இஸ்லாமிய ஃபக்கீர்களும் இரண்டு கதைகளும்

vb0002063bதலைப்பைப் பார்த்ததுமே ‘என்னடா , நம்மள பத்தி புக் போட்டிக்கிறாங்க..!’ என்றுதான் வாங்கி உள்ளே உற்றுப் பார்த்தேன், அப்படியெல்லாம் இல்லை , என்னைப் பற்றித்தான்! சந்தோஷமா? சகோதரர் வ. ரஹ்மத்துல்லா எழுதிய ”இஸ்லாமிய ஃபக்கீர்கள்’ என்ற  நூலிலிருந்து (வெளியீடு : தென்திசை பதிப்பகம்)  சில பக்கங்களைப் பதிகிறேன். ‘ஜக்காத்’ மட்டும் சரியாக கொடுக்கப்பட்டால் ஃபக்கீர்கள் (பரம ஏழைகள்) என்று இஸ்லாமிய சமூகத்தில் யாரும் இருக்க மாட்டார்களே என்று புலம்பாமல் கதைகளை படிக்கவும்.
***

ஜைத்தூன் கிஸ்ஸா – கதைச் சுருக்கம்

‘கதை சொல்லல்’ என்ற பொருளுடைய ‘கஸஸ்’ என்ற அரபுச்சொல்லின் திரிபே கிஸ்ஸா ஆகும். இச்சொல் கதை என்ற பொருளை உடையது. ஃபக்கீர்கள் பாடுகின்ற இக்கதையுடன் கூடிய இப்பாடல் இஸ்லாம் சமயத்தைத் தம் முன்னோர்கள் எம்முறையில் பரப்பி வந்தனர் என்பதைக் காட்டுகிறது.

‘மதின மாநகரத்தில் நான்காவது அரசராக (கலீபாவாக) ஆட்சி செய்து வந்த ‘ஹஜ்ரத் அலி’ என்பவரின் மகன் முஹம்மது ஹனிபா தன் வீரர்களுடன் காட்டுக்கு வேட்டையாட செல்கிறார். அப்பொழுது இறம் தேசத்து மன்னன் மகள் ஜைத்தூன் வந்து ஹனீபாவை மயக்கமுற அடித்துவிட்டு, மற்ற நால்வரையும் தன் நாட்டில் சிறை வைக்கிறாள். இதனை அறிந்த ஹனீபாவின் தாயார் அவரை இழிவாகப் பேசுகிறார். ஹனிபா ஒரு சபதத்துடன் ஜைத்தூனையும் அவள் தந்தையையும் வென்று அவன் நாட்டு மக்களையும் இஸ்லாத்தில் சேர்த்த பின்னரே தன் நாடு திரும்பி வருவேன் என்று கூறிச் செல்கிறார்.

முதலில் ஹனிபா, ஜைத்தூனுடன் போரிட்டு வென்று அவளையும் அவள் அடிமைப் பெண்களையும் இஸ்லாத்தில் சேர்த்து தன் நாட்டிற்கு அனுப்பி வைக்கிறார். பின்பு ஜைத்தூன் தந்தையான இறம் ராஜனையும் அவன் நாட்டு மக்களையும் இஸ்லாத்தில் சேர்க்க அவன் நாடு செல்கிறார். வழியில் ஒவ்வொரு நாட்டு மன்னனையும் வென்று, இறுதியில் இறம் ராஜனையும் சேர்த்து தன் நாடு திரும்பி ஜைத்தூனை மணந்து ஆட்சி செய்கிறார்.

இக்கதையையே ஃபக்கீர்கள் பாடி உரைவிளக்கம் சொல்வதைக் கேட்கலாம்.

‘ஐந்து ராசர்களும் ஒன்றாகக் கூடி ஆலோசனை செய்து
காட்டுக்கு போயினி வேட்டைகளாடிட கொண்டாரந்நேரம்
வேட்டையின் ஆயுதமெடுத்தார்கள் கையில்
வேண்டுமானதெல்லாம்
கத்தி கட்டாரி ரம்பம் வாள் முதல் கனத்த கேடயமாம்
ஈட்டியை எடுத்து கையில பிடித்தார் எந்தன் அலிமார்கள்
சக்கரம் எடுத்து கையில பிடித்தார் சாமர்த்தியம் காட்ட…’

இந்த விதமாக ஐந்து அரசர்களுக்கும் வேட்டைக்கு வேண்டுமான ஆயுதங்களை எடுத்துப்பூட்டி, அவர்கள் ஏறி செல்வதற்குப் பஞ்ச கல்யாணி எனும் குதிரையைக் கொண்டுவரச் செய்து, ஐந்து அரசர்களும் ஒன்று போலான பரியில் ஏறி அமர்ந்து, ஹஜ்ரத் முகம்மது ஹனிபா அவர்கள் தன்னுடைய குதிரைக்கு தானே இசாராச் செய்த உடனே அந்த நான்கு வீரர்களும் முகம்மது ஹனீபாவாவுமாக ஐந்து பேர்களும் எப்படி குதிரைகளை நடத்திச் செல்கின்றார்களேயானால்..

‘நான்கு கால்கள் நளினங்கள் ஆடிட
ஓட்டிய குதிரைகள் வானத்துக்கு ஏகிட
சோலை மரங்களும் தலைதூக்கி ஆடிட
காட்டில் மான்மறைகள் கண்டதும் ஓடிட
ஹனீபா வழி நடத்தினாரே…’

இவ்வாறாக சைத்தூன் கிஸ்ஸாவை ·பக்கீர்கள் உரைவிளக்கம் கூறி இடையிடையே பாடல்கள் பாடுவதோடு, இப்பாடல்களில் வருணணைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடுகின்றனர்.

வினா – விடை பாடல்:

தமிழில் ‘வினா-விடை ‘ போக்கில் அமைந்துள்ள பாடலுக்கு இஸ்லாம் சமயத்தில் ‘மசலா’ எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். ‘மசலா’ என்ற சொல் குறித்து மு. அப்துல் கறீம் பின்வருமாறு கூறுகிறார். ‘ஸூஆல்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘வினாத் தொடுப்பது’ என்பது பொருள். அச்சொல்லின் அடிப்படையில் ‘மசலா’ என்ற அரபு இலக்கியம், மார்க்க உண்மைகளை ‘வினா-விடை’ வழியாக விளங்குவதற்கு எழுந்தது. அவ்வரபு இலக்கிய அமைப்பினைத் தழுவித் தமிழ் முஸ்லீம் புலவர்களும் அரபு, பாரசீக மொழிகளில் அமைந்த மார்க்க உண்மைகளைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த ‘மசலா’ என்ற புதுவகை இலக்கியத்தைப் புனைந்தனர்.

அவ்வகையில் ஃபக்கீர்களால் பாடப்படுகின்ற நூறு மசலா தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அம்மானைப் பாடலின் சாயலை ஒத்து விளங்குவதைக் காணலாம்.

……

அம்மானைப் பாடலில் மூன்று பேர் பாடுவது போன்று நூறு மசலாவில் இரண்டு பேர் பாடுகின்றனர். அவர்களுள் ஒருவர் ஆண். மற்றொருவர் பெண் ஆகும். அம்மானைப் பாடல்களில் இறுதியடியில் ‘அம்மானை’ என்ற சொல் இடம் பெறுவது போன்று இப்பாடல்களில் இறுதியடியில் ‘மசலா’ என்ற சொல் இடம்பெறுகிறது. மற்றும் இது நெடுங்கதைப் போக்கில் அமைந்த சமய நிகழ்ச்சிகளையும் , செய்திகளையும் கொண்டு அமைந்த பாடல்களாகக் காணப்படுகிறது.

நூறு மசலா பாடல் கூறு:

நூறு மசலாவின் முற்பகுதி சாதாரண தனிப்பாடல் போக்கில் ‘பாடல்-உரை விளக்கம்’ என்ற முறையிலும், பிற்பகுதி ‘வினா- விடை’ போக்கிலும் அமைந்துள்ளது. முற்பகுதி அப்பாஸ் அரசர் என்பவரின் பிறப்பு, வளர்ப்பு நிகழ்ச்சியையும், அவர் தாய்தந்தையர் படுகின்ற இன்ப துன்பங்களை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. பிற்பகுதியிலேயே அப்பாஸ் அரசருக்கும் , மெகர்பானுவல்லிக்கும் நடைபெறுகின்ற போட்டியைப் பற்றிய செய்தி இடம் பெறுகிறது.

நூறு மசலா சுருக்கம் :

‘ஐந்தமா நகரில் அகமது ஷா என்பவர் தன் மனைவி மரியம்பீவியுடன் அரசு புரிந்து வருகிறார். வெகுநாட்கள் ஆகியும் குழந்தையில்லாமல் இறைவன் அருளால் அப்பாஸ் என்பவரைப் பெற்றெடுக்கின்றனர். சூழ்நிலை காரணத்தால் தன் நாட்டை இழந்து  இருவரும் தன் குழந்தையுடன் காடு செல்கின்றனர். அங்கு அப்பாஸ் தன் தாய் தந்தையரைப் பிரிந்துசீன மாநகரை வந்தடைகிறார். சீனமாநகரில் ‘நூறரசி’ என்னும் பட்டம் பெற்ற மெகர்பானு வல்லி வாழ்ந்து வருகிறார். அவள் தன்னை மணம் முடிக்கக் கேட்டு வருபவர்களிடத்தில் நூறு கேள்விகள் கேட்டு , அதில் விடை கூறி வெற்றி பெற்றவர்களை மணமுடிப்பது என்பதே நோக்கமாகும். அந்நிலையில் ஏராளமான அரசர்களும், மந்திரிகளும் போட்டியில் தோல்வியுற்று, அவளிடம் அடிமை வேலை பார்த்து வந்தனர்.

ஒருநாள் இச்செய்தியினை அறிந்த அப்பாஸ் அரசர் எப்படியும் வல்லியை வென்றாக வேண்டும் என்ற முடிவோடு மசலா நடைபெறுகின்ற மணிமண்டபத்துக்கு வந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் மெகர்பானுவல்லியை வென்று மணமுடிக்கிறார்.

ஃபக்கீர்கள் இச்செய்தியை வினா-விடை போக்கில் பாடியிருப்பதைப் காணலாம்.

….. ……..

வினா- விடை பாடல் :

மெகர்பானுவல்லி முதல் கேள்வியாக அப்பாஸ் அரசரைப் பார்த்து கேட்கிறாள். மன்னனே! மன்னாதி மன்னனே! மகுடமுடி ராஜனே! என்று சொல்லி சப்தத்தோடு ஆங்காரத்தோடு கேட்கிறாள்.

வினா :

‘தாண்டும் பரிகள் ஏறி மீண்டும் இங்கு வந்தோரே
தாசியராய் வந்த கோசியரே! நீர் இங்கு கேளும்
நீர் யார் மகனுக்காணும்
நீர் இப்போ சொல்லாவிட்டால் கொல்வேன் யானும்
உன்னை யார் வளர்த்தது சொல்லாவிட்டால்
நேரே பிளப்பேன் யானும்…’

விடை :

‘அடி ஞானப்பெண்ணே!
கொல்வேன் என்று சொன்ன குங்கும சந்தனமே
கோதையாராகிய மாதரே! நீர் கேளு – நான்
ஆதம் மகன் தாண்டி – பெண்ணே
ஓதம் வேதம் தாண்டி
என்னை அல்லா வளர்த்தாண்டி – பெண்ணே
உன்னை ஒரு சொல்லால் வெல்லத்தாண்டி’

வினா :

‘ஏய் மன்னா!
தாண்டும் பரிகள் ஏறும் முன்னே
தங்கியிருந்த இடமென்ன
ஊன்றும் பரிகள் ஏறும் முன்னே
உயர்ந்திருந்த இடமென்ன
இம்மசலா போல் ஆயிரம் மசலா உள்ளது
விளங்கும் படி சொல்லும் மன்னா – இங்கு
பலபேர் முன்னிலையில்..’

விடை :

‘அடி ஞானப்பெண்ணே!
தாண்டும் பரிகள் ஏறும் முன்னே
தங்கியிருந்தேன் தகப்பன் வீட்டில்
ஊன்றும் பரிகள் ஏறும் முன்னே
உயர்ந்திருந்தேன் தாயின் வயிற்றில்
இதுதானா உன் மசலா என்று
என்னை வெல்ல வந்தாயடி’

இரண்டாம் நாள் மசலாவில்…

வினா :

‘மன்னாதி மன்னவனே!
மகுடமுடி ராஜனே!
என்னை வெல்ல வந்த மன்னா
இருந்து நல்லா கேளு மன்னா – அடே
உங்கள் நபி மார்க்கத்திலே
நல்ல முகம்மதியர் வேதத்திலே
நாலாவது மார்க்கத்திலே
நபிகள் சொன்ன சரகின்படி
மானிலேயும் பெரிய மானு அறுபடாத மானுமென்னா?
மீனிலேயும் பெரிய மீனு அறுபடாத மீனுமென்னா?
மாவுலேயும் நல்ல மாவு இடிபடாத மாவுமென்னா?
இடிபடாத மாவானதை எந்தனுக்கு சொல்லும் மன்னா
சொன்ன உயிர் பிழைப்பாய் மன்னா
சொல்லாவிட்டால் தலையறுப்பேன்’

விடை :

அந்த மொழி கேட்டதுடன் – நம்ம
அகமதுஷா திரு மைந்தன்
‘கேளடியே ஞானவல்லி கிருபையுள்ள நூறுமசலா
எங்கள் நபி மார்க்கத்திலே
நல்ல முகம்மதியர் வேதத்திலே – அல்லா
நாலாவது மார்க்கத்திலே
நபிகள் சொன்ன சரகின்படி
மானிலேயும் பெரிய மானு – பெண்ணே
அறுபடாத மானானது – அல்லா
அறுபடாத மானானது – அது
ஈமானடி மெகர்பானே..
மீனிலேயும் பெரிய மீனு
அறுபடாத மீனானது – அது
ஆமீன் என்ற தாகுமே…

மாவுலேயும் நல்ல மாவு – பெண்ணே
இடிபடாத மாவானது – அல்லா
இடிபடாத மாவானது
ஐந்து நல்ல கலிமா பெண்ணே
இதுதானா உன் கதைகள்
இந்த மன்னனுக்குச் சொல்ல வந்தே..

மூன்றாம் நாள் மசலாவில்

வினா:

‘அட மன்னாதி மன்னனே
மகுடமுடி ராஜனே!
என்னை வெல்ல வந்த மன்னா!
இருந்து நல்லா கேளு மன்னா…
ஆதத்துடைய மக்களுக்கு
அல்லா படைத்தான் ஆறுவீடு
ஆறு வீட்டுப் பேரானதை
அறியும்படி சொல்லும் மன்னா
சொல்லும் மன்னா வெல்லும் மன்னா..’

விடை:

‘அந்த மொழி கேட்டதுடன்
அந்த சிந்தையுள்ள அப்பாஸ் அரசர்
கேளடியே! கிளிமொழியே
கிருபையுள்ள நூறு மசலா – இந்த
ஆதத்துடைய மக்களுக்கு
அல்லா படைத்தான் ஆறுவீடு
முதல் வீடு தகப்பன் வீடு – பெண்ணே
இரண்டாம்வீடு தாய் கருவு வீடு – அல்லா
மூன்றாம் வீடு துன்யா வீடு
நான்காம் வீடு கப்ரு வீடு
ஐந்தாம் வீடு கேள்வி வீடு
ஆறாம் வீடு சொர்க்கம் நரகம் வீடு..’

இவ்வாறாக மூன்று நாட்கள் மசலா மணி மண்டபத்தில் அப்பாஸ் அரசருக்கும், மெகர்பானுவல்லிக்கும் நடைபெற்ற போட்டியில் அப்பாஸ் அரசர் வெற்றிபெற்று மெகர்பனுவை மணம் முடிக்கிறார்.

இவ்விதமாக ஃபக்கீர்கள் நூறு மசலா என்ற பாடல் மூலமாக இஸ்லாமியச் சமயக் கடமைகளையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு எளிய முறையில் விளக்குகின்றனர்.

***

பொருள் அகராதி :

இசாரா : சைகை
சறகு : இஸ்லாமிய தெய்வீக சட்டம்
ஈமான் – இறை நம்பிக்கை
ஆமீன் – அப்படியே ஆகுக
கலிமா  – இஸ்லாத்தின் மூலமந்திரம் (‘லாயிலாஹா இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லா’)
துன்யா – இவ்வுலகம்
கப்ரு – மண்ணறை (அடக்கஸ்தலம்)
கியாமத் – இறுதித் தீர்ப்பு நாள்

***

‘இஸ்லாமிய ·பக்கீர்கள்’ – ரஹ்மத்துல்லாவின் முதல் நூல் (முதல் பதிப்பு அக்’2007). மதுரையைச் சேர்ந்த வ. ரஹ்மத்துல்லா M. Phil, M.Ed தற்போது மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும்  தென்திசை பதிப்பகத்தாருக்கும்  நன்றி.

***

‘மரத்துக்குள்ளே பூப்பந்து – மன்னா
குடத்துக்குள்ளே காய் காய்க்கும்
காயாவது பழம் ஆனது – அது
கனிந்துதான் கீழே விழுந்தது
கனிந்து கீழே விழுந்துதான் – திகட்டாமல்
இனிக்கும் கனி, அந்தக் கனி – மன்னா
எக்கனி என்று சொல்லும் மன்னா’  என்ற

கடைசி ‘மசலா’விற்கு ‘சிக்கந்தர் கனி’ – என்று என் தாய்வழிப் பாட்டனாரின் பெயரைச்-  சொல்லி பாடாய்ப்படுத்தாமல் , நூலை வாங்கி பதிலைப் பார்க்கவும் ! ·பக்கீர்கள் பற்றி பல விபரங்கள், அவர்கள் பாடும் பாடல்களோடு உள்ளன. ‘பெண்புத்தி மாலை’யும் உண்டு. ‘தான் நம்புகின்ற தெய்வத்தின் கதையினை, செயல்களை புகழ் புராணமாக இசை உணர்வோடு எடுத்துச் சொல்வதில் மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்தின் பதிவுகளாகவும் ·பக்கீர் பாடல்கள் அமையும். அவர்கள் குறித்து இதுவரை முழு அளவில் ஆய்வுகள் இல்லாத குறையை ரஹ்மத்துல்லாவின் உழைப்பு நீக்குகிறது’ என்று பின்னட்டை சொல்வது சரிதான். என்ன, ரொம்ப லேட்.

இஸ்லாமும் தமிழிலக்கியமும் – முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

ஆறாம்திணையில் வெளிவந்த அஜ்மல்கான் அவர்களின் கட்டுரைக்கான சுட்டியை மட்டும், பேரா. பர்வீன் சுல்தானாவின் பேட்டியில் முன்பு கொடுத்திருந்தேன். முழுக்கட்டுரையும் இப்போது. இதைப் படிக்கும் முன் ‘பல்சந்த மாலை’ பற்றி நண்பர் நாகார்ஜூனனின் கட்டுரையை வாசிக்கவும். மறக்காமல், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் பற்றிய சுகனின் பின்னூட்டத்தையும்.

– ஆபிதீன் –

***

இஸ்லாமும் தமிழிலக்கியமும்
முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

இஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் என்பன இஸ்லாமிய மார்க்கக் கருத்துக்களை உள்ளடக்கமாகக் கொண்டெழுந்த தமிழ்மொழி இலக்கியங்களே. ஒரு மொழியில் ஒரு சமயத்தைச் சார்ந்த இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடித்தளமாக இருப்பது மொழிக்கும் சமயத்திற்குமுள்ள உறவு நிலையே. இவ்வுறவு நிலை பலப்படுத்தப்பட்ட பின்னரே எந்தவொரு மொழியிலும் ஒரு குறிப்பிட்ட சமய இலக்கியங்கள் தோன்றுவதற்கான சூழல் அதிகரிக்கும்.  இவ்வகையில் இன்றைக்குத் தமிழிலக்கிய உலகில் சுட்டிக்காட்டத்தக்க எல்லைப் பரப்பினைப் பெற்றுச் சிறக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்ற வளர்ச்சிக்கு, இஸ்லாம் தமிழகத்துடன் கொண்ட தொன்மை உறவே காரணமாக இருந்திருக்கும். இத்தொன்மை உறவினையும் அதன் பயனாய் மலர்ந்த முதல் இஸ்லாமியத் தமிழிலக்கியத்தையும் ஏனைய பிற இஸ்லாமிய இலக்கியங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கமாகும்.

தமிழுக்கும் இஸ்லாத்திற்கும் இணைப்பு ஏற்படுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பினை அரபு நாட்டவர்கள் பெற்றிருந்தனர். எனவே இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கான அடித்தளமாக இருந்தது அரபு நாட்டவர்களின் தமிழக வருகை எனலாம். இவ்வருகைநிலை இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கிறது. பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே அரபு நாட்டிற்கும் தமிழகத்திற்குமிடையே வியாபாரத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. இத்தொடர்பு பெருமானார்(சல்) அவர்கள் காலத்திலும் தொடர்ந்து, நீடித்தது, பின் வலுப்பெற்றது. அரபு, தமிழக மக்களது தொடர்பிற்கான அகச்சான்றுகள் பலவும் வரலாற்றிலும், இலக்கியத்திலும் விரவிக் கிடக்கின்றன.

அரபு மக்கள் கிழக்கு, மேற்கு வணிகத் துறையில் பெரும் முனைப்பாக இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரையில் பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினங்களே தூர கிழக்கு நாடுகளுக்கும் மேலை ஆசிய நாடுகளுக்கும் இடையிலான கடல் வணிகத் தொடர்பிற்குக் களனாக விளங்கின. அவற்றுள் முக்கியமானது பவுத்திர மாணிக்கப் பட்டினம். மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள புவுத்திர மாணிக்கம்பட்டினம் ராமேஸ்வரம் அல்லது தனுஷ்கோடியுடன் முடியும், இதற்கு நேர் வடக்கில் அமைந்துள்ள வியாபாரத்தலமாக விளங்கியது தேவிபட்டினம். தென்காயல் என்று அழைக்கப்பட்ட புத்திர மாணிக்கப்பட்டினம் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் வியாபாரத் தொடர்புகளுக்கும் வடகாயல் என்று அழைக்கப்படும் தேவிபட்டினம் தூர கிழக்கு நாடுகளின் வியாபாரத் தொடர்புகளுக்கும் மையமாக விளங்கின. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் ஆகிய இரு துறைமுகங்களும் வெளிநாட்டவரின் வியாபாரத் தொடர்பிற்கு இடமாக விளங்கியதை வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

பாரசீக வளைகுடாவில் உள்ள கைஸ் என்னும் தீவு இந்நாளைய ஹாங்காங் துறைமுகம் போலப் பெரும் வணிகத் தலமாக விளங்கியது. அன்றைய வணிகத் தலமான கைஸ் துறைமுகம், புவுத்திர மாணிக்கப்பட்டினம், தேவிபட்டினம் முதலானவைகள் ஐரோப்பியர்களுக்கும் அரபு தேசத்தவர்களுக்கும் பண்டமாறறு வியாபாரத்திற்குரிய மையமாகத் திகழ்ந்தன. அன்றைய பாண்டிய நாட்டில் அரபு தேத்து வணிகர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அதன் பயனாய் அவர்கள் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களிலே குடியேறத் தொடங்கினர். அரபு நாட்டு மக்கள் தமிழகத்துடன் சங்க கால இலக்கியங்களிலே நிரம்பக் காணலாம். சங்க இலக்கியங்களில் அரபு தேசத்து வணிகர்கள் ‘யவனர்’ என்னும் சொல்லாட்சியில் குறிக்கப்பட்டுள்ளனர். யவனரின் தமிழக வருகை வியாபார நோக்கமாகவே அமைந்தது. இதனை அகநானூற்றுப் பாடல் இவ்வாறு குறிக்கிறது.

கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினை மாண்கலம்
பொன்னெடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி… (149)

இங்குக் கறி என்னும் சொல் மிளகினையும் முசிறி என்பது முசிறிப்படடினத்தையும் குறிப்பதாகும். எனவே மிளகு போன்ற வாசனைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டே யவனர்கள் கிழக்கு நாடுகளுக்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் வருகை தந்தனர். அவர்களின் வியாபாரத் தொடர்பே நாளடைவில் தமிழகத்தில் அரபு நாட்டவரின் குடியேற்றமாகத் தொடங்கியது. இந்தக் குடியேற்றம், இஸ்லாம் இவ்வுலகில் பரவுவதற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும். ‘கிறித்தவ ஆண்டு தொடங்கியதற்கு முன்னரேயே அரபிகள் இலங்கையிலும் தென் இந்தியாவிலும் குடியேறினர்’ என்று பிளனி என்னும் வரலற்றாசிரியர் கூற்றும் மேற்கூரிய கருத்திற்கு அரண் செய்வதாக உள்ளது.

தமிழகத்தில் இஸ்லாத்தைப் பரப்பியவர்களும் இன்றைய முஸ்லீம்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்களும் மேற்குறித்த வியாபார நிமித்தமாக இங்கு வந்த குடியேறிய அரபியர்களே. அத்தகையவர்களின் குடியேற்றம் பெருமானார் நபிகள் நாயகம் அவர்களது காலத்திலும் தொடர்ந்து வலுப்பெற்றது. வியாபார நிமித்தமான குடியேற்றம் நபிகள் காலத்தில் சமயச்சார்பாகவும் அமைந்து தொடரலாயிற்று. நபிகள் நாயகம் (சல்) அவர்களின் தோழர்களான தமீமுல் அன்சாரி அவர்களினதும் அபீலக்காங் அவர்களினதும் கல்லறைகள் தமிழகத்தில் இருப்பது இஸ்லாத்துக்கும் தமிழகத்திற்கும் உள்ள அப்போதைய நெருங்கிய உறவை எடுத்துக்காட்டுகிறது.

இவ்வுறவு நிலையை எடுத்துக்காட்ட எத்தனையோ அகச் சான்றுகளைத் தமிழகத்தில் காணலாம்.

ஆனால் ஆரம்பக் காலத்தில் தமிழக முஸ்லிம்கள் வியாபாரக் கண்ணோட்டத்திலேயே அவர்களது கவனத்தைச் செலுத்தினர். பின்னர் நாளடைவில் குடியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க அது மார்க்கத்திலும் அமையலாயிற்று. இறைநேயச் செல்வர்களும், மார்க்கப் பெரியோர்களும் இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்புவதை முதற்பணியாகக் கொண்டு செயலாற்றினார்கள். இதற்கு வரலாற்றுப் பின்புலத்தில் தமிழகத்தில் இஸ்லாம் இஇருந்த காலக்கட்டத்தில் தமிழுக்கும் ஏனைய பிற இந்தியச் சமயங்களுக்கும் உள்ள தொடர்பினை இங்குள்ள முஸ்லிம் பெருமக்கள் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார்கள். இதன் பயனாகவே தமிழை அடிப்படையாகக் கொண்டு தங்களது சமயக் கொள்கைகளை வளர்த்துக் கொள்ளும் உத்தியையும் இங்குள்ள முஸ்லிம் சமயப் பெரியோர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள். அதுவே இஸ்லாமும் தமிழும் இணையும் காலக்கட்டமாக உருவானது. இதன் பயனாய் இஸ்லாம் தமிழகமெங்கும் பரவலாயிற்று. இஸ்லாமிய கருத்துக்களைப் பரப்புவதற்கு மொழியின் தேவையை உணரத் தலைப்பட்ட பின்னரே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தோற்றம் தமிழிலக்கிய வரலாற்றில் உதயமாயிற்று.

இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாற்றிற்கு அச்சாரமிட்ட பெருமை பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சாரும். பல்சந்தமாலை என்பது இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதைப் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையில் அறிய முடிகிறதே தவிர நூல் முழுமையும் நமக்குக் கிடைத்தில. இவ்விலக்கியத்துள் இடம்பெற்றுள்ள எட்டுப் பாடல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.

பழங்காலத்தில் தோன்றிய அகப்பொருள் பற்றிய ஒரு நூலுக்கு எழுதப்பட்ட உரையிலேயே மேற்குறித்த எட்டுப் பாடல்களும் சான்றுச் செய்யுட்களாக இடம்பெற்றுள்ளன. இவ்வகப் பொருள் நூல்கூட இன்னும் தமிழிலக்கிய ஆய்வாளர்களால் முழுமையாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வகப் பொருள் நூலினை வையாபுரிபிள்ளை ‘களவிற் காரிகை’ என்று பெயரிட்டு 1931இல் பதிப்பித்துள்ளார். இந்நூலின் ஒரே ஒரு கையெழுத்துப் படி சென்னையில் உள்ள அரசாங்கத்தின் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த ஆங்கிலக் குறிப்பினால் இ·து ஆழ்வர் திருநகரி மலையப்பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் படிகளுள் ஒன்றாக இஇருந்தது என்பதும் அவ்வேட்டுப் படியின்றும் நாதமுனைப்பிள்ளை என்பவர் 1920ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பன்னிரண்டாம் தேதியில் படி எடுத்தார் என்பதையும் அறியலாம். அதுவே வையாபுரிப்பிள்ளை களவியல் காரிகை என்ற தலைப்பில் அவ்வகப்பொருள் துறைகளைப் பதிப்பித்து வெளியிட மூலமாக அமைந்தது.

இந்நூல் குறித்துப் பதிப்பாசிரியர் வையாபுரிப்பிள்ளை கூறும்போது ‘கையெழுத்துப் பிரதியில் இறையனாரகப் பொருட்துறையைச் சங்கச் செய்யுளாக உதாரணம் எழுதியது’ எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ‘இக்குறிப்பு’ இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பாகவே கொள்ளவேண்டுமேயன்றி நூலில் பெயரல்ல என்பது திண்ணம்’ என்பதையும் குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இவ்வகப்பொருள் நூலுக்கு இஇப்போது இடப்பட்டுள்ள பெயரான களவியற் காரிகை என்பது தம்மாலே சூட்டப்பட்ட பெயர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே தற்போது அவ்வகப்பொருள் நூலுக்குரிய பெயராக, வையாபுரிப்பிள்ளை சூட்டிய களவியற் காரிகை என்னும் பெயரே கொள்ளப்படுகிறது.

களவியற் காரிகையில் விளக்கப்படும் அகப்பொருட் துறைகளுக்கு எடுத்துக்காட்டுகள் பல்வேறு பழைய இலக்கியங்களிலிருந்து தரப்பட்டுள்ளன. இத்தகு எடுத்துக்காட்டுகளில் அடங்கியுள்ள எட்டுச் செய்யுட்கள் மட்டும் பல்சந்தமாலை என்னும் இலக்கியத்தைச் சார்ந்ததாகக் காணப்படுகிறது. நமக்குப் பல்சந்தமாலை என்னும் தனித்ததொரு இஇலக்கியம் கிடைக்காவிடினும் இச்சான்றாதாரச் செய்யுட்களைக் கொண்டு இத்தகு இலக்கியம் இருந்து அழிந்திருக்க வேண்டும் என்பதை நன்கு அறியமுடிகிறது.

இனி, பல்சந்தமாலை, இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் காண்போம். வையாபுரிப்பிள்ளை தம்முடைய பதிப்பின் இறுதியில் மேற்கோள் நூல்கள் பற்றியக் குறிப்பு ஒன்றை இணைத்துள்ளார். அதில் பல்சந்தமாலை குறித்து அவர் கூறும்போது பல்சந்தமாலை என்னும் பெயருடைய நூல் ஒரு சில செய்திகளைப் புலப்படுத்துகின்றது. பன்னிரு பாட்டியலில் பல்சந்தமாலை என்பது ஒரு பிரபந்த வகை எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நூல் அப்பிரபந்த வகையை சார்ந்ததாக இருத்தல்கூடும். இந்நூல் வச்சிர நாட்டு வகுதாபுரியில் அரசு புரிந்த அஞ்சு வண்ணத்தார் மரபினனாகிய ஒரு முகமதிய முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பெற்றதாகும். வகுதாபுரிக்கு இக்காலத்தில் காயற்பட்டினம் என வழங்குவர். வகுதாபுரிக்கு அந்து பார் என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது பல்சந்தமாலையின் ஒரு செய்யுளால் புலப்படுகிறது’ எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்சந்தமாலைச் செய்யுட்களாகக் கிடைத்துள்ளனவற்றின் உள்ளடக்கக் கருத்துக்களை மையமாகக் கொண்டு இச்செய்யுட்கள் அடங்கிய நூல் இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த நூல் என்பதைத் தெளிவாக உணரலாம். இவற்றுள் ஒரு செய்யுளை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறோம்.

இல்லார் நுதலயு நீயுமின் றேசென்று மேவுதிர்கு
தெல்லா முணர்ந்தவ ரேழ் பெருந்த தரங்கத் தியவனர்கள்
அல்லா வெனவந்து சத்திய நந்தாவகை தொழுஞ் சீர்
நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே

இச்செய்யுளின் மூன்றாவது அடியில் வரும் ‘அல்லாவென வந்து சத்திய நந்தா தொழுஞ்சீர்’ என்பது பல்சந்தமாலை இலக்கியம் இஸ்லாமியச் சார்புள்ளது என்பதற்கோர் காரணமாகக் கொள்ளலாம். இதுபோன்று ஏனைய செய்யுட்களின் உள்ளடக்கக் கருத்துக்களும் பல்சந்தமாலை இஸ்லாமியத் தமிழிலக்கியமே என்பதைப் பறைசாற்றுகின்றன. அவற்றை இங்கு எடுத்துக் கூறின் விரியும் என்ற காரணம் தகுதி விடுக்கின்றோம்.

இனி, பல்சந்தமாலையின் காலக் கணிப்பு தொடர்பாகச் சில கருத்துக்களைக் காண்போம். கால ஆராய்ச்சியைப் பல்சந்த மாலையின் மொழி இயல்பினைக் கொண்டு ஓரளவு கணிக்கலாம். பல்சந்தமாலையின் காலம் தொடர்பாக மு. அருணாசலம் கூறும் போது 14-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்பர். ஆனால் இது பொருந்துவதன்று. பல்சந்தமாலையில் இடம்பெற்றுள்ள செய்யுட்களில் அதன் ஆசிரியர் தொல்காப்பியரின் மொழி மரபினைப் பின்பற்றியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நன்னூல் கருத்துகளுக்கு ஏற்புடையதாகக் காணப்படவில்லை. இதில் ஆசிரியர் சோனகரைக் (முஸ்லிம்களை) குறிக்க இயவனர் என்ற சொல்லாட்சியை இஇரு இஇடங்களில் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் ‘இயவனராசன்’ என ஒரு செய்யுளை ஆரம்பிக்கின்றார்.

‘இயவனராசன் கலுபா தாழுதலெண்ண வந்தோர்’…

என அமைகிறது இச்செய்யுள். இனி பிறிதொரு செய்யுளில் இரண்டாமடி

‘தெல்லா முணர்ந்த ரேழ்பெருந்த தரங்கத் தியவனர்கள்’

என உள்ளது. இவ்விரண்டு செய்யுட்களிலும் இயவனர் எனவே என உள்ளது. முதலாம் செய்யுளில் இயவனர் என்பது பாடலை ஆரம்பிக்கும் சொல்லாக வர மற்ற செய்யுளில் யகரத்தின் முன் வந்த குற்றயலிகரம் முற்றியலிகரமாக மாறி ‘இயவனர்’ என வந்துள்ளது.

யவனர் எனப் பாடலில் பயன்படுத்தி இருந்தால் அம்மரபு தொல்காப்பிய மொழி வழக்காறு நிலைக்கு முரணாக இருந்திருக்கும். சான்றோர் அதனைத் தவறு எனக் கருதுவர். பல்சந்தமாலை ஆசிரியர் வாழ்ந்த காலததில் அகரத்தோடு யகரமெய் மொழிக்கு முதலில் வரும் என்ற நிலை இருந்திருக்காமல் இருக்கலாம். எனவேதான் பல்சந்தமாலை ஆசிரியர் இயவனர் என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இம்மரபு நன்னூல் கூறும் மொழி இலக்கணத்துக்கு முரணானது. எனவே பல்சந்தமாலை ஆசிரியர் காலத்தை நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் காலத்துக்கு முற்பட்டதாகக் கொள்ளல் வேண்டும். பவணந்தியாரின் காலம் 13ம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவு. அப்படியாயின் அதற்கு முற்பட்ட காலமான 12ஆம் நூற்றாண்டினையே பல்சந்தமாலை சார்ந்ததாக இருத்தல் வேண்டும். இஇக்காலத்தையே இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் தொடக்க காலமாகக் கொள்ளலாம்.

பல்சந்தமாலை என்னும் தமிழிலக்கியத்தின் மூலமாக தமிழிலக்கிய உலகில் கால்கோள் கொள்ளத் தொடங்கிய இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு இன்றளவு ஒன்பது நுற்றாண்டு கால இலக்கியப் பாரம்பரித்தைத் தமக்கெனவுடையதாகக் கொண்டுள்ளது.

இவ்வொன்பது நூற்றாண்டு கால எல்லையில் ஏறத்தாழ இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறான வகைப்பட்ட தமிழிலக்கியங்களைப் பெற்றுத் தமக்கெனச் சுட்டிக்காட்டத்தக்க இலக்கிய வரலாற்றுப் பின்னணியை இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவு பெற்றுள்ளது.

பல்சந்தமாலைக்கு அடுத்த நிலையில் யாகோபுச் சித்தர் பாடல்கள் (15 ஆம் நூற்றாண்டு) ஆயிர மசலா (கி.பி. 1572), மிகுராஜ் மாலை (கி.பி.1590), திருநெறி நீதம் (கி.பி. 1613), கனகாபிஷேக மாலை (கி.பி. 1648), சக்கன் படைப்போர் (கி.பி. 1686), முதுமொழி மாலை (17 ஆம் நூற்றாண்டின் இறுதி) சீறாப்புராணம் (கி.பி. 1703), திருமக்காப்பள்ளு (17ஆம் நூற்றாண்டு) முதலான ஒன்பது இலக்கியங்கள் இடம் பெறுவதாக அவற்றின் கால எல்லை அடிப்படையில் வரையறை செய்யலாம் – பல்சந்த மாலையுடன் சேர்த்து இப்பத்து இலக்கியங்களையும் தொடக்க கால இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாகக் கொள்ளலாம்.

தொடக்க காலத்தில் இஸ்லாமும் தமிழும் இணைந்த நிலையிலேயே படைப்போர் இலக்கியம் ஒன்றும் தோன்றி இருப்பது இங்கு குறிப்பிடற்பாலது. தொடக்க காலத்தில் ஒருசில இலக்கியங்களே வரப்பெற்ற போதிலும் இஸ்லாமியத் தமிழிலக்கியங்களின் வருகை நிலை காலப்போக்கில் பெருகலாயிற்று. கி.பி. 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இன்றுள்ள இஇஸ்லாமியத் தமிழிலக்கியங்கள் அனைத்தும் அடங்கும். இந்நூற்றாண்டுகளை இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆக்கத்தின் பொற்காலமாகக் கருதலாம்.

இஸ்லாம் தமிழுக்காற்றியுள்ள பணிகளுள் குறிப்பிடத்தக்கது, வேறு எந்தவொரு தனிப்பட்ட சமயமும் அளித்திராத எண்ணிக் கையில் காப்பியங்களைப் படைத்தளிருப்பதாகும். கனகவிராஜரின் கனகாபிரேஷக மாலை, உமறுப்புலவரின் சீறாப்புராணம், கேசாதி நயினாரின் திருமணக்காட்சி, பனியகுமது மரைக்காயரின் சின்ன சீறா, வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜ நாயகம், சேகனாப் புலவரின் குத்புநாயகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் குத்பு நாயகம், பதுறுத்தீன் புலவரின் முஹியித்தீன் புராணம், சேகனாப் புலவரின் திருமணி மாலை, புதுகுஷ்ஷாம், திருக்காரணப் புராணம், வண்ணக் களஞ்சியப் புலவரின் தீன்விளக்கம், ஐதுறூசு நயினார் புலவரின் நவமணிமாலை, குலாம் காதிறு நாவலரின் நாகூர் புராணம், ஆரிபு நாயகம் போன்ற பதினைந்து இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களை இயற்றித் தந்த பெருமை முஸ்லிம் தமிழ்ப் புலவர்களைச்சாரும்.

காப்பியங்களுடன் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் நின்றுவிடவில்லை. தமிழிலக்கிய வரலாற்றில் காலத்திற்கேற்ப தோன்றியுள்ள பல்வேறான இலக்கியவகைகளில் தங்களது பங்களிப்பினை நிலைநாட்டியுள்ளார்கள். அத்துடன் தமிழிலக்கிய வரலாற்றிற்குச் சில புதிய இலக்கிய வடிவங்களையும் அறிமுகம் செய்வித்த பெருமை முஸ்லிம் புலவர்களைச் சாரும்.இத்தகு இலக்கிய வடிவங்களே புதுவகை இஸ்லாமியத் தமிழிலக்கியங்களாக இடம் பெற்றுள்ளன. இங்ஙனம் இஸ்லாமும் தமிழும் இஇணைந்ததின் பயனாக எண்ணிலடங்காத் தமிழிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இன்றும் தோன்றிய வண்ணம் உள்ளன. இதன் காரணமாக இஸ்லாமியத் தமிழிலக்கியப் பிரிவுத் தமக்கெனத் தனித்ததொரு இலக்கிய வரலாற்றுப் பின்னணியைப் பெற்றுச் சிறக்கிறது. இத்தகு இஸ்லாமியத் தமிழிலக்கிய வரலாறு தமிழிலக்கிய உலகிற்கு ஓர் உன்னதமான கொடையாகவே விளங்குகிறது.

**

நன்றி : ஆறாம்திணை, முனைவர்.பீ.மு. அஜ்மல்கான்

நூறு மஸ்லாவும் ஆறு மசாலாவும்

ஃபக்கீர்கள் பாடும் ‘நூறுமஸ்லா (மஸ்லா – புதிர்) கதை பற்றிய கட்டுரையொன்றை கழனியூரான் எழுதியிருக்கிறார் இவ்வார உயிரோசையில். சுவாரஸ்யமான மீதி ‘மசாலா’க்களை பிறகு எழுதுகிறேன். இப்போது அந்தக் கட்டுரையின் மீள்பதிவு மட்டும் –  ‘உயிரோசை’க்கும் கழனியூரானுக்கும் நன்றிகளுடன்.

ஜெய்தூன் கிஸ்ஸா, ஷம்ஸுன் கிஸ்ஸா , விறகு வெட்டியார் கிஸ்ஸா , நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா, தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா ,பெண் புத்தி மாலை ,இராஜமணி மாலை,ரசூல் மாலை ,மீரான் மாலை ,பாப்பாத்தி மாலை, தாரு மாலை, முஹையித்தீன் மாலை, அதபு மாலை ,முனாஜாத் மாலை, வெள்ளாட்டி மசாலா, மஸ்தான் ஸாகிப் பாடல் ,சலவாத்து பாட்டு , மெய்ஞானரத்தின அலங்கார சிந்தனை, முகையித்தீன் ஆண்டவர்கள் சத்துரு சங்காரம் ,ஞானரத்தின குறவஞ்சி போன்ற ‘அசத்தியங்கள்’ ஒழியவேண்டுமென்பவர்கள் ஒளிந்து கொள்ளவும்!

– ஆபிதீன் –

***
ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களும் , இளவரசன் அப்பாசின் பதில்களும் 

கழனியூரன் 
 
நாட்டுப்புறவியலுக்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பும் உள்ளது. குறிப்பாக பக்கீர்ஷாக்கள் என்ற இஸ்லாமிய கலையாளர்கள் செய்துள்ள பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தக் கட்டுரையில் பக்கீர்கள் பாடும் கதைப் பாடல்களில் காணப்படும் கேள்வி – பதில்களைப் பற்றி மட்டும் சில செய்திகளை வாசகர்கள் முன் வைக்கிறேன்.

பக்கீர்கள் கிராமங்களில் இரவு நேரத்தில் ஒரு குழுவாக அமர்ந்து, சில கதைப் பாடல்களைப் பாடுவார்கள். அப்படிப்பாடும் கதைப் பாடல்களில் ஒன்று ‘நூறு மசாலாக்கதை’ என்பது.

‘மசாலா’ என்பது பாரசீகச் சொல். இச்சொல்லுக்கு வினா அல்லது புதிர் என்று நாம் பொருள் கொள்ளலாம்.

சீனமா நகரை ஆளும் ‘பாகவதி’ என்ற அரசனுடைய மகளின் பெயர் மெகர்பானு. அவள் பருவ வயதை அடைந்து பல கலைகளையும், ஞான மார்க்கத்தையும் கற்றுத் தேர்ந்து ஞானவல்லியாகத் திகழ்ந்தாள்.

இவள் தன்னைப் போல் ஞானமும், அறிவும் உள்ள இளவரசனைத்தான் மணமுடிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். எனவே “நான் கேட்கும் நூறு கேள்விகளுக்கு எந்த நாட்டு இளவரசன் சரியான பதிலைச் சொல்கிறானோ, அவனைத்தான் நான் மணமுடிப்பேன். என்னுடைய கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லாத இளவரசர்கள், எத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லையோ அத்தனை கசையடிகளைப் பெற்றுச் செல்லவேண்டும்” என்று அறிவிப்பு செய்தாள்.

ஞானவல்லியான மெகர்பானு தர்க்க மண்டபம் ஒன்றையும் அதற்காக அமைத்தார். அம்மண்டபத்தில் சான்றோர்களும், அறிஞர்களும், புலவர் பெருமக்களும் அமர்ந்து அந்த அறிவுப் போட்டியைக் கண்டுகளிக்கவும், உரிய ஏற்பாடுகளையும் மெகர்பானு என்ற இளவரசி செய்திருந்தார்.

அண்டை அயலில் உள்ள நாட்டின் இளவரசர்கள் ஒவ்வொருவராய் வந்து ஞானவல்லியான மெகர்பானுவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முன் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஞானவல்லி மெகர்பானுவின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் கசையடிகளைப் பெற்றுத் தலை கவிழ்ந்து சென்றார்கள்.

ஐந்தமா என்ற நகரத்தைத் தலைநகராகக் கொண்டு அகம்மது ஷா என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் அப்பாஸ். அவரும், இளம் வயதினராக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார்.

ஞானவல்லி மெகர்பானுவின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு, ‘அப்பாஸ்’ இளவரசர், ஞானவல்லியின் ஞானக் கேள்விகளுக்கு விடையளிக்க முன் வந்தார்.

தர்க்க மண்டபம் தயாரானது. மசாலா (புதிர்) போடும் நாளும், கிழமையும் அறிஞர்களால் முடிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், தர்க்க மண்டபத்தில் சான்றோர்களும் அறிஞர்களும் ஆர்வத்துடன் கூடினர்.

ஞானவல்லி மெகர்பானு தோழியர்கள் புடைசூழ, தர்க்க மண்டபத்தில் தனக்குரிய இடத்தில் தலைக்கனத்துடன் வந்தமர்ந்தாள். அப்பாஸ் என்ற இளவரசரும் தர்க்க மண்டபத்தில் தனக்குரிய இடத்தில் வந்தமர்ந்தார்.

அறிஞர் பெருமக்கள் சிலர் நடுவர் பொறுப்பை ஏற்க, ‘மசாலா’ நிகழ்வு ஆரம்பமானது.

மெகர்பானு வழக்கமான தனது முதல் கேள்விக் கணையைத் தொடுத்தார். (பாடல் வரிகளால்)

“நீர் யார் மகன் காணும்?

உம்மை யார் வளர்த்தது?

என்று சொல்லாவிட்டால்

சொல்வேன் உமை நானும் !”
ஞானவல்லியின் அலட்டலான மசாலாவிற்கு (கேள்விக்கு) அப்பாஸ் இளவரசர் அமைதியாக,

“அடி ஞானப் பெண்ணே! – என்னைக்

கொல்வேன் என்று சொன்ன

குங்குமச் சந்தனமே! – நான்

‘ஆதம்’ மகன் தானடி! – என்னை

அந்த ‘அல்லாஹ்’ வளர்த்தானடி – உன்னைச்

சொல்லால் வெல்லத் தாண்டி..” என்று பதிலளித்தார்.

(இறைவன் ஆதம் என்ற மனிதனைத் தான் முதன் முதலில் படைத்தான். ‘ஆதம்’ என்ற ஆதி மனிதனில் இருந்த இந்த மானுடம் தழைத்தது என்ற கருத்தை ‘ஆதம் மகன் தானடி’ என்ற பாடல் வரி விளக்குகிறது.)

அப்பாஸ் இளவரசரின் பதிலைக் கேட்டு சபை “சபாஸ்” என்றது.

ஞானவல்லி தனது அடுத்த கேள்விக் கணையை எடுத்துத் தொடுத்தாள்.

“மானிலேயும் பெரிய மான்.

அறுபடாத மான் அது என்ன…?

மீனிலேயும் பெரிய மீன்

அறுபடாத மீன் அது என்ன…?

மாவிலேயும் நல்ல மாவு

இடிபடாத மாவு அது என்ன…?”
உடனே தயக்கம் ஏதும் இல்லாமல் இளவரசர் அப்பாஸ், ஞானவல்லியின் மசாலாவிற்கு (புதிருக்கு) பாட்டாலேயே பதில் சொன்னார்.

“மானிலேயே பெரிய மான்

அறுபடாத மானானது – அது

ஈ மானடி ஞானப் பெண்ணே!

மீனிலேயும் பெரிய மீன்

அறுபடாத மீனானது – அது

ஆமீனடி மெகர்பானே..!

மாவிலேயும் நல்ல மாவு

இடிபடாத மாவும் ஆனது – அது

‘கலிமா’ தானடி கண்ணே !” என்று.

அப்பாஸ் இளவரசரின் பதிலை ஆமோதித்து தர்க்க மண்டபத்தில் கூடி இருந்த அறிஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

(ஈமான் – மனதால் இஸ்லாமியன் என்று உறுதி கொள்வது.

ஆமீன் – ‘ஆம்’ என்று ஆமோதித்து இறை வசனத்தை ஏற்றுக் கொள்வது.

கலிமா – இம்மந்திரத்தைச் சொல்வதே முஸ்லீம்களின் முதல் கடமையானது.)
கேள்விக்கணைகளுக்கு உடனுக்குடன் சற்றும் யோசிக்காமல் ‘டாண்,டாண்’ என்று பதில் சொல்லும் அப்பாஸ் இளவரசரின் அறிவுக் கூர்மையைக் கண்டு திகைத்த ஞானவல்லி மெகர்பானு, அடுத்து மிகவும் தேர்ந்தெடுத்த மசாலா ஒன்றை எடுத்து சபை முன் வைத்தாள்.

“ஆதத்துடைய மக்களுக்கு

அல்லா படைத்தான்

ஐந்து வீடுகள் – அந்த

ஐந்து வீடுகளின் பெயரை

அவையோர்கள் அனைவரும்

அறியும் படி சொல்லவும் மன்னா…!”
ஞானவல்லியின் மசாலாவைக் கேட்ட அப்பாஸ் அரசர்,

“கேளடி, கிளி மொழியே…

ஆதத்துடைய மக்களுக்கு

அல்லா படைத்தளித்த –

ஐந்து வீடுகளின் பெயர்களை !

முதல் வீடு தகப்பன் வீடு!

அடுத்த வீடு தாய் வீடு!

அருளான ‘கரு’ வீடு!

மூன்றாம் வீடு ‘துன்யா’

நான்காம் வீடு ‘கப்ரு’

ஐந்தாம் வீடு மறுமை.” என்று பாட்டாலே பதில் சொன்னார்.

‘தகப்பன் வீடு’ என்றது, ஆதியில் கரு வித்தாகத் தகப்பனின் உதிரத்தில் இருந்தது. ‘துன்யா’ என்பது இந்த உலகம். ‘கப்ரு’ என்பது முஸ்லீம்களை அடக்கம் செய்யும் மண்ணறை. மறுமை என்பது சொர்க்கம் அல்லது நரகத்தைக் குறிக்கும். மறு உலகம். இதைத் தமிழ் மரபும் ‘வீடு’ என்றும் ‘வீடு பேறு’ என்றும் குறிப்பதை இந்த இடத்தில் நாம் எண்ணிப் பார்க்கலாம். (அறம், பொருள், இன்பம், வீடு).
அப்பாஸ் இளவரசர் அசராமல் தன் ‘மசாலா’க்களுக்கு பதில் சொல்வதைக் கேட்டு தன் மனதிற்குள் அவரின் அறிவை ரசித்த ஞானவல்லி மெகர்பானு என்ற இளவரசி தனது அடுத்த மசாலாவை அவிழ்த்து விட்டாள்.

நெத்தி படாத தொழுகை என்ன?

நேரமில்லாத பாங்கு என்ன?

அப்பாஸ் இளவரசர் அசராமல், ஞானவல்லியின் அந்தக் கேள்விகளுக்கும் விடை சொன்னார்.

“அடி, ஞானப்பெண்ணே.

நெத்திபடாத தொழுகை – அது

‘ஜனாசா’ தொழுகை.

நேரமில்லாத பாங்கு – அது

பேறுகால வீட்டுப் பாங்கு…”

ஞானவல்லி தொடர்ந்து தளராமல் தன் மசாலாக்களை அள்ளி வீசினாள்.

“கத்திபடாத கறியும் என்ன?

காலம் தவறிய நகராவும் என்ன?”
அப்பாஸ்,

“’கத்தி படாத கறியானது – அது

பறவையிட்ட முட்டை.

காலம் தவறிய நகரா – அது

மௌத்தை அறிவிக்கும் ஓசை..” என்று உடனுக்குடன் தயங்காமல், மயங்காமல் பதில் கூறினார்.

பொதுவாக தொழுகிறபோது நெற்றியானது தரையில் படவேண்டும். ஐவேளைத் தொழுகையின்போதும், உக்கார்ந்த (ஸஜிதா) நிலையில் இருந்தபடி முன்புறம் கவிழ்ந்து, தலை தாழ்த்தி, நெற்றி தரையில் அல்லது தரைமேல் விரிக்கப்பட்ட விரிப்பில் (பாய் அல்லது ஸல்லா துணியில்) படும்படி தொழுவார்கள். ஆனால், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முன் தொழுகிற தொழுகையின் போது (ஜனஸா தொழுகையின்போது) மட்டும் நின்ற நிலையில் தொழுவார்கள். ஜனஸா தொழுகையின் போது மட்டும் நெற்றி தரையில் படாது.

ஐவேளையும் பாங்கு சொல்வது (தொழ வாருங்கள் என்று அழைப்பு செய்வது) குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறும். ஆனால் அந்த ஊரில் இஸ்லாமிய மக்கள் குடியிருக்கும் வீடுகளில் (ஜமாத்தில்) குழந்தை பிறந்தால், உடனே அப்போது ஒரு பாங்கு சொல்லி அதன்மூலம் குழந்தை பிறந்த செய்தியை அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்குத் தெரிவிப்பார்கள்.

மோதினார், ஒரு மந்திரத்தை (அல்லாஹ் அக்பர்) சொல்லி அறுத்த ஆடு, ஒட்டகம், மாடு, கோழி, முயல் முதலியவற்றின் கறியைத்தான் (ஹலால் செய்யப்பட்டது) இஸ்லாமியர்கள் புசிப்பார்கள். ஆனால் கோழி முட்டை, வாத்து முட்டை போன்றவற்றை உடைக்கும்போது மட்டும் அதற்கு விதிவிலக்கு உண்டு. என்றாலும் முட்டைகளைச் சமையலுக்காக (பொரிக்க) உடைக்கும் போது,

“பிடிக்கச் சிறகில்லை,

அறுக்கக் கழுத்துமில்லை,

எனவே உடைக்கிறேன்.

உனக்கும் எனக்கும்

வழக்கும் இல்லை!” என்று

சொல்லுகிற இஸ்லாமிய நாட்டார் நம்பிக்கை ஒன்றும் கிராமாந்தரங்களில் நடப்பில் உள்ளது. ஐவேளையும் தொழுகைக்கான பாங்கோசைக்கு முன் பள்ளிவாசலில் உள்ள ‘நகரா’ என்ற தோல் கருவியை மோதினார் அடித்து ஓசை எழுப்பி, தொழுகைக்கு ஆயத்தமாகுங்கள் என்று அறிவிப்பு செய்வார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் (மௌத்து நிகழ்ந்துவிட்டால்) அந்த ‘மௌத்து’ச் செய்தியை அறிவிப்பதற்காக, இடைப்பட்ட நேரத்தில் (தொழுகை நேரம் தவிர்த்து) நகராவைத் தொடர்ச்சியாக அடித்து இந்த ஊர் ஜமாத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை ஊர் மக்களுக்கு அறிவிப்புச் செய்வார்கள். தொழுகை நேரமற்ற நேரத்தில் நகரா ஒலிக்கும் ஓசை ஊர் மக்களுக்கு ‘ஜமாத்’ சேதியை அறிவிக்கும்!

ஞானவல்லி மெகர்பானுவின் மசாலாக்களுக்கு உடனுக்குடன், திகைக்காமல் பதில் அளிக்கும் அப்பாஸ் இளவரசரின் புலமையைக் கண்டு, தர்க்க மண்டபத்தில் இருந்த அறிஞர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

சபையோர்கள், ஞானவல்லியைப் பார்த்து “ம் அடுத்த மசாலாவைப் போடுங்கள்” என்று கூறினார்கள்.
இளவரசி, தனது அடுத்த மசாலாவை எடுத்து அவை முன் வைத்தாள் ராகத்தோடு,

“மரத்துக்குள்ளே… ஒரு பூப்பந்து – அது

குடத்துக்குள்ளே காய் காய்த்தது – அந்தக்

காயானது பழமும் ஆனது – பின்

கனிந்ததுமே கீழே விழுந்தது.

கீழே விழுந்த கனி, மாங்கனியல்ல

திகட்டாமல் தித்திக்கும் கனி.

அந்தக் கனி.. என்ன கனி..?

அப்பாஸ் அரசரே… இப்போதே

செப்பும் பார்ப்போம்! ” என்று பாடினாள்.
இளவரசர் அந்த மசாலாவுக்கும் தனது மதி நுட்பத்தால் அருமையாக விடையளித்தார்,

“விளையாட்டுக் கதைபோட்டு

வெற்றி பெற நினைக்கும்

மெகர்பானே! ஞானப்பெண்ணே!

திகட்டாமல் தித்திக்கும் கனி

இப்புவியில் பிள்ளைக் கனி…!”

என்று மசாலாவுக்கு உரிய புதிரை விடுவித்தார் எனத் தொடர்கிறது.

நூறு மசாலா என்ற பக்கீர்கள் பாடும் வசனம் இடை இட்ட கதைப்பாடல்.

மரம் என்பது மனிதன் (ஆண்) அவனுக்குள் சுழலும் பூப்பந்து, விந்தாகும். குடத்திற்குள் காய் என்பது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை. காய் கனியாவது, பத்துமாதம் நிறைந்த பின் பிரசவமாகி, குழந்தை பிறப்பது. இப்போது ஞானவல்லி போட்ட மசாலாவின் பொருள் வாசகர்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

பக்கீர்கள் என்ற கலையாளர்களிடம் வாய் மொழித் திரளாக இதுபோன்ற எண்ணற்ற கதைப் பாடல்கள் உள்ளன. நான் மேலே தந்தது ஒரு மாதிரிதான். அவைகளை எல்லாம் குறுந்தகடுகளில் பதிவு செய்யலாம் அல்லது எழுத்துப் பிரதிகளாகப் பதிப்பிக்கலாம்.

தர்ஹாக்களை மையமாகக் கொண்டு சுற்றிச் சுழலும் இத்தகைய பிரதிகளை, நவீன இஸ்லாமிய மார்க்க சுத்திகரிப்புவாதிகள் அலட்சியக் கண் கொண்டு பார்க்கிறார்கள். இப்பிரதிகளை அழிந்துவிடாமல் பாதுகாத்தால் தமிழ் இலக்கிய உலகுக்கு அருமையான இலக்கியச் செல்வங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

**

நன்றி : உயிரோசை, கழனியூரான்

‘முஸ்லிம் சிறுகதை’ பற்றி…!

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். ‘மக்கள் தொ.கா’வில் கவியரங்கம் பார்த்துக் கொண்டே இந்தப் பதிவு. ஜபருல்லா நாநா கலந்து கொள்கிறாரே, பார்த்து அபிப்ராயம் சொல்லாமல் போனால் கொன்று விடுவார்!
***

‘முஸ்லிம் எழுத்தாளர்கள்’ -‘ முஸ்லிம் சிறுகதைகள்’ என்றெல்லாம் நாம் குறிப்பிடுவதன் மூலம் ஏதோ இலக்கிய உலகில் இனத்துவேஷக் கூப்பாடு எழுப்புகிறோம்’ என்று யாரும் மருளத் தேவையில்லை’ என்று கூறும் யூ. எல். தாவுத் , ‘பூனைக்கு மணி கட்டி’ப் பார்த்திருக்கிறார் – ‘முஸ்லிம் கதைமலர்’ வெளியிட்டதன் மூலம் (வெளியீடு : சபீனா பதிப்பகம்). 1964 (ஜமாதுல் ஆகிர் 1384) -இல், ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்தவரின் முன்னுரை இன்று ஏனோ முக்கியமாகப் பட்டது. பதிகிறேன். அட, நோன்புப் பெருநாளுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா? ஈத் முபாரக் ! (மீண்டும்) காணாமல் போன தோழர் கையுமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!

(‘நூலகத்தில்’ உள்ள pdf கோப்புகளின் எழுத்துருவை – அதுவும் scan செய்யப்பட்ட பிரதியிலிருந்து – நேராக ஒருங்குறிக்கு மாற்ற ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறேன்; ஒன்றுமில்லை, கைநோக தட்டச்சு செய்வதுதான் :-)) .

மொத்தம் 14 சிறுகதைகள் அடங்கிய இம்மலர் இங்கே கிடைக்கிறது – பதிவிறக்கம் செய்ய. தொகுப்பில் இடம்பெற்ற எழுத்தாளர்கள் : பித்தன் (கே.எம். ஷா), அ.ஸ, அப்துஸ்சமது, ம.மு. உவைஸ், அண்ணல் (எம். ஸாலிஹ்), யுவன் (எம். ஏ. கபூர்), மருதூர்க் கொத்தன் (வி.எம். இஸ்மாயில்), ஏ. இக்பால், எம்.ஏ. நு·மான், எம்.எம். மக்கீன், செய்னுல் ஹூஸைன், எம். ஏ. எம். சுக்ரி, மருதமுனை மஜீத், அபூஷானாஸ் (அபூஉபைதா), யூ. எல். தாவூத்.

‘ஈழத்திலேயே முதன் முதலாக முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பு நூலொன்றை வெளியிடும் வாய்ப்பு எமக்குக் கிடைத்ததையிட்டுக் களிபேருவகை எய்துகிறோம் ‘ என்று பி.எம். எம். மொஹிதீன் பதிப்புரையில் கூறுவது போல களிபேருவகை எய்துகிறேன். ஆர். சிவகுருநாதனின் அணிந்துரையை பிறகு சேர்க்கிறேன்.

மலரிலுள்ள மருதூர்க் கொத்தனின் ‘ஒளி’யையும் பித்தனின் ‘பாதிக் குழந்தை’யையும் மறவாமல் பார்க்கவும்; அந்த வல்ல பெரிய றகுமான் முகம் பார்ப்பான்!

– ஆபிதீன் –

***

‘முஸ்லிம் சிறுகதை’ பற்றி…!
யூ. எல். தாவுத்

ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முஸ்லிம் பெருங்குடி மக்களும் கணிசமான அளவு பங்கெடுத்து வந்திருக்கிறார்கள். இந்நாட்டு இஸ்லாமிய சமுதாயம் காலத்திற்குக் காலம் எத்தனையோ தமிழ்க் கவிமணிகளை, செந்தமிழ்க் குரிசில்களைத் தோற்றுவித்திருக்கிறாது. இப்புலவர் பெருமக்கள் இஸ்லாத்தின் பண்பு நலன்களை- திருமறை நெறிகளை- நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எல்லாம் தமிழ்த் தேனில் குழைத்தெடுத்து இலக்கிய மாளிகைகள் கட்டி எழுப்பியிருக்கிறார்கள்.

இவர்களின் வழித்தோன்றல்களான இற்றைநாள் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களிடையே என்றுமில்லாதவாறு ஒரு மலர்ச்சி- விழிப்புணர்ச்சி பொங்கி வழிகிறது. இதன் பயனாக ‘இன்றைய இலக்கிய’மாகக் கணிக்கப்படும் சிறுகதைத் துறையிலும் முஸ்லிம் எழுத்தாளர்கள் பெருமைப்படத்தக்களவு கவனஞ் செலுத்துகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே இந்நாட்டு முஸ்லிம்கள் சிறுகதைத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பெருமையோடு குறிப்பிடலாம். கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த ஐதுருஸ் லெவ்வை மரைக்கார் என்பவர் 1898ம் ஆண்டில் ‘ஹைதர்ஷா சரித்திரம்’ என்ற பெயரில் ஆறு கதைகளைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஈழத்தில் இன்றையச் சிறுகதை உலகில் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்ககூடிய சிறுகதைகள் போதியளவில் வெளிவரவில்லை என்பதை எழுத்தாளர் உலகு ஒப்புக்கொள்ளும் என்று நினைக்கிறேன். இந்நாட்டில் வாழ்கின்ற முக்கிய சமூகங்களுள் இஸ்லாமிய சமுதாயமும் ஒன்று. ஈழம் வாழ் ஏனைய சமுதாய மக்களின் வாழ்வு முறைமைகளைப் பின்னணியாக வைத்து ஏராளமான சிருஷ்டிகள் சமைக்கப்பட்டு விட்டன. அவைகளோடு ஒப்பிடும்போது முஸ்லிம் கதாபாத்திரங்களை உலவவிட்டு – முஸ்லிம்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கருவாக வைத்துப் புனையப்பட்ட சிறுகதைகள் மிக மிகக் குறைவாகவே வெளிவந்துள்ளன.

முஸ்லிமல்லாத பிறமத எழுத்தாளர்கள் இத்துறையில் நுழையவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. எனினும் பிறமத எழுத்தாளர் இரண்டொருவர் முஸ்லிம்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் தரமான கதைகள் சிலவற்றைப் படைத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. பிற சமயத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முஸ்லிம்களின் வாழ்வுக் காட்சிகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகள் சிருஷ்டிக்க முயலாமைக்குப் பல காரணங்களுன. அவர்கள் இஸ்லாதைப் பற்றியும், முஸ்லிம்களின் மதவுணர்வுகள்- கலாசார நிகழ்ச்சிகள் பற்றியும் போதியளவு அறியவில்லை. இந்தத் துறையில் காலடி எடுத்து வைப்பவர்கள் தங்கள் கற்பனையிலே தோன்றும் கருத்துக் குவியல்கள் அனைத்தையும் இலக்கியமாக வடித்தெடுத்துவிடவும் இயலாது. அது சிறு கதையாக- கவிதையாக-நாடகமாக- இருப்பினும் சரியே.

மனிதவாழ்வின் சகல துறைகளுக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்திருக்கும் இஸ்லாம் கலைகளுக்கும் வரம்பு கட்டி வைத்திருக்கிறது. இதனால் முஸ்லிம்களை மையமாக வைத்துக் கலைகள் படைப்பவர்கள் ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்கி நின்றே எழுத வேண்டியுள்ளது. இஸ்லாத்தின் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ளாமல் தவறான முறையில் இஸ்லாத்தைச் சம்பந்தப்படுத்திக் கதைகளை எழுதிவிடின் அது முஸ்லிம்களின் உள்ளத்தைப் புண்படுத்திய முயற்சியாக முடியும். தமிழகத்திலுள்ள முஸ்லிமல்லாத எழுத்தாளர்கள் சிலர் இவ்வாறு எழுதித் ‘தோல்வி’ கண்டதோடு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி ஏற்பட்டது. பிறசமய எழுத்தாளர்கள் முஸ்லிம்களின் வாழ்வைச் சித்தரித்துச் சிறுகதைகள் எழுத முன்வராமைக்கு ‘அகிலன்’ கூறும் காரணம் :

‘தமிழ் எழுத்தாளர்கள் முஸ்லிம்களைப்பற்றி அறிந்து கொள்ளாததுதான். அறிந்து கொள்வதும் எளிதல்ல. முஸ்லிம்களின் சமய உணர்வும் நுண்ணியது. வாழ்க்கைக்முறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் எளிதிற் புரிந்து கொள்ள முடியாது.’

இன்று முஸ்லிம்களிடையே சிறுகதை படிக்கும் வாசகர் கூட்டம் பெருகி வருகிறது. தமிழ்ச் சஞ்சிகைகள் கணிசமானளவு முஸ்லிகளிடையே விற்பனையாகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை, சமுதாயப் பிரச்சனைகள், பொதுவாழ்க்கை, திருமணம், இஸ்லாமிய தனித்துவ மரபின் இன்றைய நிலை, சமூகச் சீர்திருத்தம், முஸ்லிம்களிடையே பெருக்கெடுத்தோடும் இஸ்லாத்திற்கு முரணான பழக்கவழக்கங்கள் முதலியவற்றைப் பின்னணியாக வைத்துச் சிறுகதைகள் எழுதப்பட வேண்டும். இத்தகைய சிறுகதைகள் முஸ்லிம்களிடையே காணப்படும் இஸ்லாம் கூறும் வாழ்க்கை முறைக்கு விரோதமான செயல்களை அம்மணமாகச் சந்திக்கிழுப்ப்தாக மட்டும் அமையாது அவற்றைக் களைவதற்கு வீதி காட்டுவனவாகவும் இருக்க வேண்டும். இன்றையக் காலகட்டத்தில் இத்தகைய சிறுகதைகள் அதிகம், அதிகம் தேவைப்படுகின்றன.

முஸ்லிம்களின் வாழ்க்கைமுறை கூடச் சிறுகதை இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதாக அமைந்துவிடவில்லை. இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளை உற்று நோக்கின், அவ்வாழ்வைக் கருவாகக் கொண்டு சிறந்த சிறுகதைகள் எழுத என்பதை உணரலாம். சிறுகதையின் கருப்பொருள், உருவமைப்பு முதலியவைகளுக்கு ஈழம் வாழ் முஸ்லிம்களிடமிருந்து பொருத்தமான நிகழ்ச்சிகளை எடுக்க முடியும்.

தமிழகத்தில் ‘முஸ்லிம் சிறுகதை இலக்கியம்’ பெருமை தருமளவு வளர்கிறது. அங்குள்ள முஸ்லிம் எழுத்தாளர்கள் இந்தத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறார்கள். முழுக்க முழுக்க முஸ்லிம் கதாபாத்திரங்களை உலவவிட்டு இஸ்லாம் கூறும் வாழ்வைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளை நிறைய, நிறையப் படைத்து வருகிறார்கள்.

‘முஸ்லிம் எழுத்தாளர்கள்’ -‘ முஸ்லிம் சிறுகதைகள்’ என்றெல்லாம் நாம் குறிப்பிடுவதன் மூலம் ‘ஏதோ இலக்கிய உலகில் இனத்துவேஷக் கூப்பாடு எழுப்புகிறோம்’ என்று யாரும் மருளத் தேவையில்லை. முஸ்லிம்கள் தமிழைப் பேசினாலும் அவர்களுக்குத் தனித்துவம் பெற்ற கலாசாரம்-வாழ்க்கை முறை உண்டு. இஸ்லாமிய பாரம்பரிய உணர்வுகளும்- வாழ்க்கை நெறிகளும் ஏனைய சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்துகின்றன. எனவேதான், ஈழத்து இலக்கியக் களத்தில் கரு, உரு, நற்போக்கு, முற்போக்கு, தேசியம், யதார்த்தம் என்றெல்லாம் சண்டம் நடைபெறும். இற்றைநாளில் சிறுகதை இலக்கியத்தில் இஸ்லாமியப் பகைப்புலத்தையும் தூக்கிப் பிடிக்கிறோம்.அதே நேரத்தில் முஸ்லிம் எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க ‘முஸ்லிம் கதை’களையே படைக்க வேண்டுமென்றும் நாம் கூறவில்லை. அத்தகைய கதைகளும் வேண்டுமென்பதே எமது குரல்.

இன்று முஸ்லிம் எழுத்தாளர்களிடையே இஸ்லாமிய சூழலிற் சிறுகதைகள் புனைய வேண்டுமென்ற ஆர்வம் துளிர்த்து நிற்கிறது. அவ்வப்போது இஸ்லாமிய பகைப்புலத்திற் கதைகளும் அறுவடைசெய்யப்பட்டு வருகின்றன. இத்தகு சிருஷ்டிகள் நூலுருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் பலரிடையே நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. ‘பூனைக்கு மணிகட்டிப் பார்த்தாலென்ன?’ என்ற மனவுந்தல் எனக்கு ஏற்பட்டது. அதன் விளைவு…உங்கள் கரங்களிலிருக்கும் இம் ‘முஸ்லிம் கதை மலர்’. எதிர்காலத்தில் முஸ்லிம் சிறுகதைகளும் மலர் இந்நூல் ஒரு முன்னோடியாக- தூண்டுகோலாக அமையுமென்று நினைக்கிறேன்.

இஸ்லாமியப் பகைப்புலத்திலும் சிறுகதைகள் அறுவடை செய்யப்படுவதற்குக் கால்கோளாக அமையும் இம்மலரை ரசிகப் பெருமக்கள் நுகர்ந்து மகிழ்வார்களாக!

– யூ. எல். தாவூத்

அல்-இக்பால் மகா வித்தியாலய
கொழும்பு-2
20-10-1964

***

நன்றி : ஸபீனா பதிப்பகம், நூலகம்

***
தொடர்புடைய சுட்டிகள் :

மக்கத்து சால்வை – ஹனிபா‘தமிழ்ச் சிறுகதை வளம் முஸ்லிம் கலைஞர்களுடைய பங்களிப்பையும் உள்ளடக்கியதுதான் என்கிற உண்மையை உரத்து ஒலிப்பதற்கு ‘மக்கத்து சால்வை’ நிகர்த்த ஒரு சிறுகதைத் தொகுதி இதுவரை வெளிவந்திலது. உண்மை;வெறும் புகழ்ச்சியில்லை’ – எஸ். பொ

இஸ்லாமிய கதைகள் – மௌலவி

« Older entries Newer entries »