மாடசாமி மைனி (சிறுகதை) – முஹம்மது யூசுப்

‘ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுதியில் இருந்து பிரபல நாவலாசிரியர் முஹம்மது யூசுப் (அப்படித்தான் போடச் சொன்னார்!) எழுதிய சிறந்த சிறுகதை, நன்றியுடன்…

*

மாடசாமி மைனி – முஹம்மது யூசுப்

அண்ணா நகரில் இலவச தையல் மெஷின் வழங்கும் விழா நடந்த நான்காவது நாள், அறிமுகம் இல்லாத டூ வீலர் சீட் கவர் தைக்கும் கடைக்காரனை அழைத்துக் கொண்டு, நண்பன் கூறினான் என்ற ஒரே காரணத்திற்காக டூவிபுரம் சென்றான் ரவி.

“ அது வேற தையல் மெஷின், சீட் கவர் தைக்கிறது வேற தையல் மெஷின், தெரியும்ல “ என்றான் சீட் கவர் தைக்கும் கடைக்காரன் வண்டியை ஓட்டியபடி கூற

“ தெரியும் தெரியும், விக்கப்போற மாடசாமி யாருன்னு எனக்கே தெரியாது. மொதல்ல அவனைப் போய் பார்ப்போம். அப்புறமா முடிவு பண்ணலாம். அவன் என்ன தையல் மெஷின் விக்கிறதா சொன்னான்னு “

“ இல்ல, எனக்கு நிறைய வேலை கிடக்குது. எல்லாத்தையும் விட்டுட்டு வாரேன் “

“ நாங்க மட்டும் என்ன ஊர் சுத்திட்டா திரியுறோம். ஃப்ரண்டு போன் செஞ்சு மாடசாமிக்கு ஹெல்ப் பண்ணுன்னு சொன்னான். அதான் உங்களை கூட்டிட்டு போறேன். உங்களுக்கு இஷ்டமில்லைன்னா வேற ஆளை கூட்டிட்டு போவேன் “ என்று ரவி கொஞ்சம் காட்டமாக கூறியதும் எதிராளியிடம் இருந்து சத்தத்தைக் காணோம்.

மாடசாமி என்பவரிடம் இலவசமாக கிடைத்த இரண்டு புதிய சீட் கவர் தைக்க உதவும் தையல் மெஷின் இருப்பதாகவும் அதை விற்று தந்தால் பெரிய உதவியாக இருக்கும் என கூறியதாக ரவியின் நண்பன் கூற “ சரி உதவி செய்யலாமே “ என்ற நோக்கில் பாத்திமா சீட்கவர் வொர்க்ஸ் சாஜஹானை அழைத்துக் கொண்டு மாடசாமியைத் தேடி டூவிபுரம் எட்டாவது தெருவில் நுழைந்து, கண்ணில் பட்ட பலசரக்கு கடை வாசலில் வண்டியை நிறுத்தி

“ இங்க தையல்காரர் மாடசாமி வீடு எங்க இருக்கு “ என கேட்க

“ இங்க இருந்து அஞ்சாவது வீடு “ என்றார் கத்திரிக்காயை தராசில் இட்ட வண்ணம் கடைக்காரர்.

அஞ்சாவது வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி வாசல் கதவருகில்  சென்று காலிங் பெல்லைத் தேடியபடி “ மாடசாமி அண்ணே மாடசாமி அண்ணே “ என்றான் ரவி சற்று சத்தமாக

உள்ளே இருந்து ஒரு பெண் வந்தார். “ என்ன வேணும் “

“ மாடசாமி அண்ணன பாக்கணும் “

“ நான் தான் மாடசாமி சொல்லுங்க “ என்றார் அந்த பெண்.

திரு திருவென முழித்து விட்டு “ தையல் மெஷின் விக்கனும்ன்னு கணேஷ் கிட்ட சொன்னதா கணேஷ் சொன்னான். அதான் ஆளை கூட்டிட்டு வந்தேன். இவரு சாஜஹான், ரெக்சீன் சீட் கடை வச்சிருக்கார் “

“ ஒ   நான் தான் சொன்னேன், கணேஷ்க்கு  நீங்க என்ன வேணும் “

“ என் ஃபிரண்டு “

“ உள்ளே வாங்க “ என்றவர் வெளியே வந்து மெயின் கேட்டை திறந்து அழைத்துச் சென்றார் மாடசாமி என்ற அந்த பெண்.

வீட்டின் உள்ளே முதல் அறையில் நான்கைந்து பெண்கள் அமர்ந்து போலியோ சூ  செய்து கொண்டிருந்தார்கள். சாம்பிளுக்கு சிறிதும் பெரிதுமாக போலியோ சூ நான்கைந்து ஓரமாக செய்து வைக்கப்பட்டிருந்தது.

அடுத்த அறையின் உள்ளே கவர் வைத்து மூடி இருந்த மெஷினை பிரித்துக் காண்பித்தார். மெஷினை சுற்றுலாவுக்கு வந்தவன் போல வளைத்து வளைத்து பார்த்து விட்டு “என்ன விலை “ என்றான் சாஜஹான்

“ நீங்களே சொல்லுங்க. புது மெஷின் வாரண்டி கார்டு எல்லாம் இருக்கு  “ என்றாள்(!) மாடசாமி

“ ஆறாயிரம் ரூபான்னா ரெண்டையும் எடுத்துக்கிறேன் “

“ ஆறாயிரமா. அநியாயத்துக்கு இப்படி கேக்குற “ இடைமறித்தான் ரவி.

“ அவுங்களே சும்மா இருக்காங்க. நீ ஏன் துள்ளுற. ஓசியில இலவசமாக கிடைச்சது தானே “ என்றான் அவன் சற்று காட்டமாக

“ அதல்லாம் நீ சொல்ல வேண்டாம். புதுசு பனிரெண்டாயிரம் ரூபா, கொஞ்சமும் கூசாம பாதி விலைக்கு கேக்குற. அவுங்க ஏதோ அவசரம்ன்னு தான் மெஷின் விக்கிறாங்க “ என்றான்

“ வர்றப்போ ஆளே தெரியாதுன்னு சொன்ன, இப்போ அவசரத்துக்கு விக்கிறாங்கன்னு எல்லாம் பேசுற. சரி உனக்கு கமிஷன் எல்லாம் தர முடியாது, பத்தாயிரம்ன்னா எடுத்துக்கிறேன் “

“ கமிஷனா, நான் உன்கிட்ட கேக்கவே இல்லையே, என்னங்க பத்தாயிரம்ன்னா சம்மதமா “ என்று கேட்க

நாங்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த மாடசாமி “ வண்டி வச்சி நீங்க தான் எடுத்திட்டு போகனும். வண்டி கூலி எல்லாம் தரமாட்டேன். சம்மதம்ன்னா முழு பணத்தை கொடுத்திட்டு எடுத்திட்டுப் போங்க “

“ சரி நீ இங்க நில்லு. ATM ல பணத்தை எடுத்திட்டு, வண்டி புடிச்சிட்டு வாரேன் “ என்று சாஜஹான் கிளம்ப “ உக்காருங்க “ என்று இருக்கையை காட்டி மாடசாமி உள்ளே சென்று விட, ஆவல் வந்தவனாக வீட்டின் முதல் அறைக்கு மீண்டும் வந்து போலியோ சூ செய்வதை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

சற்று நேரத்தில் உள்ளே இருந்து வந்த மாடசாமி “ இந்தாங்க. ஐநூறு ரூபா. இவ்வளவு தான் என்னால தர முடியும் “ என பணத்தை நீட்டினாள்.

“ எதுக்கு “ என்றான் ஆச்சர்யத்துடன்

“ மிஷின் விக்க ஆள் கூட்டிட்டு வந்ததுக்கு கமிஷன் “

“ ஆளாளுக்கு கமிஷன் கமிஷன் ன்னு கொல்லுறீங்களே, நான் கணேஷ் சொன்னான்னு தான் வந்தேன். பணம் எல்லாம் வேணாம் “

ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துவிட்டு “ நிஜமாவே வேணாமா “

“ வேற ஒரு உதவி வேணும் “

“ அதானே பாத்தேன், போலியோ சூ பிரீயா வேணும்ன்னு சொல்லிராதீங்க. அது விலை ஜாஸ்தி “

“ அதெல்லாம் இல்ல, உங்க பேரு உண்மையிலே மாடசாமியா. அதை சொன்னா போதும் “

சற்று அமைதி நிலவியது.

“ எங்க அப்பாவுக்கு நான் அஞ்சாவது பொண்ணு. பையன் பொறப்பான்னு எதிர் பார்த்தார். இல்லைன்னு தெரிஞ்சதும் மாடசாமின்னு குல தெய்வம் பேரை வச்சிட்டார் “

“ நெசமாவா “

தலை ஆட்டி சுவற்றில் இருந்த ஒரு போட்டோவை காட்ட, அதில் ஒரு சாமி படத்தின் கீழ் “ பன்னி மாடசாமி துணை “ என்று எழுதி இருந்தது.

“ நல்ல வேளை முழு பேரையும் வைக்கல “ என்றான் மெதுவான குரலில்

“ என் முழு பேரும் அது தான் “ என்றதும்

“ ஆத்தி…….” என்ற வண்ணம் ஜெர்க் ஆகி நிற்கவும் வெளியே சென்றிருந்த சாஜஹான் வண்டி உடன் வரவும் சரியாக இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு சர்ஜிகல் கடையில் வைத்து திருநெல்வேலியில் பிசியோதெரபி சாதனங்கள் செய்யும் நபர் ஒருவர் போலியோ சூ நான்கைந்து வேண்டும் எனக் கூற அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் மாடசாமியின் வீடு சென்று அங்கே அவரை அறிமுகம் செய்து விட்டு வந்தான்.

இரண்டு மாதம் கழித்து மாலை நேரத்தில் தெற்கு புது தெரு பஜாரில் சுடிதாரில் சைக்கிளில் கடந்து சென்ற மாடசாமியை நிறுத்தி “ என்ன இந்த பக்கம், டீ குடிக்கீங்களா “ என கேட்க அவளும் சம்மதித்தாள்.

“ இங்க உளுந்த வடை நல்லா இருக்கும். சாப்பிடுறீங்களா “

அவள் தலையாட்ட அவனுக்கும் சேர்த்து இரண்டு தட்டு எடுத்து உளுந்தவடை சட்னி சகிதம் டீக்கடையில் ஓரம் கட்டினார்கள்.

அவள் மாடசாமி என்ற பெயருக்கு ஏற்றார் போல சுற்றிலும் ஆண்களாக இருக்கிறார்களே என்ற எண்ணம் எல்லாம் இன்றி சர்வ சாதாரணமாக உளுந்தவடையை வெளுத்து கட்டி டீ குடித்து விட்டு “ உங்க மொபைல் நம்பர் கொடுங்க “ என்றாள்

ஒரு பெண் கேட்டாள், மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு அவன் வளர்க்கப் படவில்லை என்பதால் வேக வேகமாக நம்பரை கூறினான். சைக்கிளில் ஏறி கிளம்பும் முன் “ நீங்க கூட்டிட்டு வந்த அந்த திருநெல்வேலி ஆள் அன்னைக்கு பத்து போலியோ சூ வாங்கிட்டு போனார். ரொம்ப தேங்க்ஸ். பார்ப்போம் பை  “ என்ற வண்ணம் செல்ல ரவி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மாடசாமி நெடு நெடுவென வளர்ந்திருந்தாள். சுடிதார் அவளுக்கு அவ்வளவு அழகாக இல்லை. அவள் உயரத்திற்கு அது வாசலில் தொங்கும் திரைச்சீலை போல இருந்தது. மாநிறம், தெற்றுப்பல் மூன்றும் அவள் வாயை எப்பொழுதும் மூட விடாமல் தடுத்த வண்ணம் இருந்தது.

என்ன வயதிருக்கும் தெரியாது..?, கல்யாணம் ஆகி விட்டதா தெரியாது…?,  என்ன படித்திருப்பாள் தெரியாது..? மாடசாமி என பெயர் வைத்துக் கொண்டு படிக்கும் காலங்களில் என்னென்ன அவஸ்தைகளை சந்தித்திருப்பாள் நிறைய எண்ணங்கள் தொடர்ச்சியாக படர படர அவள் தொலைவில் தெரு வளைவை தாண்டி கொண்டிருந்தாள்.

ஒரு வாரம் கழித்து இரவு எட்டு மணிக்கு போன் வந்தது மாடசாமியிடம் இருந்து “ வீட்டுக்கு வா “ என்று.

என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு அவள் வீடு சென்றான்.

வீட்டின் முன் அறையில், தோல் வெட்டும் நீண்ட டேபிள் மீது புதிய சூ இருந்தது.

“ இந்தா போட்டு பாரு “

“ எனக்கா “

“ ஆமா உனக்குத்தான் “

ஆசை ஆசையாய் வாங்கி அணிந்து பார்த்தான். சர்வ கச்சிதமாய் இருந்தது. சரியான அளவுடன் ஜாக்கெட் தைத்த டெய்லரை பார்ப்பது போல ஆச்சர்யத்துடன் அவளை பார்த்து “ எப்படி என் செருப்பு அளவு கூட தெரியாம இவ்வளவு கரெக்ட்டா சூ செஞ்சிருக்கீங்க “

“ கண்ணு அளக்காததா கை அளக்க போகுது “ என்றாள் தொழில் சுத்தத்துடன்.

“ எவ்வளவு “

“ ஏன் நீதான் எல்லாம் ப்ரீயா செய்வியா, நாங்க செய்ய மாட்டோமா “ என்றாள்.

அதன் பின் தீபாவளி, பொங்கல், புதுவருடம், பிறந்த நாள், இடை இடையே ரோட்டில் காணும் போது என அவர்கள் டீ குடிக்க, ஐஸ் கிரீம் திங்க என விருப்பம் போலக் காரணங்கள் தோன்றின.

பேசும் போதெல்லாம் அதிகம் வாதம் செய்தாள். ஆண்களை விட பெண்கள் எல்லா வகையிலும் உசத்தி என்றாள். முகத்தை நேருக்கு நேர் பார்த்து கணீர் குரலில் பேசினாள். ஒரு நாள் “ மெதுவா பேசுங்க “ என கூறிய ஐஸ்கிரீம் கடைக்காரனிடம் “ நாங்க ஒன்னும் மைக் போட்டு கத்தி பேசலை. மெதுவாதான் பேசிட்டு இருக்கோம் “ என்று சண்டைக்குச் சென்றாள். அன்றைய தினம் அவன் கம்மியாய் அடிவாங்கியது அவன் பாக்கியம். யாரைக்கண்டும் அவளிடம் பயம் இல்லை.

உழைப்பாளி அவளிடம் ஒரு பெண்ணுக்கான நளினம் எல்லாம் துளியும் இல்லை. அவள் தலையில் குடும்பம் நடத்தும் பொறுப்பும், பணம் தரும் தொழிலும் ஒப்படைக்கப் பட்டதால் அவள் தேவைகளை முன்னோக்கியே இருந்தாள். அதை தடுக்கும் எல்லா தடைகளையும் தகர்த்தெறியும் வெறிபிடித்த முரட்டுத்தனம் இயற்கையாகவே அவள் மீது படிந்திருந்தது.

திடீர் என ஒருநாள் ரோட்டில் கண்டு எஸ்தர் என்ற பெயரில் திருமண பத்திரிகை நீட்டினாள். “ இது யாரு எஸ்தர் “

“ நான் தான் “

“ இது எப்போ “

“ அதெல்லாம் கேக்காத, என்ன இழவோ செய்றாங்க எங்க வீட்டுல, கல்யாணத்துக்கு வந்திரு “

சரி என்று கூறி கல்யாணத்திற்கு புதியம்புத்தூர் சென்றிருந்தான். முதலில் கோயிலில் வைத்து தாலி கட்டினார்கள். பின் வீட்டில் வைத்து பாதர் இன்னொரு முறை திருமணம் செய்து வைத்தார். பந்தி இலையில் ஓடுவது சாம்பாரா ரசமா என்ற கவலையில், நடந்து எல்லாம் ரவியின் நினைவில் நில்லாமல் போனது.

கணவர் குடித்திருக்க மகனின் முதல் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி அழைத்திருந்தாள்.

பிள்ளை பெற்ற வகைக்கு புசு புசுவென சற்று எடை கூடி இருந்தாள் மாடசாமி என்ற எஸ்தர்.

இது வரை வாங்க போங்க என்று அவளை அழைத்து வந்த ரவி வேறு வழியின்றி கூட்டத்தின் நடுவில் “ மைனி ( அண்ணி ) “ என அழைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டான்.

சேலையில் வளைய வந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரவியை சட்டென அவள் திரும்பி பார்க்க அவன் பார்வையை தரைக்குத் தாழ்த்தினான்.

பிறந்த நாளுக்கு வந்திருந்த ஆட்கள் கூட்டம் குறைந்ததும் பாயாசம் கொண்டு வந்து கையில் திணித்து விட்டு “ என்ன, அப்படி வளைச்சு வளைச்சு என்னையே பார்த்திட்டு இருந்த, என்ன விஷயம் “

“ ஒண்ணுமில்ல “ என்று குனிந்து கொண்டான்.

சிரித்தாள்

“ ஏன் சிரிக்கீங்க “

“ வெக்கப்படுற ஆம்பளைய கண்டா சிரிப்பு வராம என்ன செய்யும். சரி சொல்லு எதுக்கு என்னையே பார்த்திட்டு இருந்த “

“ ம்ம், ஆளு சதை போட்டு முன்ன விட அழகா இருக்கீங்க “

“ அட கருமம். முத்துன காய் நான், என்னை போய் ரசிச்சியாக்கும். சீக்கிரமா உனக்கு ஏத்த மாதிரி தண்டியும் தரமும் பாத்து எவளையாவது கல்யாணம் பண்ணு. வக்கட்டையா எவளையாவது கட்டுனன்னு வச்சிக்க மண்டைய பொளந்திருவேன் “  என ஆசிர்வாதம் செய்தாள் அந்த வேதக்காரி.

இரண்டு வருடம் ஆனது அவள் வாக்குத்தத்தம் பலிக்க.

ரவியுடைய திருமணத்திற்கு குழந்தையுடன் வந்திருந்த அவள் மேடையில் அவன் கையைப் பிடித்து சிறிது நேரம் பேசினாள் மாமனார் பார்வையால் ரவி மீது அம்பு விடுவதை பற்றிய கவலை இன்றி.

கிளம்பும் போது “ பிரியாணி சூப்பரா இருந்தது, ஒரு ஹெல்ப் பண்ணுவியா “

“ என்ன “

“ சாப்பாடு மிச்சம் ஆச்சுன்னு அண்டால நிரப்பி வீட்டுக்கு தூக்கிட்டு போகாம எனக்கு போன் பண்ணுனா, நான் TTC டிப்போ பக்கத்துல இருக்கிற முதியோர் இல்லத்துக்கு கொண்டு போய் கொடுத்திருவேன். இந்த மாதிரி பிரியாணி எல்லாம் அவுங்க சாப்பிட்டிருக்க மாட்டாங்க “

“ இப்போமே கொண்டு போறீங்களா “

“ நெசமாவால……கொஞ்சம் பொறு என் பிள்ளைய யார்கிட்டயாவது கொடுத்திட்டு வாரேன். டிவிஎஸ் சாம்ப்ல தான் வந்திருக்கேன். சட்டியில கொடுத்தா அப்படியே போய் டெலிவரி பண்ணிட்டு வந்திருவேன் “

“ கொஞ்சம் நில்லுங்க, மாப்ள இங்க வா. இவுங்க என்ன கேக்காங்களோ அதை கொடு. யாராவது ஏதாவது சொன்னா நான் சொன்னதாச் சொல்லு  “ என ரவி, நண்பனை கை காட்ட சந்தோசம் தாளாமல் அவனுடன் சென்று கொண்டிருந்தாள் மாடசாமி.

கிமு, கிபி போலத்தான் எல்லோர் வாழ்வும்.

திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என எந்த பாகுபாடும் இன்றி பழைய நினைவுகள் எல்லாம் மறந்து நான் எங்க இருக்கேன் என்று மட்டுமே கேட்காத குறை.

திருமணத்திற்கு பின் மாடசாமி எல்லாம் ரவியின் மூளை செல்லில் இருந்து அழிக்கப்பட்ட பண்டைய வரலாற்றுச் செய்தி ஆனது.

நீண்ட காலங்கள் கழித்து மாதாகோவில் திருவிழாவில் மகனுடன் டெல்லி அப்பளம் வாங்க சென்ற இடத்தில் அவளை மீண்டும் சந்தித்தான்.

“ எல எப்படி இருக்க……..உன் பையனா இது. உன் பேர் என்னது தங்கம் “ என அவனை மடியில் வாங்கி கொஞ்ச ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் கூட்ட நெருக்கம் தாளாமல் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து சென்றார்கள்.

அவள் மடியில் எடுத்து கொஞ்சிய மகன் இப்பொழுது ஆறடி உயரம். காலம், கோடைகாலத்து ஆற்று நீர் போல நின்று நிதானமாக நிலம் படிந்து ஊர்ந்து செல்கிறது.

வருடத்திற்கு ஒரு முறையாவது ரவி இரத்த தானம் செய்து விடுவது வாடிக்கை. இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி எல்லாம் தொட்டுப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற சுய நலம் தான் காரணம்.

ஒரு ஞாயிறு காலை இரத்த தானம் செய்யலாம் என்று அந்த தனியார் மருத்துவமனை சென்றிருந்தான். வாசலில் நின்றிருந்த ஆள் “ பிளட் டொனேட் பண்ண வந்தீங்களா “

“ ஆமா “ என்றான் ஆச்சர்யத்துடன்

“ O பாசிடிவ் தான “

“ ஆமா “ என்றான் மேலும் ஆச்சர்யத்துடன்

“ வாட்ஸ் அப்ல வர்றதா சொன்ன ஆள் நீங்க தானா, உள்ள வாங்க “ என அவசரப்பட்டார்.

“ இல்ல, நான் தற்செயலா பிளட் கொடுக்கலாம்ன்னு வந்தேன் “

“ ஒரு மணிக்கு சர்ஜெரி. இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு. ரெண்டு பாட்டில் பிளட் வேணும். ஒரு ஆள் கிடைச்சிட்டார். இன்னொரு ஆளைத் தேடிகிட்டு இருந்தோம். ஞாயிற்று கிழமை அதனால யாரையும் சட்டுன்னு காண்ட்டக்ட் பண்ண முடியல. வாட்ஸ் அப் எல்லா குரூப்லயும் சொல்லி, என்னடா செய்யன்னு யோசிச்சுகிட்டு இருந்தோம். நல்ல வேளை நீங்களா வந்தீங்க. கொடுப்பீங்கல்ல “

“ அதுக்கு தான் வந்தேன் “ என்று கூறி இரத்தம் கொடுத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்ததும்

“ சார், இவருக்கு ஜூஸ் வாங்கி கொடுங்க “ என ரவியை அழைத்துச் சென்றவர் யாரிடமோ கூற

“ சரி “ என்ற வண்ணம் ரவியை நோக்கி வந்தவரை இதற்கு முன் எங்கேயோ பார்த்தது போலத் தோன்றி யோசிக்க  “ அடடா இது மாடசாமி வீட்டுக்காரர் ஆச்சே “ என்று நினைவு வந்து  “ பேஷன்ட் யாரு சார் “ என்றான் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

அவருக்கு அவனை நினைவில்லை.

“ என் மனைவி தான் “ என்றார்.

“ என்ன செய்து அவுங்களுக்கு “

“ யுட்ரஸ் ரிமூவ் பண்ணுறாங்க. ஆபரேசன் தியேட்டருக்கு கூட்டிட்டு போயாச்சு  “

“ ஒ…….அப்படியா “

“ ஜூஸ் நான் போய் குடிச்சிக்கிறேன், நீங்க ஹாஸ்பிட்டல இருங்க “

“ இல்ல நீங்க இரத்தம் கொடுத்திருக்கீங்க “ என இழுத்தார்

“ இதுல என்ன இருக்கு, பரவாயில்ல உங்க மனைவி பேரு என்ன “

“ எஸ்தர் “ என்றார் அவனுடைய அந்தக் கேள்வியை விரும்பாமல்

“ அவுங்களுக்காக ஜெபம் பண்ணுங்க, நான் வாரேன் “ என்ற வண்ணம் பெறுமூச்சு விட்டபடி நிறைய சிந்தனைகளுடன் வண்டியை கிளப்பி நேராக சிரோன் ஜூஸ் பார்க் சென்று ஜன்னல் ஓர சீட் பிடித்து “ பெரிய சைஸ் மாதுளை ஜூஸ் ஒன்னு ஐஸ், சீனி போடாம “ என்று ஆர்டர் செய்து விட்டு மொபைலில் முகநூலில் வந்த நோடிபிகேசனை பார்க்கத் துவங்கினான்.

“ பொம்பளைன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா, அதெல்லாம் இல்ல ஆம்பிளைங்க எங்கள விட எந்த விதத்துல உசத்தி சொல்லு “ என்று ஒரு பெண்ணின் குரல் லேசான விளக்கு வெளிச்சத்தில் கேட்க

“ ஹலோ மெதுவா பேசுங்க “ என்றான் ஐஸ்கிரீம் கடைக்காரன்.

“ நாங்க ஒன்னும் மைக் போட்டு கத்தி பேசலை. மெதுவாதான் பேசிட்டு இருக்கோம் “ என சண்டை இழுத்தது அந்த பெண் குரல்.

*

நன்றி : முஹம்மது யூசுப்
*
தொடர்புடைய பதிவுகள் :
புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்!’ – முஹம்மது யூசுப்

“ சான் ராத் “ – கனவுப் பிரியன்

Advertisements

சங்கரன் (சிறுகதை) – ஆசிப் மீரான்

ஏற்கனவே ஆசிப் மீரானின் மாலாவை இங்கே போட்டிருக்கிறேன் –  அனுமதியுடன். இப்போது ‘ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுதியில் இருந்து அவருடைய ‘சங்கரன்’. நன்றி! – AB
*

சங்கரன் – ஆசிப் மீரான்

“அது யாருன்னு தெரியுதா?” தூரத்தில் பேருந்தில் ஏறுவதற்காகக் காத்திருந்த ஆளைக்காட்டி ஜான் அண்ணன் கேட்டார். கூர்ந்து கவனித்தாலும் சரியாகத் தெரியவில்லை.

“யாருண்ணே அது?”

ஜான் அண்ணன் சிரித்தார். “அதுக்குள்ள மறந்துட்டியா என்ன?”

அதற்குள் அந்த உருவம் எங்களைப் பார்த்து உற்சாகமாகக் கையை ஆட்டியவாறே வர… அட!! நம்ம வீரக்குமார்.

‘ய்யேய் மக்கா, வீரக்குமார்தானே?”

“காக்கா, பரவாயில்லயே, ஞாபவம் வச்சிருக்கியளே?”

“அவ்வளவு சுலபத்துல மறக்க முடியுமாடேய்?” ஜான் அண்ணன் கேட்க நானும் வீரக்குமாரும் சிரித்துக் கொண்டோம்.

-o0o-

அவசரமாக ஓடி வந்தான் மைதீன்.

“காக்கா, வீரகுமாரை அடிச்சி கட்டி வச்சிருக்காங்க. உங்களையும் ஜான் அண்ணனையும் தோசையண்ணன் தேடிக்கிட்டிருக்காரு”

“எதுக்குல அடிச்சாங்களாம்?”

“தெரியல. உங்கள உடனே சாலாட்சி அம்மன் கோவிலுக்குப் போகச் சொன்னாங்க”

நானும் ஜான் அண்ணனும் மாதா கோவில் மேடையிலிருந்து பின்பக்கத்து தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு எழுந்தோம். நடந்து பக்கத்து செல்வின் கடையில் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து விட்டு விசாலாட்சி அம்மன் கோவில் நோக்கிப் பறந்தோம். ஜான் அண்ணன் வேகமாக மிதித்துக் கொண்டே, “இந்த சனியன் புடிச்ச பய என்ன செஞ்சான்னு தெரியலியே. அவன யாரு அடிக்கிறாங்களோ, தோசை ஏன் நம்மளத் தேடுறான்?’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். எனக்கும் காரணம் எதுவும் புரியவில்லை.

வீரக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியன்தான். ஆனாலும், நடை உடை பாவனைகளைப் பார்த்தால் வட்டாட்சியாளரோ என்று சந்தேகம் வராமலிருந்தால்தான் அதிசயம். எதையும் வித்தியாசமாகச் சிந்திக்க வேண்டுமென்று யாரோ சொன்னதை விபரீதமாக எடுத்துக் கொண்டு அடாவடியாக எதையாவது செய்து கொண்டேயிருப்பான். பள்ளிக்கூட நாடகங்களில் அவனுக்கு முக்கிய கதாபாத்திரம் வாங்கிக் கொடுத்த நாளிலிருந்து என் மேல் தனி பாசம். “காக்கா, நீங்க ஒரு ஆளுதான் என்னை சரியா தெரிஞ்சு வச்சிருக்கிய.நீங்க வக்கீல் வேசம் குடுத்ததுக்கப்புறம்தான் எல்லாரும் இப்ப வீரக்குமாரை தேடுதானுவோ” என்று பார்க்கும்போதெல்லாம் சொல்லிச் சொல்லிப் பரவசப்படுவான். இத்தனைக்கும் அந்த வேசம் செய்ய ஆளில்லை என்பதால் அவனுக்குக் கொடுக்கலாம் என்று சொன்னது மட்டுமே எனது பங்கு.

ஜான் அண்ணன் நெளிந்து நெளிந்து மிதித்து கடைத்தெருவையெல்லாம் எப்படியோ கடந்து அஞ்சல் அலுவலகத்து சாலையைக் கடக்கும்போது தோசை தென்பட்டான்.’எங்க போய் தொலஞ்சிய ரெண்டு பேரும். வீராவைப் போட்டு அவங்க ஐயா அந்த சாத்து சாத்துதாரு. அடிக்காதீங்கன்னு சொல்லப் போனா ‘சோலியப் பாத்துட்டு போலே’ன்னு சொல்லுதாரு. நான் என் சோலியக் காட்டுணமுன்னா அப்புறம் அவரு சோலி முடிஞ்சு போயிடும்லா… அத அவருக்கு சொல்லிக்குடுங்க” பொருமினான் தோசை.

அவன் பிறப்பிலிருந்தே அப்படித்தான். வாயால் பேசுவதிலெல்லாம் நம்பிக்கை அவனுக்கு சுத்தமாகக் கிடையாது. இருக்கிற பிரச்னையில் இவன் வேறு முளைத்து கிளம்பி விடக் கூடாதென்று கொஞ்சம் கவலையும் என்ன நடந்தது என்று தெரியாத கலவர உணர்வுமாக நான் இருக்க “எலேய்..அவரு சோலிய அப்புறமா முடிப்பம்டேய். எதுக்கு அவங்க ஐயா அவனை அடிக்காராம்?” ஜான் அண்ணன் கேட்டார். “யாருக்கு தெரியும்? அதக் கேட்கப் போனா பெரிய புடுங்கி மாதிரிலா பேசுதாரு. எனக்கும் பேசத் தெரியும்லா”மீண்டும் ஆவேசப்பட்டான் தோசை.

“சரி.நீ இங்கினயே இரு.நாங்க போய் பாத்துட்டு வரோம்” என அவனை அடக்கி விட்டு ஜான் அண்ணன் என்னைக் கூப்பிட்டு போனார். விசாலாட்சி அம்மன் கோவிலுக்கு முன்னால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. கோவில் நுழைவாயிலுக்கு முன்னால் நீண்டிருக்கும் அம்மன் தெருவில் கோவிலில் இருந்து நான்காவது வீடாக வீரக்குமாரின் வீடு. வாசலில் அரசமரம் ஒன்று பாதி இலையைப் பறிகொடுத்து விட்டு நின்று கொண்டிருந்தது.

வாசலுக்குள் நுழையும்போதே,” சேரக் கூடாதுனுவ கூட சேர்ந்து சுத்தும்போது கண்டிக்காம விட வேண்டியது. இப்ப கட்டி வச்சு அடிச்சு என்ன புண்ணியம்? இவனா செய்யுற அளவுக்கு இவனுக்கு புத்தியெல்லாம் கிடையாது. இவனை அவனுவ எவனோதான் ஏவி விட்டுருக்கானுவோ. இது தெரியாம இவன எதுக்கு கட்டி வச்சிருக்கிய புள்ளவாள்?” சிவசுப்பிரமணியம் அண்ணாச்சியின் குரல் கேட்டது. சிவசு பிள்ளை என்றால் ஊரில் எல்லோருக்கும் தெரியும். விசாலாட்சி அம்மன் கோவில் தர்மகர்த்தாக்களில் ஒருவர். விசாலாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் பாதி இப்போது இவர் பெயருக்கு வந்து விட்டதென்று வீரக்குமார் கொஞ்ச காலமாக சொல்லிக் கொண்டு திரிந்தான்.அவருக்கு எதிராக அவர் வீட்டிற்கு முன்னால் உண்ணாவிரதமெல்லாம் செய்து அவரது கடுப்பைக் கிளப்பியிருக்கிறான்.

வீரக்குமாரின் வீடு கொஞ்சம் பெரிய வீடு. என்ன காரணத்துக்காகவோ தெருவிலிருந்து பெரிய கோட்டை போல மதில் வைத்துக் கட்டியிருந்தார்கள். அதனாலேயே கோட்டை வீடு என்று செல்லப் பெயரும் அந்த வீட்டுக்கு இருந்தது. வீட்டு முற்றத்துக்குள் நுழைய 20 படிகளாவது ஏறித்தான் போக வேண்டும். அந்த முற்றமே பெரிய மைதானம் போல் இருக்கும் – நெல் காயப்போட வசதியாக. இப்போது பழைய செழிப்பு குறைந்து போனாலும் ‘குதிரை மட்டமாக”த்தான் இருந்தது அவர்கள் குடும்பம். நெல் காயப்போட இருந்த முற்றத்தின் ஓரத்தில் கம்பு நட்டு வைத்து துணி காயப்போட்டிருந்தார்கள். முற்றத்தின் நடுவில் தென்னை மரமொன்று ‘ஏதோ இருக்கேன்’ என்பது போல நின்று கொண்டிருந்தது. கொல்லத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தரை ஓடுகள் பதித்த விசாலமான முற்றத்தில் அங்கங்கே ஓடுகள் பராம்ரிப்பின்றி உடைந்து போய் சிமெண்டில் ஒட்டுப் போடுக் கொண்டிருந்தது. முற்றம் தாண்டிய திண்ணையில் ஒரு தூணில் வீரக்குமாரை கட்டி வைத்திருந்தார்கள். அடிபட்டு அவன் கன்னம் வீங்கியிருந்ததையும் கட்டியிருந்த லுங்கியில் ஒரு பகுதி கிழிந்திருப்பதையும் அங்கங்கே உடலில் காண்ப்படும் சிராய்ப்புகள் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அடித்ததால் ஏற்பட்டது என்பதையும் உணர முடிந்தது.

நாங்கள் உள்ளே நுழையும்போது “அடடா!! வந்துட்டாகள்ளா புரட்சிக்காரங்க” வீரக்குமாரின் அப்பா சொல்ல அனைவர் பார்வையும் எங்கள் மேல் விழுந்து துளைத்தது. வீரக்குமாரின் அப்பா சரவணகுமாரை எல்லோரும் அழைப்பதென்னவோ குமாரப்பிள்ளை என்றுதான் – வீரக்குமார் உட்பட. “எங்கய்யா குமாரப்பிள்ளை இருக்காருல்லா காக்கா” என்றுதான் அவரைப் பற்றிப் பேசத்துவங்குவான். “வாங்க தம்பி!! உங்களத்தான் பாத்துக்கிட்டிருக்கோம்” சிவசு அண்ணாச்சிதான்.

“எங்களையா? எங்கள எதுக்கு எதிர்பாக்குறீங்க?” ஜான் அண்ணன் கேட்டார்

“தம்பி கேக்குதாகள்ளா, சொல்ல வேண்டியதுதானே?”” சிவசு பிள்ளையின் குரலில் எகத்தாளம் எட்டிப் பார்த்தது. ‘தோசை மாதிரி ஆளுங்கதான் இவருக்கு லாயக்கு’ என்று மனதில் ஒரு எண்ணம் ஓடி அடங்கியது.

“குமாரண்ணே, என்னை எதுக்கு கூப்பிட்டீங்க?” ஜான் அண்ணன் மீண்டும் கேட்டார்.

“தம்பி சானு, உங்க ஐயா கிட்டதான் நாங்க படிச்சோம். நீங்க எங்க வாத்தியார் மவன். அதனால நாங்க மரியாதயா நடக்குதோம் உங்க கிட்ட. அதே மாதிரி நீங்க நடக்காம போனா நல்லதில்ல”
வீரக்குமாரின் அப்பா சரவணகுமாரின் குரலில் கோபம் வெளிப்படையாக இருந்தது.

“ஜான் அண்ணன் என்ன செஞ்சார்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்றேன் நான். சுற்றி வளைத்துப் பேசுகிறவர்களைக் கண்டால் எப்போதும் வரும் கோபம் அப்போதும் எனக்குள் எட்டிப் பார்த்தது.

“தம்பி.. நீங்க சும்மா இருங்க. நீங்க எப்பவாதுதான் ஊருக்கு வருவிய..உங்களுக்கு ஒண்ணும் தெரியாது” சிவசு அண்ணாச்சி என்னைப் பேச விடாமல் தடுக்க முயற்சி செய்தார்.

“நடந்தது என்னன்னு தெளிவாச் சொல்லுங்க குமாரண்ணே, நான் நடந்துகிட்டது நல்லா இல்லன்னு சொல்றீங்க. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே என்னன்னு எனக்கு தெரியும்? கூப்பிட்டு வரச் சொல்லிட்டு ஒண்ணும் சொல்லாம என்னை எதிர்பார்த்திருக்குறதா சொன்னா எப்படி?”

“அப்போ உங்களுக்கு ஒண்ணும் தெரியாதுண்ணா சொல்லுதியோ?”

“அதத்தானண்ணே சொல்லிக்கிட்டிருக்கேன்”

“நீங்க அப்படித்தான சொல்லுவியோ. உங்க கோயில்ல இப்படி செஞ்சா மட்டும் சும்மா வுட்டுடுவியளாவேய்?” பின்னாலிருந்து முகம் காட்டாமல் எவனோ ஒருத்தன் சாம்பிராணி அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தான்.

“இதப் பாருங்க. வீரக்குமாரை அடிக்குறதா செய்தி வந்தது. யாருன்னு தெரியல. யாரா இருந்தாலும் நமக்கு வேண்டப்பட்டவன அடிச்சது யாருன்னு பாக்கலாம்னுதான் நான் வந்திருக்கேன். இப்ப பாத்தா, அவனை நீங்களே அடிச்சு கட்டி வச்சிருக்கீங்க. எதுக்கு அடிச்சசீங்கன்னு தெரியல. இதுல என்னக் கூப்பிட்டுட்டு வரச் சொன்னதா தோசை வந்து சொன்னான். அதான் கேட்டுட்டுப் போலாம்னு வந்திருக்கேன்”

“அதக்கேக்க நீ யாருவேய்? உடப்பொறந்தவனா மாமனா என்ன முறைவேய் உமக்கு? இதக் கேக்க வந்திருக்கீரு” சிவசு அண்ணாச்சியின் மகன் கணேசன்.

“லேய் க்ணேசா, அவரு எனக்கு அண்ணாச்சி.. என்ன எவனாவது அடிச்சா கேக்கத்தான் செய்வாரு..நீ உன் சோலி மசுரப் பாத்துக்கிட்டு போடேய். அண்ணாச்சிய ஏதாவது சொன்னா பொலி போட்டுருவேன்” என்று சொல்லி முடிக்குமுன்னர் பாய்ந்து வீரக்குமாரை அடித்தார் சரவணகுமார் அண்ணாச்சி..

“வேசிக்குப் பொறந்தவனே..செய்யுறதயும் செஞ்சுப்புட்டு பேசவால செய்யுத?” சொல்லியவாறே வீரக்குமாரின் குறுக்கில் மிதிக்க அவன் அலறினான்.

“அண்ணாச்சி என்ன வேல செய்யுதிய..படாத இடத்துல பட்டுட போவுது”

“படட்டும்டேய்..என் மொவந்தானே..அவன் இதோட ஒழியட்டும். இதப் பெத்து இப்படி அவமானப்படுறதுக்கு அவனக் கொன்னு போட்டுட்டா சமாதானமா இருப்பேன். நீங்க இதுல இடபடாதியோ”

“அண்ணாச்சி..நடந்தது என்னன்னு சொல்லுங்க..மொதல்ல அவனைக் கட்டவுத்து வுடுங்க” வீரக்குமாரின் அலறல் என்னைப் பேச வைத்தது.

“பாருங்க தம்பி, உங்க வாப்பாவும் நானும் சிநேகிதம்தான்.ஆனா அதச் சொல்லிக்கிட்டு இவனுக்காவ வக்காலத்து வாங்காதீங்க”

“அது இருக்கட்டும் அண்ணாச்சி.. இப்படி கட்டி வச்சி அடிக்குற அளவுக்கு என்னதான் செஞ்சான்?”

“அத உங்க சேக்காளி கிட்ட கேளுங்க. அவருதான இவன இப்படி செய்யச் சொல்லியிருப்பாரு” இதைச் சொன்னதும் ஜான் அண்ணன் கடுப்பாகி விட்டார். “திரும்ப திரும்ப நடந்தது என்னன்னே சொல்லாம இப்படி ஒளிச்சு ஒளிச்சு பேசுனா என்னய்யா அர்த்தம்? சின்னாரு, தோசையைக் கூப்பிடு” என்றார்.

எதிர்பார்த்து காத்திருந்தது போல வெளியேயிருந்து தோசை உள்ளே வந்தான். “நாந்தான் அப்பமே சொன்னம்லா..என்ன செய்யணும்?” முழுக்கைச் சட்டையை மடக்கிக் கொண்டே கேட்டான் தோசை.

“யேய் சாணு, இதெல்லாம் நல்லால்லடேய். .இந்த மரியாத தெரியாத பயலோட சேந்துதான் என் பையனயும் கெடுத்து குட்டிச்சுவரா போவ வச்சிட்டிய” வீரகுமாரின் தகப்பனாரின் வாயிலிருந்து இந்த வார்த்தை வரக் காத்திருந்தது போல தோசை கடுப்பானான். “ஆமாவேய்..நாங்க மரியாத தெரியாத பயலுவதான். உமக்குத்தான் மயித்துல புடுங்குன மரியாத நெறய தெரியும்லா. அப்புறம் என்னத்துக்குவே இன்னமும் பதிலச் சொல்லாம வளவளங்கீரு..யோவ் சான் அண்ணே, நான் வீரக்குமார் கயித்த அவுத்துட்டு கூப்பிட்டு போறன். எவன் வந்து தடுக்குறான்னு பாக்குதேன்” தோசை வீரக்குமாரைக் கட்டி வைத்திருந்த தூணை நோக்கி நடந்தான்.

“யேய் சின்னாரு தம்பி, இந்த மாதிரி நடக்குறது நல்லால்லடேய்.. உங்க வாப்பா கிட்ட சொல்லிடுவம்டேய்..என்ன நெனச்சுக்கிட்டு இருக்கிய..” இந்தமுறை வீரகுமாரின் தகப்பனாரின் கோபத்தில் கையாலாகாத்தனத்தின் தொனி – அதுவும் ஜான் அண்ணனிடம் பேசுவதை விட்டு விட்டு என்னிடம் பேச்சு.

“இத பாருங்க சரவணகுமார் அண்ணாச்சி..நடந்தது என்னன்னு கேட்டுதான் நாங்க வந்தோம். நீங்க எதையோ நெனச்சுக்கிட்டு என்னமோ பேசிட்டிருக்கீங்க. எதுக்கு இவன அடிச்சீங்கன்னு கேட்டா அதுக்கு பதிலச் சொல்லுங்களேன்”

“காக்கா, நீர் என்ன புதுசா தொடங்குதீரு? அவுருதான் வாயத் தொறந்தா முத்து உதிந்துடும்னு பயப்படுதாருல்லா?இப்ப போயி திரும்பவும் கத கேக்கீரு” தோசை ஆத்திரப்பட்டான்.

“தோசை. கொஞ்சம் சும்மா இரம்டேய்” என்று தோசையை அடக்கினார் ஜான் அண்ணன்.

“இப்ப சொல்லுங்கண்ணே”

“என்ன ஏன் சொல்லச் சொல்லுதியோ. உங்க சேக்காளியக் கேளுங்கோ”

“டேய் வீரக்குமார், என்ன நடந்ததுன்னு நீயாவது சொல்லேண்டேய்”

“கட்டை அவுத்து வுடச் சொல்லுங்க காக்கா, அப்புறம் சொல்லுதேன்”

“அவுத்து விடுங்கண்ணே”

“பாத்தியளா குமாரப் பிள்ளைவாள், நாந்தான் சொன்னம்லா, நம்ம வீட்டுக்கு வந்து அவனுவோ அதிகாரம் பண்ணுறானுவோ” சிவசு பிள்ளை சரவணகுமார் அண்ணாச்சியை உசுப்பேற்றினார்.

“வேய் வெங்கலப் —கு, நீரு பொத்திக்கிட்டு போவும். நீருதானவே ஒண்ணுமில்லாதத பெருசாக்குதீரு” வீரகுமார் உடைந்த குரலில் உரக்கப் பேச முயன்றான்.

“பாத்தியளா பிள்ளவாள், எனக்கு மரியாதயே இல்ல இந்த இடத்துல. இந்த மாதிரி புள்ளயப் பெத்ததுக்கு நானா இருந்தா நாண்டுகிட்டு செத்திருப்பேன்”

“அப்படின்னா கணேசனைப் பெத்த அன்னிக்கே நீரு போயி சேந்திருக்க வேண்டியதுதானவேய்” என்று தோசை சிரித்துக் கொண்டே சொல்ல கணேசன் பாய்ந்து வந்து தோசையை அடிக்க தோசை அது எதன் மேலோ விழுந்த அடி மாதிரி அந்த இடத்தை லேசாகத் தடவிக் கொண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கணேசனின் கன்னத்தில் அறைய, •பேர் அன் லவ்லி ஆறு மாதம் போட்டுக் காத்திருக்க அவசியமில்லாமல் அடுத்த நொடியே கணேசனின் கன்னம் சிவந்து போனது. கூடவே தடித்தும் விட கொஞ்ச நேரத்தில் ஆளாளுக்கு சத்தம் போட்டு ஒரே கூச்சல் குழப்பமாக ஆரவாரமாக இருந்தது. கையாலாகாத கோபத்தில் கணேசன் தோசையைக் கொன்று விடுவதாகச் சொல்ல, தோசை தமிழ் அகரமுதலிகளில் இடம் பெறாத வார்த்தைகளில் கணேசனை ‘வாழ்த்தி’ விட்டு,சிரித்துக் கொண்டே வீரக்குமாரின் கட்டை அவிழ்த்து விட்டான்.

“வீரகுமார் இப்போ சொல்லுடேய்” என்றான் தோசை.

“எலேய் தோசை, இப்ப என்ன அடிச்சிட்டடேய்..ஆனா ஊருக்குள்ள் எங்களுக்கும் ஆளிருக்குல்லா” கணேசன் கத்தினான்.

“இருந்தா கூப்பிட்டு சிரச்சுக்கோ..” தோசை அலட்சியமாகச் சொன்னான்.

“சான் தம்பி, இது கொஞ்சமும் சரியில்ல. எங்க வீட்டுக்கு வந்த சிவசு பிள்ளய இவன வச்சு மரியாத இல்லாம தொரத்திவிட்டுட்ட்டீங்க. என் மவனையும் இத மாதிரி மரியாத இல்லாம ஏதேதோ செய்ய வச்சதாலதான் இவ்வளவோ வினை” ஆற்றாமல் புலம்பினார் சரவணகுமார் அண்ணாச்சி.

“அண்ணாச்சி தப்பா நெனக்கக் கூடாது. நான் வந்து மரியாதயத்தான கேட்டேன். நீங்க சொல்லியிருந்தா நான் பாட்டுக்கு திரும்பிப் போயிருப்பேன். நீங்க யார் சொன்னதயோ கேட்டுக்கிட்டு என் மேல கோபமா இருந்தீங்க. இந்த நிமிசம் வரைக்கும் கூட என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டேங்க்கீங்க. நான் உங்க மவன தூண்டி விட்டேன்னு சொல்லுதிய. என்னால்தான் உங்க மவன் இப்படி செஞ்சுட்டான்னும் சொல்லுதிய. நான் அப்படிப்பட்ட ஆளுன்னா நெனக்கிய? அப்ப இவ்வளவு நாளா அப்படித்தானா என்னயப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிய? உங்களச் சொல்லிக் குத்தமில்ல அண்ணாச்சி. சிவசு அண்ணாச்சி வரதுக்கு முன்னாடியே நான் வந்திருந்திருக்கணும். சரி சரி..இப்ப இதப்பத்திப் பேசி என்னாவப் போவுது? என்ன நடந்ததுன்னு நீங்க சொல்ல மாட்டேங்கிய. நான் வந்தது இவனக் கூட்டிட்டுப் போயி என்ன நடந்ததுன்னு விசாரிக்கத்தான். நீங்கதான் தப்பா நெனச்சிட்டிய..எலேய் வீரா, நீயாவது சொல்லித் தொலையம்டேய்ய்”

“என்னத்த சொல்லுறது. நீங்க வாங்கண்ணே, வெளியில போயி பேசிக்கலாம்”

“ஆமா, வெளியில போயி பேசிக்கோ. திரும்ப இந்த வீட்டுக்குள்ள் வரலாம்னு மட்டும் நெனக்காதே. வந்தா சத்திய்மா வீட்டுக் கதவ தொறக்கவே மாட்டேன். இந்த ரவுடிப் பயலுக்கு அடியாளா இருந்துட்டு வெட்டு குத்துன்னு அலை” சரவணகுமார் அண்ணாச்சி கோபத்தில் கத்தினாலும் குரல் உடைந்து கண்ணீர் வருவதைப் பார்த்தபோது மனதுக்கு வருத்தமாக இருந்தது.அந்தக் கண்ணீரில் ஒரு தகப்பனுக்கு மகனால் ஏற்பட்ட அவமானம் கலந்திருப்பதை உணர முடிந்ததில் வீரக்குமார் மீது கோபம் வந்தது. இந்தக் கிறுக்கன் அப்படி என்ன செய்து தொலைத்திருப்பான் என்று கேள்வி குடைந்தது

அவனை அழைத்துக் கொண்டு சுந்தரேசன் பண்ணை வயலுக்குப் போய் சேரும் வரையிலும் வீரா மௌனமாகவே வந்தான். அவ்வப்போது உதடு கிழிந்த இடத்திலிருந்து மெலிதாக வழிந்த குருதியை எச்சில் தொட்டு நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். பண்ணை வயலில் இளநீர் குடித்து விட்டு மெதுவாக விசாரித்தபோதுதான் சரவணகுமார் அண்ணாச்சி ஏன் கட்டி வைத்து உதைத்தார் என்பது புரிந்தது.

“அண்ணாச்சி, நம்ம பால்துரை சார் அன்னிக்குக் கூட்டத்துல ‘என்னிக்கு கீழ்சாதிக்காரன் ஒருத்தன் மேல் சாதி கோவிலுக்குள்ள வந்து பூச பண்ணுறானோ அன்னிக்குத்தான் சாதி ஒழிஞ்சதுன்னு” சொன்னாரு. எனக்கு அதக் கேட்டதுலேயிருந்து தூக்கமே வரலை அண்ணாச்சி. எங்கப்பாவும் தர்மகர்த்தாதானே? அவரு கிட்ட போயி இதச் சொல்லுதேன் அவரு என்னடான்னா ‘எல, உனக்குக் கோட்டி கீட்டி புடிச்சிருக்கால’ன்னு கேட்டுட்டுப் போயிட்டாரு. இதுக்கு என்ன முடிவு கெட்டணும்னு பாத்தேன். நம்ம சங்கரன் இருக்கான்லா, அவனக் கூப்பிட்டேன். நேரே கோவிலுக்குப் போனேன். நம்ம பூசாரி இருந்தாரு. கோவில அப்பதான தொறந்தாங்க. கூட்டம் இல்ல. நான் போயி பூசாரி கிட்ட.”இன்னிக்கு சங்கரந்தான் பூச பண்ணுவான். நீங்க வெளியில போங்க’ன்னு சொன்னேன். அவரு மொதல்ல சிரிச்சாரு. ‘என்ன தம்பி வெள்யாடுதியளா’ன்னு கேட்டாரு. நான் வெளயாடலன்னு அவர் கிட்ட சொல்லாம சங்கரனப் பாத்து”சங்கரா இன்னிக்கு நீதான் பூச பண்ணுற’ன்னு சொன்னேன்”

“கேணத்தனமா இருக்கே?” என்றேன் நான்.

“எலேய், நெசமாத்தான் சொல்றியா? எதையும் செய்யுறதுக்கு முன்னால ஒண்ணுக்கு ரெண்டா யோசிக்க வேண்டாமா? இது என்ன சிறுபுள்ள வெளயாட்டா?” என்றார் ஜான் அண்ணன்.அவர் முகத்தில் அபூர்வமாகத் தென்படும் அதிர்ச்சி.

“என்ன அண்ணாச்சி, இப்படி சொல்லுதிய..நான் செஞ்சத பாராட்டுவீங்கன்னு பாத்தா இப்படி சொல்லி
நோவடிக்கிறீங்களே” வீரக்குமாரின் குரலில் இப்போது அதிர்ச்சியும் வருத்தமும்.

“என்னத்தப் பாராட்டுவாங்க?எதுக்குப் பாராட்டுவாங்க? நீ செஞ்சிருக்கற கோட்டிக்காரத்தனத்துக்கு உங்க அப்பா உன்ன வெட்டிப் போடாம இருந்ததே பெருசு” ஜான் அண்ணன் பதட்டத்தில் இருப்பது மிக அபூர்வம். புறங்கையைக் கட்டிக் கொண்டு அவர் உலவுகிறாரென்றால் பதட்டமாக இருக்கிறாரென்றுதான் பொருள். உலவிக் கொண்டிருந்தார் அவர். வழக்கம்போலவே நேரங்காலம் தெரியாமல் இப்போதும் சிரித்தான் தோசை.

“தோசை, இப்ப என்னதுக்கு தேவையில்லாம சிரிக்க?”

“காக்கா, எனக்கு அந்த பூசாரிய நெனச்சுத்தான் சிரிப்பு வந்தது” சொல்லி விட்டு அவன் சிரிக்க, ஜான் அண்ணன் அவனைத் திரும்பி முறைத்ததும் உடனே நிறுத்திக் கொண்டான்.

‘உங்க கோவில்ல இப்படி செஞ்சா மட்டும் சும்மா வுடுவியளா”ன்னு எவனோ கேட்டதற்குப் பொருள் இப்போது புரிந்தது. இதில் ஜான் அண்ணன் எப்படி சம்பந்தப்பட்டார் என்பதுதான் புரியாமல் இருந்தது. ஒருவேளை தன் பெயர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதுதான் அவரின் பதற்றத்துக்குக் காரணமாகக் கூட இருக்க வேண்டும்.

“சரி வீரா, என் மேல உங்கப்பா கோப்மா இருந்தாரே எதுக்கு?”

“நான் சங்கரனைப் பூச பண்ணச் சொன்னதும் பூசாரி வெளியில் ஓடிப் போயி எங்கப்பா கிட்ட சொல்லியிருக்காரு. அப்ப பாத்து அந்த சிவசு புள்ள வேற கூட இருந்திருக்கான்.ரெண்டு பேரும் உடனே கோவிலுக்கு வந்தாங்க. ‘எதுக்குல இப்படி செஞ்சே?’ன்னு எங்கப்பா கேட்டுக்கிட்டே அடிச்சாரு.

‘அடிக்காதீங்கய்யா,சாலாச்சி அம்மன் இவுரு பூச செஞ்சாதான் நல்லது செய்வாளா?சங்கரன் செஞ்சா ஒண்ணும் செய்ய மாட்டாளா’ன்னு திருப்பிக் கேட்டேன்.சிவசு என்ன அடிக்க கைய ஓங்குனாரு. அவரு கிட்ட ‘என்ன அடிக்குற வேலயெல்லாம் வச்சுக்காதீங்க’ன்னேன்.என்ன அடிக்க ஆரம்பிச்சாங்க. நான் அடிக்காதீங்கன்னு சொன்னேன். கேக்கல. ‘என்ன அடிச்சா கேக்க ஆளில்லன்னு நெனக்காதீங்கய்யா.. சான் அண்ணன் கிட்ட சொன்னா நடக்குற கதையே வேற”ன்னு சொன்னதும் எங்கப்பா ரொம்ப கோபமாயி அடிக்க ஆரம்பிச்சார். இதான் சமயமுன்னு அந்த வேசாமொவன் சிவசுவும் அடிக்க ஆரம்பிச்சுட்டான்.அவன் தான் எங்கய்யா கிட்ட உங்களப் பத்தி கோள் மூட்டிக்கிட்டே இருந்தான். அதான் எங்கப்பா என்னைக் கட்டி வச்சுட்டு உங்களக் கூப்பிட ஆளனுப்புனாரு.நானும் உங்களக் கூப்பிடச் சொன்னேன். வந்து எனக்கு பரிஞ்சு பேசுவீங்கன்னு பாத்தா அதுக்குள்ள கணேசன் எல்லாத்தையும் கெடுத்துட்டான். அதெல்லாம் இருக்கட்டும்ணே, நான் செஞ்சது என்ன தப்பா?”

“அப்புறம் என்ன சரியா?”

“சரியில்லன்னா அப்புறம் எதுக்கு சாதியப் பத்தியெல்லாம் பேசுதீங்க?”

“அது வேற இது வேற”

“எது வேற? இப்போ தப்புன்னு சொல்லுதீங்கள்ளா, ஆனா எனக்கு அது தப்பா தெரியல” எனக்கு வீரக்குமாரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. அவன் நிலையை உணர்ந்து கொள்வது சிரமமாக இருந்தது. எவ்வளவு பெரிய விசயத்தை எவ்வளவு அலட்சியமாக செய்ய முனைந்திருக்கிறான்? ரெண்டு வார்த்தை பாராட்டி விட்டால் நாளைக்கு இதுமாதிரி ஏதாவது செய்ய மாட்டானென்பதெற்கு எந்த நிச்சயமும் இல்லை. என்னைப் போலவேதான் ஜான் அண்ணனும் குழப்பத்துடன் காணப்பட்டார். தெரிந்தோ தெரியாமலோ வீரக்குமார் செய்தது ஜான் அண்ணன் தலைமீதுதான் விடிந்திருக்கிறது. அறியாத பையனை வைத்துக் கொண்டு எதையோ தூண்டி விட்டிருக்கிறார் என்பது போலத்தான் எல்லோரும் இனி பேசப் போகிறார்கள்.

கொஞ்சமும் யோசிக்காமல் வீரக்குமாருடன் குமாரப்பிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குப் போய் அவரை சமாதானப்படுத்தி நடந்ததற்கு மன்னிப்பும் கேட்டு, வீரக்குமாரை அழைத்து பூசாரி,சிவசு உள்ளிட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கச் சொல்லி விட்டு வீடு திரும்ப நள்ளிரவாகி விட்டது. சிவசு அண்ணாச்சி முரண்டு பிடித்தாலும் தோசைக்குப் பயந்தோ என்னவோ சமாதானமாகி விட்டார். வீரகுமாருக்கு தர்மகர்த்தாக்கள் கூடி அபராதம் விதிப்பதென்று தீர்மானம் செய்தார்கள். தொடர்ந்து ஒரு வார காலம் கொஞ்சம் பதற்றமாகவே இருந்ததென்றாலும் அதன் பின் எல்லா ஆரவாரங்களும் அடங்கிப் போய் விட்டது.

-o0o-

அதன் பிறகு ஒன்றிரண்டு முறை வீரக்குமாரைப் பார்த்திருந்தாலும் இப்போது பார்ப்பது மிக வித்தியாசமாக இருந்தது. நெற்றியில் பட்டையாக விபூதி. கழுத்தில் உத்திராட்சம். நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டதைப் போல,” அந்த சம்பவத்துக்கு அப்புறம் அப்பா உடஞ்சு போயிட்டார் காக்கா. மொதல்ல அத நான் புரிஞ்சுக்கல.வழக்கமான வீறாப்போடத்தான் நடந்து திரிஞ்சிக்கிட்டிருந்தேன். ஆனா, அவரோட கவலயப் புரிஞ்சுக்கிட்டபோது ரொம்ப வருத்தப்பட்டேன். அதுக்குள்ள அவருக்கு வாதம் வந்து படுக்கையில் அவிழுந்துட்டாரு. என்னாலதான் ஆடி ஓடிக்கிட்டிருந்தவரு விழுந்துட்டாருன்னு நெனச்சு எனக்குள்ள குத்த உணர்வு வந்திருச்சு. அவரை சந்தோசப்படுத்தணும்னு நெனச்சேன்.அவரு சந்தோசத்துக்காகவாவது கொஞ்ச நாள் வாழணும்னு நெனச்சேன். அவரை தூக்கிக்கிட்டு கோவிலுக்குப் போக ஆரம்பிச்சேன். அவரு சொன்ன பொண்ணையே கட்டிக்கிட்டேன். அதுல அவருக்குக் கொஞ்சம் சந்தோசம் வந்த மாதிரி இருந்தது. பழசயெல்லாம் மறந்து அவரு எங்கிட்ட நல்லா பேச ஆரம்பிச்சாரு. அவருக்கு நான் சந்தோசம் குடுக்குறது அந்த ஆண்டவனுக்குக் கூடப் புடிக்கல போலிருக்கு.” நிதானமாக வார்த்தைகள் வந்தது வீரக்குமாரிடமிருந்து. எனக்கு ஏதோ போலிருக்க நான் ஜான் அண்ணனைப் பார்த்தேன். நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது போல சலனமில்லாமல் நின்று கொண்டிருந்தார் அவர்.

“அவருக்காக ஆரம்பிச்ச பழக்கம் போகப் போக எனக்கும் சந்தோசமாவே இருந்தது. அப்படியே பழகிட்டேன் காக்கா. என்ன விடுங்க? நீங்க எப்படியிருக்கிய? நல்லா இருக்கியளா?”

தலையாட்டினேன். திருச்செந்தூர் நகரப் பேருந்து வர கல்லூரி மாண்வர்கள் குழுவொன்று ஆரவாரமாக இறங்கிப் போய்க் கொண்டிருந்தது. கேலியும் கிண்டலுமாக வாழ்க்கையின் மறுப்பக்கம் அறியாத ஆனந்த காலத்தின் உற்சாகம் ஒவ்வொருவரிடமும்..

“சரி, எங்க தூரமா?” ஜான் அண்ணன் கேட்டார்

“கோயிலுக்குத்தான். பையனுக்கு முடி வளந்திருக்கு. சடை இறக்கணும். அதான் திருச்செந்தூர் வரைக்கும் போவலாம்னு”

“சங்கரன் திருச்செந்தூருலதான இருககான்?” ஜான் அண்ணன் கேட்டார்

“எந்த சங்கரன்?”

“அதான் நான் பூச பண்ணச் சொல்லி கூப்பிட்டுட்டு போனம்லா..அந்த சங்கரன். என்னய நீங்கள்ளாம் சேந்து சமாதானப்படுத்திட்டியோ..ஆனா, சங்கரனுக்கு ஆளில்லள்ளா. அதனால சிவசுவும், கணேசனுமா ஆளவச்சு அவன அடிச்சு அவன் காலை உடச்சு, ஊர விட்டே தொறத்திட்டானுவோ.. நான் செஞ்ச தப்புக்கு அவன் ஊர விட்டுப் போயிட்டான்” கண்ணில் விழுந்த தூசியைத் துடைப்பது போல துண்டால் கண்ணீரை வீரக்குமார் துடைப்பதைக் கவனிக்கும்போது எனக்குள்ளும் என்னவோ போல இருந்தது.

“சரி வரட்டுமா? டிரைவர் வண்டில ஏறிட்டான். வண்டி பொறப்பட்டுடும்” சொல்லிக் கொண்டே வீரக்குமார் நகர, நான் அவசரமாக அருகிலிருந்த செந்தில் இனிப்பகத்தில் கொஞ்சம் இனிப்புகளை வாங்கிக்கொண்டேன். பேருந்தின் ஓர இருக்கையில் வீரக்குமார் மடியிலிருந்த அவனது பையனிடம் இனிப்பைக் கொடுத்து விட்டு, “தம்பி, உன் பேரென்னப்பா? என்றேன்.

“சங்..க..ரன்” என்று மறுமொழி வந்தது.

*
Thanks : Asif Meeran

குட்டிக்கரணம் – சென்ஷி

‘ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுதியில் இருந்து நன்றியுடன் போடுகிறேன் (விரைவில் pdf கிடைக்கும்!) – AB
*

என்னைக் கண்டால் எல்லோருக்கும் இளக்காரம் தான் போலிருக்கிறது. அகலமான கடைவீதியில் இத்தனை கூட்ட நெரிசலில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, மனைவியின் பழுதான செல்போனை சரிபார்க்க வந்தவனின் தோளில் இந்த வேதாளத்தை அமர வைத்திருக்கிறானே இந்த கடவுள். இவனை என்னவென்று சொல்ல! எல்லாம் என் நேரந்தான் என நொந்து கொள்ளதான் முடியும்.

யாரேனும் அவசரமாக, ஆறும் ஆறும் எத்தனை என்று கேட்டாலே, படபடப்பாக மூன்று விடைகள் கூறி, மூன்றுமே தவறாக சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்னை இப்படி நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்ய.

சிறுவயதிலிருந்தே எனக்கு பொய் சரியாக பேசவராது. சிறுவயதில் ஏதேனும் குறும்பு செய்துவிட்டு, அதை மறைக்கத் தெரியாமல் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டு விடுவது என் வழக்கம். அசடு என்று அதற்கு பட்டப்பெயரும் கூட கொடுத்திருந்தார்கள். ஏதேனும் இக்கட்டான சமயத்தில் பொய் சொல்லி விடலாம் என்று முயற்சித்தாலும் இந்த பாழாய்ப்போன சிரிப்பு வந்து கெடுத்துவிடுகிறது. எதிரில் நிற்பவர்களை பேச்சில் கவர்ந்து ஏமாற்றுவது ஒரு திறமையான கலை. தொழில்நுட்பத்தின் உச்சம். அது எனக்கு கைகூடாதது குறித்து எனக்கு எந்தவித வருத்தமும் இருந்ததில்லை . ஆனால் தற்சமயம் ஒரு பொய். திறமையாய் ஒரே ஒரு பொய் சொல்லி தப்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் சுற்றியிருப்போரில் எனக்குத் தெரிந்தவர் எவரேனும் இதை பார்த்துவிட்டு வீட்டில் சொல்லிவிட்டால் அவ்வளவுதான். இன்றைய இரவு சமையல் என்னைப்பற்றியதாகத்தான் இருக்கும். நல்லவேளையாக வீடு கடைவீதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ளது. முன்பு தூரம் காரணமாக சலித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்று சற்று நிம்மதியாக இருந்தது.

நமது மகாஜனங்கள் கூட்டமாய் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் வித்தை என்னவென்று தெரிந்துகொள்ள கூட்டத்தில் ஒவ்வொரு ஆளாய் தோளால் நகர்த்தி ஒதுக்கி விட்டு முன்னுக்கு வந்தால், முன்னால் நான் மாத்திரமே நின்று கொண்டிருந்தேன். மொத்தமே இரண்டு வரிசை கூட்டமிருந்திருக்காது போல. பின்னாலிருந்து எக்கிப் பார்த்திருந்தாலே, நடுவே என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும். அதைவிட்டுவிட்டு. சரி விடுங்கள். இதை சொன்னால் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போலாகிவிடும்.

டப.. டப.. டப.. என்று சுற்றிலும் சத்தம் கேட்டது. சற்று கஷ்டப்பட்டால் என் முட்டிக்காலைத் தொட்டுவிடும் உயரம் கொண்டவன், தன் கழுத்தில் கிடந்த அவன் அளவுக்காக செய்து வைத்தாற் போலிருந்த, அந்த மேளத்தை அடித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய தலைவன் கையில் வைத்திருந்த கயிறை சுற்றிக்கொண்டே கூட்டத்தைப் பார்த்து கரகோஷத்திற்கு வேண்டி சலாம் வரிசைக்காக குதித்து கால் தரையில் படாமலேயே காற்றில் இரண்டு கரணங்கள் அடித்தான். எனக்கு வயிறை கலக்கியது. தடாலடியாக இந்த பெர்ர்ய மன்சனும் சலாம் போடுவாரு சாம்யோவ் என்று கத்திவிடக்கூடாதென்று மூணு கண் ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்.

தைரியத்துடன் கூட்டம் விட்டு நகர்ந்து விடலாம்தான். ஆனால் அத்தனை சாமர்த்தியம் எனக்கு ஏது. பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். பெரிதாய் ஒன்றுமில்லை என் தோள் மேல் வித்தை காட்டுபவனின் குரங்கு ஏறிக்கொண்டது. அதை இறக்கிவிட வேண்டும் அதற்குத்தான் இந்த பிரம்மபிரயத்தனம். பல்லி மேல் விழுந்த தோஷம் பற்றியெல்லாம் காலண்டர் படித்து எனக்கு நல்ல மனப்பாடம். கறுப்பு பூனை இடமிருந்து வலம் அல்லது வலமிருந்து இடம் நகர்தலில் வெளியே செல்லாது உள்ளே உட்கார்தல் நியமம். வெளியிலிருந்து உள் நுழைகையில் இப்படியானால், ஒரு தெரு சுற்றிவிட்டு வந்துவிடுவேன். வாசல் விட்டு நகர்கையில் தலை வாயிற்படியில் முட்டினால் தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லாம் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் குரங்குக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

வீட்டில் அவசர வேலை இருக்குது என்று பொய் சொல்லிவிடலாம்தான். ஆமாம். பொய்தான். வீட்டில் எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. இன்று விடுமுறை தினம். குழந்தைகள் இருப்பதால் தொலைக்காட்சியின் அருகில் கூட நம்மை அமர விட மாட்டார்கள். அவர்களுக்கான நேரம் இது. சமையலறையில் மதிய சாப்பாட்டிற்கு மனைவி தயார் செய்து கொண்டிருப்பாள். அவளுக்கு தேவையானதையும் நேற்றே வாங்கிக் கொடுத்துவிட்டேன். காலை காப்பி குடித்துவிட்டு, அவளது சப்தம் குறைவாக கேட்கும் கைபேசியை சரி செய்ய கொண்டு வந்ததுதான் இங்கு பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கக்கூடும்.

நல்லவேளையாக வெயில் அதிகம் இல்லை. உடல் சூடு, பித்தம் ஏறிக்கிடப்பதால் காலை காப்பிக்கு பதிலாக விடுமுறைதானே என்று, கஷ்ட கஷாயத்தை அவளது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு குடிக்க வைத்துவிட்டாள். அரை லிட்டர் கஷாயத்தை குடித்துவிட்டு கசப்பிற்கு வெல்லத்தை அவளுக்கு தெரியாமல் நாக்கில் தொட்டுக் கொண்டேன்.

குழந்தைகளின் விளையாட்டில் கூட எனக்கு சரியாக விளையாடத் தெரியவில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் மகளிடம், தந்தை ஒரு குரங்கின் இஷ்டபிடியில் கட்டுண்டு இருப்பதை பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும். அய்யோ என் ஃபிரண்ட்ஸெல்லாம் என்னை கேலி செய் வாங்க என்று தேம்புவாள். அப்பன் கஷ்டம் அவளுக்கெங்கே தெரியப்போகிறது. கூட்டத்தை திரும்பிப் பார்க்கலாமென்றால் கழுத்தை திரும்பும்போது குரங்கு தலைமேல் வைத்திருக்கும் கைகளால் கீறிவிடுமோ என்று பயத்தால் திரும்பாமலே நின்று கொண்டிருக்கிறேன்.

ஆனால் பயந்ததுபோல அல்ல. ஒரு குழந்தை போலதான் குரங்கு என் மேல் தாவி ஏறியுள்ளது. கடைசியாய் என்னை தூக்க நச்சரித்த குழந்தை யாருடையது என்று யோசித்துப் பார்க்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு உடன் வேலை செய்யும் செல்வராஜின் குழந்தையை பார்க்க புது வீட்டிற்கு போன போது, ஆசையாய் கையில் வாங்கியது நினைவுக்கு வருகிறது. கைக்குழந்தை என்பதால் எந்த சேட்டையும் இல்லாமல் அமைதியாக வந்துவிட்டது. பிடித்த வெள்ளைத்துண்டு பதறாமல் திரும்ப கொடுக்கும் வரை எனக்குதான் பதற்றம் கூடியிருந்தது. வேறு எந்த குழந்தையும் என்னிடம் ஓடி வந்து ஏறியதெல்லாம் இல்லை. என் குழந்தைகளையே ‘அப்பா… பார்த்தா திட்டுவார். கேட்டா உதைப்பார்’ என்று சகதர்மிணி சொல்லி சொல்லி சொந்த பிள்ளை நெருக்கமும் சற்று தொலைவில்தான் இருக்கிறது. அவர்களுக்கு தேவையானதையும் அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்திருப்பதால் அப்பாவுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை என்ற நன்மதியுடன் வளர்கிறார்கள்.

குரங்கை கொண்டு வந்தவன் பாம்பையோ கீரியையோ கொண்டு வந்திருந்து அது என் மேல் தாவியிருந்தால் என் நிலை என்ன ஆவது. சிலர் கரடியைக் கட்டிக்கொண்டுபோகும் காட்சியையும் கண்டிருக்கிறேன். அல்லது யானை, ஒட்டகம். தாங்கக்கூடிய உடலா என்னுடையது.

கண்களை மேலேயுயர்த்தி குரங்கை பார்க்க ஆசைப்பட்டேன். பின் தோளில் அதன் வால் நீண்டு ஜடைபோல முதுகில் கிடக்கும் போல. அவ்வப்போது ஆட்டி ஆட்டி முதுகில் கூச்சத்தை உண்டாக்கியது. கல்யாணமான புதிதில் பெரிய பின்னலைப் போட்டு வந்த மனைவியின் நினைவு. நாளாக ஆக ஜடை சிறுத்துபோன பின்புதான் தெரியவந்தது. அத்தனை நீளம் சவுரிக்குதான் என்று. மாட்டு வால் மாதிரி பெருசா மசுரை வளர்த்து கட்டி தெருவையா கூட்டப்போறா என்று எனக்குத் தெரிந்த பழமொழி கொண்டு என்னை நானே தேற்றிக் கொண்டேன். இருப்பினும் பெரிய பின்னல் இன்னமும் ஒரு கவர்ச்சிதான். மனைவியின் முன்னால்தான் தைரியமாக சொல்லிக் கொள்ள முடியாது.

கூட்டத்திடமிருந்து கைதட்டல் வந்தது. நான் எந்த வித்தையும் காட்டாமல் கை தட்டுகிறார்களே என்று முகத்தைத் திருப்பினால், அந்த முட்டிக்கால் பொடிசுக்கு தங்கை போல ஒருத்தியை மூங்கில் கம்பில் மேலே ஏற்றி, மூங்கில் கம்பை தன் மூக்கின் மேல் வைத்துக் கொண்டிருந்தான். இரண்டு விரற்கடை இடுப்பு தெரிகிற சிறிய சட்டையும் முட்டி மேல் வரை வரும் பூப்போட்ட பாவாடையும் போட்டுக்கொண்டு கீழே நடனமாடிக்கொண்டிருந்தவள் எப்படி மேலே ஏறினாளென்று தெரியவில்லை. எந்த வித்தையையும் இந்த குரங்கு காண வைக்காமல் கெடுத்துவிடும் போலிருக்கிறது. அந்த சிறுமி மூங்கில் கம்பின் மேலே விமானம் போல கைகளை விரித்து அந்தரத்தில் பறப்பது போல சாகசம் காட்டினாள். நேரிடையான சூரிய வெளிச்சம் கண்ணை உறுத்தாமல் காணக்கூடிய அளவு போகும் விமானம்.

மூங்கில் கம்பை திடுமென கீழே விட்டதும், விமானம் சட்டென்று கீழே தலைவனின் கைகளில் வந்து சேர்ந்தது. இதைப்போலவே இன்னும் இரண்டு மூன்று முறை கைதட்டல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த குரங்கை வைத்து எப்போது வித்தை ஆரம்பிப்பார்கள். இதை இழுத்து போனால் போதுமென்று இருக்கிறது . தலைவனை பார்த்து ஒரு கண்ணசைவில் குரங்கை எடுத்துவிட சொல்லி மன்றாடிவிடவேண்டியதுதான் என்று எண்ணினேன். அதற்குள் அவனே, ‘வா ராஜா. வா.. அடுத்த ஷோ இருக்கு’ என்று தலைமேலிருந்து உதிர்ந்த பூவை எடுப்பது போல குரங்கை எடுத்துவிட்டான்.

அவசரமாக ஏறி விட்டதில் குரங்கின் முகத்தையும் உருவத்தையும் முன்பு சரிவர பார்க்கவில்லை. இப்போது பார்க்க முடிந்தது. குட்டிக் குரங்குதான். மேலே ஏறிய கனத்தை வைத்து அனுமானித்தால் அதிகபட்சம் இரண்டு கிலோவுக்கு மிகாது. என்னால் மனிதர்களையே சரியாக எடை போட முடிவதில்லை. ரகவாரியாக பிரித்துவைக்கும் அரிசி போல ஒவ்வொருவரும் ஒரு ரகம். இதில் குரங்குக்கு எங்கே. தோள் வலி ஏதும் இருக்கிறதா என்று தோளை அசைத்துப் பார்த்தேன். அப்படி எதுவும் தெரியவில்லை .

கூட்டத்தின் மையத்திலிருந்து நகர்ந்து கூட்டத்தாருடன் இணைந்து நின்றேன். கூட்டம் சட்டென்று சற்று வழிவிட்டு விலகி நின்றது. குரங்கைத் தூக்கிய வனாயிற்றே. அந்த ஜம்பத்திலிருந்தே முகவாயை கொஞ்சம் மேலாக்கி வித்தையை பார்க்க ஆரம்பித்தேன். போகும்போது குழுவுக்கு ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் போட்டுவிட வேண்டியதுதான் என்றும் தோன்றியது. இத்தனை நேரம் என் மேல் ஒட்டியிருந்துவிட்டு குட்டி குரங்கு அதன் தலைவனின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தது. எனக்கோ எனது உறுப்பையே அறுத்துக்கொண்டு போய் அவன் முன் நிற்பது போல் இருந்தது. சில நொடிகள் நானும் குரங்கும் வேறல்ல என்ற எண்ணம் தான் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்தது. என்ன வேண்டுதல் கேட்டோ இங்கு அலைகிறது இச்சென்மம். எல்லாவற்றையும் துறந்து இதனால் ஓடித் தப்பிக்க இயலாதா? குறைந்த பட்சம் அருகிலிருக்கும் உயர்ந்த மரத்தில் ஏறிவிட்டால் கூட இவனை பிடிக்க முடியுமா குழுவால்?

மிகவும் சிறிய குரங்கு. உருவம் சிறுத்த அனுமார். இதை வைத்து என்ன வித்தைக் காட்டுவான். மூங்கில் மேல் ஏற வைப்பானோ, தீயை வளர்த்து தாண்ட வைப்பானோ? குட்டிகரணம் அடிக்க தெரியுமா இக்குரங்கிற்கு. எங்கு வைத்து வித்தை பழக்கியிருப்பான். இதன் தாய் இதை தேடிக்கொண்டிருக்குமா? அனுமனின் அம்சம் ராவணனுக்கு சவால் விட்ட வம்சம். வாலைச்சுருட்டி வித்தை காட்டி அதன் மேல் அமர்ந்ததைப் போல அமர்ந்திருந்தது என் மேல். ஒரு அரை மணி நேரத்திற்கு ராஜ வம்ச பிரதிநிதியாகியிருந்தவன். ஜகஜ்ஜோதியாக என்னை தன் இருக்கையாக்கிக் கொண்டவன். சினிமாவில் குரங்கின் சாகசங்களெல்லாம் நினைவில் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய நாய்க்கு கட்டும் சிவப்பு நிற பட்டை வார் ஒன்றை குரங்கின் கழுத்தில் கட்டி, அதன் மறுமுனையை தன் கையில் எடுத்துக்கொண்டு, குரங்கின் கையில் ஒரு அலுமினிய பாத்திரத்தைக் கொடுத்தான். குரங்கும் தன் வித்தை எதுவென தெரிந்துவிட்டதுபோல, கூட்டத்தில் ஒவ்வொருவர் முன்னும் நின்று காசுக்காக தட்டேந்திக் கொண்டு நின்றது.

*

நன்றி : சென்ஷி

‘புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம்!’ – முஹம்மது யூசுப்

சென்ற வெள்ளிக்கிழமை சார்ஜாவில் நடைபெற்ற ‘மணல் பூத்த காடு’ விமர்சனக் கூட்டத்தில் நாவலாசிரியர் யூசுஃபின் ஏற்புரை , முகநூலிலிருந்து நன்றியுடன்…

உலக வரைபடத்தின் மூலை முடுக்கு எல்லாம் செல்ல விருப்பமா ஒரு நூலகம் செல் – எனும் டெஸ்கார்டெஸ் அவர்களின் வாக்கியத்தோடு ஆரம்பம் செய்கிறேன்.

நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் பிரியங்கள் கலந்த வணக்கம்.

சமகால எழுத்துலகின் ஜாம்பாவன்களாகக் கருதப்படும் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா போன்ற என்ற எந்த ஒருவரின் ஆதரவும், பின்புலமும் (வட்டத்திலும்) இல்லாத,

கனவுப் ப்ரியன் என்ற பெயரில் இரண்டு சிறுகதைத் தொகுப்பு எழுதி,

முஹம்மது யூசுஃப் என சமகால எழுத்துலகிற்கு அறிமுகமே இல்லாத புதுப் பெயராக மாற்றிக் கொண்ட பின்பும்,

முழுக்க இஸ்லாமிய நாடான சவூதி பற்றிப் பேசும் 445 பக்கம் கொண்ட தடிமனான இந்த புத்தகத்தை வெளியிட முன் வந்த யாவரும் பதிப்பகத்திற்கும்,

சென்னை புத்தக கண்காட்சியில் யாவரும் பதிப்பகத்தில் அதிகமாக விற்ற இரண்டாவது புத்தகம் என்ற பெருமையைத் தந்த, தொடர்ந்து வாசித்து கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறியவனாக ஏற்புரையை ஆரம்பம் செய்கிறேன்.

“ லவ்லல் இக்திலாபு லஹலக்கல் உலமா “ என்கிறது அரபுப் பழமொழி.

கேள்விகள் இல்லை (கருத்து வேற்றுமை) என்றால் அங்கு அறிஞர்கள் இல்லை.

இந்த மணல் பூத்த காடு நாவலே கேள்வியில் இருந்து பிறந்தது தான். அதனால் இந்த ஏற்புரையை “ நாவலில் என்ன எழுத வேண்டும்..? / நாவலை எப்படி எழுத வேண்டும் / இந்த நாவலை ஏன் எழுத வேண்டும் என மூன்று பிரிவாக பேசலாம் என எண்ணியுள்ளேன்.
என்ன எழுத வேண்டும்

ஒரு நாள் அதிகாலை 6 மணிக்கு எனது பணி நிமித்தம் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலை செய்யும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து போன் வந்தது.

அதிகாலை ஒரு பெண்ணிடம் இருந்து போன் என்றதும் ஏதோ அவசரம் என்பதைப் புரிந்தவனாக வேகமாக போன் அட்டெண்ட் செய்தேன்.

“ என் குழந்தைக்கு சுகமில்ல, நேத்து டாக்டர்கிட்ட போய் காட்டிட்டு வந்தோம். காது வலின்னு மருந்து கொடுத்தார். வீட்டுக்கு வந்த அப்புறமும் குழந்தை அழுகிறாள் அதுவும் பயந்த மாதிரி உடம்பை உதறி திடீர் திடீர்ன்னு வீறிட்டு அழுகிறாள். ஊருக்கு போன் செய்து அம்மாவிடம் கேட்டேன். அங்க ஏதாவது பள்ளிவாசல் கூட்டிட்டு போய் ஓதி காட்டச் சொல்லு சரியாயிரும்ன்னு சொன்னாங்க. ஊருல (இந்தியால) இருக்கிற மாதிரி இந்த ஊருல ஓதிக் காட்ட எந்த பள்ளிவாசல் போகனும்னு தெரியல. எங்க போகனும் “

“ இங்க அப்படி யாரும் ஓத மாட்டாங்க பள்ளிவாசல்ல “

“ ஏன் இந்தியாலேயே ஓதுறாங்க. இது அரபு நாடு இங்க ஓத மாட்டாங்களா “

“ இல்ல “

“ அதான் ஏன், உங்களுக்கு உண்மையிலே தெரியுமா தெரியாதா “

“ உண்மையிலே ஓத மாட்டாங்க “

“ குழந்தை நைட் முழுக்கத் தூங்கல. நாங்களும் தான். பாப்பாவ பாக்க கஷ்டமா இருக்கு. வேலைக்குப் போக மனசில்ல “

“ ம்ம்….ஒன்னு செய். உன் புருசனை என்னோட ரூமுக்கு வரச் சொல் “

பத்து நிமிடத்தில் அவளது கணவன் என்னுடைய பிளாட் வந்து நின்றான்.

அவன் வண்டியில் ஏறியதும் “ எங்க போகனும் , அந்த ஆள் எங்க இருக்கார் “

“ நான் தான் அந்த ஆளு. நேரா வீட்டுக்குப் போ “

“ நீயா “

“ ஆமா”

அவள் வீடு சென்று ஒலு செய்து “ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். ஹதம்து பில்லாஹில் அலீயில் அலீம் வபி ஹக்கி ஹாத்திமி சுலைமான் இப்னு தாவுது அலைஹிஸ்ஸலாம் “ என்றபடி ஓத ஆரம்பித்தேன்.

மறுநாள் மதியம் எனது அலுவலகம் வந்த அவளின் கணவர் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் உடன் “ உங்க கிட்ட பேசனுமே. கீழப் போய் பேசலாமா “ என்றதும் இருவரும் அருகில் இருக்கும் காபி ஷாப் சென்றோம்.
காபி வரும் முன்னே அவரது கேள்வி ஆரம்பம் ஆகி விட்டது. “ ஏன் இங்க உள்ள பள்ளிவாசல்ல ஓதுறது இல்ல “

“ அது அவுங்களின் சித்தாந்தம் “

“ அது என்ன சித்தாந்தம் “

“ வஹாபியிசத்துல இது கூடாதுன்னு சொல்லுவாங்க “

“ அது என்ன வஹாபியிசம்….? என கேள்விகளாகத் தொடுத்தவர்.

“ என்னென்னமோ எழுதுறீங்க. இதை எழுதுங்கங்க “ என்ற அந்தச் சொல், கோவில்பட்டி எழுத்தாளர் உதய சங்கர் அவர்கள் கூறிய “ இனி நீ நாவல் எழுது..? “ என்பதற்கும் “ என்ன எழுத வேண்டும் “ எனும் தேடலுக்கும் பதிலாக இருந்தது.

இனி எப்படி எழுத வேண்டும்…

“ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்று நாவல்களில் ஒரு வகைமை உண்டு. ஆர்ட் வேறு கிராப்ட் வேறு. இது இரண்டையும் ஓரளவுக்கு வாசிக்க தகுந்தாற்ப் போல சேர்த்து கொடுப்பது தான் டாகுமென்ட்ரி பிக்சன்.

ஐந்தும் ஆறும் இருந்தால் அறியாதவளும் கறி சமைப்பாள் – என்பது வட்டாரப் பழமொழி.

முதல் ஐந்து – எண்ணெய், கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, சிறுபருப்பு – தாளிப்பதற்காக, பின்னம் உள்ள ஆறு – காய்கறிக்கு காய்கறி மாறுபடும்.

1.இஸ்லாமிய வரலாறு இடங்கள்

  1. பிரிட்டனின் சதியால் உண்டான வஹாபிய அரசியல்
  2. நாத் எனும் பாடல் முறை அது வழியாக கூறும் சூஃபியிசம்
  3. வளைகுடா பற்றிய சினிமாக்கள்
  4. ஈராக், சூடான், எகிப்து, ஜோர்டான், ஏமன், குவைத், பஹ்ரைன் இத்தனை நாடுகளின் எல்கையைத் தொட்டு நிற்கும் பல்வேறு அரேபிய ஊர்கள்.
  5. சுபைதா எனும் சிறுமி மூலம் இஸ்லாமிய சிறுவர்களுக்கான கதைகள்.
  6. 30 வித விதமான மருத்துவக் கருவிகள்
  7. மறந்து போன கடிதப் போக்குவரத்துகள்
  8. அல் குர்ஆன், ஹதீஸ், அரபிப் பழமொழிகள்
  9. அயல்வாசிகளின் ஒரே மாதிரியான சைக்கிளிங்க் வாழ்வு முறை
  10. அனீஸ் என்பவனின் வேலை சார்ந்த பயணம்.

கிறிஸ்மஸ் ட்ரீ போல தோழப்பா எனும் ஒருவர் கூறும் வஹாபிய வரலாறு மேலை நாடுகளின் அரசியல் எனும் நேர் கம்பில் மற்ற பத்து பாகங்களையும் சின்ன சின்னதாய் கிளைக் கதைகள் கொண்டு டாக்குமென்ட்ரி ஃபிக்சன் எனும் வகைமையில் நாவல் உண்டாக்கப்பட்டது.

முன்னுரையில் “ இது நடையாடி ஒருவனின் கால்களால் எழுதப்பட்ட கதை. உங்களுக்கு பயணங்கள் விருப்பமா, தகவல் கொண்டாடியா, புதிய செய்திகளின் மீது ஆர்வமா அப்படியானால் இந்த எழுத்து உங்களுக்கானது “ என்ற அறிமுகத்துடன் “ டாகுமென்ட்ரி ஃபிக்சன் “ என்ற வகையில் தான் இந்த நாவல் உள்ளது என உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.

கூடவே ஒரு வீடியோ டீசர். அதிலும் ஒரு பூனை மட்டுமே வரும். மற்ற எல்லாமே இடங்கள் சார்ந்த படங்கள் தான் அந்த வீடியோவில் உண்டு. அதிலும் இது பயணம் சார்ந்த கதை என முன் கூட்டியே சொல்லப்பட்டு விட்டது.

ஆக இது கிற்ஸ்மஸ் ட்ரீ என்றுச் சொல்லித்தான் உங்களை உள்ளே அழைத்துச் சென்றேன்.

கிற்ஸ்மஸ் ட்ரீயை மரம் அல்ல என்று கூற யாருக்கும் உரிமை இல்லை.

இதுவரை நீங்கள் எப்போதும் வாசிக்கும் உங்களுக்குப் பழக்கப்பட்ட / தேடிய வேப்பமரம் அல்ல இது என்பதை வேண்டுமால் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஜோர்டான் நாட்டு பெட்ரா சென்றவர்கள் இங்கு யாராவது இருக்கிறீர்களா…..?

நன்றி.

நாவலின் முதல் பாகத்தில் நான் எழுதி இருக்கும் பெட்ரா பற்றிய வர்ணனையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறுபவர்கள் இங்கே இருக்கிறீர்களா..?

நன்றி.

நான் பெட்ராவே சென்றதில்லை. அங்கு செல்லாமலே, இதுவரை நான் பூனையை வளர்க்காமலே, நண்பன், சுபைதா என்ற பெண் குழந்தை உடன் மதின் சாலே ஒட்டக பயணம் செல்லாமலே, தோழப்பா, ஜலால் சாச்சா, ஷேக் பாய், முஜிப், சித்ரா ஸ்ரீனிவாசன் என புனைவைத் தெளித்த எனக்கு முழு நாவலையும் கதையாக எழுதுவது என்பது பெரிய காரியம் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் புனைவு எழுத நல்ல கற்பனை வளம், அழகிய மொழி கையாளுதல், சிறந்த சொற்கள் இருந்தால் போதும்.

“ டாக்கு ஃபிக்சன் “ எழுத நிறைய உழைக்கனும்.

சித்ரா எனும் கதாபாத்திரம் ஒரு நாவலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதற்காக நிறைய தேர்வு செய்து அதிலிருந்து தபுல ராஜா என்ற தமிழ் வார்த்தை இருந்ததால் “ யே இப்னு இஹ்சான் “ நாவலைத் தேர்ந்து எடுத்து 157 பக்க பிடிஃப்பை முழுமையாக வாசித்து அந்த நாவல் பற்றிய ஒரு வரி ஒரே ஒரு வரி இந்த நாவலில் வந்துள்ளது.

இந்த நாவலுக்காக பார்த்த சினிமா, வாசித்த புத்தகங்கள், தேடிய தகவல்கள் என நாவலுக்கு உண்மையாக இருந்திருக்கிறேன்.

ஏன் இவ்வளவு மெனக்கெடனும் அதற்கான அவசியம் என்ன, என்ற கேள்வி வருகிறது. இனி, ஏன் இப்படி எழுத வேண்டும்..

இத்தனை வருட கால பாரம்பரியத் தமிழ் எழுத்துப் பரப்பில், ஆயிரகணக்கான எழுத்தாளர்கள் கொண்ட தமிழ் எழுத்துலகில் சவூதியைப் பற்றி இதுவரை மூன்று நாவல்கள் தான் வந்துள்ளன.

புன்யாமின்னின் “ ஆடு ஜீவிதம் “ அதுவும் நேரடி நாவல் கிடையாது.

ஆக, மீரான் மைதீனின் எழுதிய “ அஜ்னபி “க்குப் பின்
முஹம்மது யூசுபின் “ மணல் பூத்த காடு “ மட்டும் தான் மீதம் இருக்கு.

ஏன் யாரும் எழுதல..?

பயணக் கட்டுரை புகழ் இதயம் பேசுகிறது மணியன் உலகத்தின் பல இடங்கள் பற்றி எழுதினார்.

சாதுர்யமாக இந்த மண்ணைத் தவிர்த்து விட்டார். ஏன்..?

தினத்தந்தி போன்ற பத்திரிக்கைகளில் ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய 6 பள்ளி மாணவிகளின் தலையை வெட்ட சவூதி அரேபியா அரசு உத்தரவு – என்ற பெயரில் போட்டோவுடன் கூடிய செய்தி வந்து விடுகிறது.

எங்க நடந்துச்சு. அது தெரியல ஆனா இன்னும் இருக்கு பாஸ் – அப்படியா நீங்க பாத்திருக்கீங்களா -இல்ல அங்க ஒருத்தர் சொன்னார்…… இது ஏன் நிகழ்த்தப்படுகிறது ஆதாரம் இல்லாமலே.

விஸ்வரூபம் படத்தில் கமலஹாசன் படத்தின் இறுதியில் வில்லனின் மகனை படிக்க அனுப்பிவிட்டதாகக் கூறுவார்.

அதாவது முட்டாத் துலுக்கங்களா போய் படிங்க என்பார் தீவிரவாதத்தைத் தடுக்க அவதரித்த ISS எனும் உளவுப்பிரிவின் MI 5 க்கு உதவும் இந்திய உளவுத் துறை அதிகாரி.

பலரூபங்களில் உருவாக்கப்படும் இஸ்லாமியர்கள் பற்றிய பொது கட்டமைப்பு.

நம்ம ஆளு அதுக்கும் மேல தமிழ் நாட்டுல மட்டும் 56 இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கு.

நோன்பு காலம் வரப்போகிறது 8 ரகாஅத் 20 ரகாஅத்-ன்னு அடிச்சிக்குவான்.

“ ஹுப்புல் வதன் மினல் ஈமான் “ – ன்னு நபிகள் பெருமான் சொல்லி இருக்காங்க. அதாவது சொந்த நாட்டை நேசிப்பது ஈமானைப் போன்றது. ஈமான் என்பது உயிருக்குச் சமமானது.

அரசியல் கட்சி வரும் போகும். சொந்த நாட்டின் மீது அக்கறை இல்லையா பற்று வரலையா போய் சாவு உன்ன யாரு உயிரோட இருக்கச் சொன்னாங்க என்பது தான் அந்த வாக்கியத்தின் கொச்சை மொழி.

நீண்ட வருடங்களுக்குப் பின் RSS ஊர்வலம் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்ததும் நடந்தது. நினைவிருக்கலாம் பலருக்கும். RSS ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தீங்க என்று கேட்டதற்கு அதே நாளில் தாம்பரத்தில் ஓர் இஸ்லாமிய இயக்கம் மாநாடு நடத்த அனுமதி வழங்கியதை காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

நாகர் கோவிலில் பொன்னார் எந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் நிற்கிறார். மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகம் பெரும்பான்மை மக்களை கோபத்திற்கு ஆளாக்குது

கோவையில் பாருகை வெட்டியது யார். போலிஸ் ரெக்கார்ட்களின் அதிக இஸ்லாமிய பெயர்கள் சேர்ந்தது புட்ற்றீசல் போல புதிய புதிய இயக்கங்கள் வந்த பின் தான்.

டிசம்பர் 6 ஊர் முழுக்க சுவர் விளம்பரம் பாபரி மஸ்ஜிதை மீட்போம்ன்னு. பெருநாள் என்றும் பாராமல் அன்றும் கூட கருப்பு உடை அணியும் இஸ்லாமிய ஒரு கூட்டம். ஒவ்வொரு கோயிலிலும் போலிஸ் பந்தோபஸ்து. அதை காரணம் காட்டி கோயில் வரும் பக்தர்களை பரிசோதிக்கும் காவல்துறை. ஏன் என்று கேட்டால் கிடைக்கும் குண்டு வைத்துவிடுவார்கள் என்ற பதில். எரிச்சல் வருமா வராதா கோயில் வந்தவனுக்கு.

பிஜேபி எப்படி ராமர் கோவிலை கட்டாதோ அதை மாதிரி தான் இதுவும்.

இஸ்லாமிய புதிய புதிய இயக்கங்கள் பெருநாளின் நாட்களை ( ரமலான் 4 நாள் வேறு வேறு நாட்களில் கொண்டாடுகின்றன) அதீகரிப்பதில் மக்களை பிளவு படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

சிப்பாய் கலகம் தொட்டு இன்றைய வினாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் வரை இந்து- முஸ்லீம் மட்டும் சண்டை போட்டபடி உள்ளார்கள். எங்கே இவர்கள் ஒற்றுமை ஆகிவிடுவார்களோ என்று யாருக்கோ பயம்.

யார் அந்த யாருக்கோ அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்ன என்பதை இந்த நாவலில் சொல்ல முயற்சித்து உள்ளேன்.

சென்ற வாரம் கூட முகனூலில் சண்டையில் நிஷா மன்சூர் கமேண்டில் யூசுஃப் மணல் பூத்த காட்டில் விரிவாக எழுதி உள்ளார் வாசிக்கவும்ன்னு சொல்லி இருந்தார்.

ஆக, என்னோட வேலை நான் செய்து விட்டதாகத் தான் கருதுகிறேன்.

ஊடகத்தின் “ நுண்ணிய அரசியல் கட்டமைப்பு “ வழியாக / வன்முறை வளர்த்தெடுக்க நினைக்கும் இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக இந்த நூலின் தரவுகளை தாராளமாக நீங்கள் முன் வைக்கலாம். அதில் அதற்கான தகவல்கள் உள்ளன.

வீட்டு கல்யாணம், வியாதி, படிப்பு, நடுத்தர மக்களின் தேவையை நிறைய பூர்த்தி செய்வது இந்த வளைகுடா மண் தான். தைரியமா போ அந்த மண்ணுக்கு – அப்படின்னு நம்பிக்கை கொடுக்கிறது இந்த நாவல்

அதுக்காக இவ்வளவு தகவல் தேவையா அப்படின்னு நிறைய பேர் கேட்கிறார்கள்.

நண்பர் இங்கே குறிப்பிட்டார் “ 23 F “ சீட்டில் அமர்ந்திருந்தான். அப்படின்னு இருக்கு. பிளைட்டில் இருந்தான்னு சொன்னா போதாதா 23 F வரைக்கும் எழுதனுமா என்று.

“ A-B-C——D-E-F ” F ன்னா என்ன அர்த்தம் ஜன்னலோர சீட். ஜன்னலோர சீட்ட யார் விரும்புவா பயணப்படுபவன் தான்.

ஏர் போர்ட் உள்ளே நுழைஞ்சதும் போர்டிங்கில் உள்ளவன் டிக்கெட் தருபவன் எதிரே நிற்பவனின் முகபாவத்தை வைத்தே முடிவு செய்து விடுவான். “ இந்த ஆளு மொத தடவையா பாரின் செல்கிறான் இவனுக்கு ஒன்னும் தெரியாது. கடைசியில உள்ள வரிசையில் சீட் புக் செய்தால் போதும் “ என்று.

அனீஸ் போன்ற இதுவரை வெளி நாடு செல்லாத பயந்தாங்கொள்ளிக்கு ஜன்னலோர சீட் எனும் பயணம் விதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அவன் விரும்பி பயணம் செய்யவில்லை. கடன் எனும் நிர்பந்தம் அவனை தனியாக அந்த நாடு முழுக்க பயணிக்க வைக்கிறது.

உங்களுக்குத் தகவலாக தெரிவதை சற்று உள்வாங்கி உற்று நோக்குங்கள் அதன் பின்னால் ஒரு கதை இருக்கும்

வாசகன் போலவே அவனும் புதிது புதிதாக ஒவ்வொரு செய்தியும் தகவலும் கேட்டு பார்த்து படித்து அறிந்தபடி கடந்து செல்கிறான்.

அவனுக்குள்ளும் தோழப்பா சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுந்தபடி உள்ளது.

கேள்விகள் தொடர்ந்தபடி உள்ளன. தகவல்களும் தான்.

புனைவுக் கதை எப்போ வேணாலும் எழுதலாம். எங்க போகப் போது.

இப்போதைய சமூகத்தின் தேவை நல்லிணக்கம்.

நன்றி வணக்கம்.

**

தொடர்புடைய பதிவு :
“ சான் ராத் ” – கனவுப் பிரியன்

« Older entries