Charlie Chaplin – Shoulder Arms (1918)

அம்ஷன் குமார் : ஷோல்டேர் ஆர்ம்ஸ் என்று ஒரு மௌனப்படம். அதில் முதல் உலகப் போரில் தோற்றுப்போன ராணுவ வீரனாக சாப்ளின் தோன்றுவார். எதிரிகளிடமிருந்து தப்பியோடி அவர் ஒரு வீட்டிற்குள் நுழைவார். அந்த வீடு குண்டுகள் பாய்ந்து சின்னாபின்னமாக இருக்கிறது. அதில் மீதமிருப்பன ஒரு கதவும் மாடிப் படிகளும்தாம். சாப்ளின் அவசரமாக உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொள்வார். பின்னர் மாடிக்குச் சென்று ஒரு திரைச் சீலையை ஒப்புக்குத் தொங்கவிட்டு விட்டு அப்பாடா என்று சோம்பல் முறித்தவாறு கட்டிலில் படுத்துக்கொள்வார். வீட்டில் எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. ஆனால் சாப்ளின் கதவையும் திரைச்சீலையையும் தாண்டி எவரும் தன்னைக் கண்டு பிடித்துவிட முடியாது என்று நம்புகிறார். அதற்குக் காரணம் அவர் அந்த வீட்டிற்குள் கதவின் வழியாக நுழைந்தார். கதவிற்கு இரண்டு அடிகள் தள்ளி ஓட்டைச் சுவர் மூலமாகவும் அவர் நுழைந்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. கதவு இருக்கும்போது அதைத்தானே பயன்படுத்த வேண்டும். அதே போன்றுதான் மாடியில் படுக்கச் செல்வதும். திரைச்சீலையைத் தாண்டி முன் அனுமதியின்றிச் சயன அறைக்குள் எவரும் பிரவேசிக்க முடியாதல்லவா? யுத்தம் நடந்தாலும் நாகரிகப் பண்புகள் காக்கப்பட வேண்டும். சாப்ளினின் நகைச்சுவை இவ்வாறான மனோபாவத்திலிருந்துதான் உருவாகிறது. வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைக் காட்டு என்கிற அறிவுரையைப் பின்பற்றினால் எதிராளியின் கோபத்திலிருந்து தப்பலாம் என்பதை அப்பட்டமாக நம்பி அவர் இடது கன்னத்தைக் காட்டுவார். பளார் என்று அங்கேயும் ஒரு அறை விழும். பார்வையாளர்களுக்கு உடனே சிரிப்பு வரும். அதே சமயம் நியாயம், தர்மம், நாகரிகம் ஆகியன என்னவாயின என்று நமது அக்கறையையும் அவர் தூண்டிவிடுகிறார். – காலச்சுவடு கட்டுரையிலிருந்து


Thanks to : Adrian A & Amshan Kumar

கம்மட்டிப்பாடம் (விமர்சனம்) – ஆசிப் மீரான்

kammatti-paadam-1

ஐம்பதுகளில் நம்பூதிரிப்பாடு முதலமைச்சரான காலத்தில் கொச்சி பெருநகரமாக இருக்கவில்லை. நிலமற்ற ஏழைகளுக்கு குறிப்பாக நிலத்தில் கூலியாட்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த புலையர்கள் என்ற தலித்களுக்கு கொச்சியின் புறநகர்ப் பகுதியின் சதுப்புநிலங்களை நம்பூதிரிப்பாடு நிலமாற்ற சட்டத்தின் அடிப்படையில் வழங்கியிருந்தார்.தொண்ணூறுகளில் கொச்சி பெருநகர கழகம் அமைந்தபின் சதுப்பாக இருந்து விளை நிலங்களாக மாறிய நெல்வயல்கள் மண்மூடி அடுக்ககங்களால் நிரப்பப்பட்டு உயர்ந்து நிற்கையில் அதன் பின்னணியில் நிலங்களை வலுக்கட்டாயமாக ரியல் எஸ்டேட்காரர்களிடம் சூழ்ச்சியால் இழந்த தலித்களின் வாழ்க்கை அந்த நெல்வயல்களைப் போலவே மூடப்பட்டு கிடந்தது

அக்காணும் மாமலயொண்ணும்
நம்முடதல்ல என் மகனே
ஈ காயல் கயவும் கரயும்
ஆருடெயுமல்ல என் மகனே

புழு புலிகள் பக்கி பருந்துகள்
கடலானகள் காட்டுருவங்கள்
பலகால பரதெய்வங்கள்
புலயாடிகள் நம்மளுமொப்பம்
நரகிச்சு பொருக்கும் இவ்விடம்
பூலோகம் திருமகனே
கலகிச்சு மரிக்கும் இவிடம்
இகலோகம் திருமகனே

புலையர்கள் என்ற ஒடுக்கப்பட்ட இனத்தின் அவலத்தைச் சொல்லும் வலி மிகுந்த வரிகள். அந்த வலிகளுக்குப்
பின்னால் கட்டி உயர்த்தப்பட்ட கொச்சி பெருநகரம். நகரமயமாக்கலில் சிதைந்து போன எளியவர்களின்
வாழ்க்கை. யாருடைய வாழ்வுக்காகவோ தங்கள் வாழ்வை உதிரிகளாகவே வாழ்ந்து முடித்தாக வேண்டிய
அவலத்துக்கு ஆளாக்கப்படும் ஒரு சமூகம். சதுப்பு நிலங்களை இரத்தத்தால் நிரப்பும்போது அழிந்துபோகும்
வாழ்க்கையின் அவலங்களை அதன் கோர முகங்களை, வன்முறையின் அடர்த்தியை, குரூரங்களை முகத்தில்
அறையும் காட்சிக்கோர்வைகளோடு சொல்லிச் செல்கிறது கம்மட்டிப்பாடம்

இக்கட்டில் இருக்கும் நண்பன் கங்காவைத் தேடி வருகிறான் கிருஷ்ணன். ‘அவனுக்காக நீ வருகிறாய். உனக்கு ஏதேனுமென்றால் அவன் வர மாட்டானென உனக்குத் தெரியாதா?’ என்கிறாள் கிருஷ்ணனின் முன்னாள் காதலியும் கங்காவின் இந்நாள் மனைவியுமான அனிதா.

துரோகமும், வன்மமும், சுயநலமும் சூழ்ந்த உலகில் கங்காவை கிருஷ்ணன் தேடுகையில் கிருஷ்ணனின் கடந்து போன வாழ்க்கை காட்சிகளாக விரிகின்றன.

இளம் வயதிலேயே கையில் கத்தியெடுக்கும் சூழலும், கூட்டம் சேர்ந்தால் கிடைக்கும் தைரியமும், எந்த
வழியிலாவது சம்பாதிக்கலாமென்ற மனக்கருத்தும் கொண்ட கூட்டத்தின் கதையாக அது விரிகையில் இந்த
வன்முறைக்கு வித்திடும் கனவான்கள் அந்தச் சூழலை எப்படி தமக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்ற
இன்னொரு சரட்டை இயக்குனர் சாமர்த்தியமாக உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்.

வெறும் ‘குண்டர்’களின் கதையாக மட்டுமில்லாமல், வெறும் சாதாரண டீக்கடைக்காரனாக இருந்து
ஒன்றுமறியாத விளிம்புநிலைச் சிறுவர்களை வன்முறையை ஏவி விட்டு சில்லறைகளுக்காக தங்கள்
வாழ்க்கையைப் பணயம் வைக்கும் அவர்களின் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தன்னளவில் உயர்ந்து
விடும் பெரிய மனிதனின் கதையாகவும் இதனைப் பார்க்க முடியும். ஒன்று நசிந்தால்தான் இன்னொன்று வாழும்
என்றொரு மலையாள சொலவடையை இயக்குனர் ராஜீவ்ரவி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓர் இளைஞர் கூட்டம். சட்டென்று உணர்ச்சிவசப்படும் அவர்களது கோபத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியசாலியின் சூட்சுமம் புரியாமல், தங்களது வாழ்க்கையை அடகு
வைக்கிறார்கள். அவர்களுக்கு நன்மைக்கும்‌ தீமைக்கும்‌இடையிலான வரம்புகள் எதுவும் நிச்சயமில்லை. அன்றாட வாழ்க்கையின்‌ தேவைக்கு சாராயம்‌கடத்துதல், அடியாளாக மாறி ஆட்களை அடித்தல், குடியிருப்பவர்களை மிரட்டி ஓட வைப்பது, தேவையென்றால் இடுப்பில் கத்தியைச் செருகுவதென்று எதைப் பற்றியும் யோசிக்காமல் இயங்கும் அந்தக் கூட்டத்தின் தலைவன் பாலேட்டன், அவனது தம்பி கங்கா அவர்களோடு சிறுவயதிலிருந்தே  நட்பு பாராட்டும் ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த கிருஷ்ணன். இவர்களைச் சுற்றி முன்னும் பின்னுமாக ‘நான்லீனியராக’ கதை நகர்ந்தாலும் குழப்பமில்லாத திரைக்கதை பார்வையாளனைக் குழப்புவதில்லை

‘அன்னயும் ரஸூலும்’ இயக்கிய அதே ராஜீவ் ரவிதான் கம்மட்டிப்பாடத்தையும் இயக்கியிருக்கிறார்.
அவருக்கேயுண்டான நிதானமான இயல்பான விதத்தில் இயக்கியிருக்கிறார்.ஒரு கேங்ஸ்டர் கதையினூடாக
வன்முறைக்குத் தள்ளப்படும் சமூகத்தையும் வெவ்வேறு காலகட்டத்தில் வளரும் நகரத்தையும் அழகாகக்
காட்சிப்படுத்தியிருக்கிறார்.படத்திற்கான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் சந்தேகமேயில்லாமல் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.

நடிப்பைப் பொறுத்தவரை மலையாள சினிமா நடிகர்கள் ராட்சசன்கள். பாலனேட்டனாக அறிமுகமாகி இருக்கும்
நாடக நடிகர் மணிகண்டன் மர்க்களப்படுத்தியிருக்கிறார். கங்காவாக விநாயகம் நடத்தியிருக்கும் அதிரடி
ருத்ரதாண்டவம் படம் முடிந்து வெகுநேரமாகியும் அடங்க மறுக்கிறது. உடல் மொழியும்,வசன உச்சரிப்பும்
இயக்குனரின் தேர்வை வெகுவாக நியாயப்படுத்தியிருக்கிறது. படத்தின் ஆணி வேரே கங்காதான் என்று உறுதியாகச் சொல்லி விடமுடியும். இந்த இரண்டு அசுரர்களுக்கு நடுவில் கிடைத்த வாய்ப்பில் நேர்த்தியாகச் செய்திருக்கிறார் துல்கர் சல்மான். படத்திற்குப் படம் வெவ்வேறு பரிமாணங்களைத் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனக்கென ஓர் இடத்தைத் தேர்வு செய்வதில் துல்கர் காட்டும் முனைப்பு அவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தரும். இவ்விருவரின் அசாத்தியப் பாத்திரப் படைப்பிற்கு நடுவில் இந்தக் கதாபாத்திரத்தைச்
செய்யத் துணிந்ததே அதற்கான அத்தாட்சி.

“எனக்குத் தெரியும் அவ உன்னைத்தான் லவ் பண்றான்னு. ஆனாலும் அவ என்‌முறப் பொண்ணு. நீ அவளை மறந்துடு” உயிர்த்தோழனான கிருஷ்ணாவிடம் கங்கா சொல்லும் இந்தக் காட்சியில் இருவரின் முகபாவங்களும்.. அபாரம்.

சிறைக்குச் சென்ற மகன் விடுதலையாகும் போது காண வரும் தந்தை அவன்‌ விடுதலையானதுமே அவனைத்
தங்களோடு எடுத்துச் சென்று விட கண்கலங்கி நிற்கும் தந்தை, எவரையோ யாருக்காகவோ இருப்பிடத்தை
விட்டு விரட்டும் உறவுகளைக் கண்டிக்க முடியாமல்‌உயிர்விடும் தோழர் என்று சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட அழகு சேர்க்கிறார்கள் படத்திற்கு.

மதுநீலகண்டனின் காட்சி சட்டகங்கள் படத்தை மேலும் வசீகரப்படுத்துகின்றன. வெவ்வேறு கால கட்டங்களாகக்
கொச்சியை‌ உள்வாங்கிக் கொள்வதில் மதுவின் திறமை சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

இயக்குனர் ராஜீவ் ராயின் கதைக்கு அழகாக நேர்த்தியான திரைக்கதையை உருவாக்கித் தந்திருக்கிறார்
பாலச்சந்திரன்.

கே என்ற கிருஷ்ணகுமாரின் பின்னணியும் விநாயகம், ஜான் வர்க்கி ஆகியோரின்‌இசையில் உருவான
பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன

இரண்டாம் பகுதி மெதுவாக நகர்வதும், பொதுவாகவே படத்தின் நீளம்‌அதிகமாக இருப்பதும்‌தவிர்த்தால்…

கம்மட்டிப்பாடம் – ஓர் அழகியல்‌ அனுபவம்

*

asifmeeran-IMG_2999

நன்றி : ஆசிப் மீரான்
https://www.facebook.com/asifmeeran

« Older entries