‘உயிர்த்தலம்’ – மேலும் சில விளம்பரங்கள்

‘புத்தகங்கள் ரசிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு’ என்று News7-ல் இன்று காலை சொன்னார் இயக்குனர் தங்கர்பச்சான்‌. என் ‘உயிர்த்தல’த்திற்கு பயங்கர எதிர்ப்பா இருக்கே…! என்று தோன்றியதில் கூகுள் ப்ளஸ்ஸில் நான் பகிர்ந்த மேலும் சில விளம்பரங்களைப் பகிர்கிறேன். நன்றி. – AB
***

Jun 10, 2016

uyirthtlam - vazhaippazam1
அல்-கோஸ் அல்-மதீனா சூப்பர் மார்க்கெட் வாழைப்பழம். ‘சிரிக்காதீர்கள். எனக்கு கோபம் வருகிறது. வாழைப்பழம் என்றால் சிரிப்பு மட்டுமா? ஒரு குடும்பத்தையே சிதறிப் போக வைக்கும் அது.‌..’

—————————

Jun 8, 2016
எனக்கு குத்துச்சண்டை பிடிக்காது என்று சொன்னதற்கு ஏன்டா பிடிக்காது என்று குத்தினால் என்னங்க அர்த்தம்? ‘In any world which is sane, boxing would be a crime’ என்பார் ஓஷோ. சரி, குத்துங்கள் – ‘ருக்உ’வில் வரும் இந்த தமாஷைப் படித்துவிட்டு!

குத்துச்சண்டை வீரர் குல் முஹம்மதுவின் வீட்டில் நுழைய எந்தத் திருடனும் பயப்படுவான். குல் முஹம்மது, வாசலில் ஒரு போர்டு மாட்டி வைத்திருக்கிறார். ‘இது குத்துச் சண்டை வீரர் குல் முஹம்மது வீடு. இவரை இதுவரை குத்துச் சண்டையில் ஜெயித்தவர் யாருமில்லை’ என்று. எவன் நுழைய முடியும் ? ஆனால் ஒருவன் நுழைந்து திருடியும் விட்டான். அவனைப் பிடிக்கலாம் என்று பாய்ந்தால் திருடன் எழுதி வைத்து விட்டுப் போன ஒரு தாள் பட படக்கிறது. ‘ இதை திருடியவர் ஓட்டப் பந்தய வீரர் ஒலி முஹம்மது. இவரை இதுவரை ஓட்டப் பந்தயத்தில் ஜெயித்தவர் யாருமில்லை.’!
—————————

Jun 7, 2016
கவிஞர் தாஜ் : காலச்சுவடு கண்ணனோடு (உயிர்த்தலம் பற்றி) நான் பேசுவதை கேட்ட சிலர் ஆபிதீனின் புத்தகத்தை தேடினார்கள். ஸ்டாலுக்குள் ஆபிதீனின் உயிர்த்தலம் புதிதாக நாலுவரிசை உயரத்துக்கு உயிர்த்தெழுந்தது! ஓரிரண்டு பேர் உயிர்த்தலத்தை வாங்கவும் வாங்கினார்கள்!

பெரிதாக்கிப் பார்க்க : https://www.facebook.com/photo.php?fbid=1060605434009199&set=a.1060605417342534.1073745566.100001792565524&type=3&theater

—————————

Jun 5, 2016

நாகூர்க்காரங்க வைக்கிற தலைப்பெல்லாம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு. அவரு உயிர்த்தலம்.. இவரு (நாகூர் ரூமி) மாற்றுச்சாவி!

—————————

Jun 2, 2016
bonding – Meghdut Sen

bonding - Meghdut Sen

—————————

Apr 26, 2016
உயிர்த்தலம் புத்தகத்தில் எதாவது எழுதி ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க அண்ணி என்று யாழினி கேட்டதற்கு, ‘அண்ணனின் இலக்கியம் ஒழிக!’ என்று எழுதியிருக்கிறாள் அஸ்மா.

—————————
Jun 1, 2016

காலச்சுவடு அரங்கில் ஒருவர் : உயிர்த்தலத்தை வுட்டுட்டு மீதி எல்லாத்தையும் காட்டுங்க சார் !
—————————
Apr 17, 2016
ஆபிதீனின் உயிர்த்தலத்தை முகர்ந்தேன், நல்ல வாசனை என்று முகநூலில் சொல்லியிருக்கிறார் நண்பர் தாஜ் . நன்றி!
—————————

Apr 17, 2016
இன்று துபாய் வந்த ஜாஃபர்நானா , என் உயிர்த்தலத்தைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதை இங்கே காணலாம் (இவர் வாசிப்பதை ஊரில் பார்த்த பேத்தி, ‘ஹை, சிரிப்பு‌‌ புத்தஹம்!’ எனறு சொல்லுமாம்!)
—————————

Dec 1, 2015

காலச்சுவடு வெளியீடாக எனது ‘ உயிர்த்தலம்’ தொகுதி (இரண்டாம் பதிப்பு) வந்திருப்பதில் மகிழ்ச்சி. ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் மதிப்பிற்குரிய ஹனீபாக்கா. ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
https://abedheen.wordpress.com/2015/12/01/uyirththalam-kalachuvadu/

————-
Oct 12, 2014
ஃபேஸ்புக்கில் போகன் சங்கர்

ஆபிதீன் அவர்கள் எழுதிய உயிர்த்தலம் புத்தகத்தை மதுரையில் ஒளிந்திருந்த ஒரு புத்தகக் கடையில் ஒரே ஒரு பிரதி கிடைத்து வாங்கினேன்.இதற்கு முன்பு சில இஸ்லாமிய எழுத்துகளை தமிழில் படித்திருக்கிறேன் .கீரனூர் ஜாகிர் ராஜா ,தோப்பில் தவிர மற்றவை எல்லாம் உரலுக்குள் தலையை விட்டது போலவே இருக்கும்.அதுவும் நல்ல அரபி உரல்.நல்ல அரபி இடி.என் நண்பர் ஒருவருக்கு தோப்பிலே அப்படித்தான் தோன்றிற்று.அவர் கூடுதலாய் மலையாள உரலில் மலையாள இடியும் வேறு சேர்த்து தருவார்.

ஆபிதீன் கதைகள் முற்றிலும் வேறு தளம்.இணைவைத்தலுக்கு மறுமை நாளில் வானகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி காபிர்களுக்கு கவலை இல்லை என்பதால் நான் தைரியமாகவே அவரை பஷீருடன் ஒப்பிடுவேன்.மலையாளத்தின் இக்காமாருக்கே உரிய பகடி.சுய எள்ளல் .அதே சமயம் சாரமற்ற வெற்று வெடிச் சிரிப்பும் அல்ல.தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் கைக்கு புத்தூர் மாவுக் கட்டு போட்டது போலவே எழுதுகிறார்கள் என்பது என் கருத்து.ஆபிதீன் அப்படி அல்ல. தொகுப்பில் உள்ள வாழைப்பழம் கதை ஒன்றே அவரது மேதமையைக் காட்டி விடுகிறது.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி யின் அனாயாசத்தோடுஒரே வீச்சில் நம் தலையையும் வாங்கி விடுகிறார்

நான் இந்தப் புத்தகத்தை வஹாபிகள்,சங்க காரியதரிசிகள் வாழைப்பழத்தை தோல் சீவி வெட்டி சாப்பிடுகிறவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பரிந்துரைப்பேன்

—————————

Friday, December 2, 2011
ஆபிதீன் கதைகள் – அஷ்ரஃப் சிஹாப்தீன்

—————————

Monday, July 28, 2008
ஆபிதீனின் உயிர்த்தலம் / அங்கதத்தின் பிரமாண்டம்! – தாஜ்
*

ஆபிதீன் பற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி . பேசாதவர்களுக்கு என் ஸலாம்!

உயிர்த்தலம் – காலச்சுவடு வெளியீடு

எனது ‘உயிர்த்தலம்’ சிறுகதைத் தொகுதியை – இரண்டாம் பதிப்பாக – வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கும், பின்னட்டைக் குறிப்பு வழங்கிய மதிப்பிற்குரிய ஹனீபாக்கா, வெளிவரத் தூண்டிய நண்பர்கள் தாஜ்பி.கே. சிவகுமார், மஜீது, ஆசிப்மீரான், சென்ஷி ஆகியோருக்கும் மூன்றாம் தொகுதிக்குத் தயாராகக் கதைகள் எழுத வைத்த என் அஸ்மாவுக்கும் நன்றி! ‘நகுலனுக்கு ஒரு சுசீலா போல ஆபிதீனுக்கு ஒரு அஸ்மா! அனைத்துக் கதைகளிலும் அஸ்மா எழுத்தின் மகிழ்ச்சியாகி ஒளிர்கிறாள். நம்மிடமிருந்து என்றோ விடைபெற்றுக்கொண்ட நகைச்சுவை உணர்வுகள் எள்ளலும் கிண்டலும் கேலியுமாக இந்தப் பக்கங்களில் குதூகலிக்கின்றன’ என்கிறார் எஸ்.எல்.எம். ஹனீபா. இருக்கும் 🙂

*
abedheen - uyirthalam - kalachuvadu - cover2

Thanks to Rashmi for the Cover Design. Click the following link to enlarge the image:
https://abedheen.files.wordpress.com/2015/12/abedheen-uyirthalam-kalachuvadu-cover2.jpg
*
தொடர்புடைய பதிவுகள் :

உயிர்த்தலம் முதல்பதிப்பு – ஆபிதீன் முன்னுரை

கோ.ராஜாராம் பதிப்புரை 

புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள் – க. மோகனரங்கன்

உயிர்த்தலம் பற்றி… – தாஜ்

பொங்கிவழியும் அங்கதமும் நீண்டு செல்லும் கதையாடலும் – கீரனூர் ஜாகிர்ராஜா

உயிர்த்தலம் பற்றி… – போகன் சங்கர்

மகானும் மூன்று சிங்கங்களும் – S.L.M. ஹனீபா

‘கண்பார்வை மங்கிப் போகும் காலத்திலும்’ ஃபேஸ்புக்கில்  கலக்குகிறார் காக்கா. அவர் அப்படித்தான்!

***

slmh-with-aamir3

மகானும் மூன்று சிங்கங்களும்

அந்த ஊரில் அவர் மகான். மக்கள் போற்றும் ஆன்மீகவாதி. இறைவனோடு மிகவும் உவப்பான அந்தரங்கம் பூண்டவர். அவரின் நடை, உடை, பேச்சு அனைத்திலும் அமைதியும் அழகும் மோனத்தவமியற்றும்.

பல மைல் தூரமிருந்து இந்த மகானைத் தேடி இன்னொரு பெரும் மனிதர் மகானின் வீட்டுக்கு வருகை தருகிறார்.

“வீட்டில் யாருமில்லையா?”

“யாரைத் தேடி வந்தீங்க?” வீட்டுக்குள்ளிருந்து காட்டமான சத்தம்.

வந்தவர் திடுக்கிட்டுப் போனார்.

“மகானைத் தேடி…” அவர் சொல்லி முடிப்பதற்குள், கதவை வேகமாகத் திறந்த மகானின் மனைவி,

“யாரு மகானா? மகான் என்ற பேர்ல கழுதையைத் தேடில்ல வந்திருக்கீங்க!” மகானின் மனைவி அலறிப் புடைத்தார்.

‘வீடு பிழைத்துப் போனதோ?’ தேடி வந்தவரின் மனம் அசை போட, மறுகணம்,

“ஊரிலுள்ளவர்களெல்லாம் கழுதையைக் காட்டி மகான் என்றால், நீங்களும் நம்பறதா?” மீண்டும் மகானின் துணைவியார் உரத்த குரலில்.

“அது சரி, அவங்க இப்ப எங்க?” வந்தவர்.

“இந்த வழி நெடுகப் போங்க, ஊரின் தொங்கலில பெரிய காடு வரும். அங்கதான் விறகு கொண்டுவரப் போயிருக்காரு நீங்க தேடி வந்த மகான்”

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கச் சொன்னார்.

‘நமக்குத்தான் இப்படியென்றால், மகானுக்கும் இப்படியா?’ தேடி வந்தவரின் மனம் அசை போட, காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பயணக் களைப்பும் பசியும் தாகமும் ஒன்றையொன்று துரத்தின. காட்டை நெருங்கியதும், மர நிழலில் அமர்ந்து இளைப்பாறிய போது, நாவறண்டு தாகம் எடுத்தது. கண்ணயர்ந்து போன சிறிது நேரத்திற்கெல்லாம் தண்ணீர் குமிழ் விடும் சத்தம் அவர் காதைத் தீண்டுகிறது. திடுக்கிட்டு எழுந்தவரின் எதிரில் சிறிய ஊற்றிலிருந்து தண்ணீர் கொப்பளிக்க, தன் இரு கைகளாலும் அள்ளி அள்ளி தாகந்தீரப் பருகுகிறார்.

தான் தேடி வந்தவர் மகான்தான் என்று அவரின் உள்மனம் சொல்கிறது.

மீண்டும் நடை. கொஞ்சத்தூரம் சென்றிருப்பார். அவரால் நம்ப முடியவில்லை. எதிரே இரண்டு சிங்கங்களைப் பிணைத்து அதன் மேல் பெரும் பெரும் விறகுக் கட்டைகளை ஏற்றி, மகான் வந்து கொண்டிருந்தார். இவரைக் கண்டதும் மகான்,

“வீட்டுக்குப் போனீர்களா?”

“ஆம்” என்றார்.

“என்ன வந்தீங்க?”

“இல்ல, காட்டுச் சிங்கத்தைக் கட்டி விறகு ஏற்றி வரப் பழக்கிட்டீங்க. வீட்டுச் சிங்கத்த..?” வந்தவரின் கேள்வி இடையில்.

“அது அப்படித்தான்” மகான் இரண்டு வரியில் பதில் சொல்கிறார்.

“என்னைத் தேடி என்ன வந்தீங்க?” மீண்டும் மகான்.

மறுகணமே, மகானைத் தேடி வந்த மனிதர் வந்த வழியே பயணத்தைத் தொடங்குகிறார்.

“என்ன எதுவும் பேசாமப் போறீங்க?” மகான்.

“வந்த காரியம் முடிந்தது”

மகானின் முகத்தில் குறுநகை.

**

நன்றி : ஹனீபாக்கா

உங்களுக்கு சுடத்தெரியும், சொல்லத் தெரியாதே! – வை. அஹ்மத் சிறுகதையை முன்வைத்து…

ஹனீபாக்காவிடமிருந்து மெயில்.  ‘இந்த மாதத்திலொரு நாள், அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய 7ம் மாநாடு – 2007 வெளியிட்ட இஸ்லாமியச் சிறுகதைகள் தொகுப்பைப் புரட்டினேன். தம்பி, தங்கவாப்பா எங்கட ஆபிதீன்ட கதையைக் காணாம பதறிப் போனேன். உன் கதையில்லாத தொகுப்பு நிறைவாகத் தெரியலியே. இப்படித்தான் தமிழ்ச் சிறுகதையை இதுவரையில் பலர் தொகுத்திருக்கிறார்கள். தொகுத்தவர்களுக்கும் தெரியாமல் சிலர் விடுபட்டுப் போவார்கள். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்…’ என்று எழுதியிருந்தார். ‘காக்கா, உங்கள் மனதில் நான் இருந்தால் போதும்.  மற்றவர்களைப் பற்றி கவலையே இல்லை. உங்கள் கதையை தொகுத்தவர்கள் விட்டார்களா? அல்லது நீங்கள் அனுப்பாமல் விட்டீர்களா? ‘ என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்கள் கேட்கவும் இல்லை; கேட்டு அனுப்பினாலும் வெளியிடவும் மாட்டார்கள்.  என் கச்சடா மொழி அவர்களின் தேர்வுக்கு ஒத்துவராது. அவர்கள் வெளியிட்டதொகுப்பிலிருந்து சில கதைகளை (அப்துல் ஜப்பாரின் ‘வரம்பு‘ மாதிரி) நம் பக்கங்களில் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். அதிலிருக்கும் வேறு கதைகளை இங்கேயே தம்பி சென்ஷி மூலம் தட்டச்சு செய்து வெளியிடவும் திட்டம். இறைவன் போதுமானவன் ‘ என்று சொல்லி நண்பர் பாளையம் சையதின் ‘நெடி‘க்கான சுட்டியையும் அனுப்பி வைத்தேன். பதிலில்லை, ஆனால் பரிசாக வை. அஹ்மதின் சிறுகதை வந்தது, ஒரு புகைப்படத்துடன். பகிர்கிறேன்.

படத்திலிருப்போர் திரு நேசராசா (முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர்) சமாதான காலத்தில் புலிகளால் கடத்தி கொல்லப்பட்டவர். மற்றும் வை. அஹ்மத், எஸ்.எல்.எம். ஹனீபா என்று சொல்லியிருக்கிறார்.காக்கா அந்தப்பக்கம்  நின்றிருந்தால் இஸ்லாமிய இலக்கியம் இன்னும் செழித்திருக்கும் ! – ஆபிதீன்
***

rasa-ahmed-haniffa2

ஹனீபாக்காவின் குறிப்பு :

என் இனிய நண்பன், பள்ளியறைத் தோழன் வை. அஹ்மத் அவர்கள் மறைந்து இன்று 20 வருடங்கள். நேற்றுப் போல் இருக்கிறது. அவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைய நினைவுகள் உண்டு. இருந்தாலும் அவர் மறைந்த அன்று சரிநிகர் சஞ்சிகையில் நான் எழுதிய குறிப்பை இங்கு மீண்டும் பதிவேற்றம் செய்கிறேன்.

வை. அஹ்மதின் வாப்பா, உயர்ந்து கருங்காலி போன்ற உடல்வாகு. அடர்ந்து சிலிர்த்து நிற்கும் புருவங்கள். மிகவும் நீண்ட கூர்மை பெற்ற நாசி.

ஊரிலிருந்து 5 மைல்களுக்கப்பால் காயாங்கேணி தமிழ் கிராமம். அங்குதான் வையுடைய வாப்பாவின் சில்லறைக்கடை. கூடவே உப்புக்கருவாடு போடும் தொழிலும். அவர் கையிலுள்ள மேசைக்கத்தி, கயல், செங்கண்ணன் மீன்களை, ‘கரகர’வென்று கீறிப் பிளக்கும். மீன்களின் அடிவயிற்றில் உரிச்ச பறங்கி வாழப்பழம் போல சினை படுக்கும். நானும் வையும் சினைகளையும் பொக்கணிகளையும் சேகரிப்போம். மூட்டிய அடுப்பில் சினையுடன் சீவிய மாங்காயும் கொச்சிக்காய், வெங்காயமும் உப்பும் சேர்த்து அடுப்பில் வைப்போம். சினை சுண்டி, முறுகி மணக்கும். ஆளுக்கொரு சிரட்டையில் அள்ளிக்கொண்டு தென்னை மர நிழலிலிருந்து சுவைப்போம்.

“டேய் தம்பிமார, கரையாக்கன் பார்வை கொள்ளும், கடைக்குள்ள போங்க” என்பார்.

நாங்களோ வெற்றுச் சிரட்டையை கரையாக்கனுக்கு வீசிவிட்டு, துள்ளிக் குதித்து கடலில் இறங்குவோம்.

கண்கள் சிவக்கும் வரையிலும் கடலில்தான்….

அன்று உப்புக்கடலில் உல்லாசம்.

இன்று இரத்தக் கடலில் வெப்பிசாரம்.

தம்பிகளே! நீங்கள் தமிழீழம் பெற எனது நண்பன் செய்த தடையென்ன, சதியென்ன?

உங்களுக்குச் சுடத்தெரியும், சொல்லத் தெரியாதே!

***

21 வருடங்கள். நேற்றுப் போல் இருக்கிறது. என் இனிய நண்பன் வை. அஹ்மத் அவர்கள் பயணித்த வாகனம் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிதறுண்டு அகாலமரணமடைந்த நாள். 26.12.1992.

அன்று அந்த வாகனத்தில் நானும் பயணிக்க ஏறி, அவசர அழைப்பின் காரணமாக வாகனத்திலிருந்து இறங்கி வந்தேன். சென்ற வாகனம் சென்றதுதான். எப்படியோ நான் உயிர் தப்பி அந்த நாளை நினைத்து நினைத்து அந்த நண்பனை எண்ணி எண்ணி காலம் போகிறது.

ஆபிதீன் பக்கங்களில் முதலாவது கதையாகவே நண்பனின் கதை வந்திருக்க வேண்டும். இழுபட்டு இழுபட்டு இன்றாவது இதை டைப் செய்து அனுப்புகிறேன்.

வை. அஹ்மத், வாழைச்சேனை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்புப் படித்து விட்டும் நான் மீராவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புப் படித்து விட்டும், இருவரும் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்திற்கு கல்வி கற்க வந்தோம். அன்றிலிருந்து மரணிக்கும் வரையிலும் நண்பர்களாக இருந்தோம்.

என்னை விட ஒரு வருடம் முன்னரே அவர் எழுத்துலகுக்கு வந்து விட்டார். தினகரன் வாரமஞ்சரியில் உருவகக் கதைகள், குட்டிக்கதைகள் பின்னர் சிறுகதைகள், நாவல், கட்டுரையிலக்கியம் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர். அவர் மறைந்த இந்த நாளில் அவருடைய மதியம் தப்புகிறது கதையை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.

***

மதியம் தப்புகிறது
வை. அஹ்மத்

வாப்பாவுக்கு நீஞ்சத் தெரியும். எனக்கும் நீஞ்சத் தெரியும். சின்ன வயசில் நானும், வாப்பாவும் பொழுது பட்டதுக்குப் புறகு அத்தாங்கும் கணவா லாம்பும் எடுத்துக்கிட்டு, இறால் பிடிக்க ஆத்துக்குப் போவம். கருவண்டல் இறால் கொள்ளை கொள்ளையாக ஆத்தில முழங்காலளவுத் தண்ணியில, பூமியோட பட்டாப்போல பதுங்கிக்கிட்டுக் கிடக்கும். நெருப்புக் கண்ணும் துடிக்கிற மீசையுமாக அதுகள் பதுங்கிக் கிடக்கிறக்க லாம்பு வெளிச்சத்தில வாப்பா கண்டிடுவாரு. நான் லாம்பைப் படிச்சிக்கிட்டுப் போவன். எனக்கிட்ட புடிக்கிற இறாலப் போட்டுக் கொள்ள குட்டிச்சாக்கு ஆயத்தமாக இருக்கும். வாப்பா அப்படியே அத்தாங்கை இறாலுக்கு மேலே குப்புறப் போட்டிடுவாரு. இறால் படபடவெனத் துடிக்கும். வாப்பாட வலது கை அப்பிடியே இறாலை அப்பிக்கும். குட்டிச் சாக்கில திரும்பவும் படபடப்புக் கேட்கும். இறால் துடிதுடிக்கிறத்த நான் உணர்வன்.

அப்பவெல்லாம் எனக்கு நீஞ்சத் தெரியாது.

வாப்பா தாற பத்து சதக் காசிக்காக, நான் ஒவ்வொரு நாளும் லாம்பு பிடிச்சிக்கிட்டுப் போவன். ஆனா நான் பள்ளிக்கூடத்தில இரண்டாம் வகுப்பு முட வாத்தியாருக்கிட்ட படிச்சு, அவருக்கு ஏசிப்போட்டு வந்ததுக்குப் புறவு பள்ளிய விட்டிட்டன். அதுக்குப் புறவு நான் வாப்பாவோட தொழிலுக்குப் போவத் துடங்கிட்டன்.

நானும் வாப்பாவும் விடியறதுக்கு ஒரு சாமத்துக்கு முன்னமாக எழும்பிடுவம். வாப்பா பதினெட்டு முழ வலையை தோளில போட்டுக்கிட்டு நடப்பாரு. நானும் கண்ணக் கசக்கிக் கசக்கி நித்திரையை விரட்டிக்கிட்டு பின்னால நடப்பன். ஆத்தங்கரையில எங்கட தோணி இருக்கும். நான் தோணி தொடுப்பன். நெத்தலி, சூடை, மணல மீன் பாட்டம் ஆத்தில கருமையடிச்சிக்கிட்டும். வாப்பா தோடியிலே நிண்டுக்கிட்டு முன்னங்கையில ஈயக்குண்டு கட்டிய வலையை விரிச்சாப்போல ஆயத்தமாக இருப்பாரு. சடாரென வட்டம் போட்டு வலை மேல எழும்பி விரிந்து தண்ணியில சளாரென விழும். வலைக்குள்ள அகப்பட்டதைத் தவிர மத்த மீன்கள் துள்ளி ஓடும். வாப்பா வலைய மெதுவாக, ஆறுதலாக மேலே தூக்கி எடுப்பாரு. நான் சவளைத் தோணியோட இணைச்சு, அணைச்சு பின்னுக்கு வலையின் இழுவைக்குத் தக்க வலிப்பன்.

ஒவ்வொரு பாட்ட வீச்சுக்கும் நாலஞ்சு கயல் மீன்கள், ஏழெட்டுச் சூடைகள், கொஞ்சம் இறால், சில்லறை மீன்கள் இப்படித் தோணிக்குள்ள விழும். சரியாக ஏழு மணிக்கு சூரியன் எழுவானில் ஒரு பாக உயரத்துக்கு எழுப்பின பிறகு, தோணியைத் துறைக்கு விடுவம். எங்கட தோணியில குறைஞ்சது பத்து ரூபாவுக்கெண்டாலும் மீன் கிடக்கும். எங்கட மீன வாங்கிப்போக மீன் யாவாரி இஸ்மான்குட்டி விடியச்சாமமே வந்து காத்துக்கிட்டு இருப்பாரு. எல்லா மீனையும் அள்ளிப் போட்டுக் கொண்டு இஸ்மான்குட்டி பறந்திடுவாரு.

நாங்க வீட்ட போய், தண்ணிச்சோத்தில இலுமிச்சம் புளியும் உப்பும் ஊத்தி ஒரு பிடி பிடிப்பம். எனக்கு கரைச்சுக் குடிக்கிறதுக்கு முந்தி, பழய கறியோட ஒரு பீங்கான் சோத்த உள்ள போட்டாத்தான் பசி அடங்கும். புறவு பகல் கறிப்பாட்டுக்கு எங்கட துறையில ஒரு பாட்டம் வீசுவம். சில நேரத்தில நான் மட்டும் போவன்; இல்லாட்டி வாப்பா மட்டும் போவாரு.

இதெல்லாம் பழைய கதை. நான் நீஞ்சப் பழகின கதைக்கு வர இதெல்லாம் ஞாபகத்துக்கு வருகுது…

விடியச் சாமத்துக்கு எழும்புற பழக்கம் எனக்கு முந்தியில்ல. பள்ளியில படிக்கக்குள்ள ஏழு மணிக்குத்தான் எழும்புவன். வலை வீசப் போய்வாற வாப்பாதான் வந்து எழுப்புவாரு. ஆனா… வாப்பாவோட தொழிலுக்குப் போகத் தொடங்கிய காலமாக, விடியச் சாவத்திலேய எழும்ப வேண்டியதாயிட்டு.

ஒரு நாள் வாப்பா என்னை எழுப்பிப் போட்டுத் துறைக்குப் போயிட்டாரு. நான் கண்ணைக் கசக்கிக்கிட்டுப் பின்னால ஓடிப்போனன். தோணியில ஏறி சவளைப் போட்டு வலிச்சன்; ஒரு பாட்டம் வாப்பா வீசிப்போட்டாரு. நான் மெதுவாகப் பின்னால வலிச்சிட்டு இருந்தன். என்னையறியாமலே எனக்குக் கண் மூடிப்போச்சு. அப்படியே கையிலிருந்த சவள் விழ, நானும் திடீரெண்டாப்போல கண்ணை முழிச்சிப் பாத்தன். எனக்கும் ஒண்டும் விளங்கல்ல. சவள விட்டத்த வாப்பா கண்டு ஏசுவாரு எண்ட பயத்தில அவசரமாகக் கையத் தண்ணியில போட்டடன். நான் நினைச்சத்துக்கு மாறாகத் தண்ணியில குப்புற விழுந்திட்டன். வாப்பா காணாட்டி நான் அண்டைக்குப் போயிருப்பன். வாப்பா வலையை ஒரே இழுவையாக இழுத்துப் போட்டு பாஞ்சு வந்து என்னைத் தோணியில தூக்கிப் போட்டாரு.

“என்னடா அசனா நீ, இப்படியா அசந்து இருக்கிற?” எண்டு வாப்பா கேட்டது என் காதில விழுந்தது. எண்டாலும் எனக்குக் குளிர் பிடிச்சதால நடுங்கிப் போனன்.

“நித்திரை வந்திட்டுது… கண்ணசந்திட்டன். சவள் விழுந்திட்டுது… எடுக்கலாம் எண்டு குனிஞ்சன், தவறிட்டுது…” எண்டு நான் சொன்னேன்.

“உனக்கு நீஞ்சத் தெரியணும். பாத்தியா காலம நீ தண்ணியில முழுகிடப் போனாய். நம்மட உசிர தண்ணியில இருந்து காத்துக்கிறதாயிருந்தா நீஞ்சத் தெரியணும்” எண்டு அண்டு சாயங்காலம் வாப்பா சொன்னாரு. சொன்ன கையோட ஆத்துக்கு கூட்டிப் போய் நீஞ்சப் பழக்கினாரு. முதலைக் குட்டிக்கு நீஞ்சப் பழக்கணுமா? நான் நீஞ்சப் பழகினன்.

அதுக்குப் புறவு விளையாட்டுப் போட்டியில வைச்சு நீச்சல் போட்டியில நானும் போட்டி போட்டு பதினஞ்சு பேரத் தோக்கடிச்சு முதல் பிறைஸ் எடுத்தன். அது எல்லாம் அந்தக் காலம். பழைய கதையாகின காலம். அப்ப கூறைப்பாய் வள்ளமும், ஒறுவையும்தான் கடலுக்குப் போகும். தூண்டல் ஈயக்குண்டு, எறி கவுறு, கம்பான் கயிறு, கணவா லாம்பு, ஊரி இல்லாட்டி இறால் இரை, இதுகள்தான் எங்கட மீன் பிடிக்கிற ஆயுதங்கள். நடுச்சாமம் புறப்பட்டா பொலுபொலுவென விடியறத்துக்குள்ள பத்துப் பன்ரெண்டு பாக ஆழக் கடலில் கிடப்பம். ‘தாண்ட கப்பலடி’, இல்லாட்டி ‘கரூஞ்சேரி முனை’ இல்லாட்டி ‘ஆனக்கல்லு’ எண்டு மதிப்பு வைச்சுக்கிடந்தா லீவு இல்ல. ஒரே இழுவதான். இரண்டொரு மணித்தியாலத்து நேரத்துக்குப் பிழைப்பு, முப்பது நாற்பது எண்டு…

இப்ப இரண்டாயிரம் மூவாயிரம்தான். அதுக்குக் கொஞ்சக் கஷ்டமா பாடுபடவேண்டிக் கிடக்குது.

ஆழிக் கடல்ல கண்ணுக்குத் தெரியாத துலையில நீலத் தண்ணியில நைலோன் வலையைப் போடணும். ‘பெண்டா மெஷின்’ இல்லாட்டி இம்மாத்திரம் துலைக்கு வரமுடியுமா? பழைய வீச்சு, இறால் பிடி இதெல்லாம் இப்ப சாதாரணம். மாய வலையில மீன் பிடிக்கிற இந்த வேலை வெள்ளைக்காற வேலைதான். கவன்மெண்டு உத்தியோகத்தை விட பதினாறு மடங்கு பெரிது. கட்டுப்பாடில்ல. நினைச்ச நேரத்தில நினைச்ச மாதிரித் தொழில். காசு சுளை சுளையாக கிடைக்குதுதான். மனுஷண்ட மூளையில கண்ட கருவிகளைத் துணையாகக் கொண்டு மசவுக் கடலுக்கு உசிரப் பயணம் வைச்சுப் போறம். வானத்தில தெரியிற வெள்ளிகளும் கழிச்சு வீசுகிற காத்தும் எங்கேயோ தூரத்தில இருந்து வாற மண்ட மணமும் எங்களுக்கு வழிகாட்டுற அந்தத் துணிச்சல், அதாலதான் பிரயாணப்பட்டுப் போறம்.

கூறப்பாயும் அறுவை வள்ளமும் இருந்த காலத்தில கடலில நீண்ட தூரம் போகப் பயம். காத்திருந்தா எப்படியும் மத்தியானம் கரை தட்டிடலாம். காத்தில்லாட்டி வலி வலியெண்டு வலிச்சு கையும் மீனும் நொந்து போகிற நேரத்தில கரைக்கு வரணும். இரவையில, விடிவெள்ளி கிளம்புற நேரத்தில புறப்பட்டுப் போனா, கடலுக்குள்ள பூந்த உடன கரையில இருக்கிற மரங்களெல்லாம் அப்படியே பூமிக்குப் பதியும். அப்ப மதியம் இல்லாமல் போயிடும் எண்டு எங்கட பயணத்தை நிறுத்துவம். குடும்பி மலை உச்சிதான் எங்கட மதியம். அது தப்பினால எங்கட உயிரும் தப்பும். இப்படி வாப்பா அடிக்கடி சொல்லுவார். குடும்பி மலை, குடும்பி மலை அது உயிர வச்சுக்கிற மலை. அது எங்கேயோ இருக்கு. கரைக்குப் போனா அதைக் கண்ணால பார்க்க ஏலா. கண்ணால பாக்காட்டி என்னை எப்பவாச்சும் கண்டுக்கத்தான் போறம்.

இப்ப குடும்பி மலையும் தெரியாது. பூமியும் தெரியாது. இதையெல்லாம் கவனிக்க இந்த பெண்டா மெசின்தான் விடுதா. வள்ளம் கடலில ஓடிக் கொண்டிருக்கையிலேயே காடு ஓடி மறையிது. குடும்பி மலையும் மேலே எழும்பிக் குதிச்சுக் குதிச்சு மறைந்து போகுது. அதுக்குப் புறவு வானமும் கடலும் ஒண்டாகி உலகமே கடலாகவே மாறி வட்டவடிவமா விடுகுது. விடியச் சாமத்தில வலையைப் பிடிச்சு, வெள்ளி நட்சத்திரங்களின் போக்குப்படி நிலவு போற திக்கில வள்ளம் திரும்பும் எண்டாலும் வள்ளம் ஓடு ஓடு என்று ஓடி குடும்பி மலை உச்சி கண்ணில பட்டாத்தான் உயிரு வரும். குடும்பி மலை எங்கட சீவியத்தோடயே வருகுது.

எனக்கு பெண்டா மெஷினோடு சொந்த வள்ளம், வலை எல்லாம் இருக்குது. எப்படியோ கஷ்டப்பட்டுத் தேடிப்போட்டன். கடனக்கிடனப்பட்டு இத வைச்சதால நானும் இந்த வெட்டையில மனுஷனாக மதிக்கப்பட்டு நாலு பேரால கதைக்கப்படுகிறன். ஒரு வீடும் கட்டிப் போட்டன். பச்சைப் பசலி மாதிரி எண்ட குமரும் வளர்ந்துட்டுது. நபீஸா பீவிக்கு வாற வருஷத்தில கல்யாணம் செய்து வைக்கவேணும். அவளும் குமராகி ஒரு வருஷமாயிட்டுது. வீட்டிலே குமரு ஒண்டு கல்யாணம் ஆகாம காத்துக்கிட்டு இருக்கிறது நல்லதில்லை எண்டு சொல்லுவாங்க. ஒரு குமரு விடுற பெருமூச்சு அல்லாட அர்சத்தாண்டுமாம் எண்டு நம்மட அப்பன் ஆச்சிமார் சொல்றதைக் கேட்டிருக்கேன். ஆனா ஒரு குமரைக் கரை சேர்க்கிறதெண்டா சும்மாவா?

நபீஸா எங்கட உம்மாவைப் போல செக்கச் செவேலெண்ட மேனி. அவளைக் கல்யாணம் கட்டிக்க எத்தனை பேருக்கு ஆசை. மம்முத்தம்பி முதலாளியும் கேட்டுக்கேட்டு விசளம் அனுப்பிக்கிட்டே இருக்காரு. எண்ட பெஞ்சாதிக்கு அவட காக்காட மகன் சின்னவனை எடுத்து முடிக்கத்தான் விருப்பம். சின்னவனுக்கிட்ட என்னதான் இருக்கு?

எண்ட மூத்த பெடியன் பிறந்த நேரத்தில எனக்கு சரியான கஷ்டம். நபீஸா பீவி புறந்ததற்குப் புறவுதான் நாங்க நல்லா உடுக்கிறதும், தின்றதும். அவள் மூணாம் கால். மூணாம் கால் பொம்புளப் புள்ள அதிர்ஷ்டம் எண்டு சொல்லுவாங்களே. இப்ப நாங்க வாப்பா மக்கள் மூண்டு பேருந்தான் கடலுக்குப் போறம். எண்ட மூத்த மகன் சேகு எப்படியெண்டாலும் ஒரு ‘போட்டு’ எடுக்கணும் எண்டு சொல்லிக் கொண்டு இருக்கான். ஆண்டவன் அவண்ட எண்ணத்தை நிறைவேற்றுவான். இன்னம் கொஞ்சக் காசி சேத்துக்கிட்டோமெண்டால் போட்டுத்தான். இந்த வள்ளத்தில தூரப் பயணம் போக ஏலாது. அது இண்டைக்கு நல்லாத் தெரியுது.

இண்டைக்கெண்டு இருந்தாப்போல இந்தக் காத்து இவ்வளவு வேகமா வீசணுமா? சோளக்காத்து வாடைக் கச்சானாக மாறி பேய் பிடிச்சவன் மாதிரி வள்ளத்தைப் போட்டு ஆட்டுது. மலையைப் போல அலையும் எழும்புது. புள்ளையள் பயந்து கியந்து போவானுகள். இவன்கள் கடலுக்கு வந்த காலத்தில இப்படியான ஒரு கஷ்டத்தை அனுபவிச்சிருக்க மாட்டானுகள். இப்ப இந்த வள்ளத்தில இருக்கிற மூண்டு பேரில எனக்கு மட்டுந்தான் நீஞ்சத் தெரியும். நீஞ்சத் தெரிஞ்சு என்ன புண்ணியம். வாப்பா சொன்னது ஞாபகமா இருக்குத்தான். கரை கிட்டவாகவா இருக்கு?

‘அல்லாஹ்வே முகையதீன் ஆண்டவரே’ எங்களக் காப்பாத்துங்க. இந்தக் கஷ்டத்தில இருந்து தப்பி எங்கட புள்ளகுட்டிகள்ர முகத்தைப் பக்கணும். யா அல்லாஹ்வே, எனக்கு ஒண்டும் செய்ய ஏலாப்போல உடம்பெல்லாம் சவுக்குது. ‘சேகு மகன், மெஷினை இஸ்டாட் பண்ணுடா’ எண்டா, ‘மெஷின் வேல செய்யுதில்ல?’ எண்டுட்டானே. எனக்கு இடுப்புக் கழண்டு போச்சு. இப்ப எப்படிக் கரைக்குப் போற, சவளுமில்லயே, வலிக்கிறதுக்கு சவள் இருந்தா வலிச்சு வலிச்சு போகலாம்தானே, கொஞ்ச தூரமா?

வாப்பா சொன்ன குடும்பி மலையை விட்டு விட்டு, இப்படி பணத்தாசை பிடிச்சு வந்துட்டோம். இதனாலதான் எங்கட உசிர இப்ப எப்படி எதைக் கொண்டு காத்துக்கிறது எண்டு தெரியல்ல.

அப்படியும் இப்படியுமாக ஒரு நாள் கழிஞ்சுட்டுதே. எங்களக் காப்பாத்த யாரும் வரமாட்டாங்களோ? அவன் மம்முத்தம்பி முதலாளிகிட்ட ‘போட்’ இருக்குத்தானே. அவனாச்சும் வரப்படாதா? எனக்கு கை கால் சவுக்குது. என்னால எழும்பி கடலைச் சுத்தியாச்சும் பாக்க ஏலாம இருக்குதே.

‘வாப்பா… வாப்பா… யாரோ போட்டொண்டு எடுத்துக்கிட்டு வாறாங்க. உங்கட சால்வையைத் தூக்கிக் காட்டுங்க’ எண்டு மகன் சொன்னதைக் கேட்டதும்தான் எனக்கு உசிர் வந்துவிட்டது போல. நான் எழும்புறத்துக்குள்ள ‘போட்’ எங்களுக்கிட்ட வந்துட்டுது.

ஆ… ஆ… தம்பியா ஆண்டவன்தான் தம்பி உங்கள அனுப்ப இருக்கான்… இந்தக் கடலலைகள் போடுற சத்தத்தில இது கேட்கவா போகுது.

‘மாமா, மம்முத்தம்பி முதலாளிக்கிட்ட போய் உங்களைத் தேடிப் பாக்கலாமெண்டு ‘போட்’ கேட்டேன். அவர்ர மெஷின் பழுதாயிட்டு எண்டு சொல்லிப் போட்டு இராவு கடலுக்கு ‘போட்ட’ அனுப்பிட்டாரு. அதனால வர முடியல்ல. நம்மட தம்பிலெவ்வையிட போட்ட எடுத்துக்கிட்டு நான் தனிய வாறன்’ பட்டும் படாமலும் சின்னவன் தம்பியின் குரல் கேட்குது, அவன் அவட காக்காட மகன்…

வீரகேசரி 1976

**

நன்றி : எஸ்.எம்.எம். ஹனீபா , ஸபீர் ஹாபிஸ்

« Older entries