வான்கோவின் கடிதங்கள் – சுகுமாரன்

நீ ஓவியர்களை மிகவும் நேசிக்கிறாய். நான் சொல்லட்டுமா, மனிதர்களை நேசிப்பதைவிட மகத்தான ஒரு கலையும் இல்லை. – வான்கோ (1888)

*

‘அன்புள்ள வின்சென்ட்’ என்ற தலைப்பில் எழுத்தாள நண்பர் சுகுமாரன் – ‘Lust for Life’ புத்தகத்தைப் படித்த நெகிழ்ச்சி மாறாமல் – எழுதிய கட்டுரையிலிருந்து இந்தப் பதிவு. 2003ல் வெளியான சுகுமாரனின் ‘திசைகளும் தடங்களும்’ தொகுப்பில் இது இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த, நான் அடிக்கடி படிக்கும் கட்டுரை . ‘சுயநலச் சிந்தனைகள்தான் துக்கத்துக்குக் காரணம். மகத்தான இலட்சியங்களைக்  கைக்கொண்டு சுயநலமின்றி செயல்பட்டால் துக்கத்திலிருந்து விடுபடலாம்’ போன்ற வைர வரிகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம் – துக்கம் சற்றும் குறையாவிட்டாலும். ‘மனப்புயலின் வேகத்தால் சிதைந்த’ வான்கோ, தன்னை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சகோதரனின் தோளில் சாய்ந்து உயிரை விட்டதை,  ‘ காலத்தின் நிறமற்ற திரை மீது ஒரு சிவப்பு நிற ஓவியம் பதிந்தது’ என்று குறிப்பிடும்  (இந்த வரியின் நிறம் என்னவாக இருக்கும்?) கவிஞர் சுகுமாரன். என்னை கலங்கவைத்த இந்த கட்டுரையை முழுதாக பதிவிட ஆசை. முடியவில்லை. ஆதிமூலத்தின் காந்தியைப் பார்த்தே அலறி ஓடிய பாய்மார்களும் தாய்மார்களும் அடிக்க வருகிறார்கள். எனவே , ‘பைத்தியக்காரன்’ வான்கோ தன் பிரிய சகோதரன் தியோவுக்கு எழுதிய , சில கடிதங்களின் ஒரிரு பத்திகளை மட்டும் இப்போது இடுகிறேன்.

‘வான்கோ தனது பத்தொன்பதாம் வயதிலிருந்து சகோதரன் தியோவுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தார். முப்பத்தி ஏழாம் வயதில் இறக்கும் வரை, ஏறத்தாழ இருபது வருடங்கள் இந்தத் தொடர்பு தடைபடாமல் நீண்டிருந்தது. அநேகமாக வாழ்க்கையின் எல்லாத் தருணங்களையும், உணர்ச்சிகளையும், தனது மனதின் பாதிக்குச் சொல்வது போன்ற உண்மையுணர்வுடன் எழுதப்பட்டவை அவை. சிறுவயதில் இணைந்து தொடர்ந்து சகோதரன், வான்கோ என்ற கலைஞனின் நிரந்தர அங்கீகரிப்பாளன், நண்பன், புரவலன் என்ற நிலைகளை மீறித் தனது மனசாட்சியின் பாதுகாவலனாகத் தியோவை ஒப்புக்கொண்டிருக்கிறார் வான்கோ. அன்றாட வாழ்க்கையின் செயல்கள், கலை பற்றிய கனவுகள், திட்டங்கள், பிறரின் கலை பற்றிய கருத்துக்கள், பருவ காலங்கள், இயற்கைக் காட்சிகள், காதல், ஆசைகள், வேதனைகள், சந்தோஷங்கள், தோல்விகள், மனிதர்கள் என்று எல்லாவற்றைப் பற்றியும் எழுதப்பட்ட இக்கடிதங்களின் பரப்பும் உயிர்த்துடிப்பும் எழுத்தமைதியும் இலக்கியக் குணம் கொண்டவை. ஓர் அர்த்தத்தில் இவை வான்கோவின் நாட்குறிப்புகள். விரிந்த பார்வையில் வின்சென்ட் வான்கோ தன்னையறியாமல் எழுதி வைத்த சுயசரிதை’ என்கிறார் சுகுமாரன்.

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு உங்களுக்கு பிடிக்காவிட்டால் ஒரு காதை அறுத்துக் கொள்வேன்!

*

‘ஹேகின் சாலைகளில் இரண்டு சகோதரர்கள் நடந்து போகிறார்கள். ஒருவன் சொல்கிறான் : எனக்கு முதலில் வேண்டியது பொருளாதர பலம். வியாபாரம் தொடங்க வேண்டும். என்னால் ஓவியனாக முடியுமென்று தோன்றவில்லை. மற்றவன் : நான் நாயைப் போல ஆகிக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் அசுத்தமானவனாகவும் முரட்டுப் பிடிவாதமுள்ளவனாகவும் ஆகிவிடுவேன். வறுமைதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் என்று இப்போதே தெரிகிறது. இருந்தாலும் நான் ஓவியனாகத்தான் இருப்பேன்.’

*

‘இந்த உலகத்துக்கு நான் ஒருவகையில் கடன்பட்டிருக்கிறேன், கடமைப்பட்டிருக்கிறேன் என்று நான் உணர்ந்தால்தான் அது என்னை பொருட்டாக மதிக்கும். ஏனெனில் முப்பது வருடங்கள் இந்த பூமி மீது நடமாடியிருக்கிறேன். அதற்கு நன்றியாக சில ஓவியங்களையும் படங்களையும் நினைவுப் பரிசாக விட்டுச் செல்ல விரும்புகிறேன். கலையின் எந்த இயல்பையாவது திருப்திப்படுத்துவதற்காக அல்ல. உண்மையான மனித உணர்வை வெளிப்படுத்துவதற்காக.’

*

காகின் வந்திருக்கிறான். அவனுடைய ஆரோக்கியம் தேறியிருக்கிறது. நீ அவனுக்காக செய்த விற்பனை ஏற்பாடுகள் பற்றி அவனுக்கு மிகவும் திருப்தி. அவசியமான பொருட்கள் வாங்குவதற்கான பணம் அதன் மூலம் கிடைக்கும். அந்தச் சுமை உன் தோளை விட்டு இறங்கியதே. மனிதன் என்ற முறையில் காகின் எவ்வளவோ நல்லவன். நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் அநேக காரியங்களைச் செய்ய முடியும். காகின் இங்கிருந்து ஏராளமான ஓவியம் தீட்டுவான். நானும்தான்.

நான் நோயாளியாகப் போகிறேனோ என்று சிறிதுகாலம் முன்புவரை தோன்றியது. காகின் வருகைக்குப் பிறகு அது மாறியிருக்கிறது. பண நெருக்கடி, அதனால் உனக்கு ஏற்படக்கூடிய சிரமம் – இவற்றை யோசித்துத்தான் என் நோய் அதிகரித்தது. இனி அதுபோன்ற துன்பங்கள் மாறிவிடும்.

ஆறு மாதங்களுக்குள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை உருவாக்க முடியும். அது நிரந்தரமானதாக இருக்கும். இங்கே வருகிற ஓவியர்கள் அதைத் தங்குமிடமாகக் கொள்ளலாம். என்னுடைய ஓவியமும் காகினுடைய ஓவியமும் ஒவ்வொரு மாதமும் உனக்குக் கிடைக்கும். உன் நிறுவனத்துக்கு வெளியே எங்கள் ஓவியங்களை விற்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை இனிமேல் கூப்பிள்ஸின் படியை மிதிக்கப் போவதில்லை. நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம். மாலையானதும் களைத்து சோர்ந்து போகிறோம். அப்போது உணவு விடுதிக்குப் போவோம். இரவில் சீக்கிரம் உறங்குகிறோம். இதுதான் வாழ்க்கை.

காகினும் நானும் ஓவியக்கலை பற்றி காரசாரமாக விவாதிக்கிறோம். எங்களுடைய வாக்குவாதம் மின்சார ஓட்டம் போல. அது முடிவடையும்போது நாங்கள் ஓய்ந்துபோன பாட்டரிபோல ஆகிவிடுகிறோம்.’

*

‘ஒரு சகோதரனுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய கவலையைத்தான் உன் கடிதத்தில் பார்த்தேன். அதனால் என்னுடைய மௌனத்தை முடித்துக்கொள்வது என் கடமை. முழுமையான சுய உணர்வுடன்தான் இதை எழுதுகிறேன். பைத்தியக்காரனின் கடிதமல்ல. நீ அறிந்த உன் சகோதரனின் கடிதம்.

என்னை வெளியில் விடக்கூடாது என்று அநேக ஆட்கள் மேயரிடம் மனுக் கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னைப் பூட்டி வைக்கக் கட்டளை இட்டிருக்கிறார். அதனால் நான் இங்கே பாதுகாப்பாலிருக்கிறேன். காவல்காரர்கள் இருக்கிறார்கள். நான் என்ன குற்றம் செய்தேன் என்றுகூட நிரூபிக்காமல் இதைச் செய்திருக்கிறார்கள். எனக்கு மனசாட்சியின் நீதிமன்றத்தில் சொல்வதற்கு நிறைய பதில்கள் இருக்கின்றன. நான் ரோஷப்படுவதில் அர்த்தமில்லை. எனக்கு நானே தீர்ப்பு வழங்கிக்கொள்வேனாயின் என்னைக் குற்றவாளியாக்குவேன். எனக்கு இது போதும். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு எதிராக அதுவும் நோயாளியான மனிதனுக்கு எதிராக இத்தனை பேர் திரள்வது பூமியின் மையத்தில் இடி விழுவதுபோல. தவிர, மனிதர்களுடன் அதிகமாக நட்புப் பாராட்டுவது முட்டாள்தனத்தில்தான் முடிகிறது.

தற்காலிகமாக என்னை நீ மறக்க வேண்டும். எனக்குத் தேவை சிறிது மன அமைதி. மேயரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் என்னிடம் தோழமையுடன்தான் பழகுகிறார்கள். எல்லாவற்றையும் சரிப்படுத்த கூடுமானதைச் செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். நான் என்னைக் காயப்படுத்திக் கொண்டேன். ஆனால் பிறரிடம் அராஜகமாக நடந்து கொள்ளவில்லை. அதுவுமில்லாமல், இந்தச் செலவுகளை என்னால் தாங்க முடியாது. இதையெல்லாம் அவர்களிடம் சொன்னேன். நான் ஏதாவது வேலைசெய்து மூன்று மாதங்களாகின்றன. என்னைப் பூட்டி வைக்காமலும், துன்புறுத்தாமலும் இருந்தால் என்னால் வேலை செய்ய முடிந்திருக்கும்.

இப்போது என்னை வெளியே நடமாட அனுமதிக்கிறார்கள். ஒரு புத்தகம் வாங்கினேன். இரண்டு அத்தியாங்கள் ஆவலுடன் படித்தேன். ஏதாவது படித்து வாரக்கணக்காகிறது. படிப்பு என்னுடைய நோயைக் குணப்படுத்த உதவும். பால்சாக்கின் இன்னொரு நாவலையும் படித்துக் கொண்டிருக்கிறேன். டிக்கன்ஸின் கிறிஸ்துமஸ் புத்தகங்களையும் படிக்கிறேன்.

அன்புள்ள தியோ! என்னைப் பூட்டி வைக்க வேண்டிய தேவை இல்லாதபடிக்கு நோய் தீருமென்றே தோன்றுகிறது.’

*

‘என்னுடைய மனத்தின் சமநிலைக்கு இப்போது கோளாறு எதுவுமில்லை. என்னால் முடிந்தவரை வேலை செய்கிறேன். என்னுடைய நோய் திரும்ப வந்து விடுமானால்  நீ பொறுத்துக் கொள். என்னுடைய இப்போதைய நிலையைப் பற்றி யோசித்தால் பயமாக இருக்கிறது. சிந்தனைக் குழப்பம். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமா? ஏற்படவேண்டும் என்று விரும்புகிறேன்.’

*

‘இங்கே நான் மிகுந்த துக்கத்தோடு இருக்கிறேன். எனது விவகாரம் – உங்களை உலுக்குகிற புயல். அதைப் பற்றியும் துக்கப்படுகிறேன். நான் என்ன செய்ய? முடிந்தவரைக்கும் அமைதியுள்ளவனாக முயற்சி செய்கிறேன். என் வாழ்க்கையின் அடிப்படையே அபாயகரமானது. என்னுடைய ஒவ்வொரு காலடியும் தடுமாறுகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.

இப்போதும் ஓவியங்களையும் வாழ்க்கையும் நேசிக்கிறேன். ஆனால் எனக்கென்று ஒரு பெண் துணை இனி ஏற்படப்போவதில்லை. அதற்கான வயதும் கடந்து போயிருக்கிறது. இப்போது அப்படியான ஆசை இல்லை. ஆனால், அப்படியொன்று சாத்தியமாகாமற் போனதன் துக்கம் இருக்கிறது. என்னை முழு மனத்துடன் ஓவியத் திரையில் அர்ப்பணிப்பது. அது மட்டும்தான் இனி இந்த வயதில் என்னால் முடியும். என்னுடைய வாழ்க்கையையும் சுக சௌக்கியங்களையும் உருக்கி வார்த்தவையே என்னுடைய ஓவியங்கள்.’

*

‘மனசாட்சியும் உணர்ச்சியுமே ஒரு கலைஞனை நடத்திச் செல்ல வேண்டியவை. அவனுடைய தூரிகையை இயக்குவது அறிவல்ல. தூரிகையே அறிவைச் செலுத்த வேண்டும்.

*

‘ஒரு நல்ல ஓவியத்தைப் படைப்பது, முத்தையோ வைரத்தையோ கண்டெடுப்பதை விட எளிதானதல்ல. அதேபோல, சிரமப்பட வேண்டும்; வாழ்க்கையை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்.’

*

எனது ஓவியங்கள் விற்பனையாகவில்லை என்பதற்காக நான் எதுவும் செய்ய முடியாது. ஒரு காலம் வரும் – வர்ணத்தின் விலையை விடவும் அவற்றுக்கு மதிப்பு அதிகம்’ என்று மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம்’ என்று எழுதினார் வான்கோ. அந்தக் காலம் அவரது மரணத்துக்குப் பிறகு வந்தது. முன்பு செய்த புறக்கணிப்புக்குப் பிரதியாக பல மடங்கு ஆவேசத்துடனும் கோலாகலத்துடனும் வந்தது. நூறு வருடங்களைக் கடந்தும் நீடிக்கிறது. ஏனெனில், வின்சென்ட் வான்கோவின் கலை மனித வரலாற்றுக்கு அன்புப் பரிசாக வாய்த்த கௌரவம்’ –  சுகுமாரன் (நட்புறவு பாலம் , 1990).
***

நன்றி : சுகுமாரன், அன்னம்
கவிஞர் சுகுமாரனின் வலைப்பக்கம் : http://vaalnilam.blogspot.com/

”திசைகளும் தடங்களும்” நூல் கிடைக்குமிடம் :

அன்னம் , மனை எண்: 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் – 613 007

**

தொடர்புடைய பதிவு : நவீன ஓவியம் : சில விளக்கங்கள் – ஜோஸப் ஜேம்ஸ்

**

Visit : Wikipedia  & THE VINCENT VAN GOGH GALLERY

புனிதமானது பூமி – ஸியட்டில்

செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாக கூறப்படும் இந்த பதில் , பிரம்மராஜனின் ‘மீட்சி’யில் வெளிவந்தது –  சுகுமாரனின் மொழிபெயர்ப்பில். ஆங்கில வடிவம் (Original ?) இங்கே. என்னிடமுள்ள ‘திசைகளும் தடங்களும்’ நூலில் ஏனோ இது இடம் பெறவில்லை. அவருடைய மற்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில் படித்து வியந்த அருமையான ஆக்கம் இது. வார்த்தைகளில் நின்று அர்த்தத்தில் தாவும் இந்த கலைப் பூரணத்தை நான் மட்டும் ரசிக்க மனம் இடம் தரவில்லை. அதனாலேயே உனக்கு அனுப்புகிறேன். ‘மீட்சி’யால் கிடைத்த கொடை’ எனும் குறிப்புடன் கவிஞர் தாஜ் தன் நண்பர் ஒருவருக்கு – இருபது வருடங்களுக்கு முன்பு – அனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக  இன்று என் கையில் சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்ற இந்த பதில் – புதூர் இராசவேலின் மொழிபெயர்ப்பில் – புதிய கலாச்சாரம் இதழிலும் இப்போது கிடைக்கிறது. கூகுள் தயவில் மற்ற தளங்களிலும் இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சி‘க்காக எங்கும் அலையலாம் ; தவறில்லை!

‘1854-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ், பரந்த செவ்விந்திய நிலப்பகுதி ஒன்றை விலைக்கு வாங்கும் உத்தேசத்தை செவ்வியந்தியத் தலைவனான ஸியட்டிலின் முன் வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்கு வழங்கிய பதிலின் மொழிபெயர்ப்பு இது. …. வருடங்கள் கடந்து விட்டன. இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் மனிதன் துண்டிக்கப்பட்டு வரும் நமது நிகழ்காலத்துக்கு ஸியட்டிலின் சொற்கள் முன்னைவிட வெகுவாகப் பொருந்துகின்றன’ என்கிறார் சுகுமாரன்.

**

thechief

புனிதமானது பூமி

ஸியட்டில்

மொழிபெயர்ப்பு : சுகுமாரன்

**

உங்களால் ஆகாயத்தையும், மண்ணின் வெதுவெதுப்பையும் எப்படி வாங்கவும், விற்கவும் முடியும்? இந்த எண்னமே எங்களுக்கு விரோதமானது.

காற்றின் புத்துணர்வும், நீரின் பிரகாசமும் எங்களுக்கு உரிமையானதல்ல என்னும்போது உங்களால் எப்படி அவற்றை வாங்க முடியும்?

இந்த பூமியின் ஒவ்வொரு இடமும் என்னுடைய மக்களுக்குப் புனிதமானது. மின்னுகிற ஒவ்வொரு பைன் மர ஊசியிலையும் ஒவ்வொரு மணற்கரையும், இருண்ட வனங்களில் விழும் மூடுபனியின் ஒவ்வொரு துளியும், தெளிவாகக் கீச்சிடும் ஒவ்வொரு பூச்சியும் என்னுடைய மக்களின் நினைவிலும், அனுபவத்திலும் புனிதமானவை. மரங்களின் வளர்ச்சியில் ஊறும் உயிர்ச்சாரத்தில் சிவப்பு மனிதனின் நினைவுகள் கரைந்திருக்கின்றன.

நட்சந்திரங்களுக்கு இடையில் நடந்து போகும் பொழுது வெள்ளைக்காரனின் முன்னோர்கள், தங்களுடைய பிறந்த மண்ணை மறந்து போகிறார்கள். எங்களுடைய மூதாதையர்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை. ஏனெனில், சிவப்பு மனிதனுக்கு பூமியே தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி; பூமி எங்களுடைய ஒரு பகுதி. வாசனைப்பூக்கள் எங்களுடைய சகோதரிகள்; மானும், குதிரையும், பருந்தும் எங்களுடைய சகோதரர்கள். பாறைச் சிகரங்களும், புல்வெளிகளில் ஊற்றெடுக்கும் சுனைகளும், குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும் – எல்லாம் ஒரே குடும்பம்.

எனவே, வாஷிங்டன் பேரதிகாரி எங்களுடைய நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தபோது, அவர் எங்களிடம் அதிகப்படியாகக் கோருகிறார். நாங்கள் வசதியாக வாழ எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பேரதிகாரியால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் எங்கள் தந்தையும், நாங்கள் அவருடைய பிள்ளைகளும் ஆவோம். எனவே நிலத்தை வாங்குவதற்கான உங்கள் யோசனையை நாங்கள் கவனிக்கலம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதானது.

நதிகள் எங்களுடைய சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. நதிகள் எங்களுடைய படகுகளைச் சுமக்கின்றன. எங்களுடைய குழந்தைகளை ஊட்டி வளர்க்கின்றன. நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்க நேர்ந்தால், நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். நதிகள் எங்களுடைய மற்றும் உங்களுடைய சகோதரர்கள். எந்த ஒரு சகோதரனுக்கும் வழங்கும் கருணையை நீங்கள் நதிகளுக்கும் வழங்கியே தீரவேண்டும்.

வெள்ளைக்காரர்களுக்கு எங்களுடைய வழிகள் புரியாது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒரு நிலப்பகுதி வேறு எந்தப்பொருளையும் போலத்தான்.ஏனெனின் இரவில் வந்து நிலத்திலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போகிறவன் அவன். அவனுக்கு நிலம் சகோதரனல்ல; எதிரி. வெற்றி கொண்டதும் அதைக் கைவிட்டுப் போகிறான். தகப்பனின் இடுகாட்டை அவன் பின்னொதுக்கிவிட்டுப் போகிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தைத் தட்டிப் பறிக்கிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தகப்பனின் இடுகாடும் பிள்ளைகளின் பிறப்புரிமையும் மறக்கப்படுகின்றன. அழகிய முத்துக்களைப் போலவோ, செம்மறி ஆட்டைப்போலவோ வாங்கவும், பறித்துக்கொள்ளவும் கூடிய பொருட்களாகத்தான் அவன் தன்னுடைய தாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும் கருதுகிறான். அவனுடைய வேட்கை பூமியின் ஈரம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு அதைப் பாலைவனமாக விட்டெறிகிறது.

எனக்குத் தெரியாது. எங்களுடைய வழிகள் உங்கள் வழிகளிலிருந்து வேறானவை. உங்கள் நகரங்களின் தோற்றம் சிவப்பு மனிதனின் கண்களை நோகச் செய்கிறது. ஏனெனில் சிவப்பு மனிதன் காட்டுமனிதனாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை.

வெள்ளைக்காரர்களின் நகரங்களில் அமைதியான இடங்களே இல்லை. வசந்தகாலத்தின் இலைகள் கீழே விழும் முணுமுணுப்பு அல்லது வண்டின் சிறகொலியோ இல்லை. ஒரு காட்டுமனிதன் என்பதால் எனக்கு இது புரியவில்லை. குளம்படி ஓசைகள் காதுகளை அவமானப்படுத்துகின்றன. இரவில் குளக்கரைகளில் சுவர்க்கோழிகளின் புலம்பலோ, தவளைகளின் விவாதமோ கேட்காமலிருந்தால் அங்கே வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? நான் ஒரு சிவப்பு மனிதன். எனக்கு இது புரியவில்லை. குளத்தின் முகத்தில் வீசும் காற்றின் மெல்லிய ஓசையும், மத்தியான மழையில் கழுவப்பட்டு வரும் அதன் வாசனையும், பைன் மரங்களிடமிருந்து பெற்ற நறுமணமுமே ஒரு செவ்வியந்தியனுக்குப் பிரியமானவை.

சிவப்புமனிதனுக்கு காற்று விலைமதிப்பில்லாதது. எல்லாப் பொருட்களும் அதைப் பங்கிட்டுக் கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும் ஒரே காற்றைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் காற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. நீண்டகாலமாகச் செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப்போல துர்நாற்றத்தைப் பரப்பி அவன் அதிலேயே மரத்துப் போகிறான். உங்களுக்கு எங்களுடைய நிலத்தை விற்க நேர்ந்தால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் : காற்று விலைமதிப்பில்லாதது. ஏனெனில் தன்னைச் சார்ந்திருக்கிற எல்லாவற்றுக்கும் தனது ஆன்மாவைப் பங்கிட்டுத் தருகிறது. சுவாசிக்க முதல் மூச்சைத் தந்த காற்றிலிருந்துதான் எங்களுடைய மூதாதை கடைசிப் பெருமூச்சையும் உள்ளிழுத்தார். உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தை விற்க நேர்ந்தால், இதை எப்பொழுதும் பரிசுத்தமானதாக நீங்கள் காப்பாற்ற வேண்டும். எங்கோ புல்வெளிகளில் மலர்ந்த பூக்களால் நறுமணமாக்கப்பட்ட காற்றை; வெள்ளைக்காரனும் அனுபவிக்கப் போகும் அந்த நிலத்தை.

அப்படியென்றால், எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் விருப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளை மனிதன் தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதுபோல இந்த நிலத்திலுள்ள விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.

நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.

நண்பனைப்போல உரையாடிக்கொண்டு கடவுளுடன் கூட நடக்கும் வெள்ளை மனிதனும் இந்தப் பொது நியதில்லை விலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எல்லோரும் சகோதரர்களே. நாம் சந்திப்போம். எங்களுக்குத் தெரியும் : நமது கடவுள் ஒரே கடவுள் என்பதை வெள்ளை மனிதனும் ஒரு நாள் கண்டடைவான். நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்: எங்களுடைய நிலத்தைச் சொந்தமாக்க விரும்புவதுபோலத்தான் கடவுளையும் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அது உங்களால் முடியாது. அவர் மனிதனின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளையனுக்கும் சமத்துவமானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பில்லாதது. பூமியை நோகச் செய்வது அதைப் படைத்தவரின் மீது கொட்டும் நிந்தனை. வெள்ளை மனிதனும் இந்த பூமியில் இல்லாமற் போவான். ஒருவேளை வேறு எந்த இனத்துக்கும் முன்பாகவே , உங்களுடைய படுக்கையும் மலினமாகும். உங்களுடைய குப்பையில் கிடந்து நீங்களும் ஒருநாள் மூச்சுத் திணறுவீர்கள்.

இந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதன் மீதும் உங்களுக்கு அதிகாரம் வழங்கிய, ஏதோ பிரத்தியேக காரணங்களால் உங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தவரின் வலிமையால் , வெந்து சாம்பலாகும்போதும் நீங்கள் பிரகாசிக்கலாம். எல்லா எருமைகளும் கசாப்புச் செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள் அடக்கப்பட்டதும், கானகத்தின் ரகசிய மூலைகள் மனிதனின் பிரவேசத்தால் கனத்ததும், வளமான குன்றுகளின் காட்சி பேசும் கம்பிகளால் மூடப்பட்டதும் எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அந்த நியதி எங்களுக்குப் புதிரானது. அடர்ந்த காடுகள் எங்கே? அழிந்து போயின. கழுகுகள் எங்கே? அழிந்து போயின. வாழ்தலின் முடிவு, பிழைத்திருத்தலின் ஆரம்பம்.

**

நன்றி : சுகுமாரன், பிரம்மராஜன் (மீட்சி)

Newer entries »