம் பாய்ந்த மதலை போல, அவளது கைகளுக்குள் துவண்டார். மோனமிழந்த சூழலில் அவளது மதம் உருகி வழிந்து நிரம்பிக்கொண்டிருந்தது. அவள் தன்னிலிருந்து எல்லை மீறி பீறிடும் முலைக் கண்களை, கணக்கற்ற தழல் அதரங்களுக்கு ஊட்டினாள். அடி நீரோட்டமாய்க் கலங்கியத் தொழியாய் நிலமெங்கும் பால் பொங்கிவழிந்தது. அது ஒரு பாலாழியாய், அந்த நிலமே ஒரு தோணியாய் உருமாறி அசைந்து கொண்டிருந்தது. விடைத்த அவரது குறியை மெல்ல மெல்ல அதக்கிப் பிழிந்தாள்.

சலனத்தின் மெல்லிய நொடி, தன்னைத் தின்று கொண்டிருக்கும் ஓநாயின் ஒளிக் கண்கள். இல்லை! இல்லை! ஸ்தம்பித்தது. இறுகியிருந்தது அவரது உடல். சுருங்கிய தேகத்தில் தீப்புண்கள். எழுந்து ஓங்கரித்தார். நீ! நீ!

அவள் வனத்தையே இடையாடையாய் அணிந்திருந்தாள். பொங்கிப் பெருகி சூழ்ந்து கொண்டிருந்தது ஆரண்யம். மதர்த்த அவளது முலைகளில் இன்னும் இன்னும் என்று நிறையாத பாலருவிகள். பாம்புகளை அரையிலும், கழுத்திலும் அணிந்திருந்தாள். குருதி சொட்டும் வெண் வீரப்பற்கள் தாடை வரை தொங்கிக் கிடந்தது. கருமையாய் உருண்ட விழிக் கோளங்கள். நீள் மூக்கின் விடைத்த நாசிகளில் உஷ்ணப் புகை. நெற்றியில் இமையற்ற ஒற்றைக் கண். அதில் பார்வை இல்லாத வெறித்த அந்தமற்ற நோக்கு. காதுகளில் எலும்புக் குழைகள். கருப்பி! கருமைக்கு உருவம் கொடுத்தால் உருவாகும் வடிவு. ஆனால் அவர் நோக்க நோக்க எஞ்சியிருக்கிறது இன்னும் அவளது உடல். கண்கள் தாங்க இயலாத அரூபத் தோற்றம். அயர்ந்து அயர்ந்து வடிவு தேடும் அகம். ஆனால் வடிவற்ற பிரம்மாண்டம். தெற்கிலிருந்து மேற்கு நோக்கி அவள் வளர்ந்து கொண்டே இருந்தாள். அவர் காணுந்தோறும் எல்லையின்மையாய் அவரது அறிதல் உடைந்து கொண்டே இருந்தது.

இதுக்கென்ன உருவம் கொடுப்பது என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன். நீள் மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று இரை தேடும் திண்டாட்டத்தில் வேம்பின் கிளைகளில் சப்தித்தது. வள்ளியாமடத்து இசக்கி கோவிலின் களப மணம். முக்குத் தாண்டி வந்து கொண்டிருந்தேன்.

படித்துறையில் மெல்ல அளைந்து கொண்டிருக்கிறேன். கைகளுக்குள் அகப்பட்டும் நழுவியும் செல்கிறது இந்த கனத்த நீர்த்தாரை. எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறாள். யாரது முலைக்காம்புகளிலிருந்து கசிகிறது.

புரண்டு படுக்கிறேன். அம்மை திரும்பி படுத்திருக்கிறாள். அம்மையின் முடிக்கற்றை இருளினுள் விகாரமாய் உருவெடுத்திருக்கிறது. விடிபல்பு வெளிச்சத்தில் அதனுள் வடிவம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு வடிவங்களே இல்லை.

*

Contact : Naan Rajamagal
*

நன்றி :  நந்தகுமார் , கானல் அமீரகம் & ஆசிப் மீரான்

கடன் (சிறுகதை) – செல்வராஜ் ஜெகதீசன்

ஒட்டக மனிதர்கள்‘சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை, நன்றியுடன்..

*

செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார்.

இதுவரை, “அந்தரங்கம்” (2008), “இன்னபிறவும்” (2009), “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010),“நான்காவது சிங்கம்” (2012), “சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை” (2014) ஆகிய கவிதைத் தொகுப்புகள் &“கவிதையின் கால்தடங்கள், 50 கவிஞர்களின் 400 கவிதைகள் தொகுப்பு” (2013) வெளியாகியுள்ளன.

கணையாழி, கல்கி, குங்குமம், தினமணி கதிர் & அந்திமழை போன்ற இதழ்களிலும்,சொல்வனம், மலைகள், நவீன விருட்சம், உயிரோசை & வல்லினம் போன்ற வலைத்தளங்களிலும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவை தவிர, கணையாழியில் இரண்டு குறுநாவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்து, தன் முதல் சிறுகதைத் தொகுப்பை கொண்டுவரும் முயற்சியில் உள்ளார்.

*

கடன் – செல்வராஜ் ஜெகதீசன்

தியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில் வைத்து பார்ப்பேன் என்று நிச்சயமாய் நினைக்கவில்லை.

ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் விட்டு, பிரிந்து செல்லும் முன், ஒரு காபி சாப்பிடலாமென்று நுழைந்த ஓட்டலில்தான் இப்படி தியாகுவைப் பார்க்க நேர்ந்தது. கோடை வெயிலின் உக்கிரம் அந்த இரவு நேரத்திலும் இருந்தது. நல்ல பேன் காற்று வரும் இடமாய்ப் பார்த்து அமர்ந்தோம். உடன் வந்த நண்பன் அன்றைய கூட்டத்திற்கு வந்த  அழகான ஒரு பெண் படைப்பாளியைப் பற்றி பேச ஆரம்பித்தான். நான் காபி ஆர்டர் செய்ய யாராவது சர்வர் எங்கள் டேபிள் பக்கம் வருகிறாரா என்று பார்வையை ஓட விட்ட பொழுதில்தான் தியாகுவைப் பார்த்தேன்.

முதலில் அது தியாகுதானா என்று சந்தேகமாய் இருந்தது. தியாகுவுக்கு வலது கண் அடிக்கடி துடிக்கும். அதை வைத்து வகுப்பில் மற்ற பசங்களெல்லாம் அவனுக்கு “கண்ணடிச்சான்” என்று பட்டப்பெயர் வைத்து அவனை அவ்வப்போது சீண்டுவோம். ஆரம்பத்தில் அதை எதிர்த்து ஏதாவது செய்ய ஆரம்பித்த தியாகுவுக்கு போகப்போக அது பழகிப்போய் பின் ‘கண்ணடிச்சான்’ என்று யார் கூப்பிட்டாலும் அவனே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பழகிப் போனது.

தியாகுவுக்கு அவ்வளவாய் படிப்பு வரவில்லை. எப்போதும் எதையோ இழந்தவன் போல் ஒரு சோபையான முகத்தோடே காட்சியளிப்பான். எட்டாவதில் பெயிலாகிப் போனான். அழுத கண்ணோடு அப்போது அவனைப் பார்த்ததுதான். ஒன்பதாவது படிக்க, நான் வேறு பள்ளிக்குப் போய், டிப்ளோமாவும் முடித்து, ஒரு வேலையும் கிடைத்து சேர்ந்து இதோ ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

தியாகுதானா என்று என் சந்தேகத்துக்கு உட்பட்டவன் நாங்கள் உட்கார்ந்திருந்த டேபிளிலிருந்து சற்று தள்ளி ஒரு மூலையில், காப்பி கலர் சர்வர் உடுப்போடும் கையில் ஒரு செவ்வக வடிவத் தட்டு சகிதம் நின்று கொண்டிருந்தான். அவன் தியாகுதானா என்று கண்டுபிடிக்கும் பொருட்டு, அவன் முகத்தை நன்றாக உற்றுப் பார்க்கும் வகையில், கை கழுவப் போவது போல், அவன் நின்றிருந்த இடத்திற்கு அருகில் இருந்த கை கழுவும் இடத்திற்கு, அவனைக் கடந்து போனேன்.

தியாகு ஒரு வகையில் எங்களுக்கு தூரத்து சொந்தம். இது கூட தியாகுவின் அம்மா எங்கள் வீட்டிற்கு வந்து போன ஒரு நாளில் தான் எங்களுக்கு தெரிய வந்தது. எங்களுக்கு என்பது ரகு அண்ணாவும் நானும். அன்று உள் அறையில், நான் எதையோ படித்தபடி இருந்தேன். அண்ணா இன்னும் ஸ்கூலில் இருந்து வரவில்லை.  வீடே மொத்தம் அந்த இரண்டு அறைகள்தான்.  நுழைந்தவுடன் ஹால் போன்ற முதல் அறையின் வலது மூலையில் சமையல் செய்ய ஒரு சிறிய மேடை. அங்குதான் அம்மா பெரும்பாலும் புகை சூழ எதையாவது சமைத்துக் கொண்டு இருப்பாள். அவள் உள் அறைக்கு வருவதே ராத்திரிகளில் உறங்கும் சமயங்களில் மட்டும்தான்.

“வாங்கம்மா” என்ற அம்மாவின் குரல் சத்தத்தில், உள்ளறையில் இருந்து வாசலை எட்டிப் பார்த்தேன். தியாகுவின் அம்மா படியேறி வந்து சமையல் அறையை ஒட்டிய கடைசி படிக்கட்டில் உட்கார்ந்தபடி  அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசியதில் இருந்து எனக்கு புரிந்தது இதுதான்.

பிள்ளைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் வேண்டும். தியாகுவின் அப்பாவுக்கு இன்னமும் உடம்பு முடியாமல் படுத்த படுக்கையாய்தான் இருக்கிறார். அவர் உடல் சரியாகி வேலைக்கு போனால்தான் ஏதாவது வருமானம். கடன் கொடுப்பதாய் சொன்ன ஒன்றிரண்டு இடங்களிலும் கடைசி நேரத்தில் கை விரித்து விட்டார்கள். எங்க அம்மாவால் ஏதாவது கொடுத்து உதவ முடியுமா?

அம்மா அதற்குப் பதிலேதும் சொல்லாமல் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள்.

கரி அடுப்பில் கொதி வந்திருந்த காபியை இறக்கி ஒரு தம்பளரில் ஊற்றி தியாகுவின் அம்மாவிடம் கொடுத்தாள்.

வாசலில் நிழலாடியது. ரகு அண்ணா. அண்ணா பத்தாவது படிக்கிறான்.  ஸ்கூல் தான் கொஞ்சம் தூரம். ஒரு கிலோ மீட்டர் நடந்து போய், அங்கிருந்து பஸ்ஸில் ஒரு அரைமணி நேரம் போக வேண்டும். எத்தனை கஷ்டத்திலும் எங்கிருந்தாவது கடனை உடனை வாங்கி எங்களைப் படிக்க வைக்கிறார்கள். நிறைய நேரங்களில் ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாள் வரை எங்குமே பணத்தை புரட்ட முடியாமல் இருக்கும். பின் எங்கிருந்தாவது அம்மா பணத்தோடு வருவார். என்னைப் போல் இல்லை, அண்ணா நல்லாவே படிப்பான். பெரும்பாலும் முதல் ராங்குதான்.

அண்ணா வாசலில் உட்கார்ந்திருந்த தியாகுவின் அம்மாவைக் கடந்து உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தான். அந்தப் பழைய கட்டில் “கிரீச்” என்ற சத்தத்தோடு அவனை ஏற்றுக் கொண்டது.

நான் அண்ணாவின் முகத்தைப் பார்த்தேன். முகம் வாடிப் போய் இருந்தது.

“ஏம்மா, பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பரப்போ சாப்பிட ஏதாவது கொடுத்தனுப்ப மாட்டீங்களா?”

அப்போதுதான், வாசலில் நின்றிருந்த தங்கவேல் நாடாரை எல்லோருமே பார்த்தோம்.

அம்மா சற்றே பதற்றத்தோடு “ஏன் என்னாச்சுங்க நாடார்?” என்று கேட்டாள், உள்ளே எட்டி அண்ணாவின் வாடிய முகத்தைப் பார்த்தபடியே.

“இன்னிக்கி கடையை சீக்கிரமே அடைச்சுட்டு வீட்டுக்கு வந்திட்டிருந்தேன். கொஞ்சம் முன்னாடி நம்ம தம்பி போயிட்டு இருந்தாப்ல. என்ன தம்பி ஸ்கூல்ல இருந்தானு குரல் குடுத்தேன், திரும்பிப் பார்த்தாப்ல, உடனே மயக்கம் போட்டு விழுந்திட்டான். பக்கத்து கடைல இருந்து கலர் வாங்கிக் குடுத்து கூட்டியாரேன். பையனுக்கு ஏதாவது சாப்ட குடுங்கமா, நான் வரேன்” என்று நடையைக் கட்டினார் நாடார்.

“பார்த்தீங்கள்ல, இங்கியும் நெலமை அப்படி ஒண்ணும் சொல்றாப்ல இல்லம்மா,

காலைல பலகாரம் ஒண்ணும் பண்ணல, எதாச்சும் இருந்தாத்தானே பண்ண, வெறும் பாலைக் குடிச்சுட்டு போன பிள்ளை. இப்படி வந்து நிக்கிறான். இவங்க அப்பாவும் மில்லு வேலைல அப்பப்போ ‘லே ஆஃப்’ னு சொல்லி வீட்ல தான் குத்த வைச்சிகினு இருக்காரு. பசங்க படிப்புக்கு அது இதுன்னு வாங்கன கடனுக்கு வட்டி கேட்டு நேத்துக் கூட சொக்கலிங்கம் செட்டியார் வந்து வாசல்ல நின்னு கத்திட்டு போனாரு. இந்தத் தங்கவேல் நாடாருக்கு கூட குடுக்கவேண்டிய இந்த மாச வட்டிப் பணத்தை இன்னும் தரல. அவரே நிலமையை பார்த்து கேட்காம போறாரு.”

“சரிங்கமா நான் கெளம்பறேன், வேற எங்கியாச்சும் கேட்டுப் பார்க்கிறேன். எப்பதான் நம்ம நெலைமெல்லாம் சரியாவுமோ” என்று சொல்லியவாறு தியாகுவின் அம்மா படியிறங்கிப் போனாள்.

உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தேன். கண்கள் கலங்கி இருந்தன.

“ஏம்மா அழற?”  என்றேன்.

 

“இப்ப வந்துட்டு போனாங்கல்ல, தியாகுவோட அம்மா, ஒரு வகைல நம்ம தூரத்து சொந்தம்தான், ஒரு ஆபத்து அவசரத்துக்கு கூட உதவி பண்ண முடியாத அளவுலதான் நம்ம நிலைமையும் கிடக்கு.  சரி சரி, நீ படிக்கிற வேலையை பாரு” என்று சொல்லியவாறே அண்ணாவைக்  கவனிக்கப் போனாள் அம்மா.

கை முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தேன். நண்பன் ஏற்கெனவே ஆர்டர் செய்து வந்திருந்த காபியை குடிக்க ஆரம்பித்தேன். அவன் கண்களில் அந்த துடிப்பு இருந்த மாதிரி தெரியவில்லை. இத்தனை வருடத்தில் அது சரியாகக் கூட போயிருக்கலாம்.  ஆனால் அவனிடத்தில் எந்த வித சலனமும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையிலேயே அவன் தியாகுதான் என்று தெரிந்தாலும் நான் செய்யக்கூடியது அல்லது செய்ய வேண்டியதுதான் என்ன? தியாகு மாதிரி ஒருத்தனைப் பார்த்தேன் என்று அம்மாவிடம் சொன்னால் என்ன சொல்லுவாள்? ‘விசாரிச்சு காசு ஏதாவது கொடுத்துட்டு வந்திருக்கலாமில்ல’ என்பாளோ? பாக்கெட்டில் இருப்பதோ அம்பது ரூபாய்தான். காபி பில் நண்பன் கொடுக்கும் பட்சத்தில், வீட்டுக்கு போக பஸ்ஸுக்கு தேவைப்படும் பணம், மீதி எவ்வளவு கொடுக்க முடியும் என்றெல்லாம் மனதில் கணக்கிட்டு கொண்டிருந்தேன்.

சட்டென்று தியாகுவின் அம்மா வந்த அன்று அம்மா இருந்த இடத்தில் நான் நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது.

“போலாமா” என்று கேட்டபடி எழுந்து, பில் பணம் செலுத்த கல்லாவை நோக்கி போன நண்பனை பின்தொடர்ந்து, ஹோட்டலை விட்டு வெளியில் வந்து, பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

*

Contact : Naan Rajamagal
*

நன்றி : செல்வராஜ் ஜெகதீசன் , கானல் அமீரகம் & ஆசிப் மீரான்

டியூசன் (சிறுகதை) – பூந்தை ஹாஜா

ஒட்டக மனிதர்கள்‘சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு கதை , ரெண்டு கிலோ இறைச்சியுடன்!

*

டியூசன்  – பூந்தை ஹாஜா

எங்கள் ஊர், அழகான  வயல்வெளிகள், திண்ணை வீடுகள், மரத்தடி, குளம், கோயில், பள்ளிவாசல்கள், கிறிஸ்துவ ஆலயங்கள்,  இவற்றுடன் ஆறு மற்றும் மண் மணக்கும் விளையாட்டுகள், மற்றும் பல விவசாய உழைப்பாளிகள், கல்விமான்களை பெற்றெடுத்து, அனைத்து வளத்தையும், வற்றாத நன் நீரூற்றைத் தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி.

உயர்ந்த சாதியினர்,  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள்  அனைவரும் சாதி மத பேதமின்றி அடிப்படைக் கல்வி கற்கும் பள்ளிக்கூடத்தில் பயின்று வந்தோம்.

நாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தின் எதிர் வீட்டில் குடியிருக்கும் பார்வதி அய்யர் டீச்சர் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் பார்வதி டீச்சரிடம் டியூசன் படித்து வந்தோம். பள்ளி விடுமுறை நாட்களில் டியூசன் வகுப்புகள் மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரையிலும் நடைபெறும். அன்று வெள்ளிக்கிழமை பள்ளி விடுமுறையானதால் வழக்கம்போல் வீட்டில் சமைத்திருந்த  மதிய உணவை சாப்பிட்டுவிட்டு நானும் என் அக்காவும் டியூசன் வகுப்புக்குச் சென்றோம் டியூசனில் எங்கள் கூட படிக்கும் பிள்ளைகளும் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தனர். டீச்சருக்கு வணக்கத்தினைத் தெரிவித்துவிட்டு டீச்சர் உட்கார்ந்திருந்த நாற்காலியைக் கடந்து எங்கள் இடத்தில் போய் அமர்ந்தோம்.

உட்கார்ந்தவுடன் எங்கள் இருவரையும் அழைத்து.. “இறைச்சி சாப்பிட்டா வந்தீங்க..” என்று கேட்ட டீச்சரிடம் “ஆம்” என்ற பதிலைத் தந்த மாத்திரத்திலேயே “நீங்கள் இன்று டியூசனில் இருக்க வேண்டாம்.. வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வாங்க…” என்று கோபத்துடன் கூறியதை கேட்டதும் செய்வதறியாது டீயுசன் வகுப்பை விட்டுப் பதட்டத்துடன் வீட்டை நோக்கி நடந்தோம்.

நடந்துக்கொண்டே “ஏன்க்கா.. இறைச்சி சாப்பிட்டா டீச்சருக்கு பிடிக்காதா..” என்று கேட்ட என்னிடம்

“ஆமா பிடிக்காது…. அம்மாட்ட சாப்பிடும் போதே கேட்டேன்.. அம்மா சொன்னாங்க மாட்டிறைச்சின்னு சொன்னாங்க. அதைத்தான் நாம சாப்பிட்டு டியுசனுக்கு போனாம். அது பிடிக்காமத்தான் நம்மளை திருப்பி அனுப்பிட்டாங்க..”

“நாம சாப்பிட்டது டீச்சருக்கு எப்படிக்கா தெரிஞ்சுச்சு…” என்று ஒன்னும் புரியாதவனாய் கேட்டான். அதற்கு பதில் சொல்லத் தெரியாதவளாய் என் அக்கா சென்று கொண்டிருக்க நானும் பின் தொடர்ந்தேன்.

“அப்பா கேட்டா என்ன சொல்லப்போற..” என்று நான் அக்காவைப் பார்த்துக் கேட்டேன். அக்காவிடம் பதில் இல்லாததால் எதுவும் பேசாமலேயே வீடு வந்து சேர்ந்தோம்.

டீயுசன் கிளாஸில் இருந்து பாதியிலேயே வீடு திரும்பிய என்னையும் என் அக்காவையும் கண்ட என் தந்தை காரணம் தெரியாமல் எங்கள் மேல் கோபப்பட்டார்..

“ஏன்.. என்னாச்சு.. பாதியிலேயே வந்தீட்டங்க..” என்ற என் தந்தையின் கடினக் குரலால் நாங்கள் சற்று தடுமாறித்தான் போனாம். நாங்கள் ஏன் திருப்பி அனுப்பப்பட்டோம் என்ற தகவலை என் தந்தையிடம் கூறினேன். உடனே என் தந்தை வெற்றியிலையில் சுண்ணாம்பு தடவி லெட்சுமி சீவல் வைத்து மடித்து என் வாயிலும் என் அக்கா வாயிலும் மெல்லச்சொன்னார்.  நாங்கள் நண்கு மென்ற பிறகு முதலில் வந்த சிவந்த எச்சிலை துப்பச்சொன்னார். பிறகு சில துளிகள் மென்ற பிறகு அதனை துப்பச் சொல்லிவிட்டு வாய் நன்றாக கொப்பளிக்கச் சொல்லி, நாங்கள் என் தந்தை சொன்னதை செய்து முடித்ததும், மேலும் இறைச்சி வாசல் வெளியே தெரியாத வகையில் எங்கள் அம்மா எங்களுக்கு ஃபான்ஸ் பவுண்டரை உடலில் நன்றாக தேய்த்து மறுபடியும் எங்களை டியூசன் கிளாஸ்க்கு போகச் சொன்னார்.

டியூசன் வகுப்பை நோக்கி நடந்தோம். “வெத்திலை சீவல் போட்டா அந்த வாசம் போயிடுமா அக்கா…” என்றேன்.

“ஆமா… இப்ப நாம ரெண்டுபேருக்கும் இறைச்சி வாசனை போயிடுச்சு..” இப்ப டீச்சர் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. என்று சொல்லிக்கொண்டே டியூசன் வந்து சோர்ந்தோம்.. திண்ணையில் டியூசன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எங்கள் இருவறையும் கண்டதும் கோபத்துடன் பார்த்த டீச்சரிடம் எங்கள் தந்தை வெற்றிலை பாக்கு போட்டு விட்டதை சொன்ன பிறகு எங்களை அமரச் சொல்லிவிட்டு….

“இப்ப நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க.. இனிமேல் யாரும் இறைச்சி சாப்பினுட்டு டீயுசனுக்கு வரக்கூடாது.  இறைச்சி சாப்பிடுவது மகா பாவம்… என்று கோபமாகக் கூறினார்.  டியூசனில் இருந்த அத்தனை பேரும் “சரிங்க டீச்சர்” என்று சொல்லிவிட்டு டீச்சர் நடத்திய பாடத்தினைப் படிக்க ஆரம்பித்தோம்.  டியூசன் வகுப்பு முடிய இன்னும் அரை மணி நேரம் இருக்கின்றது என்பதனை அங்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் காட்டித் தந்தது.

வீட்டின் முன்பு ‘’அய்யா… அய்யா. ‘’. என்ற குரல் கேட்டு பாடம் நடத்திக் கொண்டிருந்த பார்வதி டீச்சர்… ”செத்த இருங்கே.. அப்பாவை கூப்பிடுறேன்… ’’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே  சென்று தன் அப்பாவை அழைத்து வந்தார்.

“யாரப்பா அது…” என்று கேட்டுக்கொண்டே வந்தார் பார்வதி டீச்சரின் அப்பா.

“அய்யா.. மாடு இருக்குன்னு என் மனைவி சொன்னுச்சு.. அத புடுச்சுட்டு போலாம்னு வந்தோமுங்க..” மாடு பிடிக்க வந்த அண்ணாமலையின் மனைவி, பார்வதி டீச்சர் வீட்டில் உள்ள மாடுகளுக்கு  வைக்கோல் வைப்பதும், மற்றும் சில சமயங்களில் புல் கொண்டுவருவதும் மேலும் மாடு கட்டப்பட்டிருக்கும் கொட்டகையை சுத்தம் செய்யும் வேலையைத்தான் செய்துவந்தார். பால் கறப்பது பார்வதியின் அம்மாவும் சில சமயங்கலில் பார்வதியும் கறந்து வந்தனர். மாடு பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் சரிவர தீனியையும் உணவாக எடுத்துக்கொள்ளாமல் நாளுக்கு நாள் ரொம்பவும் மெலிந்து கொண்டே வந்தது. இனி  இந்த மாட்டை  வைத்திருந்தால் செத்துப் போகும் என்று நினைத்து மாட்டைக் கொடுத்து விட முன்வந்தார் பார்வதியின் அப்பா.

“ஆமாமா.. செத்த இப்படிக்கு சந்து வழியா வாங்கோ..” என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார். மாடு பிடிக்க வந்தவர்கள் வீட்டின் சந்தின் வழியே மாடு கட்டப்பட்டிருக்கும் வீட்டின் பின்புறத்திற்கு சென்றனர்.

“ஏண்டா.. அந்த மாட்ட அவாள்ட கொடுக்குறீயே.. அது பாவம்டா.. அவா அத அறுத்து சாப்பிட்டுடுவாடா…” என்று பார்வதியின் தாத்தா தன் அப்பாவிடம் சொன்னதைக் கேட்டுக்கொண்டே திண்ணையில்  பார்வதி டீச்சர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

“நோக்கு ஒன்னும் புரியறது இல்ல.. மாடு வர வரச் சரியில்லை.. அது செத்து போனாலும் போகும்.. அவாள் அதை அழைச்சிண்டு போய்ட்டா சேமமா இருக்கும்.. நீங்க செத்த சும்மா இருங்கோ…”   என்று சற்று கனத்த குரலுடன் கூறினார்.

“அந்த மாடு இத்தன நாளா நமக்கு பால் கொடுத்திண்டு இருந்துது.. இப்ப அதுக்கு உடம்பு சரியில்ல. அதனால பால் கொடுக்கல.. அதை போய் அவாகிட்டே கொடுக்கிறே.. மகா பாவம்டா..”

“எது பாவம்கிறேள்.. அந்த மாடு செத்துப் போனாத்தான் மகா பாவம். மாடு கொடுக்குற பால நாம குடிச்சிண்டு வந்தோம். அதே மாடு செத்துப் போச்சுன்னா இவாட்டத்தான் தூக்கிண்டு போகச்  சொல்வோம். மாட்டை தூக்கிண்டு போய் ஆத்தங்கரை ஓரமா,  இல்ல வயக்காட்டு ஓரமா போட்டு, மாட்டுத் தோலை உறிச்சுண்டு, மாட்டை அப்படியே போட்டுட்டுப்  போய்டுவா.  அது அங்கேயே கிடந்து நாத்தம் அடிக்கும். அந்த வழியா போறவா எல்லாம் நம்மள சபிச்சுண்டே போவா.. இது நமக்கு தேவையான்னேன்.. மாட்டை நாம அறுத்தும் சாப்பிடல. காசுக்கும் விக்கல. இப்ப அவாளிண்ட மாட்ட தானமாக கொடுத்துட்டேன்.  மாட்டை நாம சாப்பிட்டாத்தான் பாவம்.. அத அவா  அறுத்து சாப்பிட்டா பாவம் ஒன்னும் இல்லேன்னு நேக்கு தோண்றது… ஏன்னா.. அந்த மாடு நமக்கு பாலை கொடுத்து பயனா இருந்துச்சு.. அவாளுக்கு தன் இறைச்சியை கொடுத்து பயனா இருக்கப்போவுது. கிர்யசூத்திரா, தர்மசூத்திரா போன்ற பிராமண வேத நூல்களும் விலங்கினங்களை பலியிடுவதையும், மாட்டிறைச்சி உண்பதையும் அங்கீகரிச்சிருக்கு. ஆனாலும் நம்ம பெரியவாள் எல்லாம் இறைச்சியை சாப்பிடக் கூடாதுன்னு நமக்குச் சொன்னதால நாம சாப்பிடுறதை விட்டுட்டோம்.  இவா இறைச்சியை சாப்பிடறா. அதுக்கு இவாளோட வேதம் ஒண்ணும் தடை சொல்லலையே. இந்த லோகத்துல உள்ள பலரும் மாட்டு இறைச்சியை சாப்பிடறாளே.  மேல் நாடுகளில் எல்லாம் மாட்டு இறைச்சியை தொடர்ந்து சாப்பிடறா. நம்ம நாட்டுலேர்ந்து மாட்டு இறைச்சிய ஏற்றுமதி பண்றா. அதுல காளை மாடா, பசுவான்னு நாம பார்த்துண்டா இருக்கோம்..  இந்த மாட்டை பிடிச்சுண்டு போறானே அந்த அண்ணாமலையோட ஆத்துக்காரி நம்ம வீட்டுலதான் வேலை பாக்கிறா.. அவதான் மாட்ட நல்லா கவனிச்சுக்குறா.. சுத்த பத்தமா வேலை பார்க்கறா. பால நாம சாப்பிட்டோம், இத்தனை நாளா அதற்கு சோறு போட்ட அவள் இறைச்சியை சாப்பிடட்டும். அதுதான் மனு தர்மம். அவாளணட கொடுக்கறது ஒன்னும் நேக்கு தப்பா தோனலை. மாடு செத்து போன பிறகு தூக்கிண்ட்டு போகச் சொன்னாத்தான் பாவம்.  அவாளும் மனுஷா தானே. பொணத்த தூக்கிண்ட்டு போறதுக்கு மட்டும் அவாள பயன்படுத்துறதுதான் நேக்கு தப்பா தோண்றது..’’ என்று  தன் அப்பாவிடம் சொல்லிவிட்டு மாடு கட்டப்பட்டிருக்கும் வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றார். வீட்டின் சந்து வழியாக வந்தவர்களிடம் மாட்டை கொடுத்து விட்டு வீட்டின் உள்ளே வந்தார்..

“நேக்கு.. நீ சொய்றது பிடிக்கலடா…” என்று சொன்ன தன் அப்பாவிடம் எந்த பதிலும் சொல்லாமல் வீட்டின் தாழ்வாரத்தில் உள்ள சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார். பார்வதியின் அம்மா அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

சந்து வழியாக மாட்டை பிடித்துக்கொண்டு வந்தவர்கள்.. “அப்ப நாங்க வரேங்க சாமி…” என்று வீட்டின் முன்புறம் நின்று சொல்லிவிட்டு “மாடு ரொம்ப டேஞ்சரா இருக்கு.. ரொம்ப நாளைக்கு தாங்காது..  நாளைக்கே  அறுத்துடுவோம்டா..  ..” என்று கூட வந்தவனிடம் சொல்லிக்கொண்டே சென்றான்..

இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதி டீச்சர் எங்களை இரக்கத்துடன் பார்ப்பது எங்களுக்கு தெரிந்தது.  அது எதனால் என்ற புரியாத வயதில்  நாங்கள் இருந்ததால் பார்வதி டீச்சரை பார்த்து நாங்களும் புன்னகைத்தோம்.

*

Contact : Naan Rajamagal
*

நன்றி : ஹாஜா மைதீன், கானல் அமீரகம் & ஆசிப் மீரான்

முள்ளம்பன்றிகளின் விடுதி – அய்யனார் விஸ்வநாத்

அமீரகத்தின் தாஸ்தோ-விஸ்கியும் சென்றவருடம் சிறந்த படைப்பாசிரியர் விருது பெற்றவருமான எங்கள் அய்யனார் விஸ்வநாத் எழுதிய விஞ்ஞானப் புனைவு இது. தலைப்பு தந்த போதையில் இதையே அமீரகச் சிறுகதைகள் தொகுப்பிற்கு டைட்டிலாக வைக்கலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தார்கள். அப்புறம் ஒருவழியாகத் தெளிந்து, ஒன்றுமில்லாத ஒட்டகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். அவருடைய வலைப்பக்கத்தில் இந்தக் கதையை முழுசாகப் பகிர்ந்திருக்கிறார். ஆனாலும் நாமும் இங்கே கொஞ்சம் போடலாமே, அவருக்குப் பிடித்த ‘தெலுஸா மனஸா‘ பாடலைக் கேட்டுக்கொண்டே. தேங்க்ஸ் அய்ஸ்! – AB

முள்ளம்பன்றிகளின் விடுதிஅய்யனார் விஸ்வநாத்

லீமா இன்றைக்குள் உறுதிபடுத்தச் சொன்னாள். நாங்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் எண்பதாவது தளத்தில் இருக்கும் பறக்கும் கார் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தோம். இருவரின் அலுவலகத்திற்கும் எதிரெதிர் திசையில் பயணிக்க வேண்டும். லீமா அவளது அலுவலகப் பறக்கும் காரில் ஏறியபடியே மீண்டும் சைகையில் நினைவூட்டினாள். காலை ஏழு மணி ஆகியிருந்தது. இந்த உயரத்திலிருந்து பார்க்கும் போது கீழேயும் மேலேயும் வெறும் புகைமூட்டமே சூழ்ந்திருந்தது. வானம் பூமி இரண்டுமே அற்பக் கற்பனைகளாகத் தோன்றின. தொலைவில் இருந்த நூறு மாடிக் கட்டிடங்கள் லேசாய் தென்பட்டன. சூரியன் எப்போதாவது வரும். வெளிச்சத்தைப் பார்த்தே நாட்களாகின்றன. சூரிய ஒளிக்கதிரின் மினுமினுப்பு நினைவிற்கு வந்தது. உடன் மிளாவின் நினைவும். அவசரமாய் தலையை உலுக்கிக் கொண்டேன். மிளாவின் நினைப்பு வரவே கூடாது. என் அலுவலகப் பறக்கும் கார் வந்தது ஏறிக் கொண்டேன்.

இரண்டரை நிமிடம். அலுவலகத்தின் என் அறைக்குள் இறங்கினேன். இன்றைக்காவது நியூரோ சர்ஜனை சந்தித்து விட வேண்டும். லீமா குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை எப்போது சொன்னாளோ அன்றிலிருந்தே தமிழ் பேசும் நியூரோ சர்ஜனை தேடிக் கொண்டிருந்தேன். நளன் என்கிற ஒரு மருத்துவர் கிடைத்தார். ஆனால் சந்திக்கத்தான் முடியவில்லை. இன்று கிடைத்திருக்கிறது. காலைப் பதினோரு மணிக்கு சந்திக்க வேண்டும். அவரின் அலுவலகத்தை அலைபேசியில் பார்த்துக் கொண்டேன். வாகனத்தை முன்பதிவு செய்தேன். வேலையில் விழுந்தேன்.

பத்து ஐம்பதிற்கு வாகனம் சன்னலுக்காய் வந்தது. சன்னலைத் திறந்து கொண்டு ஏறினேன். ஐம்பத்தேழிற்கு மருத்துவமனை வரவேற்பரையில் இறங்கிக் கொண்டேன். பதினோரு மணிக்கு உள்ளே அழைக்கப்பட்டேன். மருத்துவர் நளன் எழுந்து கைக்குலுக்கினார். தமிழ் பேசுபவர் என அறிந்ததும் மகிழ்ந்ததாகச் சொன்னார். நல்ல தமிழில் பேசினார்.
எனக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. மிளாவிலிருந்து தொடங்குவது சரியாக இருக்குமென நினைத்து எங்களின் முதல் சந்திப்பிலிருந்து ஆரம்பித்தேன்.

”முள்ளம்பன்றி விடுதியில்தான் நாங்கள் முதலில் சந்தித்துக் கொண்டோம். அங்கு வைத்தா? என்றால், இல்லை. அதற்கு முன்பும் பார்த்திருக்கிறோம். அவசரத் தீண்டல்கள், காதலின் தீவிர தாப சமிக்ஞைகள் எல்லாமும் முன்பே இருந்தன. ஏன், இந்த விடுதிக்கு வரும் வரும் வழியில் கூட காரில் ஓட்டுனர் அசந்த நேரம் பார்த்து அடிக்கடி முத்தமிட்டுக் கொண்டோம். வழியில் ஓர் உணவகத்தில் உணவருந்திவிட்டு, வெளியே வருகையில் கிடைத்த யாருமில்லா கணமொன்றில் கூட அவளைப் பின்புறமாய் அணைத்துக் கொண்டு அவளின் மீதிருந்தப் பித்தைச் சொன்னேன். ஆனாலும் விடுதியில்தான் முதல் சந்திப்பெனக் கூறுவேன். இரு உடல்களின் ஆரத் தழுவுதலே உயிரின், ஆன்மாவின் முதல் சந்திப்பாக இருக்க முடியுமல்லாவா, அது இங்குதான் நிகழ்ந்தது. இந்த முள்ளம் பன்றி விடுதி, கடல் மட்டத்திலிருந்து எத்தனையோ ஆயிர அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மேற்கு மலைத் தொடர்களின் அசல் வசீகரத்தை நாங்கள் தங்கியிருந்த அறையின் விஸ்தாரமான பால்கனியிலிருந்து பார்க்க முடியும். பூச்சிகளின் அடர் பின்னணி இசையோடு இரவு முழுக்க குளிரில் நடுங்கியபடியே அந்தப் பால்கனியில் உடல்கள் புதைந்து கிடந்தோம். அறைக்குள் சென்றால் அனுமதியற்றப் படுக்கைகளை கண்காணிக்கும் கேமிராவிற்குள் விழுந்துவிடுவோம் எனப் பயந்ததை விட தூங்கிவிடுவோமே என்றுதான் அதிகம் பயந்தோம். எங்களுக்கே எங்களுக்காய் அந்த அடர் இருள், குளிர் இரவு இருந்தது. நாங்களும் அதனோடு இருந்தோம். “

பேச்சைத் தொடரமுடியவில்லை. மூச்சை ஆழமாய் இழுத்து விட்டுக் கொண்டேன். என் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நளன் எழுந்து நின்றான்.

”ஏதாவது அருந்துகிறீர்களா?”

”தேநீர்” என்றேன்.

நளன் கதவிற்காய் மெல்ல நடந்துபோய் அதன் பக்கவாட்டில் இருப்பதே தெரியாமல் இருந்த தொடுதிரையை உயிர்ப்பித்து தேநீருக்குச் சொன்னான்.

திரும்பி வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு

“பிறகு?” என்றான்.

”அடுத்த நாள் திரும்பிவிடுவதுதான் திட்டம். எனவேதான் ஒவ்வொரு நொடியையும் எங்களுக்கானதாய் பாதுகாத்தோம். ஆனால் எங்களால் எங்களிடமிருந்து மீளமுடியவில்லை. நகரத்தில் காத்துக் கிடக்கும் எங்களின் தனித்தனி சொந்த அழுத்தங்கள், வேலைகள், நிர்பந்தங்கள் யாவும் மறந்து போயின. என் நாற்பது வருட வாழ்வில் முதன்முறையாய், இந்த வாழ்வு என்னுடையது, எனக்குப் பிடித்தபடி இருப்பதில் என்ன தவறு எனத் தோன்றியது. அடுத்த நொடியே அவளும் இதை ஆமோதித்தாள். இது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் கடந்த மூன்று மாதங்களாக இப்படித்தான் நடக்கிறது. எனக்குத் தோன்றுவது எல்லாமே அவள் காண விரும்பியது. அவள் விரும்புவது எல்லாமும் என் அத்தனை வருடக் கனவாய் இருந்தது. இந்த அபாரமான சங்கமத்தின் ஆச்சரியக் கரைகளைக் காணவே இந்த விடுதிக்கு வந்திருந்தோம். அவள் இதற்கு ஒரு பெயர் வைத்திருந்தாள். ’சோல்மேட்ஸ்’. இந்த வார்த்தையைச் சொல்லிவிட்டு கூடவே ”இது ஆன்மாவின் இணைப்பு. நீயும் நானும் வெறும் நண்பர்களல்ல, காதலர்களுமல்ல; சோல்மேட்ஸ். இப்படி எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதுதான் விதி.” எனச் சொல்லியபடியே என்னில் இன்னும் அழுந்தப் புதைந்து கொள்வாள். நான்கு நாட்கள் அங்கிருந்தோம். மூன்று நாட்கள்தாம் ஆனதாய் நினைத்துக் கொண்டிருந்ததுதான் விநோதம். விடுதியறையை காலி செய்யும்போதுதான் தேதியைப் பார்த்தோம். எங்களைத் தனித்தனியாய் விழுங்கக் காத்திருக்கும் கடமையெனும் திறந்தவாய் முதலைகளை நினைத்து அப்போதுதான் பயமே எழுந்தது. இருவரும் சில்லிட்ட உள்ளங்கைகளைப் பிணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி, நகரம் வந்தடைந்தோம்.”

அறைக்கதவு திறந்தது. மேற்சட்டை அணிந்திராத ஒரு நாயர் இரண்டு கண்ணாடிக் குவளைகளில் தேநீர் கொண்டு வந்து தந்தார்.

”இது ஸோரோ”

என அறிமுகப்படுத்தியபடியே அந்த நாயரின் தலைக்காய் நளன் கையை அசைத்தான். அவருக்கு மேற் சட்டை வந்தது.
ஸோரோ அவசரமாய் பேசியது,

”மன்னித்துக் கொள்ளுங்கள், பக்கத்து அறை அஜிதனுக்கு தேநீர் கொண்டு சென்றேன். அவருக்கு எல்லாவற்றிலும் நீரில் மூழ்கிப் போன அவரின் கேரளம் இருந்தாக வேண்டும். உங்கள் அறைக்கு வரும்போது தவறுதலாக அப்படியே வந்துட்டேன். உடனே சரி செய்து விடுகிறேன்”

என்றபடியே ஸோரோ தன் வலது கண்ணைத் தொட்டது. நீலநிறத் தொடுதிரை அதன் முன்னால் உயிர்த்தது. எண்ணற்ற அல்கரிதம்கள் அந்த அறையில் மிதந்தன. ஸோரோ ஒன்றை அழுத்தித் திருத்தியது. பிறகு கண்ணை மூடிக் கொண்டது
நளன் புன்னகைத்தான்.

ஸோரோ வெளியேறியது.

எல்லாவற்றையும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு வெள்ளை நிற அறை. எதிரெதிரே இருந்த இரண்டு மர இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம். அறையில் வேறெந்தப் பொருளுமில்லை. உரையாடலை ஆரம்பிக்கும்பொழுது என் பின்னங் கழுத்தில் சின்னஞ்சிறு குமிழொன்றை நளன் பொருத்தினான். இது உறுத்தாது, நம் உரையாடலையும் உங்கள் மன உணர்வையும் வெறுமனே பதிவு மட்டும் செய்யும். நம்முடைய சிகிச்சைக்கு அத்தியாவசியமானது எனச் சொல்லியிருந்தான். அந்த சாதனத்தை வைத்த உணர்வு கூட எனக்குத் தோன்றவில்லை.

”சொல்லுங்க”

நளன் என் கவனத்தைத் திருப்பினான். தொடர்ந்தேன்,

“இருவரும் எங்கள் தினசரிகளுக்கு வந்து சேர்ந்தோம். கடந்து போன நான்கு நாட்களுக்கான கேள்விகளைச் சமாளித்தோம். அதற்கு அடுத்த நாள் இயல்பான நாளாக மாறிப்போனது. நம்மைச் சுற்றி உள்ள உலகத்தில் நாம் இல்லை என்றால் அது இயங்காது என எண்ணியது எத்தனை முட்டாள்தனம் எனப் புரிந்தது. எங்களின் உலகங்களை அவ்வப்போது துண்டித்துக் கொண்டோம். எந்த பயமும் இல்லாமல் அடுத்தடுத்து சந்தித்துக் கொண்டோம்.

மலைகள்தாம் எங்களை ஈர்த்தன. குறிப்பாக மேற்கு மலைத் தொடர். மனிதர்கள் போக முடிந்த எல்லை வரை போனோம். காலம், அகாலம் என இலக்கில்லாமல் அதன் மடியில் விழுந்து புரண்டு எழுந்தோம். ஒவ்வொரு பயண முடிவிலும் அவ்வளவு புதிதாய் மலைகளிலிருந்து கீழே இறங்கினோம். அடுத்த முறையோ இன்னும் ஆசையாய் மலைகளின் மீதேறினோம். எங்களுக்கு இயற்கை மீதான அச்சம் இல்லாமல் இருந்தது. வனத்தின் ரகசிய இடங்களைத் தேடித் தேடி அலைந்தோம். மலையருவிகளை, ஓடைகளைத் தொடர்ந்து போய் அதன் ரகசிய ஊற்றுக்களை அறிந்தோம். பகலே எங்களின் கொண்டாட்டப் பொழுது. அடர் வனங்களில், மரச்சரிவுகளில் சூரிய ஒளி அவ்வளவு ஆசையாய் ஊடுறுவும். வெளிச்சமிருந்தாலே மகிழ்ச்சிதான். அதன் உதவியுடன் மலைத்தாயின் ரகசிய அடுக்குகளை கண்டறிந்து, அதன் இடுக்குகளில் எங்களைப் புதைத்தபடி கலவி கொண்டோம். விலங்குகள், பாம்புகள், பூச்சிகள், பள்ளத்தாக்குகள், சரிவுகள், கடும் மழை, கொடுங்குளிர் என இயற்கையின் எந்த ஒரு வடிவமும் எங்களைத் தொந்தரவு செய்யவில்லை. இரவில் மட்டும் எங்காவது அடைந்து கொள்வோம். அந்த சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு கானக விலங்கின் இரையாவது குறித்தும் எங்களுக்கு சம்மதமிருந்தது. ஒரு பசித்த புலிக்கு எங்களைத் தின்னக் கொடுக்கவும் தயாராக இருந்தோம். எனவே இயற்கையின் அகண்ட பேரதிசயங்களில் முழுமையாய் திளைத்துக் கிடந்தோம்.

மலைகளையும் காடுகளையும் தவிர்த்து புராதன இடங்களைக் காணுவதிலும் எங்களுக்கு ஆர்வம் இருந்தது. இயற்கைச் சீற்றங்களால் முற்றிலும் அழிந்து போன தமிழ்நாட்டின் எச்சங்களை அடிக்கடி போய் பார்த்து வருவோம். புத்தகங்கள் வழியாய் அறிந்திருந்த நகரங்களின் எச்சங்களைத் தேடுவோம். உடைந்து விழுந்து கிடக்கும் கோபுரங்கள், சிதைந்த கோவில்கள், சரிந்த மலைகள் என எல்லாவற்றையும் தேடித் தேடிப் பார்ப்போம். அதெப்படி ஒரே இரவில் தமிழ்நாட்டின் அத்தனை வீடுகளும் மண்ணிற்குள் புதைந்தன என ஆச்சரியமாய் பேசிக் கொள்வோம். மரங்களோ பறவைகளோ வேறு எந்த உயிரினங்களோ இல்லாத பிரதேசத்தை பார்ப்பதும் விநோதமானதுதான். எங்களுக்கு இந்த மாதிரியான சாகசங்களும் பிடித்திருந்தன.”

நளன் ஆச்சரியமாய் கேட்டான்.

“தமிழ் நாட்டிற்குள் செல்ல எப்படி அனுமதி வாங்கினீர்கள்? அதன் எல்லைகள்தாம் அடைக்கப்பட்டிருக்கின்றனவே!”

மேலும் வாசிக்க : https://ayyanaarv.blogspot.com/2019/06/blog-post.html

*

Thanks : Ayyanar

« Older entries Newer entries »