பொய்யும் புறமும் அற்றிருந்தோம்

ஈதென் வாழ்த்துகளே!

இப்னு ஹம்துன்

மாதம் ஒன்று மலர்ந்ததுவே
மண்ணில் மனிதம் புலர்ந்ததுவே
வேத வெளிச்சம் படர்ந்திடவே
உள்ளம் தூய்மை அடைந்திடுமே!
நீத நெறிகள் துலங்கியதால்
நன்மை தீமை விளங்கியதே!
மீத வாழ்வும் ஒளிபெறவே
மீட்சி என்றும் இறையிடமே!
 
பொய்யும் புறமும் அற்றிருந்தோம்
பாவம் தொலைக்கக் கற்றிருந்தோம்
மெய்யின் மெய்யை அறிந்திட்டோம்
மேன்மை நோன்பைப் புரிந்திட்டோம்
செய்யும் செயலில் உள்ளெண்ணம்
சிறப்பாய் இறையைச் சார்ந்துவிடின்
உய்யும் வழியும் நமதாகும்
உணர வைத்தான் இறையவனே!
 
நோன்பை சரியாய் வைத்தோரே
நோக்கில் வெற்றி பெற்றோராம்.
தான்தான் என்னும்  தன்னலனை
தவிடு செய்தோம் பசித்திருந்தே…
ஆன்ம பலத்தின் பயிற்சிக்கே
அழகுப் பரிசாய் பெருநாளே!
மாண்பு மிக்க வெற்றியிலே
மதிப்பாய் ஈதென் வாழ்த்துகளே!

***

பண்டிகை

மஜீத்

எனக்குக்கூட‌
பண்டிகைகள் ரொம்பப் பிடிக்கும்
தீபாவளி உள்பட
என்னைப்போல் ‘பகுத்தறிவு’பேசுவோரின்
மேலாதிக்கம் அவற்றைத் தடுக்காததில்
சிறிது மகிழ்வும் தழைக்கும்
அவைகள் இல்லாவிட்டால்
ஒருபிடி ‘சுவை’யுணவும்
ஒரு ‘கோடி’த்துணியும்
வருடமொரு முறையாவது
கட்டாயமாக்கப்பட்டிருக்காது
சுகவாழ்வு நிரந்தரமாக மறுக்கப்பட்ட
என்
சோதரர்களுக்கு
வேறென்ன‌  கிடைக்கிற‌து?
அல்ல‌து கிடைக்க‌த்தான் போகிற‌து இனி?

*

நன்றி : இப்னு ஹம்துன் , மஜீத்

குழு சாராத குழுவிலிருந்து…

‘என்’ணங்கள் – 2 : இப்னு ஹம்துன்

தன்னை நல்லவனாகக் ‘காட்டி’க்கொள்ளும் இயல்பு எல்லா மனிதரிடத்தும் உண்டு. அதற்காக பல்வேறு வழிமுறைகளைக் கையாள்வதுமுண்டு. அவற்றுள் மோசமான வழி என்னவென்றால், மற்றவர்களின் தவறுகளைத் தம்பட்டம் அடித்து மின்னஞ்சல் வழி தொழிற்நுட்ப உதவியோடு மின்னணு வேகத்தில் புறம் பேசுவது. “அவன் இத்தனை மோசமானவன்” என்று சொல்வதில் இருக்கும் ‘உள்’அரசியல் “நான் எத்தனை நல்லவன்” என்பதே! தனிமனிதனுக்கே இந்த உளவியல் என்றால், இயக்க மயக்கத்தில், குழுவாகச் செயற்படுகையில் “நாங்க மட்டும் தான் நல்லவய்ங்க” மனப்பான்மை தலைவிரித்தாடுகிறது. தாங்க முடிவதில்லை.
காரைக்காலில் நடந்த கொடுமை , கத்தரிக்காயில் கண்ட மடமை என்று மின்னஞ்சல்களில் புறம் பேசும்பேச்சுகள் பறக்கின்றன. உண்மையில், கொடுமையோ தவறோ செய்யாமல் சகமனிதனை (அ) மனிதர்களைத் தடுக்கும் எண்ணமிருந்தால், தனிப்பட்ட முறையில் எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டுமே தவிர தம்பட்டம் அடித்து மானம் மரியாதையை வாங்கு வாங்கென்று வாங்கி அல்ல.  எல்லோருக்கும் உபதேசிக்கவே நாம் பிறந்தோம் என்கிற மனப்பான்மை மாறாதவரை இது மாறப்போவதில்லை.

***

பெருநாளைக்கு இன்னும் சில நாள்களே இருக்கின்றன. ஆனால், என்றைக்குப் பெருநாள் என்று இன்னும் தீர்மானிக்க முடியாமல் தத்தளிக்கிறது முழு முஸ்லிம் சமுதாயமும். “பிறை பார்த்துத் தான் நோன்பைப் பிடிக்க வேண்டும்; நோன்பை முடிக்க வேண்டும்” என்கிற நபிமொழியைச் சரியாக விளங்காமல் சில முல்லாக்கள் பிடிவாதம் பிடிப்பதால் இந்த குளறுபடி. 09 செப்டம்பர் 2010 உலகம் முழுக்க (அந்த முனையிலிருந்து இந்த முனை வரை) வியாழக்கிழமை தான் என்று சொல்லிவிடமுடிகிறது. ஆனால் 1 ஷவ்வால் 1431 வியாழக்கிழமையென்றோ/வெள்ளியென்றோ அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. கொடுமை என்னவென்றால், 15 கி.மீ இடைவெளியில் உள்ள நாகூருக்கும் காரைக்காலும் சந்திர நாட்காட்டியில் இரு வேறு கிழமைகளில் பெருநாள் (ஷவ்வால் 1) வருவது தான். அங்கே வியாழன் என்றால், இங்கே வெள்ளி. அதெப்படி 15 கி.மீட்டரில் சந்திரன் வேறுபடுமோ தெரியவில்லை. நபி (ஸல்)காலத்தில்,அன்றைய சூழலில் இறைவன் கூறியுள்ள திருக்குர்ஆன் 55:5 வசனத்தின்படி சூரிய சந்திர சுழற்சியை துல்லியமாக முன்கூட்டியே கணக்கிடும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. மாதங்களின் கணக்குகளைச் சரி செய்வதற்குப் பிறையின் படித்தரங்களைக் கண்ணால் காண வேண்டிய நிலையில் இருந்தார்கள். பிறையின் படித்தரங் களைக் கண்ணால் காண்பதை ஒரு சடங்காகவோ வணக்கமாகவோ அவர்கள் கருதவுமில்லை; கட்டளையிடவுமில்லை. அது ஒரு வழிமுறை; அவ்வளவுதான். என்று கருத்து தெரிவித்துள்ள ஹிஜ்ரா கமிட்டி ஆஃப் இந்தியா வின் அண்மை வெளியீடு இதில் சரியான திசையில் பயணிக்கிறது. நாட்காட்டிகள் பற்றிய அறிவுக்கு, அவசியம் படிக்க வேண்டிய கருத்துகள்.

Download/View பிறை காலண்டர்

***

போன வருடமே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் . ரமளான் மாதம் வந்துவிட்டாலே நம்மவர்கள் நிறைய பேருக்கு ‘சஹர் நேர சிந்தனைகள்’ தோன்ற ஆரம்பிக்கின்றன. தொ.கா. ஓடைகளில் அறிவு வெள்ளம் கரை புரள்கிறது அந்நேரம். நல்லது தான். எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாக கருத்தொற்றுமையாக அனைத்து செய்திகளும்/கருத்துகளும் அமைந்தால் நல்லது தான். ஆனால் , தத்தம் இயக்கங்களுக்கான சந்தைப்படுத்தும் நேரமாகவே பல அமைப்புகளும் அதைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அதாவது பரவாயில்லை, தம் கருத்தே சரி என்று வாதிடவும், பிற(ர்) கருத்தை நிராகரிக்க வைக்கும் முயற்சியாகவுமே இந்த ‘உரை’கள் அமைந்துவிடுவதுதான் தாங்க முடியவில்லை. யாருக்கேனும் உறைத்தால் சரி. கடந்த வருடம் இந்த உரைகள் சிலவற்றைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. யாரோ ஒரு …..மீ என்கிற மெளலவி “கண் தானம் ஹராம்” என்று பதில்/பஃத்வா கொடுத்தார். “எந்த நிலையில் மரணிக்கிறீர்களோ, அந்த நிலையிலேயே எழுப்பப்படுவீர்கள்” என்ற நபிமொழியை அவர் விளங்கிய விதம் அது. அதற்குமேல் “பார்க்க”த் தோன்றாமல் அணைத்துவிட்டேன் தொ.கா.வை.

நேற்று கூட ஒருவர் என்னிடம் கேட்டார், “நீங்க எந்த அமைப்புல இருக்கீங்க?”

வழமையான பதிலைச் சொன்னேன் :

“குழு சாராத குழுவுலேதான்ங்க!”

*

நன்றி : இப்னு ஹம்துன்

E-Mail : fakhrudeen.h@gmail.com

‘என்’ணங்கள் – இப்னு ஹம்துன்

பரங்கிப்பேட்டை சகோதரர் பஃக்ருத்தீனின் (இப்னு ஹம்துன்) எண்ணங்களை  பதிவிடுகிறேன். அவருடைய ‘என்’ணங்களை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

***

இப்னு ஹம்துன் :

நாளிது  வரையில், உலகில் நிகழ்வுற்ற மகத்தான இயற்கைப் பேரழிவு என்று எதனைச் சொல்வது?  தனது வலைப்பதிவில் பா.ரா எழுதியிருக்கும் நீரில் மிதக்கும் தேசம்   என்கிற கட்டுரையில் இதற்கு விடை இருக்கிறது. ஆம்,பாகிஸ்தான் கண்டுவரும்  அண்மைய வெள்ளம் தான் அது.  மழையென்றால் பேய் மழை. வெள்ளமென்றால் பிசாசு வெள்ளம். இங்கே அங்கே என்றல்ல. தேசமே நாசமாகிப் போன பெரும் அழிவு. கிட்டத்தட்ட ஒரு கோடியே பதினேழு லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரம் இந்த இடத்திலே சொல்லிவைக்கலாம்.
 
 உலக சரித்திரம் அல்லது பூகோளம் இதற்குமுன் காணாத மகத்தான இயற்கைப் பேரழிவு என்பது சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்ததுதான் என்று அவர் எழுதியிருக்கிறார். இந்தியாவில் இச்செய்தி பெரிதும் ஊடகப்படுத்தப்படவோ, அதனால் பெரிய அளவில் மக்களிடம் சலனங்களோ இல்லை. ஜனங்களின் மனங்களுக்கிடைப்பட்ட; மற்றுமுள்ள பெளதீக தொலைவுகளும், சுயநல சூழலும் இதற்குக் காரணமெனினும், பாழாய்ப் போன அரசியலே பிரதானம். இந்தியாவின் நிதி உதவியைக்கூட ஐ.நா வழியாகக் கொடுத்தால் தான் பெற்றுக்கொள்வேன் என்று பாகிஸ்தான் முரண்டு பிடிக்கிற அளவுக்கு அரசியல்.

முதல் நாகரிகமாக அறியப்பட்ட சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோ இந்த மழையில் முற்றிலுமாக தன் தடயங்களை இழந்துவிட்டிருக்கிறதாம். அதைவிட, எதிரியின் துக்கத்தில் குரூர மகிழ்ச்சியடையும் நம்மவர்கள் சிலரின் நாகரிகத்தை; அற்ப, வக்கிர மனநிலையை, தேசப்பற்றின் பெயரால் ‘கமெண்ட்’களில் கண்ணுற்றதாக பா.ரா ஆதங்கப்பட்டிருக்கிறார். இத்தனை நாட்டுப்பற்று மிக்கோரின் நாட்டுப்பற்று சொந்த நாட்டின் பொது(காமன்) மக்களின் சொத்து(வெல்த்)களைச் சூறையாடுவோர் மீது எந்த எதிர்வினையும் புரியாதிருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை.
பாரா.வின் பதிவு பாராட்டப்படவேண்டிய பதிவு.

***

மனிதக் கறி கிடைக்கும் என்று இணையதள விளம்பரம் கொடுத்துள்ள உணவகம் பற்றி இந்தச் செய்தி தெரிவிக்கிறது. என்ன ஒரு கொடுமை!  ஜெர்மனியில் உள்ள உணவகம் மனித உடல்பாகங்களை விநியோகிக்க ஆள்கள் வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் கேட்கிறதாம். அரசாங்கம் ஏதும் நடவடிக்கை எடுக்குமா? தெரியவில்லை. மனிதமே உன் விலை என்ன?

 ***

எல்லாவற்றையும் விட பெரிய அதிர்ச்சி அளித்த செய்தி,சவூதியில் இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு நேர்ந்த வங்கொடுமை. நினைக்கும்போதே கண்ணில் நீர் முட்டுகிறது. 24 ஆணிகள் உடலில் அடிக்கப்பட்ட நிலையில் ஊர் திரும்பியுள்ள அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா? மனிதர்கள் என்ற பெயரில் இப்படியும் அரக்கர்களா? ஒரு சிறு அன்னியப் பொருள் உடலுள் புகுந்துவிட்டாலே, நாம் எப்படி துன்பமடைகிறோம், இத்தனை ஆணிகளைத் தன்னுடலில் தைக்கப்பட்ட அந்தப் பெண் எப்படியெல்லாம் துன்புற்றிருப்பார்? விமானமேற்றத்தின் போது குடிபுகல்/வெளியேறல் துறை அதிகாரிகள் எப்படி அறிந்துகொள்ளாமல் விட்டார்கள்? துன்புறுத்திய அந்த முதலாளியும் அவனுடைய மனைவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

***

நன்றி :

H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

E-Mail : fakhrudeen.h@gmail.com

Newer entries »