பால் சக்கரியாவின் ‘செங்கல்லும் ஆசாரியும்’ கதையில் பாபு சொல்வான் (பயல் ரொம்ப நல்லவன். ‘ஏதன் தோட்டத்தில் இருந்த பாம்பையும் கடவுள்தானே படைச்சு விட்டார்’ என்று கேட்கும் ‘பக்தன்’!) ; “நான் பயப்படுறதே தெய்வத்திற்குத்தான். தெய்வம் நினைச்சா குற்றவாளியா மாறுவதற்கான எல்லா தகுதிகளும் என்கிட்ட ஒரே நிமிடத்தில வந்திடும், அதுக்குப் பிறகு நான் என்ன செய்ய முடியும்?’ என்று.
படித்துச் சிரித்ததும் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் வந்து கலக்கிய அண்ணன் ஜபருல்லாவின்
ஞாபகம் வந்துவிட்டது. அவர்தான் ஒரு கூட்டத்தில், ‘அல்லாஹ்வுக்கு ஏன் பயப்படுகிறீர்கள்? ஷைத்தானுக்கு
மட்டும் பயப்படுங்கள்’ என்று சொல்லி அனைவரையும் அலறவைத்தார். இதை என் ‘ருக்உ’ குறுநாவலிலும்
வைத்தேன். அட, இன்னொரு குழப்பம் ஏற்படுத்த வேண்டாமா?! ஒரு பது (பூர்விக அரபி) , ‘நான் புத்திசாலியாக இருக்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது ரசூல்(ஸல்) ‘அல்லாஹ்வுக்கு பயப்படு’ என்று சொன்ன – ஸூஃபி யூனுஸ்-பின்-மாலிக் மூலம் வந்த – ஹதீஸையும் இடம்பெறச் செய்தேன்.. குர்ஆனிலும் எத்தனை ஆயத்துகள் வருகின்றன அஞ்சச் சொல்லி! கூட்டத்தார் சந்தேகம் கேட்டார்கள். ‘யார் , பயத்தை விட்டும் பாதுகாக்கிறோனோ அவனுக்கு ஏன் பயப்படுகிறீர்கள் ?’ என்று அப்போது பதில் சொன்னார் ஜபருல்லாஹ்.
அஸ்தஃபிருல்லா!
இப்போது இது எதற்கு?
என் குரு இஜட். ஜபருல்லா அவர்கள் எழுதிய ‘ இது கண்களுக்கு அல்ல, மனசுக்கு‘ கவிதை நூல் வெளியீட்டு
விழாவும், அவருக்கு பொற்கிழி வழங்கும் விழாவும் இன்று மாலை நாகூரில் நடைபெறுகிறது (எனக்கு வராத அழைப்பிதழ் இங்கே). விழா சிறப்பாக நடக்க வல்ல இறைவன் (அதே இறைவன்தான்!) அருள் புரிவானாக, ஆமீன்!

ஃபோட்டோவியம் : ஆபிதீன்
தொடர்புடைய நண்பர் அப்துல் கையும் கட்டுரைகள் :
கவிஞர் ஜபருல்லாஹ் – வாயில் நுழையாத பெயர்
கவிஞர் ஜபருல்லாஹ்வின் தூது
அண்ணன் இஜட். ஜபருல்லா எழுதிய ஏராளமான பதிவுகள் இந்த வலைப்பக்கத்திலும் உள்ளன. வகைகள் பிரிவை சொடுக்கி….. வழக்கம்போல படிக்காதீர்கள்! நன்றி.