முந்திய இரவு – தேவதாஸ் காந்தி

எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் மொழிபெயர்த்துத் தொகுத்த ‘காந்தி தரிசனம்’ என்ற நூலிலிருந்து எனக்குப் பிடித்த ஒரு கட்டுரையை இங்கே பதிவிடுகிறேன். பல ஆளுமைகள் , தலைவர்கள் சொன்னதையெல்லாம் விட்டுவிட்டு இதை மட்டும் பதிவிடக் காரணம் தந்தை – மகன் – பேரன் உறவும், ‘ஹூசைனப்பா’ என்று என் மகன் நதீம் அழைக்கும் என் சீதேவி வாப்பாவை அது நினைவுபடுத்தியதும்தான். நன்றி. – AB
*

தேவதாஸ் காந்தி, காந்திஜியின் மகனாவர். ராஜாஜியின் மகளைக் கலப்புத் திருமணம் புரிந்தவர். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.

gandhi tharisanam 1wp

முந்திய இரவு – தேவதாஸ் காந்தி

பாபுவுடன் ஒரு கண நேரந் தனிமையிலிருக்கும் அந்த அரிய அநுபவங்களுள் மிக அரிதான அநுபவமொன்று முதல் நாளிரவு எனக்கு ஏற்பட்டது. வழமைபோல 9:30 மணிக்கு அவரிடஞ் சென்றேன். அவர் படுக்கையிற் கிடந்தார். ஆனால் வார்தாவுக்கு முன்னதாகச் செல்லக்கூடிய ரயில் ஒன்று பிடிப்பது பற்றி, ஆசிரமத்தில் வசிப்பவர் ஒருவருக்கு அறிவூட்டுவதை அப்பொழுதுதான் முடித்திருந்தார். நான் உள்ளே அடியெடுத்து வைத்ததும், “என்ன புதினம்?” என என்னை உபசரித்தார். நான் புதினப் பத்திரிகையாளன் என்பதை எப்பொழுதும் அவர் இந்த வகையிலேதான் எனக்கு நினைவூட்டுவார். நான் நன்கு விளங்கிக்கொண்ட எச்சரிக்கையையும் அது சுமந்தது. என்னிடமிருந்து அவர் எதையும் மறைத்து வைக்கவில்லை என்றே கூறலாம். நான் கேட்டவற்றின் எந்தச் சாரத்தையும் அவர் எப்பொழுதுமே தந்தார். ஆனால், பொதுவாக, மிக அத்தியாவசியமான தேவையை உத்தேசித்துத்தான் நான் கேட்கின்றேன்; அதுவும் புதினப் பத்திரிகைகளின் அர்த்தத்தில் புதினத்துடன் எத்தகைய தொடர்பும் இல்லாத நோக்கத்திலேயே கேட்கின்றேன் என்ற அநுமானங்களின் பேரிலேயே, நான் அறிய விரும்பிய விடங்களை அவர் வெளிப்படுத்தினார்.

இவ்விடயங்களில் அவர் தம்மை நம்புவதைப் போலவே என்னையும் நம்பினார். அவரிடம் கொடுக்கக்கூடிய எந்தப் புதினமும் என்னிடம் இல்லை. எனவே, “அரசென்னுங் கப்பல் எவ்வாறு பயணஞ் செய்கின்றது?” என நான் கேட்டேன். “இச் சிறிய வேறுபாடுகள் மறைந்துவிடும் என்பதில் நான் நிச்சயமாக இருக்கின்றேன்” என்றார்.

“ஆனால், வார்தாவிலிருந்து நான் திரும்பும் வரையிலும் விடயங்கள்
காத்திருக்க வேண்டியிருக்கலாம். அதற்கு அதிக காலம் பிடிக்கமாட்டாது. அரசாங்கம் தேசபக்தர்களைக் கொண்டது. நாட்டின் நலன்களுடன் முரண்படும் எதனையும் எவருஞ் செய்யமாட்டார்கள். என்ன நேர்ந்தபோதிலும் அவர்கள் ஒன்றுபட்டிருக்கவேண்டும்; அவ்வாறே செய்வார்கள் என்பதிலும் நான் நிச்சயமுள்ளவனாக இருக்கின்றேன். தாற்பரியங் குறித்த வேறுபாடுகள் எதுவும் இல்லை” எனத் தொடர்ந்து அவர் கூறினார்.

இந்தத் தடத்திலேயே மேற்கொண்டுஞ் சம்பாஷணை நிகழ்ந்தது. நான் தாமதித்திருந்தால், அந்த நேரத்திலும், வழக்கமான “கூட்டத்தை” நான் அழைத்தவனாகியிருப்பேன். எனவே புறப்பட ஆயத்தமாகிக்கொண்டே, “பாபு இப்பொழுது நித்திரை கொள்ளப் போகின்றீர்களா?” எனக் கேட்டேன்.

“இல்லை; அவசரமெதுவும் இல்லை. நீ விரும்பினால் இன்னுஞ் சற்று நேரம் பேசலாம்” என்றார். சம்பாஷணையைத் தொடரும் அநுமதியை அடுத்த தினம் புதுப்பிக்க இயலாது போய்விட்டது.

சில தினங்களுக்கு முன்பு, இரவில் நான் விடைபெறும்போழுது, உணவருந்த பியாரிலாலை என் கூடவே அழைத்துச் செல்வதாகக் கூறினேன். “ஆமாம்; அழைத்துச் செல். ஆனால் என்னை அழைப்பது பற்றி எப்பொழுதாவது நினைத்திருக்கின்றாயா?” எனக் கேட்ட அவர், எப்பொழுதும் போலவே மனம்விட்டுச் சிரித்தார்.

அவர் தில்லியிலே தங்கியிருந்த கடந்த சில மாதங்களாக பாபுவின் அன்புச் சீராட்டுதலைப் பெறுஞ் சலுகை என் மூன்று வயதுப் பையனுக்குக் கிடைத்தது. நாங்கள் பிர்லா மாளிகைக்குச் செல்லத் தவறியபொழுது, என்னிலும் பார்க்க கோபு வராமலிருந்ததைத் தாம் மிகவும் உணர்ந்ததாக, சமீபத்தில் ஒரு தடவை என்னிடங் கூறினார்.

தன் தாத்தா தனக்கு உபசரிப்பு செய்யும் வகையை அபிநயித்துத் தன்னுடைய உதடுகளைப் பிதுக்கிக்காட்டி, இச்சிறு பயல் எங்களுடைய கண்களிலிருந்து இப்பொழுது புதிய கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கின்றான்.

*

(Download PDF)

நன்றி : மித்ர பதிப்பகம், நூலகம்

‘ஆகா கான் மாளிகை’ (ஓரங்க நாடகம் ) – அசோகமித்திரன்

தட்டச்சு செய்து அனுப்பிய தாஜ்பாயின் குறிப்பு முதலில் (தர்மசங்கடம்தான், என்ன செய்வது?) :

நண்பர் அழகிய சிங்கரின் ‘நவீன விருட்சம்’ – 101 இதழில் (Jan’2017, அசோகமித்திரன் ஓர் ஓரங்க நாடகம் எழுதி இருக்கிறார். பெயர் ‘ஆகா கான் மாளிகை’ – அது காந்தியைப் பற்றியது.

‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது, காந்தியுடன், கஸ்தூரிபாயும் கைது செய்யப்பட்டு, பூனாவிலுள்ள ஆகா கான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, சுவாசக் கோளாறால், அவதிப்பட்டு மரணம் கொள்ளும் தறுவாயில் கஸ்தூரிபாய் ! –

தாயைக் காண காந்தியின் மூத்தமகன் ஹரி, ‘ஆகா கான் மாளிகை’க்கு வருகிறார்.

ஹரி அங்கு வருகிற போது, காந்தி – கஸ்தூரிபாய் – ஹரி ஆகிய மூவருக்குமான உரையாடலை அசோகமித்திரன் ஓர் காட்சியாக மிக வலுவாக எழுதியுள்ளார்.

அசோகமித்திரன் இத்தனை கடுமையான மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தி எந்தவோர் ஆக்கத்தையும் இதற்கு முன் எழுதி – நான் வாசித்ததில்லை.

காந்தியின் அடுத்த மகனான தேவ்தாஸும் அம்மாவை காண வருகிறார். அந்த மகனிடமும் காந்தி நிகழ்த்தும் தர்க்கமும் சகஜமானதல்ல!

தாயைக் காண – ஹரி வந்திருந்த போதான நிகழ்வு – குறிப்பிடத் தகுந்த கடுமை  கொண்டதாக இருந்திருக்கிறது. நிஜ சம்பவமும் கூட , இத்தனைக்கு கடுமையானதாக இருதிருக்கும் என்றும் யூகிக்கிறேன்.

இந்த ஓரங்க நாடகம்தான் அசோகமித்திரன் எழுதிய கடைசி ஆக்கம். சின்னச் சின்ன வாக்கிய அசைவுகளிலும் – நிறைய அர்த்த பாவங்கள்!! இதனை ஜீவனோடு வாசிக்கத் தந்தமைக்கு, அசோகமித்திரனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

தாஜ்…

 

‘ஆகா கான் மாளிகை’ – அசோகமித்திரன்

(ஓரு பெரிய அறை. சுவரோரமாகத் தரையில் போட்ட படுக்கையில் ஒரு முதிய பெண்மணி படுத்திருக்கிறாள். அறை ஓரத்தில் ஒரு கிழவர் உட்கார்ந்திருக்கிறார். ஓர் இளைஞன் ஒரு நிக்கல் செம்பையும் தம்ளரும் கொண்டு வருகிறான்.)

இளைஞன்:
பாபுஜி, அம்மாவுடைய கஞ்சி.

பாபுஜி:
இப்போ அம்மாவுக்கு மட்டும்தானா?

இளைஞன்:
உங்களுடையது இன்னும் தயாராகலை.

பாபுஜி:
சரி, கொடு.

(பாபுஜி, தூங்கும் கஸ்தூர்பா அருகில் உட்கார்ந்து கொள்கிறார்)

பாபுஜி:
பா… பா…. என்னாயிற்று? பா!
(தோளைத் தொடுகிறார்.)
மறுபடியும் ஜுரம் போலிருக்கே…. பா! பா!

பா:
(திடுக்கிட்டு) என்ன?…. நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?

பாபுஜி:
இல்லை, இன்னும் தயாராகலை.

பா:
எனக்கு தலையை வலிக்கிறது. வலி தாங்க முடியவில்லை.

பாபுஜி:
நல்ல ஜுரம் அடிக்கிறதே? காலையிலே டாக்டர் வந்தாரே, அப்பவே சொல்லியிருக்கலாமே?

பா;
எல்லாம் சொல்லியாச்சு. அவர் ஆஸ்பத்திரிக்கு போகணும்றார். நான் முடியாதுன்னுட்டேன்.

பாபுஜி:
இப்போ ஏதாவது வேணுமா? எனக்கும் ஆஸ்பத்திரி விஷயம் பிடிக்கலே.

பா:
நாளைக்குப் பாத்துக்கலாம். (கஞ்சி பாத்திரத்தை வாங்கிக் கொண்டு, ஒரு நிமிஷம் கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்கிறாள்.)

பாபுஜி:
சூடு ஆறிடப் போறது.

பா:
சூடு ஆறறதுக்குதான் இந்த ஜுரம்.

பாபுஜி:
முடிஞ்சவரை நம்பளும் உடம்பைப் பாத்துக்கணும்.

பா:
எனக்கும் சேர்த்துத்தான் நீங்க பாத்துக்கிறீங்களே. காலையில நல்ல பனி. அந்தப் பனீலே வாக்கிங்க்!

பாபுஜி:
சரியோ தப்போ அது பழக்கமாயிடுத்து. என் வாக்கிங்கைக் காவல் பாக்கிற போலீஸ்காரங்க ஓடி ஓடி வந்தாங்க. ஒரு சமயம் சிரிப்பா இருக்கு. உடனே வருத்தமாயும் இருக்கு.

(பா, சிறிது கஞ்சியை விழுங்குகிறாள்.)

பா:
கஞ்சி கசக்கிறது.

பாபுஜி:
இங்கே எங்கேயோ உப்பு வச்சிருந்ததே? எடுத்துத் தரட்டுமா?

பா:
உங்க உப்பு உங்க கிட்டேயே இருக்கட்டும்.

பாபுஜி:
உனக்கு ஹரி ஞாபகம் வந்துடுத்து.

பா:
எனக்கு மட்டும்தான் அவன் ஞாபகமா? உங்க அகங்காரம் அவனை வரவிடாம பண்ணறது. அவன் இங்கேதான் எங்கேயோ இருக்கானாம். இதை ஒரு ஆபிஸரே சொன்னார்.

பாபுஜி:
அவர் சொன்னா சொல்லட்டும். நாமா ஒண்ணும் கேக்கக் கூடாது. இது ஜெயில்.

பா:
இருக்கட்டுமே. ஜெயில்னா அம்மா பிள்ளை உறவு போயிடுமா?

(பாபுஜி பதில் சொல்லாமல் இருக்கிறார். பா, கஞ்சி முழுதும் குடித்து முடிக்கிறாள்… தள்ளாடி எழுந்து வேறோரு அறைக்குப் போகிறாள். அவள் திரும்பி வரும்போது தள்ளாடல் சிறிது குறைந்து இருக்கிறது.)

பாபுஜி:
நீ அகங்காரம்னு சொன்னது நிஜமா இருக்கலாம். என்னுடைய கடந்த காலம், நான் பிடிவாதம் பிடிச்சது, எல்லாம் எனக்கு உள்ளூர வெட்கமாயிருக்கு. பகவான் கிட்டே சொல்லலாம். உன்கிட்டே சொல்லலாம். வேறு யார்கிட்டே அது நல்லதைவிட விபரீதத்தைதான் ஏற்படுத்தும்.

(பாபுஜி எழுந்து நிற்கிறார். இளைஞன் உணவுத் தட்டு, லோட்டாவுடன் வருகிறான்.)

இளைஞன்:
பாபுஜி, உங்க சாப்பாடு.

பாபுஜி:
மூணு ரொட்டிதானே இருக்கு?

இளைஞன்:
இன்னும் அடுப்பிலே இருக்கு. நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நான் சூடா கொண்டு வர்றேன்… இது ஆறிடப் போறது.

பாபுஜி:
ஹே ராம்.

(இளைஞன் தட்டையும் லோட்டாவையும் பாபுஜியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் உள்ளே போய் ஒரு நிக்கல் தம்ளருடன் வருகிறான்.)

பாபுஜி:
(இளைஞன் போன பிறகு)
எப்போவோ ஆட்டு பாலுனு சொன்னேன். ஆனால் அதுலேதான் என் உயிர் இருப்பதாக நினைக்கிறார்கள்.

(பா, சட்டென திரும்புகிறாள்.)

பா:
அப்போ ஆட்டுப் பால் உங்களுக்குப் பிடிக்கலெ.

பாபுஜி:
அப்படிதான் வைச்சுக்கோயேன்.

பா:
அப்போ இன்னொரு பொய்.

பாபுஜி:
ஒத்துக் கொள்கிறேன். பகவான் சில பொறுப்புகளை எங்கிட்டே கொடுத்திருக்கிறார்.

பா:
பகவான் நேரிலே வந்து கொடுத்தாரா?

பாபுஜி:
பகவான் நேரிலே வரமாட்டார். ஆனால் அவருக்கு தெரிவிக்கத் தெரியும். இல்லைன்னா என்னோட நூத்துகணக்கான இல்லே, லட்சகணக்கானவங்க ஜெயில்லே இருப்பாங்களா? நாம இருக்கிறதும் ஜெயில்தான். நமக்கும் சரோஜினிக்கும், கட்டில் போடறேன்னாங்க. நான் தான் வேண்டாம்னுட்டேன்.

பா:
ஒங்களுக்கு வேண்டாம்னு சொன்னாப் போறாது! ஏன் எனக்கும் வேண்டாம்னீங்க? படுக்கைலேந்து எழுந்து நிக்கறதுக்கு எவ்வளவு கஷ்டப்படறேன், தெரியுமா?

பாபுஜி:
பார்த்தேன். இன்னிக்கு தான்ஸன் வருவான். அவன் கிட்டே ஒரு கட்டில் வேணும்னு சொல்லறேன்.

பா:
கொசுக்கு என்ன பண்ணப் போறீங்க?

பாபுஜி:
கொசுவலையும் கட்டித்தரச் சொல்றேன். இப்போ முடிஞ்சாக் கொஞ்சம் தூங்கு.

(பா – படுத்து கண்ணை மூடிக்கொள்ள, பாபுஜி உணவு அருந்துகிறார். மேடை மூலையில் பரிதாபகரமான தோற்றதுடன் ஒருவன் தோன்றுகிறான். அது ஹரிலால்.)

ஹரிலால்:
அம்மா, அம்மா, நீ செத்துப் போயிடாதேம்மா…!

(ஹரிலால் மறைந்து விடுகிறான். சிறிது நேர இடைவெளி – டாக்டர் பா – வைப் பரிசோதிக்கிறார்.)

டாக்டர்:
இரண்டு மார்பிலும் சளி அடைந்து கிடக்ககிறது. ஆபரேஷன் தியேட்டர்லே டூயூப் விட்டு எடுக்க முயற்சி செய்யலாம். அதுக் கூட முடியுமான்னு நிச்சயமா சொல்ல முடியாது. நாடி மிகவும் பலஹீனமா இருக்கு. எப்படியும் இவங்களை ஹாஸ்பிடல் கொண்டு போகணும். இந்த விஷயங்களிலே ஏதோ நினைச்சுண்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

பாபுஜி:
பா….! பா…!

பா:
(மிகுந்த சிரமத்துடன்) என்ன?

பாபுஜி:
டாக்டர் சொன்னது புரிஞ்சுதா?

(பா பதில் சொல்வதில்லை.)

பாபுஜி:
டாக்டர், என்ன மருந்தும் இங்கேயே கொடுத்துடுங்க. அவங்க விருப்பத்துக்கு மாறா ஹாஸ்பிடல் வேண்டாம்.

டாக்டர்:
இங்கே அதிகம் போனா ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கலாம். ஆனா, அவுங்க மூச்சு விடறதுக்கு இடமே இல்லாம இரண்டு மார்பிலும் ஃப்ளூட் அல்லது ஃபிளம் இருக்கு. சுவாசப்பை ரொம்ப சுருங்கிப் போயிடுத்து. இப்போ அவங்க ரொம்பக் கஷ்டப் பட்டுண்டுதான் பாத்ரூம் போறாங்க. அங்கே படுக்கையை விட்டு நகராமே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணலாம்.

பாபுஜி:
எல்லாம் சரி, டாக்டர். ஆனா அவுங்க இங்கே என்னை விட்டுட்டு வருவாங்கன்னு தோணலை.

டாக்டர்:
அவுங்க உயிருக்கு ஆபத்து.

பாபுஜி:
நீங்களே கேட்டுப் பாருங்க.

டாக்டர்:
(கஸ்தூர்பாவிடம்) அம்மா, அவர் சரீங்கறார். ஆஸ்பிடல் போகலாமா?

பா:
பாபுஜியும் வருவாரா?

டாக்டர்:
இல்லேம்மா, அவர் கைதியில்லே? எதுக்கும் கமிஷனர் தாம்ஸனைக் கேக்கலாம். பாபுஜி உங்களுக்கு பிராப்ள்ம் ஏதாவது இருக்கா? பிபி எடுத்துடறேன்.

(மேடை இருளில் மூழ்கிறது)

ஒரு குரல்:
அம்மா…! அம்மா….!

பா – குரல்:
வந்துட்டயா, ஹரி! என் கண்ணே! ஏண்டா மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி இருக்கு?

பாபுஜியின் குரல்:
சாராயம். சாராயமே குடிச்சுண்டு இருந்தா மூச்சி இப்படித்தான் இருக்கும்.

ஹரியின் குரல்:
வாயை மூடுடா! நீ மஹாத்மாவா? என் அம்மா மஹாத்மா… வாயைத் திறக்காதே! கப்சிப்!

பாவின் குரல்:
அப்பாவோட சண்டை போடாதேடா, கண்ணா. மத்தப் பிள்ளைங்க அப்பாவோட சண்டைக்கு வராங்களா? கிட்ட வாடா, கண்ணா ஹரி. என்னாலே சரியா திரும்ப முடியலே. எழுந்திருக்க முடியலே.

ஹரியின் குரல்:
அம்மா, அப்படியே இரும்மா. நான் வறேன். உன்னை இந்த மாதிரி நோயாளியாக்கிட்டானே! இந்த மஹாத்மா! பெரிய மஹாத்மா!

(மேடையில் மீண்டும் வெளிச்சம். அழுக்கு உடையணிந்து கொண்டு, பா அருகில் ஹரி அழுது கொண்டு இருக்கிறான்.)

பா:
அழாதேடா, கண்ணா. எனக்கு கொள்ளி போடுவையா? நீ எங்கேன்னு மட்டும் அப்பாவுக்கு அப்பப்போ சொல்லிடுடா.

ஹரி:
என்னை போட விட மாட்டாம்மா. நான் முஸல்மான் ஆனவன் இல்லையா? அதோ அங்கே இருக்கானே, பெரிய மஹாத்மா. அவன் உனக்கும் போடுவான், எனக்கும் போடுவான். நாம எல்லோருக்கும் போடுவான்.

(ஹரி அழுது கொண்டே வெளியேறுகிறான். மீண்டும் இருள்.)

பாபுஜி குரல்:
நான் எவ்வளவு பாபம் செஞ்சிருக்கேன். எத்தனை ஆயிரக் கணக்கானவங்க என் பேச்சைக் கேட்டு உயிரை விட்டிருக்காங்க. மனைவி, குழந்தை, குடும்பம், தொழில், வருமானம் எல்லாத்தையும் துறந்திருக்காங்க. நான், இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறேன். யார்கிட்டே சொல்லப்போறேன்? பகவானே என்னை மன்னிப்பானா?

ஹரி குரல்:
மாட்டான். ஒரு போதும் மாட்டான்.

(மேடையில் வெளிச்சம்.)

பாபுஜி:
ஹரி, என்னை ஏன் சித்திரவதை செய்கிறாய்? நீ சீமைக்குப் போய் ஒரு வெள்ளைக்காரனாத் திரும்ப வேண்டாம்னு இன்னிக்கும் சொல்றேன்.

ஹரி:
உனக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம். ஒரு டிகிரி கூட வாங்காம நீ கடல் தாண்டிப் போகலாம், எல்லா தகுதிகளும் உள்ள நான் போகக் கூடாது. உன் கூட இருக்கிற சகாக்கள் கூட்டாளிகளெல்லாம் சீமைக்குப் போனவங்கதானே?

பாபுஜி:
நீ ஒருவனாவது முழு இந்தியனா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். எனக்கு இன்னும் தெரியலைடா, இன்னொருவன் வாழ்க்கையை நான் தீர்மானிக்கக் கூடுமா, கூடாதான்னு. ஹரி நான் உள்ளுக்குள்ளே நிறைய சித்திரவதைப் படுகிறேன். இப்பொ பார், அம்மாவுக்கு வெள்ளைக்கார வைத்தியம். அது அம்மாவுக்கும் பிடிக்கலை, எனக்கும் பிடிக்கலை.

ஹரி:
நீ எக்கேடு கெட்டுப் போ. நீ எனக்கு அப்பன் இல்லே. நான் உனக்குப் பிள்ளை இல்லே.

(ஹரி போய் விடுகிறான்.)

பாபுஜி:
ஹரி, நீ மஹாப் பாபங்கள் செஞ்சிருக்கே. நான் மன்னிக்கணும்னு இல்லே. பகவான் மன்னிக்கட்டும்.

(பாபுஜி, ஒரு மூலையில் அடுக்கி வைத்திருந்த கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.)

பாபுஜி:
பா, இன்னிக்கு தேவ்தாஸ் வரப் போறான்.

(பா, கண்ணை மூடிப் படுத்தபடி இருக்கிறாள். பாபுஜி அவள் அருகில் சென்று நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறார்.)

பாபுஜி:
ஐயோ, நெருப்பா கொதிக்கறதே!

(ஒரு கணம் கலங்கி நிற்கிறார். அறை ஓரத்தில் இருந்த பெட்டி ராட்டையை எடுத்து நூல் நூற்கத் தொடங்குகிறார். தேவ்தாஸ் வருகிறார்.)

தேவ்தாஸ்:
அப்பா…!

பாபுஜி:
தேவ்தாஸ், வந்துட்டயா? எப்போ வந்தே? நான் ரொம்பக் கலங்கி இருக்கேண்டா.

தேவ்தாஸ்:
அப்பா, அம்மாவுக்கு ஒரு புது மருந்து கொண்டு வந்திருக்கேன். இது எந்தப் பிராணியையும் கொன்னு செஞ்சதில்லே. இது கொடுத்தா அம்மா நியூமோனியா போய்யிடும்.

பாபுஜி:
என்ன மருந்து?

தேவ்தாஸ்:
இப்போதைக்கு இதைப் பெனிசிலின்னு பெயர் வைச்சிருக்கா. எந்த விஷக் காச்சலும் போயிடும். இந்த மருந்து குடும்பத்துக்கு ஆண்டிபயாடிக்ஸ்னு பேர் வச்சிருக்காங்க.

பாபுஜி:
ஆண்டிபயாடிக்ஸ்னா உயிரினத்துக்கு எதிரின்னு அர்த்தம்.

தேவ்தாஸ்:
இல்லை பாபுஜி, இது விஷகிருமிக்கு எதிரி.

பாபுஜி:
ஊஹும் வேண்டாம். இந்த புது மருந்து அம்மாவுக்கு வேண்டாம்.

தேவ்தாஸ்:
அம்மா சரியாக வேண்டாமா? அம்மா பொழைக்க வேண்டாமா? இது என்ன பிடிவாதம்பா? அம்மா நிமோனியா இதுலே போயிடும்.

பாபுஜி:
வேண்டாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.

தேவ்தாஸ்:
அப்பா, நீங்க என்னையும் அண்ணா மாதிரி ஆக்கப் பாக்கறீங்க.

பாபுஜி:
என் கஸ்தூரியே போயிடப் போறா. நீ தாராளமா என்ன வேண்டுமானாலும் ஆகலாம். இந்தப் புது மருந்து வேண்டாம்.

(தேவ்தாஸ் மிகுந்த வெறுப்புடன் பாபுஜியைப் பார்க்கிறான். அம்மாவிடம் போகிறான்.)

தேவ்தாஸ்:
அம்மா! அம்மா! இதோ உன் தேவ்தாஸ் வந்திருக்கேன்மா. அம்மா! அம்மா!

(அம்மாவைக் குலுக்குகிறான். பா-வின் கையை தூக்கிக் கீழே விடுகிறான். உயிரற்ற கை அப்படியே விழுகிறது.)

**
குறிப்பு:
காந்தி சிறை வைக்கப்பட்ட அறையில், மேஜை – நாற்காலி – கட்டில் எதுவும் கிடையாது.

*


நன்றி : அழகியசிங்கர் (நவீன விருட்சம்) , தாஜ்

தொடர்புடைய சில சுட்டிகள் :
‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ அசோகமித்திரனின் முன்னுரை

கொடுத்த கடன் – அசோகமித்திரன்

மீரா தான்சேன் சந்திப்பு – அசோகமித்திரன்

வக்கீல்களை விளாசும் காந்திஜி

’படிங்க நானா’ என்று தம்பி பஃக்ருதீன்  முந்தாநாள் சுட்டி அனுப்பிய உடனே – படித்துவிட்டு – முழுக்க இங்கே மீள்பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.  இதற்கொரு வக்கீல்நோட்டீஸ் வரப்பெற்றால் எங்கே ஓடி ஒளிவது?  சபரிலிருந்து வந்தாலே , ’கோர்ட் கோர்ட்’ என்று அலையாய் அலைந்த என் சீதேவி வாப்பா அந்தக் கட்டுரையைப் பார்த்தால் ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்தான்.  கொடுத்து வைக்கவில்லை. சரி,  ’ வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! ’ என்று கடுமையாக விளாசும் சட்ட ஆராய்ச்சியாளர் , சகோதரர் ’வாரண்ட் பாலா’வின் முழுக் கட்டுரையையும் வாசிக்க ‘இந்நேரம்’ தளத்திற்குச் செல்லுங்கள். பெரியார் விளாசியதும் அங்குண்டு. எனக்கு பயமுண்டு. நன்றி. – ஆபி..

***

’ மகாத்மா காந்தி தனது 40 -வது வயதான 1909 ஆம் ஆண்டில் எழுதிய ‘இந்திய சுயராஜ்யம்’* என்ற நூலின் 11 -வது கட்டுரையில் வக்கீல்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் விரிவாக தெரிவிக்கும் கருத்தை, விரிவஞ்சி மிக முக்கியமான கருத்துக்கள் மாறாமல் கீழ்கண்டவாறு தொகுக்கிறேன். (* இந்நூலைக் காந்திய இலக்கியச் சங்கம், மதுரை – 625020, மலிவு விலை வெளியீடாக ரூ 10 க்குத் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது.) –  வாரண்ட் பாலா . ***

***

வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டைப் போதிக்கிறது.

இத்தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய, துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக வருவதில்லை.

பணக்காரர் ஆவதற்கான வழிகளில் வக்கீல் தொழிலும் ஒன்று.

மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை நான் அறிவேன்.

இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. அவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள்.

இவர்கள் தெய்வப் பிறவியோ ஏன்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்ளுகின்றனர்.

இவர்களால் குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன.

கோர்ட்டுகளுக்கு போகத் தலைப்பட்ட பிறகே அவர்கள் மனிதத்தன்மையில் குறைந்தவர்களாகவும், கோழைகளாகவும் மாறினர்.

மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நினைப்பது தவறு.

தங்கள் தகராறுகளை மக்கள் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்வதாய் இருந்தால், அவர்கள் மீது மூன்றாம் ஆள் எந்த வித ஆதிக்கத்தையும் செய்ய முடியாது.

எது நியாயம் என்பது தகராறில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். இதில் மூன்றாம் ஆள் கூறும் தீர்ப்பு எப்போதுமே நியாயமானதாக இருந்துவிட போவதில்லை என்பது நிச்சயம்.

முதன் முதலில் வக்கீல்கள் எவ்விதம் தோன்றினர், அவர்களுக்கு எவ்விதம் சலுகைகள் அளிக்கப்பட்டன என்பவைகளை நீங்கள் சரியாக தெரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு இத்தொழிலைக் குறித்து எனக்கு இருந்து வரும் வெறுப்பே உங்களுக்கும்   ஏற்படும்.

வக்கீல்கள் நாட்டிற்கு செய்திருக்கும் மிகப் பெரிய தீங்கு ஆங்கிலேயரின் பிடிப்பை இங்கு பலப்படுத்தி இருப்பதாகும். விபச்சாரத்தைப் போல இத்தொழிலும் இழிவானது என்று கருதி விட்டால், ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும்.

வக்கீல்களைப்பற்றி நான் கூறியன யாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒவ்வொருக்கொருவர் பக்க பலமாக இருப்பவர்கள்.

இவைகள் முற்றிலும் உண்மை. இதற்கு எதிரான எந்தக் கூற்றும் பாசாங்காகும்.

***

நன்றி :

வாரண்ட் பாலா வலைப்பூ : http://warrantbalaw.blogspot.com/  |  Cell : +919842909190  | E-Mail : warrantbalaw@gmail.com

காந்திஜியின் நாகூர் விசிட்!

‘நாகூருக்கு வந்துச் சென்ற பிரபலங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சுதந்திரத் தியாகிகள் மொளானா முஹம்மது அலி, செளகத் அலி  முதல் பக்ருத்தீன் அலி அஹ்மது, ஜெயில் சிங், ராஜீவ் காந்தி வரை – எத்தனையோ தேசத்தலைவர்கள் இந்தச் சிற்றூருக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.

உப்பு சத்தியாக்கிரகத்தின்போது மகாத்மா காந்தி வேதாரண்யம் வந்தது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. நாகூருக்கு அவர் வந்தாரா இல்லையா என்ற விவரம் தெரியாது. மூத்தக் குடிமகன் யாரிடமாவது கேட்டால் என்ன என்ற எண்ணம் தோன்ற  “நாகூருக்கு காந்திஜி வந்திருக்காரா?” என்று நண்பர் ஆபிதீனிடம் கேட்டேன்.  “சாரி எனக்கு அவ்வளவு வயசு கிடையாது” என்ற பதிலோடு அவர் நிறுத்தியிருக்கலாம். கூடவே “வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? வந்ததாக நினைத்துக்கொண்டு ஒரு பதிவை போட உங்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்?” என்று தூண்டியும் விட்டு விட்டார். என் கற்பனைக்கு விட்ட சவாலை எதிர்கொள்ள வேண்டியது என் இலக்கியக் கடமையாகிவிட்டது.’ – அப்துல் கையூம்

**

காந்திஜியின் நாகூர் விசிட்
– அப்துல் கையூம்

காந்திஜியை ஏற்றிக்கொண்டு வரும் நாகூர் பாஸ்-பாஸன்ஜர்ஸ் இரயில் பிளாட்பாரத்தை அடைய இன்னும் சற்று நேரமே எஞ்சி இருந்தது.

உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் ஜப்பார் மரைக்காயர், சூர்யமுத்துச் செட்டியார், யூசுப் ரஹ்மத்துல்லா சேட் உட்பட  அனைத்து கதர்ச் சட்டைக்காரர்களும் புகைவண்டி நிலையத்தில் திரளாக வந்துக் குழுமியிருந்தனர். நாகூர் காதி கிராப்ட் நிறுவனத்தார் வரவேற்பு பேனர் ஒன்றைத் தொங்கவிட்டிருந்தனர்.

ஊர்வலமாக அழைத்துச் செல்ல பக்தாத் நானா தலைமையில் கெளதிய்யா பைத்து சபையினர் “தப்ஸ்” ஏந்தி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். முஸ்லிம் சங்கத் தொண்டர்படை வீரர்கள் மெய்நகுதா காக்கா தலைமையில் விசிறி பேட்ஜை அணிந்துக் கொண்டு அணிவகுத்திருந்தனர்.

காந்திஜி வந்து இறக்கியதும் “நாரே தக்பீர்” என்ற முழக்கம் வானைப் பிளந்தது. தர்கா யானையில் காந்திஜியை உட்கார வைத்து ஊர்வலம் அழைத்துப் போவதாகத்தான் ஒரிஜினல் ஏற்பாடு.  காந்திஜி மறுத்து விட்டதால் பாத யாத்திரையாகவே அழைத்துச் சென்றனர்.

நல்லவேளை அப்படிச் செய்யவில்லை. காந்திஜி கையில் எப்போதும் கம்பு வைத்திருந்ததால், யானைமீது அவர் உட்காரும்போது, யானை மிரண்டு தாறுமாறாக ஓடினால் என்னாகும்?

தெருப் பள்ளித்தெரு நெடுகிலும்  செட்டியார் பள்ளி, தேசிய மேல்நிலைப்பள்ளி, கோஷா  ஸ்கூல், கெளதிய்யா பள்ளி மாணவ மாணவிகள் மலர்த்தூவி வரவேற்றனர். நாகூரில் இரண்டே இரண்டு பூக்கடைகள்தான் இருந்தன. அன்று அவர்களுக்கு நல்ல வியாபாரம். யாரோ ஒருவர் காந்திஜிக்கு ‘சேரா’ கட்டிவிட்டு, கையில் பூச்செண்டு கொடுத்து, பக்கியில் அழைத்து வந்தால் என்ன என்று கூட ஐடியா கொடுத்தாராம். மயில் டான்ஸ் ஆட ‘வாடா சுல்தான்’ கூட ரெடியாக இருந்ததாகக் கேள்வி.

ஓவியர் நாகை ஜீவியின் கைவண்ணத்தில் ஆளுயர கட்-அவுட்  அலங்கார வாசல் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தர்காவிற்குள் நுழையும்போது செருப்பை கழற்றி வைப்பது வழக்கம். காந்திஜி செருப்பில்லாமலேயே பாதயாத்திரை மேற்கொண்டிருந்ததால், குடை ரிப்பேர் பார்க்கும் ரஜ்ஜாக் பாய்க்கு, செருப்பை காவல் காக்க வேண்டிய வேலைகூட  இல்லாமல் போய் விட்டது.

அலங்கார வாசல் வந்ததுமே காந்திஜி ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அதற்கு காரணம் இருந்தது. கடைத்தெருவில் சுடச்சுட வறுத்தெடுக்கும் மல்லாக் கொட்டையின் வாசம்தான் அது.  போகும்போது மறக்காமல் பார்ஸல் கட்டிக் கொடுக்கிறோம் என்று கட்சித் தொண்டர்கள் கூற, பொக்கை வாய் மலர புன்னகை புரிந்தார் காந்தியடிகள்.

அலங்கார வாசலில் நிறுவப்பட்டிருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்து, தான் லண்டனில் பார்த்த Big Ben கடியாரத்தை போன்றே இருக்கிறது என்று நினைவுக் கூர்ந்தார் காந்திஜி. அருகிலேயே சுவீட் கடைக்காரர் ராவ்ஜி.

தர்கா உள்ளே நுழைந்ததுமே யாரோ ஒரு சாபு காந்திஜிக்கு குலாம் காதர் கடையிலிருந்து வாங்கி வந்த Fur தொப்பியை சாய்வாக அணிவிக்க, காந்தி ஜின்னாவின் சாயலில் தெரிய ஆரம்பித்தார். உடனே போட்டோகிராபர்கள் தத்தம் தகரப்பெட்டி காமிராவை கையில் ஏந்தி ‘கிளிக்’ செய்யத் தொடங்கினார்கள்.

மகாத்மா காந்தியை புறாக்கூண்டு வழியாகத்தான் அழைத்துச் சென்றார்கள், வழக்கம் போல அவர் ‘விறுவிறு’வென்று வேகநடை நடந்ததால் அதை அவர் கண்டுக் கொள்ளவில்லை. மேனகா காந்தியாக இருந்தால்  இது ஜீவகாருண்யத்திற்கு மீறியச் செயல் என்று கூண்டுப்புறாக்களைப் பிடித்து பறக்க விட்டிருப்பார்.

நேர்த்திக்கடனுக்காக நேர்ந்து விடப்பட்ட ஆடு ஒன்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தது. காந்திஜி, திடீரென்று பிரேக் அடித்து நிற்க, “தங்களுக்கு ஆட்டுப் பால் என்றால் பயங்கர இஷ்டம் என்பது எங்களுக்குத் தெரியும், இது கிடா ஆடு” என்று ஒருவர் சொல்ல காந்திஜி புரிந்துக்கொண்டார்.

சின்ன எஜமான் வாசலில் பாத்திரத்தில் நீரை நிரப்பி கூரையில் தொங்கிய சங்கிலியை ‘சலக் சலக்’ என்று நனைத்துக் கொடுக்க அதை தீர்த்தமென வாங்கி மேனியில் அப்பிக் கொண்டார் காந்திஜி. பாரதத்தின் அடிமைச்  சங்கிலி அறுபட்டதை சிம்பாலிக்காக காட்டுவதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

நீங்கள் கண்டு களிப்பதற்கு முக்கியமான இடமொன்று இங்கு இருக்கிறது என்று கூற, காந்திஜிக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. தர்கா முற்றத்தில் இருந்த உப்புக் கிணறுக்கு அழைத்துச் சென்றார்கள். காந்திஜிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. நாம் செய்யும் உப்பு சத்யாகிரகத்தை விளம்பரப் படுத்துவதற்காகவே இப்படி இதை அமைத்திருக்கிறார்கள் என்று நினைத்து உணர்ச்சி வயப்பட்டார்.

காந்திஜிக்கு வரவேற்பு நல்கியவர்கள் பேசாமல் தர்கா தோட்டம், மையத்தங்கொல்லை, முதுபக், பீர் மண்டம், குளுந்த மண்டபம்  என்று சுற்றிக் காண்பித்துவிட்டு அவரை அப்படியே அனுப்பி வைத்திருக்கலாம். கிழக்குப்புற வாசலுக்கு அழைத்துச் சென்றால் அவர் மொட்டையடிக்க ஆசைப்படலாம் என்று நினத்ததால்தான் வினையே வந்தது.

தர்காகுளம் அருகே வந்ததுதான் தாமதம், காந்திஜி மூக்கைப் பிடித்துக் கொண்டார். அப்படி ஒரு மூத்திர நெடி. மனுஷர் வாழ்க்கையே வெறுத்துவிட்டார். அப்புறமென்ன? பட்டது போதுமென்ற பாதயாத்திரியாகவே புறப்பட்டுவிட்டார். பின்னாலேயே கதர்ச்சட்டைக்காரர்களும் மூக்கைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினர்.

வேர்க்கடலை பார்ஸலைக்கூட அவருக்கு வாங்கிக் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.

***

காந்திஜி ஜோக்ஸ்

சாபு : 1869 வது வருஷத்துலே என்ன நடந்துச்சு?
சிஷ்யன் : தெரியலே ஹஜ்ரத்து
சாபு : இதுகூட தெரியலியா உம்பருக்கு? இந்த வருஷத்துலேதான் காந்திஜி பொறந்தாஹா
சிஷ்யன் : அப்படியா ஹஜ்ரத்து?
சாபு : அது போவட்டும். 1871 வது வருஷத்துலே என்ன நடந்துச்சு?
சிஷ்யன் : காந்திஜிக்கு ரெண்டு வயசு. அஹ எந்திரிச்சு நடந்தாஹா ஹஜ்ரத்து.

*

சின்ன மரைக்கான் : காந்திஜி செருப்பு ரப்பர் போட மாட்டாஹா. அஹலுக்கு மிதிரிக்கட்டைதான் புடிக்கும். ஏன் சொல்லு?
சேத்த மரைக்கான் : தெரியலே
சின்ன மரைக்கான் : செருப்புலேதான் “வார்” (War) இருக்குதே அதனாலதான்.

*

சி. மரைக்கான் : காதர்பாய், காஜாபாய், கரீம்பாய் இது எல்லாமே முஸ்லீம் பேருதானே?
சே.மரைக்கான் : ஆமா அதுக்கு என்ன இப்போ?
சி,மரைக்கான் : காந்திஜி கல்யாணம் முடிச்சிக்கிட்டஹ முஸ்லீமா?
சே.மரைக்கான் : இல்லியே? யாரு சொன்னாஹா.
சி.மரைக்கான் : காந்திஜியோட வூட்டுக்காரஹ பேரு கஸ்தூரி பாய்ன்னு சொல்லுறாஹலே.

*

காந்திஜிக்கு பிடிச்ச டூத் பேஸ்ட்?
Promise டூத் பேஸ்ட்
காந்திஜிக்கு பிடிச்ச பிஸ்கட்?
True பிஸ்கட்
காந்திஜிக்கு பிடிச்ச சினிமா கொட்டகை?
சத்யம் தியேட்டர்
காந்திஜிக்கு பிடிச்ச பாடகரு?
ஹரிஸ்சந்திரா

*

சி.மரைக்கான் : குன்னக்குடி வைத்யநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்?
சே.மரைக்கான் : இஹ வயலோனிஸ்ட், அஹ நான்-வயலோனிஸ்ட்

*

சி.மரைக்கான் : காந்திஜி சிலைக்கு மேலே காக்கா எச்சம் பண்ணாது. ஏன் தெரியுமா?
சே.மரைக்கான் : தெரியலியே !!
சி.மரைக்கான் : அஹ கையிலே அஸா குச்சி வச்சிருக்காஹல்லே. அதுக்கு பயந்துதான்.

*

நாகூர் அலங்கார வாசலில் பிச்சை பாத்திரத்தை ஏந்திக்கொண்டு நிற்கும் மிஸ்கீன் ஒருவருக்காக கவிஞர் மு.மேத்தா எழுதிய கவிதை

இது :

“அமுதசுரபியைத்தான்
நீ தந்துச் சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம்”

**

நன்றி : காந்திஜி, சாரி, கய்யும்ஜி

« Older entries