துக்கம்… துக்கம்… துக்கம்… – மஜீத்

சென்றவார இறுதிநாட்களில் எனது உடல்நிலை சரியாக இல்லை. சாதாரமான காய்ச்சல்தான். ஆனாலும் இருமலும் தொண்டைக்கட்டும் படுத்திவிட்டது. இன்னும் என் கரமுர குரல்கேட்பவர்களுக்கு (என்னய்யா MRR வாசு மாதிரி பேசுறே? – தாஜ்) விளக்கம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னைக் ‘கண்டுக்க’ வருவதாகச் சொன்ன நண்பர்களை ‘அதெல்லாம்’ வேண்டாமெனச் சொன்ன மறுநொடியே அது வியாழன் இரவென்று உணர்ந்து வாங்க வாங்க ன்னு கரகரத்தேன்.

நண்பர்கள் சென்றபிறகு அவர்களிடம் என்ன பேசினோம்னு யோசித்தால், எனது இளைய மகனார் தாரிக் அவரது 15வது வயதில் (2006கடைசியிலும் 2007 துவக்கதிலும்) எழுதி, ஒரு ஆங்கில வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த மூன்று ஆங்கிலக் கவிதைகள் பற்றி மட்டுமே பேசியது உறைத்தது. என்னவோ மாதிரி உணர்ந்தாலும், எனக்கு அந்த விஷயம் இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் தெரிய வந்ததென்பதால், சாமாதானப்பட்டுக் கொண்டேன்

மூன்றில் கடைசியாக எழுதிய ஒரு கவிதையை மட்டுமே எனக்குத் தந்தார். மற்ற இரண்டும் childish & poor grammar என்று காரணம் சொல்லி, தர மறுத்துவிட்டார் – வலைத்தளத்தின் பெயரையும் secret என்று சொல்லிவிட்டார்.

அவர் தந்த அந்த ஒரு கவிதையின் தாக்கம் என்னைத் துரத்தி, மற்ற இரண்டும் இருந்த வலைத்தளத்தைத் தேடிக்கண்டுபிடிக்க வைத்துவிட்டது. அந்த இரண்டு கவிதைகளில் poor grammar என்று அவர் சொன்னது சரியாக இருந்தாலும் childish என்று தாரிக் கூறியது எனக்குத் தவறென்றேபட்டது.

தாஜுக்கு அனுப்பினேன் அந்த மூன்று கவிதைகளையும். அவர் படித்துவிட்டு பாராட்டித் தள்ளிவிட்டார். அரையும் தெரியாத குறையும் தெரியாத ‘புண்ணாக்’கான (இந்த வார்த்தைக்கு காப்பிரைட் ஒனர்கள் மன்னிக்கலாம்) என்னையே புத்திசாலின்னு சொன்னவராச்சே தாஜ். இந்தக் கவிதைகள் மூலம் கொஞ்சம் விஷயதாரியாகத் தெரிந்த என் மகனைப் பாராட்ட அவருக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை.

இன்னும் அந்த இருகவிதைகள் எங்கள் பார்வைக்கு வந்தது தெரியாத தாரிக்கிடமே  (தாஜும் பொதுவாகவே பாராட்டியிருந்தார்) அனுப்பி இலக்கணப்பிழை திருத்தி வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்……..

2

நண்பர்கள் சென்ற ஒருமணிநேரத்திற்குப் பிறகு தாரிக்கிடம் இருந்து ஒரு SMS: please call if you are still awake. அப்போது நள்ளிரவுதாண்டி மணி 12.45. அவர் இருக்கும் பாண்டிச்சேரியில் அதிகாலை 2.15. எனக்குத் தெரிந்துவிட்டது ஏதோ விபரீதமென்று. தூங்க முயன்றுகொண்டிருந்த நான் உடனே அழைத்தேன். பதட்டமாகப் பேசினார். “அத்தா, என் friend அந்த வேலூர் பையன், இறந்துட்டான்த்தா, ஆக்ஸிடெண்ட்னு” உடைந்தார். அவரது நண்பர்கள் விபரம் அத்தனை துல்லியமாகத் தெரியாதெனினும், அந்தப் பையன் எனக்கு உடன் நினைவில் வந்தான், நான் சந்தித்ததில்லை என்றாலும்.

3

போனவருட இறுதியில் வேலை விஷயமாக டெல்லி சென்ற நான், அப்போது மனைவி ஊரில் இருந்ததால் 2 நாட்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திரும்பி துபை வரும்போது, அதுவரை நான் பார்க்காதிருந்த தாரிக் கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு சென்னையில் விமானமேறினேன்.

பாண்டியை நான் அடைந்தபோது அதிகாலை 2 மணி. ECR சாலையில் இருந்து 2 கிமீ தூரத்தில் கல்லூரி. தாரிக் ஒரு பைக்கில் வந்து அழைத்துச் சென்றார். யாருடைய பைக் என்றேன். ஃபிரேண்டோடது. நீ அடுத்த வாரம் வந்திருந்தால் காரில் வந்து கூட்டிப் போயிருப்பேன். என் பிரெண்ட் கார் வாங்கி கொண்டுவர போயிருக்கான்னார். ஒரே காம்பஸ்ல காலேஜ் ஹாஸ்டல் –  கார் எதுக்கு?ன்னு கேட்டேன். நீ இப்ப தூங்கு காலைல சொல்றேன்னர். மறக்காமல் சொல்லவும் செய்தார்:
“ அத்தா இங்க படிக்கிற எல்லாரும் ஒண்ணு பயங்கர rich இல்லைனா well well settled. நம்ம லெவெல்ல இருக்கிறவங்க ரொம்பக் குறைவு. நான் சொன்ன ஃப்ரெண்ட் ஷஷாங்க்; அம்மா வேலுர்ல பெரிய டாக்டர். CMC பக்கத்துலயே 4 ஃப்ளோர் சொந்த கட்டிடத்தில் 3 மாடியில் ஹாஸ்பிடல், 4வது மாடியில் வீடு. அப்பா டெல்லியில் ஒரு பேங்கர். ரொம்ப வசதி. ரெண்டு வருஷம் முந்தி இவன் இங்க சேரும்போது ஆரம்பித்த பாங்க் அக்கவுண்டில் 7 லட்சம் இருந்தது, ரெண்டு நாளைக்கு முன்னே பேலன்ஸ் காமிச்சான் 26 ஆயிரம் இருந்தது. அம்மா திட்டுவாங்களோன்னு பயந்துகிட்டேதான் போறேன், ஆனா எப்படியும் காரோடுதான் வருவேன்னு சொல்லிட்டு போய்ருக்கான். அது போகட்டும், என்னோட பாங்க் பாஸ்புக்க காட்டவா? ன்னு நக்கலடித்தார். அவன் ரொம்ப நல்லவன்த்தா, தன்னோட வசதிவாய்ப்பின் பெருமை கொஞ்சமும் இருக்காது. எல்லாரிடமும் சகஜம். எல்லாருக்கும் உதவி. அம்மா அப்பாட்ட பயங்கர செல்லம், அக்கா டெல்லி AIIMS-ல PG படிக்குது, Sportsman, எல்லாத்துக்கும் மேல சூப்பரா படிப்பான்த்தான்னு புராணம் பாடினார். எல்லாம் என் நினைவுக்கு வந்தது. “”போய்ட்டான்த்தா……… ரெண்டுமணி நேரமாகுது……..”” அவன் அம்மா வந்துகிட்டு இருக்காங்கன்னு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே சொன்னார்.

 4

கிட்டத்தட்ட இரண்டு வருடத்துக்கு முன்னால் இதே போன்றவொரு துர்மரணம் பற்றிச் சொன்னபோது தாரிக் கதறி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. முதல் வருடம் முடிந்தபின் ஷிம்லாவுக்கு batch tour போறோம்னு சொன்னார். என் மனைவிக்கு சிறிது சங்கடம், எனக்கும்தான், பேப்பர்ல வர்ற செய்தில்லாம் பயமா இருக்குங்கன்னு சொல்ல, தாரிக்கோ நான் பாத்துக்கிறேன்த்தா, ஸ்டாஃப் கூட வர்றாங்கன்னு என்னை அழுத்த, நான் மனைவியை ஆசுவாசப்படுத்திவிட்டு, ok ஆனா ரெண்டு கண்டிஷன், சரியான்னேன், அதெல்லாம் பிரச்சினை இல்லை நான் ஃபாலோ பண்ணிக்கிறேன்னார். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாமல், தமிழில் சொன்னால் சாதாரண அறிவுரைக் கணக்கில் சேர்ந்துவிடுமென பயந்து, ஆங்கிலத்தில் 1. No Adventures 2. Don’t go near water னு சொல்ல, OKத்தா, ரெண்டும் பண்ணமாட்டேன்னு உத்தரவாதம் தந்து சென்றார். இந்த இரண்டையும் மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தினேன், அவர்கள் புறப்படும்போது. மூன்றாம் நாள் காலையில் டெல்லியில் இருந்து கூப்பிட்டு, அத்தா என் ஃப்ரெண்ட் செத்துப் போய்ட்டாத்தான்னு ஒரே கதறல். சிரமப்பட்டு ஆறுதல் படுத்திக் கேட்டேன். அரைமணிக்கு முன்னால இருந்தாத்தா, போயிட்டா – அப்பிடின்கிறதுக்குள்ள போய்ட்டத்தான்னு அழுகை. சரி தம்பி மத்த எல்லாரும் நல்லா இருக்கீங்களா, என்ன ஆச்சுன்னு கேட்க, எல்லாரும்‌ நல்லாருக்கோம், அவ போய்ட்டத்தான்னு மறுபடி கதறல். டிரெக்கிங் போகலாம்னு ஒரு குரூப் கிளம்ப, அந்தப் பெண்தான் ரொம்ப ஆர்வமாம், போட்டோ வீடியோன்னு துறுதுறுன்னு திரிந்து, இவரைகூப்பிட இவர் என் அறிவுரைப்படி மறுக்கவும், சென்று விட்டார்கள். அரைமணி நேரத்தில் கெட்ட செய்தி வந்துவிட்டதாம். ஒரு குன்றை அடைவதற்கு, சிறிய ஓடை ஒன்று குறுக்கே வர, ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்து சென்றிருக்கிறார்கள். திடீரென்று தண்ணீர் அதிகரிக்க சுழலும் சேர்ந்துகொள்ள, இந்தப்பெண் பிடிநழுவி, நிமிடத்தில் அடித்துச் செல்லப்பட்டு, சிறிது தூரத்திலிருந்த பாறையில் உடல் சிக்கிக்கொண்டு கிடந்தது. நிமிடங்களில் நடந்த கோரம். கல்லூரி நிர்வாகம் அன்று மாலையே அனைவரின் டிரெய்ன் டிக்கெட்களையும் கான்செல் செய்து, பாண்டிக்கு சென்னை வழியாக  விமானத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. 

‌5

தாரிக்கை சமாதானப்படுத்தி, என்ன நடந்ததென்று விசாரித்தேன். கார் வந்த பிறகு ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு ஒரு ரிசார்ட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தந்து டெல்லி நண்பனோடு (அவன் பெயரும் ஷஷாங்க் தான். இதற்காக தனது செல்லப்பெயரான சுனில் என்றே தன்னை அழைக்கச் சொல்லியிருக்கிறான்.) தங்கியிருந்து கல்லூரிக்கு வந்துபோயிருக்கிறான். ஒருவாரத்துக்கு முன்னால் நடந்த தனது தோழியின் திருமணத்தில் பிஸியாக இருந்திருக்கிறான். வியாழன் இரவு இரண்டு ஷஷாங்கும் அந்தத் தோழியின் காரிலும், இன்னொரு காரில் இன்னொரு நண்பனும் தோழியின் கணவரும் ஒன்றாகக் கிளம்பியிருந்திருக்கிறார்கள். முன்னால் சென்றவர்கள், ரெண்டு ஷஷாங்க்கும் வந்த வண்டி ரொம்ப நேரம், தொடராமலிருக்க, திரும்பிச் சென்று தேட, அவர்கள் கண்டது விபத்து களேபரம்தான். பிழைத்துக் கொண்ட ஷஷாங்க்கிற்கு தொடைஎலும்பில் காயமாம். தாரிக் வெள்ளிக்கிழமை போய்ப்பார்க்கும்போது சந்தோஷமா இருந்தானாம். காரணம் அவன் நண்பன் பிழைத்துக்கொண்டதாகச் சொன்னதை நம்பிக்கொண்டிருந்தது. அப்புறம் மாலையில் உண்மை தெரிந்ததும் கதறு கதறுன்னு கதறிட்டானாம். சனி காலையில் 4 கல்லூரிப் பேருந்துகளில் இவர்கள் வேலூர் செல்கிறார்கள் – இறுதி சடங்கிற்கு.

6

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்:

தாரிக் கவிதைகள் அப்படியே இருக்கட்டும்

இலக்கணப்பிழையோடு.

இருந்தாலென்ன?

பிழைபட்டது

வெறும் இலக்கணம்தானே?

உணர்வல்லவே?

உயிரல்லவே?

–  மஜீத் | amjeed6167@yahoo.com

Missing you, Dad! : தாரிக்-இன் கவிதை , தாஜ் வாழ்த்துடன்…

‘கண்ணாடி அணிந்திருப்பது தாரிக் ; பின்னாடி அமர்ந்திருப்பது ஷமிம் – அவர் அண்ணன்.’    –  M

***

’u start wid something which u think as d main thing but u end up making something else’  என்று தன் அத்தாவையே விமர்சிக்கும் நட்சத்திரத்தை அறிமுகம் செய்கிறேன். அத்தா யாரு, நம்ம மஜீதத்தாதான். அத்தாவை மட்டுமல்ல,  ஆபிதீன் பக்கங்களையும் விமர்சிப்பார் இவர் – ‘y s it so islamized?’ என்று.  நான் என்னா பண்றது தாரிக், எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் தொப்பி போடுறவங்க. உங்களாலெ இப்ப இன்னொன்னு சேர்ந்து போச்சி..!   நிறைய எழுதுங்க , வாழ்த்துகள். உங்களை வாழ்த்தும்போது , ‘நுட்பம் கொண்டவர்களிடம்தான் கவிதை அணையும்’ என்று படு நுட்பத்தோடு தன்னையும் சேர்த்துக்கொள்ளும் தாஜோடு நிறைய உரையாடுங்கள்.  கவிதை தவிர எல்லாம் வரும்! சொல்ல மறந்துட்டேன், உங்க  அத்தாட தொல்லை இங்கெ தாங்க முடியலே. புதுசா , ’முல்லாவும் டான்ஸு’ம் என்று ஒரு ஜோக் அனுப்பியிருக்கிறார்.  ஹாரிபிள் ஹஜ்ரத் மாதிரி இன்னொன்னு . இங்கே பதிவிட்டால் கொன்றே விடுவார்கள்.  y s it so islamized? –  ஆபிதீன்

***

அன்புடன்
தாரிக்

பெயர் தாஜ்.
உன் தந்தையின் நண்பன்.
உன் வளர்ச்சியைப் பற்றி
அடிக்கடி
உன் தந்தை
என்னிடம் கூறி பெருமைப்படுவார்.
இன்றைக்கு
உன் கவிதைகளை
மகிழ்ச்சியோடு
எனக்கு அனுப்பித் தந்தார்.
வாசித்தேன் பிரமிப்பாக இருந்தது.
நல்ல திறமை
இன்னும் இன்னும் வளர்த்துக்கொள்.
சந்தோஷம்.
வாழ்த்துக்கள்.
-தாஜ்

***

அன்புள்ள தாஜ் அவர்களுக்கு,

தங்கள் பாராட்டுக்கு நன்றி…

கை விரலில் வந்து முட்டும் வார்த்தைகளை புனைய முடியாத பூரிப்பு..

தங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார் அத்தா…

தங்களின் படைப்புகள் பார்த்தேன்.. அனைத்தும் அற்புதம்…

-தாரிக்

***

அன்பு தாரிக்

நன்றிக்கு
நன்றி.

நீ ஈடுபாடு கொண்டிருக்கும்
கவிதை
அபூர்வமான விசயம்.
எல்லோருக்கும் வாய்க்காது.
நுட்பம் கொண்டவர்களிடம்தான்
அது அணையும்.

கவிதை என்பது
உணர்தலில் திளைக்கும் சங்கதி.
அதனைப் படைப்பதென்பது
இன்னும்…. இன்னும்
மேலான
உணர்தலில் திளைக்கும் சங்கதி!

இப் பருவத்தில்
வளமான
பொழுதுப் போக்கு அம்சமாக மட்டும்
கவிதை எழுதுதலில்
ஈடுபாடு கொள்.

படிக்கும் படிப்பு ஆகி
பணியில் அமர்ந்தாகி
கவிதைக் குறித்து
நிறையப் படித்தாகி……
பின்னர்
நீ தீர
கவிதைப் படைப்பில்
உச்சம் தொட முனைவாய்.

வாழ்த்துக்கள்
-தாஜ்

***

அன்புள்ள தாஜ் அவர்களுக்கு,

பொழுதுபோக்காக கவிதைகளை படிக்ககூட முடியாமல் இருக்கும் சோம்பேறி ஆகிவிட்ட எனக்கு கவிதைப்படைப்பு என்பது தற்சமயம் எட்டாக்கனிதான்! 🙂

படிப்பு, பணி… இரண்டும் கலந்த மருத்துவத்துறையில் கால் வைத்து விட்டு அதற்கான பொறுப்பு இல்லாமல் இருக்கின்றோமே எனும் சிந்தனை ஓங்கியிருக்கும் நேரத்தில், இலக்கியச்சிந்தனையெல்லாம் தங்களுக்கு அனுப்பும் அஞ்சல்களோடு சரி…..

தங்களின் வார்த்தைகள் வரமாக வளரும் என்ற நம்பிக்கையுடன்,

தாரிக்

***

Missing you, Dad!


Missing your warmth and love,
I am here alone;
Like a calf that lost its cow,
I’m calling you dad, in a humble tone.

Missing your advices and chats,
I am here ignored;
In memories that grew fat,
I took you, while others blurred.

Missing you from breakfast to dinner,
I feel like hell here;
But i am not any sinner,
To break out with tears.

Missing the joys and sorrows,
I bear things as much as i could;
Because i do know,
That everything is meant for good.

Tariq / Feb’ 2007

**

View Readers’ Comments here.

**

நன்றி : தாரிக் | hercules_tariq@yahoo.co.in

சும்மாவா? – மஜீத்

‘MIRAL’  சினிமாவை மஜீதிடம் கொடுத்து விமர்சனம் எழுதச்சொன்னேன். மாசம் ரெண்டாவப் போவுது. மனுஷன் என்னடான்னா யானை,  குரங்கு, எலி என்று ’கிச்சுகிச்சு’ காட்டுகிறார். என்ன செய்வது? Elephant: “Ouch!” . Mouse: “Ouch Vouch Kuch Nahi Gandu, Apna Shot To Aisa Hi Hota Hai!“  ரொம்ப பழைய பிளேபாய் ஜோக்தான். நண்பர் ராஜநாயஹம் கூட – கொஞ்சம் சேர்த்து – முன்பு எழுதியிருந்தார்.  பிரமாதமான நகையுணர்வு கொண்ட சகோதரர் வெங்கட்ரமணனும் எழுதிய ஞாபகம்.  அதுபோல இப்ப நம்ம மஜீத்பாயும் கொஞ்சம் சேர்க்கிறார்.  இது 18++. சின்னப் புள்ளைங்க  சந்தோஷமா இருங்க!

***

சும்மாவா? – மஜீத்

ஒரு காட்டில் ஒரே ஒரு தாசிதான் இருக்கணும்னு வந்த புது சட்டத்துக்குப் பிறகு வருஷா வருஷம் எல்லா மிருகங்களும் சேர்ந்து ஏதாவது ஒரு பொம்பளை மிருகத்துக்குப் பொட்டுக்கட்டி விடுறது வழக்கமாப் போனது.

அந்தக் காட்டில இருந்த ‘மைனர்’ குரங்குக்கு இது வசதியாகவும் போனது. ஒவ்வொரு வருஷமும் புதுசா கிடைக்குதேன்னு அதுக்கு ரொம்ப சந்தோஷம் வேற. ஆனா அந்த சந்தோஷம் எல்லாம் போனவருஷத்தோட முடிஞ்சு போச்சு.

இந்த வருஷம் நடந்த போர்டு மீட்டிங்ல நாட்டாமைகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, ஒரு பொம்பள யானையை நியமிச்சவுடனே நம்ம மைனருக்கு ஒரு மாதிரியான கிளுகிளுப்பு.
 
நல்லா திமுதிமுன்னு இருக்கே, ரொம்ப நல்லாருக்கும்னு அதுக்கு கற்பனை வளர்ந்துக்கிட்டே போச்சு. அப்பத்தான் அதுல ஒரு பெரிய சிக்கல் வந்துச்சு. யானை தனது உருவத்துக்கு தகுந்தமாதிரி ரேட்டையும் அதிகமாக்கி ஃபிக்ஸ் பண்ணிருச்சு. ஒரு தடவைக்கு 100 ரூபாயாம்!!

நம்ம மைனருக்கு வருமானம் கம்மி. இதுக்கு எல்லாம் 100 ரூபாய் பட்ஜெட்ல ஒதுக்குறது ரொம்பக் கஷ்டம். இருந்தாலும் ரொம்ப முயற்சி பண்ணி, 100 ரூபாய் சேர்த்துடலாம்னு நம்புச்சு. எதிர்பாராத செலவுகள் அடிக்கடி வந்து மைனரோட லட்சியத்துக்குக் குறுக்கே நின்றன.

ஒருதடவை 90 ரூபாய் வரைக்கும் சேமிப்பு வந்து அதுக்கு மேல ஏறாததுல, மைனர் ரொம்ப அப்செட். ஒரு முடிவோட யானைட்ட போய், தான் நிலைமையை எடுத்துச் சொல்லி, தான் ரொம்ப ஆர்வமா இருக்குறதையும் சொல்லி, இந்த ஒருதடவ மட்டும் இருக்குற காசை வாங்கிக்கிட்டு ஒத்துழைக்கும்படி, காலில விழுந்து கெஞ்சியது.

யானை ரொம்பக் கறார். அந்தப் பேச்செல்லாம் இங்க ஆகாது. 100 ரூபாய்க்கு சல்லிக்காசு குறைஞ்சாலும் இந்தப் பக்கம் வராதே. மீறி வந்து தொந்தரவு கொடுத்தே, தும்பிக்கையாலே ஒரே சொழட்டுதான்; ஓடிருன்னு வெரட்டிருச்சு.

மைனருக்கு அவமானம் வேற புடுங்கித்தின்னது. இருந்தாலும் அந்த ஆசை மட்டும் குறையல. நேரம் கிடைக்கும்போதெல்லாம் யானை பின்னாடியே திரிஞ்சுச்சு. சில முட்டாள் மிருகங்கள், நோஞ்சான் மிருகங்கள், ரவுடி மிருகங்கள் எல்லாம் காசு தயார் பண்ணி யானைட்ட போறதைப் பார்த்து பொறாமையில எரிச்சல் பட்டுச்சு.

இப்படித்தான் உடல்பூரா தோல் வியாதியோட  இருந்த அந்த ‘மூனு காலும் ஒரு வாலும்’ உள்ள மிருகம்** கூட எக்ஸ்ட்ரா காசு கொடுத்து யானைட்ட போனதைப் பாத்துப்பாத்து வயிறு எரிஞ்சுச்சு, மைனருக்கு. தான் உக்காந்துருந்த மரத்துல தலைய வேகமா முட்டிக்கிருச்சு. அந்த மிருகம் அப்பப்ப ‘ஊரு’க்குள்ள போய் ஏதாவது சம்பாரிச்சுட்டு வந்துருது. நம்ம ஊருக்குள்ள போனா, நாய்பேய் எல்லாம் துரத்தியடிக்குதுகளேன்னு வருத்தம்!
அப்பத்தான் அந்தக் கொடுமை நடந்துச்சு. ஒரு சுண்டெலி எப்படியோ 100 ரூபாய் தயார்பண்ணி, நேரா யானைக்கிட்டா வந்து சேந்துருச்சு. மைனருக்கு கோபத்தை விட ஆச்சரியம் தாங்கல. இது எப்படி யானைய பண்ணப்போகுதுன்னு பாக்க ஒரே ஆர்வம் மைனருக்கு. பின்னாலயே போய், நல்ல வசதியா ஒரு தென்னை மரத்துல உக்காந்து என்ன நடக்குதுன்னு பாத்துச்சு.

சுண்டெலி நேரா யானையோட பின்னங்கால்ல இருந்து ஏறி, ‘மேல’ போய் உக்காந்துகிட்டு, யானைட்ட என்ன ரெடியான்னு கேட்டுச்சு. யானையும் ம்ம்ம் நான் ரெடின்னு சொன்னவுடனே, சுண்டெலி வேலைய ஆரம்பிச்சிருச்சு.

மைனருக்கு கோபம் தலைக்கேறி, சமாளிக்க முடியாம தென்னை மரத்துல இருந்து ஒரு எளனியைப் புடுங்கி யானை மண்டையக் குறிபாத்து எறிஞ்சுச்சு. அடிபட்ட யானை வலி பொறுக்காம அம்மாஆஆஆஆன்னு ஒரு கத்து; மைனருக்கு அப்ப வந்த சந்தோஷம், ஒரு நொடி கூட நீடிக்கலை. யானை கத்துறதைக் கேட்ட சுண்டெலி, “ம்க்கும், சும்மாவா, 100 ரூபாய்ல?’ ன்னு சொல்ல, அதுக்கு மேல தாங்காத மைனர், தென்னை மர உச்சில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிருச்சு.

**

’பின்’ குறிப்பு : **அது என்ன மூனு காலு ஒரு வாலு உள்ள மிருகம்னு யோசனையா? அது ஒண்ணும் அதிசயம் இல்லங்க. அது ஒரு சொறிப்புடிச்ச நொண்டி நாய்ங்க.

***

நன்றி : மஜீத் |  amjeed6167@yahoo.com

கஷ்டத்தை கஷ்டமா நெனச்சாதான், கஷ்டம் கஷ்டமா தெரியும்! – மஜீத்

பள்ளம் , மேடு என்று ஏதேதோ எழுதி இந்த வில்லங்கம் அனுப்பியிருக்கிறதே.. அர்த்தம் வேறு மாதிரி வருமே என்று பயந்துகொண்டே வாசித்தேன். சே, ‘துஆ’ கேட்கும் பயங்கரமெல்லாம் இல்லை. இது ஆன்மீகமாக்கும்.  ‘God Is Not a Solution – but a Problem’ என்று நம் ஓஷோ கிண்டல் செய்யும் ஆன்மீகமல்ல. வேறு வகை. ஆண்மீகம்? அட, வாசித்துப் பாருங்களேன். காரில் போகிற மஜீதின் பார்வை இது. கல்லுடைத்து கொண்டிருந்தாலும் அப்படித்தான் பார்ப்பாரா என்று தெரியவில்லை. ‘கஷ்டத்தை இஷ்டமா நெனச்சா, கஷ்டம் இஷ்டமாயிரும்’ என்கிறார் முடிவில். கஷ்டம்!

நாளை , இன்ஷா அல்லாஹ், ஹமீது ஜாஃபர் நானாவின் ‘ஹாஷ்யம்’ வெளியாகும். இன்னொரு கஷ்டம்!

ஆபிதீன்

***

வாழ்க்கை வாழ்வதற்கே!  – மஜீத்

எல்லோரும் கொண்டாடுவோம்!

சில காலமாக எனக்கு ஒரு பழக்கம். வெளியில் கடினமான வேலை செய்யும் நண்பர்களைத் தாண்டும்போது, இயல்பான ஒரு புன்னகையையும், சில சந்தர்ப்பங்களில் ஓரிரு வார்த்தைகளையும் விட்டுச் செல்வதே அது. “இயல்பான” என்று சொல்வதின் அர்த்தம், எனது புன்னகையின் தொனி, ஏதோ பரிதாபத்தில் வருவதாக நிச்சயம் இருக்காது. நானும் உங்களில் ஒருவன்தான் என்பதையே அவர்களுக்கு உணர்த்தும்.

பொதுவாக எனக்கு இந்த மாதிரி காட்சிகள் அவ்வளவாகப் பிடிக்காது. காரணம், ஒரே மண்ணில் பிறந்த ஒரே மாதிரி மனிதர்கள் ஏன் பலவிதமாக வாழவேண்டும்? எதற்கு பலர் கஷ்டப்பட வேண்டும்? சிலர் மட்டும் வசதி வாய்ப்போடு களிக்க வேண்டும்? அவர்களில் சிலரால் மட்டும் எப்படி மற்றவரை துன்புறுத்த முடிகிறது? போன்ற கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்கும். நம்மால் என்ன செய்யமுடியும் என்ற இயலாமையும் அதன் பங்குக்கு சுட்டெரிக்கும்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன் துபாயின் ‘எமிரேட்ஸ் ஹில்ஸ்” பகுதிக்குள் போய்விட்டு வரும்போது கண்ட ஒரு காட்சி சிந்தனையின் திசையை மாற்றியது.

ஒரு சிறிய நெரிசலால் போக்குவரத்து தடைப்பட்டு இரண்டு நிமிடம் ஒரே இடத்தில் நின்றபோது, எனது இடதுபுறம் மிக அருகில் பட்டுப்போன ஒரு ஈச்சை மரத்தைப் பிடுங்குவதற்காக அதைச்சுற்றி ஒரு நாலைந்து பேர் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அல்லது ஏதோ இயந்திரம் தோண்டிய பள்ளத்திலிருந்து மண்ணை அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களில் யாரும் என் பக்கம் பார்க்கவில்லை.

எனது பார்வையை அதே திசையில் சிறிது தூரத்தில் நிறுத்த அங்கு வேறு காட்சி. “மாண்ட்கொமெரீ கோல்ஃப் கிளப்”பின்  டிரைவ் ரேஞ்சில் (Montgomery Golf Club- Drive Range) இருக்கப்பட்டவர்கள் பலர் நின்று கொண்டு அவர்களது ‘டிரைவிங் ஸ்கில்ஸை’ வளர்த்துக் கொண்டிருந்தனர்.
[தூரத்திலிருக்கும் குழியை நோக்கி, மேஷ ரிஷபம் பார்த்து, பந்தை ஓங்கி அடிக்கும் முதல் அடிதான் டிரைவ். அதற்கு உபயோகிக்கும் மட்டைக்குப் பெயர் “டிரைவர் (Driver)’” மற்ற மட்டைகளுக்குப் பெயர்:”கிளப்ஸ்” (Clubs) தவறுகள் இருந்தால் கோல்ஃப் தெரிந்த நண்பர்கள் திருத்தவும்]
அங்கு ஒருவர் குனிந்து நின்றுகொண்டு பலவாறு அவரது நிலையை அனுசரித்துக்கொண்டுவிட்டு, பிறகு மட்டையை ஓங்கி, அடிப்பது மாதிரி கீழே கொண்டுவந்து, சரிபார்த்துவிட்டு, அடுத்தமுறை அதே மாதிரி ஓங்கி, ஒரே அடி! பந்து எங்கோ மேலே செல்ல, அதையே பார்த்துக்கொண்டிருந்தார், அது விழும்வரைக்கும்.

அதே நேரத்தில் அருகே மரத்தடியில் ஒருவர் குறியெல்லாம் பார்க்காமல் மண்வெட்டியால் ஓங்கி மண்ணை வெட்டி, அள்ளி, ஒரு வீசு வீசினார். விழுந்த மண்ணை நோக்கி லேசான ஒரு பார்வை.

திடீரென்று எனக்குள்ளே ஒரு குறுகுறுப்பு: ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இருவர் உடம்பிலும் வெயிலால் வியர்வை.  இருவர் முகத்திலும் கவலை. (1. இந்தமுறை எத்தனை ‘யார்டு’ போனது பந்து?  2. இன்னும் எவ்வளவு நேரம் மண்வெட்ட வேண்டும் இன்னிக்கு?)

அங்கே இன்னொருவரைப் பார்த்தேன். “டிரைவிங்” பயிற்சி முடித்ததும், தனது மட்டைக்களடங்கிய, நீண்ட “பேக்”கை, அதனடியிலிருந்த சக்கரங்களால், சற்று மேடான புல்தரையில் சிறிது சிரமத்துடன் இழுத்துச் சென்றுகொண்டிருந்தார்.

இங்கே இன்னொரு நண்பர் ஒரே சக்கரமுள்ள ஒரு ‘டிராலி’யில், மண் மற்றும் சில இலைதழைகளை வைத்து சிறிது சிரமத்துடன் தள்ளிக்கொண்டிருந்தார்.

இருவருமே வலிந்துதான் ஈடுபடுகிறார்கள். கட்டாயமென்றாலும் அது இருவருக்கும் தான். (ஒருவருக்கு சமூக அந்தஸ்து; மற்றவருக்கு பொருளாதார நிலைமை)

இருவரும் தத்தமது இடங்களுக்கு வர சிரமம் கொள்ளுகிறார்கள். (ஒருவருக்கு வார்மிங் அப்; மற்றவருக்கு சீக்கிரம் எழுந்து, பஸ் பிடித்து இத்யாதி…..)

வித்தியாசம் 1:
அவர் அங்கு வருவதற்கு (ஏற்கனவே சம்பாதித்ததில்) சுமார் 20,000 திர்ஹாம் வருட சந்தா மற்றும் இன்றைய வருகைக்கு ஒரு 200 திர்ஹாம் செலவு கணக்கு.
இவருக்கோ இன்றைய வருகையால் சில பத்து திர்ஹாம் வருமானம்;

வித்தியாசம் 2:
இன்று அவர் முகத்தில் ஒரு பெருமை (நான் உயர்வர்க்கத்தினன்)  இவர் முகத்தில் இன்று வருத்தம்தான் தெரிகிறது. ஆனாலும்……
அவர் விடுமுறையில் ஊர் சென்றால் பத்தோடு பதினொன்றுதான்.  இவர் விடுமுறையில் ஊர் சென்றால், தன் சுற்றம் முன்பு? ஆஹா………

இருவரில் யார் சிறந்தவர்?  என்னால் கணிக்க முடியவில்லை. தேவையும் இல்லை நம் வாழ்க்கை நாம் வாழத்தான். அதில் யாரையும் நுழைய அனுமதிக்கத் தேவையில்லை.  வாழ்ந்து பார்த்துவிடுவோம் நண்பர்களே!                                          

அரபி திடீர்னு வந்து ‘கொதவளய’ புடிக்கிறானா? மிசிறிக்காரன் மேல உக்காந்து மூளையைத் திங்குறானா? நம்மாளே நமக்கு ஆப்பு வைக்கிறானா? சொந்தக்காரனே மோசம் பண்றானா? இவங்க எல்லாருமே உங்களை கஷ்டப்படுத்துறதுக்கு அவங்க கஷ்டப்படுறாங்க. படட்டும். நமக்கென்ன??
ஆக, எல்லாருக்கும் கஷ்டம் இருக்கு;    கஷ்டத்தை கஷ்டமா நெனச்சாதான், கஷ்டம் கஷ்டமா தெரியும்!  கஷ்டத்தை இஷ்டமா நெனச்சா, கஷ்டம் இஷ்டமாயிரும்.  கோல்ஃப் ஆட்டக்காரர்கள் மாதிரி!!

ஆமாம். மல்டி-மில்லியனேர்களாகிய இவர்கள், தங்களது குளிர்சாதன வசதியுடைய ஆடம்பர வில்லாக்களை ஒதுக்கிவிட்டு, 45 டிகிரி வெயிலில் 95 சதவீத ஈரப்பதத்தோடு வீசும் வெப்பக்காற்றில் நான்கு மணிநேரம் நாயாய் அலைந்து கோல்ஃப் விளையாடுகிறார்கள்; அது பெருமையாம்; மகிழ்ச்சியாம்; இந்திய நகரங்களில் ட்ராஃபிக் சிக்னல்களில் பிச்சைக்காரர்கள் இதே செயலை வருமானத்தோடு செய்தால்? கேவலம்.

ஆகையினால், ஆனது ஆகட்டும், அனுபவிப்போம் வாழ்க்கையை.  வாருங்கள். எல்லோரும் கொண்டாடுவோம்!!

இன்னா நைனா, இவ்ளோ சொல்றியே, அவர்ட்ட மில்லியன் கணக்குல கீது , இவர்ட்ட டன்கணக்குல கடன்தானே கீதுன்றீங்களா? அத்த விடுங்க சார், அதுக்கும்தான் நம்ப செருப்புதைக்கும் தோஸ்த் சொலுஷன் சொல்ட்டாருல்ல?

**

நன்றி : மஜீத் |  amjeed6167@yahoo.com

« Older entries Newer entries »