கி.ரா – ஜெயகாந்தன் – பால் ரோப்ஸன்

கதைசொல்லி இதழ் 21 (ஜூன் ஆகஸ்ட் 2007) கி.ரா பக்கங்களிலிருந்து பகிர்கிறேன்…

——-

kira-anthi-wp-ab..ஜெயகாந்தனின் அறையில் இன்னொரு உலகமும் இருந்தது! நிறைய்ய இசைத்தட்டுகள் வைத்திருந்தார். அவ்வளவும் அய்ரோப்பிய சாஸ்திரிய சங்கீதம். “ஒய் பாவி மனுஷா” என்று வியந்து போனேன். இப்படி ஒன்று அவரிடம் அங்கே இருக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கலை நான்.

பீதோவனின் சிம்பனியைக் கேட்டிருக்கிறீர்களா என்று ஒரு இசைத்தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு கேட்கிறார்.

அவனுடைய நாமத்தைக் கேட்டிருக்கிறேன். இப்பொக் கண்ணால் பார்க்கிறேன் இந்த இசைத்தட்டை.

‘ஜெர்மானிய நாட்டின் தியாகப் பிரம்மம்’ என்று கு.அ. சொல்லுவான். ஆனால் அவனும் கேட்டதில்லை இதை.

நிலைகொள்ளவில்லை எனக்கு; அய்யோ என்று சொல்லி உட்கார்ந்து அவர் சோபா படுக்கையில் சாய்ந்து கொண்டேன்.

ருஷ்யமொழியின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அலக்ஸாந்தர் குப்ரீன் கதையான ‘மாணிக்கக் கங்கணம்’ தமிழில் படித்ததிலிருந்து இவனைத் தேடிக் கொண்டிருந்தேன். கேக்கணுமெ இவனை இப்பொக் கேட்கிற மனநிலை இருக்கா; தெரியலையே என்ற தவிப்பு வந்துவிட்டது.

“உலகப் பிரசித்தி பெற்ற கறுப்புப் பாடகன் பால்ரோப்ஸன் பாடலைக் கேட்டிருக்கிறார்களா?” என்று இன்னொரு இசைத்தட்டைக் காட்டிக் கேட்கிறார்.!

இத்தாலிய நாட்டின் பிரசித்தி பெற்ற வயலின் இசைநிபுணர் (பெயர் ஞாபகம் இப்பொ இல்லை) இசைத் தட்டைக் காட்டுகிறார். இன்னும் என்னவெல்லாமோ பெயர்கள்; இசைத்தட்டுகள்.

முதல்லெ பீதோவன் என்றேன்.

இசைத்தட்டு சுழல ஆரம்பித்தது.

எனது பிரக்ஞை அங்கே இல்லை. பீதோவனால் என்னைக் கட்டி இழுக்க முடியவில்லை. பயந்தபடியே ஆயிற்று!

பால்ரோப்ஸனைப் போடுங்கள்.

கண்ணாடியில் ஒட்டிக்கொண்ட பல்லியின் கால்களைப்போல என்னில் ஒட்டிக்கொண்டது அவனது குரல். கேவி அழாத ஒரு ஏக்கம் தொனித்த குரல்.

என்ன சொல்லுகிறான்?

தான் ஒரு அநாதையாய் உணர்வதாகச் சொல்கிறான்.

ஏன்?

தங்களுக்கு என்று ஒரு மண் இல்லை தங்குவதற்கு; நாடு நாடாய் அலைந்துகொண்டிருக்கிறோம் அநாதைக் குழந்தைகளாய் என்கிறான் ‘சம்டைம் அய் ·பீல்..’ எனும் அந்தப் பாடலில்.

*

*

அது அவர்களது நாடோடிப் பாடல். இந்த வகைப்பாடல்கள் மனசை அறுக்கும். இங்கே தமிழிலும் இந்த வகைப் பாடல்கள் உண்டு.

முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரித்து, இரை தேடிப்போன ஆக்காட்டிப் பறவை, தொலைந்து போன தனது குழந்தைகளை நினைத்து அழுவது போல உள்ள துயரமான பாடல் (முனைவர் கே.ஏ. குணசேகரன் பாடிக் கேட்க வேண்டும்)

பால் ரோப்ஸன் பாடிய இன்னொரு பாடல் ‘வாட்டர் பாய்‘. தண்ணீர் சுமக்கும் ஒரு கறுப்புப் பையனைப் பற்றியது. அந்தப் பையனுடைய தோற்றத்தையும் பிரியமான குணங்களையும் வர்ணித்து வர்ணித்து அப்பேர்ப்பட்ட பையன் எங்கே, அவன் உங்களுக்குத் தட்டுப்பட்டானா; பார்த்தீர்களா? என்று உருகி உருகிக் கேட்கும் அந்தப்பாடல். அந்தக் குழந்தைத் தொழிலாளி வேலையின் தாளமுடியாத சுமையினால் ஓடிப்போயிருக்கலாம். அல்லது அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்.

பால்ரோப்ஸனுடைய தேன் குரலைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்தக் குரல் நம்முடைய பித்துக்குளி முருகதாசின் குரல வகையைச் சேர்ந்தது.

(பாடும்போது உள்ள பால்ரோப்ஸனுடைய குரல் பேசும்போது எப்படி இருக்கும் என்று கேட்க ஆசையாக இருந்தது. பல நாட்கள் கழித்து எனது அந்த ஆசையும் நிறைவேறியது செங்கல்பட்டில் டாக்டர் ஹரி.ஸ்ரீநிவாசன் (‘சார்வாகன்’) வீட்டில் வைத்து.)

*

நன்றி : கி.ரா, கதைசொல்லி, varadero1839

 

யாருக்காக அழுதான்? – ஜெயகாந்தன்

Thanks : MrDearkutti

உள்ளங் கையில் கஞ்சாவைத்து…

நம் ஹனிபாக்கா கொடுத்த ‘கஞ்சா’வை இப்போது கசக்குகிறேன். இந்தவயதிலும் இளமையும் குறும்பும் துள்ளுகிறது மனுசனுக்கு!

***

என் அருமை ஆப்தீனுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் .

நீண்ட நாட்களாக மெயில் அனுப்பவில்லை வாழ்வு இவ்வளவு அவசரமாகப் போனது. நாம் எல்லோரும் எங்கே போகிறோம்? எதுவுமே பிடிபடமாட்டேன்கிறது.     

சின்னவயசிலிருந்தே  சங்கீதத்திலும் பெரும் ஈடுபாடுதான்.  சுன்னத் கல்யாண வீடுகள்தான் என் அரங்கேற்றம். உள்ளுர்காரர்கள்தான் குருநாதர்கள்.

டப்லா ஹார்மோனியம் சதங்கை பளிங்கு கோப்பை  போன்றவைகள்தான். எங்களின்  ஆனானப்பட்ட கருவிகள் . கூடவே கஞ்சா ரொப்பிய சிலிம்பியும். எனதுமைத்துனர்  சிலிம்பி சுற்றுவதில்  கைதேர்ந்த கலைஞர்  அவரிடமிருந்து தான் நான் அந்தக்கலையை கற்றுக்கொண்டேன்.

பின்னாளில்  சென்னையில் நான் ஜெயகாந்தனைச் சந்தித்த போது  அவர் கையிலிருந்த சிலிம்பியின் கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. 

நான் எனது சிலிம்பி பற்றிய அனுபவங்களைச் சொன்னதும்  உடனே அவரின் உதவியாளரை கோல்டன் பீச்சுக்கு அனுப்பிதென்னை ஓலை வரவழைத்தார்.  எனதுகை வண்ணத்தில் சிலிம்பி சிரித்தது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தண்ணீர் நிரப்பிய கிளாசுக்குள் கஞ்சா நிரப்பிய சிலிம்பியை லாவகமாக வைத்து அனாயாசகமாக கஞ்சாவை இழுத்து விட்டேன்.

இருவரும் நாலு ரவுண்ட் வந்தோம்.

உடனே ஜெயகாந்தன் அவர்கள்  ஒருகவிதையே பாடிவிட்டார்.  எங்கும்பிரசுரமாகாத அந்தக்கவிதையை  ஆபிதீன் பக்கஙகளில் இறக்கி விடுகிறேன்.

உள்ளங் கையில் கஞ்சாவைத்து

உருட்டி உருட்டி கசக்கு – அங்கே

ஓடுது பார் உன்னுடைய உள்ளத்தோட அழுக்கு

கள்ளப்புலனை  நாராகச்சுருட்டி –  அந்தக்
 
காலனையும் ஓடஓட விரட்டு.

 இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்.

சங்கீத விமர்சகர் சுப்புடு பற்றித்தான் எழுத வந்தேன். அது ஜெயகாந்தன் தலையில் முடிந்துவிட்டது!

அன்புடன் 

அனிபாக்கா  / 29.11.2010

***

கஞ்சாவில் ஒரு திருத்தம் (பிற்சேர்க்கை (30/11/2010) :

ஹனிஃபாக்கா :

ஆபிதீன்.. (நேற்று) காலையில் அனுப்பிய ஜெயகாந்தனின் கவிதை எனது ஞாபத்திலிருந்து நான் எழுதிய கவிதை. இடையில் இருபது வருடங்கள். இன்று மத்தியானம் அவர் சொல்ல சொல்ல நானெழுதிய அவரின் கவிதை இதோ.

கஞ்சா மகிமை

உள்ளங்கையிலே மருந்தை வைச்சி உருட்டி உருட்டி கசக்கு – அங்கே
ஓடுது பார் நீ இருக்கிற உலகத்தோட அழுக்கு
கள்ளப்புலனை நாரெடுத்து கயிறாகச் சுருட்டு – அதைக்
காட்டி அந்தக் காலனையும் ஓட ஓட விரட்டு

இத்துடன் வரும் ஜெயகாந்தன் புகைப்படம் 19.01.1990-இல் நான் எனது கெமராவில் பதிவு செய்தது.                 

 *

நன்றி : ஜெயகாந்தன், ஹனீபாக்கா, கஞ்சா!

« Older entries