கஷ்டத்தை கஷ்டமா நெனச்சாதான், கஷ்டம் கஷ்டமா தெரியும்! – மஜீத்

பள்ளம் , மேடு என்று ஏதேதோ எழுதி இந்த வில்லங்கம் அனுப்பியிருக்கிறதே.. அர்த்தம் வேறு மாதிரி வருமே என்று பயந்துகொண்டே வாசித்தேன். சே, ‘துஆ’ கேட்கும் பயங்கரமெல்லாம் இல்லை. இது ஆன்மீகமாக்கும்.  ‘God Is Not a Solution – but a Problem’ என்று நம் ஓஷோ கிண்டல் செய்யும் ஆன்மீகமல்ல. வேறு வகை. ஆண்மீகம்? அட, வாசித்துப் பாருங்களேன். காரில் போகிற மஜீதின் பார்வை இது. கல்லுடைத்து கொண்டிருந்தாலும் அப்படித்தான் பார்ப்பாரா என்று தெரியவில்லை. ‘கஷ்டத்தை இஷ்டமா நெனச்சா, கஷ்டம் இஷ்டமாயிரும்’ என்கிறார் முடிவில். கஷ்டம்!

நாளை , இன்ஷா அல்லாஹ், ஹமீது ஜாஃபர் நானாவின் ‘ஹாஷ்யம்’ வெளியாகும். இன்னொரு கஷ்டம்!

ஆபிதீன்

***

வாழ்க்கை வாழ்வதற்கே!  – மஜீத்

எல்லோரும் கொண்டாடுவோம்!

சில காலமாக எனக்கு ஒரு பழக்கம். வெளியில் கடினமான வேலை செய்யும் நண்பர்களைத் தாண்டும்போது, இயல்பான ஒரு புன்னகையையும், சில சந்தர்ப்பங்களில் ஓரிரு வார்த்தைகளையும் விட்டுச் செல்வதே அது. “இயல்பான” என்று சொல்வதின் அர்த்தம், எனது புன்னகையின் தொனி, ஏதோ பரிதாபத்தில் வருவதாக நிச்சயம் இருக்காது. நானும் உங்களில் ஒருவன்தான் என்பதையே அவர்களுக்கு உணர்த்தும்.

பொதுவாக எனக்கு இந்த மாதிரி காட்சிகள் அவ்வளவாகப் பிடிக்காது. காரணம், ஒரே மண்ணில் பிறந்த ஒரே மாதிரி மனிதர்கள் ஏன் பலவிதமாக வாழவேண்டும்? எதற்கு பலர் கஷ்டப்பட வேண்டும்? சிலர் மட்டும் வசதி வாய்ப்போடு களிக்க வேண்டும்? அவர்களில் சிலரால் மட்டும் எப்படி மற்றவரை துன்புறுத்த முடிகிறது? போன்ற கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கும். நம்மால் என்ன செய்யமுடியும் என்ற இயலாமையும் அதன் பங்குக்கு சுட்டெரிக்கும்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் துபாயின் ‘எமிரேட்ஸ் ஹில்ஸ்” பகுதிக்குள் போய்விட்டு வரும்போது கண்ட ஒரு காட்சி சிந்தனையின் திசையை மாற்றியது.

ஒரு சிறிய நெரிசலால் போக்குவரத்து தடைப்பட்டு இரண்டு நிமிடம் ஒரே இடத்தில் நின்றபோது, எனது இடதுபுறம் மிக அருகில் பட்டுப்போன ஒரு ஈச்சை மரத்தைப் பிடுங்குவதற்காக அதைச்சுற்றி ஒரு நாலைந்து பேர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அல்லது ஏதோ இயந்திரம் தோண்டிய பள்ளத்திலிருந்து மண்ணை அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களில் யாரும் என் பக்கம் பார்க்கவில்லை.

எனது பார்வையை அதே திசையில் சிறிது தூரத்தில் நிறுத்த அங்கு வேறு காட்சி. “மாண்ட்கொமெரீ கோல்ஃப் கிளப்”பின்  டிரைவ் ரேஞ்சில் (Montgomery Golf Club- Drive Range) இருக்கப்பட்டவர்கள் பலர் நின்று கொண்டு அவர்களது ‘டிரைவிங் ஸ்கில்ஸை’ வளர்த்துக் கொண்டிருந்தனர்.
[தூரத்திலிருக்கும் குழியை நோக்கி, மேஷ ரிஷபம் பார்த்து, பந்தை ஓங்கி அடிக்கும் முதல் அடிதான் டிரைவ். அதற்கு உபயோகிக்கும் மட்டைக்குப் பெயர் “டிரைவர் (Driver)’” மற்ற மட்டைகளுக்குப் பெயர்:”கிளப்ஸ்” (Clubs) தவறுகள் இருந்தால் கோல்ஃப் தெரிந்த நண்பர்கள் திருத்தவும்]
அங்கு ஒருவர் குனிந்து நின்றுகொண்டு பலவாறு அவரது நிலையை அனுசரித்துக்கொண்டுவிட்டு, பிறகு மட்டையை ஓங்கி, அடிப்பது மாதிரி கீழே கொண்டுவந்து, சரிபார்த்துவிட்டு, அடுத்தமுறை அதே மாதிரி ஓங்கி, ஒரே அடி! பந்து எங்கோ மேலே செல்ல, அதையே பார்த்துக்கொண்டிருந்தார், அது விழும்வரைக்கும்.

அதே நேரத்தில் அருகே மரத்தடியில் ஒருவர் குறியெல்லாம் பார்க்காமல் மண்வெட்டியால் ஓங்கி மண்ணை வெட்டி, அள்ளி, ஒரு வீசு வீசினார். விழுந்த மண்ணை நோக்கி லேசான ஒரு பார்வை.

திடீரென்று எனக்குள்ளே ஒரு குறுகுறுப்பு: ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இருவர் உடம்பிலும் வெயிலால் வியர்வை.  இருவர் முகத்திலும் கவலை. (1. இந்தமுறை எத்தனை ‘யார்டு’ போனது பந்து?  2. இன்னும் எவ்வளவு நேரம் மண்வெட்ட வேண்டும் இன்னிக்கு?)

அங்கே இன்னொருவரைப் பார்த்தேன். “டிரைவிங்” பயிற்சி முடித்ததும், தனது மட்டைக்களடங்கிய, நீண்ட “பேக்”கை, அதனடியிலிருந்த சக்கரங்களால், சற்று மேடான புல்தரையில் சிறிது சிரமத்துடன் இழுத்துச் சென்றுகொண்டிருந்தார்.

இங்கே இன்னொரு நண்பர் ஒரே சக்கரமுள்ள ஒரு ‘டிராலி’யில், மண் மற்றும் சில இலைதழைகளை வைத்து சிறிது சிரமத்துடன் தள்ளிக்கொண்டிருந்தார்.

இருவருமே வலிந்துதான் ஈடுபடுகிறார்கள். கட்டாயமென்றாலும் அது இருவருக்கும் தான். (ஒருவருக்கு சமூக அந்தஸ்து; மற்றவருக்கு பொருளாதார நிலைமை)

இருவரும் தத்தமது இடங்களுக்கு வர சிரமம் கொள்ளுகிறார்கள். (ஒருவருக்கு வார்மிங் அப்; மற்றவருக்கு சீக்கிரம் எழுந்து, பஸ் பிடித்து இத்யாதி…..)

வித்தியாசம் 1:
அவர் அங்கு வருவதற்கு (ஏற்கனவே சம்பாதித்ததில்) சுமார் 20,000 திர்ஹாம் வருட சந்தா மற்றும் இன்றைய வருகைக்கு ஒரு 200 திர்ஹாம் செலவு கணக்கு.
இவருக்கோ இன்றைய வருகையால் சில பத்து திர்ஹாம் வருமானம்;

வித்தியாசம் 2:
இன்று அவர் முகத்தில் ஒரு பெருமை (நான் உயர்வர்க்கத்தினன்)  இவர் முகத்தில் இன்று வருத்தம்தான் தெரிகிறது. ஆனாலும்……
அவர் விடுமுறையில் ஊர் சென்றால் பத்தோடு பதினொன்றுதான்.  இவர் விடுமுறையில் ஊர் சென்றால், தன் சுற்றம் முன்பு? ஆஹா………

இருவரில் யார் சிறந்தவர்?  என்னால் கணிக்க முடியவில்லை. தேவையும் இல்லை நம் வாழ்க்கை நாம் வாழத்தான். அதில் யாரையும் நுழைய அனுமதிக்கத் தேவையில்லை.  வாழ்ந்து பார்த்துவிடுவோம் நண்பர்களே!                                          

அரபி திடீர்னு வந்து ‘கொதவளய’ புடிக்கிறானா? மிசிறிக்காரன் மேல உக்காந்து மூளையைத் திங்குறானா? நம்மாளே நமக்கு ஆப்பு வைக்கிறானா? சொந்தக்காரனே மோசம் பண்றானா? இவங்க எல்லாருமே உங்களை கஷ்டப்படுத்துறதுக்கு அவங்க கஷ்டப்படுறாங்க. படட்டும். நமக்கென்ன??
ஆக, எல்லாருக்கும் கஷ்டம் இருக்கு;    கஷ்டத்தை கஷ்டமா நெனச்சாதான், கஷ்டம் கஷ்டமா தெரியும்!  கஷ்டத்தை இஷ்டமா நெனச்சா, கஷ்டம் இஷ்டமாயிரும்.  கோல்ஃப் ஆட்டக்காரர்கள் மாதிரி!!

ஆமாம். மல்டி-மில்லியனேர்களாகிய இவர்கள், தங்களது குளிர்சாதன வசதியுடைய ஆடம்பர வில்லாக்களை ஒதுக்கிவிட்டு, 45 டிகிரி வெயிலில் 95 சதவீத ஈரப்பதத்தோடு வீசும் வெப்பக்காற்றில் நான்கு மணிநேரம் நாயாய் அலைந்து கோல்ஃப் விளையாடுகிறார்கள்; அது பெருமையாம்; மகிழ்ச்சியாம்; இந்திய நகரங்களில் ட்ராஃபிக் சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் இதே செயலை வருமானத்தோடு செய்தால்? கேவலம்.

ஆகையினால், ஆனது ஆகட்டும், அனுபவிப்போம் வாழ்க்கையை.  வாருங்கள். எல்லோரும் கொண்டாடுவோம்!!

இன்னா நைனா, இவ்ளோ சொல்றியே, அவர்ட்ட மில்லியன் கணக்குல கீது , இவர்ட்ட டன்கணக்குல கடன்தானே கீதுன்றீங்களா? அத்த விடுங்க சார், அதுக்கும்தான் நம்ப செருப்புதைக்கும் தோஸ்த் சொலுஷன் சொல்ட்டாருல்ல?

**

நன்றி : மஜீத் |  amjeed6167@yahoo.com

கப்பலுக்குப் போன கன்றாவி மச்சான்

எழுபது வயது இளம் தோழி , ’எருமையாக இருந்தது போதும்; எழுந்திரு’ என்று மெஸ்ஸேஜ் அனுப்பினாள். உடனே எனக்கு எழுந்து விட்டது – எண்ணம்!

அட, இத்தனை வாசகர்களா எனக்கு ! ’எப்ப போடுவீங்க , எப்ப போடுவீங்க?’ என்று அஸ்மா கேட்பதுபோலல்லவா ஆவலுடன் கேட்கிறார்கள்! தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவள் ஃபோனைச் சொல்கிறாள். இவர்களோ பதிவைச் சொல்கிறார்கள். அதுதான் கொஞ்சநாள் அருமையான எருமைகளாக இருப்போம் என்றிருந்தேனே… அதற்குள் என்ன அவசரம்?  பத்துநாள் கூட பொறுக்க முடியாதா? எத்தனை மெயில்கள்! கவனித்து நோக்கினால் அத்தனையும் என் யாஹூ மெயிலிலிருந்து நானே அனுப்பியதுஜீ!

வேடிக்கை இருக்கட்டும், இந்தப் பதிவு நண்பன் நாகூர் ரூமியின் நாவல் குறித்த பதிவல்ல. ஆனாலும் அதில் விமர்சிக்கப்படும் மச்சான்களைப் பற்றிய பதிவு. அந்த மச்சான்களில் நானும் ஒருவனாதலால் ’புலி வாலை’ப் பிடிக்கிறேன்.

’எத புடிக்கனுமோ அத நல்லா அழுத்திப் புடிக்கனும் மச்சான்’ என்பாள் அஸ்மா. (இந்த வரி எல்லோருக்கும் பிடிக்கும்!).

நாம் பிடித்த புலிவால்’ என்று ஒரு உரைவீச்சு சென்றவருடம் இணையத்தில் உலா வந்தது. இப்போதும் வருகிறது. ’சஃபர்’ வாழ்க்கையின் (இதன் பெயர் வாழ்க்கையா?) கொடுமையைச் சொல்லும் வரிகள். அலாவுதீன் என்ற சகோதரர் எழுதியது. அதற்கு வந்திருந்த மறுமொழிகள் கண்ணீரை வரவழைத்தன. ’என்ன செய்ய முடியும்?’ என்று புலம்பித் தவித்திருந்தார்கள் இஸ்லாமியர்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வழிதான். நன்றாகப் படித்து சொந்த ஊரில் வேலையில் அமர்வது. அதை எப்படிச் செய்வது என்று கேட்காதீர்கள். தெரிந்திருந்தால் நான் ஏன் துபாய்க்கு வந்து துப்பு கெட்டு அலைகிறேன்? என்னால் இப்போது முடிவது சோகத்தை அதிகமாக்குவதே. அழுவதற்கு முன்பு ரிலாக்ஸ் செய்ய தம்பி இஸ்மாயில் பதிவிட்ட ’சஃபர் சலாமத்’ஐ – இனிமையான , நிம்மதியான பயணம் என்று அர்த்தம் – பார்த்து விடுங்கள். அதைப் பார்த்துவிட்டு சிரிப்பவர்கள் 4000 சிங்கப்பூர் வெள்ளி இஸ்மாயில் அக்கவுண்ட்டில் கட்டணுமாம். ’என் வெள்ளி எனக்கு; உங்கள் வெள்ளி உங்களுக்கு’ என்று அமைதியாகச் சொல்பவர் இப்படி அழிச்சாட்டியம் செய்யலாமா? ஆனாலும் , இருந்த நாலு திர்ஹத்தை இழக்காமல் அதைப் பார்த்தேன்.

எதையும் இழக்காமல் நீங்களும் பார்க்கலாம்.

சலீம்மாமா இயற்றி மர்ஹூம் S.S, வாஹித் பாடிய பாடலை (1982-ம் வருடம்?) இப்போது பதிவிலிடுகிறேன். படித்துவிட்டு அவசியம் கேட்டும் பாருங்கள். ’சீசன்’ அசனா மரைக்கார் கொடுத்த கேஸ்ஸட். பூத்துப் போயிருந்தது. வெயிலில் காயவைத்து எடுத்தேன் (ஜபருல்லா நானாவின் டெக்னிக்). ஆதலால் நன்றாகவே அலசும். ஆனாலும் கேட்கலாம். கேட்க வேண்டும்.

மர்ஹூம் காயல் ஷேக் முஹம்மது பாடிய ‘கப்பலுக்குப் போன மச்சான்’ஐ எழுதிய கவிஞர் நாகூர் சலீம்தான் இந்தப் பாடலையும் இயற்றினார்கள். அந்த ’கப்பலுக்குப் போன மச்சான்’ பாடலில் இஸ்லாமிய பெண்ணும் ஆணும் புலம்புவதை ஷேக்முஹம்மது ஒருவரே கச்சேரிகளில் பாடுவார் – பயங்கரமான தாபத்தோடு. பாடலின் முடிவில் ‘உன் இஷ்டம்போல நெனச்சதெல்லாம் தருவேன்.’ என்று வரும். ’நெனச்ச்ச’வில் ஏக அழுத்தம் கொடுத்து ,’நான் தருவேன்.. நான் தருவேன்.. நான் தருவேன்’ என்று ஆவேசமாக உருகுவார் மனுசன். கேட்கும் சில துப்பட்டிகள் கேளாமலே நனையும்!

பாடியவரும், இயற்றியவரும் ’கப்ப சபராளிகள்’ அல்ல என்பதுதான் இதில் தமாஷ். இருந்தாலும் கற்பனையில் எழுதுவதும் படிப்பதும் (பாடுவதும் என்று சொல்லக்கூடாது!) நன்றாகத்தான் இருக்கிறது. பாடகர் வாஹிதும் அரபுநாட்டு வாழ்க்கை வாழ்ந்தவரல்ல என்றுதான் நினைக்கிறேன். ஆனாலும் சூழல் புரியும். ’வெற்றிக்கொடி கட்டு’ வடிவேலு மாதிரி – வெட்டி பந்தா விடும் ஆட்கள் எந்த ஊரில்தான் இல்லை? அந்த பந்தாக்களை பார்த்து மயங்கி இங்கே வந்து பந்தாக சுருண்டு விடுகிறார்கள் பத்தாவது கூட படிக்காத நம்ம பையன்கள். எங்கே போனாலும் அடிமட்ட வேலைகளுக்கு இவர்கள்தான். சபராளி குடும்பத்தின் குணாம்சத்தை கணக்கிலெடுக்காமல் பையன்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தமில்லைதான். புரிகிறது, புரிகிறது.

துபாய் நண்பரின் அறையில் ஒரு பையன். படுத்திருப்பவன் திடீரென்று எழுந்து உட்காருவான் படுக்கையில். ‘எந்த மசுராண்டி இந்த லைஃபை கண்டுபுடிச்சது?’ என்று உரக்க ஒரு கேள்வி கேட்பான் சுவரைப் பார்த்து. அடுத்தநொடியில் குப்புறப்படுத்து விடுவான். அவனால் முடிந்தது! சமயத்தில் , ’புது சட்டையும் செண்ட்டும் காட்டி கூட்டாளி ஏமாத்திட்டானே’ என்று புலம்புவான். ’கப்பலுக்கு போன மச்சான்’ பாட்டை ஒருநாள் கேட்டான். ‘என்னா நடிப்பு! இவளுங்க கொடுத்த தொல்லை தாங்கமுடியாமதான ஓடிவந்தேன்’ என்றான் மல்லாக்க படுத்துக்கொண்டு. எச்சிலும் துப்பியிருக்கக்கூடும்.

இளைய ராஜாவின்  ரகளையான பாட்டை இங்கே சொல்லவேண்டும். அவர் துபாய் வந்தபோது எல்லா பாட்டையும் விட அந்த ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா’ பாட்டுக்குத்தான் ஏக ஆரவாரம்! ஆயிரக்கணக்கான அழுகைகளை ஒன்றாகக் கேட்டால் ஆரவாரமாகத்தான் தெரியும். ஆண்டவனே  இதென்ன கொடுமை…? ஷார்ஜா , ஏன் , அமீரகமே அமிழ்கிறதே கண்ணீரில்…

’படித்தால் உயரலாம் என்கிறீர்களே.. படித்துவிட்டா ஏழுநட்சத்திர புர்ஜ்-அல்-அராப் ஹோட்டலில் ’எளிமையாக’த் தங்கினார் இளையராஜா?’ என்று சிலர் கேட்கலாம். இசையை உருப்படியாகக் கற்றாரே ராஜாதிராஜா. என்னைப்போல் எல்லாவற்றிலும் வாயைவைத்து ( ’அதயெல்லாம் எழுதாதீங்க மச்சான்!’ – அஸ்மா) ஏமாந்து போகவில்லையே.. அப்புறம் அந்த சொர்க்கம்.. ஏயார் ரஹ்மானுக்கு இசைக்கலைஞர்கள் இருக்கும் மைலாப்பூர் சொர்க்கமென்றால் கவாலி தர்பார்கள் நடத்தும் காதரொலி பாவாவின் நாகூர்தான் எனக்கு  சொர்க்கம்.  என்ன, மினாரா தாக்கில் இப்போதெல்லாம் கஞ்சா சரியாகக் கிடைப்பதில்லை! தவிர , கவிஞர்கள் தொல்லையும் தாங்க முடியவில்லை. இன்னொரு விஷயம் : ஊர் போகும்போது கண்டிப்பாக சீர்காழி வழியாகப் போகவே கூடாது! அங்கே ஒரு பேய் உட்கார்ந்துகொண்டு ‘ஊருக்கு வந்தா நல்லா சம்பாதிக்கலாம்யா’ என்று தூபம் போடுகிறது. என்ன, கடனையா? இந்தாள் பேச்சைக் கேட்டு ’சின்ன ஷைத்தான்’ சாதிக் முந்தா நாள் ’ஒரேயடியாக’ ஊர் போயிற்று. இன்று காலை வந்துவிட்டது!

ஆடு ஜீவிதமே நித்ய ஜீவிதம்!

’ஊர்ல புள்ளைங்களோட இக்கிம்போது அல்லாஹூத்தஆலா வந்தா கூட ‘ஒய்.. பொய்ட்டு அப்புறம் வாங்கனி’ண்டு வெரட்டிப்புடுவேன்’ என்று வெறியுடன் சொல்லியிருக்கிறேன் ’வெள்ளி’ இஸ்மாயிலிடம். சிரித்தார் அவர். ’அவ்வளவு புரியமா நானா?’. ‘பின்னால சூத்தாமட்டைல ஓங்கி உதைப்பாங்கதான். இந்தாலும் அனீகா, நதீம்னா உசுரு எனக்கு’ ‘எனக்கும்தான் நானா’

மலேசியா சபராளியான என் சீதேவிவாப்பாவும் எவ்வளவோ முயற்சித்தார்கள் – தன் பிள்ளைகளுடன் ஊரோடு இருக்க. தன் பிள்ளைகள் ஊரோடு இருக்க.

உசுரோடு இருக்க முடியவில்லை. ஊரும் சொந்தங்களும் இருக்க விடவில்லை.

இப்போது தரும் ’அரபிக்கடல்’ பாடலில் , நம்ம கன்றாவி மச்சான் அக்கரையில் இருந்துகொண்டு புலம்புகிறார். முப்பது வருடங்களுக்கும் முன்பிருந்த முக்கியமான புலப்பம். வந்து வெந்த எல்லா மச்சான்களுக்கும் அதே புலப்பம்தான் – இப்போதும். பாடலைக் கேட்கும்போது சவூதி என்று தெரிகிறது ’இது கருணைநபி பிறந்த தேசம் பைங்கிளியாளே..’ என்றால் சவுதிதானே? ஒரு சந்தேகம்…சவூதி அரபுநாடா? மண்ணின் மைந்தர்களுக்கு சலுகைகளின் சர்க்கரை மழையையும் பிறநாட்டவர்களுக்கு நெருப்பு மழையையும் அளிக்கும் சவுதி. ’இந்நேரத்தில்’ வந்த ’சர்க்கரை மழை’ பதிவில் ’நமது நாட்டவர்கள் இந்த அரேபியர்களால் படுகின்ற கஷ்டங்களை கேட்டால் இந்த சவுதி மேல் வெறுப்புதான் வரும். மறுமையில் அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.’ என்று சகோதரர் ‘Muslim’ கொதிப்புடன் எழுதிய மறுமொழியை மாமன்னர் பார்த்தால் அவ்வளவுதான்! அந்த ’Muslim’க்கு , ’யாரையும் கஷ்டப்பட்டு இருக்க சொல்லலே. முடிஞ்சா இருங்க. இல்லேன்னா அவரவர் நாட்டுக்கு போக வேண்டியதுதான். மொதல்ல நம்ம நாடு நமக்கு என்னா செஞ்சதுன்னு பாக்கணும். அப்பறம்.. மத்த நாட்ட பத்தி பேசலாம்’ என்று ’பாதுஷா’ பதில் சொல்லியிருந்தார் படபடப்பாக.

தம்பி பாதுஷா, இந்த பதிவிற்கு ’நொந்து நூடுல்ஸா போனவங்களுக்கு’ என்று தலைப்பிடச் சொன்னார் அசனா மரைக்கார். ஆடுமாடுகள் போல நடத்தப்படுபவர்களின் அவலங்கள் புரிந்த மரைக்கார். சேவல்பண்ணைகளின் சிந்தனைச் செம்மல்களைப் பார்த்து தினமும் அழும் மரைக்கார்.

ஹூம்… ஆயிரத்தில் ஒருவருக்கு அரபுநாட்டு மாலை கிட்டலாம். மற்றவர்களுக்கு – என்னையும் சேர்த்து – எதிரே தெரிவதெல்லாம் புழுதி மழைதான்.

’நத்திங் ஈஸ் இம்பாஸிபிள், நக்கிங் ஈஸ் பாஸிபிள்’ என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடாதீர்கள் உடனே. ஃபேமிலி கொண்டுவரும் வசதி இப்போது எனக்கு இருக்கிறது சாரே… ஃபேமிலி நிம்மதியாக இருக்கவேண்டுமென்றுதான் கொண்டுவரவில்லை! மனம் தாளாமல் மற்றவர்களுக்காக பதிவிடுகிறேன். புரியுதா? ஆமாம், அதென்ன நத்திங் ஈஸ் இம்பாஸிபிள்? நான் தி. ஜானகிராமன் ரசிகன். மாற்ற முடியுமா உங்களால்? என்னதான் கடவுளைக் கிண்டல் செய்தாலும் (கடவுள்தானே கிண்டல் செய்ய வைக்கிறார்!) அடிப்படையில் நான் ஆன்மீகவாதி. மாற்றிவிட முடியுமா? ஆயில் இருக்கும்வரை அரபுநாட்டு ராஜாக்கள் அமெரிக்க கூஜாக்களால் ஆளப்படுவார்கள். மாற்ற முடியுமா? எப்படித்தான் எச்சரித்தாலும் கடைசிவரை தாஜ் கவிதை எழுதுவார். திருத்த இயலுமா?!

அட்வைஸ்..! இணையமெங்கும் நிறைந்திருக்கும் ’உதயமூர்த்தி சுவாமிகள்’ பற்றி ஹஜ்ரத் சொன்ன தமாஷ் சொல்கிறேன். ’கிச்சு கிச்சு’ அல்ல. அதெல்லாம் எனக்கு வராது ஓய், செம்ம வெடை. அதாவது கிண்டல்.

படம் பார்க்க பட்டணம் போன ஹஜ்ரத்தின் சீடர்களிடம் உழைப்பின் பெருமை, நேரத்தின் மதிப்பு, கல்வியின் அவசியம், இறைநம்பிக்கை என்று நீண்டநேரம் அறுத்தெடுத்திருக்கிறார் ஒரு திடீர் பணக்காரர். நொந்துபோய் திரும்பிய சீடர்களிடம் ஹஜ்ரத் சிரித்துக்கொண்டே சொன்னார்களாம் : ‘ஒண்ணுமில்லே.. அவர் ஜோப்புல ரெண்டு ரூவா இந்திக்கிது. அது அவர பேசவச்சிக்கிது!’

வெறும் ரெண்டு ரூவாக்கே…! எச்சரிக்கை : ’பெரிய ஷைத்தான்’ மஜீத் எழுதிய ஹஜ்ரத் ஜோக் விரைவில் வரும். இங்கே அல்ல; அவர் தளத்தில். அடுத்தவர்களின் பதிவுபோட்டு நான் அடிவாங்கியது போதும்ப்பா! 

பெரிய நாவலாக எழுத வேண்டிய விஷயம் இந்த ’சஃபர்’. வெளிநாட்டில் குடும்பத்தோடு ’வாழ்பவர்கள்’ பற்றியும் விரிவாக எழுத வேண்டும். மனைவியை ஆறுமாதத்திற்கு மேல் பிரிந்திருப்பது ஹராம் என்று சொல்லும் அழகான மதத்தின் சட்டங்களை அப்படியே கடைப்பிடிப்பதாகச் சொல்லிக் கொல்லும் அரபுநாடுகளின் நிஜ முகத்தையும் காட்ட வேண்டும் – உயிரோடு விட்டால். எழுதினால் , ‘ஆமா.. எப்பப்பாரு இவருக்கு ஒரே சப்ஜெக்ட்தான்’ என்று அலுத்துக்கொள்வார் ஆம்பூர் ஹஜ்ரத். எனவே ’சஃபர்’ பற்றி அண்ணன் சடையன் சாபு எழுதிய வரிகளைச் சொல்லி முடிக்கிறேன். ‘பயணங்கள் முடிவதில்லை’ கவிதையின் கடைசி பாரா மட்டும்.

’பயணம் முடியப்போகிறதென
நினைத்தேன்
வீடு… வாசல்..
வயல்.. வரப்பு
நிலம்.. நீச்சு
மாடு.. கண்ணு
தோப்பு.. தொரவு
கார்.. பங்களா..
துணி.. மணி
நகை.. நட்டு
என என்
பயணம் தொடர்கிறது
பயணங்கள் முடிவதில்லை’

இதன் பெயர் கவிதையா? அது வேறு விவாதம். இங்கே வேண்டாம். அமீரக ஆண்டுவிழா மலரில் (2002) இடம்பெற்ற இந்த வரிகளை எடுத்துக்கொடுத்தது அசனா மரைக்கார்தான்.

அசனா…, உயர்படிப்பு படித்து, அமீரகத்திலுள்ள பெரிய கம்பெனியில் உயர்பதவி வகித்த நம் சாபத்தாவுக்கே இத்தனை கவலையென்றால் சாதாரணர்கள் நாம் எந்த மூலை?

அதிர்ஷ்டமோ அருகதையோ, சுகபோகமாக வாழும் இந்திய – பாகிஸ்தானி சோதரர்கள் (மொஹாலியில் நேற்று சகோதரர்களானோம் – 29 கோல்கள் வித்தியாசத்தில். மறந்து விட்டீர்களா? ) பல நாடுகளிலும் உண்டுதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் எத்தனை விழுக்காடு? தவிர, வெற்றி-தோல்வி பற்றிய என் அபிப்ராயமே வேறு. பிறகு எழுதுகிறேன். அவசியம் உடனே தெரியவேண்டுமெனில் ’பிராஞ்சியேட்டன்’  (Pranchiyettan & the Saint) சினிமாவில் புனித ஃபிரான்சிஸ் கடைசியில் கூறும் அந்த அட்வைஸை கவனமாகக் கேட்கவும். அதுதான் என் அட்வைஸ்!

அரிசி வியாபாரியான பிரான்ஸிஸ்-ஐ (மம்முட்டி) ’அரிப்பிராஞ்சி’ என்று கிண்டலாக அழைக்கிறது ஊர். அவமானமாக இருக்கிறது அவருக்கு. இந்த பட்டப்பெயரை எப்படியாவது மாற்றனும் என்று நகைக்கடை வைத்தால் ’நகைக்கடை அரிப்பிராஞ்சி’ என்றாகிறார்! பத்மஸ்ரீ பட்டம் வாங்கினாலாவது மாறாதா என்று பணத்தோடு (பின்னே, சும்மாவா கிடைக்கும்?) முயற்சித்து அதிலும் ஏமாறுகிறார். தன்னுடைய புலப்பங்களை தனக்கு காட்சி தரும் புனித ஃபிரான்சிஸிடம் சொல்வதுதான் கதை. சமீபத்தில் நான் மிகவும் ரசித்த படம். எங்கிருந்து சுட்டார்களோ நான் அறியேன், ஆனால் கடைசி ஐந்து நிமிடங்கள் தெய்வம் விரும்பும் மனிதனை (தெய்வத்தை விரும்பும் மனிதனையல்ல) அழகாக விளக்கி விடுகிறது. தங்கத்தால் ஆலயம் கட்டுபவனல்ல , சக மனிதனின் துன்பத்தைப் போக்க முயற்சிப்பவன்தான் சொர்க்கத்திற்குப் போகும் தகுதியுடையவன் என்று சொல்கிறது. வெற்றி பெற்றவர்கள் என்று நாம் நினைப்பவர்களெல்லாம் உண்மையிலேயே அப்படித்தானா? என்று கேட்கிறது. எல்லாம் அடைந்தவர்கள் என்று நாம் ஏங்கும் ஆட்கள் என்னதான் நிஜத்தில் அடைந்தார்கள்? என்று விளக்குகிறது.

முஸாஃபிர் சல்தே சல்தே தக்கயாஹை…

’எருமை ஸ்பீடில்’ எனை வரவழைத்த நண்பர்களுக்கு நன்றி!

ஆபிதீன்

***

கவிஞர் நாகூர் சலீம் இயற்றி S.S, வாஹித் பாடிய பாடல் (1982) :

அரபிக்கடல் இக்கரையில்
ஆருயிரே உன் நினைவில்
அனுதினமும் வாழுகிறேன் பைங்கிளியாளே – நான்
அதிவிரைவில் உனை அடைவேன் பைங்கிளியாளே.. (அரபிக்)

கல்லுருகி நீர் வடிக்கும்
கண்மழையோ கரை உடைக்கும்
என் நிலையை கண்டறிந்தால் பைங்கிளியாளே – நீ
இறைவனிடம் சொல்லு இதை பைங்கிளியாளே.. (அரபிக்)

பாலையிலே சாலைகளும்
பழம் உதிரும் சோலைகளும்
பார்க்க ஒரு சொர்க்கமடி பைங்கிளியாளே – இது
பைந்தமிழர் வேர்வையடி பைங்கிளியாளே.. (அரபிக்)

பாடுபட ஓடுவதும்
பாறைகளில் வாடுவதும்
நாம் சுகமாய் வாழ்வதற்கே பைங்கிளியாளே – தமிழ்
நாடுவிட்டு இங்கு வந்தேன் பைங்கிளியாளே.. (அரபிக்)

கஷ்டங்களை மறப்பதற்கு
கல்பில் இதை சகிப்பதற்கு
காரணமும் உண்டெனது பைங்கிளியாளே – இது
கருணைநபி பிறந்த தேசம் பைங்கிளியாளே.. (அரபிக்)

*

பாடலை டவுன்லோடு செய்யவேண்டுமென்றால் எனக்கு மெயில் அனுப்புங்கள் – பத்தாயிரம் பவுண்ட் சம்பளம் தரும் விசாவோடு!

போனால் போகிறது , இங்கே கேளுங்கள் :

***

தொடர்புடைய ஒரு கதை : மஜ்னூன் – மீரான் மைதீன்

*

நன்றி : சலீம் மாமா, அசனா மரைக்கார், ’சடையன்’ சாபு  , அலாவுதீன்

« Older entries