இறந்தவர் பேசிய வார்த்தைகள் (சிறுகதை) – நூருல் அமீன்

நான் எவ்வளவு உரக்க கத்தி பேசினாலும் மனிதர்கள் யாருக்கும் கேட்கப் போவதில்லை. நான் இறந்து போய் எத்தனை காலம் கடந்தது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இப்போது தான் நான் இறந்து போனேனோ…..

இறந்து போனபின் இருப்பதே ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. எந்த கவலையுடன் இறந்தேனோ அந்த கவலையின் வேதனை மட்டுமே நானாக எஞ்சி நிற்கின்றேன். அசைவற்று உறைந்து நிற்கும் விவரிக்க முடியாத தனிமை. நானும், நானுமான தனிமையில்   நான் இறப்பதற்கு முன் நடந்ததெல்லாம் மனத்திரையில் ஓடியது….

சவுதியில் வேலை . அன்பே உருவான அழகு மனைவி. புத்திசாலித்தனமும், கீழ்படிதலுமுள்ள பாசமுள்ள பிள்ளைகள் (ஆஷிக், ஜீனத் ), கொள்ளை மகிழ்ச்சியாக என் வாழ்வு கழிந்தது.

when maidens sue, Men give like gods என்பார்கள். நான் என் maidenனுடன் பிள்ளைகளையும் சேர்த்து கொண்டேன். சம்பாத்தியம் முழுவதையும் மனைவி, மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே செலவு செய்தேன். கடைசி பைசா வரை மிச்சம் வைக்கவில்லை.

என்ன சேமிப்பு இல்லாததால்  ஆஷிக் ஆசைப்பட்ட மெடிகல் சீட் வாங்குவதற்கு கேபிடேசன் ஃபீ கட்ட முடியவில்லை. அவனும் அதை பொறுட்படுத்தாமல் துறை மாறி பி.காம். எடுத்து படித்தான். கொஞ்ச நாளைக்கு வருத்தமாய் இருந்தது. பின் அதுவும் மாறிவிட்டது.

பி.காம் தான் முடிக்கப் போகின்றான் அதற்குள்ஆஷிக்குக்கு பெண் தர உறவில் பேசி வந்தார்கள். “பேசி வச்சுக்கலாம், இரண்டு வருசம் கழிச்சு கல்யாணம் முடிச்சுக்கலாம்னு” கேட்டார்கள்.

‘வேணவே வேணாம்’ என மறுத்து விட்டான் ஆஷிக்.

உம்மாவும் மவனும் ரொம்ப ஃபிரண்ட்லி. என் மனைவி ஆஷிக்கிடம்“சரி இப்ப வேணாம் ஆனா நீ கல்யாணம் செஞ்சுக்கும் போது பொண்ணு எப்படி இருக்கனும்”னு விளயாட்டாக கேட்டாள்.

“அத கல்யாணம் முடிக்கும் போது பார்த்துக்கலாம்” என நழுவினான்.

“அட ரொம்ப அலட்டாம சும்மா சொல்லுடா” என அவள் சொன்ன போது ஆஷிக்“..ம்மா, வாழ்ந்தா நீயும் வாப்பாவும் வாழ்ந்த மாதிரி ஒரு வாழ்க்கை வாழனும். வாப்பா மாதிரி நல்ல கணவனா நான் இருக்க முடியும்னு நம்புறேன் ஒன்னை மாதிரி நல்ல மனைவியா ஒரு பொண்ணு பாரும்மா” என்றான்.

“நானா! புள்ளயாரு தான் அம்மா மாதிரி பொண்ணு வேணுண்டு கேட்டு இன்னும் கல்யாணம் முடிக்காம இருக்கார்னு என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க. நீ எவ்வளவு நாள் காத்திருக்க போறே”ன்னு சிரித்தாள் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்ல மகள் ஜீனத்.

சிறிது தூரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டே அவர்கள் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் கசிய இறைவனுக்கு நன்றி செலுத்தினேன்.

நன்றி! நன்றி! நன்றி என மகிழ்வும், நிறைவுமான வாழ்வை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டிருந்த நெஞ்சம் தான் கடைசி இரண்டு வருடங்கள் எப்படி மாறிப்போனது.

திடீரென வந்த ஹார்ட் அட்டாக். எதிர் பாராத செலவு, கடன் என திடீரென நிலமை மாறிய போது பி,காம்முக்கு மேல் எம்.பி.ஏ பைனான்ஸ் படிக்க ஆசைப்பட்டவன் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டெண்டு வேளையில் சேர்ந்தான்.

எனக்கு ஒரு வருடம் கட்டாய ஓய்வில் கழிந்தது. எவ்வளவு சிக்கனமாக செலவு செய்தாலும் மகனின் சொற்ப வருமானம் வீட்டு செலவுக்கே போதவில்லை. மருத்துவ செலவுக்கு மனைவியின் நகையை விற்க வேண்டிய நிலை. மகள் வயதுக்கு வந்ததும் அவள் கல்யாணத்திற்காக நகையோ, பணமோ சேர்க்கவில்லையே என்ற கவலை வேறு வாட்டியது.
வருமானம் போதாத நிலையில் மகன் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒன்றும் சரியாக அமையவில்லை.

நாளெரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வறுமை தன் கோரமுகத்தைக் விஸ்வரூபமாய் காட்ட சன்னம் சன்னமாக விரக்தி அதிகரித்து மனோ அழுத்தம் கூடியது.

டாக்டரிடம் சென்ற போது பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள். இன்னொரு அட்டாக் வந்தால் உங்களால் தாங்க முடியாது என பயமுறுத்தினார். எனக்கு என்னைப் பற்றிகூட கவலையில்லை. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த பிள்ளைகளின் தீடீர் ஏழ்மைக் கோலம் தான் மிகவும் சகிக்க முடியாமல் போனது.

முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை தூக்கி வரும் விக்ரமாதித்தனாய் ஆஷிக்கும் மனம் தளராமல்  வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான். நானும் வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர்களின் மூலம் கெஞ்சிக் கூத்தாடி முயற்சித்துப் பார்த்தேன்.

எங்கள் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. ஏன் இப்படி வாழ்வின் எல்லா கதவுகளும் திடீரென இறுக சாத்தி கொண்டது என புரியவில்லை.

தவித்த மனது வரண்டது. பயம் இருளாய் சூழ்ந்தது.
கடவுள்னு ஒன்னு இருப்பது உண்மைதானா? என்ற கேள்வி அடிக்கடி வந்தது.

பெயருக்கு பள்ளி வாசலுக்கு போனேன். ஃபர்லான (கட்டாயமான) தொழுகைகளை மட்டும் மனமின்றி தொழுதேன்.

மீண்டும் ஹார்ட் அட்டாக் வந்து மரணம் என்னை தழுவிய போது இறை நம்பிக்கையற்றவனாகவே மரணித்தேன்.

***

வாப்பா இறந்து ஆறுமாதத்தில் துபாய்க்கு வந்தான் ஆஷீக். இந்த ஏழு வருசத்துல யாரும் எளிதில் காணாத முன்னேற்றம். தங்கையின் கல்யாணம் சென்ற வருடம் சிறப்பாக முடிந்தது. “இதையெல்லாம் பார்த்திருந்தால் உங்க வாப்பா எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பாஹ” என்ற உம்மாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

எல்லா செலவுக்கு பிறகும் பேங்கில் இரண்டு லட்சம் திர்ஹம் சேமிப்பு இருந்தது. சேமிப்பு சுய தொழில் தொடங்கும் ஆசை தந்தது. ஒளிவு மறைவு இல்லாமல் அவன் அரபி முதலாளியிடம் ஆசையை சொல்ல “என் மகனும் நீயும் சேர்ந்து புதுசா ஏதாவது செய்ங்க” என பச்சை கொடி காட்டினார்.

துபாயில் கண்ஸ்ட்ரக்சன் இண்டஸ்ட்ரி உச்சத்தில் இருப்பதால் அதன் உப தொழிலான டிரக் டிராண்ஸ்போர்ட்டை தேர்தெடுத்தான். அவனுக்கு துபாய் வந்த ஆரம்பத்தில் ஒரு டிரக் டிராண்ஸ் போர்டில் ஒரு வருடம் வேலை செய்த அனுபவம் இருந்தது. பழைய ஆட்களை தொடர்பு கொண்டு சுறுசுறுப்பாக மார்கெட் சர்வேயை முடித்தான். ஐந்து வருடத்தில் 10 மில்லியன் நிகர லாபம் வரும் என ஃபீஸிபிலிட்டி ரிப்போர்ட் காட்டியது.  மெர்சிடிஸ் டிரக் கம்பெனியில் இருந்த அவனது நண்பன் விரைவில் விலை ஏறப்போகிறது வேண்டிய அளவு புக் பண்ணிக் கொள் என ஒரு குளு கொடுத்தான். தனக்கு பார்ட்னராக சம்மதித்த முதலாளியின் மகனுடைய வேறு ஒரு கம்பெனியின் மூலம் பர்சேஸ் ஆர்டரும் 5% அட்வான்ஸும் கொடுத்து அவசர அவசரமாக 100 டிரக் முன்பதிவு செய்தான். நண்பனின் கணிப்பு சரியாகவே இருந்தது. 425,000 திர்ஹத்துக்கு ஆஷிக் புக் பண்ணிய டிரக்கின் விலை ஒரே மாதத்தில் மார்கெட்டில் 525,000 திர்ஹமாக விலை உயர்ந்தது. பிஸினஸ் துவங்கும் முன்பே ஒரு டிரக்குக்கு 100,000 என 100 ட்ரக்குக்கும் 10 மில்லியன் திர்ஹம் Asset Value  கூடி விட்டது என்பதை காட்டி பேங்க் ஃபைனான்ஸுக்கு அனுகிய போது எளிதாக லோன் கிடைத்தது. கண்ஸ்ட்ரக்ஸன் கம்பெனிகள் எனக்கு உனக்கு என போட்டி போட்டுக் கொண்டு ஆர்டர் கொடுக்கவே ஆரம்பம் அமோகமாக இருந்தது.

மெமொராண்டம் கையெழுத்திட்டு புதிய ட்ரக் கம்பெனி ஆரம்பிக்க இருந்த நேரத்தில் திடீரென முதலாளியின் மகன் மனம் மாறி பிஸினஸிலிருந்து ஆஷிக்கை களட்டிவிட்டுட்டு அவன் கம்பெனியின் மார்கெட்டிங் மேனேஜருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்கவே. புதிய டிரக் கம்பெனியிலிருந்து ஆஷிக் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டான். முதலாளியிடம் எடுத்து சொன்னதற்கு “நீ வேற புராஜக்ட் கொண்டு வா நான் உதவி செய்கின்றேன்.” என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

ஆஷிக் துடித்து போய்விட்டான். உம்மாவிடம் போய் மனபாரத்தை கொட்டினான்.

“உனக்கு அல்லாஹ் கொடுக்க நெனச்சத யாரும் தடுக்க முடியாது. உனக்கு அல்லாஹ் தடுக்க நெனச்சத யாராலும் கொடுக்க முடியாது. கவலைப்படாதே வாப்பா” என உம்மா ஆஷிக்கின் தலைமுடியை கோதி ஆறுதல் சொன்ன போது ஆஷிக் சிறு குழந்தை போல கண்ணீர் விட்டான்.

 “ ஆஷிக், தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லைன்னு பாட்டு கேட்டுருக்கீல எழுபது தாயை விட கருணையாளன் நம்ம படச்ச ரப்பு. அவனுட ரஹ்மத்துட (கருணையின்) மடியில தான் எல்லா உயிரும் இருக்கு. அவன்ட ஒன்னைய ஒப்படைச்சுட்டு ஒன் வேலையை பாரு மகனே” தாயின் அண்மையும் அவள் கூறிய வார்த்தைகளும் மிகுந்த ஆறுதலை தந்தது.

ஆஷிக் இல்லாமல் மார்கெட்டிங் மேனேஜர் டிரக் டெலிவரியிலிருந்து ஹெவி ட்ரைவர்களை பாக்கிஸ்தானிலிருந்து எடுப்பது வரை எல்லா ஏற்பாடுகளையும் இரண்டே மாதத்தில் செய்து முடித்தான்.

மறக்க முடியாத 2008ம் ஆண்டின் செப்டம்பர் முதல் வாரத்தில் முதலாளி மகனும், மார்கெட்டிங் மேனேஜரும் பார்ட்னராக புதிய டிரக் டிராண்ஸ்போர்ட் கம்பெனி இயங்க ஆரம்பித்தது. முதல் நாளே 30 ட்ரக்குகள் மலைப்பாறைகளை சுமந்து கொண்டு வரிசையாக உச்சத்திலிருந்து கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தன.

***

“ஏங்க நேத்து தானே மாமாவுக்காகன்னு நூறு மிஸ்கினுக்கு குண்டா சோறு போட்டோம்.விடிய கார்த்தாலெ மாமா கனவுல வந்துட்டாஹங்க” என்றாள் ஆஷிக்கின் மனைவி வஹிதா.

“என்னா கனவு கண்டே?”

“மாமா நம்ப ஊட்டுக்கு வர்ராஹ. நம்ம எல்லாத்தையும் பார்த்து சிரிக்கிறாஹ. ஏதோ சொல்ல வற்றாஹ என்னாண்டு புரியல திரும்பி கேட்கிறதுகுள்ளே முழிச்சிட்டேன். மவுத்தா போனஹலுக்கு எதிர்காலம் தெரியுமாம். அவங்க சிரிக்கிறமாதிரி கனவு கண்டாக்கா நம்ப எதிர்காலம் பிரகாசமா இருக்கும்னு எங்க உம்மா சொல்வாஹ” என்றாள்.

“ஆமாம் உங்க உம்மா யூசுப் நபிட பரம்பரை அட ஏம்புள்ளே!,” கேலியாக சிரித்தான் ஆஷிக். அவன் கேலி சிரிப்பிலும் மெலிதாக சோகம் மறைந்திருந்தது.

***

நன்றி : ’புல்லாங்குழல்’ நூருல் அமீன் ( http://onameen.blogspot.com/ ) | onoorulameen@gmail.com

அன்னா ஹஸாரேவின் ஜனலோக்பால் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்! – நூருல்அமீன்

ஆன்மீகம், இலக்கியம் என்று  அலசிவந்த அன்பர் அமீன் , அரசியல் பேசுவது ஆனந்தமாக இருக்கிறது.  ’அடுப்பூதலாமா  ‘புல்லாங்குழல்?’ என்று இனி கேட்கமாட்டேன்.  ‘லஞ்சம் வாங்குபவனை
கேள்விக் கணக்கு இல்லாமல் தூக்கில் ஏற்றாதவரை……
இந்த ஜனநாயகத்தை வைத்துக் கொண்டு நாக்கைத்தான் வழிக்கலாம். அன்னாவெல்லாம் பத்திரிகைகளுக்கான தீனி மட்டும்தான்’ என்று சீர்காழி தாஜ் போல சீறவும் மாட்டேன். என்னால் இயன்றது சில போனஸ் இணைப்புகள். (உள்ஜுரத்தால் ஒருவாரமாக வாடுகிறேன் ஐயா. வசந்தகாலம் முடிந்து வரும் அசந்த காலத்தில் அப்படியெல்லாம் வரத்தான் செய்யும். துஆ செய்யுங்கள் – நானும், நம் நாடும் குணமடைய) . நன்றி.  – ஆபிதீன்

***

நூருல் அமீனின் கட்டுரை :

ஊழலுக்கு எதிரான அன்னாஹஸாரேயின் போராட்டம் கனிசமான வரவேற்பை பெற்று லோக்பால் மசோதாவை வடிவமைப்பதை நோக்கி முன்னகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் …

அன்னா ஹஜாரே யார்? அன்னா ஹஸாரேக்கு பின்னிருக்கும் நோக்கம் என்ன?

ஊழலுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் அமைப்புகள் போதாதா? லோக்பால் அமைப்பு தீர்வாகுமா? என்பது பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

அன்னா ஹஸாரே யார்?

விகடன் செய்திகள் தளத்தில் பதிவு செய்துள்ள அன்னா ஹஜாரேயின் வாழ்க்கை சுருக்கத்திலிருந்து…..

 கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்தவர்,  நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர். இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார். ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

 மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார். தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதவை விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே. லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

0000

லோக்பால் கூட்டுக்குழுவினர்!

லோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை ஹஸாரே ஏற்றுக் கொண்டுள்ளார்

அரசு வெளியிட்ட கெஜட்டின்படி, லோக்பால் கூட்டுக் குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார். கெஜட் அறிவிப்பின்படி லோக்பால் குழுவில் அரசுத் தரப்பில் இடம் பெற்றுள்ளவர்கள்:

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

மக்கள் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா ஹஸாரே, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சட்டநிபுணர் சாந்தி பூஷன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால், லோக்பால்.

சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி, இணைத் தலைவர் : சாந்தி பூஷன், அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

இந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்ற ஹசாரேவின் கருத்தை மத்திய அரசு ஏற்காதது ஹசாரேக்கு சின்ன பின்னடைவுதான்.

0000

பின் குறிப்பு: அன்னா சிறந்த சமூக சேவகர் என்பது ஒரு புறமிருந்தாலும், அன்னாவை சமூகத்தை காக்க அவதரித்த இறைத்தூதரைப் போன்ற சித்தரிப்புகள், ‘அன்னாவே இந்தியா!’ போன்ற கோஷங்கள் அவரது நோக்கத்தை அசிங்கப்படுத்துவதாகவே உள்ளது.

தட்ஸ் தமிழின் குற்றச்சாட்டு : ஊழல் என்று வந்துவிட்டால், அதில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே வித்தியாசம் இல்லை. காங்கிரஸாவது, அன்னாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் அதற்கான அவகாசமே கொடுக்காமல் அன்னா பாஜகவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்வது, அவரது உண்மையான நோக்கத்தைக் காட்டிவிட்டது என அன்னா ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் தட்ஸ் தமிழ் குறிப்பிடுகின்றது.

ஊழல் ஒழிப்பு என்பது அன்னா ஹஸாரே என்ற தனிமனிதரின் குரலல்ல அது நம் இந்திய மக்களின் விழிப்புணர்வின் குரல். அதை உரிய நேரத்தில் ஒருங்கிணைத்த பெருமை அன்னாவை சாரும். அன்னா ஹஸாரேயின் சில தவறான நடவடிக்கைகளால் ஊழல் ஒழிப்பு – ஜனலோக்பால் போன்றவை புறக்கணிக்கத் தக்கதல்ல.

லோக்பால்

ஊழலை கண்காணிக்க, கட்டுப்படுத்த அமைக்கப்படும் லோக்பால் அமைப்பை பற்றி பார்ப்போம்.

லோக்பாலை எதிர்பவர்களின் ஒட்டு மொத்த உணர்வின் குரலாக ஒலிக்கிறது அருந்ததி ராயின் குரல்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளைக் கொண்ட அமைப்பிடம் உச்சபட்ச அதிகாரத்தை அளிப்பது மிகப்பெரிய கேடாகவே முடியும். அதிகாரம்தான் ஊழலை உண்டாக்குகிறது. உச்சபட்சமான அதிகாரம் என்பது உச்சபட்சமான ஊழலையே உருவாக்கும்” என்கிறார் அருந்ததிராய். இது லோக்பால் அமைப்பை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள தக்க ஒரு முக்கிய அம்சமாகும். அதற்காக லோக்பாலே தேவைலயில்லை என்பது சரியல்ல.

லோக்பால் அமைப்பின் அவசியம் பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்து ஒப்புக் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. லோக்பால் அமைப்பின் அவசியம் பற்றி ஜெயமோகன் இப்படி குறிப்பிடுகின்றார்:

“இந்தியாவில் அரசு மீதான மக்கள் கண்காணிப்பு என்பது ஒட்டுமொத்தமாக எண்பதுகளில் ஆரம்பித்த ஓர் இயக்கம். அது பல தளங்களில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. சூழியல், பெண்ணுரிமை, மனிதஉரிமை சார்ந்து மக்கள் குழுக்கள் உருவாகி வந்தன. அவை இன்று இந்தியா முழுக்க முக்கியமான ஜனநாய சக்தியாக ஆகியிருக்கின்றன. அவற்றுக்கான ஒரு கருவியாகவே தகவலறியும் உரிமைச்சட்டம் இங்கே கோரப்பட்டது

1990ல் அருணா ராய் முன்வைத்து போராடிய கோரிக்கை. அது இன்றைய வடிவை அடைந்தது அண்ணா ஹசாரே நடத்திய தொடர் மக்கள் போராட்டங்கள் மூலம்தான். அந்தச்சட்டம் இன்று அத்தனை மக்களியக்கங்களாலும் மிகப்பெரிய ஆயுதமாகக் கையாளப்படுகிறது. அரசு மீதான நேரடியான மக்களின் கண்காணிப்பாக அது உள்ளது. அச்சட்டத்தின் அடுத்த விரிவாக்கமே லோக்பால்.

லோக்பால் பெண்ணுரிமைக் கழகம், மனித உரிமைக்கழகம் போன்ற அரசாங்க அமைப்புகளைப் போன்ற ஒன்றாகவே இருக்கப்போகிறது. அங்கும் அதிகார வர்க்க ஊடுருவலும் மெத்தனமும் கண்டிப்பாக இருக்கும். ஆனாலும் அதன் சாத்தியங்கள் அபாரமானவை. அதன் மக்கள் பங்கேற்பு என்பது மற்ற அமைப்புகளை விட பல மடங்கு அதிகம். அதன் அதிகாரமும் பல மடங்கு அதிகம். விளைவாக அரசாங்கத்தின் அத்தனை செயல்பாடுகள் மீதும் நேரடியாக ஒரு மக்கள் கண்காணிப்பு அதன்மூலம் உருவாகி வருகிறது. பிற அமைப்புகள் எப்படி வெற்றிகரமான விளைவுகளை உருவாக்கினவோ அப்படியே அதுவும் நிகழ்த்தும்.சொல்லப்போனால் இன்னும் பெரிய விளைவுகளைக் கொண்டு வரும்.

தேசிய மனித உரிமைக் கழகம் வந்ததனால் மனித உரிமைப்போர் முடிவுக்கு வரவில்லை, உண்மையில் அதன்பிறகே அது தீவிரமாக ஆரம்பித்தது. அந்தப் போருக்கு அந்த அமைப்பு ஒரு கருவியாக அமைந்தது. அதேபோலத்தான் ஊழலுக்கு எதிரான போருக்கு லோக்பால் அமைப்பு ஒரு வெற்றிகரமான கருவி.

கண்டிப்பாக ஊழலைத் தண்டிக்க இப்போதிருக்கும் சட்டங்கள் போதாது. அம்பேத்காரின் தலைமையில் உருவான இந்திய அரசியல் சட்டம் மனித உரிமைகளுக்கு முழு பாதுகாப்பளித்திருந்தது. ஆனாலும் தேசிய மனித உரிமைபாதுகாப்புச்சட்டமும், தேசிய மனித உரிமைபாதுகாப்பு கழகமும் ஏன் தேவைப்பட்டது? அதே காரணம்தான் இங்கும். அவை அரசியல்வாதிகளை நம்பி உருவாக்கப்பட்ட சட்டங்கள். இப்போது மக்கள் கண்காணிப்பு தேவையாகிறது

லோக்பால் அமைப்பு அளிக்கும் வாய்ப்பை இந்தியாவின் சட்டங்கள் அளிப்பதில்லை என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்று ஊழல் கண்காணிப்பும் தடுப்பும் அரசு, நீதிமன்றம் இரண்டின் கைகளில் மட்டுமே உள்ளன. நீதிமன்றத்தை அரசு எளிதாக ஏமாற்ற முடிகிறது. லோக்பால் போன்ற மக்கள் அமைப்பு நீதிமன்றத்துக்கும் அரசுக்குமான மக்களிணைப்பாக இருக்கும். நீதிமன்றத்துக்கு அரசை அது காட்டிக்கொடுக்கும். அரசை நீதிமன்றம் அதனூடாக கண்காணிக்கவும் முடியும். சொல்லப்போனால் மருத்துவம், நீதித்துறை ஆகிய இரண்டிலும்கூட மக்கள் கண்காணிப்புக்கான அமைப்புகளை உருவாக்கியாகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இன்றிருக்கிறது. அவற்றின் ஊழல்களால் இந்தியாவின் வாழ்வே அபாயகரமான நிலையில் இருக்கிறது. லோக்பாலுக்கான இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் அதுவாகவே இருக்கும்.

ஆம் லோக்பாலில் குறைபாடுகள் இருக்கலாம். சரியான பிரதிநிதித்துவம் இல்லாமலிருக்கலாம். தவறான ஒருசிலர் உள்ளே வரலாம். அதன் சட்டங்களில் ஓட்டைகள் இருக்கலாம். நடைமுறையில் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவையெல்லாமே அதை அடைந்தபின் தொடர் முயற்சிகள் மூலம் சீர்படுத்த வேண்டியவை. அவ்வகையில் சீர்படுத்திக்கொண்டே செல்லவேண்டியிருக்கும். லோக்பாலை விடாபிடியாக செயலூக்கம் கொண்டதாக அமைக்கவேண்டியிருக்கும்.

மாறாக இங்கே என்ன நிகழ்கிறது? அந்தக் கோரிக்கையை முன்வைத்து நடக்கும் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை ஒரு காரணமாக சொல்கிறார்கள். அதை அடைவதற்காகப் போராடும் பொதுநலவாதிகளைக் கொச்சைப்படுத்த அதைக் காரணமாக ஆக்குகிறார்கள். அதில் உள்ள உள்நோக்கத்தை எளிதில் காணலாம்.

அனைத்துக்கும் மேலாக லோக்பாலுக்கான இந்த போராட்டம் லோக்பால் என்ற அமைப்பை வென்றெடுப்பதற்கானது மட்டுமல்ல. அதை முன்வைத்து ஊழலுக்கு எதிரான போராட்டமாக இது நடக்கிறது. எந்த மக்கள் போராட்டமும் அவ்வாறே நிகழ முடியும் . மக்கள் விழிப்புணர்வுக்கான போராட்டமாக வளர்கிறது என்பதை, அந்த மக்கள் எழுச்சியைக் காணும் கண் ஒருவருக்கில்லை என்றால் அவருக்கு என்ன சிந்தனைத்திறன் இருக்கிறது? என்ன நேர்மை இருக்கிறது?” என்கின்றார் ஜெயமோகன்.

ஜனலோக்பால் – குறைந்த பட்ச எதிர்பார்ப்பு :

அன்னா ஹஸாரேயின் இந்த போராட்டத்தின் பிண்ணனியில் அமெரிக்க நிதியுதவி, கார்பொரேட் ஃபண்டிங், காங்கிரசுக்கு எதிரான இந்துத்வாவின் வியூகம் இருப்பதாக சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவைகளுக்கான பதில்களும் பல தரப்பில் முன் வைக்கப்படுகின்றது.

ஊழலைவிடவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடந்துவரும் மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம், பெரும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக ஆதிவாசி மக்கள் நடத்திவரும் போராட்டங்கள், நர்மதா பள்ளத்தாக்கில் இடப்பெயர்விற்கு ஆளாகியவர்கள் பல வருடங்களாக நடத்திவரும் போராட்டம், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்துவரும் விவசாயிகளின் தற்கொலைகள் போன்ற பிரச்சினைகளை ஏன் அண்ணா குழுவின் போராட்டத்திற்குப் பேராதரவு அளிக்கும் ஊடகங்கள் முதன்மைப்படுத்தவில்லை என்று அருந்ததை ராய் எழுப்பும் கேள்வி நியாயமானதுதான் என்றாலும் இதற்கு அண்ணா ஹஸாரேவையும் அவருடைய குழுவினரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று காலச்சுவட்டில் க.திருநாவுக்கரசு கூறுகின்றார்.

அடுத்ததாக அன்னா ஹஸாரே இது போன்ற பொது பிரச்சனைகளில் கருத்து கூட கூறியதில்லை என அன்னாவின் மேல் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ‘அறிவுஜீவி ஒருவர் உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் பற்றிக் கருத்து தெரிவிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் சமூக சேவகர் ஒருவர் சமூகத்தின் எல்லாத் தீமைகளையும் எதிர்த்துப் போராடியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பேதமை என்ற திருநாவுக்கரசின் வாதத்தையும் கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இத்தனை மக்கள் ஆதரவுடன் முன்னிருத்தப்படும் லோக்பால் என்பது ஊழல் ஒழிப்பு என்ற ஒற்றை புள்ளியை மட்டும் சுற்றி செயல்படும் அமைப்பாக மட்டும் ஏன் தன்னை சுருக்கிக் கொள்ள வேண்டும் .  சந்தேகத்திற்கிடமின்றி எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஜனலோக்பாலின் என்ன அம்சங்களை சேர்க்கலாம் என்பதை அனைவரும்யோசிக்க வேண்டும்.

காந்தியவழியில் இன்னொறு முக்கிய அம்சமான மத நல்லிணக்கத்தை, மனித நல்லிணக்கத்தை பேணும் கண்கானிப்பு குழுவாக லோக்பால் அமைப்பு செயல்பட வேண்டியது ஊழலை விடவும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது.  நம் நாட்டின் வளர்ச்சியை அச்சுறுத்தும் மத தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது. அதன் மூலம் அனைத்து மதங்களை சேர்ந்த்தவர்களின் சமூக பாதுகாப்புக்கு வழி வகை செய்வது லோக்பாலின் பிரதான பணிகளில் ஒன்றாக வேண்டும். நிம்மதியான வாழ்வின் குறள்வளை நெறிக்கப்படும் போது தான் அது தீவிரவாதகுழுக்களாய், குண்டு வெடிப்புகளாய் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளவிக்கிறது. இந்த இரண்டாவது அம்சத்தின்  மூலம் அன்னா ஹஸாரே இந்துத்வா இயக்கங்களின் முகமூடி எனும் அவதூறுகளும் கூட  இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மேலும் சிறுபான்மை சமூகங்களின் பூரண ஆதவும் இந்த மசோதவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

புத்திசாலி தனமாக காங்கிரஸும் மற்ற மத சார்பற்ற கட்சிகளும் இதற்கு முழு முனைப்புடன் செயல் படுவது தேவையாகிறது. அப்படி இல்லாமல் வெறும் ஊழல் ஒழிப்பு என்பதுடன் நிறுத்திக் கொண்டால் ஆளும் காங்கிரஸும் அதன் கூட்டணியும் 2G ஸ்பெட்ரம் காமன்வெல்த் ஊழல் போன்ற மெகா ஊழலில் சிக்கி சீரளிந்து வரும் சூழலில் அன்னாவின் போராட்ட வெற்றியினை வரும் தேர்தலின் அறுவடை செய்யும் வாய்ப்பு மதவாத ப.ஜா.காவுக்கே என்பது ஊழலை விடவும் அச்சுறுத்தும் விசயம்.

மதநல்லிணக்க ஆயுதத்தை கையிலெடுத்த அமைதிப்படையாக லோக்பால் திகழ்வதன் மூலம் ஒரு வேளை பா.ஜா.காவே நாளை ஆட்சிக்கு வந்தால் கூட, இன்னும் சிவசேனை, பா.ஜா.கா, காஷ்மீர் போன்ற இஸ்லாமிய கட்சிகள் ஆளு நேரும் மாநிலங்களை கூட அவற்றின் ஒருசார்பு போக்கை கட்டுப்படுத்தி சமநீதி பேணச் செய்யும் வலுவான அமைப்பாக லோக்பால் பரிணமிக்கலாம்.

வரும் காலங்களில் காங்கிரஸ் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள விட்டால் கூட பா.ஜா.காவின் மதவாதத்திற்கு பயந்து சிறுபாண்மை சமூகத்தினர் எனும் 20 சதவீததுக்கும் மேலான மக்கள் காங்கிரஸுக்கே ஓட்டளிக்க வேண்டிய அவல நிலையில் மாற்றம் ஏற்படலாம்.

இன்னும் மணிப்பூர், நர்மதா, காஷ்மீர் போன்ற பிரச்சனைகளின் இந்த கண்காணிப்பு குழுவின் பங்களிப்பு  லோக்பாலின் அடுத்த கட்ட நடவடிக்கையாக வேண்டும்.

என்ன எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக ஒரு அமைப்பா? என்பதை விட எரியும் பிரச்சனைகளின் சிலவற்றையாவது இந்த கண்காணிப்பு குழுவின் நோக்கமாக மையப்படுத்துவது மிகவும் தேவையான ஒன்று.

அன்னா குழுவினர் சொல்வதே முடிவென்றில்லாமல் லோக்பாலில் நேர்மையும், திறமையும் வாய்ந்த பல தரப்பட்டவர்களின் பங்களிப்பும், விவாதம், கருத்து பரிமாற்றம் என ஓரளவு முழுமையான வடிவாக லோக்பாலை வார்தெடுக்க வேண்டியதும் மிக மிக அவசியம்.

***

நன்றி : நூருல் அமீன் (http://onameen.blogspot.com/  ) | மின்னஞ்சல் முகவரி : onoorulameen@gmail.com

***

போனஸ் 1 : கேள்வி பதில் (துக்ளக் / 12.10.2011)

சம்பத்குமாரி, திருச்சி : தனது லோக்பால் சட்டம் அமலில் இருந்திருந்தால், இந்நேரம் ப.சிதம்பரம் சிறையில் இருந்திருப்பார்’ என்று அன்னா ஹஸாரே கூறியிருக்கிறாரே! இன்ஸ்டண்ட் உப்புமா, இன்ஸ்டண்ட் தோசை போல் இவர் இன்ஸ்டண்ட் தீர்ப்பு வழங்கியிருப்பாரா?

சோ : அவரை இன்ஸ்டண்ட் மகாத்மாவாக ஏற்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். அவருடைய மசோதா சட்டமானால், விசாரணைகளே தேவையில்லை என்று அவர் நினைக்கிறார் போல் இருக்கிறது. ஒருவர் மீது குற்றச்சாட்டு வந்தால் அவருக்கு தண்டனை அளித்துவிடலாம் என்ற நிலையை ஒரு சட்டம் உருவாக்குமானால், சிதம்பரம் மட்டுமல்ல, இந்த நாட்டில் முக்கால்வாசி பேர் சிறைக்குப் போக வேண்டியதுதான்.

***

போனஸ் 2:

 ’நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் ஊழலை ஆதரிப்பவர்’ என்று பலர் கர்ஜிப்பது கேட்கிறது. உடன் கொஞ்சம் ரீவைண்ட் செய்தால் ‘நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் நீங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறீர்கள் ‘ என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ். இன்னும் கொஞ்சம் ஃபார்வேர்ட் செய்தால்  ‘நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் நீங்கள் மாவோயிஸ்டுகளுடன் இருக்கிறீர்கள்’ என்கிற மத்திய அரசின் குரலும் சேர்ந்து கேட்கிறது. ..பல கருத்துக்கள் இருக்கலாம். ஆரோக்கியமான விவாதங்கள் நடக்கலாம். பின் அனைவரும் ஒரு முடிவை எட்டுவதுதான் ஜனநாயக முறை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் மாற்றுவது சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும் என்பது வரலாறு’ – அ. முத்துக்கிருஷ்ணன் (அன்னா ஹசாரேயின் மறுபக்கம் / உயிர்மை இதழ் 98)

போனஸ் 3 :

மெழுகுவர்த்தி ஏற்றுவது அவ்வளவு தவறா …? – தருமி

« Older entries