நாஞ்சில்நாடன், ஜெயமோகன் உரை @ துபாய் (2012)

நாஞ்சில் நாடனின் ‘ஒரு காலைக் காட்சி’யிலிருந்து….

Nanjil_Nadan_stories…. சிவப்பு மாறி மஞ்சள் விழுந்தது. சிவப்பு கண்டும், வேகமாய்க் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் அல்லது அலட்சியத்தில் விரைந்த செம்மாருதி ஒன்று, மஞ்சள் கண்டதும் தாமதிக்காமல் புறப்பட்ட நான்கு பால் கேன்கள் தொங்கிய சைக்கிளில் ‘கிர்ரீச்’ என்ற பிரேக்கின் இறுதிக்கட்டத்தில் மோதியது. ஆட்சேதமில்லை.

எழுந்த சைக்கிளின் பால்கேன்களில் இரண்டின் மூடி திறந்து, பள்ளம் நோக்கிய வெள்ளமாய் பால் சுதந்திரமாய் ஓடியது. ஓடும் வாக்கில் சிறு ரோட்டுப் பள்ளங்களில் தேங்கியது.

சைக்கிள் இருந்து சரிந்த உ.பி.க்கார பால் பையா எழுந்து மற்ற இரண்டு கேன்களையும் மீட்க முயலும்போது, மூடித் திறந்த கேன்கள் முற்றிலும் வடிகாலில் இருந்தன.

கண்மூடி முழிக்கும் அவகாசத்தில், குடிசையில் இருந்து வேகமாய் ஒரு கிழவி பாய்ந்து வந்தாள். சற்றே நிறுத்தம் கொண்டிருந்த போக்குவரத்து இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, ஓட்டமும் தள்ளாட்டமுமாய் வந்த கிழவியின் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது.

குழந்தையின் உருவம் ஒரு வயதுபோலத் தோற்றம் தந்தாலும் பருவம் மூன்று வயதுக்குக் குறையாது. கிழவி சூல்கொள்ளும் பருவம் தாண்டி முப்பது ஆண்டுகளாவது இருக்க வேண்டும். எனவே அவள் குழந்தையாக இருக்க நியாயமில்லை. மகன் அல்லது மகள் குழந்தையாக இருக்கலாம். அல்லது உறவின் நயப்பு ஏதுமற்ற அண்டை அயல்வீட்டுப் பிள்ளையாகக் கூட இருக்கலாம். ஓடிவந்த கிழவி, பால் தேங்கிக் கிடந்த சிறு பள்ளம் ஒன்றின் பக்கத்தில் குனிந்தாள்.

இடது கையால் இடுப்பில் இருந்த பிள்ளையை வளைத்துப் பிடித்துக்கொண்டு, வலதுகையை அகப்பை போலக் குவித்து, பள்ளத்தில் கலங்கித் தேங்கிக் கிடந்த பாலை கோரிக்கோரி குழந்தையின் வாயில் விடலானாள்.

இயக்கம் கொள்ள ஆரம்பித்த வாகனங்கள் கிழவியையும் குழந்தையையும் பால் தேங்கிய பள்ளத்தையும் ஒரு போக்குவரத்துத் தீவுபோல் பாவித்துக்கொண்டு மேற்கொண்டு ஓடலாயின.

*

சிறுகதையை முழுதாக இங்கே வாசிக்கலாம்:

*
நன்றி : நாஞ்சில் நாடன், யுனைடட் ரைட்டர்ஸ்

« Older entries