அவள்தான் கி.ரா.வின் அம்மா

சீர்காழிக்கு நான் வருவதாக  ஃபேஸ்புக்கில் அமர்க்களப்படுத்திய நண்பர் தாஜை , ‘ஆமா…  வந்து என்னா பெருசா செய்ஞ்சுடப் போறாக, மரஞ்செடி கொடிகளைக் கொஞ்ச நேரம் முறைச்சுப் பாத்துட்டுத் திரும்பிடப் போறாக அவ்வளவுதான்’ என்று கிண்டல் செய்திருந்தார் குளச்சலார். ரொம்ப ரசித்தேன். அவர் சொன்னது சரி. ஆனால் முறைத்தது செடிகொடிகளையல்ல, ‘கி.ரா பக்கங்கள்‘ எனும் ஒரே ஒரு புத்தகத்தைத்தான். கவனித்து விட்டார் போலும், ஊர் திரும்பும்போது ‘இந்தாய்யா..’ என்று அதை அன்போடு வழங்கினார் தாஜ். அதிலிருந்த ‘அம்மாவின் நாட்கள்’ கட்டுரையிலிருந்து பதிவிடுகிறேன், அஸ்மாவின் இடைஞ்சல்களையும் மீறி. கண்கலங்காமல் படியுங்கள். நன்றி. ஆபிதீன்

***
ki-ra-pakkangkal21946ஆம் ஆண்டு. நாகர்கோவில் புத்தேரியிலுள்ள காதரின் பூத் ஆஸ்பத்திரியில் காசநோயாளியாக சேர்க்கப்பட்டிருந்தேன். சமைத்துப் போடவும் என்னை கவனித்துக்கொள்ளவும் அம்மா வந்திருந்தாள்.

மத்தியானம் சாப்பாட்டின் போதெல்லாம் வழக்கமான அந்த சச்சரவு வரும். தட்டு வைத்து சாப்பாடு போட்டு வைத்தாள். தன்ணீர் வைக்கவில்லை. கோபமாகச் சொன்னேன். “தண்ணி எடுத்து வை”. தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள்.

நான் சாப்பாட்டின் முடிவுக்கு வந்ததும் அம்மா அவசரமாய் சாப்பிடத் தொடங்குவது வழக்கம். முதல் கவளத்தை விழுங்குவதற்கும் விக்கல் எடுப்பதற்கு சரிய்யாக இருக்கும். விக்கிக்கொண்டே எங்கள் பக்கத்தில் உள்ள தண்ணித் தம்ளருக்கு அவள் கை நீளும். சிரித்துக்கொண்டே எடுத்துக் கொடுப்போம். சில சமயம் மட்டும் கொஞ்சம் கிராக்கி பண்ணி பிறகு தருவோம். எப்பவாவது சில நாள் “எண்ணைக்காவது ஒருநா நீ விக்கித்தான் சாகப்போறே” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் தருவோம்.

வழக்கம்போல அன்றைக்கும் விக்கல் வந்தது. தண்ணீருக்குக் கை நீட்டினாள். தரமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னேன்.

இரண்டாவது விக்கல் வந்தது. நீட்டிய அவள் கை மேலும் நீண்டது.

முடியவே முடியாது என்றேன்.

அவள் முகம் சிரிக்க முயன்றது.

“இதெல்லாம் என்னிடம் நடக்காது. ஒண்ணு நீ சாகணும் அல்லது நாளையிலேர்ந்து சாப்பிடறப்போ குடிக்கத் தண்ணீர் வைக்கிற வளக்கம் வரணும்” என்றேன்.

மூன்றாவது விக்கல் எடுத்தது. பேச முடியலை அவளால்.

ரசத்தையாவது குடிப்போம் என்று ரசத்தின் பக்கம் அவள் கை போனது. ரசவாளியையும் எடுத்து வைத்துக்கொண்டேன். அவள் கண்கள் சொருக ஆரம்பித்தது. அவளறியாமலேயே அவள் உடம்பு ஒரு நெடுமூச்சு எடுத்தது. தொண்டையில் சிக்கியிருந்த சாத உருண்டை உள்ளே இறங்கிவிட்டது. ஒரு சின்ன ஆசுவாசம்,. மளமளவென்று அவள் கண்களிலிருந்து கண்ணீர்.

தண்ணித் தம்ளரை அவளிடம் நீட்டினேன். வாங்கி வைத்துக் கொண்டாள்; குடிக்கவில்லை. சாப்பாட்டையும் சாப்பிடவில்லை.

கண்ணீர் வழிய என்னைப் பார்த்து “ராஜய்யா, இந்த அத்துவானயிடத்துலெ ஏதும் எனக்கு ஆயிட்டா ஒத்தையிலே என்னடா பண்ணுவெ; உதவிக்கு யாரு இருக்கா?”

நம்ம பிள்ளை தவித்துப் போய்விடுவானே என்றுதான் அப்பவும் நினைக்கிறாள்.

***

நன்றி : கி.ராஜநாராயணன், அகரம் பதிப்பகம், தாஜ்

கரிசல் தாத்தா சேத்த சொலவடைங்க…

மதிப்பிற்குரிய கி.ராஜநாராயணன் ஐயா சேகரித்த சில சொலவடைகளை நம் சீர்காழி தாத்தா தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  அத்தோடு  ‘மூன்றாம் கோணம்’ இதழில் ஷஹி குறிப்பிட்டிருந்த ‘சுருட்டெப் பாய்… கிறீச்சுக் கதவு… முரட்டுப் பெண்டாட்டி’யையும் இணைக்கிறேன், பாய்மார்கள்  சிரிப்பதற்காக.

***

kira-aiya

நா வாழ்ந்த கீர்த்தியெச் சொல்றேம் அண்டை வீட்டுக்காரன் நிக்கிறானா பார் என்றானாம்.

கல்யாணவீட்டுப் பந்தக்காலை கட்டிட்டு அழுறவம் இழவு வீட்டைக் கண்டா விடுவானா.

அறுவடைக்காலத்துல எலிக்கு அஞ்சி பெண்டாட்டிகளாம்.

ஆயிரம் ரூபா கையில இல்லாததாலெ பத்துரூபா வட்டி நட்டமாப் போச்சின்னானாம்.

மொட்டைத்தலையில பேய்பிடிச்சா இருக்கிறத வச்சித்தாம் ஆடணும்.

பூனை இருக்கிற வீட்டுலதான் எலி பேரம் பேத்தி பெத்தெடுக்குமாம்.

பழையது இருந்தாப் போடு பசிக்காம இருக்க மருந்து தாரேம் ன்னானாம்.

துரைகளோடு சொக்கட்டான் ஆடினால் தோத்தாலும் குட்டு செயிச்சாலும் குட்டு.

ஒரு பணம் தந்து அழச்சொன்னது ஒம்பது பணம் தந்து நிறுத்தும்படி ஆயிட்டது.

பூனை சிரிச்சதும் எலி பெண்டுக்கு அழைச்சதாம்!

***

‘கி. ரா பக்கங்கள்’ :

சுருட்டெப் பாய் கிறீச்சுக் கதவு முரட்டுப் பெண்டாட்டி

“ஒரு கதவு திறக்கும் போதும் மூடும் போதும் அது போடும் பேக்கூப்பாடு பற்றிச்சொல்லப்படுகிறது. இந்தக் கதவின் கூவல் மூலம் இங்கே நடப்பது என்ன என்பதை நாலு வீடுகளுக்குத் தெரிவித்துவிடும் போலிருக்கே .

சரி கதவு தான் இப்படி என்றால் இந்தப் பக்கம் புது ஓலைப்பாய் பண்ணுகிற கூத்து: விரித்துவிட்டு இந்தப்பக்கம் வருவதற்குள் பழையபடி சுருண்டு கொள்கிறது. ஆற அமர யோசிக்கிற மனநிலை இருந்தால் அந்தப்பாயை குப்புறப்போட்டு விரித்திருக்கலாம் !

பகல்ப் பொழுதிலேயே அந்தக் கதவு குடுமிகளில் ரெண்டு ரெண்டு சொட்டு எண்ணெயை விட்டுத்தொலைத்திருக்கலாம். அவசரம் ; ஒரே அவசரம். அவசரத்துக்கு அண்டாவுக்குள்ளேயே கை நுழையாது என்று சொல்லி வைத்திருக்கிறதே !

பாய் சமாச்சாரம் கதவு சமாச்சாரம் தான் இப்படி என்றால் ஐய்யோ அவள் பண்ணுகிற கூத்து சொல்ல முடியுமா. இப்படி ஒரு முரட்டுப் பெண்டாட்டி வந்து வாத்தாளெ! இழுத்துக்கொண்டு வந்து நிறுத்திவிட்டுக் கதவை மூடிவிட்டுப் பாயை விரிப்பதற்கு முன் அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய் விடுகிறாள் . திரும்பவும் போய் மல்லுகட்டி இழுத்துக்கொண்டு வந்து கதவை மூடிவிட்டுப் பார்த்தால் பாய் சுருண்டு கொள்கிறது .

ஒரு மனுசன் இவைகளையே …மாறி மாறி விடுயுந்தண்டியும் செய்து கொண்டிருந்தால் எப்படி ? ? பாவி மட்டைக்கு வாய்த்த முதல் இரவு இப்படியா அமையணும். மறுநாளும் இந்தக் கூத்து தான். மறா நாளும் இதே கூத்து தாம்.

சுருட்டெப்பாய்

கிறீச்சுக் கதவு

முரட்டுப் பெண்டாட்டி

போதுமடா சாமீ………”

***

நன்றி : கி.ராஜநாராயணன், தாஜ், ஷஹி

***

போனஸ் :  தமிள் படிச்ச அளகு –  கி.ரா’வின் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’யிலிருந்து…

வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும் – கி.ராஜநாராயணன்

பேனுக்கு பிராயச்சித்தமாக  ஐயா கி.ராஜநாராயணன் அவர்களின் சிறுகதை, விகடனுக்கு நன்றிகளுடன்…

 

***

நன்றி : கி.ராஜநாராயணன், ஆனந்த விகடன்

‘பாவிமட்டை, இப்படி எழுதிவிட்டாரே!’ – கி.ரா

அன்புடன்
வாசகர்களுக்கு….

உங்களுக்கு
கி.ரா.வைப் பற்றிய அறிமுகம்
தேவை இருக்காது.

அவரை அறியாத வாசகர்கள்
இலக்கியம் அறிய வருகிறேன்
என்று வருவதும் வீண்!

‘தேவாமிருதம்’ என்று
புராணக்கதைகளில்
நீங்கள் வாசித்து உணர்ந்திருக்கக் கூடும்.
அப்படி ஒன்றை
நவீன தமிழ் இலக்கியத்தில்
நான் உணர்ந்திருக்கிறேன்.
அது….
பெரியவர் ‘கி.ரா.’வின் எழுத்து!

இடதுசாரித் தோழரும்-
முற்போக்கு இலக்கியத்தின்
போஷகரும்-
’தாமரை’ இதழின்
ஆசிரியராகவும் இருந்த-
திரு.தி.க.சி.யைப் பற்றி
கி.ரா. எழுதிய கட்டுரை ஒன்றை
பழைய தீராநதியில் (மார்ச்-2005) வாசித்தேன்!

அந்தக் கட்டுரையின்
பிற்பாதியை மட்டுமே
தட்டச்சு செய்து தந்திருக்கிறேன்.

கட்டுரையின் முதல் பாதி
தி.க.சி.யின்
இனிமைகளையும் பெருமைகளையும்
தீரப் பேசுகிறது.
அதில் யாருக்கும்
இரண்டு கருத்து இருக்க முடியாது.

வாழ்வை இயக்கத்திற்காகச் செலவிட்ட
தன்னலம் கருதாதவர்களின்
கையடக்கமான ஓர் சின்னப் பட்டியலில்
தி.க.சி. உண்டு!

பிற்பகுதி
தி.க.சி.யோடு
கி.ரா.
இலக்கியப் பிணக்கு கொள்ளும்
வளமான பகுதி.
ரசனை கொண்ட அதனையே
இங்கே தட்டச்சு செய்திருக்கிறேன்.

தவிர,
அந்தப் பகுதியை தட்டச்சு செய்து
வாசகர்கள் முன்வைக்க நினைத்ததில்
வேறு ஒரு சுவாரசியமான சங்கதியும் உண்டு.

கி.ரா. தனது கதையொன்றில்
‘உயிர்த்தலம்’ என்கிற
வார்த்தையை உபயோகிக்க
அதனை…
ஆபாசம் என்றிருக்கிறார் தி.க.சி.
இல்லையெனப் பிணங்குகிறார் கி.ரா.

நம்ம ஆபிதீன் எழுதிய
கதையொன்றின் பெயர் ‘உயிர்த்தலம்‘ !
அந்தப் பெயரை தாங்கி வந்த
அவரது அந்தத் தொகுப்பும்
விற்றுத் தீர்ந்து
அவர் ’ராயல்டி’யும் வாங்கிவிட்டார்!

இப்போ.
விசயத்திற்குப் போவோம்.

ஆபிதீன்..
வாசகர்கள் கேட்பது விழுகிறதா?

“உயிர்த்தலம் எழுதிய அண்ணாச்சி….
ஆபாசத்திற்கு பதில் என்னாச்சி….?”

*
 கநாசு. தாஜ் 

***

‘உயிர்த்தலம்’ என்பது ஆபாசமா?

 கி. ராஜநாராயணன்
தாமரை இதழுக்கு தி.க.சி. பொறுப்பாக இருந்தபோது என்னோடு இவருக்கு ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆரம்பம் இப்படித் தொடங்கியது.

எதிர்வரும் – குறிப்பிட்ட மாதத்தின் – தாமரை இதழை சிறந்த சிறுகதைகள் கொண்ட மலராகக் கொண்டுவரப் போவதாகவும்,பேர் சொல்லும்படியாக வித்தியாசமான ஒரு அருமையான சிறுகதை ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும் என்றும்

எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

எனக்கு உள்ள வழக்கப்படி, கேட்டதுக்குப் பிறகுதான் யோசித்துக் கதை எழுத உட்காருகிறது. வித்தியாசமான, பெயர்சொல்லும்படியாகவா இருக்கணும், சரி; என்று ரொம்பவும் யோசித்து ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். எதிர்ப்பார்த்ததுக்கும்

மேலாகவே வித்தியாசமான கதையாகவே அமைந்துவிட்டது. ‘பேதை’ என்று தலைப்பிட்டு தி.க.சி.க்கு அனுப்பி விட்டேன்.

வழக்கமாக அவரிடமிருந்து பாராட்டி அல்லவா கடிதம் வரணும். “ரொம்பவும் ஆபாசம்” என்று சொல்லி, “ஆணின் உயிர்த்தலத்தை ஒரு பெண் பிடித்தாள் என்று எழுதியிருக்கிறீர்களே; என்ன இது?” என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

பாவிமட்டை, இப்படி எழுதிவிட்டாரே என்று திகைத்துப் போனேன். சோர்ந்து உட்கார்ந்துவிட்டேன். ரெண்டு மூணுநாட்கள் கழித்து அவருக்கு பதில் எழுதினேன்.

‘உயிர்த்தலம்’ என்பது ஆபாசமான சொல் இல்லை. ஆண்களும் பெண்களும் கூடியிருக்கும் ஒரு சபையில் சொல்லப்படும் பொதுவான வார்த்தைதான். “பிள்ளைக்கு உயிர்த்தலத்தில் பலமான அடிப்பட்டிருக்கு” என்பார்கள். அதோடு, கதையில் வரும் அந்த இளவட்டத்தை – நில வெளிச்சத்தில் தூங்கிக் கொண்டிருந்தவனைக் கொல்வதற்காகவே பிடிக்கிறாள் என்று சமாதானம் சொல்லி, கதையில் ஆபாசம் என்று எதுவும் இல்லை என்று பதில் எழுதினேன்.

அவர் தனது மறுகடிதத்தில், ‘இது ஆபாசமேதான்; வேண்டுமென்றால் பேரா.நா.வானமாமலை, அட்வகேட் என்.டி.வானமாமலை, சாந்தி இதழின் ஆசிரியர் எள்.ஏ.முருகானந்தம் இவர்கள் மூவர் கொண்ட கமிட்டியில் வைத்துக் கருத்துக் கேட்போம். அவர்கள் இதை ஆபாசம்தான் என்று சொல்லிவிட்டால், பிறகாவது நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்று கேட்டு எழுதியிருந்தார்.

இதை எப்படி நிரூபணம் பண்ணுகிறது. ‘கமிட்டி’ என்று வந்துவிட்டால் எனக்கு நீதி கிடைக்காது என்று என் புத்தி சொல்லியது. வேறு முறையில்தான் இதை  அணுகவேண்டும் என்று நினைத்து, கதையின் கையெழுத்துப் பிரதியை எடுத்துக் கொண்டு நேராக அதிகாலை நேரத்திலேயே பாளையங்கோட்டை ராமசாமி கோவில் தெருவில் இருந்த அட்வகேட் வானமாமலையிடம் போய் நின்றேன்.

”என்ன, காலம்பற இவ்வளவு சீக்கிரம்!” என்று கேட்டுக் கொண்டே என்னையும் உட்காரச்சொல்லி எதிரே அவரும் உட்கார்ந்தார்.

“ஒரு கதை எழுதினேன்; இதைப் படிச்சுப் பார்த்து நீங்க அபிப்ராயம் சொல்லணும்” என்று அவரிடம் தந்தேன். சந்தோசமாக வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு, ’நல்லா இருக்கு; வித்தியாசமா எழுதியிருக்கீங்க’ என்றார். ’நல்லா இருக்குங்கிறது இருக்கட்டும். கதையில் ஆபாசம் என்று ஏதாவது தெரியுதா?”

அட்வகேட் கொஞ்சம் உஷாரானார்.

“இப்படி ஒரு கருத்தை யாராவது தெரிவிச்சாங்களா?” என்று கேட்டுவுட்டு திரும்பவும் கவனமாகப் படித்துப் பார்த்துவிட்டு, “ஆபாசம்ன்னு சொல்ல முடியாது; கொஞ்சம் அருவருப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பசி தாங்காமல், சுடுகாட்டில் வெந்த பிணத்தின் மாமிசத்தைத் தின்பதைப் படிக்கிறப்ப….” என்றார்.

“சரி போயிட்டுவர்றேம்” என்று சொல்லிவிட்டு, திரௌபதி அம்மன் கோயில் தெருவுக்குப் போனேன். “அட” என்று சொல்லி நா.வனமாமலை வரவேற்றார். ’ராத்திரியே வந்திட்டீங்களா?’ என்று கேட்டார்.

“இந்தக் கதையை வாசித்துப் பாருங்க” என்று தந்தேன்.

சிகரெட்டைக் கடேசியாக ஒரு இழுப்பு இழுத்தார். (ரொம்ப அனுபவிச்சிக் குடிப்பார்) வீசிவிட்டு, கதையைப் படிக்க ஆரம்பித்தார்.

அவருடைய கருவிழிகள் இடதும் வலதுமாக தறியில் ‘ஓடம்’ ஓடுவது போல வேகமாக இயங்கிக் கதையை படிக்க ஆரம்பித்தார்.

“ரொம்ப வித்தியாசமா இருக்கு; வழக்கமான உங்க கதையில்லெ” என்று சொல்லிவிட்டு, சில இடங்களை மறுபடியும் வாசித்தார். என்ன வித்தியாசம்? என்று கேட்டதற்கு, “தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை கயவன் ஒருவன் கற்பழிக்கும் செயலை ஆபாசமில்லாமல் கலைநயத்தோடு எழுதி இருப்பது வித்தியாசம்தானே?” (இதை நான் எதிர்பார்க்கவில்லை!) இன்னொன்றையும் சொன்னார்.

இந்தப் பேதைக்கு நேர்ந்த கொடுமைகள் எல்லாத்தையுமே, ஒன்று அல்லது இரு நபர்கள் பேரில் மட்டும் வைத்துக் காண்பிக்காததினால், காரணங்கள் அனைத்துக்குமே சமூதாயம்தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டியதிருக்கிறது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.” (இதுவும் நான் எதிர்பார்க்காததே) “அருவருப்பு போல ஏதாவது தெரியுதா?” என்று கேட்டேன்.

“சுடலையில் எரியும் பிணங்களை இந்தக் கோட்டிக்காரி தின்பதைப் போல ஒரு காட்சி வருதே.. அதை வைத்துக் கேட்கிறீர்களா?”  என்று கேட்டு, அவரே பேசினார்.

“இடித்துரைத்தல் என்பது இலக்கியங்களில் உண்டுதானே. அந்தப் பார்வை இல்லாதவர்களுக்கு இது ஒரு அருவருப்புதான். அப்படிப் பார்த்தால், கோட்டியப்பன் என்னும் பெயருடைய சிவனைப் பற்றி நமது புராணங்களில் இப்படியானவை சொல்லியிருப்பதெல்லாம் வேறு என்ன?” என்று கேட்டார்.

எனக்கு உடனே மனக்கண்ணில் கவிராயன் எட்டயபுரத்தான் பற்களை நெறுநெறுவென்று கடித்துக் கொண்டு “பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று சொல்லுவது தெரிந்தது.

பேச்சி என்ற பெண்ணை பிணம் தின்னும் அளவுக்குக் கொண்டு போனது எது?

“என் நினைவைக் கலைத்தது நா.வா.வின். குரல். இது ஒரு பெண்ணியக் கதையும் கூட” என்றார்.

(ஒரு அப்பிராணிப் பெண்ணை அநியாயமாக இப்படி ஏமாற்றிவிட்டார்களே என்று மட்டும்தான் தெரிந்தது எனக்கு)

அவரிடம் கேட்டேன்,

“உயித்தலம் என்ற சொல்லோ, அதை அவள் பிடித்தாள் என்பதோ ஆபாசமாகத் தெரிகிறதா?”

அவர் சொன்னார்:

“சொற்களும் செய்கையும் எதை விளைவிக்கிறது என்றுதான் பார்க்கவேண்டும். வாசகனிடம் இவை காமத்தைத் தூண்டவில்லை. ஒரு அச்சத்தைத் தருவதுபோல் இருக்கிறது. கதை முடிவு சோகத்தின் உச்சம்; நெஞ்சில் அறைவதுபோல” என்றார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொன்ன வார்த்தைகளை என் மொழியில் இங்கே தந்திருக்கிறேன்.

‘சாந்தி’ ஆசிரியர் முருகானந்தத்தைப் பார்க்க தூத்துக்குடி போக முடியவில்லை என்பதால், விசயத்தை இதேபோல தெரிவித்து கடிதம் வைத்து அனுப்பிவிட்டே இடைசெவல் வந்து சேர்ந்தேன்.

முருகானந்தத்திடமிருந்து பதிலை எதிர்பார்த்துக்கொண்டே இருந்த எனக்கு ‘சாந்தி’ இதழ் மட்டுமே வந்தது. பிரித்துப் பார்த்தால் ‘பேதை’ கதையின் முதல்பாதி பிரசுரமாகி இருந்தது!

“என்னய்யா இப்படிச் செய்து போட்டீகளே?” என்று கேட்டதுக்கு,

“அதனாலென்ன; கதையை எல்லோரும் படிக்கட்டுமே. ஒரு விவாதமே – பட்டிமன்றம்போல – ஏற்பாடு பண்ணி அதையும் சாந்தியிலேயே போடுவோம்.” என்று சொல்லிவிட்டார்!

இப்போது விசயம் தி.க.சி.யின் கருத்து சரியா, கி.ரா.வின் கருத்து சரியா என்பதல்ல; இப்படி நடந்தது எங்கள் விசயங்கள் என்பதுதான்.

அதன்பிறகு தி.க.சி. நேராகவே இடைசெவல் வந்தார். என் கைகளைப் பற்றியதும், நாங்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டோம். பழைய கலகலப்பை உண்டாக்கிவிட்டார்.

அதுதான் தி.க.சி. இதுதான் கி.ரா.

நான் இதுவரை சொத்து என்று சேர்த்ததில்லை. நான் சேர்த்ததெல்லாம் நண்பர்கள் என்ற சம்பளத்தைத்தான்; இவர்கள்தான் எனது சொத்து.

வால்மீகத்தில் ஒரு சுலோகம் இருப்பதாகச் சொல்லுவார்கள்; நட்புக் கொண்டாடுவது லேசு – அதைப் பரிபாலனம் பண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை.

மூத்தப்பிள்ளை என்று (எங்களுக்குள் நாங்கள்) பிரியமாக அழைத்திக் கொள்கிற நண்பர் தி.க.சி. ஒரு சுக்குபோல என்று சொல்லத் தோன்றுகிறது.

சுக்கு நாக்குக்குத்தான் காரம்; வயிற்றிற்கு இதம். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா?

***   
நன்றி : தீராநதி , திரு. கி.ரா ஐயா, திரு.தி.க.சி ஐயா

வடி(வமை)த்து  தட்டச்சு செய்த தாஜூக்கும் சுக்ரியா!

***

தி.க.சி பற்றிய ‘கி.ரா’வின் முழுக்கட்டுரை பார்க்க :

***

மகனார் நதீமுக்கு அம்மை போட்டிருக்கிறது (இந்த வரியை கி.ரா எழுதவில்லை!). எனவே மூட் அவுட். இருந்தாலும் நேற்று பிராமிஸ் செய்ததற்காக இன்று பதிவைப் போட்டு விட்டேன். எங்களுடைய இலக்கிய ஆர்வத்தை மதித்து எங்கிருந்தாலும் ‘பேதை’யை தட்டச்சு செய்து அனுப்புமாறு நண்பர் சென்ஷி கேட்டுக்கொள்ளப்படுகிறார். நன்றி! – ஆபிதீன்

« Older entries Newer entries »