ஐயப்பனும் கோஷியும் – ஆசிப் மீரான்

“மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்”- எழுத்தாளர் ஜி நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணிநேர திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ” ட்ரைவிங் லைசென்ஸ்” திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர்.
உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது
பொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்கள் ஆனால் மூன்றுவிதமான போராட்டங்கள் இந்தப் படத்தின் மூலமாக வெளிப்படுகின்றன. கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் பிரதானம் என்றாலும் கோஷிக்கும் கோஷியின் தகப்பனான குரியனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் மிக முக்கியமானது இந்த இரண்டு போராட்டங்களுக்கும் நடுவில் அதிகார வர்க்கத்திற்கும் அதற்கு வளைந்து போகாத மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.
இராணுவத்தில். பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஹவில்தார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கோஷியினுடைய கதாபாத்திரம் ஊசலாடும் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது ஆகவே தனது தந்தை செய்யும் தவறுகளுக்கும் தான் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்போது கோஷியின் மனம் தடுமாறுகிறது. அதுவே ஐயப்பனுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்காங்கே அவனை நிலைகுலைய வைக்கிறது. இறங்கி வர நினைக்கலாமென எண்ணும்போதே சூழல்கள் மீண்டும் கோஷியை நியாயப்படுத்தத் தூண்டுகின்றன.
ஐயப்பனின் கதாபாத்திரம் கொஞ்சம் மங்கலான இருக்கிறது ஏனெனில் சில விஷயங்கள் பூடகமாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. உதாரணமாக ஐயப்பனுக்கு நடந்த திருமணம் குறித்த பின்னணி ஒரு அவசரகதியில் அளிக்கப்பட்டு அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது ஆனால் ஐயப்பன் தான் எடுக்கும் முடிவுகளில் மிகத் தெளிவானவனாகவே இருக்கிறான். தன் பழைய சுபாவங்களிலிருந்து மீண்டு நேர்மையான காவல் அதிகாரியாக வாழ்பவனாக இருக்கிறான் ஐயப்பன்.
இப்படி, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வரையறைகள் மிகச் சிறப்பாக செய்து இருப்பதாலேயே ஊசலாடும் ஒரு மனநிலை உள்ளவனக்கும் தெளிவான சிந்தனை கொண்ட ஒரு காவல்துறை அதிகாரிக்குமான மோதல் என்பது இருக்கை நுனிவரை நம்மைக் கட்டிப் போட போதுமானதாக இருக்கிறது.
காவல்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் ஐயப்பனுக்கும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் இருக்கும் ஐயப்பனுக்கும் இடையிலான வேறுபாடுதான் திரைக்கதையின் மையச் சரடு. இந்தச் சரட்டை மிகப் பலமானதாக உருக்குக் கம்பி போல உருவாக்கி இருப்பதால்தான் அதைச் சார்ந்த கிளைச் சம்பவங்களை அடுத்தடுத்துச் சொல்வதென்பது – குறிப்பாக அதிகாரவர்க்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு எப்படி எல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கிறது – திரைக்கதை ஆசிரியரான சச்சிக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது.
நேர்மையான காவல் அதிகாரியாக இருந்த போதும் கூட உயர் அதிகாரியின் கட்டளைக்காக வேலை நேரத்தில் செய்த பிழைக்காக இன்னும் 2 ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும், முதலமைச்சரிடமிருந்து பதக்கம் பெறவிருக்கும் நிலையில் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படும் ஓர் உதவி காவல் ஆய்வாளரின் நிலை பணத்திமிரும் குடிவெறியும் கொண்ட சராசரி குடிமகன் ஒருவனால் பந்தாடப்படும் போது அதை எதிர்கொள்ள அவன் எப்படி ஆயத்தம் ஆகிறான் என்பதும் இந்தக் கதையின் நோக்கமென்றாலும் இறுதியில் அந்த நேர்மையான அதிகாரிக்கு எதிராக எவன் செயல்பட்டானோ அவனே இறங்கி வந்து அவன் மூலமாகவே மீண்டும் காவல்துறை அந்த உதவி ஆய்வாளருக்குச் சீருடையை திரும்ப அணிய வைக்கும் சூழல்தான் அமைகிறது என்பதுதான் மிகப்பெரிய நகைமுரண் ஆனால் அதுவேதான் இந்த தேசத்தின் நிலையும் கூட வசதியும் வாய்ப்புகளும் இருப்பவர்களுக்கு சட்டம் நீதி எல்லாம் பணத்தின் மூலமாக சம்பாதிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதாகவும் கூட இந்தக் கதையை நாம் புரிந்துகொள்ளலாம்
இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் கருதுவது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களின் அபாரமான நடிப்பாற்றல்தான். எப்போதுமே நான் வியக்கக்கூடிய ஒரு விஷயமும் கூட.
இரண்டு நாயகர்கள் இரண்டு கதாபாத்திரங்கள் இதில் யாருக்கு பலம் அதிகம் என்ற தன்முனைப்பு இல்லாமல் தங்கள் கதாபாத்திரங்களில் தாங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக மட்டுமே தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணமும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் மலையாள நடிகர்களுக்கு இருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற படங்களும் பாத்திரங்களும் மலையாளத் திரைப்படங்களில் சாத்தியமாகிறது.
பிஜு மேனனும் சரி பிரித்வி ராஜனும் சரி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பிஜு மேனன் இடைவேளைக்குப் பிறகு மதம் கொண்ட யானையின் சீற்றத்தோடு நடத்தும் அடாவடித்தனங்கள் அத்தனையும் சபாஷ் போட வைக்கின்றன. பிஜு மேனனின் அந்த சுனாமியின் முன் பிரித்வி நீச்சல் போட்டதே பெரிய விசயம்தான்.
ஐயப்பனின் மனைவியிடம் ஏகத்திற்கும் ஏச்சு வாங்கி கூனிக்குறுகி நிற்கும் பொழுதில் ஐயப்பன் கோஷியிடம் வந்து “வயிறு நெறச்சு கிட்டியோ?” என்று கேட்கும்போது “ஒரு அளவுக்கு” என்று பிரித்வி பம்மிப்பதுங்கும் காட்சி கொள்ளை அழகு. (இப்படி ஒரு காட்சியில் எந்தத் தமிழ் முன்னணி நடிகரும் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்பது வேறொரு கேள்வி) அந்த இடத்தில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் கௌரி நந்தாவின் வசன உச்சரிப்பும் ஆங்காரம் மிகுந்த உடல் மொழியும் வசனங்களும் வெகு கச்சிதம்.
வழக்கம்போலவே எந்த நடிகரும் சோடை போகவில்லை குறிப்பாக பிரித்வியின் தந்தையாக வரும் இயக்குனர் ரஞ்சித் ஒரு ஆணாதிக்கவாதியான, பழம்பெருமை பேசக்கூடிய ஆணவ சாதிக்காரனைப் போல தன் பெருமை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு பழைய ‘பூர்ஷ்வா’த் தனத்தோடு நடக்கக்கூடிய பெரிய மனிதனின் உடல் மொழியை இயல்பாகக் கடத்தி இருக்கிறார். ஆய்வாளராக வரும் அனில் நெடுமங்காடு, காவலராக வரும் அனு மோகன் ஆகியோரும், பெண்காவலர் ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் தன் யாவும் தங்கள் பங்குகளைச் சிறப்புற செய்திருக்கிறார்கள்
படத்தில் இயக்குநரான சச்சியே திரைக்கதையையும் அமைத்திருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது என்றால் அதற்கு உற்ற துணையாக ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. அட்டப்பாடியில் இயற்கை வளம் சூழ்ந்த அத்தனை காட்சிகளையும் அழகுற உள்வாங்கியிருக்கிறது சுதீப்பின் கேமரா’ கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகான சட்டகங்கள் குறிப்பாக ஐயப்பன் ஒரு மரத்தினடியில் இருக்கும் “பெஞ்சில்” அமர்ந்திருக்கையில் ஓரமாக தூளியில் குழந்தை இருக்கும் அந்த ஒற்றைக் காட்சி
அட்டப்பாடி என்பது ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் பகுதி. அவர்களது நிலங்களை பெருமுதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாராயம் கொடுத்து அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் அந்தப் பகுதியில் சாராயம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. என்ற போதும் கூட இந்தப் பகுதியில் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன சமீபத்தில் கூட ஒரு ஆதிவாசியை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற செய்தியை பார்த்து நாம் பதறி இருக்கிறோம் ஆகவே அட்டப்பாடியின் பின்னணியில் நடக்கக்கூடிய இந்தக் கதையில் அட்டப்பாடி ஆதிவாசிகளின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு வினோத மொழியில் அவர்கள் பாடுகின்ற நாட்டுப்புற பாடல்களை மிக அழகாகவும் செய்நேர்த்தியோடும் மிகச் சரியான இடங்களில் புகுத்தி இருப்பதன் மூலம் தனது பின்னணி இசைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இதுவரை கேட்டறியாத நஞ்சியம்மை என்ற ஆதிவாசிப் பெண்ணையே அவர் எழுதிய பாட்டை படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதன் மூலம் மிக முக்கியமான காட்சிகளில் அதன் தரத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர் . மிகுந்த பாராட்டுக்குரிய செயல் இது
மலையாள சினிமா ஏன் தனித்துவம் பெறுகிறது என்பதற்கு இத்திரைப்படத்தில் பல காட்சிகள் சான்று பகர்கின்றன. கண்ணம்மா காவல் நிலையத்தில் காவலர்களுடன் பேசுகின்ற காட்சியும் சரி அதைப்போலவே ஐயப்பனும் கோஷியும் தனியாக வனப்பகுதியில் பேசிக்கொள்ளும் காட்சியும் சரி முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன.
திரைப்படத்தில் பட்டுத்தெறித்தாற் போல் வருகின்ற வசனங்களில் கூர்மை மீண்டும் மீண்டும் நம்மை வியப்புக் கொள்ளவும் அதே நேரத்தில் ‘ஆ’வென்று வாய் பிளக்கவும் வைக்கின்றன.
மூன்று மணி நேரம் படம் என்பது மட்டுமே மிகப்பெரிய குறை என்று சிலர் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று மணி நேரம் இருக்கையிலேயே சுவாரசியம் குறையாமல் நம்மை கட்டிப் போடுவது என்பது ஒரு மிகப்பெரிய கலை. ஆனால் படத்தில் ஒரு. முக்கியமான குறை இருக்கிறது. உயர் அதிகாரி சொன்னார் என்பதற்காக, காவல் நிலையத்தில் வைத்தே ஐயப்பன் கோஷிக்காக மது. ஊற்றிக் கொடுக்கும் போது அதை கோஷி அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கிறார். எதிரில் இருப்பவனைப் பற்றித் தெரிந்திருந்தும் ஐயப்பன் அஜாக்கிரதையாக அதை கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் அந்தக் குறை. ஆனால் அது இல்லாவிட்டால் மூன்று மணி நேர சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்குமே?!
மசாலாப் படங்கள் என்றால் நான்கு பாடல்கள் ஐந்து சண்டை பஞ்ச் டயலாக், அதிநாயகத் தன்மைகள் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் மசாலா பட இயக்குநர்கள் ஒரு மசாலா படத்தையே எப்படி ரசிக்கும் விதமாக அழகுற ஆனால் மசாலா தூக்கலாக இல்லாமல் மிகச் சிறப்பாகத் தரமுடியும் என்பதை கற்றுக்கொள்ள இந்தத் திரைப்படம் அருமையான ஒரு வாய்ப்பு.
*
Asif Photo : Yazhni

‘மொழி, அழாதே..’ – தாஜ்

மறைந்த உயிர் நண்பர் சீர்காழி தாஜ் பற்றி அவரது முகநூல் தோழி அமுதமொழி எழுதிய கண்ணீர் புகழ் நினைவஞ்சலியைப் பகிர்கிறேன்.

*

வாழ்க்கை பள்ளத்தாக்கை சாடித் தாவி கடக்க முனைந்த நவ கலைகளின் ஈடுபாடு மனிதகுல மேன்மைக்கு அழகும்- கீர்த்தியும் சேர்க்குமென நம்பும் இன்னொரு நண்பனை நான் எங்கே தேடுவேன்.

உள்ளொளி பிரவாகம் ஓயாமல் சலசலத்து ஓடிய உங்கள் ஆன்மா பல யதார்த்தம் மீறிய கற்பனையில் தளும்பிய வண்ணம் இருப்பதைப் பதிவுகள் மூலம் அறியத்தந்தீர்கள் தாஜ்.

ஒரு இஸ்லாமியராக பிறப்பால் இருந்தபோதும் மதம் பற்றிய தீவிர சிந்தனையோ நம்பிக்கையோ இல்லாதவர் நீங்கள்.

மனித நேயமும் மனிதகுல ஜீவிதமும் மட்டுமே நீங்கள் கேட்ட கேட்க காதலுற்ற இன்னிசை.

உங்கள் தீவிர அரசியல் பதிவுகளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்கு என் அப்பாவின் நினைவு வரும். அவரும் அப்படித்தான் ஆங்கில இந்து பேப்பரை ஒரு வரி விடாமல் படிப்பார். ரேடியோவினை காதருகில் வைத்து செய்திகளை கேட்டபடியே இருப்பார்.

ஆரியத்தின் மனிதகுல வெறுப்பரசியலுக்கு மாற்றாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைத் தலைவர் ஸ்டாலின் மீது அதி நம்பிக்கை கொண்டிருந்தீர்கள்.

உங்கள் அரசியல் பதிவுகள் முகநூல் வழி அரங்கேற்றம் காண்பதைத் தடைச் செய்ய உங்கள் வீட்டில் மட்டும் மின்சாரம் வராமல் செய்து விட்டார்கள் என்று கூட பதிந்துள்ளீர்கள். நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இப்படி கூட நடக்குமா என்று.

இயற்கை நேசர் நீங்கள். நான் ஒரு முறை என் வீட்டருகில் இருக்கும் வனக் காளியின் படத்தையும் அதன் அமைவிடத்தையும் வர்ணித்து எழுதிய பொழுது அதைப் பார்க்க வேண்டும் என்று அவாவுற்றீர்கள்.

நான் வாருங்கள் என்று சொன்னபொழுது ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வருவதாக கூறினீர்கள்.

இலக்கியம் பற்றி என்னுடன் பேச வேண்டும் என்று என்னைக் கூட சீர்காழி வரும்படி அழைத்தீர்கள். “பேருந்து நிறுத்தத்திற்கு எதிர் வீடே மொழி ” என்று வழி கூட சொன்னீர்கள்.

என் வீட்டில் போர்டிகோவில் இருக்கும் டைல்ஸ் போல நீங்களும் போட்டுள்ளதைச் சொன்னீர்கள்.

ஏதோ மனச்சோர்வு உடலின் உபாதைகள் வாழ்வின் நளிந்த நாட்கள் நான் சோர்வுற்று மரணம் பற்றி ” வந்தால் தேவலாம் “என்று சொல்கிறேன் ” நீங்கள் நல்ல உற்சாகமாக இருக்கும் பொழுது இதைப் பற்றி நிறைய பேசலாம் ” என்று சொல்லி உடனே மரணம் பற்றிய உரையாடலைத் தவிர்த்தீர்கள்.

ஆனால் இன்று அக்கொடிய மரணத்திலேறி மரணத்தின் வசனங்களை எனக்கு உபதேசம் செய்கிறீர்கள்

உங்கள் சிந்தனை செயல் இரண்டும் இலக்கியமும் இந்திய மக்களின் நலனும் என்ற இரட்டை புரவிகளின் மீதே சஞ்சாரம் செய்து கொண்டிருந்ததை இந்த உலகம் அறியத் தந்தீர்கள்.

இந்த முகநூல் பயணத்தில் உங்களைப் பற்றிய பல அரிய தகவல்களை உங்கள் வாழ்க்கை நெறியை இலட்சிய நகர்வை அறியத் தந்தீர்கள்.

உங்களுக்கு உங்கள் தாயின் மீதும் மனைவி மீதும் உங்கள் மகள் மீதும் குழந்தைகள் மீதும் பேரக் குழந்தைகள் பேத்திகள் மீதும் இருந்த அன்பினை உங்களுக்கே உரிய வாஞ்சையுடன் அறியத் தந்தீர்கள்.

அதில் ஒரு துளியினை உங்கள் பரிவும் பாசமும் மிக்க நட்பின் வழி நானும் துய்த்திருக்கிறேன்.

நாடு இனம் மதம் கடந்த உங்கள் அன்பின் பரந்துபட்ட விசாலத்தை அறிந்திருக்கிறேன்.

நீங்கள் எங்கோ சீர்காழியில் நானோ காவேரிப்பட்டணத்தில்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நேரில் பேசிக் கொண்டதில்லை .

எல்லாம் இந்த இணைய வழி தொடர்பு மட்டுமே.

ஆனால் உங்கள் மரணம் ஏற்படுத்தும் துக்கம் தாளாமல் இரவெல்லாம் அழுது அழுது மனம் இறுகிவிட்டது.

ஏன் என்று தெரியவில்லை புரியவுமில்லை.

நீங்கள் எனக்கு என்ன உறவு. உங்கள் மரணம் என்னை ஏன் இவ்வளவு பாதிக்கின்றது.

கேள்விகள் விடையற்ற கேலி செய்யும் கேள்விகள்.

மனித மனம் அதன் நுட்பத்தில் உணரும் உன்னதம் மிக்க உணர்வுகள் காரண காரியங்களை கடந்தவை என்பதை மட்டுமே நான் அறிகிறேன்.

தேற்றுவார் இன்றி அழுதபடி இருக்கும் என் காதுகளில் ” மொழி அழாதே ” என்று சொல்லிப் போக வருவீர்கள் என்று காத்திருக்கிறேன் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாஜ் பிரிய நண்பரே!

*

Thanks : Amuthamozhi Mozhi

அன்புள்ள அம்மா – வாசு பாலாஜி

டேப் காதர் – காரைக்குடி மஜீத்

சஹர்பாவா பற்றிய சம்பவத்தை அவர் வர்ற அதே நேரத்துல அடிச்சி வெளியேத்துன மஜீது பாய் 2020க்கு நன்றி. ரொம்ப நாளைக்குப் பொறவு இங்கே தட்டியிருக்கார். இன்னும் தட்டனும். –  AB.

*

டேப் காதர் – மஜீத்

சின்னப்புள்ளையா இருக்கும்போது – என்ன ஒரு மூனுநாலு வயசிருக்கும் – நோம்புநாளைல வீட்ல விடியக்காலைல சஹரு வைக்கிறதுக்கு எந்திரிப்பாய்ங்களா, எங்கிட்ருந்துதான் முழிப்பு வருமோ எந்திரிச்சிருவேன்…. சஹரு வைக்கத்தான்…
அதேமாதிரி சாயந்தரம் எங்கேர்ந்தாலும் நோம்புதிறக்குறதுக்கும் தவறமாட்டேன்…

பெரும்பாலும் படுக்கப்போகும்போது நாம போடுற கண்டிசனோட எஃபக்டா, காலைல எழுப்பிவிட்ருவாய்ங்கெ.. ஃபுல்கட்டு கட்டிட்டு – முக்கியமா அந்த தயிரு வாழைப்பழம் – தூங்கிறவேண்டியதுதான். சமயத்துல வெருகுமாதிரி கரெக்ட் டயத்துக்கு, சாப்பாடு வச்சவொடனே எந்திரிக்கிறதும் உண்டு.

அப்டி ஒருதடவை தன்னால எந்திரிச்ச அன்னிக்கு, திடீர்னு ஒரு சந்தேகம்… இவய்ங்கெல்லாம் எப்டி முன்னாலயே எந்திரிச்சு சமைச்சி ரெடியாகுறாய்ங்கென்னு… அலாரம்லாம் அப்ப ஃபேஷன் இல்லை.. அவய்ங்கெட்டயே கேட்ருவோம்னு கேட்டா, சஹர்பக்கிரிசா வந்து எழுப்பிவிட்ருவாருன்னு சொல்லவும்.. அவரு வந்து எப்டி எழுப்புவாருன்னு இன்னொரு சந்தேகம் வந்தாலும் கேக்கலை… நாமளே பாத்துருவோம்னு முடிவு பண்ணியாச்சு.. அடுத்தநாள் உசாராவே தூங்கிக்கிட்ருந்தேன்.. சஹருப்பக்ரிசா டேப்படிக்கிற சத்தம் வீட்டுவாசல்ல கேக்கவும் ஒரே ஒட்டமா ஓடி கதவைத்திறந்து என்ன சொல்றாருன்னு பாக்குறதுக்கு நின்னா அவருபாட்டுக்கு பாடிக்கிட்டே போய்ட்டாரு.. உள்ளே வந்தா, எல்லாரும் எந்திரிச்சுட்டாய்ங்கெ.. வெருகு தன்னால எந்திரிச்சிருச்சு பாருன்னு சொல்லிக்கிட்டே, எதுக்குடா வாசக்கதவைத் தொறந்தேன்னு கேட்டாய்ங்கெ… சஹர்ப்பக்ரிசா வந்து எழுப்புவாருன்னு சொன்னிய.. அவருபாட்டுக்கு டேப்படிச்சுக்கிட்டே போய்ட்டாருன்னு கொறைப்பட்டுக்கிட்டேன்.. அவரு வர்ற சத்தங்கேட்டு நாமதான் எந்திரிக்கனும்கவும் புஸ்ஸுன்னு ஆயிருச்சு..

பல பக்ரிசாக்கள் வந்தாலும் அப்போ வந்த அந்த வயசான சஹர்பக்ரிசா மேல சின்னப்புள்ளைகளுக்கு ஒரு பிரியம்தான்.. வெளையாடுற வெளையாட்ட விட்டுட்டு வீட்டுக்குள்ள ஓடி அரிசியோ காசோ வாங்கிக் கொடுத்துட்டுத்தான் மறுவேலை… பெரியபெரிய பாசிமணி மாலைலாம் கலர்கலரா போட்டுருப்பாரு.. அதீத சாந்தமா ஒரு முகம்.. கொஞ்சநாளைக்கப்பறம்  அவரைக்காணலை… சஹருக்கு இன்னோரு சாந்தமுக வயசான பக்கிரிசா வந்தாரு… கருப்புநெறம்…அவரைவிட இவரு நல்ல உயரம், குரலும் கணீர் ரகம். பிற்பாடு அவரை நான் பாட்டிவீட்டுக்குப் போகும்போது சிவகங்கைல பாத்தேன்.. நன்னி வீட்டுக்கு பக்கத்துலயே. எங்க நன்னிட்ட விசாரணையைப் போட்டா, அவரு இந்த ஊருதாண்டா, அந்தா பள்ளியாசலுக்கு எதுத்தாமாதிரி ஒரு ’கோரி’ (சமாதி) இருக்குல்ல? அதுக்குப்பக்கத்துல ஒரு கட்டடம் இருக்குபாரு, அங்கதான் இருக்காருன்னு சொல்லவும், நூறு தொணைக்கேள்வி கேட்ருப்பேன்…(இவரு எப்டி அங்கெ எங்க ஊர்ல?)

இப்பதான் மேட்டர்… அவரு குடும்பத்துல மொத்தம் அஞ்சுபேரு.. அவரு அவரோடமகன் காதர், காதரோட அம்மா, அப்பறம் காதரோட சின்னம்மாமாரு ரெண்டுபேரு… காதருக்கு அப்ப பதினஞ்சு வயசிருக்கும்… மாநெறம்.. கண்ண்ண்ணீர்னு ஒரு குரல்.. நல்ல ஒயரம்… டேப் அடிச்சிக்கிட்டுப் பாடுனா எல்லாருக்கும் புடிக்கும்… பகல்ல பாடுற சூஃபிப் பாட்டுகளுக்கும், பாடாதபோது ரெண்டு சின்னம்மாக்கள்ட்ட வம்பிழுத்து வலுச்சண்டை போடும்போது பேசுற லாங்குவேஜுக்கும் இடைவெளி ஏழுகாத தூரத்துக்கும் மேல… யாரும் ஏண்டா இப்டி கெட்டவார்த்தையா பேசுறே மூதேவின்னு கேட்டுப்புட்டா அம்புடுத்தேன்.. ஒன்னையாடி கேட்டேன், அவளுகளைத்தானடி கேட்டேன்னு ஆரம்பிச்சு, சின்னம்மாக்களைக் கேட்டமாதிரி ஒரு பத்துமடங்கு கேள்வி, அவுகளுக்குக் கெடைக்கும்.., அப்டி ஒரு அடங்காத குணம்… அவங்க அம்மாவும் பாவாவும் அவரைத் திருத்த முயற்சி பண்ணி, அவ்ளோ திட்டு வாங்கினதுக்கப்பறம், எப்டியோ தொலைன்னு விட்டுட்டாக…

இஷாவுக்கு அப்பறமா, சாப்ட்டுக்கீப்ட்டு எல்லாரும் படுத்தவொடனே, டேப்பை எடுத்துருவாரு காதரு…. கம்பீரமான குரல்ல சும்மா ஒரு மணிநேரம் சினிமாப் பாட்டாப் பாடுவாரு.. வித்தியாசமான ப்ளேலிஸ்ட்டு… பழசு, புதுசு, ஹிட்டு, யாரும்கேட்டே இருக்காத பாட்டுன்னு சும்மா கலக்கி எடுத்துப்புடுவாரு… இதுல என்ன விசேசம்னா, அப்பப்ப பாட்டுகளுக்கிடைல அவுக சின்னம்மா ரெண்டுபேரையும் நைஸா நொழைச்சுருவாரு.. அது நல்லமாதிரியும் இருக்கும், கெட்டமாதிரியும் இருக்கும்… அவர்ட்ட யாருபோய்க் கேக்குறது? இப்டித்தான் ஒருநாள் ராத்திரி பாடிக்கிட்டே இருக்காரு, இடையில ஒன்னும் செருகல் இல்லை, என்ன ஆச்சு இன்னிக்கு? ஏன் இன்னும் சின்னம்மாக்களை இன்னிக்கு கோர்த்தூடலைன்னு அந்த ஏரியாவைவே யோசிக்க வச்சிட்டாருன்னா பாத்துக்கிங்க… மணி பத்தை நெருங்கவும், யாரோ (ஒரு சின்னம்மாவாத்தான் இருக்கனும்) போதும் படுடான்னு சொல்றதும் கேட்டுச்சு.. நீ பொத்திக்கிட்டு தூங்குடி டேஷ்டேஷ் ன்னு சொல்லிட்டு கடேசிப்பாட்டு ஒன்னு பாடுனாரு பாருங்க: (அப்ப புத்தப்புதுசா ரிலீசான பாட்டு)

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க..
முழுப்பாட்டையும் பாடிட்டாரு… அப்பவும் சின்னம்மாக்களைப்பத்தி ஒன்னும் சொருகலை…
பாட்டையும் முடிச்சாரு… இப்டி…..:
என் காலம் வெல்லும்; வென்றபின்னே வாங்கடா வாங்க
வாங்……கடா வாங்க…
ஐசா வா…………ங்கடா வாங்க…
சவுரு வா………ங்கடா வாங்க….
ஐசா (ஆயிஷா)
சவுரு (ஸஹர்பான், இல்லைனா ஜஹுபர்னிசாவா இருக்கும்)
ரெண்டும் அவுக சின்னம்மாக்களோட பேரு….

கொஞ்சநாள்ல காதருதான் எங்க ஊருக்கு சஹர்ப்பக்ரிசாவா வந்தாரு.. அப்பறமா ரொம்பநாளா அவரைப் பாக்கலை.. சுமாரா ஒரு அஞ்சு பத்து வருசம் இருக்கும்.. எதிர்பாக்காத வகைல எதிர்பாக்காத இடத்துல அவரை சந்திச்சோம்.. எங்கத்தாவும் நானும்…

அந்த ஏரியாவுலேயே ஒரே வண்டிங்கிற ரேஞ்சுல எங்கத்தா எங்கூர்ல ஒரு மோட்டார் சைக்கிள் வச்சிருந்தாரு.. பிற்பாடு அவருதான் ரொம்ப்பேருக்கு வண்டியோட்டப் பழகிக்கொடுத்தாரு.. பலமாதிரி வண்டிகள்லாம் வச்சிருந்துட்டு லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்ல செட்டில் ஆன நேரம் அது.. அவரு வண்டியை யாரையும் தொடக்கூட விடமாட்டாரு… அப்டியாப்பட்டவரு அவரு ஃப்ரண்டு ஒருத்தருக்கு வண்டியைக் கொடுத்துட்டாரு.. அதுவும் எந்த ஊருக்குன்னா, கிட்டத்தட்ட அறுபத்தஞ்சு கிலோமீட்டருக்கு அப்பால இருக்குற திருவாப்பாடிங்கிற ஊருக்கு,, இவரு சின்னப்புள்ளைல அம்மாபட்டினத்துல இருக்கும்போது அவரு பழக்கமாம்.. வயசு இவரைவிட ரொம்ப அதிகம்..அப்பப்ப அவரு எங்கவீட்டுக்கு வந்துட்டுப் போவாரு.. ஏதோ ஒரு கணக்குல வண்டியை மூனுநாளைக்குன்னு கொடுத்துவிட்டுட்டாரு.. வண்டி அஞ்சுநாளாகியும் வரலை.. சரி இனிமே சரியா வராதுன்னு கெளம்பிட்டாரு… பஸ்ல திருவாப்பாடிக்கு… வர்றியாடா தம்பின்னு என்னயக் கேக்கவும், நமக்கு கசக்குமா என்ன? தொத்திட்டேன்… மத்தியானம் கெளம்பி, சாயந்தரம் போய்ச்சேந்தோம்..

வண்டியைப்பாத்தா பாவமா இருந்துச்சு… ஸ்டாட்டாகலய்யான்னு சொன்னாரு… மெக்கானிக்கை வரச்சொல்லிருக்கேன் இன்னும் வல்லைன்னும் சொன்னாரு.. எங்கத்தா உக்காந்துட்டாரு… பிரிபிரின்னு பிரிச்சு என்னென்னவோ பண்ணி, சிகரெட் ஃபாயில் பேப்பரையெல்லாம் ஊஸ் பண்ணி, ஒரு மணிநேரத்துல வண்டியை ஸ்டாட் பண்ணிட்டாரு… ஒரேஒரு சின்ன சிக்கல்… எங்கெயோ அவரு விழுந்து எந்திரிச்சதுல ஹெட்லைட்டு கண்ணாடி, பல்பெல்லாம் ஒடைஞ்சிருந்துச்சு… சரிபண்ண முடியாது.. பரவால்ல போயிரலாம்னு கெளம்பிட்டோம்.. அரைவெளிச்சத்தோட கெளம்புனா ஆவுடையார்கோயில் வந்து சேரும்போதெல்லாம் நல்ல இருட்டு… எங்கெ சாப்டம்னு இப்ப நெனைப்பில்லை… டீக்குடிச்சிட்டு, சிகரெட் அடிச்சிட்டு கெளம்புனா இருட்டிருச்சு…. ஊர் எல்லை தாண்டுற வரைக்கும் ஒன்னுந்தெரியலை… ஒரு ரெண்டு கிலோமீட்டர் தாண்டுனவொடனே ரோடு தெரியலை.. வண்டில லைட்டும் இல்லை.. (இருந்தாலும் பிரமாதமாத்தான் இருக்கும்னு வைங்க)… அடுத்த ஊருன்னு எடுத்துக்கிட்டா ஏம்பல்தான்… ஆனா அதுவரைக்கும் போகமுடியான்னு இப்ப அவருக்கே யோசனையாப் போச்சு… என்னடா தம்பி பண்ணலாம்னு எங்கிட்ட கேட்டாரு.. போங்க பாப்போம்னு சொல்றேன் நான், பெரியமனுசன் மாதிரி… இன்னும் கொஞ்சதூரம் ஸ்லோவா போனோம்.. திடீர்னு ஒரு வெளிச்சம் தெரிஞ்ச்சிச்சு.. சுமாரா ஒரு மைலுக்கு அங்குட்டு… தம்பீ, என்னமோ லைட்டு தெரியுது ஆனா அங்கெ எதுவும் பெரிய ஊரு இல்லயேடான்னாரு… நான் மறுபடியும், போங்க பாப்போம்னு சொன்னேன்.. கிட்டக்க நெருங்க நெருங்க மைக்செட் லவுடுஸ்பீக்கர்ல பாட்டுன்னு ஒருமாதிரி சூழ்நிலை மாறிருச்சு… ஒரு ஆள் சைக்கிள்ல வந்தாரு.. அவர்ட்ட இது எந்த ஊரு என்ன விசேசம்னு கேட்டா, இந்த கிராமத்துக்குப் பேரு பாக்குடி… திருவிழா… வள்ளிதிருமணம் நாடகம் ஆரம்பிக்கப்போறாகன்னாரு…  போனா, ரோட்லேர்ந்து இருபது அடி ஆழத்துல, ஆறோ,கம்மாயோ தெரியலை, தண்ணி இல்லை, மணல்ல கூத்துக்கொட்டகை.. தம்பி, ஒதுங்க இடம் கெடைச்சிருச்சு, இருந்து கூத்துப்பாத்துட்டு விடியக்காலம் கெளம்பலாம்டான்னாரு.. ஆகா, ஊர்ல கூத்துப்பாக்கப் போனா என்னமாதிரி திட்டுவிய… இப்ப என்ன பண்ணுவியன்னு எனக்கு உள்ளுகுள்ள கும்மாளம்.. நாடக செட்டும் அப்ப ஃபேமசா இருந்த செட்டுகள்ல ஒன்னு…
எஸ்.எம் சொர்ணப்பா ராஜபார்ட் முருகன், பாக்கியலட்சுமி ஸ்ரீபார்ட் வள்ளி (ஒரு காது கருப்பாயிருக்கும்.. அந்தப்பக்கம் நெறைய பூ வச்சு மறைச்சிருக்கும்,,,) கேஎம்பி சண்முகசுந்தரம் ஆர்மோனியம் பின்பாட்டு, நடராசன் மிருதங்கம் அன் டோலக், தங்கவேலு பபூன் காமிக், டேன்ஸ் காமிக் யாருன்னு நெனப்பில்லை.. முக்கியமா நாரதர் கலைச்செல்வி.. எனக்கு ரொம்பநாளா பாக்கனும்னு ஆசை.. பொம்பளை எப்பிர்றா நாரதர் வேசம் போடும்னு… அன்னிக்கு எனக்கு செம லக்கு… நாங்க இருந்த சைடுல இருந்து இந்த வாத்தியகோஷ்டி உக்காந்த பகுதி தெரியாது… சென்டர்ஸ்டேஜுதான் தெரிஞ்சிச்சு..

ஒரு ரெண்டுமணி நேரமிருக்கும்… வள்ளி வந்தாச்சு, நாரதரும் வள்ளியும் தர்க்கம் ஆரம்பிச்சாச்சு…
திடீர்னு அண்ணே,,,,,,,ன்னு ஒரு கம்பீரக்குரல்… பாத்தா ஜிப்பாப்போட்டுக்கிட்டு நம்ம டேப் காதரு..
என்னண்ணே இந்தப்பக்கம், நாடகம் பாப்பியன்னு தெரியும், அதுக்காக இம்புட்டுத் தூரமா வருவிய?
தம்பீ, நல்லாருக்கியாடான்னு எனக்கு ஒரு வரவேற்பு… வண்டி லைட்டு எரியமாட்டேங்க்குதுடா காதரு,,, அதான் விடிஞ்சதும் போகலாம்னு உக்காந்துட்டோம்… அது சரி, நீ எப்டி இங்கெ வந்தே? உனக்கென்ன இங்கெ வேலைன்னு கேட்டாரு… என்னண்ணே இப்டிக்கேட்டுட்டிய? நான் இப்ப நாடகத்துக்கெல்லாம் டேப் வாசிக்கிறேன்ல? என்ன நாடகம் பாக்குறிய நீங்க….? எல்லா நாடக நோட்டிஸ்லயும் இருக்குமேண்ணே….

இப்பல்லாம் எம்பேரு வெறும் காதர் இல்லைண்ணே… டேப் காதர்
*

நன்றி : டேப்பு மஜீது

« Older entries