ஆஹில் அமர்க்களம் :)

aahil-by-yazhiஎங்கள் செல்லப்பிள்ளை இவன். எழுத்தாளர் சென்ஷியின் மகன். டென்சனாக இருந்தால் இவனுடைய குறும்புகளைப் படிப்பேன். அதில் ஒன்று இது. தங்கை யாழினி எழுதியது. நண்பர் ஜெயமோகன் நிராகரித்த பத்மஸ்ரீ விருதை இவனுக்கு அளிக்கிறேன்!

***

கொஞ்ச நாளாவே ஆஹில் சாப்பிட படுத்தியெடுக்குறான். நொந்து நூடுல்ஸா மட்டும் இல்ல நானு இடியாப்பமாவே ஆயிட்டேன். சும்மா நேத்து ஒரு பொழுது சேதியை சொல்றேன்.

காலைல எழுந்து வந்து ஆஹில் “ம்மா எனக்கு இன்னிக்கு பூரி வேணும் செஞ்சு தடுடீங்ளா” ன்னு கேட்டான்.

“சரிடம்மா செஞ்சு தரேன்”

நைட்டும் ஒழுங்கா சாப்பிடலை பிள்ளன்னு அவசர அவசரமா பூரி செஞ்சு உருளைக்கிழங்கு மசாலாவும் செஞ்சு அஃப்ராவையும் ஆஹிலையும் சாப்பிட கூப்பிட்டேன். அஃப்ரா ரெண்டு பூரியை எடுத்து சாப்பிட உக்காந்தா.. ஆஹில் திரு திருன்னு முழிச்சிட்டே என்ன பாத்தான்

ஏண்டா மயிலா.. சாப்பிடு”

ம்மா.. எனக்க்கு.. எனக்க்கு.. இட்டலி சாப்பிடதான் ஆசவடுது..

அம்மா இட்லி வேணுமான்னுதானே கேட்டேன் நீதானே பூரி வேணும்னு சொன்ன ஒழுங்கா சாப்பிடு..

அடுவன்டு.. அடுவன்டு.. எனக்கு படட்டா (பரோட்டா) வேணும் அடான் பூரி கேட்டேம்மா..

அப்ப அதானே கேக்கணும் நீ ஏன் பூரி இட்லின்னு கேக்குற.. உனக்கு என்ன வேணும்னே தெரிஞ்சிக்க தெரிலையா..

எனக்கு பூரி வேணுல்ல அடான் இட்டலி கேட்டேன்..

அவ்வ் என்னதாண்டா வேணும். உங்கப்பாகூட சமைச்சதை பொட்டாட்டம் சாப்பிட்டு எந்திரிப்பாரு.. இப்ப சாப்பிட போரியா இல்லையாம்மா..

. ……,……………..

(கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு)

ம்மா.. ம்மா..

வேணா தங்கா… அம்மா உன்கூட டூ. எது செஞ்சாலும் சாப்பிட மாட்டேங்குற

“இடுங்க.. “

வேகமாஉள்ள போய் பூரியை தட்டுல வச்சு எடுத்திட்டு வந்து பக்கத்துல உக்காந்தான்.

ம்மா நானு சாப்பிடப்போடேன்..

ம்ம்

அவசரமா ரெண்டு பூரிய சாப்பிட்டிட்டு “கோச்சுக்காடிங்கம்மா ப்பீஸ்”னு கொஞ்சிட்டு கொஞ்சம் முத்தமும் தந்தான் பூரிவாயன்.

இதே போல கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு சேட்டை செஞ்சான்.

ம்மா மித்து ஃபூட் (ஃப்ரூட்) கொண்டு வர சொன்னாங்க.. எல்லாரையும்..

நீ ஃப்ரூட்ஸ் கொண்டு போனியேடாம்மா இன்னிக்கு..

இல்லம்மா நீங்க ஃபூட் தரல.. ஆப்பில்தான் தந்தீங்க.. ப்பீஸ் எனக்கு ஃபூட் தாங்க.. இல்லன்னா மித்து திட்டுவாங்க

இந்த கட்டத்தை கடக்க நான் டோராவா மாறி கதை சொல்லி சொல்லி கவுக்க வேண்டியதாயிடுச்சு..

*

எழுத்தும் புகைப்படமும் : யாழினி

எஸ்.ரா தேர்வு செய்த 100 தமிழ்ச் சிறுகதைகள் இலவசம் (pdf)

SRamakrishnan-Barathirajaநண்பர் எஸ். ராமகிருஷ்ணன் பட்டியலிட்ட தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை ஒரு பைத்தியம் போல நாலைந்து வருடமாக தேடிஅலைந்து , கிடைத்ததை உடனே தட்டச்சு செய்து இணையத்தில் பகிர்ந்த எங்கள் சென்ஷிக்கு ஒரு நன்றியும் சொல்லாமல் 650 ரூபாய்க்கு புத்தகம் போட்டு விற்க முனைகிற சிலரின் அராஜகத்தைக் கண்டித்து pdf கோப்புகளை இங்கே இணைக்கிறேன். இதிலுள்ள எல்லா கதைகளும் அழியாச் சுடர்கள் தளத்திலும் தனித்தனியாகக் கிடைத்தாலும் ஒன்றாக pdfல் கிடைப்பது அநேகமாக இங்கேதான் (இனிமேல் எங்கும் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்!) . ஒரு கிலோ  புத்தகமெல்லாம் தூக்கி அக்குளில் வைத்துக்கொண்டு சிரமப்படாமல் ஒரு மில்லிகிராம் pdfஐ எளிதாக தரவிறக்கி சேமியுங்கள். ஏன், படிக்கவும் செய்யலாம். சென்ஷி எங்கு தேடியும் கிடைக்காத சார்வாகனின் ‘கனவுக்கதை’, எஸ்,பொ’வின் ‘ஆண்மை’, செழியனின் ‘ஹார்மோனியம்’ கௌதம சித்தார்த்தனின் ‘தம்பி’ (சிறுகதை)போன்றவையெல்லாம் ஆபிதீன் பக்கங்களில்தான் முதன்முதலில் வெளியானது. இங்கிருந்து சுட்டு இணையத்தில் ‘தொகுப்புகள்’ போட்டவர்களும் நன்றி சொல்ல மறந்தது ஏனென்று தெரியவில்லை. இருக்கட்டும் அதற்கு ஒரு கதை இருக்கு.  ‘இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் அவசியம் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் நிச்சயம் இருக்கின்றன’ என்று எஸ்.ரா சொல்லியிருப்பதில் அது சேரட்டும். ஒரு விஷயம். pdf லிஸ்டில் ஏதோ ஒரு கதை கூடவந்து 101ஆகிவிட்டது. கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சார்ஜா கஞ்சா பாக்கெட் இலவசம்! – ஆபிதீன்

Download :

எஸ். ரா  தேர்வு செய்த  சிறுகதைகள் (1 to 50)

எஸ். ரா  தேர்வு செய்த  சிறுகதைகள் (51 to 100)

***

நன்றி : எஸ். ராமகிருஷ்ணன், சென்ஷி, பண்புடன் குழுமம், யெஸ். பாலபாரதி

***

+

அப்படியே நேஷனல் புக் டிரஸ் வெளியிட்ட 22 நாவல்களையும் அள்ளுங்க! ஜெய் ஜென்ஷி!

ஜெய் ஜென்ஷி! : 22 நாவல்கள் இலவசம்

ஷார்ஜாவில் அலையும் ஒரு ஜென்முனியின் கிருபையால் , கீழ்க்கண்ட 22 அற்புத நாவல்கள்  கிடைக்கின்றன. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டவை. சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன். அனைத்தையும் வாசிக்க / டவுன்லோட் செய்ய முடியும்.  செய்யும்போது ’ஜெய் ஜென்ஷி!’ என்று கத்தினால் படு வேகமாக இறங்கும், கோப்பு.  அனுபவத்தில் கண்டது. இந்த ஜென்முனி பயங்கர அடக்கம் எளிமை… ’தங்களுக்கு சிலை வைக்கவா ஐயா?’ என்று நேற்று கேட்டதற்கு , ’தயவுசெய்து தங்கத்தில் மட்டும்’ என்று சொன்னது! – ஆபிதீன்

***

Note : All pdf files are available here (updated on 28.07.2019)

***

1. அக்னி நதி (Aag ka Daryah) –  உருது :  குர்அதுல்ஐன் ஹைதர் (தமிழாக்கம் : சௌரி)

2. அரை நாழிகை நேரம் மலையாளம் : பாறப்புறத்து (தமிழாக்கம் : கே. நாராயணன்)

3. அழிந்த பிறகு (Alida Mele)கன்னடம் : சிவராம காரந்த் (தமிழாக்கம் : எம். சித்தலிங்கய்யா)

4. தர்பாரி ராகம் (Raag Darbari) – இந்தி : ஸ்ரீலால் சுக்ல (தமிழாக்கம் : சரஸ்வதி ராம்நாத்)

5. ஃபாத்துமாவுடைய ஆடும் இளம் பருவத்துத் தோழியும் (Pathummavude Adum Baliyakala Sakhiyum) – மலையாளம் : வைக்கம் முகம்மது பஷீர் (தமிழாக்கம் :  சி எஸ் விஜயம்)

6. ஜன்னலில் ஒரு சிறுமி (Totto-Chan) ஜப்பான் : டெட்சுகோ குயோயாநாகி (தமிழாக்கம் : அ. வள்ளிநாயகம் , சொ.பிரபாகரன்)

7. கருப்பு மண் (Nalla Regadi)தெலுங்கு : பாலகும்மி பத்மராஜு (தமிழாக்கம் : பா பாலசுப்ரமணியன்)

8. கிராமாயணம்கன்னடம் : ஆர்.பி. குல்கர்னி (’ராவ் பகதூர்’) (தமிழாக்கம் : எஸ் கெ சீதாதேவி)

9. கோயில் யானை (Thevarutu Aana)மலையாளம் : ஓம்சேரி என்.என்.பிள்ளை ( தமிழாக்கம் : இளம்பாரதி)

10. முதலில்லாததும் முடிவில்லாததும் (Anadi Anantha) கன்னடம் :  ஸ்ரீரங்க. (தமிழாக்கம் : ஹேமா ஆனந்த தீர்த்தன்)

11. நான் (Mee) மராத்தி : ஹரிநாராயண் ஆப்தே (தமிழாக்கம் : மாலதி புணதாம் பேகர்)

12. நீலகண்டப் பறவையைத் தேடி (Neelakanth Pakhir Khonje) வங்காளம் : அதீன் பந்த்யோபாத்யாய (தமிழாக்கம் : எஸ். .கிருஷ்ணமூர்த்தி)

13. ஒரு குடும்பம் சிதைகிறது (Griha Bhanga) கன்னடம் : எச்.எல். பைரப்பா (தமிழாக்கம் : எச்.வி.சுப்ரமணியம்)

14. பகல் கனவு (Divasapna)குஜராத்தி : ஜிஜூபாய் பதேக்கா (தமிழாக்கம் : சங்கரராஜுலு)

15. பன்கர்வாடி (Bangarwadi) மராத்தி : வெங்கடேஷ் மாட்கூல்கர் (தமிழாக்கம் : உமாசந்திரன்)

16. சிப்பியின் வயிற்றில் முத்து (Jhinuker Pete Mukto)வங்காளம் : போதிசத்வ மைத்ரேய (தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி)

17. துளியும் கடலும் (Boond aur Samudra)இந்தி : அம்ரித்லால் நாகர் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)

18. உம்மாச்சு மலையாளம் : உரூப் (தமிழாக்கம் : இளம்பாரதி)

19. உயிரற்ற நிலா (Mala Janha)ஒரியா : உபேந்திர கிஷோர் தாஸ் (தமிழாக்கம் : பானுபந்த்)

20. வாழ்க்கை ஒரு நாடகம் (Manaveni Bhavai)குஜராத்தி : பன்னாலால் பட்டேல் (தமிழாக்கம் : துளசி ஜெயராமன்)

21. விடியுமா (Jagari)வங்காளம் : ஸதீநாத் பாதுரி (தமிழாக்கம் : என். எஸ். ஜகந்நாதன்)

22. விஷக்கன்னி (Visha Kanyaka)மலையாளம் : எஸ்.கே. பொற்றேகாட் (தமிழாக்கம் : குறிஞ்சிவேலன்)

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

சென்ஷியின் கவிதை

முகுந்த் நாகராஜின் ‘நாய் பொம்மை’ கவிதையை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சென்ஷியைப் பார்த்து , ‘நீங்க கவிதை கிவிதை எழுதலையா?’ என்று அண்ணாச்சி தாஜ் கேட்க , அவர் தூக்கிப்போட்டார் பாருங்கள் தன் அட்டகாசமான கவிதையை! ’மிக அழகு… மிக அழகு. உங்கள் கவிதையை படித்து அபிப்ராயத்தை முன் வைக்க நண்பர்கள் பட்டிருக்கும் சிரமம் இன்னொரு கவிதை, அது இன்னொரு அழகு. வாழ்த்துக்கள் சென்ஷி’ என்று கூத்தாடவே ஆரம்பித்து விட்டார் தாஜ்.  அந்தக் கவிதையை இங்கே மீள் பதிவு செய்கிறேன். குறையே சொல்லாமல் வாழும் குரு சென்ஷியிடம் அனுமதி கேட்கும் வழக்கமில்லை. அவரிடமுள்ள புத்தகங்களையும் டி.வி.டிக்களையும் அவருக்குத் தெரியாமலே அள்ளி வருபவர்கள் நாங்கள். சரி, கவிதையின் கீழே சென்ஷியின் ‘அடப்பி’ல் உள்ள சில கதைகளின் இணைப்பும் உண்டு. அவசியம் படியுங்கள்.  நன்றி. – ஆபிதீன்

***

இலையுதிர்க் காட்டுமரங்கள்

இலையுதிர் காலம் என்று
என்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்
தெரியாமல் சொட்டியிருந்த அன்பாய்
சுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளமிடமிருந்து
வெடித்துக் கிளம்புகின்ற பக்கக்கிளையில்
பசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன
தண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்
ரசனைக்குட்படுத்தப்படாத வளர்ச்சியின் மீதமாய்
எனக்கென மிச்சமாய் கிடைத்திருந்தது
மிகைப்படுத்தப்பட்ட அன்பு

காடுகள்தோறும் வீசியெறிந்திருந்த
அன்பின் வடிகால்கள்
கை முளைத்து கால் விரித்து
வேர்களின் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.
பற்றுதல்களுக்கான தேடலில்
எல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்

மரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து
சிறகு ஒடுங்கி அமர்ந்திருந்த
பறவையொன்று
கிளையில் அமர்ந்து உபதேசித்துக்கொண்டிருந்தது

***

சென்ஷியின் சில கதைகள் :

1. சிருஷ்டி – http://senshe-kathalan.blogspot.com/2008/09/blog-post_22.html
2. வெந்து தணிந்தது காடு – http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_18.html
3. கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம் – http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post.html

***

நன்றி : சென்ஷி | E-Mail : me.senshe@gmail.com

Newer entries »