“ஹர ஹர சிங்கிடி முங்கன்!” – பஷீர்

’குளச்சல்’-ன்  மொழிபெயர்ப்பு கையில் கிடைத்தபிறகு இங்கே பதிவிடுவேன். அதுவரை சிரிக்க.. :

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8962

முஹம்மது பஷீரைக் கிள்ளவேண்டும் போலிருக்கிறது…!

’பெருசு’ன்னு வெடைக்கிறாஹா புள்ளே +லெ என்னெ’ என்றதற்கு ‘சரியா அத பாக்கலெ போலக்கிது, பேயனுவ..’ என்றாள் அஸ்மா. என் பிறந்த தேதியை (13/3/1958) சொல்கிறாளாம் . அஸ்மாவும் ஆபிதீனும் இணைந்தால் ஆபாசம்தான். பஷீரும் ஃபாபியும் இணைந்தாலோ பரிகாசம். சுத்த வெஜிடேரியன்.  றெக்கை கட்டிப் பறக்கிறது பஷீரின் இந்த குறுநாவலில். ‘திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது. அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம்’ என்று ஆரம்பிக்கிறார் தலைவர். எல்லா ஊரிலும் இதே கதைதான் போலிருக்கிறது [கண்டிப்பாக இலங்கையில் 🙂 ] இந்தக் கதையை நம்ம சென்ஷிக்கு சிபாரிசு செய்தது யார் தெரியுமா? மலையாளம் வாசிக்கத் தெரிந்த அவர் மனைவி. அவருடைய மந்திரம் நீடூழி வாழ்க!. ’சுரா’வின் மொழியாக்கம் பிடித்திருந்தது. வேறு வழியும் இல்லையே.. எல்லாத்துக்குமா சுகுமாரனை நாட இயலும்? கிடைப்பதை வைத்து கிளர்ச்சியடைவோம். கொட்டிக்கிடக்கும் lekhabooks.com-லிருந்து ‘நூற்றியொரு நாக்குகள்’ முதல் பக்கத்தை மட்டும் இங்கே பதிவிடுகிறேன் (’Stop Copying the Copyrighted material!’ என்று அந்த இணையதளம் ரொம்பவே பயமுறுத்துகிறது). மீதி பகுதிகளை தயவுசெய்து அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள். மஜீத்பாய், டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியாவது   ராஜன் ராதாமணாளனாவது ரகளைக்கு என்றுமே ராஜரிஷி பஷீர்தான்.  – ஆபிதீன்

***

நூற்றியொரு நாக்குகள்

வைக்கம் முஹம்மது பஷீர்

தமிழில் : சுரா

ஓவியம் : ஜோஷ்

நூற்றியொரு நாக்குகள் என்று சொன்னால் பெண் என்று அர்த்தம். ஆதிகாலம் தொட்டே பெண்களை இப்படித்தான் அழைத்து வந்திருக்கிறார்கள். இது என்னுடைய கண்டுபிடிப்பு என்று நான் கூறவில்லை. இது எல்லா கணவர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு சமாச்சாரமே என்ற முன்னுரையுடன் நாம் மெதுவாக கதைக்குள் நுழைவோம்.

 “முதல்ல பார்த்தது நான்தான்” என்று வேண்டு மானால் இந்தக் கதைக்குப் பெயரிடலாம். ஆனால் பெயரில் என்ன இருக்கிறது? கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா? அதற்காக இது ஒரு நல்ல கதை என்று நானே கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. கதை ஒரு பெண்ணிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. பெண் என்றால் நூற்றியொரு நாக்கி- அதாவது என்னுடைய மனைவி!

ஒரு நாள் என்னுடைய அக்னி சாட்சியும், குழந்தைப் பருவத்தில் இருந்த என் மகளும், நானும் ஒரு விருந்து நிமித்தமாக ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தோம். கம்பீரமாக நான் முன்னால் நடந்து செல்ல, நடுவில் மகள், பிறகு என் மனைவி… நாங்கள் நடந்து சென்ற வழி மிக மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அப்போதுதான் தணிந்து கொண்டிருந்தது. மனைவியும் மகளும் “சல சல”வென பேசிக் கொண்டே வந்தனர். என் காதுகளுக்குள் அவர்களின் பேச்சு எதுவுமே நுழையவில்லை. அது என்னுடைய தவறு என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது.

அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம். தலையணை மந்திரம் போன்ற ஓயாத சத்தத்தின் விளைவாக இப்படியொரு காரியம் நடந்துவிட்டது. அதோடு நின்றால் பரவாயில்லை. காலப்போக்கில் நான் ஒரு ஹென்பெக்ட் கணவனாகவே மாறிவிட்டேன். ஹென்பெக்ட் கணவனாக இல்லாத ஒரு மனிதன்கூட இந்த உலகத்தில் இதுவரை பிறந்ததே இல்லை. கடவுள் ஒரு ஆணைப் படைப்பதே அவனை ஒரு ஹென்பெக்ட் கணவனாக ஆக்குவதற்குத்தான். விருந்து, திருமணம், மரணம், பிரசங்கம் போன்ற விஷயங்களுக்கு நான் பொதுவாகப் போவதில்லை. அப்படியென்றால் இந்த விருந்துக்குப் போவதை நான் பெரிதாக நினைக்கவில்லை என்று அர்த்தம். மதராஸ், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் இருந்து நான் சில நல்ல புடவைகளும், ப்ளவுஸும் மகளுக்கு சில உடுப்புகளும் கொண்டு வந்திருந்தேன். இவற்றையெல்லாம் உலகத்திற்குக் காட்ட வேண்டுமே! அதற்காக இப்படி ஒரு பயணம்!

சாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியுடன் வெளியே செல்லும்போது, கணவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பான்? எல்லாருக்குமே இது தெரிந்த விஷயம்தான். உலகத்திலேயே தோன்றிய முதல் பெண்ணைப் பற்றியோ இல்லாவிட்டால் அண்டவெளியைப் பற்றியோ இருக்கும். சரி… நான் முதல் பெண்ணைப் பற்றியும் அண்டவெளியைப் பற்றியும் சிந்தித்தேன்.

படைப்பின் ஆரம்பம்.

ஆதியில் தெய்வம் மட்டுமே இருந்தது. அதற்குப் பிறகு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. அப்படி இருக்கிறபோது தெய்வத்திற்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. உடனே சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், ஆகாயத்தையும், பூமியையும், கிரகங்களையும், அண்டவெளியையும், இன்ன பிற விஷயங்களையும் தெய்வம் படைக்கத் தொடங்கியது. நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் வாழ்கிற- நகர்கிற உயிரினங்களை அது படைத்தது. அதற்குப் பிறகுகூட  எந்தவித பிரச்சினையும் இல்லாமலேயே எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போயின. சம்பவங்கள். இவ்வாறு நடந்து கொண்டிருக்க, தெய்வம் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து சிரித்தது.

சிரிப்பு கொஞ்சம் சத்தமாகவே வந்தது. இந்தச் சிரிப்பு உலகமெங்கும் எதிரொலித்தது. பூமியிலும் மற்ற இடங்களிலும் இருந்த உயிரினங்கள் பயந்து நடுங்கின. சம்பவம் என்னவென்றால் தெய்வம் பெண்ணைப் படைக்கப் போகிறது!

தெய்வம் முதலில் படைத்தது பெண்ணைத்தான்; ஆணை அல்ல.

சரி… நான் சொன்னது மாதிரி தெய்வம் அழகியான ஏவாளைப் படைக்கிறது. அவள்தான் உலகத்தின் முதல் பெண். அவளுக்கு நூற்றியொரு நாக்குகள். ஒரு நாக்கு வாயில். மற்ற நூறு நாக்குகளும் கழுத்தைச் சுற்றிலும் இருந்தன. இந்த ஏவாளை தெய்வம் ஏதன் தோட்டத்தில் வசிக்கச் செய்தது. இவள் எந்தவித காரணமும் இல்லாமல் சிரிப்பாள். அழுவாள். மனதிற்குத் தோன்றியபடியெல்லாம் பேசுவாள். விளைவு- மற்ற உயிரினங்களுக்கும், தெய்வத்திற்கும் இது ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. இப்போது என்ன செய்வது? இவளை யாரிடம் பிடித்துக்கொடுப்பது?

அப்படித்தான் தெய்வம் ஆதாம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பாவப்பட்ட ஆணைப் படைக்கிறது. அவன்தான் உலகத்தின் முதல் ஆண். இவனுடைய வாயில் ஒரு சிறிய நாக்கு. கழுத்தைச் சுற்றிலும் ப்ளாங்க். ஒன்றுமே இல்லை. இந்த ஆதாமிடம் ஏவாள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளைக் கொண்டும் பேசினாள். அவ்வளவுதான்- ஆதாம் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். அவன் மயங்கிக் கிடந்த வேளையில் தெய்வம் சில மாய்மால வேலைகளால் ஏவாளின் கழுத்தைச் சுற்றிலும் இருந்த நாக்குகளை இல்லாமல் செய்யவில்லை. மாறாக, யாருக்குமே தெரியாதது மாதிரி செய்துவிட்டது. ஆதாம் கண்களைத் திறந்து பார்த்தபோது, ஏவாளின் கழுத்தில் இருந்த நூறு நாக்குகளையும் காணவில்லை.

இருந்தாலும், ஆதாமால் அதை மறக்க முடியுமா?

இந்த ஏவாளுக்கும், பாவப்பட்ட ஆதாமுக்கும் பிறந்த மக்களின், மக்களின், மக்களின் மக்கள்தாம் நாம் என்று சிந்தித்தவாறு, நான் மெதுவாகச் சிரித்தேன். அப்போது ஏவாளின் மகளின், மகளின் மகளான என்னுடைய மனைவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:

என்ன, நீங்க மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க?”

நான் கேட்டேன்:

“ஒரு கணவன் இலேசா சிரிக்கக்கூடாதா? அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல? ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி?”

***

 

ஆயிரத்தொரு நாக்குகளுடன் அஸ்மா போல் தொடர்ந்து சிரிக்க :  http://www.lekhabooks.com/short-stories/103-nootriyoru-nakkugal.html

***

மேலும் பார்க்க : பஷீரின் ‘பூவன்பழம்

**

நன்றி : lekhabooks, ’சுரா’

« Older entries