நெய்ப்பாயசம் : கமலா சுரய்யா

kamala_surayya

நெய்ப்பாயசம் : கமலா சுரய்யா

(மொழிபெயர்ப்பு: குளச்சல் யூசுஃப்)

சிறு அளவிலான இறுதிச் சடங்குகள் நடந்தேறின. அலுவலக நண்பர்களுக்குப் போதுமான அளவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இரவில் வீட்டுக்குத் திரும்பும் அந்த மனிதனை நாம் இனி அப்பா என்று நினைவுகொள்வோம். ஏனெனில், அந்த நகரத்தில் அவனது விலையை அறிந்தவர்கள் மூன்று குழந்தைகள் மட்டும்தான். அந்த மனிதனை அவர்கள் அப்பா என்றுதான் அழைப்பார்கள்.

பஸ்சில் முன்பின் தெரியாதவர்களிடையே அமர்ந்திருந்த அவன் அன்றைய நாளின் ஒவ்வொரு நிமிட நிகழ்வையும் தனித்தனியாகப் பிரித்து சோதனை செய்தான்.

காலையில் எழுந்தது அவளது சத்தம் கேட்டுதான்: “மூடிப் புதைச்சிட்டுப் படுத்திருந்தா முடியுமா இன்னைக்கும்? திங்கள்கிழமைதானா?” அவள் மகனை உசுப்பிக்கொண்டிருந்தாள். பிறகு கசங்கிய வெள்ளைச் சேலை யையும் உடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்து வேலையில் மூழ்கினாள். தனக்கு ஒரு பெரிய கோப்பையில் காப்பி கொண்டு வந்து தந்தாள்.

பிறகு… பிறகு என்னவெல்லாம் நடந்தது? மறந்து விட முடியாதபடி ஏதாவது வார்த்தைகளை அவள் பயன்படுத்தினாளா? எவ்வளவுதான் முயற்சி செய்த பிறகும் பிறகு அவள் சொன்ன எந்த வார்த்தைகளுமே நினைவுக்கு வர வில்லை. மூடிப் புதைச்சிட்டுப் படுத்திருந்தா முடியுமா இன்னைக்கும்? திங்கள் கிழமைதானா? இந்த வார்த்தை மட்டும் மாயாமல் நினைவில் பதிந்துக் கிடக்கிறது. அதை ஏதோ இறை நாமம்போல் அவன் உச்சரித்தான். இதையும் மறந்துபோய் விட்டால் தன்னுடைய இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது போல் அவனுக்குத் தோன்றியது.

அலுவலகத்திற்குப் போகும்போது குழந்தைகளும் கூடவே வந்தார்கள். அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் வைத்து சாப்பிடுவதற்கான பலகாரங்களை சிறு அலுமினியப் பாத்திரங்களில் அவள் எடுத்துக்கொண்டு வந்தாள். அவளது வலது கையில் சிறிது மஞ்சள்தூள் அப்பியிருந்தது.

அலுவலகத்திலிருக்கும்போது அவளது நினைவு ஒருதடவைகூட வரவில்லை. ஒன்றிரண்டு வருடங்கள் தொடர்ந்த காதலின் முடிவில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். இரு வீட்டுக்காரர்களின் சம்மதமில்லாமலேயே! ஆனாலும் அதைப்பற்றி வருத்தப்பப்படுவதற்கு தோன்றியதே இல்லை. பணமுடை, குழந்தைகளின் ஆரோக்கியம், இப்படியாக சில பிரச்சனைகள் அவர் களைச் சோர்வடைய வைத்ததுண்டு. அவளுக்கு ஆடை அலங்காரங்களில் சிரத்தைக் குறைந்தது. அவனுக்கு வாய் விட்டுச் சிரிப்பதற்கான திறன், கிட்டத் தட்ட இல்லாமல்போனது.

இருந்தாலும் அவர்கள் பரஸ்பரம் பிரியத்துடன்தான் நடந்துகொண்டார்கள். மூன்று குழந்தைகள். அவர்களுடனும் அன்பாகவே இருந்தார்கள். உண்ணிக்கு பத்து வயது, பாலனுக்கு ஏழு வயது, ராஜனுக்கு ஐந்து வயது. முகத்தில் எப்போதுமே எண்ணெய்ப் புரண்டிருக்கும் மூன்று குழந்தைகள். சொல்லிக் கொள்ளும்படியான அழகோ திறைமையோ இல்லாதவர்கள். ஆனால், அம்மா வும் அப்பாவும் தங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்:

“உண்ணிக்கு எஞ்சினீயரிங்கில்தான் ஆர்வம். பாருங்க, எப்பப் பாத்தாலும் எதையாவது செய்துட்டிருக்கான்.”

“பாலனை டாக்டராக்கணும். அவன் நெற்றியைப் பாத்தீங்களா? இவ்வளவு அகலமான நெற்றி புத்திசாலித்தனத்தோட அறிகுறியாக்கும்.”

“ராஜன் இருட்டுலே எல்லாம் துளிகூட பயமில்லாம நடக்குறான். நல்ல மனத்திடம். மிலிட்டரிக்காரனா வருவான்.”

அவர்கள் தங்கியிருந்தது, நகரத்தில், மத்தியதர வகுப்பினர் வசிக்கும் ஒரு சிறு தெருவில், கீழ்த்தளத்தில் மூன்று அறைகள்கொண்ட ஒரு ஃபிளாட்டில். ஒரு அறையின்முன் சிரமப்பட்டு இரண்டுபேர் நிற்பதற்கான இடத்தில் ஒரு சிறு வராந்தாவுமிருந்தது. அதிலொரு பூந்தொட்டியில் அம்மா நீரூற்றி வளர்க்கும் பன்னீர்ப் புஷ்பம் வளர்ந்துகொண்டிருந்தது. ஆனால் இதுவரையிலும் அது பூக்கவில்லை.

சமையலறைச் சுவரில் ஆணியடித்துப் போடப்பட்டிருந்த கொக்கிகளில் பித்தளைச் சட்டுவங்களும் கரண்டிகளும் தொங்கிக்கிடந்தன. ஸ்டவ்வின் பக்கத்தில் அம்மாவுக்கு உட்காருவதற்கான ஒரு தேய்ந்துபோன பலகைக் கிடந்தது. அவள் அதிலமர்ந்து சப்பாத்தி உருட்டிக்கொண்டிருக்கும்போதுதான் பெரும்பாலும் அவன் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவான்.

பேருந்து நின்றதும் அவன் இறங்கினான். கால் மூட்டில் லேசாக வலிப்பது போலிருந்தது. வாதக்கோளாறாக இருக்குமோ? தான் படுக்கையிலானால் குழந்தைகளுக்கு வேறு யாரிருக்கிறார்கள். திடீரென்று அவனது கண்கள் நிறைந்தன. ஒரு அழுக்கடைந்த ஒரு கைத்துண்டால் முகத்தைத் துடைத்து விட்டு வேகமாக நடந்தான்.

குழந்தைகள் தூங்கியிருப்பார்களா? ஏதாவது சாப்பிட்டிருப்பார்களா? அல்லது அழுதழுது தூங்கியிருப்பார்களா? அழுவதற்கான மனவுறுதியும்கூட அவர் களுக்கு வந்திருக்கவில்லை. அதனால்தானே அவன் அவளையும் தூக்கிக் கொண்டு டாக்சியில் ஏறும்போது அழாமல் அப்படியே பார்த்தபடி நின்றிருந்தார்கள்? சின்னவன் மட்டும் அழுதான். அதுகூட, டாக்சியில் நானும் வருவேன் என்றுதான். மரணத்தின் அர்த்தத்தை நிச்சயமாக அவன் அறிந்திருக்கவில்லை.

அவனாவது அறிந்திருந்தானா? இல்லை. தினமும் வீட்டில் எதிர்பார்த்திருக்கும் அவள் அன்று சாயங்காலம் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தரையில் ஒரு துடைப்பத்தின் பக்கத்தில் விழுந்து இறந்து கிடப்பாள் என்று அவன் நினைத்திருந்தானா?

அலுவலகத்திலிருந்து வந்ததும் சமையலறையின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான். அங்கே அவள் இல்லை. முற்றத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. உண்ணி சத்தமாகச் சொல்கிறான்: “ஃபஸ்ட் கிளாஸ் ஷாட்.”

அவன் சாவியை எடுத்து முன்பக்கக் கதவைத் திறந்தான். அப்போதுதான் அவள் கீழே கிடப்பதைக் கண்டான். வாயை லேசாகத் திறந்து தரையில் தரை யில் சரிந்துப் படுத்திருந்தாள். விழுந்ததில் தலையில் அடிபட்டிருக்கலாம் என்று நினைத்தான். ஆனால், ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனதும் டாக்டர் சொன்னார்: ”ஹார்ட் அட்டாக். இறந்து ஒன்றரை மணி நேரமாகுது.”

ஏதேதோ உணர்வுகள்… இனம்புரியாத ஏதோ கோபம் அவள்மீது… இப்படி எந்த முன்னறிவிப்புமில்லாமல் எல்லாப் பொறுப்புகளையும் தன்னுடைய தலை யில் சுமத்தி விட்டுப் போய்விட்டாளே?

இனி குழந்தைகளை யார் குளிப்பாட்டுவார்கள்? அவர்களுக்கு யார் உணவு தயார் செய்து கொடுப்பார்கள்? உடம்புக்கு ஏதாவதென்றால் யார் கவனிப்பது?

‘என்னுடைய மனைவி இறந்துபோய் விட்டாள்.’ அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்: “என் மனைவி இன்னைக்குத் திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாள். எனக்கு ஒரு இரண்டு நாள் லீவு வேணும்.”

எவ்வளவு நியாயமான காரணத்துடனான விடுமுறை விண்ணப்பமாக இருக்கும் அது. மனைவிக்கு உடம்புக்கு சரியில்லை என்றுகூட இல்லை. மனைவி இறந்துபோய் விட்டாள் என்று. உயரதிகாரி ஒருவேளை தன்னை அவரது அறைக்குள் அழைக்கவும் கூடும். “உண்மையாகவே நான் ரொம்ப வருத்தப்படுறேன்.” என்று அவர் சொல்லலாம். ஹும்..! அவருக்கென்ன வருத்தம்! அவளை அவருக்குத் தெரியவே செய்யாது. அவளுடைய நுனி சுருண்ட தலைமுடியும் சோர்ந்துபோன புன்சிரிப்பும் மெதுவான நடையும் எதுவுமே அவருக்குத் தெரியாது. இதெல்லாமே தன்னுடைய இழப்புகள்…

வாசலைத் திறந்ததும் சின்னவன் படுக்கையறையிலிருந்து ஓடி வந்து சொன்னான்: “அப்பா, அம்மா இன்னும் வரலை.”

அவன் இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் மறந்துவிட்டானா? டாக்சியில் ஏற்றிய அந்த உடல் தனியாகத் திரும்பி வருமென்று நினைத்திருக்கிறானா?

அவன் மகனின் கையைப் பிடித்துக்கொண்டு சமையலறையைக்கு நடந்தான்.

“உண்ணீ,” அவன் கூப்பிட்டான்.

“என்னப்பா?”

உண்ணி கட்டிலிலிருந்து எழுந்து வந்தான்.

“பாலன் தூங்கிட்டாம்பா.”

“ம்… நீங்கள்லாம் ஏதாவது சாப்பிட்டீங்களா?”

“இல்லேப்பா.”

அவன் சமையறைத் திண்டில் வைத்திருந்த பாத்திரங்களின் மூடியைத் திறந்துப் பார்த்தான். அவள் தயார்செய்து வைத்திருந்த சப்பாத்தி, சோறு, உருளைக்கிழங்குக் கூட்டு, உப்பேரி, தயிர், ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் குழந்தைகளுக்காக அவ்வப்போது வைக்கும் நெய்ப்பாயசமுமிருந்தது.

மரணத்தைத் தொட்டுணர்ந்த பதார்த்த வகைகள். வேண்டாம். அதை சாப்பிடக் கூடாது.

“நான் கொஞ்சம் உப்புமா வச்சித் தர்றேன். இதெல்லாம் குளிர்ந்து போயிருக்கு.” அவன் சொன்னான்.

“அப்பா.” உண்ணி அழைத்தான்.

“ம்…”

“அம்மா எப்பப்பா வருவா? அம்மாவுக்கு சரியாகலையாப்பா?”

உண்மையை ஒரு நாளாவது மறைத்து வைக்கும் பொறுமை கை வர வேண்டும். அவன் நினைத்துக்கொண்டான். இப்போதே, இந்த இரவே உண்மையைச் சொல்லி, குழந்தையை வேதனைப்படுத்துவதால் என்ன கிடைத்து விடப்போகிறது?

“அம்மா வருவாள்.”

அவன் கோப்பைகளைக் கழுவி கீழே வைத்தான். இரண்டு கோப்பைகள்.

“பாலனை எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்.” அவன் சொன்னான்.

“அப்பா, நெய்ப்பாயசம்.” ராஜன் கேட்டுவிட்டு அந்தப் பாத்திரத்தில் தனது ஆட்காட்டி விரலை அமிழ்த்தினான்.

அவன் தனது மனைவி அமருகிற பலகையில் அமர்ந்தான்.

“உண்ணி எடுத்து வைப்பியா? அப்பாவுக்கு முடியலே, தலை வலிக்குது.”

அவர்கள் சாப்பிடட்டும். இனி அவள் வைத்துக்கொடுக்கும் உணவு அவர் களுக்குக் கிடைக்கவா போகிறது?

குழந்தைகள் பாயசத்தை சாப்பிடத் தொடங்கினார்கள். அவன் அதைப் பார்த்தபடியே சலனமற்று உட்கார்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழிந்தபோது அவன் கேட்டான்:

“சோறு வேண்டாமா உண்ணி?”

“வேண்டாம். பாயசம் போதும். நல்ல ருசியா இருக்கு.” உண்ணி சொன்னான்:

ராஜன் சிரித்தபடியே சொன்னான்: “ஆமா… அம்மா நெய்ப்பாயசம் சூப்பரா வெச்சிருக்கா..”

தனது கண்ணீரைக் குழந்தைகள் கவனித்து விடாமலிருப்பதற்காக அவன் எழுந்து குளியலறைக்கு நடந்தான்.

***

kulachal-yusuf1

நன்றி : குளச்சல் யூசுஃப்

குளச்சல் மு. யூசுபுக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

முதலில் பார்க்கவும்  : இன்னொரு மோசடி இன்னுமொரு எழுத்துத் திருட்டு

**

 kulachal-yusuf1

விழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இலக்கிய உலகம்

 என். சுவாமிநாதன்

தமிழ் படைப்பாளி குளச்சல் மு.யூசுப்புக்கு அறிமுகம் தேவையில்லை. நாவல்கள், சுய சரிதைகள், அனுபவம் பகிர்வுகள் என 28 நூல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக இவர், சங்க இலக்கிய நூலான ’நாலடியாரை’ மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். அந்த நூலை, பிழைத்திருத்தம் செய்து தருவதாகக் கேட்டு வாங்கிய மலையாளஎழுத்தாளர் ஒருவர், அதை தனது பெயரிலேயே வெளியிட்டு விட்டார், இச் சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை, தமிழ் இலக்கிய உலகில், அது ஒரு விவாதத்தைக் கூட ஏற்படுத்தாதுதான் சோகம்.

மு.யூசுப்பை நாகர்கோயில் அருகே உள்ள புத்தன்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

 பொதுவாகவே இலக்கிய உலகில் புத்தகங்கள் எழுதியதும் சக இலக்கியவாதிகளில் பிழை திருத்தம் செய்யக் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மலையாள எழுத்தாளரும், வழக்கறிஞருமான விஜயன் கோடாஞ்சேரியிடம், நான் எழுதிய நாலடியார் மலையாளப் பதிப்பை திருத்தம் செய்யக் கொடுத்தேன். அதை அவர், அவரது நண்பரான கோழிக்கோட்டை சேர்ந்த முண்டியாடி தாமோதரனிடம் கொடுத்திருக்கிறார்,.

 ஆனால், அந்தப் புத்தகத்தை தானே எழுதியதாக முண்டியாடி தாமோதரன் வெளியிட்டு விட்டார். காவல் துறையில் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. முண்டியாடி தாமோதரன், விஜயன் கோடாஞ்சேரி இருவருக்கும் தமிழே தெரியாது. இவர்களால் எப்படி ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய முடியும்?

 நான் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். என் கல்வித்தகுதி குறித்தும், இலக்கிய ரசனை குறித்தும் அண்மையில் ஒரு மலையாள நாளிதழ் என்னை நேர்காணல் செய்தது.

 அதை அடித்தளமாக வைத்து, கல்வித்தகுதியே இல்லாத உனக்கு எப்படி செம்மொழி நிறுவனம் நாலடியாரை மொழிபெயர்ப்பு செய்யும் பணியை தந்தது. அதில் ஏதோ ஊழல் நடந்திருக்கிறது என்று மலையாள எழுத்தாளர்கள் மிரட்டுகிறார்கள்.

 செம்மொழி நிறுவனத்துக்கு, நான் அனுப்பிய விண்ணப்பத்தை தமிழ், மலையாள பண்டிதர்களும், அதிகாரிகளும் நேர்காணல் செய்து சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்யும் தகுதி இருப்பதாக அனுமானித்து எனக்கு தந்த பணி இது. இதெல்லாம் என் மனதை சஞ்சலப்படுத்தி விட்டது. இதனால் சமீபகாலமான மனம் ஒடிந்து என் எழுத்துப் பணியும் தொய்வுற்றதை உணர்கிறேன்.

நிலப்பரப்புகள் சார்ந்து மனித மனங்களில் உறைந்து போய் கிடைக்கும் தவறான புரிதல்கள்தான் அவர்களுக்கு தவறு செய்யும் தைரியத்தை கொடுத்திருக்கிறது.

 ஒரு படைப்பாளியாய் என்னால் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. வறுமையின் விளிம்பில் வாழும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் கூட, என்னை ஏய்ப்பதற்கான மனவலிமையை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். இப்போது அவர்கள் என் கல்வி பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

 இந்த இலக்கிய மோசடி விவகாரத்தில் தமிழ் எழுத்துலகம் நடந்து கொள்கிற விதம் மிகுந்த ஏமாற்றத்தை விதைத்து விட்டது.

நான் எழுத்துலகில் எந்த குழுவையும் சார்ந்தவன் அல்ல. இதனால் கூட எனக்கு ஆதரவுக் குரல்கள் ஒலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆமினாவதூத் நிகழ்வில், உடனடியாக பறந்துவந்த கண்டனக் கணைகள், என் விவகாரத்தில் கூர் மழுங்கிப் போனதை என்னவென்று சொல்ல?

 புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம், முண்டியாடி தாமோதரன், விஜயன் மூன்று பேரையும் விசாரணைக்கு வரச் சொல்லி, தமிழக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது. தவறு செய்தவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை. மிரட்டும் தொனியில் தனிப்பட்ட வகையில் என்னிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தார்களே தவிர, சட்ட நடவடிக்கையை உதாசீனப்படுத்தினர் என்கிறார் சோகத்துடன்.

தமிழ் இலக்கியவாதிகள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

Click to enlarge the Image

kulachal-news2

**

குளச்சல் மு. யூசுப் மேலும் சொல்கிறார்:

நான் அனுப்பி வைத்த ஒரு விண்ணப்பத்தை முன்வைத்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், நேர்காணலுக்கு அழைத்து, சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான நாலடியார் கவிதை நூலை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணிக்கு என்னைத் தேர்வு செய்தது.

இதன்படி நான், நாலடியாரை மலையாளத்தில் மொழிபெயர்த்தேன். இதன் ’ஒரு பகுதி’ யை நண்பர் என்ற முறையில், தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வழக்கறிஞரும் பதிப்பாளருமான  விஜயன் கோடஞ்சேரியின் பார்வைக்கு  அனுப்பி  வைத்தேன்.

இரண்டு தொகுப்புகளாக அனுப்பிவைக்கப்பட்ட இதில், மலையாள லிபியிலான தமிழ்க் கவிதைகள், தமிழ்ச்சொற்களுக்கான மலையாள அர்த்தம், மலையாளத்தில் விளக்கவுரை, F.J. Leeper எனும் ஆங்கிலேயர் எழுதிய ஆங்கில விளக்கம், ஆகியவற்றுடன் மொழி பெயர்க்கப்பட்ட  மாதிரிக் கவிதைகளும்  ஒரு  கடிதமும்  இணைத்திருந்தேன்.

இதை அனுப்பி வைத்ததன் நோக்கம், தமிழே தெரியாத ஒருவர், மேற்கண்ட விளக்கங் களின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு, மலையாள மொழியில் இதைக் கவிதையாக எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்வதுதான். ஆகவேதான் ஒரு பகுதியை அனுப்பி வைத்தேன்.  இலக்கியப் பணிகளில்  இதுபோன்ற  நிகழ்வுகள்  வழக்கமானவை.

இதைத் தொடர்ந்து, நடந்த தொலைபேசித் தொடர்புகளின்போது விஜயன், ”நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததை, நான் எனது நண்பரும் கவிஞருமான முண்டியாடி தாமோதரன் என்பவரிடம் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

”முண்டியாடி தாமோதரனை எனக்கு முன்பின் தெரியாது. நான் உங்களுக்கு அனுப்பியதை என் அனுமதியில்லாமல் நீங்கள் அவரிடம் கொடுத்தது தவறு. ஆகவே அதை வாங்கி உடனே எனக்கு அனுப்பி விடுங்கள்” என்றேன். “அவர், அதில் நூறு கவிதைகள் எழுதி விட்டார்” என்றார் விஜயன். “நான் அவரிடம் எழுதச் சொல்லவில்லை. ஆகவே, அதை வாங்கித் திரும்ப அனுப்பி விடுங்கள்” என்றேன். “மிச்சமிருக்கும் நூறையும் எழுதாமல் அனுப்பிவிடவா?” என்று கேட்டார். “அவர் எழுதத் தேவையில்லை. நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன். ஆகவே, உடனே அதை அனுப்பி வைத்து விடுங்கள்” என்றேன்.

இதைத் தொடர்ந்து, தாமோதரனைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை விஜயன் என்னிடம் உருவாக்க ஆரம்பித்தார். ”முண்டியாடி தாமோதரன் ரொம்ப நல்ல மனிதர். பல வருடங்களாக மலையாளத்தில் எழுதி வருகிறார். பாவம், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்பை நீங்கள் மலையாளத்தில் வெளியிடும்போது அவரது பெயரையும் சேர்த்துக்கொண்டால் அது அவருக்கு அங்கீகாரமாக இருக்கும்” என்றெல்லாம் சொன்னார்.

”முழுவதும் நான் எழுதிய மொழிபெயர்ப்பில் இன்னொருவர் பெயரைச்சேர்த்துக்கொள்ள இயலாது. வேண்டுமென்றால் அவர் பெயரை நான் நன்றிக்குறிப்பில் சேர்த்துக்கொள்கி றேன்.” என்றேன்.

”சரி, அப்படியே செய்யுங்கள். ஆனால், ஆர்வத்துடன் நூறு கவிதைகளை எழுதியதால் நீங்கள் எழுதிவைத்திருப்பதைப் பார்க்க விரும்புகிறார். கூடவே, பிழை இருந்தால் திருத்தி யும் தருவார். எனவே, அதை அவரது முகவரிக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்.

இதன் பிறகு, விஜயன், தன்னிடம் இருந்ததையும் முதல் எதிரியிடம் கொடுத்திருந்ததையும் சேர்த்து, ஒரு கடிதத்துடன் எனக்குத் திருப்பியனுப்பினார். ஏற்கனவே தொலைபேசியில் சொல்லி, நான் மறுத்த விஷயத்தை,  இந்தக் கடிதத்திலும் வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து, நடந்த தொலைபேசித் தொடர்புகளின்போது, தாமோதரனிடம், ”நீங்கள் எழுதி அனுப்பிய 100 கவிதைகளை, நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் 400 கவிதைகளுடன் சேர்க்க இயலாது. நீங்கள் ஆர்வத்துடன் கேட்பதால், உங்கள் பெயரை நான் இந்த நூலில் நன்றிக்குறிப்பில் வேண்டுமானால் சேர்த்துக்கொள்கிறேன்.” என்று சொன்னேன்.  ”சரி, அப்படியே செய்யுங்கள். இருந்தாலும், நீங்கள் எழுதியிருப்பதை நான் பார்க்க விரும்புகி றேன். கூடவே, பிழைதிருத்தமும் பார்த்து அனுப்புகிறேன். ஆகவே, அதை என் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்”  என்றார்.

தாமோதரனின் இந்த வேண்டுகோள்படி, மேற்கண்ட 400 கவிதைகளையும் அவர் பணி யாற்றும், கோழிக்கோடு, பி.எஸ்.என்.எல். அலுவலக முகவரிக்கு, கூரியர் தபாலில் அனுப்பி வைத்தேன். இத்துடன், தொலைபேசியில் சொன்னதை வலியுறுத்தி ஒரு கடிதமும் இணைத்திருந்தேன்.

400 பக்கங்கள்கொண்ட இந்த, நான்குத் தொகுப்புகளில், நான் மலையாளத்தில் மொழி பெயர்த்த 400 கவிதைகளும், மலையாள எழுத்து வடிவிலான 400 தமிழ்க்கவிதைகளும், தமிழ்ச்சொற்களுக்கான மலையாள அர்த்தமும், மலையாள விளக்கவுரையும், F.J. Leeper எழுதிய ஆங்கில விளக்கமும் இருந்தன. இவை அனைத்தும், நாகர்கோயில் இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உட்பட ஏற்கனவே பலர் திருத்தியது.

நடந்த இந்த மோசடியின் முக்கியமான பகுதி:  29-09-2011 அன்று நான் கூரியர் தபால் மூலம் முதல் தாமோதரன் பணியாற்றும் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைத்த இந்த நான்கு தொகுப்புகளையும் அவர், 05-10-2011 அன்று கைப்பற்றியிருக்கிறார். இதை நகல் எடுத்து வைத்து விட்டு, ஒரு சில குறிப்புகள் மற்றும் தனது கையொப்பங்களுடன், 11-10-2011 தேதியிட்ட ஒரு கடிதத்துடன் ஐந்தே நாட்களில் திருப்பி அனுப்பினார். இதையே, நாலடியார் என்ற பெயரில், மலையாள மொழிபெயர்ப்பு முண்டியாடி தாமோதரன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். 

நான் மொழிபெயர்த்த, இந்நூலை செம்மொழி நிறுவனத்தில் சமர்ப்பித்தேன். இதில் பயன் படுத்தப்பட்ட சமஸ்கிருதச் சொற்களை நீக்கவும், ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் முன்னுரைகள் எழுதவும், பாடல் முதல் குறிப்பு அகராதி, கலைச்சொல் அகராதி போன்ற வற்றைச் சேர்க்கவும் சொல்லி, செம்மொழி நிறுவனம்  கடிதம் மூலம் பரிந்துரை செய்தது. இந்தத் திருத்தங்கள் அனைத்தையும் செய்து, மீண்டும்  சமர்ப்பித்தேன்.

இந்நிலையில், ஒருநாள், நான் திருவனந்தபுரத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு புத்தகக் கடையில் நாலடியார் எனும் தலைப்பில் ஒரு மலையாளப் புத்தகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அது, என்னிடம் பிழைதிருத்தித் தருவ தாகக் கேட்டு வாங்கிய அச்சுப்பிரதி. ”முண்டியாடி தாமோதரனுக்கு இதை அனுப்பி வையுங்கள், அவர் பிழைதிருத்தித் தருவார்” என்று கடிதம் மூலம் கேட்ட விஜயனின் முன்னுரையுடன் நூலாக வெளிவந்திருந்தது. நான் அனுப்பி வைத்த வரிசையை மாற்றிய துடன் தவறான உள்நோக்கத்துடனான சில திருத்தங்களுடனும் இந்நூல் வெளிவந்திருந் தது. நான் எழுதிய புத்தகத்தின் முதல்பிரதியை நானே விலைக்கு வாங்கினேன்.

புத்தகத்தின் முன்னுரையில்:  ”நாலடியார் என்மூலம் வெளிவருவதற்கான வழியமைத்தவர் தமிழின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான குளச்சல் மு. யூசுப்.” என்றும், ”அரசு தொடர்பான ஒரு திட்டத்திற்காக இந்தப் புராணப் படைப்பின் தமிழ் ஒரிஜினலும் வார்த்தைகளுக்கான மலையாள அர்த்தங்களும் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை யும் சேகரித்து அவர் எனக்கு அனுப்பித் தந்தார்.” என்றும் ”மற்றொருவரிடமிருந்து விஷயம் வேண்டியதுபோல் நடக்காத சூழ்நிலையில் இப்படிச் செய்ததாக நான் புரிந்துகொண் டேன்.” என்றும், ”எனக்கென்றால் தமிழ் இலக்கியப் பின்னணியும் புராணங்களும் பெரிய அளவில் தெரியாது. மொழியே கஷ்டம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “யூசுப் அனுப்பி வைத்ததில் ஒரிஜினல் தமிழ்க்கவிதைகளும் இருந்தன. முதலில், நான்கைந்து கவிதைகளை கேஷுவலாக எழுதி யூசுபுக்கு அனுப்பினேன். பிறகு இரண்டு வாரம் மெனக்கெட்டிருந்து முதலிலுள்ள நூறு கவிதைகள் அடங்கிய ஒரு வால்யூமை மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். இதை ஏற்றுக்கொள்கிறேன். மீதி மூன்று வால்யூமையும் அனுப்புகிறேன். சீக்கிரம் செய்து தாருங்கள் என்று சொல்லி, முன்னூறை யும் அனுப்பித் தந்தார். இதைச் செய்து முடிக்க எனக்கு ஒன்றரை மாதங்கள் வேண்டி வந்தது. இதிலுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு, ஐரோப்பியரான, டாக்டர் போப் 19 ஆம் நூற்றாண்டில் எழுதியதாக நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட முன்னுரையில் குறிப்பிட்டபடி, ஒரிஜினல் தமிழ்க்கவிதைகளை நான் அனுப்பி யதாகவும், நான்கைந்து கவிதைகளை கேஷுவலாக எழுதி அவர் எனக்கு அனுப்பி யதாகவும்  மீதி மூன்று வால்யூமை சீக்கிரம் செய்து தாருங்கள் என்று சொல்லி முன்னூறு கவிதைகளை நான் அனுப்பியதாகவும் இதைச் செய்ய ஒன்றரை மாதங்கள் வேண்டி வந்தது என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இதிலுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பு டாக்டர் போப் எழுதியதாக நினைக்கிறேன் என்பதும் தவறு.

மேலும், இதுபோன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பவர்கள், ஆய்வாளர் களுக்கும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஏற்படுகிற பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். சங்க இலக்கியங்கள் குறித்தோ  தமிழ்மொழி குறித்தோ எதுவும் தெரியாத, இதற்கு முன் எந்த நூலையும் மொழிபெயர்க்காத நிலையில்,   பதில் சொல்வதிலிருந்துத் தப்பிப்பதற்காக மட்டுமே இந்த நூலில் எனது பெயரைக் குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

இந்த மொழிபெயர்ப்பிற்கான, பார்வைநூல்களாக நான் எடுத்துக்கொண்டவை: சென்னை சுந்தரம் அச்சுக்கூடம் 1928இல் வெளியிட்ட நாலடியார் நூலும், 1892இல் கலாரத்நாகரம் அச்சுக்கூடம் வெளியிட்டு, 2004இல் சந்தியா பதிப்பகம் மறுவெளியீடு செய்ததுமான நாலடியார் நூல்களாகும். இதிலுள்ள ஆங்கில விளக்கம் F.J.Leeper எழுதியது. இதை, பிழைதிருத்துபவர்களின் கவனத்திற்காக மட்டுமே சேர்த்துக்கொண்டேன்.

அனைத்துக்கும் மேலாக, நாலடியார் நூலின் மிக முக்கியப் பகுதியும் முதல் கவிதையுமான கடவுள் வாழ்த்தை, நான் எதிரிகளுக்கு அனுப்பி வைக்காததால் மோசடியாக வெளிவந்த நூலிலும் இது  இடம்பெறவில்லை.

நான், மலையாளத்தில் மொழிபெயர்த்ததும், 1500 வருடங்களுக்கு முன்புள்ளதுமான இந்த தமிழ்ப்படைப்பை, விஜயனின் உதவியுடன், நயவஞ்சகமாகக் கேட்டு வாங்கி, தமிழே தெரியாத தன் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் தாமோதரன்.  இது, சம்பந்தமாக நான், தாமோதரனுக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பினேன். இதற்கு, தாமோதரன், தான் செய்தது மோசடியென்பதை மேலும் நிரூபிப்பதுபோல், தான் எழுதிய முன்னுரைக்கு முரண்பாடாகவும், பிரச்சினையைக் குழப்புகிற நோக்கத்துடனும் எட்டுப் பக்க பதில் எழுதியிருக்கிறார்.

நான் மொழிபெயர்த்த நூலைப் பிழைதிருத்தித் தருகிறோம் என்று கேட்டு வாங்கி, பிரதி எடுத்து விட்டுத் திருப்பியனுப்பினார்கள் என்பதற்கு, குறிப்பாக, ஐந்தே நாட்களில்  திருப்பி அனுப்பினார்கள் என்பதற்கு, கூரியர் ரசீதிலுள்ள எடையும்,  இப்போதும் என் கைவசமிருக்கும் அந்தத் தொகுப்புகளிலுள்ள அவரது கையெழுத்துகளும் தேதியும் அவர் கள் கைப்பட எழுதிய கடிதங்களும்  ஆதாரம்.

மேற்கண்ட தனது பதிலில் தாமோதரன்: ”நான் மொழிபெயர்த்து உங்களுக்கு அனுப்பி யதை நீங்கள் செம்மொழிக்கு அனுப்பினீர்கள். அதை அவர்கள் நிராகரித்ததாக அறிந் தேன்.”  என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  செம்மொழி நிறுவனம், பிற்சேர்க்கைகளுக்காக வும் சமஸ்கிருதச்சொற்களை நீக்கவும் சொல்லிப் பரிந்துரைத்த, வழக்கமான ஒரு நிகழ்வை நான், மலையாளியும் தமிழ்க்கவிஞருமான ஒரு நண்பரிடம் சொல்லியிருந்தேன். இதை இவர் மூலம் அறிந்து, அரைகுறையாகப் புரிந்து கொண்ட முதல் எதிரி, தனக்குச் சம்பந்த மில்லாத இந்த நிகழ்வையும் சாதகமாக்க முயற்சி செய்திருக்கிறார்.  இத்துடன் அதில் இடம் பெற்றுள்ள ஆங்கில விளக்கம், டாக்டர் போப் எழுதியது அல்ல, F.J. Leeper எழுதியது என்பதுகூட நான் சொன்ன பிறகுதான் அவருக்குத் தெரியும்.

நான் எழுதிய கடிதத்திற்கு மூன்றாம் எதிரியான புத்தக நிறுவனத்தார்: “இதை நீங்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்க்கப் பாருங்கள்” என்று பதில் எழுதியிருந்தார்கள்.

தாமோதரன் தனக்குத் தமிழ் தெரியாதென்று முன்னுரையில் ஒப்புக்கொண்ட நிலையிலும்  புத்தக நிறுவனத்தார், மொழிபெயர்ப்பு முண்டியாடி தாமோதரன் என்று குறிப்பிட்டுள்ளார் கள். இது, தங்களிடம் வெளியிடுவதற்காக மோசடி யான முறையில் வந்த மொழிபெயர்ப்பு நூல் என்பது நன்றாகத் தெரிந்ததால்தான், 1,25,000 ரூபாய் பெற்றுக்கொண்டு இதை வெளியிட்டிருக்கிறார்கள்.  மேலும், இம்மோசடிக்கு மூல காரணமாக இருந்த விஜயன், ஒரு புத்தக நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தும் மற்றொரு பதிப்பகம் மூலம் வெளியிடுவதற்கான காரணமும்  இதுதான் என்று பதிப்பகத்தாருக்குத் தெரியும்.

ஒலிவ் பப்ளிகேஷன் எனும் ஒரு மலையாள பதிப்பகம் இதை வெளியிட என்னிடம் எழுத்து பூர்வமாக அனுமதிகேட்ட விஷயத்தை, விஜயன்மூலம் பதிப்பகத்தார், நிச்சயமாக அறிந்திருப்பார்கள். ஆகவேதான், புத்தக முன்னுரையில் குறிப்பிட்டதுபோல், அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

புத்தக வியாபாரம் மிகவும் செழித்தோங்கும் கேரளத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் சங்க இலக்கிய நூல்களின் விற்பனை என்பது மிகப் பெரிய  இலாபம் தருவது. கல்லூரிகளில் இது பாடமாக வைக்கப்படுமென்றால் இந்த இலாபம் பலமடங்காக உயரும். ஆகவே,  இந்த மூவர் குழு, திட்டமிட்டு இந்த மோசடி யைச் செய்திருக்கிறார்கள்.

நான், தமிழில் பிழைதிருத்துபவனும் எடிட் பார்ப்பவனாக இருந்தும் நான் எழுதுகிற தமிழ் நூல்களைக்கூட பலரிடம் கொடுத்து பிழைபார்க்கச் சொல்பவன். எனது 27–வது மொழி பெயர்ப்பு நூலைக்கூட அதை எழுதிய, எர்ணாகுளத்திலுள்ள நாவலாசிரியர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஒப்பிட்டுப் பார்த்தேன். முழுத்திருப்தியை விரும்பும் ஒரு எழுத்தாளன் என்பதால்தான் ஒரு பேராசிரியர் உட்பட சிலர் திருத்திய பிறகும் எதிரிகள் பிழை பார்த்துத் தருவதாகச் சொன்னதும் அனுப்பி வைத்தேன். ஒரு நண்பர் எழுத்து மூலம் இப்படிக் கேட்கும்போது சந்தேகப்படுவதற்கான காரணங்களும் இல்லை. தமிழில் பல நூல்களை முழுவதுமாகச் செம்மைப்படுத்திக்கொடுத்த நான்,  இப்படியான ஒரு மோசடி யைக் குறித்து, அப்போது சிந்திக்கவுமில்லை.

ஒன்றரை வருடகாலம் நான் மிகக் கடினமாக உழைத்தும் செலவு செய்தும் இதற்கான ஆதார நூல்களையும் குறிப்புதவி நூல்களையும் தேடியலைந்திருக்கிறேன்.  தமிழ்நாடு மற்றும் கேரளம் முழுவதும் கால்நடையாகவும் பேருந்துகளிலும் இதற்காகப் பயணம் செய்து இந்த நாலடியார் நூலை மொழிபெயர்த்தேன். இதை, திட்டம் போட்டு மிகச் சுலபமாக ஏமாற்றி, தன் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எதுவும் செய்ய இயலாதவனாக, இப்போது, வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறேன். மலையாள மொழியில் என்னுடைய முதல் முயற்சியைப் பாழடித்துவிட்டதன் மூலம் இனிமேல் இது போன்ற நல்ல முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் முற்றிலும் இல்லாமல் செய்து விட்டார்கள்.

எஸ். ரமேஷன் நாயர், திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்து, மலையாள இதழ் ஒன்றில், ஐந்து வருடங்களாக வாரம்தோறும் வெளியிட்டதுபோல், இந்த நாலடியார் கவிதைகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும், பிறகு, நூலாக வெளிவரும் ஏற்பாடு களையும் செய்து வைத்திருந்தேன். இதற்கான அனுமதியை செம்மொழி நிறுவனத்திட மிருந்து  பெறுவதற்கான  கால அவகாசத்திற்காகக்  காத்திருந்தேன். இந்தச் சூழ்நிலையில் தான்  மோசடி  நிகழ்ந்திருக்கிறது

(இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடமுள்ளன.)

 ***

நன்றி : குளச்சல் மு. யூசுப்

« Older entries