ஒரு மதச்சண்டை – பாறப்புறத்து ஓஷோ

மலையாள எழுத்தாளர் பாறப்புறத்து  (இயற்பெயர் : கே.ஈ.மத்தாயி) எழுதிய , நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடான , ‘அரைநாழிகை நேரம்’ நாவலில் வரும் அட்டகாசமான உரையாடல் ஒன்றை பதிவிடுகிறேன்.  தமிழாக்கம் : கே. நாராயணன்.  நாவலை pdf கோப்பாக இங்கிருந்து பெறலாம்.   சாவை எதிர்நோக்கியிருக்கும் குஞ்சுநைனா எனும்  கிழவருடைய நினைவுப் பதிவுகளாக விரியும் இந்த நாவலில் அவரை சந்திக்க வரும் (ஸிரியன் கத்தோலிக்க குருவான) கார்த்திகைப்பள்ளி சாமியாருக்கும் (இந்துவான) சிவராம குறுப்புக்கும் நடக்கும் உரையாடல் இது.  சாமியார் பாத்திரத்தில் யாராவது நம்ம ஹஜ்ரத்துகளை வைத்தும் பார்க்கலாம். தவறொன்றுமில்லை!. சுலோகங்களை புத்தகத்தில் உள்ளதுபோலவே டைப்  செய்திருக்கிறேன். தவறு இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள். பாறப்புறத்து ஒரு கிருஸ்துவர் (குஞ்ஞிக்கா ஒரு முஸ்லிம் போல!) என்பதை நினைவில் கொண்டு இந்த  உரையாடலை படிப்பது நல்லது. சுவாரஸ்யத்திற்காக ஒரு ஓஷோ ஜோக்கையும் கடைசியில் இணைத்திருக்கிறேன். சமயம் வாய்த்தால் இந்த நாவலில் வரும் அற்புதமான பைபிள் வசனங்களையும் கதைகளையும் தனியொரு பதிவாக இடுவேன். சண்டையிடுவோம் சமாதானமாக! – ஆபிதீன்

***

அரைநாழிகை நேரம் – பாறப்புறத்து

ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து…

parapurathதீனாம்மா (சிவராம குறுப்புக்கு) சாமியாரை அறிமுகப்படுத்தினாள் : ”கார்த்திகைப்பள்ளிச் சாமியார்”

“ஆஹா. தெரிந்தது தெரிந்தது… நான் சில நேரங்களிலே குஞ்சு நைனாவைப் பார்க்க வருவதுண்டு. அவரது வேத ஞானத்தைப் பற்றி என்ன சொல்ல? அறிவுக்கடலேதான். வேதாந்தத்திலே எனக்கும் கொஞ்சம் பற்று உண்டு. யோசித்துப் பார்க்கையில், எல்லா மதங்களும் ஒரே கருத்தைத்தான் கூறுகின்றன. அதருமத்திலே மூழ்கிய மனித குலத்தை உய்விப்பதற்குக் கடவுள் தம் திருக்குமாரரை அனுப்பினார் என்றுதானே கிறிஸ்துவ வேதம் சொல்கிறது? இந்துக்கள் புராணமும் அதையேதான் சொல்கிறது! “தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே” என்ற கீதையின் சுலோகத்தை நீங்கள் கேட்டிருப்பீர்களே. எண்ணிப் பார்த்தால் எல்லாமே ஒன்றுதான்.”

“எல்லாம் ஒன்றல்ல”

“என்ன?”

“எல்லாம் ஒன்றல்ல. இயேசு வழியில்லாமல், அவர் காட்டிய பாதை வழி நடக்காமல் யாருக்கும் விமோசனம் கிடையாது.”

“என்ன விமோசனம்?”

“அதுதான், மோட்சம்.”

“மோட்சத்தை அடைவது அவரவர்கள் கருமத்தைப் பொறுத்துள்ளது. கடவுளை அடைய ஞானயோகத்தையும் கர்மயோகத்தையும் கீதையில் கண்ணன் போதித்துள்ளார் :

லோகேஸ்மின் த்விதா நிஷ்டா
புரா ப்ரோக்தா மயாஅநக
ஜ்ஞான யோகேன ஸாங்க்யானாம்
கர்ம யோகேனே யோகீனாம்..”

“எங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.”

“அப்படியானால், எவ்வளவு நல்ல கருமங்கள் செய்தாலும் கிறிஸ்தவனல்லாவிட்டால் மோட்சம் கிடைக்காது என்றா சொல்கிறீர்கள்?”

”ஆமாம். பிதாவான தேவனுடைய பரிசுத்த ஆவியின் பெயரில் ஞானஸ்னானம் பண்ணாமலும், அவர் திருக்குமாரரரின் திருச்சரீரத்தின் ரத்தம் உண்டு பாவமோசனம் பெறாமலும் மனிதனுக்கு விமோசனம் இல்லை!”

”அப்படி நீங்கள் நம்புவதாகச் சொல்லுங்கள், சாமி.”

“ஆம், நம்பிக்கைதான் எல்லாம்!”

“ஆனால் எங்கள் நம்பிக்கை வேறு. எந்த மதத்தைச் சார்ந்தவராயிருந்தாலும் ஒளியைக் கண்டவர்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். எல்லாக் கதவுகளும் திறந்திருக்கிற ஒரு மாபெரும் மணிமண்டபம் போன்றது எங்கள் இந்து மதம். யாராயிருந்தாலும் சரி, இந்த மணி மண்டபத்தில் வந்திருந்து ஓய்வெடுக்கலாம், பசியையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ளலாம், களைப்பாறலாம். காமக் குரோதங்களிலிருந்து மனத்தை அகற்றி ஆன்மாவின் பொருளைத் தெரிந்துகொண்ட அனைவருக்கும் மோட்சம் உண்டு என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

காமகுக்ரோத வியுக்தானாம்
யதீனாம் யத சேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம நிர்வாணம்
வர்த்ததே விதிதாத்மனாம்”

சாமியாரின் முகத்தில் ஏளனத்தின் நிழல் படிந்தது. ஒரு வடமொழிச் சுலோகத்தைச் சொல்லி, கிறிஸ்தவமதத்தைத் தோற்கடிக்க வந்திருக்கிறான்!

“மக்களை ஏமாற்றுவதற்கு இப்படியெல்லாம் சொல்லி நடிக்கிறார்கள். ரட்சகனான இயேசு செய்த மாபெரும் ஆன்மத் தியாகம் போன்று எதாவது சொல்வதற்கு உங்களிடம் இருக்கிறதா? இயேசு புரிந்த அற்புதம் போன்ற ஒன்றை உங்களால் சொல்ல முடியுமா?”

“இயேசு அப்படி என்ன அற்புதம் புரிந்தார்?”

“அற்புதமா? ஒரு கன்னியின் மகனாக இயேசு பிறந்ததே ஒரு மாபெரும் அற்புதம்தானே?”

“யார் சொன்னார்?”

“யார் சொன்னார் என்றா கேட்கிறீர்கள்?”

“ஆமாம். அது உங்கள் நம்பிக்கைதானே சாமி? உங்கள் நம்பிக்கையை உறுதியோடு கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதைப் போலவே அதை மறுக்கவும், வேறொன்றை நம்பவும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது.”

“இருக்கிறது, இருக்கிறது நம்பிக்கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டே இருங்கள்.”

அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டாலும் உண்மையில் சாமியார் பதில் கூற முடியாமல் திணறினார். குறுப்பிடம் அவருக்கும் மதிப்பு ஏற்பட்டது. …. குறுப்பு போன பிறகு சாமியார் சொன்னார் “ ‘விவரம் தெரிஞ்ச மனுஷன்!”

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட்

***

மேலும் கொஞ்சம் விபரம் தர  ஓஷோ வருகிறார். ஒன்றும் பிரச்னையில்லை…!

இரண்டு மனிதர்கள் நம்பிக்கை வாதம் – அவநம்பிக்கை வாதம் என்பதை விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருவன் மற்றவனிடம் சொன்னான், “சரி ஒரு நிசமான நம்பிக்கைவாதியை எப்போதாவது நேருக்கு நேர் நீ சந்தித்திருக்கிறாயா?”

“ஆம்” என்றான் மற்றவன். “நான் என் நாலாவது மாடியின் உப்பரிகையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூதனான ஒரு சன்னல் துடைப்பாளி இருபதாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துகொண்டிருந்ததை பார்த்தேன்.:”

“இது எப்படி அவனை ஒரு நம்பிக்கைவாதியாக காட்டுகிறது?” என்று வினவினான் நண்பன்.

“எப்படியென்றால், அவன் வீழ்ந்துகொண்டே வந்து என் மாடியைத் தாண்டி விழும்போது இதுவரை பிரச்சனையில்லை!” என்று சொன்னது என் காதில் வி்ழுந்தது!’

***

கவிதா வெளியீடான ‘ஸென்’னுடன் நடந்து.. ‘ஸென்’னுடன் அமர்ந்து நூலிலிருந்து.. (மொழியாக்கம் : சிங்கராயர்)

வெள்ளைமாளிகை பெருச்சாளிகள் – ஓஷோ

‘பூண்டோடு தற்கொலை செய்துகொள்ள நாம் முடிவு செய்தாலன்றி மூன்றாம் உலகப் போருக்கு சாத்தியமில்லை….. சிறு போர்கள் நடக்கவே வேண்டும். இல்லாவிட்டால் இந்த வல்லரசுகள் எங்கே தம் ஆயுதங்களை விற்க முடியும்?’ என்று கேட்கும் ஓஷோ சொன்ன ‘ஜோக்’ இது. இன்னொரு போரும் அழிவும் ஏற்படுமோ என்ற பதட்டத்தில் பதிவிடுகிறேன். ஓஷோ குறிப்பிடும் ஜனாதிபதியின் பெயரை தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் புத்தகச் சந்தையில் நூலை வாங்கலாம். ஆனால், பெயர்களில் எந்த வித்யாசமும் இல்லை. எல்லா அதிபர்களும் அப்படித்தான்.

நூலில் படு சுவாரஸ்யமான ஜோக்குகள் இருக்கின்றன. உதாரணமாக…. காட்டுவழியில் போகும் இரண்டு கன்னியர்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ‘அச்சச்சோ.. நாம் 2 தடவை கற்பழிக்கப்பட்டோம் என்பதை தாயாரிடம் எப்படி விளக்கப்போகிறோம்?’ என்கிறாள் ஒருத்தி. ‘ ‘நாம் ஒருதடவைதானே கற்பழிக்கப்பட்டோம்’ என்று குழம்பிய மற்றவள் கேட்கும்போது ‘ சரிதான், ஆனால் மறுபடியும் அதே வழியில்தானே திரும்பி வருவோம்?’ என்ற பதில் கிடைக்கிறது. அதையெல்லாம் இங்கே பதிவிட இயலுமா? பக்கங்களின் பவித்திரம் என்னாவது! எனவே சீரியஸான ஜோக் – உங்கள் சிந்தனைக்கு…

***

‘பிரபுமாயா, ஒரு புன்னகையை பொருத்திக் கொள்ள நீ முயன்றால் நீ களைப்பாக உணர்வாய். ஏனென்றால் ஒரு புன்னகையை அணிந்து கொண்டிருப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் தேவை. அதை நீ xxxxxxxxx போல அப்பியசிக்க வேண்டும். ஆனால் அப்போது அது புன்னகையே அல்ல. உங்கள் வாய் வெறுமனே திறந்திருக்கிறது. உங்கள் பற்கள் வெறுமனே தெரிகின்றன. அவ்வளவுதான்

ஒவ்வொரு இரவிலும் அவர் மனைவி அவர் வாயை மூட வேண்டியிருக்கிறது என கேள்விப்பட்டேன். ஏனென்றால் ஒருதடவை ஒரு பெருச்சாளி அவர் வாய்க்குள் போய்விட்டது. அவள் டாக்டருக்கு தொலைபேசினாள். டாக்டர் சொன்னார், ” நான் வருகிறேன். ஆனால் அதற்கு நேரம் ஆகும். அதற்கிடையில் அவர் வாயருகே ஒரு பாலாடைக்கட்டியை காட்டிக் கொண்டிருங்கள்.”

டாக்டர் வந்துபார்த்தபோது அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவள் இன்னொரு பெருச்சாளியைக் காட்டிக்கொண்டிருந்தாள். அவர் சொன்னார் “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவர் வாயருகே பாலாடைக்கட்டியை காட்ட அல்லவா சொன்னேன்?!”

அவள் சொன்னாள். “அப்படித்தான் சொன்னீர்கள். ஆனால் பெருச்சாளியைத் துரத்திக்கொண்டு ஒரு பூனை உள்ளே போய்விட்டது. எனவே முதலில் பூனையை வெளியே கொண்டுவர வேண்டி இருக்கிறது”

அதிலிருந்து ஒவ்வொரு இரவும் அவருடைய வாயை அவர் மனைவி வலுக்கட்டாயமாக மூட வேண்டி இருக்கிறது. அது ஆபத்தானது! வெள்ளைமாளிகை என்பது ஒரு பழைய கட்டிடம். அதில் பல பெருச்சாளிகள் உள்ளன. உண்மையில் வெள்ளை மாளிகையில் பெருச்சாளிகளைத் தவிர வேறு யார் வசிக்கிறார்கள்? வெள்ளை மாளிகையில் வசிப்பதில் யாருக்கு அக்கறை? ஆக பெருச்சாளிகள் அங்கே வசிப்பதால் பூனைகளும் அங்கே வசிக்கின்றன.’

ஓஷோ
கவிதா வெளியீடான ‘ஸென்’னுடன் நடந்து.. ‘ஸென்’னுடன் அமர்ந்து நூலிலிருந்து.. (மொழியாக்கம் : சிங்கராயர்)

***

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

***

மேலும்…

ஓஷோ பேசுகிறார், உரக்கக் கை தட்டுங்கள்! – தாஜ்

ஓஷோ பேசுகிறார், உரக்கக் கை தட்டுங்கள்! – தாஜ்

ஓஷோ பேசுகிறார் – 1


ஓஷோ பேசுகிறார் – 2

நான் முன்வைக்கும் இப்பகுதியில், அன்பைப் பற்றி ஓஷோ விசாலமாகவும், நுட்பமாகவும் பேசியிக்கிறார்.

“அன்பு எப்போதும் உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும். காரணம் நமது வளர்ப்பு முறை. நமக்கு வெறுப்பை உமிழச் சொல்லித்தந்தார்களே தவிர, அன்பைக் காட்டச் சொல்லித் தரவில்லை. நமக்கு உருவேற்றப்பட்ட மனக்கட்டுத்திட்டங்கள் அன்புக்கு எதிரானவை.”

“இந்து முகமதியனை வெறுக்கிறான். முகமதியன் கிறிஸ்துவனை வெறுக்கிறான். கிறிஸ்துவனோ யூதனை வெறுக்கிறான். ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை வெறுக்கிறது. ஆத்திகன் நாத்திகனை வெறுக்கிறான். நாத்திகன் ஆத்திகனை வெறுக்கிறான். அரசியல் கொள்கைகள் எல்லாம் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.”

ஓஷோவின் இந்த பேச்சு நாம் கவனிக்கத்தக்கது.
கபாலத்தில் சில தங்கக்கதவுகளை திறந்துவைக்கும் சாத்தியம் கொண்டது. கவனிப்போம்.

‘ஓஷோ தி கிரேட்’ பேசத்தொடங்குவதற்கு முன்
இடையே நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன்.

நான் சமீப நாட்களாக ஓஷோவின் ‘தாவோ ஒரு தங்கக்கதவு’ படித்துக் கொண்டிருப்பதை இந்தப் பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் குறிப்பிட்டு இருக்கிறேன். அப்புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகளை வாசகர்களோடு பகிர்ந்துக் கொண்டும் வருகிறேன். இப்பவும் அப்படியொரு பதிவை செய்ய ஆசை. பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் உண்டு. தொடர்ந்து மேலும் சில பதிவுகளை பகிர்ந்துக்கொள்ள எண்ணமும் உண்டு.

பௌத்த மதத்தையும், தாவோ எனும் பழமை கொண்ட சீன மதத்தையும் (தாவோவை மதம் என குறிப்பிடக் கூடாது என்கிறார் ஓஷோ. எனக்கு வேறு வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை.) தவிர்த்து, உலகில் உள்ள அத்தனை மதங்களையும் அவர் விமர்சனச் சீண்டலைச் செய்திருக்கிறார்.

பௌத்தமதத்தை ஓஷோ ஒப்புக் கொண்டு பேசினாலும், சில நேரம் அம்மதத்தையும் கூட சீண்ட செய்திருக்கிறார். பௌத்தம், தன் மத துறவிகளுக்கு 33000 விதிகள் வகுத்திருப்பதை அவர் சீண்டியிருக்கிற விதம் ரசிக்கத் தகுந்தது.

“33000 விதிகளை எப்படி மறந்து போகாமல் மனதில் வைத்திருப்பது? அப்படியே நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களது மொத்த வாழ்நாளும் அதற்கே சரியாகிவிடும்! அவற்றை முழுவதுமாக கடைப்பிடிக்க பல கோடி ஜென்மங்கள் எடுக்க வேண்டும்!” என்று கூறி, ரசிக்கவிட்டு வியப்பால் நம் புருவங்களை உயர்த்த வைக்கிறார்.

சீனாவில் பௌத்தம் பரவியபோது, தாவோவை அது சுவீகரித்து, தனதாக்கிக் கொண்டது. தாவோ தற்போது அங்கே இல்லாத நிலை. அல்லது, குறைவான மக்களால் பின்பற்றப்படுகிற சிறுபான்மை மதம் என்கிற அளவில் மட்டுதான். இந்த யதார்த்தம் அறிந்தும் தாவோவைப் பற்றி ஓஷோ சிலாகிப்பது புரிபடாத நிலைக்கு நம்மை நகர்த்துகிறது. தவிர, அதற்காக பௌத்தத்தை அவர் குறை காண்பதும் இல்லை. இது வேறுமாதிரியான புரிபடாத நிலை.

அவர் சொற்பொழிவுகளில் தொடர்ந்து பௌத்தம், தாவோ பொருட்டு உலக மதங்கள் அத்தனையையும் அவர் சீண்டியிருக்கிறார் என்றாலும், எல்லா மதங்களில் இருந்தும் அவருக்கு சீடர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லா நாட்டுக்காரர்களாகவும் இருந்திருக்கிறார்கள்! அவரது மறைவுக்குப் பிறகும் அதே நிலைதான்!

துபாயில் நான் பணியில் இருந்த போது, விஸா மாற்றம் சம்பந்தமாக ‘கிஸ்’ என்கிற ஈரானிய தீவு நாட்டிற்கு செல்லவேண்டி இருந்தது.  மூன்று வாரங்கள் அங்கே வெறுமனே தங்கவேண்டி இருந்ததில் அந்தக் குட்டி நாட்டை தினமும் சுற்றிச் சுற்றி ரசித்தேன்.

அந்நாட்டில் மக்கள் தொகை அநியாயத்திற்கு குறைவு என்றாலும், நவீன கட்டமைப்புக் கொண்ட நாடு! அதன் விசாலமான ரோடுகளில் மூன்று நிமிடத்திற்கு ஒரு காரையோ பஸ்ஸையோதான் பார்க்க முடியும்!

ஒரு மாலை, பக்கத்தில் உள்ள மிலிட்டரி கேம்பில் ஒரு விழா நடைப்பெற்றுக் கொண்டிந்தது. பார்க்கப்போனேன். ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதை வைபவமாகவே நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் தன் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்ட அமெரிக்கா, அடுத்து அதன் பார்வை ஈரான் மீது நிலைக் குத்தி நின்ற காலக்கட்டம் அது. அதனால் என்னவோ அந்நாட்டு ராணுவம் தன் படையைப் பெருக்க ஆள் சேர்ப்பு நிகழ்த்திக் கொண்டிருப்பதாகப் பட்டது.

அந்த விழா பந்தலின் ஒரு புறத்தில் புத்தகக் கண்காட்சி நடந்துக் கொண்டிருந்தது. இரானின் தந்தையாகக் கொண்டாடப்படும் அயாத்துல்லா கொமெனி குறித்த புத்தகங்களும்/ அமெரிக்கா பலி கொண்ட இராக் அதிபர் சதாம் ஹுசைனைப் பற்றிய புத்தகங்களும்/ ஷியா முஸ்லீம்களின் பிரத்தியோக குர்-ஆனும்/ அதன் தர்ஜுமாக்களுமே அதிகத்திற்கு இருந்தது. அவைகளையெல்லாம் விஞ்சும் விதமாக அதிகத்திற்கு அதிகமாக அங்கே இருந்த புத்தகம் ஓஷோ உடையது! ஓஷோவைத் தவிர்த்து பிற இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்றும் எதுவுமில்லை. ஏன்…. வேறு எந்தவொரு நாட்டின் எழுத்தாளர்களது புத்தகங்களும் கூட அங்கே இல்லை!

இரான், அரசியல்/மத இறுக்கம் கொண்ட நாடு. அங்கே, இஸ்லாமிய மதம் உள்ளடக்கி ஏனைய மதங்களையும் சீண்டுகிற ஓஷோவின் கருத்துக்களை பறைசாற்றுகிறப் புத்தகங்கள் வரவேற்க்கப்படுவது விந்தைதான்! அதுவும் அந்நாட்டின் ராணுவ கேம்பில் அமையப்பட்ட ஒரு புத்தகக் கண்காட்சியில் என்பது இன்னும் விந்தை! ஓஷோவின் புத்தகங்களுக்கு ஈரானியர்கள் தந்திருந்த அந்த விசேஷம் ரொம்ப யோசிக்க வைத்தது! திரும்பும் போது வழிநெடுகிலும் அது குறித்து யோசித்தவனாகவேதான் திரும்பினேன்.

மேலைநாடுகள் அவரை தங்களது நாடுகளில் தங்கவிடாது, நிர்பந்தித்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பிவைத்த நிர்ப்பந்தத்தை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், அவர் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்னும் உலக நாடுகள் பலவற்றிலிருந்து பல மதத்தவர்கள் தேடி நாடிவந்து அவரது கருத்துக்களில் நெகிழ்பவர்களை – அந்த பெருங்கூட்டத்து மக்களை என்னால் வியப்பின்றி கணிக்க முடிந்ததில்லை.

நான், அவரது உரையாடல்களை முன் வைத்து, ஓஷோவை பலகோணத்தில் யோசிக்கிறவன். பிடிபடாத, நெருடும் சிலபல குறைகள் கொண்டவராகவே என்னுள் அவர் இருக்கிறார். அவரைத் தேடும் அவரது உலக அளவிலான சீடர்களுக்கு அதுயேன் தட்டுப்படுவதில்லை? வியப்பாகத்தான் இருக்கிறது. 

வளமான, தீர்க்கமான ஆய்வு ஞானம் எனக்கு கிட்டியிருக்கும் பட்சம், அந்த நெருடல்களுக்கு உருவம் தந்திருப்பேன்.
 

அடுத்து,
ஓஷோ பேசுவார்.
இதோ… பேசப் போகிறார்.
எல்லோரும் உரக்கக் கைத்தட்டுங்கள்!

தாஜ்

***
அன்பு எப்போதும் உங்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும். காரணம் நமது வளர்ப்பு முறை. நமக்கு வெறுப்பை உமிழச் சொல்லித்தந்தார்களே தவிர, அன்பைக் காட்டச் சொல்லித் தரவில்லை. நமக்கு உருவேற்றப்பட்ட மனக்கட்டுத்திட்டங்கள் அன்புக்கு எதிரானவை. ஆனால் அவர்களின் சூழ்ச்சி மிகவும் நுட்பமானது. ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த சூழ்ச்சி புரியும். நமக்கு வெறுப்பைக் காட்டத்தான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினம்.

இந்து முகமதியனை வெறுக்கிறான். முகமதியன் கிறிஸ்துவனை வெறுக்கிறான். கிறிஸ்துவனோ யூதனை வெறுக்கிறான். ஒவ்வொரு மதமும் மற்ற மதங்களை வெறுக்கிறது. ஆத்திகன் நாத்திகனை வெறுக்கிறான். நாத்திகன் ஆத்திகனை வெறுக்கிறான். அரசியல் கொள்கைகள் எல்லாம் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன.

கம்யூனிஸ்டுகள் ஃபாசிஸ்டுகளை வெறுக்கிறார்கள். ஃபாசிஸ்டுகள் சோஷலிசவாதிகளை எதிர்க்கிறார்கள். எல்லா நாடுகளும் வெறுப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை வெறுக்கிறது. உலகம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருக்கிறது.

உங்கள் இரத்தம், உங்கள் எலும்பு, அதனுள் இருக்கும் மஜ்ஜை வரையில் இந்த வெறுப்பு பரவியிருக்கிறது. சில நேரங்களில் நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் எதையாவது எதிர்த்துத்தான் ஒற்றுமையாக இருக்கிறீர்கள். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் இந்தியாவின் மீது படையெடுக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்று சேர்வார்கள். நமது ஒற்றுமைக்குக்கூட ஒரு பொது எதிரி தேவை. ஆதனால் அந்தச் சேர்க்கை அன்பில் அடிப்படையில் விளைந்தது அல்ல. ஒரு பொது எதிரியின் மேல் உள்ள வெறுப்பின் அடிப்படையில் விளைந்தது.

இந்த மனோதத்துவம் ஹிட்லருக்கு நன்றாகத் தெரியும். அவன் தனது சுயசரிதையில் எழுதுகிறான்… ‘அன்பால் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதில்லை. அன்புக்கு அந்தச் சக்தி கிடையாது. வெறுப்புணர்வுதான் சக்தி மிக்கது. வெறுப்பை உண்டாக்குங்கள் மக்கள் ஒன்று சேர்வார்கள்.’ என்னால் ஹிட்லரின் அறிவைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவன் பைத்தியக்காரனாக இருந்திருக்கலாம். சில சமயம் பைத்தியக்காரர்களுக்கு அதீதமான உட்பார்வை இருப்பதுண்டு. ஒரு கூட்டத்தின்  மனப்பாங்கு எப்படி இருக்கும் என்பதை ஹிட்லர் புட்டுப் புட்டு வைத்துவிட்டான்

முகமதியர்கள் தாக்குவார்கள் என்ற பயம் இருந்தால் இந்துக்கள் ஒன்று சேர்வார்கள். இந்துக்கள் மேல் பயம் இருந்தால்தான் முகமதியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். பாகிஸ்தான் படையெடுக்கப் போகிறது என்று செய்தி வந்தால்தான் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.

அந்தக் காலத்தில் ரஷியா அணுகுண்டுகளையும், ஹைட்ரஜன் குண்டுகளையும் செய்து குவித்துக் கொண்டிருந்தது. காரணம் அமெரிக்கா தன்னைத் தாக்குமோ என்ற பயம்தான். அதே போல், ரஷ்யாவின் மேல் ஏற்பட்ட பயத்தால் அமெரிக்கா அழிவு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டிருந்தது. மொத்த உலகமே பயத்திலும், வெறுப்பிலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்பை ஒத்துமொத்தமாக அழித்துவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரம் ஆண்டுகளாக உங்கள் அன்பில் விஷத்தைச் செலுத்திவிட்டார்கள். அதனைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள். அதனால் எப்போதெல்லாம் உங்கள் மனதில் அன்பு தோன்றுகிறதோ அப்போது உங்களிடம் உள்ள மனக்கட்டுத்திட்டம் அதனை மூர்க்கமாக எதிர்க்கிறது.

மனிதனுக்கு ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன். அன்புதான் மனிதனின் அடிப்படைக் குணம். அன்பில்லாமல் யாரும் வளர முடியாது, மலர முடியாது, நிறைவு காண முடியாது, திருப்தியுடன் வாழ முடியாது. அன்பில்லாமல் கடவுளே இல்லை. அன்பின் அனுபவத்தின் உச்சக்கட்டம்தான் கடவுள்.

உங்கள் அன்பு போலியாக இருப்பதால் – உங்களால் போலியான அன்பைத்தான் சமாளிக்க முடியும் என்பதால் – உங்கள் கடவுளும் ஒரு போலிதான்.

கிறிஸ்துவர்களின் கடவுள், இந்துக்களின் கடவுள், யூதர்களின் கடவுள் – எல்லாருமே போலிகள் தான்.

கடவுள் எப்படி இந்துவாக, கிறிஸ்துவாக, முகமதியராக, யூதராக இருக்க முடியும்? அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா? அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன? இந்த பூமியே ஒரு பெரிய திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் செயல்படுகிறது.

எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ‘எனக்கு பயமே வரக்கூடாது’ என்று நீங்கள் நினைத்தால் இந்த பொம்மைகளையும் போலிகளையும் வைத்துக் கொண்டு காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருங்கள். மெய்யான அன்பும், மெய்யான கடவுளும் உங்களுக்குரியன அல்ல.

ஆனால் நீங்கள் இங்கே என்னிடம் வரும் போது இந்த பொம்மைகளையும், போலிகளையும் தூக்கியெறிய வேண்டும். என்னுடைய வேலையே இதுதான். எல்லா பொம்மைகளையும் அழிப்பது. நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என்பதை உங்களுக்கு உணரவைப்பது. உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பது. வளர்ந்தபின் குழந்தைக்குறிய அறிவுடன் செயல்படுவதைப் போன்ற அசிங்கம் வேறு எதுவும் இல்லை. குழந்தைப் போல் வெகுளித்தனமாக இருப்பது என்பது வேறு. குழந்தையைப் போல் பக்குவமில்லாமல், குழந்தை-அறிவுடன் இருப்பது என்பது வேறு. முன்னது ஒரு வரப்பிரசாதம். பின்னது ஓர் ஊனம். முப்பது வயதில் நீங்கள் காகிதக் கப்பலுடனும், யானைப் பொம்மையுடனும் விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்?

மிகவும் அழகான பிரபஞ்ச இருப்பு நிலை உங்களை நாலாபக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த அழகு உங்களை இருந்த இடத்திலேயே நடனம் ஆட வைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். நீங்கள் இறந்தவருக்குச் சமமாகி விடுவீர்கள். நீங்கள் ஏற்கனவே இறந்திருக்க வேண்டும். கல்லறையில் இருக்க வேண்டிய ஆசாமி. தவறுதலாக வெளியே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

***

நன்றி: கவிதா வெளியீடு
வடிவம்/ தட்டச்சு: தாஜ்satajdeen@gmail.com

***

Download (PDF)  :  Tao: The Golden Gate – Vol. 1

Download (PDF)  :  Tao: The Golden Gate – Vol. 2

« Older entries