தடங்காட்டி மரம் – சென்ஷி சிறுகதை

’மோனம் புனைந்த கவிதையின் தன்மையும் வேளையும் யாரால் முன்கூட்டிச் சொல்ல முடியும்?’ என்பார் லா.ச.ரா, ‘அர்ச்சனை’ கட்டுரையில். அப்படித்தான் சென்ஷியிடமிருந்து ஒரு புதிய கதை வருவதும். பிரியத்துடன் பகிர்கிறேன். – AB

*

தடங்காட்டி மரம் – சென்ஷி

சபீருக்கு முப்பத்தொன்பது வயதை அடைய சரியாக இன்னமும் நாற்பது நாட்கள் மிச்சமிருக்கிறது. சபீருக்கான வரலாறென்பதை, பெயர்களாய் அவனுடைய தந்தையிலிருந்து ஆரம்பிக்கலாம் அல்லது இன்னும் கொஞ்சம் நினைவை கவனமாய் நெய்தால் அவரது தந்தையையும் கொண்டு வர முடியும்.

தாய்வழியில் அவர்களது குடும்ப பெருமைகளை அப்பாவை நொடிக்கும்போதெல்லாம் அம்மா சொல்லிக் காட்டுவதால் பெருமைகள் சபீருக்கு அத்துப்படி. ஆனால் பெருமைகளை மாத்திரம் வரலாறாய் மாற்றிக் கொள்வதில் உடன்பாடு இருந்ததில்லை. வரலாறுக்கான சூத்திரத்தில் உண்மையின் பங்கின் சதவீதம் அதிகமாய் இருக்கவேண்டுமென்பது எண்ணம். ஏன் அப்பா தன் உறவு வழி பெருமைகளை சொல்லிக் காட்டியதில்லை என்று தெரியவில்லை. புனைவாய்க்கூட எந்த கதைகளையும் அவனுக்கு நகர்த்தியதில்லை.

பாடவகுப்பில் ஒரு பாடமாக மகனுக்கு தன்னைக் குறித்த வரலாறை கடத்துதலின் பாகமாய்த்தான் இந்த பாடு. வெறுமனே பெயர்களை எழுதி வைத்து குடும்ப மரத்தை வரைந்து வைத்துவிடலாம்தான். இணையவழி சிக்கல்களை புதிர்களை கண்டு விடை கண்டுபிடித்தலில் ஆர்வங்கொண்டவனுக்கு தன்னுடைய வரலாறை அறிந்துகொள்ளுதலில் உள்ள ஈடுபாட்டை எப்படி சுருக்கி எடுத்துக் கொள்ளுவது. தனக்கான வரலாறு தன்னிடமிருந்து தொடங்கட்டுமென்ற அதிநவீனத்துவ எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் பிள்ளையின் பாடத்தில் ஓரிரு மதிப்பெண்களை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் எண்ணம் தள்ளி வைத்தாயிற்று.

எந்த தகப்பன்தான் குழந்தைக்கு தன்னால் மதிப்பெண் குறைந்து போனதை ஒத்துக் கொள்ளுவான். இந்த வேதனை வந்துவிடக்கூடாதென்பதற்காகத்தான் கவனமாக வீட்டுப் பாடம் செய்யும் வேளைகளில் தப்பித்தவறிக்கூட ஹால்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை அது அவசியம் டீ தேவைப்படும் நேரமாயிருந்தாலும் கூட. தலைவலிக்கு டீ நல்ல மருந்துதான். ஆனால் டீ தேவைப்படும் நினைவு வரும்போதெல்லாம் தலைவலியையும் உடன் அழைத்து வருவதைத்தான் தடுக்க முடிவதில்லை.

அப்பாவின் நினைவில் டீயை எந்த வகையில் சேர்ப்பது. மணிக்கொரு தடவை தேத்தண்ணி குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு தேத்தண்ணி வைக்கும்போதெல்லாம் கொஞ்சத்தை தனக்கும் ஊற்றிக் கொண்டு குடிப்பது அம்மாவின் வழக்கம். மீண்டும் அப்பாவைப் பற்றி நினைக்கையில் அம்மாவின் நினைவு.

யோசனைகளால் மாத்திரம் எதையும் நிரூபித்து சாதித்துவிட முடியாதென்பதால், சோம்பலாக எழுந்து குறிப்புகள் கணக்குகள் போட பயன்படுத்தும் கறுப்பு நிற டைரியை எடுத்து படுக்கையில் போட்டான். கடைசியாய் எழுதிய கணக்கின் பக்கத்தில் பேனா அடையாளத்திற்கு வைத்து மூடி வைத்திருந்ததால், விழுந்த வேகத்திற்கு பேனா இருந்த பக்கம் திறந்து கொண்டது.

கடைசியாக எழுதி இருந்த பக்கத்தில் ’நாவை மீனாக்கி சொல் தாகத்தில் தவிக்கும்’ குறிப்பை எழுதி வைத்திருந்தான். கவிதையாக மாற்ற வேண்டும். மெல்ல தன் நாவால் உதடுகளை ஈரப்படுத்த வெளிக்கொணராமல் உதட்டை மடித்து, மடித்தமேனிக்கே உதட்டை ஈரமாக்கிக்கொண்டான். நாவாய் என்றால் மரக்கல கப்பலை குறிக்கும் சொல் ஒன்றும் நினைவில் வந்துவிட, எழுதிய குறிப்பு மேலும் அர்த்தஞ் செறிவுள்ளதாக அவனுக்குத் தோன்றியது. தோன்றுவதையெல்லாம் எழுதுவதும், எழுதுவதையெல்லாம் வாசிப்பதுமாக காலம் நகர்வதே தனக்கு தன் மீதான ஒரே ஈடுபாடு என்பதை சபீர் நம்பினான். சேர மன்னன் நாவாயில் பயணம் செய்யும்போது வேறு எவரும் செய்யக்கூடாது என்று படித்த நினைவு வந்தது. அது போல தனக்கும் ஒரு சிந்தனை வரும்போது இன்னொன்று எட்டிப் பார்க்கக்கூடாது என்ற சட்டமிருந்தால் எத்தனை நன்றாக இருக்குமென்று எண்ணினான்.

சொந்த ஊரை விட்டு வந்து, கோவையில் பெரிய தொழிற்பேட்டையில் வாடகைக்கு லாரிகளை அனுப்பும், மேற்பார்வை செய்யும் பணியில் இருக்கிறான். லாரிகள் மூலம் இந்தியா முழுமையும் அனுப்ப வேண்டிய சரக்குகளை சரிபார்த்து தேவையான காகிதங்களை பெற்றுத் தருதல், லாரிகள் செல்லுமிடம் சரியானதுதானா என்று பரிசோதித்தல், செல்லும் ஓட்டுநரின் விவரங்கள் அடங்கிய குறிப்புகளை தனது மேலதிகாரிகளின் பார்வைக்கும், வண்டியை வாடகைக்கு எடுப்பவரின் பார்வைக்கும் மின் மடலாய் தட்டிவிடுதல் போன்ற வேலைகளைத் தாண்டி இன்னொரு முக்கிய வேலையையும் சபீர் பார்த்துக்கொண்டிருந்தான்.

லாரிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் எனப்படும் புவியின் தடங்காட்டி மூலமாய் லாரிகளின் நகர்வை பரிசோதித்தல். சிவப்பு புள்ளிகள் வரைந்துவைத்த கோடுகளின் மேல் மெல்ல மெல்ல நகர்தலை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் சபீருக்கு பிடித்தமான வேலை. நீல வண்ணக்கோடு பாதையைக் காட்டுவது. கணிணியில் இன்னொரு விசையை அழுத்தினால் பாதை சிவப்பு வண்ணமாக மாறி மீதம் செல்லவேண்டிய தொலைவைக் காட்டும். பாதைகள், மாற்றுப்பாதைகள், தொலைவு, நேரம், வேகம் இப்படி எல்லாவற்றையும் தனக்கு ஒதுக்கப்பட்ட கணிணியின் முன் அமர்ந்து படமாய் பார்த்துக் கொண்டிருத்தலில் வேறு சிந்தனை தோன்றுவதில்லை. ஒருவேளை ஒரே நேரத்தில் இதிலேயே பல விசயங்கள் முன் தோன்றி நிற்பதால் இருக்கலாம் என்று நினைத்தான். இப்படி குடும்பத்திற்கும் ஒரு அளவீடு இருப்பின் எத்தனை வசதிப்படும். எளிதாய் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்வோம் என்ற அடிப்படையில் எல்லா இயக்கங்களையும் நிரூபித்துவிடலாமே என்று தோன்றியது. தடங்காட்டி மரம். அவனுக்கு மெல்ல சிரிப்பு வந்தது.

தடங்காட்டியை உபயோகப்படுத்தலுக்கும் இவனுக்கு சில விதிகள் உள்ளன. அதில் முக்கியமான விதி அதிக நேரம் ஒரே இடத்தில் வாகனம் நிலை கொள்ளல் ஆகாது. உணவு, சாலை நெருக்கடி போன்ற சில விதிபாடுகள் இருப்பினும், தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் பெரும்பாலும் விபத்துக்குரிய அச்சமாகவே அவனுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகவே ஓட்டுநருக்கான ஓய்வு நேரம், உணவு இடைவேளை இல்லாத நேரத்தில், வாகனம் பத்து நிமிடங்களுக்கு மேல் நிலைகொண்டால், உடனே அந்த ஓட்டுநரை தொடர்பு கொண்டு நிலையை அறிய வேண்டும். விபத்து அல்லது அசம்பாவிதங்கள் ஏதும் நேர்ந்துவிட்டால் அதற்குரிய தற்காப்பு ஓட்டுநரைச் சேர்ந்தது. சரக்காய் ஏற்றுகிற பொருட்கள் திருடு போகாமல் காப்பது இன்னொரு விதி. இவ்விதமாய் நிர்ணயிக்கப்பட்ட விதிகளை தன் கண்காணிப்பின் கீழ் கொண்டிருத்தலாலேயே தடங்காட்டி வசம் பிரியங் கொண்டிருந்தான். விதிகளை மீறுபவர்களை இவனால் ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் இயக்கங்கள் கண்காணிக்கப்படுகின்றன என்ற ஒற்றை அச்சத்தை விதைப்பதன் மூலம் விதிகள் சரியாக பயன்படுத்தப்படுமென்று இவனது மேலாளர் நம்பினார்.

விபத்து ஏற்படுதல் மாத்திரமே இவனது தூக்கத்தை விரட்டி அடிப்பது. இதுவரை எந்த ஓட்டுநரும், உயிர் ஆபத்தில் சிக்கவில்லை என்றாலும், விபத்துக்குள்ளான வாகனத்தில் இருக்கும் பொருட்களை அதிக சேதாரமின்றி, இன்னொரு வாகனத்தை பயன்படுத்தி உடனடியாக அனுப்பி வைப்பதும், விபத்துக்கான காப்பீடு கோரலை முறைப்படுத்தலும், விபத்துக்குள்ளான வாகனத்தை திரும்ப தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தலுமாய் இவனது முதுகில் வலி சேரும். விலை உயர்ந்த பொருட்களை அனுப்பி வைப்பவர்கள் பொருட்களுக்கான இயக்க காப்பீட்டை முன்னரே செய்துவிடுவதால், அதைக் குறித்த அதிக பட்ச அக்கறை கொள்ளுவதில்லை. ஆனால் மறுமுறை தன்னுடைய நிறுவனம் வழியே அவர்களின் சரக்குகள் கொள்முதலுக்கோ விற்பனைக்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்காது என்பதால், இந்த விசயத்தில் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. விபத்து வழக்குகளை கண்காணிக்க தனி வழக்கறிஞர் இருந்தாலும், அவருக்குத் தேவையான தகவல்களை பகிர்வது சபீரின் தலைக்கு வரும் பணிகளில் ஒன்று.

வட இந்தியாவிலிருந்து வரும் ஓட்டுநர் ஒருவர், சபீரை ”சாப், சாப்” என்றுதான் விளிப்பார். அது சாரென்ற விளியா அல்லது பாம்பென்ற விளியா என்று இவனுக்கு புரிந்ததில்லை. குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்களும் யாரும் இவனுக்கு அருகில் இல்லை.

சபீர், பேனாவை எடுத்து டைரியில் ஒரு முக்கோணத்தை வரைந்தான். மேல் குடுமியில் இடத்தை காலியாக வைத்துவிட்டு, கீழே உள்ள இரண்டு கோணங்களின் வெளியில் இடப்புறம் அப்பா பேரையும், வலப்புறம் அம்மா பேரையும் எழுதினான். அப்பா பெயரை எது எதற்கு உபயோகப்படுத்தி இருக்கிறோம் என்ற யோசனை மேலோங்கவே, அதிகபட்சம் விண்ணப்பங்களில் தந்தை பெயர் என்ற இடத்தில் இட்டிருப்பது மாத்திரமே நினைவில் தேங்கி நின்றது. விடாப்பிடியான யோசனை பலன் அளிக்கவில்லை.

”யாரு புள்ள நீ” என்ற கேள்வி இதுவரை சபீரிடம் யாரும் கேட்டது இல்லை. எப்பொழுதுமே வெளியூரென்றால், உறவினர்களின் வீட்டிற்கு அப்பா அல்லது அம்மாவின் துணையுடன் தான் பயணம். திருமண விழாவென்றாலும் கூட தன்னை தனியே கூட்டத்தில் அனுப்பியது இல்லை. பத்திரமாய் பொத்தி பொத்தி வைத்து வளர்த்த பிள்ளை.

அப்பா அம்மா பெயரின் கீழே ஒரு கோடு வரைந்து இணைத்து அதன் கீழே தனது பெயரை எழுதினான். கொஞ்சம் தள்ளி மனைவியின் பெயர். மனைவி பெயருக்கும் தனது பெயருக்கும் இடையே வரைந்த கோடு நேராக இல்லாமல், இரவின் சிலுமிஷங்களுக்கான பாதையை நோக்கி கைகள் நகர்வது போல தோன்றியது சபீருக்கு.

வாரிசு மரத்தில் மனைவியின் குடும்பத்திற்கும் இடம் வேண்டுமென்ற முக்கியத்துவம் மனதில் தோன்ற, இன்னொரு முக்கோணம் சற்றே கோணலாக தள்ளி விழுந்தது. மாமனார், மாமியார் பெயரை மனதிற்குள் சொல்லி சரிபார்த்துக்கொண்டு சரியாக எழுதினான். மனைவி பெயருக்கு மேலே ஒரு கோடு அவளது குடும்ப முக்கோணத்திற்கு இழுத்துச் சென்றது. தடங்காட்டியில் நெடுஞ்சாண்கிடையாக கிடக்கும் பாதையாக சற்று நெளிந்து வளைந்துதான் சென்றது.

கவனமாக படுக்கையில் கிடக்கும் வசமாய் மனைவி பெயருக்கும் தனது பெயருக்கும் போதுமான இடைவெளி கிடைத்த நம்பிக்கை வந்தபின் இரண்டு பெயர்களையும் இணைத்து தலைகீழ் முக்கோணம் ஒன்றை வரைந்தான்.

”குடும்ப பாதுகாப்பு முக்கியம். இன்னொரு பிள்ளை இப்போது வேண்டாம்” என்று சொல்லியே ஏழு வருடங்களையும் சொச்ச மாசங்களையும் கடத்திவிட்டபின் முக்கோணம் இடாமல் நாற்கரமா இட முடியும். வாங்கும் சம்பளத்திற்கு விட்டேற்றியாய் செலவு இழுத்துவிடாத மனைவி அமைதல் வரம். செலவே இல்லாவிட்டாலும் சம்பளமாய் வந்த பணம் இருபத்தைந்து தேதிக்குள் தேவைகளை அறிந்து தன்னுடைய இருப்பை சுருக்கிக் கொள்கிறது. சேமிப்பு மூன்று சதவீதமென்று கணக்கு போட்டு சேமித்தால் அத்தியாவசியம் நாலரையாக மாறி வருகிறது. இதில் முக்கோணமே பெரிதுதான். முக்கோண முடிவில் பையன் பெயர்.

டெல்லி மன்னர்கள் அனைவருக்கும் வரலாறு இருக்கிறது. அக்பருக்கு முன்னால் ஹூமாயூன், பாபர். அக்பருக்கு பின்னால் ஜஹாங்கீர் வழியாக பகதூர் ஷா வரை கொஞ்சம் நினைவு இருக்கிறது. சரித்திரத்தில் எழுதப்பட்டவர்கள். நல்லதோ கெட்டதோ பெயரை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு வாழ்ந்திருக்கிறார்கள். தன்னுடைய பேரனுக்கு அல்லது பேத்திக்கு வகுப்பில் குடும்ப மரம் கேட்டால், நான்கு தலைமுறைக்கு தரவுகள் கைவசம் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டான். ஆனால் மனம் விடாப்பிடியாய் அப்பாவிடமும் அப்பாவின் அப்பாவிடமும் சென்று அமர்ந்து கொண்டது.

அப்பாவின் சின்ன வயதிலேயே தாத்தா இறந்துவிட்டாராம். பெரிதாக சொத்து சுகமில்லாத அந்த வயதில் வேலைக்கு சென்று சம்பாதித்து தன்னை நிலை நிறுத்தி, குடும்பத்தை நிமிர வைத்தவர். தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்து இரவும் பகலும் போராட்ட களத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். தந்தை இல்லாத பையன் என்ற எந்த பச்சாதாபத்தையும் தன்னை சூழ்ந்து கொள்ள அனுமதிக்காதவர். இதெல்லாம் தந்தையின் இறப்புக்கு வந்த விட்டுப்போன சொந்தமொன்று, பிலாக்கணமாக சொன்னதை வைத்து தெரிந்து கொண்டது. உரையாடிக்கொண்டே விளையாடும் பொழுதுகளில் கூட, தன்னுடைய தந்தையைப் பற்றி சொல்லாமல் இருந்தது சபீருக்கு இப்போது ஆச்சரியம் தந்தது. சபீருக்கும் தன் தந்தையைப் பற்றி மகனிடம் எதுவும் சொன்னதில்லை என்பதும் உறைத்தது.

இவனது பதினேழாவது வயதில் அப்பா இறக்கும்போது நோயுற்றிருந்தார். தினமும் ஒரு குறிப்பிட்ட மருந்தை அறுபது மில்லி அளவிற்கு ஊசி மூலம் ஏற்றிக்கொள்ள வேண்டும். அதிக விலை கொண்ட அந்த மருந்திற்கு தினமும் காசு கொடுத்து கட்டுப்படியாகாது என்று மருந்து கடைகாரரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி மொத்த கொள்முதல் விலையில் ஒரு மாதத்திற்கான பெட்டியை வாங்கி வைத்துவிட்டால், அவருக்கு தினமும் ஊசி போட்டுக்கொள்ள எந்த சிரமமும் இருக்காது. முன்பணமாகவே மருந்துபெட்டிக்கான காசை கடைகாரருக்கு கொடுத்துவிட்டதால், அவருக்கும் சிரமம் இல்லை.

தடங்காட்டி வழியே பயணம் செல்லும் வாகனத்தின் நேர விகிதாச்சாரம் சபீருக்கு அத்துப்படி. இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் பயணம் நகரும்போது, மிகுதி பயண தூர அளவைகள் கணிணி பக்கத்திலேயே காட்டிவிட்டாலும், தனக்கான ஒரு அளவீட்டை பொருத்தி வைத்து வண்டி இயக்கத்தின் ஓய்வு அடிப்படையில் பொருத்திப் பார்ப்பான். பெரும்பாலும் இவனது கணக்கு பொய்த்துப்போனதில்லை. மனித ஆயுளுக்கும் இப்படித்தான் போல. இயக்கத்தின் கணக்கு பொய்த்துப்போனதில்லை. பொழுதுக்கும் இரட்டை ஆயுளுக்கும் வாழ்ந்திருப்பார் போலும். தடங்காட்டியில் இயக்கம் நகரும் புள்ளியின் விதிகள் மீது ஓட்டுநர் கொண்ட நம்பிக்கை இன்னொரு பாகமாய் இது இருக்கக்கூடும்.

அப்பா அந்த அரிவாள் வெட்டை கழுத்தில் வாங்கி இறந்தபோது, மருந்துகடைகாரரிடம் முந்நூறு ரூபாய்க்கான மருந்து மீதம் இருந்தது. மறுநாள் தினப்பத்திரிக்கையில் இறந்த மூவரின் பெயர்களில் இரண்டாவதாக கொலையான சபீரின் அப்பா பெயர் மற்றும் வயதுடன் த/பெ என குறிப்பிடப்பட்டு அவனது தாத்தா பெயரும் வந்திருந்தது.

அன்றுதான் முதன் முறையாக அப்பாவின் அப்பா பெயரை சபீர் தெரிந்து கொண்டான்.

*

நன்றி : சென்ஷி

சென்ஷியின் சிறு விமர்சனங்கள்

திரைப்படங்களைத் தியேட்டரில் மட்டுமே பார்க்கும் சிறந்த வழக்கமுள்ளவரும், ’டோரண்ட் ஹட்டாவோ’ இயக்கத்தின் யுனிவர்ஸல் தலைவருமான தம்பி சென்ஷி , MeWe-ல் எழுதிய சிறு விமர்சனங்கள் இவை. வாசியுங்கள். நன்றி. – AB

1.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரின் திரைப்படங்களில் ‘புரியாத புதிருக்கு’ப் பின் பிடித்தமான இன்னொரு படம் பாறை. நாட்டமையெல்லாம் எண்ணிக்கையில் இருந்தாலும், பாறை திரைப்படத்தின் சில காட்சிகள், கதாபாத்திரங்கள் கவர்ந்தவை. எப்படியும் ஏதாவது ஒரு துணை இயக்குநரின் உதவி அல்லது கதை இருந்திருக்குமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக வடிவுக்கரசி கதாபாத்திரம் அட்டகாசமான வார்ப்பு. கைம்பெண்ணான தனது மருமகளை திட்டிக்கொண்டே இன்னொரு திருமணம் செய்து கொள்ள சொல்லும் பாத்திரம். விடுமுறையில் ஒரே ஒரு பாடலுக்காக பார்க்க ஆரம்பித்து, (கண்ணுக்குள் டிக் டிக் டிக் டிக்..) முழு படத்தையும் பார்த்து முடித்து, எண்ட் கிரெடிட்ஸில் (தமிழ்ல என்னாப்பா!!) கதை – லோகிததாஸ் என்று வருகிறது. அட என்று ஆச்சரியப்பட்டு, விக்கியை நோண்டினால், மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட படமாம் இது. மம்முட்டி, முகேஷ் நடிப்பில் ஜோஷி இயக்கிய மஹாயானம் என்ற திரைப்படத்தின் கதையாம். நேரங் கிடைக்கையில் மலையாளத்திலும் பாறையை தரிசித்துவிட வேண்டும். என்ன பிரச்சினையென்றால் மலையாளத்தில் ரம்யா, மீனா மாத்திரம் இருக்க மாட்டார்கள்!

**

2 & 3

ஏஜெண்ட்: ”இதுதான் திரைப்படத்தில் மிக முக்கியமான காட்சி”

“அந்த நாற்காலியில உக்கார்ந்திருக்கறவன் தான் கெய்சர்.. இவன்தான் இந்த எல்லா சம்பவங்களுக்கும் சூத்ரதாரி”

உதவி: “என்னாது…!!! அப்படியா!”

ஏஜெண்ட்: “ஆமாம். நான் கூட உன்னை மாதிரிதான் முதல் தடவை இந்த திரைப்படத்தை பார்த்தப்ப ஆச்சரியப்பட்டேன். ஆனா இரண்டாம் தடவை பார்த்தப்ப இவன் தான் வில்லன்னு படத்தோட முதல் காட்சியிலயே கண்டுபிடிச்சிட்டேன்.”

கிட்டத்தட்ட படம் முழுக்க இதே போன்ற காமெடி அட்டூழியம்தான். அதிலும் நேரத்திற்கு ஒன்றாக தனது நடிப்பைக் காட்டியிருக்கும் நாயகன் நவீன் போலெஷெட்டி படத்தின் முதுகெலும்பு. ரயில்வே தண்டவாளங்களில் இறக்கும் அடையாளமற்றவர்களின் பிணங்களைப் பற்றி துப்பறிய ஆரம்பித்து, அந்த விசாரணை மூன்று கொடூரமான கொலைகளின் பின்னணிக்குள் நாயகனை குற்றவாளியாக மாற்ற, அதிலிருந்து தப்பித்து, உண்மை குற்றவாளிகளையும், காரணத்தையும் கண்டுபிடிப்பதே கதை. எந்த லாஜிக்கும் எதிர்பார்த்திராதவர்களுக்காகவே- அருமையான பொழுதுபோக்கு சித்திரம் ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா.

**

சித்திரம் பேசுதடி 2

தெலுங்கில் கேர் ஆஃப் கஞ்சிரபாலம், அவ், வானம் படங்களை பார்க்கும்போதெல்லாம் தமிழில் இப்படி ஒரு படம் கூட வரவில்லையே என்ற எண்ணம் தலைதூக்கும். அதை கொஞ்சமேனும் ஈடுகட்டும்விதமாய் விடுப்பில் பார்த்த திரைப்படம்தான் சித்திரம் பேசுதடி 2. ஐந்தாறு கதைகள், அதில் வாழும் ஒவ்வொருவரும் அவர்களுக்கே தெரியாமல் இன்னொருவருக்கு உதவியாகவோ தொல்லையாகவோ இருக்கின்றனர். இரண்டு நாட்களில் நடக்கும் கதைதான். ஆனால் அந்த இரண்டு நாட்களுக்குள், நடக்கும் அனைத்து கதைகளையும் கொஞ்சம் கூட குழப்பமில்லாமல், முன்கதை சுருக்கமென்று வளவளக்காமல், நேரடியாக சாதாரண திரைப்பார்வையாளர்களுக்கு விளங்கும் வகையில் கொடுத்ததுதான் சிறப்பு. விழித்திரு திரைப்படமும் இதேவகைதான் எனினும், அதைவிட சி.பே.2 திரைக்கதையாக்கத்தில் மேன்மை கொண்டுள்ளது. இசை மாத்திரம் சற்று உதவியிருக்கலாம். தலைப்பையும் மாற்றி இருக்கலாம். முரண் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் ராஜன் மாதவ்வின் இரண்டாம் படம் இது. பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ரவீந்திரனின் புதல்வராம் இவர்.

*

போனஸ் : Black Mirror Webisodes – Sen She  (FB)

ப்ளாக் மிரர் தொடரின் பாதிப்பில் நான்கு வெப் எபிசோட்கள் வெளியாகியுள்ளன என்று தெரிந்ததும், அதிகம் தேட வைக்காமல் யூ டியுபிலேயே ஆங்கில சப்டைட்டிலுடன் நல்ல படப்பதிவுடன் காணக்கிடைத்தது. அதிகபட்சம் இருபதுநிமிட படக்காட்சிகள் கொண்ட எபிசோட்கள்.

எதிரி நாட்டு படையில் அடிபட்டு தப்பித்து, அநாதரவாக ஒரே ஒரு செவிலியுடன் இருக்கும் மருத்துவமனைக்கு வந்து சேரும் வீரனின் முடிவு 69.90. தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை தீவிரவாதியாக இருக்கும் வாய்ப்பு அதிகமென்று நவீன மருத்துவத்தின் மூலம் கண்டறியும் இளம் தம்பதியினரைக் குறித்த 1%. சோஷியல் மீடியாக்களில் கிடைக்கும் வரவேற்பு, நட்பு, பிரிவு, ஆற்றாமை, புழுதி வாரி தூற்றல் போன்றவற்றின் தொகுப்பாய் The Breakup. மனைவியின் மனதறிந்து நடந்துகொள்ள ஒரு ஆப்(App)பை தனக்குள் நிறுவிக்கொள்ளும் கணவனைப் பற்றிய The Sum of Happiness. எல்லாக் கதைகளும் திடுக்கிடும் முடிவுகளைக் கொண்டிருப்பதும், அம்முடிவுகள் நம் மனதிற்கு சாதகமானதாக இருப்பதில்லை என்பதுவுமே எப்போதும் போல கருப்புத்திரை கொண்ட சாத்தான்களாய் நம்மைச் சுற்றி ஆட்கொண்டிருக்கும் தொழில் நுட்பத்திற்கு நம்மை ஒப்படைத்துவிட்டதன் அறிகுறி.

ஆச்சரியமாய், இந்த வெப் எபிசோட்களுக்கு பிறகு பார்த்த திரைப்படம் Tales of the Unusual. ஒரு மழைநாளில் புகைவண்டி நிலையத்தில் காத்திருக்கும் சிலரிடம் ஒரு பயணி, கதைகளை கூறுவதாக ஆரம்பிக்கும், இரண்டாயிரத்தில் வெளிவந்த ஆந்தாலஜி திரைப்படம். ஒவ்வொரு பகுதியும், திகில்,மர்மம், நகைச்சுவை என்று இருந்தாலும், முடிவு பகுதியாய் வரும் The Marriage Simulator அட்டகாசம். திருப்பம், திருப்பத்திற்குள் திருப்பம், திரும்ப ஒரு முடிவு என அழகான காதலை நவீன தொழில்நுட்பம் என்ன செய்துவிட முடியுமென்று காட்டி இருக்கிறார்கள்.

நல்ல திரைப்படத்தை காண விரும்புவோர் தவறாமல் அரை மணி நேரம் கொண்ட இந்த பகுதியை மாத்திரமேனும் பார்த்துவிடுங்கள். யூடியுபிலும் மூன்று பாகமாய் ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது. ப்ளாக் மிரர் கதை வகையறாக்களுக்கு தூரத்து சொந்தம் என்கிற உணர்வு ஏற்படும்.

*

நன்றி : (அறியப்பட்ட இலக்கியவாதி) சென்ஷி

குட்டிக்கரணம் – சென்ஷி

‘ஒட்டக மனிதர்கள்’ சிறுகதைத் தொகுதியில் இருந்து நன்றியுடன் போடுகிறேன் (விரைவில் pdf கிடைக்கும்!) – AB
*

என்னைக் கண்டால் எல்லோருக்கும் இளக்காரம் தான் போலிருக்கிறது. அகலமான கடைவீதியில் இத்தனை கூட்ட நெரிசலில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, மனைவியின் பழுதான செல்போனை சரிபார்க்க வந்தவனின் தோளில் இந்த வேதாளத்தை அமர வைத்திருக்கிறானே இந்த கடவுள். இவனை என்னவென்று சொல்ல! எல்லாம் என் நேரந்தான் என நொந்து கொள்ளதான் முடியும்.

யாரேனும் அவசரமாக, ஆறும் ஆறும் எத்தனை என்று கேட்டாலே, படபடப்பாக மூன்று விடைகள் கூறி, மூன்றுமே தவறாக சொல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கும் என்னை இப்படி நிறுத்தி வைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்ய.

சிறுவயதிலிருந்தே எனக்கு பொய் சரியாக பேசவராது. சிறுவயதில் ஏதேனும் குறும்பு செய்துவிட்டு, அதை மறைக்கத் தெரியாமல் சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டு விடுவது என் வழக்கம். அசடு என்று அதற்கு பட்டப்பெயரும் கூட கொடுத்திருந்தார்கள். ஏதேனும் இக்கட்டான சமயத்தில் பொய் சொல்லி விடலாம் என்று முயற்சித்தாலும் இந்த பாழாய்ப்போன சிரிப்பு வந்து கெடுத்துவிடுகிறது. எதிரில் நிற்பவர்களை பேச்சில் கவர்ந்து ஏமாற்றுவது ஒரு திறமையான கலை. தொழில்நுட்பத்தின் உச்சம். அது எனக்கு கைகூடாதது குறித்து எனக்கு எந்தவித வருத்தமும் இருந்ததில்லை . ஆனால் தற்சமயம் ஒரு பொய். திறமையாய் ஒரே ஒரு பொய் சொல்லி தப்பித்துவிட வேண்டும். இல்லையென்றால் சுற்றியிருப்போரில் எனக்குத் தெரிந்தவர் எவரேனும் இதை பார்த்துவிட்டு வீட்டில் சொல்லிவிட்டால் அவ்வளவுதான். இன்றைய இரவு சமையல் என்னைப்பற்றியதாகத்தான் இருக்கும். நல்லவேளையாக வீடு கடைவீதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ளது. முன்பு தூரம் காரணமாக சலித்துக்கொண்டிருந்தவனுக்கு இன்று சற்று நிம்மதியாக இருந்தது.

நமது மகாஜனங்கள் கூட்டமாய் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் வித்தை என்னவென்று தெரிந்துகொள்ள கூட்டத்தில் ஒவ்வொரு ஆளாய் தோளால் நகர்த்தி ஒதுக்கி விட்டு முன்னுக்கு வந்தால், முன்னால் நான் மாத்திரமே நின்று கொண்டிருந்தேன். மொத்தமே இரண்டு வரிசை கூட்டமிருந்திருக்காது போல. பின்னாலிருந்து எக்கிப் பார்த்திருந்தாலே, நடுவே என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்கும். அதைவிட்டுவிட்டு. சரி விடுங்கள். இதை சொன்னால் தலையை சுற்றி மூக்கைத் தொடுவது போலாகிவிடும்.

டப.. டப.. டப.. என்று சுற்றிலும் சத்தம் கேட்டது. சற்று கஷ்டப்பட்டால் என் முட்டிக்காலைத் தொட்டுவிடும் உயரம் கொண்டவன், தன் கழுத்தில் கிடந்த அவன் அளவுக்காக செய்து வைத்தாற் போலிருந்த, அந்த மேளத்தை அடித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய தலைவன் கையில் வைத்திருந்த கயிறை சுற்றிக்கொண்டே கூட்டத்தைப் பார்த்து கரகோஷத்திற்கு வேண்டி சலாம் வரிசைக்காக குதித்து கால் தரையில் படாமலேயே காற்றில் இரண்டு கரணங்கள் அடித்தான். எனக்கு வயிறை கலக்கியது. தடாலடியாக இந்த பெர்ர்ய மன்சனும் சலாம் போடுவாரு சாம்யோவ் என்று கத்திவிடக்கூடாதென்று மூணு கண் ஆண்டவனை வேண்டிக்கொண்டேன்.

தைரியத்துடன் கூட்டம் விட்டு நகர்ந்து விடலாம்தான். ஆனால் அத்தனை சாமர்த்தியம் எனக்கு ஏது. பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். பெரிதாய் ஒன்றுமில்லை என் தோள் மேல் வித்தை காட்டுபவனின் குரங்கு ஏறிக்கொண்டது. அதை இறக்கிவிட வேண்டும் அதற்குத்தான் இந்த பிரம்மபிரயத்தனம். பல்லி மேல் விழுந்த தோஷம் பற்றியெல்லாம் காலண்டர் படித்து எனக்கு நல்ல மனப்பாடம். கறுப்பு பூனை இடமிருந்து வலம் அல்லது வலமிருந்து இடம் நகர்தலில் வெளியே செல்லாது உள்ளே உட்கார்தல் நியமம். வெளியிலிருந்து உள் நுழைகையில் இப்படியானால், ஒரு தெரு சுற்றிவிட்டு வந்துவிடுவேன். வாசல் விட்டு நகர்கையில் தலை வாயிற்படியில் முட்டினால் தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லாம் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் குரங்குக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

வீட்டில் அவசர வேலை இருக்குது என்று பொய் சொல்லிவிடலாம்தான். ஆமாம். பொய்தான். வீட்டில் எனக்கு இப்போது எந்த வேலையும் இல்லை. இன்று விடுமுறை தினம். குழந்தைகள் இருப்பதால் தொலைக்காட்சியின் அருகில் கூட நம்மை அமர விட மாட்டார்கள். அவர்களுக்கான நேரம் இது. சமையலறையில் மதிய சாப்பாட்டிற்கு மனைவி தயார் செய்து கொண்டிருப்பாள். அவளுக்கு தேவையானதையும் நேற்றே வாங்கிக் கொடுத்துவிட்டேன். காலை காப்பி குடித்துவிட்டு, அவளது சப்தம் குறைவாக கேட்கும் கைபேசியை சரி செய்ய கொண்டு வந்ததுதான் இங்கு பிரச்சினையின் ஆரம்பமாக இருக்கக்கூடும்.

நல்லவேளையாக வெயில் அதிகம் இல்லை. உடல் சூடு, பித்தம் ஏறிக்கிடப்பதால் காலை காப்பிக்கு பதிலாக விடுமுறைதானே என்று, கஷ்ட கஷாயத்தை அவளது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு குடிக்க வைத்துவிட்டாள். அரை லிட்டர் கஷாயத்தை குடித்துவிட்டு கசப்பிற்கு வெல்லத்தை அவளுக்கு தெரியாமல் நாக்கில் தொட்டுக் கொண்டேன்.

குழந்தைகளின் விளையாட்டில் கூட எனக்கு சரியாக விளையாடத் தெரியவில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் மகளிடம், தந்தை ஒரு குரங்கின் இஷ்டபிடியில் கட்டுண்டு இருப்பதை பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும். அய்யோ என் ஃபிரண்ட்ஸெல்லாம் என்னை கேலி செய் வாங்க என்று தேம்புவாள். அப்பன் கஷ்டம் அவளுக்கெங்கே தெரியப்போகிறது. கூட்டத்தை திரும்பிப் பார்க்கலாமென்றால் கழுத்தை திரும்பும்போது குரங்கு தலைமேல் வைத்திருக்கும் கைகளால் கீறிவிடுமோ என்று பயத்தால் திரும்பாமலே நின்று கொண்டிருக்கிறேன்.

ஆனால் பயந்ததுபோல அல்ல. ஒரு குழந்தை போலதான் குரங்கு என் மேல் தாவி ஏறியுள்ளது. கடைசியாய் என்னை தூக்க நச்சரித்த குழந்தை யாருடையது என்று யோசித்துப் பார்க்கிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு உடன் வேலை செய்யும் செல்வராஜின் குழந்தையை பார்க்க புது வீட்டிற்கு போன போது, ஆசையாய் கையில் வாங்கியது நினைவுக்கு வருகிறது. கைக்குழந்தை என்பதால் எந்த சேட்டையும் இல்லாமல் அமைதியாக வந்துவிட்டது. பிடித்த வெள்ளைத்துண்டு பதறாமல் திரும்ப கொடுக்கும் வரை எனக்குதான் பதற்றம் கூடியிருந்தது. வேறு எந்த குழந்தையும் என்னிடம் ஓடி வந்து ஏறியதெல்லாம் இல்லை. என் குழந்தைகளையே ‘அப்பா… பார்த்தா திட்டுவார். கேட்டா உதைப்பார்’ என்று சகதர்மிணி சொல்லி சொல்லி சொந்த பிள்ளை நெருக்கமும் சற்று தொலைவில்தான் இருக்கிறது. அவர்களுக்கு தேவையானதையும் அம்மாவிடம் கேட்டு வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்திருப்பதால் அப்பாவுக்கு எந்த தொல்லையும் தருவதில்லை என்ற நன்மதியுடன் வளர்கிறார்கள்.

குரங்கை கொண்டு வந்தவன் பாம்பையோ கீரியையோ கொண்டு வந்திருந்து அது என் மேல் தாவியிருந்தால் என் நிலை என்ன ஆவது. சிலர் கரடியைக் கட்டிக்கொண்டுபோகும் காட்சியையும் கண்டிருக்கிறேன். அல்லது யானை, ஒட்டகம். தாங்கக்கூடிய உடலா என்னுடையது.

கண்களை மேலேயுயர்த்தி குரங்கை பார்க்க ஆசைப்பட்டேன். பின் தோளில் அதன் வால் நீண்டு ஜடைபோல முதுகில் கிடக்கும் போல. அவ்வப்போது ஆட்டி ஆட்டி முதுகில் கூச்சத்தை உண்டாக்கியது. கல்யாணமான புதிதில் பெரிய பின்னலைப் போட்டு வந்த மனைவியின் நினைவு. நாளாக ஆக ஜடை சிறுத்துபோன பின்புதான் தெரியவந்தது. அத்தனை நீளம் சவுரிக்குதான் என்று. மாட்டு வால் மாதிரி பெருசா மசுரை வளர்த்து கட்டி தெருவையா கூட்டப்போறா என்று எனக்குத் தெரிந்த பழமொழி கொண்டு என்னை நானே தேற்றிக் கொண்டேன். இருப்பினும் பெரிய பின்னல் இன்னமும் ஒரு கவர்ச்சிதான். மனைவியின் முன்னால்தான் தைரியமாக சொல்லிக் கொள்ள முடியாது.

கூட்டத்திடமிருந்து கைதட்டல் வந்தது. நான் எந்த வித்தையும் காட்டாமல் கை தட்டுகிறார்களே என்று முகத்தைத் திருப்பினால், அந்த முட்டிக்கால் பொடிசுக்கு தங்கை போல ஒருத்தியை மூங்கில் கம்பில் மேலே ஏற்றி, மூங்கில் கம்பை தன் மூக்கின் மேல் வைத்துக் கொண்டிருந்தான். இரண்டு விரற்கடை இடுப்பு தெரிகிற சிறிய சட்டையும் முட்டி மேல் வரை வரும் பூப்போட்ட பாவாடையும் போட்டுக்கொண்டு கீழே நடனமாடிக்கொண்டிருந்தவள் எப்படி மேலே ஏறினாளென்று தெரியவில்லை. எந்த வித்தையையும் இந்த குரங்கு காண வைக்காமல் கெடுத்துவிடும் போலிருக்கிறது. அந்த சிறுமி மூங்கில் கம்பின் மேலே விமானம் போல கைகளை விரித்து அந்தரத்தில் பறப்பது போல சாகசம் காட்டினாள். நேரிடையான சூரிய வெளிச்சம் கண்ணை உறுத்தாமல் காணக்கூடிய அளவு போகும் விமானம்.

மூங்கில் கம்பை திடுமென கீழே விட்டதும், விமானம் சட்டென்று கீழே தலைவனின் கைகளில் வந்து சேர்ந்தது. இதைப்போலவே இன்னும் இரண்டு மூன்று முறை கைதட்டல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த குரங்கை வைத்து எப்போது வித்தை ஆரம்பிப்பார்கள். இதை இழுத்து போனால் போதுமென்று இருக்கிறது . தலைவனை பார்த்து ஒரு கண்ணசைவில் குரங்கை எடுத்துவிட சொல்லி மன்றாடிவிடவேண்டியதுதான் என்று எண்ணினேன். அதற்குள் அவனே, ‘வா ராஜா. வா.. அடுத்த ஷோ இருக்கு’ என்று தலைமேலிருந்து உதிர்ந்த பூவை எடுப்பது போல குரங்கை எடுத்துவிட்டான்.

அவசரமாக ஏறி விட்டதில் குரங்கின் முகத்தையும் உருவத்தையும் முன்பு சரிவர பார்க்கவில்லை. இப்போது பார்க்க முடிந்தது. குட்டிக் குரங்குதான். மேலே ஏறிய கனத்தை வைத்து அனுமானித்தால் அதிகபட்சம் இரண்டு கிலோவுக்கு மிகாது. என்னால் மனிதர்களையே சரியாக எடை போட முடிவதில்லை. ரகவாரியாக பிரித்துவைக்கும் அரிசி போல ஒவ்வொருவரும் ஒரு ரகம். இதில் குரங்குக்கு எங்கே. தோள் வலி ஏதும் இருக்கிறதா என்று தோளை அசைத்துப் பார்த்தேன். அப்படி எதுவும் தெரியவில்லை .

கூட்டத்தின் மையத்திலிருந்து நகர்ந்து கூட்டத்தாருடன் இணைந்து நின்றேன். கூட்டம் சட்டென்று சற்று வழிவிட்டு விலகி நின்றது. குரங்கைத் தூக்கிய வனாயிற்றே. அந்த ஜம்பத்திலிருந்தே முகவாயை கொஞ்சம் மேலாக்கி வித்தையை பார்க்க ஆரம்பித்தேன். போகும்போது குழுவுக்கு ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் போட்டுவிட வேண்டியதுதான் என்றும் தோன்றியது. இத்தனை நேரம் என் மேல் ஒட்டியிருந்துவிட்டு குட்டி குரங்கு அதன் தலைவனின் முகத்தைப் பார்க்க ஆரம்பித்தது. எனக்கோ எனது உறுப்பையே அறுத்துக்கொண்டு போய் அவன் முன் நிற்பது போல் இருந்தது. சில நொடிகள் நானும் குரங்கும் வேறல்ல என்ற எண்ணம் தான் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்தது. என்ன வேண்டுதல் கேட்டோ இங்கு அலைகிறது இச்சென்மம். எல்லாவற்றையும் துறந்து இதனால் ஓடித் தப்பிக்க இயலாதா? குறைந்த பட்சம் அருகிலிருக்கும் உயர்ந்த மரத்தில் ஏறிவிட்டால் கூட இவனை பிடிக்க முடியுமா குழுவால்?

மிகவும் சிறிய குரங்கு. உருவம் சிறுத்த அனுமார். இதை வைத்து என்ன வித்தைக் காட்டுவான். மூங்கில் மேல் ஏற வைப்பானோ, தீயை வளர்த்து தாண்ட வைப்பானோ? குட்டிகரணம் அடிக்க தெரியுமா இக்குரங்கிற்கு. எங்கு வைத்து வித்தை பழக்கியிருப்பான். இதன் தாய் இதை தேடிக்கொண்டிருக்குமா? அனுமனின் அம்சம் ராவணனுக்கு சவால் விட்ட வம்சம். வாலைச்சுருட்டி வித்தை காட்டி அதன் மேல் அமர்ந்ததைப் போல அமர்ந்திருந்தது என் மேல். ஒரு அரை மணி நேரத்திற்கு ராஜ வம்ச பிரதிநிதியாகியிருந்தவன். ஜகஜ்ஜோதியாக என்னை தன் இருக்கையாக்கிக் கொண்டவன். சினிமாவில் குரங்கின் சாகசங்களெல்லாம் நினைவில் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய நாய்க்கு கட்டும் சிவப்பு நிற பட்டை வார் ஒன்றை குரங்கின் கழுத்தில் கட்டி, அதன் மறுமுனையை தன் கையில் எடுத்துக்கொண்டு, குரங்கின் கையில் ஒரு அலுமினிய பாத்திரத்தைக் கொடுத்தான். குரங்கும் தன் வித்தை எதுவென தெரிந்துவிட்டதுபோல, கூட்டத்தில் ஒவ்வொருவர் முன்னும் நின்று காசுக்காக தட்டேந்திக் கொண்டு நின்றது.

*

நன்றி : சென்ஷி

இலக்கிய ஆ(ளு)மை விருது!

நாற்பது வருடங்களாக மெல்ல நகர்ந்துகொண்டிருந்த நாகூர் ஆமையைத்  தன் காரில் தூக்கிப்போட்டு வெற்றிக்கோட்டைத் தாண்டவைத்த சகோதரர் ஆசிப்மீரான் , தன் முகநூலில் எழுதியது :

“அண்ணே!! உங்களை இலக்கிய ஆளுமையா தேர்ந்தெடுத்து விருது கொடுக்கப் போறாங்க”

“எனக்கெதுக்கு ஆசிப்பு விருதெல்லாம்? யாராவது கேக்குறவங்களுக்குக் கொடுக்கச் சொல்லுங்க” என்று வழக்கம்போல கிண்டல் செய்து ஒதுங்கிக் கொள்ள நினைத்த ஆபிதின் அண்ணனைப் பிடித்து இழுத்து வந்து ஒருவகையாக விருது வாங்க வைத்து விட்டோம்.

அவனவன் விருதுக்கு அலைகையில் இவரை விருது வாங்கச் சம்மதிக்க வைப்பதற்கே நாற்பது நிமிடம் பேச வேண்டியிருந்தது.

விருதை வழங்கிய அபுதாபி மக்கள் மன்றத்திற்கும், ஆபிதீன் அண்ணனுக்கான காணொளியை உருவாக்கிய Jazeela Banuவுக்கும் அண்ணனைப்பற்றிய குறிப்புகள் தந்த Sen She பக்கி சாருக்கும், அண்ணனின் அரிய புகைப்படங்களைக் கடத்தித்தந்த Mcsyaazini Yaazini க்கும் நயம் முஸ்லிம்கள் கூட்டத்தைச் சேர்ந்த மஜீத் அண்ணன், சாதிக் அண்ணனுக்கும், அமீரக வாசகர் குழுமத்திற்கும் நன்றி!!

புகைப்படங்கள் உதவி : சுப்ஹான் பீர் முஹம்மது

*

அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்திற்கும் அமீரக வாசகர் குழுமத்திற்கும் நன்றி. தம்பி ஃபிர்தௌஸ் பாஷாவுக்கு என் அன்பு. விருது தனக்கு கிடைத்த மனநிலையில் , ‘அவனுடைய வாழைப்பழத்தின் ருசியே அலாதிதான்.. நகுலனுக்கு ஒரு சுசீலா😘 என்ட தம்பி ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா.. ‘ என்று கூத்தாடியிருந்தார் மதிப்பிற்குரிய என்  ஹனிபாக்கா . வாழ்த்திய எல்லோருக்கும் , குறிப்பாக நண்பர்கள் தாஜ்,  நாகூர் ரூமி, அப்துல் கையூம், தம்பி ஜாஃபர் சாதிக் ஆகியோருக்கும் என் நன்றி.  – ஆபிதீன்

*

‘ஆயிரம் PDF வாங்கிய அபூர்வ’  சென்ஷி எழுதிப் பகிர்ந்த காணொளி :

எழுத்தாளர் ஆபிதீன் எழுத்துகளை வாசித்தவர்களால் அவரது அன்பெனும் மாயச்சூழல் குறித்த வர்ணிப்பை உணர்ந்து கொள்ள இயலும். அமீரகத்தின் இலக்கிய ஆளுமை விருதை அபுதாபி மக்கள் மன்றத்தின் சார்பில் எழுத்தாளர் ஆபிதீன் அண்ணன் பெற்றுக்கொண்டபொழுது நிகழ்வில் எழுத்தாளர் பற்றி வெளியிடப்பட்ட காணொளி. குரல் தந்த ஆசிப் அண்ணாச்சிக்கும், குறைந்த நேரத்தில் தன்னுடைய பணிசூழலுக்கு இடையே புகைப்படங்களை வடிவமைத்துத் தந்த ஜெசிலா டீச்சருக்கும் என் மனமார்ந்த நன்றி!. தங்களின் மேலான பார்வைக்கு..

நன்றி : கானல் அமீரகம்

« Older entries