உமறு பாஷா யுத்த சரித்திரம்

கணையாழி , மார்ச் 2002 இதழிலிருந்து…

*

உமறு பாஷா யுத்த சரித்திரம்

ஹ.மு. நத்தர்சா

‘உமறு பாஷா’ என்னும் பெயர், நாயகத் தோழர் கலீபா உமர் காலக்கட்டத்தில் நடந்த யுத்த சரித்திரமோ என்ற மயக்கத்தைத் தந்தாலும், உண்மையில் இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் துருக்கிப் பேரரசுக்கும், இரஷ்யப் பேரரசுக்கும் இடையே தொடர்ந்து பல்லாண்டுகள் நிகழ்ந்த போரினை மையப்படுத்தி அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரபல ஆங்கில வரலாற்று நூலாசிரியர் ரைனால்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘ஒமர்’ என்னும் ஆங்கில வரலாற்று நூலின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

விக்டோரியா காலத்தின் இடைப்பகுதியைச் சேர்ந்த ஜி.வி.எம்.ரைனால்ட்ஸ் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிக் குவித்திருப்பவர். இவருடைய நாவல்களின் தாக்கம் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல்களில் காணப்படுவதாக இலக்கியத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஆங்கிலத்தில் மூன்று பாகங்களாக வெளிவந்த இந்த பிரமாண்டமான வரலாற்று நூலை, தமிழில் நான்கு பாகங்களாக, பல்வேறு காலக்கட்டங்களில் மொழிபெயர்த்து , நூறாண்டுகளுக்கு முன்பே வெளியிட்டவர், நாகூர் மகாவித்வான் குலாம்காதிறு நாவலர். தமிழ், ஆங்கிலம், அரபி மொழிகளில் புலமைபெற்று விளங்கிய குலாம் காதிறு நாவலர் , கவிதை, உரைநடை, மொழியாக்கம் என இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் தன் முத்திரையைப அழுத்தமாகப் பதித்துள்ளார்.

வழக்கறிஞர் சரவனப்பெருமாள் ஐயரிடம் இவர் பெற்ற ஆங்கில அறிவின் பெருமித வெளிப்பாடாக அமைந்து, படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது, ‘உமறு பாஷா யுத்த சரித்திரம்’ என்னும் பிரம்மாண்டமான இவ்வரலாற்று நூல்.

இன்றைக்கும் சரித்திர சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடல்கள் தீபகற்பத்தைச் சேர்ந்த குரோஷியா நாட்டில் இருந்த கதைக்களம் தொடக்கம் பெறுகிறது.

அன்றைய குரோஷியா நாட்டின் சரிபாதி, ஆஸ்திரியா நாட்டின் அதிகாரத்திலும், மறுபாதி துருக்கிப் பேரரசின் பிடியிலும் சிக்கியிருந்த்போது நிகழ்ந்த சில சம்பவங்களைத் தீப்பொறியாக்கி, அத்தீ கொழிந்து விட்டு எரியத் தொடங்கியபோது ஆசிய ஐரோப்பா கண்டங்களுக்கிடையே இருந்த பல சிறுநாடுகளும், நகரங்களும் கருகிச் சாம்பலாகிய காட்சியை சரித்திரக் கதைக்கே உரிய சஸ்பென்ஸ் உத்தியுடன் உருக்கமாகச் சித்தரித்துள்ளார், ஆங்கில வரலாற்று நாவலாசிரியர் ரைனால்ட்ஸ். மூலநூலின் சுவாரஸ்யம் சிறிதும் கெடாத வகையில் மொழிபெயர்ப்பு நூல் என்று உணரமுடியாதபடி, தனக்கே உரிய கம்பீர நடையைக் கையாண்டு இவ் வரலாற்று நூலைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் குலாம் காதிறு நாவலரின் கைவண்ணம் பாராட்டத் தக்கது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், மத்திய ஆசியாவில் மிகப்பெரிய போர் மூண்டு, இரஷ்யப் பேரரசு ஒருபுறமும், பிரிட்டனையும் பிரான்சையும் கூட்டணி அமைத்துக்கொண்டு துருக்கிப் பேரரசு மறுபுறமும் நிகழ்த்திய சண்டையில் வடிந்த இரத்த வாடையை படிப்பவர் மனதிலும் படியச் செய்கிறது இம்மாபெரும் வரலாற்று நூல் என்பது ஒரு நெருடலான உண்மை.

மொழி பெயர்ப்பில் சித்து விளையாட்டு நிகழ்த்தியிருக்கிறார் நாவலர். ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது, பொருத்தமான இடங்களில் புதிய சொற்களை ஆய்வது, இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு வழக்குச் சொற்களை உரிய இடங்களில் கையாள்வது, வர்ணிக்கும் இடங்களில் தூய தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துவது என கதையின் நடையில் பல திருப்பங்களை தன் விருப்பத்தின் அடிப்படையில் கையாண்டுள்ளார்.

குரோஷியாவை ஆண்ட பான் என்னும் சர்வாதிகாரியால் வேண்டுமென்றே வம்புக்கிழுக்கப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்பட்ட ஒரு சாதாரண சுதேச பட்டாள வீரனாகிய தியோடர் லட்டோஸ் என்ற போர் வீரன், தன்னை சவுக்கால் அடித்து துன்புறுத்திய சர்வாதிகாரியை குதிரையில் இருந்து இழுத்து நிலத்தில் புரட்டி அவமானப்படுத்தி, காவலர்களால் மரணதண்டனை நிறைவேறும் தருணத்தை விடுத்து, துருக்கிப் பேரரசிடம் ஒப்படைத்து, உமறுபாஷா என்ற ஒப்பற்ற வீரனாக உருமாறிய அற்புத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இப்புதினத்தில், ஏராளமான சக மனிதர்களின் காதல் கதைகளும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் தொன்னூற்றி மூன்று அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் கதையாசிரியரால் கையாளப்படும் சஸ்பென்ஸ் உத்தியே, அடுத்த அத்தியாயத்தை நோக்கி வாசகனை அடித்து விரட்டுகிறது என்பதும் சுவையான உண்மை.

இரஷ்யாவை ஆட்சி செய்த ஜார் மன்னரின் பரம்பரை, பதவி வெறிபிடித்து, ஒருவரையொருவர் நயவஞ்சகமாகக் கொன்று ஆட்சிக் கட்டில் ஏறிய கதையையும் நூலாசிரியர் பட்டியல் போட்டுக் காட்டத் தவறவில்லை.

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நிலவிய ஜன்மப்பகை மறைந்து இருநாட்டைச் சார்ந்தவர்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வும், காதல் உணர்வும் அரும்பத் தொடங்கியது என்பதையும் நூலாசிரியர் சுவைபடச் சொல்லிக் காட்டியுள்ளார்.

துருக்கி ஒரு காலக்கட்டத்தில் ஐரோப்பிய – ஆசிய நாடுகளுக்கு ஒரு சவால் விடும் சக்தியாகத் திகழ்ந்தது என்பதற்கு இந்தப் பிரமாண்டமான நூல் ஒரு எடுத்துக்காட்டு!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் உலக வரலாற்றை சுவைபடத் திரும்பிப் பார்க்க விரும்பும் ஒவ்வொருவருக்கும், இந்த நூலை உரிமையுடன் பரிந்துரை செய்யலாம்.

*

நன்றி : ஹ.மு. நத்தர்சா , கணையாழி

*

உமறு பாஷா யுத்த சரித்திரம்
(விலை ரூ. 185 | பக்கம் 896)
நூல் கிடைக்குமிடம் :

கல்தச்சன் பதிப்பகம்
பு.எண்.21
மேயர் சிட்டிபாபு தெரு
திருவல்லிக்கேணி
சென்னை – 5

குத்பியாமன்ஸில் இணையதளம்

காயல்பட்டினம் அன்பர்கள் நடத்தும் குத்பியாமன்ஸில் இணையதளத்தில் அபூர்வமான நூல்கள் உள்ளன. PDF கோப்புகள். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*

நாகூர் குலாம் காதிர் நாவலர் அவர்களின் ‘கன்ஜுல் கறாமத்து’ :

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6

*

நாகூர் பாக்கர் ஸாஹிப் ஆலிமின் – ‘ஹிதாயத்துல் அனாம் இலா ஜியாரத்தி அவ்லியாயில் கிராம்’

*

ஜமால் ஹஜ்ரத் அவர்களின் ‘மறுவிலா முழுமதி’

*

பிற நூல்களுக்கான உரலி : http://www.quthbiyamanzil.org/Books/TamilBooks.html

சதாவதானியும் குலாம் காதர் நாவலரும்

sadavadhani.jpg

சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் மகனார் கே.பி.எஸ். ஹமீது அவர்களின் ‘இலக்கியப் பேழை’யிலிருந்து :

சாற்றுக் கவி…

1833ல் பிறந்து, தம்புகழ் நிறுத்தி 1908ல் மறைந்த மதுரை தமிழ்ச் சங்கப் புலவர் குலாம் காதிறு நாவலரை இற்றை நாள் தமிழர் மறந்திருக்கக்கூடும். மகாவித்வான் மீனாக்ஷ¢ சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவர் இவர். மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாத ஐயர் தாம் எழுதிய மீனாக்ஷ¢ சுந்தரம் பிள்ளை வரலாற்றில் நாவலர் பற்றி இவ்வளவுதான் கூறியிருக்கிறார் :

‘நாகூரில் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதிறு நாவலர் என்ற முஸ்லிம் புலவர் ஒருவரும் நமது மீனாக்ஷ¢ சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்ட மாணவர்களில் ஒருவரே’

இவ்வளவுதான் கூறியிருப்பினும் குலாம் காதிறு நாவலரின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகு முழுவதுமாகப் பரவி நின்றிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சங்க மான்மியத்தில் புலவர் குலாம் காதிறு நாவலவர் பற்றி இவ்வாறு குறிப்பிடிருக்கிறார்.

‘தண்டமிழ்க்குத் தாயாகிப் பலபுராணம்
தகையபல பிரபந்தம் வசன நூல்கள்
எண்டரவே இயற்றி உலகுவப்பந் தந்திட்(டு)
எத்திசையும் புகழ் நிறுவி ஆலவாயில்
பண்டனைய தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்
படையோதிப் பெரியவிரல் படைத்து நாளும்
வண்டமரும் பொழிலுடுத்த நாகூர் வாழ்க்கை
மருவுகுலாம் காதிறு நாவலன் தன்னை…’

தண்டமிழ்க்குத் தாயாக விளங்கிய பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர் பற்றி சித்திரமொன்று நன் முன்னர் தோன்றுகின்றது. பல புராணங்கள், பிரபந்தங்கள், வசன நூற்கள் எழுதித் தந்தவர், பெரும்புலவர் என்ற தோற்றம் மனக்கண் முன் உருவாகின்றது, வண்டமரும் பொழிலுடுத்த நாகூரும் நம் மனத்திரையில் படர்கின்றது.

‘புலவராற்றுப்படை இயற்றிய பெரும்புலவர் நமது நாவலர் எழுதிய இலக்கண இலக்கிய நூற்களுக்குக் குறைவில்லை. ஒற்றைத் தனிநபர் தமது வாணாளில் இத்தனைக் காப்பியங்கள், பாடல்கள் எழுதியிருக்கிறாரா என மூக்கின் மேல் விரல் வைத்து வியப்புறத் தோன்றும். தமிழ் வசனக் குழந்தை தளர்நடைபோடத் துவங்கியிருந்த காலத்தில் குலாம்காதிறு நாவலர் அவர்கள் ஒன்றிரண்டல்ல, பல வசன நூற்களை தமிழில் எழுதியிருக்கிறார். நன்னூல் விளக்கம், பொருத்த விளக்கம் என்பன போன்ற இலக்கண நூற்கள், சீறாப் புராண வசனம், ஆரிபு நாயக வசனம், நாகூர் ஆண்டகையின் காரண சரித்திரம் என்றெல்லாம் அவர் எழுதிய வசன நூற்களுக்குக் குறைவில்லை.

ஆரிபு நாயகப் புராணமும் அவருடையதே. காவியத் தலைவரான செய்யது அஹ்மது கபீர் ரிபாயி ஆண்டகையின் அருள் வேண்டி நாவலர் இறைஞ்சிப் பாடிய புராணம்தான் இது. இப்புராணத்திற்குத்தான் திட்டச்சேரி முஸ்லிம்கள் ஒருமுகமாக வேண்டிக் கொண்டதன் பேரில் ஆரிபு நாயக வசனம் எழுதினார் குலாம் காதிறு நாவலர் அவர்கள்.

இந்த ஆரிபு நாயக வசனத்திற்கு கோட்டாறு, மதுரைத் தமிழ்ச் தமிழ்ச் சங்கப் புலவர், தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், மகாமதி, சதாவதனி கா.ப.செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் சாற்றுக் கவியொன்று வழங்கியிருக்கிறார்கள். ஐந்து விருத்தங்கள் கொண்ட இந்த சாற்றுக் கவியில் முதலிரண்டு விருத்தங்கள் பாட்டுடைத் தலைவரின் – செய்யது அஹ்மதுல் கபீர் சுல்தானுல் ஆரிபீனாரின் – மஹாத்மியத்தை வியந்துரைக்கிறார்கள். ஐந்தாம் விருத்தம் அய்யம்பேட்டைபதியில் வாழ்ந்த அப்துல் கனி சாஹிப் பொருளுதவி ஆரிபு நாயக வசனத்தை அச்சியற்றி ‘இருஞ்சீர்த்தி’ துளக்குற்ற மாட்சியினை வர்ணிக்கிறது. குலாம் காதிறு நாவலர் அவர்களையும் திருநாகையிருந்தபடி அவர் தமிழ்க் கோலோச்சியிருந்த தன்மையையும் மூன்றாம் நான்காம் விருத்தங்கள் அற்புதமாக சித்தரிக்கின்றன.

சொற்கள் கவிதை வடிவம் பெறும்போது ஒலிநயமும் கவிதைகளின் உள்ளமைந்த பொருள் நயமுமாகச் சேர்ந்து சிறந்த ஒரு சித்திரத்தை அங்ஙனே தத்ரூபமாக நம் மனக்கண்முன் கொணர்ந்து என்றென்றும் அழியாதவாறு நிறுத்திவிடுமேயாகில் இறவா வரம் பெற்று விடுகின்றன.

குலாம் காதிறு நாவலர் அவர்கள், பாஸ்கரப் பண்டித வாப்பு ராவுத்தர் அவர்களின் புதல்வர். கலைமகளோ நாமகளோ, தமிழாய்ந்த அகத்தியரோ என திருநாகைப் பதியிருந்து தமிழ்ப் புலவர் இதயமெனும் இராஜ்யத்தில் கோலோச்சும் குலாம் காதிறு காட்சி தருகிறார்.

‘மாவருத்தும் பெருநிலத்து வாப்புதவ மருண்மகவாய்
வந்தெஞ் ஞான்று
மூவருத்துங் கலைமகளு நாமகளோ கும்பர்குறு
முனியே யென்னத்
தாவருத்துந் திருநாகை யிருந்து தமிழ்க் கோலோச்சித்
தகைமிக் கார்ந்த
மேவருந்து மிணையில்குலாம் காதிறுநா வலனென்னும்
விபுதர் வேந்தன்’

சதாவதனம் செய்கு தம்பிப் பாவலர் அவர்கள், குலாம் காதிறு நாவலர் அவர்களினின்றும் வயதில் இளையவர்கள். எனினும் நாவலர் அவர்களின் சமகாலத்தவர். டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களும் நாவலர் காலத்து வாழ்ந்தவரே. நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களின் புகழையும் கீர்த்தியையும் அவர் வாழ்ந்த மாட்சியினையும் நேரிற் கண்டவர்கள் சொல்ல சொல்லக் கேட்பதில் நமக்கோர் வித தனி மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

தமிழ்ச் சங்க மான்மியத்தில் புலவர், நாகூர் குலாம் காதிறு நாவலரின் இலக்கியச் சேவைகளை நாம் உணருமாறு செய்திருக்கிறார். ஆனால் சதாவதானம் செய்கு தம்பிப் பாவலர் அவர்களோ நாகூர் புலவர் வேந்தர் எவ்வாறு கொலுவீற்றிருந்தார் என்பதை ஒரு அழியாச் சித்திரமாக இன்றைத் தலைமுறையோரின் மனத்திரையில் தீட்டி வைத்திருக்கிறார்கள். ‘தேன்கனியும் பாலமிழ்தும் கற்கண்டும் சர்க்கரையும் சேர்ந்து தான் கனிய, சுற்றி வந்து மொய்த்து நிற்கும் ஓவியத்தின் உள்ளடங்காப் பெருங்காட்சியொன்றை பாவலர் பெருமானார் அவர்கள்தம் சாற்று கவியின் நாலாவது விருத்தப் பாவில் தீட்டியிருக்கிறார்கள். கான்கனியும் செந்தமிழ் கொண்டு உணர்வளிக்கும் ஓர் நூலாம் ஆரிபு நாயக வசனம் தந்த குலாம் காதிறு நாவலரை சாற்றுக்கவி வாயிலாக நாம் பார்க்க முடிகின்றது.

தேன்கனியும் பாலமிழ்துங் கற்கண்டுச் சர்க்கரையுஞ்
சேர்ந்த தென்னத்
தான்கனியப் புலவர்குழாந் தலைகுனிந்து மனமுவந்து
தகைவிற் கொள்ளக்
கான்கனியுஞ் செந்தமிழ்கொண் டுணர்வளிக்கு மோர் நூலாய்க்
கவினச் செய்து
வான்கனிய் மாரிபுநா யகவசனப் பெயர்நிறுவி
வழங்கி னானால்

தமிழ்ப் புலவர் குழாத்திடை குலாம் காதிறு நாவலர் கோலோச்சும் தோற்றத்தை நாம் காண முடிகிறது. நாவலர் கொலுவீற்றிருந்து தமிழ் வளர்த்த மாண்பினையும் மாட்சியினையும் அவர் காலத்து வாழ்ந்த மற்றொரு பெரும் புலவர் வாயிலாக நாம் கேட்கிறோம்; பார்க்கிறோம். சொல்லின்பமும் காட்சியின்பமும் சேர்ந்து மனத்திரை விட்டகலா ஓவியமொன்று அங்ஙனே நம் உள்ளமெங்கனும் நிறைத்து நிற்கின்றது. சாற்றுக் கவியின் இலட்சியம் நிறைவேறுகின்றது.

***

நன்றி : பாவலர் பதிப்பகம்
பதிப்பக முகவரி : 53, நைனியப்பன் தெரு, சென்னை-600 001

« Older entries