பொக்கிஷமாய் ஒரு கையெழுத்து

எனது பள்ளி இறுதிப் பருவத்திலிருந்து அந்த எழுத்தாளரின் பரம விசிறியாக மாறியிருந்தேன் (நன்றி : பாஸ்கரன்) . இத்தனைக்கும் அவர் எழுத்து எனக்கு முழுக்கவும் புரியாது அப்போது . ஆனால் காந்தமாய் ஈர்க்கும்.  என்னிடம் இல்லாத அவருடைய புத்தகங்கள் எந்த நூலகத்தில் இருந்தாலும் உடனே சுட்டுவிடுவது ஃபர்ளாக (கடமையாக) இருந்தது. (திருட்டென்று இதைச் சொல்ல முடியாது; காணால் போய் விட்டதென்று சொல்லி அதற்குரிய விலையை நான்தான் நூலகரிடம் கொடுத்துவிடுகிறேனே..!)  எந்த பெரிய எழுத்தாளருக்கும் கடிதம் எழுதாதவன்,  கூச்சத்தை உதறி, கல்லூரியில் படிக்கும்போது  ஒரு புத்தகம் கேட்டு அவருக்கு எழுதினேன், 1977ல். அவருடைய மகளாரிடமிருந்து உடன் பதில் வந்தது, அவருடைய கையெழுத்துடன்! பெரிய பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன் இன்றும் அதை.  ஊர்போகும் ஒவ்வொரு முறையும் அந்த சகோதரியை , அந்த எழுத்தாளரின் குடும்பத்தாரை பார்க்கவேண்டும் என்று நினைப்பேன். இதுவரை வாய்ப்பு கைகூடியதில்லை. இறைவன் இந்த முறையாவது எனக்கு அந்த வாய்ப்பை அளிப்பான் என்று நம்புகிறேன்.

இந்த கடிதத்தை வெளியிட மிகவும் கூச்சமாக இருந்தது – எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று பந்தா காட்டுவது போல இருக்குமே என்று. வேறு வழியில்லை, பந்தா காட்டத்தான் வேண்டும். அப்போதுதான் வயசைக் காட்ட முடியும்! என்ன சொல்கிறீர்கள்? ஆமாம், யார் அந்த எழுத்தாளர்? ‘தி.ஜா’வா என்று கேட்டிருக்கிறார் நண்பர் பாலகிருஷ்ணன். இல்லை , அந்தப் பேறு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் இதுவும் பெரும் பேறுதான்… – ஆபிதீன்

***

அபிதீன் பாய்க்கு,

சலாம். இன்று தற்செயலாய் அப்பா ஏதோ பழைய காகிதங்களை புரட்டிக்கொண்டிருக்கையில் உங்கள் கடிதத்தை மேல் உறையுடன் என்னிடம் காண்பித்தார். எழுத்தின் அழகைக் கண்டு நான் ஸ்தம்பித்தே போனேன். கறுப்பு மசிக்கும் ஸன்னமான பேனா முள்ளுக்கும் எழுத்தின் வார்ப்பிடம் அச்சு தோற்றது. எனை மீறிய எழுச்சியால் முன்பின் அறியாத உங்களுக்கு எழுத்தின் அழகைப் பாராட்டி எழுதவும் தூண்ட வைத்துவிட்டது. நான் 14 வயது சிறுமி. அப்பாவுக்கு எவ்வளவோ கடிதங்கள் ரசிகர்களிடமிருந்து வந்திருக்கின்றன. வந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களில் உங்களுக்குத்தான் நான் முதல் முதலாக எழுதுகிறேன். அப்பா எதிரே உட்கார்ந்துகொண்டு புன்முறுவல் பூக்கிறார்.

உறையிலிருந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தவுடன் அப்பாவின் படம். எனக்கு ப்ரமிப்புக்கு மேல் பிரமிப்பு. அந்தத் தழற் கண்களும் உதட்டின் செதுக்கலும் அவரைப் பாராமலே எப்படி இத்தனை அச்சாக விழுந்திருக்கின்றன? என்னதான் photoவைப் பார்த்து வரைந்ததேயானாலும் இந்த ஜீவகளை – முக்கியமாய் அந்த புன்னகை, உங்கள் கைவண்ணத்திற்கே உரித்ததாய்த்தான் இருக்க முடியும்.

அப்பாவை கடிதத்திற்குப் பதில் போட்டீர்களா என்று கேட்டதற்கு புத்தகங்கள் ஒரு பிரதிகூட இல்லாமல் என்னத்தையம்மா அவருக்குப் போடுவது என்றார்…..
…..

உங்களுக்கு மனத்தாங்கல் இல்லாமல் அப்பாவின் கையொப்பம் இதோ…

***

பொக்கிஷமாய் நான் வைத்திருக்கும் அந்தக் கையெழுத்து உள்ள கடிதத்தைப் பார்க்க – ‘அந்த தழற் கண்கள்’ இன்னும் தெரியாவிட்டால் – இங்கே க்ளிக் செய்யுங்கள். அவர் போல ஒரு வரியாவது நான் எழுத (‘நீயா? ஹூம்ம்ம்..!’ – ஹனிபாக்கா) துஆ செய்யுங்கள். நன்றி.

குறிப்பு : நான் வரைந்து அனுப்பியது ‘வாசகர் வட்டம்’ நூலொன்றில் இருந்த இந்த புகைப்படம் பார்த்துத்தான்.

கடித இலக்கியம்: அப்ரஹாம் லிங்கன்

அப்ரஹாம் லிங்கன் தனது மகனின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய மடல்

எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது, எனக்குத் தெரியும் எல்லோரும் நியாயமானவர்கள் அல்ல. எல்லோரும் உண்மையானவர்களும் அல்ல. ஆனால் மேலும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள் ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்தில் ஒரு வீரனும் உண்டு.; ஒவ்வொரு சுயநல அரசியல்வாதி உள்ள இடத்தில் ஒரு தன்னலம் கருதாத தலைவரும் உண்டு. ஒவ்வொரு பகைவன் உள்ள இடத்தில் ஒரு நண்பனும் உண்டு என்று அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

இதற்கு காலம் எடுத்துக்கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக்கொடுக்கவும். அது ஈட்டியது ஒரு டாலர் எனினும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் மிகவும் மதிப்புமிக்கதாகும்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை கொண்டாடவும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

உங்களால் முடியுமானால், அவனை பொறாமையிலிருந்து அப்பால் இருக்கச் சொல்லவும்.

மனம்விட்டு சிரிப்பதன் இரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காண ஆரம்பத்திலேயே அவன் கற்றுக்கொள்ளட்டும்.

உங்களால் முடியுமானால், நூல்களின் அற்புதத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள், மேலும் வானத்தில் பறக்கும் பறவைகள், சுதந்திரமாய் ரீங்காரமிடும் தேனீக்கள், பசுமைக் குன்றுகள் மீது பூத்துக் குலுங்கும் மலர்கள் பற்றி ஆய்ந்தறியவும் அவனுக்கு நேரமளியுங்கள்.

ஏமாற்றுவதைக்காட்டிலும் தோற்றுப் போவது மரியாதைக்குரியது என்று அவனுக்கு பள்ளியில் கற்றுக்கொடுக்கவும்.

அவனுடைய சொந்த கருத்துக்கள் மீது நம்பிக்கை வைக்க கற்றுக் கொடுங்கள், எல்லோரும் அவை தவறானது என்று சொன்னாலும் கூட.

மெலியவர்களிடம் மென்மையாகவும், வலியவர்களிடம் வன்மையாகவும் நடந்துக்கொள்ள அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

வெற்றிபெறும் கட்சி பக்கமாக நிற்க எல்லோரும் முயற்சிக்கும் போது கூட்டத்தைப் பின்பற்றிச் செல்லாதிருக்க மன உறுதியை எனது மகனுக்கு அளிக்கவும்.

எல்லோரையும் கேட்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள், ஆனால் கேட்டதை எல்லாம் வடிகட்டி உண்மையை ஆய்ந்தறியவும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுக்கவும் கற்றுக்கொடுங்கள்.

முடியுமானால் இடுக்கண் வருங்கால் எப்படி நகுவது என்று கற்றுக்கொடுங்கள். கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்பதை கற்றுக்கொடுங்கள். ஓயாது குற்றம் காண்போரை ஏளனம் செய்யவும், மிகவும் வாய் இனிக்கப் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

உடல் வலிமையையும் புத்திசாலித்தனத்தையும் விற்பதில் தவறில்லை ஆனால், அது தனது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்துவிடக்கூடாது என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

கூப்பாடு போடும் கூட்டத்தில் அவன் செவிகளை அடைத்துக் கொள்ளவும்…. அவனுக்கு சரி எனப் பட்டதற்காக நின்று போராடவும், அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

அவனை மென்மையாக நடத்துங்கள்; ஆனால், அரவனைக்க வேண்டாம். ஏனெனில் நெருப்பில் புடம் போட்டால்தான் நேர்த்தியான எஃகு கிடைக்கும்.

பொறுமையின்றி இருக்க தைரியம் பெறட்டும். தைரியத்துடன் இருக்க பொறுமையுடன் இருக்கட்டும். எப்போதும் தன்னுள் விழுமிய நம்பிக்கையுடையவனாய் விளங்கட்டும். அப்போதுதான் அவன் மனிதைனத்தின் மீது விழுமிய நம்பிக்கையுடையவனாய் இருப்பான்.

இது ஒரு பெரும் கட்டளைதான்; ஆனால், உங்களால் என்ன செய்ய இயலும் என்று பாருங்கள். அவன் சின்னஞ் சிறுவன், என் மகன்.

***

Source : http://vnicholas.wordpress.com/2006/12/28/lincolns-letter-to-his-sons-teacher/

***

நன்றி : தாஜ் | satajdeen@gmail.com
11:17 PM 13/11/2010

உமாமகேஸ்வரிக்கு ஒரு கடிதம் : சு.ரா.

சுந்தர ராமசாமி [1931-2005] ஐந்தாம் ஆண்டு நினைவு
கநாசு.தாஜ்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்
இதே அக்டோபரில்தான்
சுந்தர ராமசாமி மறைந்தார்.
அவரது துயரச் செய்தியை
அறியவந்த நேரம்,
தமிழகம் தழுவ பெருமழை!
மனதை நெருடியது சஞ்சலம்
பார்வை கொண்ட இடமெல்லாம்
பெருக்கெடுத்தது நீர்!
நாடு பூராவும்
என்னை ஒத்த/ என்னை விஞ்சிய
எத்தனை எத்தனையோ வாசகர்கள்

பல இடங்களில் வெள்ள அறிவிப்பு!

கலை இலக்கியத்தோடு
ஆத்மார்த்தமாய் ஈடுபாடுகொண்ட
இலக்கியப் பெருசுகளின்
பட்டியலில் சு.ரா.வும் உண்டு.

அத்தனை இலக்கியப் பெருசுகளும்
எழுதுவதோடு தங்களது பணியை
முடித்துக் கொண்டபோது…
கலை இலக்கியம் பரவலாக்கப்படவும்/
நுட்பம் கொள்ளவும்
ஓர் இயக்கம் காணவும் முயன்று
வித்தியாசப்பட்டவராக தெரிந்தவர் சு.ரா.!

தமிழில்….
நவீன இலக்கியம் வளம்பெற வேண்டும்/
அதைத் தோடி வாசிப்போர் பெருகவேண்டுமென
நிஜமாகவே அவர் விரும்பினார்.
இருபது, அல்லது முப்பது வருடங்களில்
அது சாத்தியமாகும் எனவும்
தீர்க்கமாக நம்பினார்.
தனது, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில்
அதனைக் குறிப்பிட்டு எழுதவும் செய்தார்.
(ஜே.ஜே: சில குறிப்புகள்/ பக்கம்:2)

”மாயக் காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு,
அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல்
உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள்
தமிழில் எழுதுகின்றன என்பதால் நமதாகிவிடுமா?
சீதபேதியில் தமிழ்ச் சீதபேதி என்றும்,
வேசைத்தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டா?
இப்போது 1978இல்
இதுபற்றிய நம் சிந்தனைகள் தெளிவாக இல்லை.
ஒப்புக்கொள்கிறேன்.
குழம்பியும் மயக்கங்கள் நிறைந்தவையாகவும் இருக்கின்றன.
வாஸ்தவம்தான்.
ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதியில்,
அல்லது அடுத்த நூற்றாண்டின் முதல் பத்துக்குள்
நடக்கப்போவது வேறு.
அன்று ஒரு தவளைகூட கிணற்றுக்குள் இருக்க முடியாது.
இது எனக்கு வெகு நிச்சயமாகத் தெரிகிறது.
அன்று பிடிவாதமாக வெளியே வராதவை
உயிர் மூச்சற்று அழிந்துபோகும்.
இது இயற்கையின் நிர்தாட்சண்யமான விதி.”

இன்றைக்கு அவரது இந்தப் பதிவையும்
அவர் குறிப்பிட்ட கால நிர்ணயத்தையும் பார்க்கிறபோது,
இந்த மக்களை நம்பி… அல்லது
வீச்சாக கிளம்பிய
நவீன இளம் எழுத்தாளர்களை நம்பி…
அவர் கொண்ட தூரநோக்கு கணிப்பு/ அந்தத் தீர்க்கம்
ரொம்ப அதிக/ அவரது பேராசையாகப் படுகிறது.

இலக்கியப் பரவல் சார்ந்த
அவரது இந்த ஆசை
அடுத்தப் பத்தாண்டுகளில் நடக்கும் என்பதற்கும் கூட
எந்த முகாந்திரமும் இல்லை.

அவர் சீராட்டிப் பாராட்டி
வித்தைகள் கற்றுத்தந்த
சிஷ்ய எழுத்தாளர்கள் சிலர்
அவருக்கே பாடம் கற்றுத்தர முயன்றதும்-
எதிர் முகாம் தேடிப் போனதும்
இங்கே சொல்லத் தகுந்த
அவர் சார்ந்த சோகம்.

சு.ரா.வின் காலத்தை கணக்கில் கொண்டால்…
அன்றைய காலக்கட்டத்தில்
இலக்கியத்தை இன்னும் இன்னுமென
பட்டைத் தீட்டிய கர்த்தாக்களான
க.நா.சு./ தி.ஜா./ வெங்கட்ராம்/ நகுலன்/
அசோகமித்திரன்/ கி.ரா./ ஆதவன் போன்று
நிஜத்தில் இயங்குபவர்கள் இன்றைக்கு இல்லை.

இது உலகமயமாக்கலின் காலம்!
அந்த நிஜம் சார்ந்த
இலக்கியத் தொப்புள்கொடி வம்சமே
இன்று அறுப்பட்டுக்கிடக்கிறது.

நவீன இலக்கிய வட்டத்திற்குள்
இன்றைக்கு
தீர எழுதுகிறவர்கள்
இருக்கிறார்களோ இல்லையோ
‘நானே இலக்கியம்’ என்று
தண்டோரா போட்டுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

நிஜத்தில்….
இன்றைய நவீன இலக்கியப் படைப்பாளிகள்
சினிமா என்கிற சின்ன வீட்டை
ஏற்படுத்திக் கொண்டவர்களாகவும், அல்லது
அப்படியோர் சுகம் தேடுபவர்களாகவுமே
தெரிய வருகிறார்கள்.
ஆசை அவர்களை அலைக்கழிக்கிறபோது
அவர்களும்தான் என்ன செய்வார்கள்?

ஆசை குறித்து புத்தன் சொன்னது நிஜமென்றால்…
இவர்களது இன்றைய இலக்கிய ஆக்கங்கள்
நமக்கென்ன பெரிய சிலாகிப்பைத் தந்துவிடப் போகிறது.

ஆனால்,
கவிதைத் தளத்தில் தொடர்ந்து
புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
புதுக்கவிதை வாசிப்போரைவிட
அதனை எழுதுபவர்கள் அதிகம்!
கணவனிடம் முரண்படும் அத்தனைப் பெண்களும்
கவிதையெழுத உட்கார்ந்துவிடுவதாகவும் படுகிறது.
கவிதையெழுத என்ன கஷ்டம்?
பேப்பரும் பேனாவும்
எல்லோர் வீட்டிலும் கிட்டத்தானே செய்கிறது!

என்றாலும்….
சு.ரா.வும்/ காலச்சுவடும்
நம் பெண் கவிஞர்களுக்கு தந்த
தார்மீக ஊக்கம்
இன்றைக்கு எதிரொலித்துக்கொண்டிருப்பது நிஜம்.
அந்தப் பெண் கவிஞர்கள்
நிறைவாக சாதிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
என்பதும் வியப்பே!
சு.ரா.வின் ஆவி ஆறுதல் கொள்ளும் இடமிது.

*

இலக்கியம் சார்ந்தவர்களுக்கு
சு.ரா. எழுதிய கடிதங்கள் சிலவற்றை பிரசுத்து,
இந்த மாத காலச்சுவடு(Oct-2010)
சு.ரா.வுக்கு
ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி செய்திருக்கிறது.

அந்தக் கடிதங்களில் ஒன்றை தேர்வு செய்து,
இங்கே பதிந்து
அவரது நுட்பம் கூடிய எழுத்தை
வாசகர்கள் நுகரத் தந்திருப்பதே… என் அஞ்சலி!

இந்தக் கடிதம்…
புதுக் கவிதைக்காக
பல பாராட்டுகளையும்/ பரிசுகளையும் பெற்ற
கவிஞர் உமா மகேஸ்வரிக்கு அவர் எழுதியது.
வளரும் படைப்பாளியை சந்தோஷப்படுத்தும்
அன்பின் வரிகளாகவே இருக்கிறது.

உமாவுக்கான செய்திகளையும் தாண்டி
கடிதத்தில் நிறையப் பேசி இருக்கிறார் சு.ரா.
தன்னைச் சார்ந்து அவர் பேசியிருப்பது
நம் கவனத்திற்குரியதாக இருக்கிறது.

மேலும்…
கடிதவரிகளில் பெருக்கோடும்
கிண்டலுக்கும் கேலிக்கும் இனிக்கவும் செய்கிறது.
உமாவிடம்,
உரிமையோடு கேலி பேசியிருப்பதும்
கேரள பெண் சினேகிதகளைப் பற்றி
அவர் சிணுங்குவதும் கூடுதல் இனிப்பென்றாலும்
யோசிக்கவைக்கிறது.

தவிர,
ஹமீது என்கிற மனுஷ்யபுத்திரனும்
ராஜாத்தி என்கிற சல்மாவும் கூட
அவரது கிண்டல் கேலிக்கு தப்பவில்லை.

குறிப்பாய்…
அவரது கேலியில் ராஜாத்தி அதிகமாவே மிண்ணுகிறார்!

பொதுவில் ஒரு சொல்
ஆபிதீன்…

இந்த ஆண் படைப்பாளிகளுக்கு
நோபலோ, சாகித்திய அகாடமியோ தரும்
மகிழ்வைவிட
பெண் தோழிகளே
பெரும் மகிழ்வு தருபவர்களாக இருப்பார்கள் எனப்படுகிறது!
இதுவும் இன்னொரு இயற்கை சார்ந்த நியதியோ?

அவ்வளவுதான்.
இனி…
சு.ரா.

***

சுந்தர ராமசாமி
27.12.01

அன்புள்ள உமா,

அடிக்கடி உங்களுடன் போனில் பேச வேண்டுமென்றும்
அதற்கு வசதிப்படாதவரை
கடிதமேனும் எழுத வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறேன்.
கடந்த இரணடு மூன்று வாரங்களாக
என் திட்டப்படி
எதுவும் செய்ய முடியாதபடி வேலை நெருக்கடி.
புதுவருஷத்தில் சிறிது ஓய்வாக இருக்க வேண்டும் என்று
நினைத்துக் கொள்கிறேன்.

இரண்டொரு முறை ராஜாத்தி போனில் பேசினார்.
நன்றாகவும் உற்சாகமாவும் இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்பும்
ஆட்சி
தன் கைக்கு வரவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
அது நியாயமான வருத்தம்தான்.
பெண்களின் ஆதங்கங்கள்
ஏனோ ஆண்களுக்கு தெரிவதில்லை.

உங்கள் மகளைப் பற்றி ராஜாத்தியிடம் சொன்னேன்.
எனக்கு என்ன அபிப்ராயமோ
அதே அபிப்பிராயம்தான் அவருக்கும்.
அந்தப் பெண்ணிடம் பேசும் போது
நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலி என்ற எண்ணம் வருகிறது.
இப்படி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது
எதைப்பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
பின்னால் எந்தப் பாடமெடுத்து
அவளுக்குப் படிக்க விருப்பம் என்பதை அறிந்து
அவளுடையப் போக்குக்கு விட்டுவிட வேண்டும்.
இது என் வேண்டுகோள்.

சி.சு. செல்லப்பாவுக்கு
சாகித்திய அக்காடெமி பரிசு கிடைத்ததைப் பற்றி
ஒரு சிறு கட்டுரை எழுதி
‘தினமணி’க்கு அனுப்பியிருக்கிறேன்.
அது வெளிவந்தால் நீங்கள் படித்துப் பாருங்கள்.

சமீப காலங்களில் நிறைய பேருடன்
அக்கப்போர் மூண்டுவிட்டது.
குமுதம் இதழ்,
கவிஞர் நகுலன்,
கவிஞர் சிற்பி,
இந்தியா டுடே ஆசிரியர்
மாலன் போன்ற பலரிடமும்.
எல்லோருக்கும் சரமாரியாக
கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.

காலச்சுவட்டில் என்னுடைய எழுத்து
வெளிவர நான் விரும்பும் போது
ஹமீதுக்குத்தான் அவற்றை அனுப்பி வைப்பேன்.
அவருக்கு இந்தக் கடிதங்களையும் அனுப்பி வைக்க வேண்டும்.
பெரிய மனது பண்ணி அவர் இவற்றை வெளியிட்டால்
காலச்சுவடு வாசகர்களுக்கு அவை படிக்கக் கிடைக்கும்.
அண்ணனும் தங்கையும்(ஹமீதும், ராஜாத்தியும்)
தமிழகத்திலேயே
முக்கியமான இரு வி.வி.ஐ.பி.க்களாகிவிட்டார்கள்.
முதுகில் மரு இருந்தால்தான்
இது போன்ற அதிர்ஷ்டங்கள் எல்லாம் நடக்கும்.
எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது வசை.
கண்ணனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது
என்னைப் போல் பல மடங்கு வசைகள்.
எங்களுடைய ஜாதகங்கள் அப்படி.

நான் உங்களை என் சிநேகிதி என்று அழைத்தால்
நீங்கள் எதற்காக அழவேண்டும் என்பது தெரியவில்லை.
கண்ணீர் விழியோயோரத்தில்
எப்போதும் காத்துக் கொண்டு நிற்குமா என்ன!
வாய்விட்டுச் சிரியுங்கள்.
எவரைப் பற்றியும் கவலைப்படாமல்,
உலகம் உய்யும்.

ஸ்வரூபராணி என்ற பெயரில்தான் தனித்துவம் இருக்கிறது.
உமா தமிழ்நாட்டில் தெருவுக்கு இரண்டு பேர் இருக்கிறார்களே.
வயதைக் கேட்டால்…
சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.(இது அவ்வளவு
கேள்வியாக இல்லாமல் இருக்கலாம்.)
ஆனால் ஒரு மனித ஜென்மத்திற்கு
எழுபது வயது ஆகிவிட்டால்
அது எந்தக் கேள்வியை வேண்டுமென்றாலும் கேட்கும்
சுதந்திரம் இந்திய மரபில் இருக்கிறது.
உங்கள் மகளிடம் என்னைப் பற்றிப்
புகார் சொன்னீர்கள் என்றால்,
‘தாத்தா அப்படிக் கேட்டதில் என்ன தப்பு?’ என்று சொல்வாள்.
சிறுவயதிலேயே அவள் என் கட்சியில் சேர்ந்தாகிவிட்டது.

குழந்தைகள் எவ்வளவு என்று கேட்டால்
40 பெயரை அடுக்கியிருக்கிறீர்கள்.
எப்போதாவது நீங்கள் இல்லாத போது
உங்கள் மகளுடன் பேசி
விஷயத்தைத் தெரிந்து கொள்வேன்.
அவளுக்கு உண்மை பேசுவதில் நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் பெண் என்றாலும்கூட
எந்தக் கோணலும் இல்லாத குழந்தை.

நன்றாக உழைக்கும் கணவரை
உத்தம ஸ்திரீகள்
பொதுவாகப் பாராட்டுவதுதான் வழக்கம்.
கணவர் கைநிறையச் சாம்பாதித்தால்
தனக்கும் குழந்தைகளுக்கும்
பொன்னும் பட்டும்
வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்.
கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது.

எனக்கு வயதாவதைப் பற்றி
நீங்கள் துளியும் கவலைப்பட வேண்டாம்.
ஜாதகப்படி 95 வயது வரையிலும் போகும்.
அதற்கு மேலும் போகலாம்.
அதற்குள் சுமார் பத்து பத்துப் பதினைந்து
புத்தகங்களேனும் எழுதிவிடுவேன்.
சி.சு. செல்லப்பா 70 வயதுக்கு மேல் 85 வயதுக்குள்
தோராயமாக ஐயாயிரம் பக்கங்கள் வரையிலும்
எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சங்குக்கோலம் இருப்பது எங்கள் வீட்டின் வாசலில்தான்.
பண்டிகை நாளென்றால்
மைதிலி கணினியில் பணியாற்றும்
அரை டஜன் பெண்களையும் சேர்த்துக்கொண்டு
முன் திண்ணையிலிருந்து தார் ரோடு வரையிலும்
கோலம் போட்டு விடுவார்கள்.
அதை மிதிக்காமல் வரவேண்டுமென்றால்
ஹெலிகாப்டரில் மொட்டை மாடியில் வந்து இறங்கலாம்.
இல்லை பின்பக்கமாக வந்து
சமையலறை வழியாக வீட்டுக்குள் வந்து விடலாம்.

நான் புகைப்படத்திற்காக நிற்கும் எல்லா இடங்களும்,
தென்னை மரங்களும், வாழையும், புல்பூண்டுகளும்
எங்கள் வீட்டின் பகுதியே.
நான் ஒரே மகன் என்பதால்
என் அப்பா எனக்குத் தந்துவிட்டுப் போயிருக்கும்
அருமையான வீடு இது.
நீங்கள் பார்த்தாள் ரொம்பவும் சந்தோஷப்படுவீர்கள்.
95 வயதில் புறப்பட்டுப் போவதில் வருத்தம் ஒன்றுமில்லை.
என்றாவது ஒரு நாள் போகவேண்டியதுதான்.
ஆனால்…
இந்த வீட்டையும், மண்ணையும், மரங்களையும்,
மட்டைகளையும், அழகான என் நாற்காலியையும்
விட்டுவிட்டுப் போகவேண்டியிருக்குமே என்று
நினைக்கும்போது நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.

நீங்கள் ஆத்மார்த்தமாக ஸ்வாமி கும்பிட வேண்டும் என்று
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்வாமியிடம் உங்களை ரட்சிக்கக் கேட்டுக்கொள்வதுடன்
என்னையும் ரட்சிக்கக் கேட்டுக்கொள்ளுங்கள்.
என் நண்பர்கள் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களும்,
ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களும்
உடல், பொருள், ஆவி மூன்றையும்
இயேசு நாதருக்குத் தத்தம் செய்திருப்பவர்கள்.
அவர்கள் காலையிலும் மாலையிலும் ஜெபம் செய்கிறபோது
ஒருநாள் கூட என்னைப்பற்றி யேசுநாதரிடம் சொல்ல
மறந்து போனதே கிடையாது.
இது நூற்றுக்கு நூறு உண்மை.
இதே முறையில் எனக்காக
அல்லாவிடமும் விண்ணப்பித்து வருகிறார்
கவிஞர் சல்மா அவர்கள்.
நீங்களும் உதவ வேண்டும்.

என் எழுபதுகளில் பல வரிகள்
உங்கள் மூளையில் ஒட்டிக்கொண்டிருப்பது
எனக்குப் பெருமையாக இருக்கிறது.
போகப்போக இவர்களுடைய எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகும் என்பதில்
எந்தச் சந்தேகமும் இல்லை

இப்பொழுது தமிழ் மண்ணில்
ஐந்து சிநேகிதிகள்தான் எனக்கு இருக்கிறார்கள்.
(அம்பை, லல்லி, சல்மா, பிரசன்னா,
ஆண்டிப்பட்டி அம்மையார் ஆகியோர்.)
கேரளாவில்
இதற்கு மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறார்கள்.
அவர்கள் கடிதம் எழுதும் போது
சகோதரர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல்
சுந்தர ராமசாமிக்கு என்று மட்டுமே எழுதுவார்கள்.
தங்கள் கடிதங்கள்
ஏதோ ஒரு கற்பனையான இடத்தில்
மாட்டிக்கொள்ளும்போது உருவாகிற விசாரணையிலிருந்து
எந்தக் களங்கமும் இல்லாமல் தப்பித்துக்கொள்ள வேண்டுமென்ற
முன் ஜாக்கிரதை அவர்களிடம் இல்லை.
எல்லாம் வடிகட்டின அசடுகள்.

இந்த சிநேகிதிகளின் எண்ணிக்கை
ஒரு சில வருடங்களில் ஐயாயிரத்தை எட்டிவிடும்.
எதிர்காலம் பெண்களுடையது.
ஆண்கள் இப்போதே
சமையல் படித்து வைத்துக்கொள்வது நல்லது.
அப்படி ஏற்பட்டால்
பெண்களுக்கே உரிய பொறாமைக் காய்ச்சல்
உங்களுக்கு வராமல் அடிக்கடி கண்ணீர் சிந்திவிட்டு
அதைப் பற்றி எனக்கும் எழுதுங்கள்.
அப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

ஜனவரி ஆறாம் தேதி சென்னையில் வைத்து
காலச்சுவடு பிரசுரத்தின் பத்துப் புத்தகங்கள்
ஒருசேர வெளியிடப்படுகிறது.
அழைப்பிதழ் அச்சேறி வந்ததும்
உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
கணவருடன் போய்விட்டு வாருங்களேன்.
சென்னையில்தான் நல்லி, குமரன், போத்தீஸ், லலிதா ஜுவல்லரி,
தங்கமாளிகை, உம்மிடி எல்லாம் இருக்கின்றன.
ஒரு ஐந்து லட்சம் எடுத்துக்கொண்டுப் போனால் போதுமானது.
பணத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது.

ஆண்டிப்பட்டியில் மழையுண்டா? இங்கு நல்ல மழை.
பனிகாலத்தில் இவ்வளவு மழை பெய்ததே இல்லை.
சில இடங்களில் மட்டும் மழை ஏன் பெய்கிறது என்பது
உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் படைப்புகளை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
நீங்கள் கோபப்பட்டுக் கொள்ளவோ கண்ணீர் சிந்தவோ கூடாது.
இங்கு எனக்கு வேலை பிடுங்கிக்கொண்டிருக்கிறது.
இனி கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பேன்.
சாதகமான விஷயங்களை வெளிப்படையாகவும்
பாதகமான விஷயங்களைக் கொஞ்சம் தளுக்காகவும்
நிச்சயம் சொல்வேன்.

உங்களுக்கும் உங்கள் மகளுக்கும்
மற்றபடி எல்லோருக்கும்
எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மிக்க அன்புடன்,
சுரா.

***
நன்றி: காலச்சுவடு, கநாசு.தாஜ் , உமா மகேஸ்வரி

« Older entries