சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (21)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20

அத்தியாயம் 21

ஆபிதீன்

*

05-12.01.1996 கேஸட்டிலிருந்து சர்க்கார் :

அல்லாஹ்வோட தெய்வத்தன்மை விந்துலதான் அதிகம்.

கெட்ட எண்ணம் சீக்கிரம் டெவலப் ஆகும். அதேமாதிரி நல்ல எண்ணம் டெவலப் ஆவத்தான் ‘ஜம்’

எவன் சிற்றின்பத்தை சுவைக்கவில்லையோ அவனுக்கு பேரின்பம் கிடைக்காது – ஜாமி (சூ·பி)

உலகத்திலேயே terrible force – செக்ஸ். விந்து உற்பத்தியாவது இறக்குவதற்காக அல்ல; ஆனா பீ உற்பத்தியாறது பேலுறதுக்குத்தான்.

நபிமார்கள்லெ ஈஸா அலைஹிவஸ்ஸலாமும், அவ்லியாக்கள்லெ நம்ம எஜமானும் (ஷாஹூல் ஹமீது பாதுஷா) Distinct Type. பெரிய ஃபோர்ஸ் அது. விந்தை எச்சியில் எடுக்கும் அளவு ஃபோர்ஸ்.

*

19-26.01.1996 கேஸட்டிலிருந்து :

Once ஆரம்பிச்சா முடிக்கிறது கடமை.

பொதுவான எந்த சட்டமும் விதி விலக்குகள் இல்லாததல்ல.

தீர்மானிக்கப்பட்ட காரியம் அரைவாசி வெற்றி கொள்ளப்பட்ட காரியம்.

எந்தப் பொருளைப்பத்தி அதிக மகிழ்ச்சி அடையிறீங்களோ அந்த காரியம் நடக்காது. மகிழ்ச்சி அடையிற காரணத்துனாலதான் நழுவுற வாய்ப்பு உண்டாவுது.

உங்களுக்கு சொல்லிக்கொடுக்குற பாதை, 12 வருஷம் காட்டுல போயி தவம் செஞ்சாங்களே..- அந்த ரிஸல்ட்டை ஊரிலிருந்தே அடையக்கூடிய பாதை. அதைத்தான் சொல்லிக்கிட்டிக்கிறேன்.

எப்ப ஒருத்தன் (நம்மைப் பார்த்து) எரிச்சல் படுறானோ , atleast நாம வாழுறோம்டு அவன் நினைக்கிறாண்டு அர்த்தம். அந்த எண்ணமே நம்மளை வாழ வைக்கும். அல்லது , actually நாம வாழுறோம், அவனுக்குத் தெரியுது, எரிச்சல் படுறான்! மத்தவன் எரிச்சல் படாம வாழுறது வாழ்க்கையல்ல. (மத்தவன்) எரிச்சலை வாங்கித்தான் வாழனும். at the same time, அது நம்மள பாதிக்காத அளவுக்கு control பண்ணிக்கனும். More Powerful than anything elseங்குறதல்ல, we are more powerful than that person.. அந்த அளவு இருந்தாலே போதும்.

*

26-01 to 02.02.1996 கேஸட்டிலிருந்து :

நீங்க உதவி செஞ்சிட்டு, ‘உதவி செஞ்சேன்’டு சொன்னாலே , நீங்க செஞ்சது உதவி இல்லேண்டு அர்த்தம்.

உலகத்தை சொர்க்கமாக்க பெண்களால் முடியும் – இளைஞன்
சொர்க்கமாக்க முடியும். நரகமாக்கவும் முடியும் – middle aged
பொம்பளையால ஒரு மயிரும் புடுங்க முடியாது – கிழவன்

எவ்வளவு கோடி கஷ்டம் வருமோ – அதை விளங்கும்போது – அவ்வளவு கோடி வெற்றி வரும்.

‘அடலைபுடலை’யாக வந்தால் முழுவெற்றி. ‘அடலை’யாக வந்தால் பாதி வெற்றிதான்.

கஷ்டத்திற்கு பிறகு வெற்றிங்குறது பாமரர்களுக்கு. நமக்கு கஷ்டமே இல்லை. கஷ்டத்தை நம்ம சக்தி வளர விடாது. (சிரமத்தை சிரமமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் குணம் வந்திருப்பதால்) கஷ்டத்தை வெல்ல முடியும்ங்கிற நம்பிக்கையால வெற்றி வரனும்.

தனக்குரிய நன்மையை பிறருக்கு தீங்கு செய்யாமல் அடைபவன்தான் கெட்டிக்காரன்.

Second natureஆக மாறுவதுதான் cosmic habit force. பழக்கமாக்கிடுங்கங்குறதைத்தான் வேற வார்த்தையிலெ சொல்றேன்.

ஆட்டுக்குட்டியைப் புடிச்சி உங்க கதையை சொன்னா எப்படி?

*

02-09.02.1996 கேஸட்டிலிருந்து :

அல்லாஹ்வை வணங்குறவங்க தன்னை மறந்து வாழனும். தன்னை மறந்திருக்கோம்டு எந்த செகண்ட்லெ நெனைக்கிறீங்களோ (அல்லாஹ்) அப்ப இல்லே!

இதை புக் ஃபார்முலெ கொண்டு வரணும். ஒண்ணு, உள்வட்டத்துக்கு (inner circle). அடுத்து, எல்லோருக்கும். ஏண்டா, ‘தப்பு செய்யிறதை விட தப்பு செய்துட்டு காரணம் காட்டுறது தப்பு (rationalisation)’ என்பதை ஜனங்கள்ட்டெ சொன்னா குழம்பிடுவாங்க. புஸ்தக்த்தைப் படிச்சிட்டு ஒரு இஞச், ஒரு அடி(யாச்சும்) வளரணும்.

ஒருத்தன் யாராக இருக்க நினைக்கிறானோ – (இந்தக்) கையை நீட்டுற இடத்துலெ – அதுவாக அது நடக்கும். இப்ப நீங்க பறக்க நினைச்சீங்கண்டு சொன்னா பறக்கலாம்; நீங்க நம்பனும்! நம்புறதுண்டா என்னா அர்த்தம்? சின்ன காரியத்துலேர்ந்து நம்பி நம்பி பழக்கப்படுத்திக்கிட்டே வரணும். அதைவிட – இந்த காத்துல பறக்குறதைவிட – எவனும் பண்ணாத சாதனையை, business lineலெ நாலுபேருக்கு வேலை கிடைக்கிறமாதிரி , செய்யனும். கூட்டம் போட்டு (காத்துலெ பறந்து ) காசு வசூல் பன்னுறதுலெ என்னா லாபம் இருக்கு? செய்யலாம்; முதல்லெ வரக்கூடிய மலர்ச்சி மனசுல வரணும். Faith! ‘Definiteஆ முடியும். with in our reach’ங்குறது தெரியும். வெறும் நம்பிக்கையல்ல, சுத்தமா தெரியும்.

எப்ப கோடி கோடியா வந்தாலும் ஆச்சரியப்படாத நிலைமை உங்களுக்கு வருமோ அப்ப கோடி கோடிங்குறது பத்து ரூவா மாதிரி வரும்.

(பொண்டாட்டியோட) உறவு வைக்கிம்போது ரிலாக்ஸ்டா பண்ணனும். குழந்தைய போட்டு பெரட்டுறமாதிரி பண்ணனும். அப்பத்தான் இடையிலே உருவிட்டுப்போயி , பிசினஸ் விஷயமா ஆற அமர ஃபோன்லெ பேசிட்டு, திரும்பி வந்து – செஞ்சாலும் வித்யாஸம் தெரியாது. பீ பேலும்போது முக்கக்கூடாது. உலக்கைப் பீயை ’ஸ்மூத்’தா பேலனும். மூத்திரம் பேயும்போதும் முக்கக்கூடாஅது. சொஹமா வரணும்.

சந்தோஷப்படக்கூடாது. எதுக்குச் சொல்றேண்டா, சந்தோஷப்படுற அதே நேரத்துலெ ‘இன்னும் எவ்வளவோ அடைய வேண்டி இக்கிதே’ண்டு நெனைங்க. ‘டக்’குண்டு நார்மலா இருக்கலாம்.

*

11.08.1996

விசா, வரும் 15ஆம் தேதியோடு முடிகிறது. சுதந்திர தினம்? இல்லை. புதுப்பிக்க வேண்டும். ஹலீமாவின் பிள்ளைக்கு ‘நாப்பது’ சடங்கை ஒத்திப்போட்டிருக்கிறார்கள். ஒருவாரத்தில் வருகிறது. மஸ்தான்மரைக்கானின் பட்டப்பெயர் பொருத்தம்தான். ‘சொலேர்ப்பு’!. மாப்பிள்ளை வீட்டு சார்பாக 700 பேர் , நம் வீட்டு சார்பாக 300 பேர் என்று விசாரித்துச் (?) சொன்னான். ஊரில் ஒருகிலோ கறி 100 ரூவா..

‘700 பேரா குறையார்லேர்ந்து வர்றாஹா? இரிக்காதுப்பா’

‘அட, ஃபாத்திமாட்டெ நேத்து உம்மா சொன்னாஹலாம் , ஃபோனுலெ, என்னா பண்ணுறதுண்டு தெரியலேண்டு. 700 பேர்தான்’

‘இருக்காது. 699 பேர்தான் இக்கிம். ஆனா..’

‘ஆனா?’

‘குறையார்லேயே 500 பேர்தானே மொத்தம் இருப்பாஹா?’ என்றேன்.

‘ஆதம் ஹவ்வாவுக்கு பொறந்த கொழந்தைண்டு பாக்குறதுக்கு கூடப்பேரு வருவாஹா’ – செல்லாப்பா பொருமினான்.

முகலாயா அரச பரம்பரையைச் சேர்ந்த நாம் தட்டுப்பிச்சை எடுக்கலாமா? அவன் பொருமல் சரிதான் போலும்.

‘சொலேர்ப்பு’ எடுத்த செல்லாப்பா , வீட்டிற்கு ஃபோன் போட்டு ஒரு பிடி பிடித்தானாம். இப்போது ‘சொலேர்ப்பு’ இல்லை. அவர்கள் 200 பேர்தான் வருகிறார்கள். எப்படியும் குறைந்தது 25000 ரூபாய் ஆகும். ‘இந்த மாப்பிள்ளை பையன் பேந்தப்பேந்த முழிச்சிக்கிட்டு இந்தாக்கா இந்த சமயத்துலெ? எடுத்துச் சொல்லனும்.’ என்று உறுமினான். நாங்கள் உறுமலாமா? என் உம்மா எங்கள் இருவரின் முதல் பிள்ளைகளுக்கும் தன் சம்பந்திகளிடம் சண்டைபோட்டு 100 பேருக்கு சாப்பாடு வாங்கினார்கள். அஸ்ராவுக்கு இவ்வளவு செலனானது என்று அஸ்மாவும் சொல்லவில்லை. அப்போது நான் சௌதியில் , பிரச்சனையில் இருந்த சமயம். அனீஸின் நாப்பதுக்கு வந்தபோதுதான் சொன்னாள். அதுக்கு ‘சிம்பிளா 500 குண்டாசோறு கொடுத்து விடலாம் என்று என் தலையில் குண்டாவை தாழிச்சாவோடு கவிழ்த்தாள். நான் 50 குண்டாதான் கொடுத்தேன். அவளுக்கு வருத்தம்தான். மருமகனின் ‘நாப்பது’ சடங்கை பங்குபோட வேண்டும் இப்போது. அதேசமயம் மருமகனுக்கும் ஏதாவது நகை போடவேண்டும். தங்கைக்கோர் பூதம்! இப்படி செலவு அதிகமாவதால் சர்க்கார் சொல்வதுபோல வருமானத்தைப் பெருக்க முடியுமா? ’சுன்னத்’ பண்னுவது செலவு. சாமானை முழுதாக வெட்டிப்போட எதற்கு செலவு சர்க்கார்? ஆனால் அப்படி வெட்டிய சாமான்களை கையில் வைத்துக்கொண்டால்தான் ஆண்பிள்ளைகள்.. நான் இதற்கு ஒரு பைசாவும் கொடுக்க முடியாதென்று கடிதம் போட்டுவிட்டு , ‘அலி’யாக மாறினேன் இன்று – கற்பனையில்!

*

14.08.1996

மூன்று நாளாக எதுவும் எழுதமுடியவில்லை. அரசாங்கம் அலைக்கழித்துவிட்டது. பேசாமல் , ஒரு கவுண்டர் திறந்து விசா ரினீவல் பண்ணுவார்கள், 500 திர்ஹம் கொடுத்துவிட்டு துபாய் முத்திரையிட்ட 50 கிராம் ஒட்டக இறைச்சியை சாட்சியாக வாங்கிக்கொண்டு , போய்க்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டால் முடிந்து போயிற்று. ஆனால் அரசாங்கம் என்றால் வழிமுறைகள் என்று இருக்கிறதே.. 300 திர்ஹத்துக்கு அனைவரும் மெடிகல் கார்டு எடுத்தே ஆகவேண்டும். தொழிலாளர்களின் சம்பளத்தை ‘கட்’ பண்ணிவிட்டு லாபம் காண்பிக்கு கம்பெனிகள் கண்டிப்பாக இதற்கும் அவன் தலையில் கை வைக்கும். நல்லவேளையாக முக்தார்-அப்பாஸ் இன்னும் அந்த நிலைமைக்கு வரவில்லை. அரசாங்கத்திற்கு இப்போது அதிகப் பணம் தேவைப்படுவதை அது கருணையுடன் பார்க்கிறது. துபாயின் விமான நிலையம் , கி.பி 2000 வருடத்திற்காக 500 மில்லியன் டாலரில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ‘சிந்தகா’ ஏரியாவை நவீனப்படுத்த பலகோடிகள் செலவழிக்கப்படவிருக்கிறது என்று அறிவித்து நாலு வருடங்களாகின்றன. நிறைய மேம்பாலங்களும் உருவாகின்றன. முக்கியமானது டிரேட் செண்டர் பக்கத்தில் உருவாவது. ஷேக் முஹம்மது எழுப்பும் அவரது புதிய மாளிகை நிச்சயமாக பாதுகாப்பு கருதித்தான். அவரது பாதுகாப்பு துபாயின் பாதுகாப்பு. எனவே அனைவரும் மெடிகல் கார்டு எடுங்கள். ’ரஷீது ஆஸ்பத்திரி’யில் தாங்க முடியாத கூட்டம் என்று அங்கு போனவர்கள் சொன்னதால் , நான் ‘தேரா’வின் ஈத்கா மைதானம் பக்கமுள்ள ‘குவைதி ஆஸ்பத்திரி’க்குப் போனேன். காலை 6 மணிக்குப் போயிருக்கும்போதே 50 பேர் குறைந்தது இருந்தார்கள். ஒவ்வொரு வினாடியும் புதுப்புது ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒருநிமிடத்திற்கு ஒருமுறை , நீண்ட வரிசையின் தலைப்பக்கத்தில் , அரபி தெரிந்த தாதாக்கள் புகுந்து கொண்டார்கள். நான் ஏழரை மணிவரை நின்ற இடத்திலேயே நின்றேன். என் முன்னால் 500 பேர் இருந்தார்கள் இப்போது. அப்போதுதான் ஒரு போலீஸ்காரன் கொச்சை உருதில் பேசிக்கொண்டு அனைவரது கையிலிருந்தவகளையும் சோதித்தான். நல்லவன். என்னைப்பார்த்து ‘மெடிகல் கார்டு மாஃபி? அஸ்ஸலாமு அலைக்கும்!’ என்று வெளியே கையைக் காட்டினான். அவன் கூடவே வந்த ஒரு கிழ அரபிப் பொன்னையன் ‘ஹிந்தி..ஹிந்தி..’ என்று நெஞ்சிலடித்துக்கொண்டு சிரித்தான்.

அங்கே மெடிகல் கார்டு கிடையாதாம். மெடிகல் க்ளீன்-அப் மட்டும்தான். மெடிகல் கார்டுக்கு? ஈரானி ஆஸ்பத்திரி, மக்தும் ஆஸ்பத்திரி, அல்-தொவாலி பிரைவேட் ஆஸ்பத்திரி எங்காவது எடுத்துக்கொண்டு வரவேண்டுமாம். இது குவைதி ஆஸ்பத்திரி. நான் அங்கிருந்து நடந்தே ’நாசர் ஸ்கொயர்’ வந்தேன். டாக்ஸி காசு கம்பெனி கொடுக்காது. அல்தொவாலியிலுள்ள இந்திய செக்ரட்டரி , கம்ப்யூட்டரை தட்டிக்கொண்டே விதிமுறைகள் சொன்னாள். கம்ப்யூட்டரைப் பார்த்துத்தான் சொன்னமாதிரி இருந்தது. ஸ்பான்சர் லெட்டர் வேண்டும், அல்லது டெனன்ஸி காண்ட்ராக்ட் வேண்டும். ஸ்பான்சர் கடிதம் ’நோ அப்ஜெக்சன்’ சொல்ல. என்னிடம் இல்லை. கப்பமரைக்கார் , டெனன்ஸி காண்ட்ராக்ட், Dewa பில்-ன் நகல் கொடுத்திருந்தார். அது கம்பெனிக்குள்ளதல்லவா? மறுத்தாள். இரண்டாவது நாள் , பலுச்சி டிரைவர் ரஜப் தன் நண்பன் வேலை செய்கிறான் என்று பர்துபாய் அல்ரஃபா கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றான். பஸ் ஸ்டாண்ட் பக்கமிருந்தது. நண்பர்கள் வழி சொல்லவே இருக்கிறார்கள். ‘அவீர் ரோடு’ ‘ராஸ்-அல்-கோர்’ என்று சொல்லாதே, வேறு இடத்திற்கு போகச் சொல்லுவார்கள்’ என்றான் அவன். ’எங்கே இருக்கிறாய் யா ரஃபீக்?’ ‘கராமா’.’கராமாவில்?”பர்ஜுமான் செண்டருக்கு எதிரில்’.

வேலை சுலபமாக முடிந்து விட்டது! இதுவும் ‘குவைதி ஆஸ்பத்திரி’தான். ஆனால் இங்கே மெடிகல் கிளீன்-அப் கிடையாது. காலையில் போனால் வேலை முடியும் என்று அனைவரும் நம்புதாலேயே காலையில் கூட்டம் அதிகமாகிவிடுகிறது என்று , அங்கிருந்து 10 திர்ஹம் டாக்ஸி. அன்று ‘தேரா’ குவைத் ஆஸ்பத்திரியில் (இது இலவச மருத்துவமனை முகாம் மாதிரி போர்டபிள் (கேபின்)ல் – தர்ஹா வாலை மாதிரி – இருந்தது, தனியாக – வெயிலை நெருப்பாக மாற்றும் மின்விசிறிகளுடன்) டைப்பிங் மட்டும் அடிக்க முடிந்தது, இரண்டு மணி நேரத்தில். என் பெயர், கம்பெனி பெயர், தேதி, என் வேலை.. அரபியில். இது வெளியிலிருந்து அடித்து வரக்கூடாது. மூன்றாவது நாள் காலை ஐந்தரை மணிக்கு போய்ச் சேர்ந்தேன். நான் பதினோறாவது ஆள். முதலில் உட்கார்ந்தவன் இறந்துபோகிற மாதிரி இருந்தான். என்று வந்தானோ? அல்லது இங்கேயேதான் எப்போதும் இருக்கிறானா?

அன்று 200 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டும் பெரிய உத்யோகஸ்தர் 9 மணி வரை வரவில்லை. கூட்டத்தில் அந்த கூடாரம் பிய்ந்துவிடும்போல இருந்தது. சடாரென்று அந்த அற்புதம் நிகழ்ந்தது. கைகளால் மட்டும் பேசும் அந்த அடர்ந்த வெண்தாடிக்கிழவர் வந்துவிட்டார். ஹஸன் வந்துவிட்டார்..ஹஸன் வந்துவிட்டார்… வந்தவர் , உள்ளேபோய் உட்கார்ந்து விட்டார் ஒருமணி நேரம்! எச்சில் ஊறவைத்துக்கொண்டிருக்கிறார் போலும். சாதாரண எச்சியா காறெச்சியா என்று தெரியவில்லை. ஆனால் வெயிலில் கொதித்து , ஒன்றும் பண்ண இயலாமல் முழித்த கூட்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கத்தான் செய்தது. வாழ்க்கைக்கு எச்சில் மட்டும் போதாது. விறுவிறுவென்று வந்த அரபி ஒருவன், அனைவரின் கையிலிருந்தவைகளைப் பிடுங்கி, கத்தையாக உள்ளே எடுத்துச் சென்றான். ஒவ்வொரு ஆளும் 200 திர்ஹம் என்றால் ஓரிரு நிமிடத்தில் அவன் கையில் 20000 திர்ஹம். அப்படியே வெளியேபோனால் யாரிடம் சொல்வது? அவன் கேட்ட அதிகாரத்தில் , யாரும் மறுக்கவும் முடியவில்லை. யார் அவன்? அவன் யாரோ, ஆனால் நிறைய எச்சில் உள்ளவன். சுரக்கும் வேகமும் அதிகம் போலும். அடுத்த கால்மணி நேரத்தில் எல்லோர் கையிலும் அனுமதி – ப்ளட் டெஸ்ட்டுக்கு. கூட்டம் அதிகம் இல்லாமலிருந்தால் எக்ஸ்-ரேயும் இருந்திருக்குமாம். அப்படியானால் , இந்தக்கூட்டத்தை விட இன்னும் ஒருமடங்கு கூட்டம் அதிகமா இருந்தால் , ப்ளட் டெஸ்ட்டும் கிடையாது! நாலு நாள் கழித்து டெஸ்ட் ரிஸல்டை வாங்கப் போகவேண்டும். இது யார் வேண்டுமானாலும் போய் வாங்கலாம். அதாவது , இந்த வினாடியின் விதிமுறை. மெடிகல் கார்டு? அது இரண்டுமாதம் கழித்து தயாராகும். பிரைவேட்-இல் ஓரிருநாளில் கொடுத்துவிடுவார்கள்தான். குவைதி ஆஸ்பத்திரியின் கிளைதானே ரஃபா கிளினிக்? மெடிகல் கார்டும் இப்போது அவசியம் இல்லை. இம்முறை துபாய் வந்ததிலிருந்து உடம்புக்கு எந்த சீக்கும் இல்லை. கம்ப்யூட்டர் முன்னால் கண்ணாடி இல்லாமல் (E.G Coated Glass) உட்கார்ந்தால் ஒரு தலைவலி கூட வரவில்லை. வேறுமாதிரி தலைவலி வரலாம். அது நீடிக்காது. ஆனால் நீடிக்கிற தலைவலி , பிளட் டெஸ்ட் ரிஸல்ட் கிடைத்த பிறகு இமிக்ரேஷனில்தான் இருக்கும் என்று தெரிகிறது. ஆனால் எவ்வகை தலைவலியாக இருந்தாலூம் ரிலாக்ஸ்டாக தாங்கிக்கொள்ளும் பக்குவம் மனசுக்கு இருக்கிறது. இருந்துதானே ஆக வேண்டும்?!

மூணு நாள் அலைச்சலும், இழுத்தடிப்பும் எந்த எரிச்சலையும் உண்டு பண்ணாதது ஆச்சரியம். ஒவ்வொருநாளின் இழுத்தடிப்பிலும் எனது பங்கின் தவறைத்தான் அலசச் சொன்னது மனது. காத்திருக்கும் நேரங்களிலும் சுற்றிலும் உள்ளவர்களின் தேவையற்ற பரபரப்பை – சக்தி இழப்பை – அளந்து கொண்டிருந்தேன். what we are today is the result of what we were in the past.. ரியாலத்தால் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் விரலசைத்தால் அண்டசராசரமும் அசைவது போல இப்போதைய நிலையில் செய்யமுடியாதுதான். குறைந்தது , போகிற காரியம் தாமதமாகும் என்று முன்பே தெரிவதோ, அல்லது ஈடுபட்டபின் உடனே நடந்தேறிவிடுவதோ ஏன் முடியவில்லை? ஓ, அரசு இயந்திரத்தை அளப்பது அண்டசராசரத்தை அசைப்பதை விடக் கஷ்டமானதோ? இருக்கலாம். இருந்தாலும் , சிக்கலான எதுவும் , ஒரிருநாளில் சரியாகி விடுகிறது. நேற்றைய கஷ்டம் இன்று இல்லை.

‘எந்த வகையில் ஸ்ட்ரென்த் கூடியிருக்குது? தெளிவு, அண்டர்ஸ்டாண்டிங்.. ஞாபகசக்தி, அடையமுடியும் என்கிற நம்பிக்கை, ஆணவம் கொள்ளாத பெருமிதம்?’ – ‘S’

தெளிவு. அசைவுகளில் ஏற்பட்ட மாற்றத்தால் வந்ததா , அடையமுடியும் என்கிற நம்பிக்கையால் வந்ததா சர்க்கார்?

‘முதல்லெ சொறிஞ்சிக்குவீங்க அடிக்கடி. இப்ப சொறியிறதில்லே.. அடிக்கடி ஸ்மோக் பண்ணுவீங்க. பண்ணுறதில்லே இப்போ. அல்லது ஸ்மோக் பண்ணும்போது தன்னை மறந்து ஸ்மோக் பண்ணுவீங்க, இப்ப கவனிச்சி பண்ணுறீங்க. இல்லே, கொட்டைய சொறிஞ்சாக்கூட ‘தலை’யை மட்டும் தனியாவும் அடியை தனியாவும் சூத்தை மட்டும் தனியாவும் சொறிஞ்சிக்கிறீங்க! சொறியும்போது தெரியுது, முதல்லெ போட்டு வெளாடுனீங்க! இது பயிற்சி அல்லவோ? அப்படிச் சொல்லுங்களேன் ஏதாவது. ஏன், கொட்டைங்குறது தூரமா உள்ள பொருளோ? அதுக்குத்தானே எல்லா பணமும்? ஏன் கொட்டைண்டாலே எல்லார்ட முகமும் மாறுது? என்னா காரணம்? சொல்லுங்களேன் என்னமாச்சும்.. தானா மாற்றம் வருதுண்டு காட்டுங்க. பாசிடிவ் மாத்தம்’ – சர்க்காரின் 01-08.12.1994 கேஸட். ஆனாலும், சென்ற உடனேயே போன காரியம் முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஒருவேளை ‘தேரா’ மஸ்தான் மரைக்கான் ரூமில், பால்கனியில் படுத்துக்கொண்டு , இரைச்சலுக்கிடையே ‘SS’ பண்ணிவிட்டுப் போனது பவர்-ஐ குறைத்துவிட்டதோ என்னவோ!

ஊரிலிருந்து வந்த தஸ்தகீர்நானா என்கிற உள்வட்டச் சீடர் ஒருவர் – என் அவீர் அறையைப் பார்த்துவிட்டு – ‘நாங்க 10 மாசம் பண்ணி அடையிறதை நீங்க ஒரு மாசத்துல அடைஞ்சிடலாம்’ என்றார். 10 மாசம் ஊரில் அவர் ஒரு கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டில் கற்பதை ஓரிருநாளில் ஆஃபீஸில் உட்கார்ந்து சொல்லிக்கொடுத்து, வந்த வேலைக்கு தயார் பண்ணிய குஷியில் ஐஸ் வைக்கிறாரா? அவர் சொல்வதைப் பார்த்தால் என் பவருக்கு இரண்டு நாள் கூட அவருக்கு செலவழித்து இருக்கக்கூடாது. ஒரு பார்வை. அப்படியா?! அவர் என் அறையின் சூழல் பற்றிச் சொன்னது சரிதான். தௌலத்காக்காவின் தம்பி ஜின்னா முன்பெல்லாம் அடிக்கடி வருவார் – பழைய தமிழ்ப் படம் போட்டுப்பார்க்க வசதியாக இருக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல என்று பக்கத்திலுள்ள மலையாள ரெஸ்டாரண்டில் வேலைபார்க்கிற பொடியன் ஒருவனை – ‘பையன்வேலை’ பண்ண – அவர் அழைத்துவந்து என்னைக் கெஞ்சியபோதுதான் தெரிந்தது. ஒரே ஒரு நாள். நான் கூட ஒரு சொருவு சொருவிக் கொள்ளலாமாம்! அட நாயே.. இதற்குத்தான் குடவுனுக்கு அடிக்கடி என்னைக் கூப்பிட்டுப் போய் விருந்து கொடுத்தாயா? அங்கு 23 மணி நேரம் மூட்டை தூக்கிக்கொண்டு மீதி ஒருமணி நேரத்தில் சமைத்தும் கொடுக்கிற நாக்கூர் பண்டாரியின் ஸ்பெஷல் ஐட்டங்களை பார்சல் கட்டி கொண்டுவந்து ரூமில் கொடுத்தாயா? என்ன பாசம் என்மேல்!

‘ஜின்னா… என்னா இது, என்னை அசிங்கப்படுத்துறீங்க.. இதெல்லாம் இங்கே வச்சிக்கிடாதீங்க…சே!’

அவன் யாருடைய தம்பி என்பதை நிரூபித்தான் அடுத்த நொடியில் .

‘ஹே.. பார்த்தீங்களா..சும்மா தமாஷ் பண்ணுனேன்; இதுக்கு ஏமாந்துட்டீங்களே!’

தமாஷ் பண்ணும் ஆளின் முகம் ஏன் இப்படி வெளுத்துப்போய் தொங்குகிறது.? அவர் அதற்குப்பிறகு ரூமுக்கே வரவில்லை. பிஸியாம்.

தஸ்தகீருக்கோ இது ‘பவர்’-ஐக் கூட்டும் அறை..! தாசில்தார் ஆஃபீஸில் 24 வருடம் வேலைபார்த்துவிட்டு , ‘புண்ணியமில்லை’ என்று இங்கே வேலைதேடி அவர் 50 வயதில் வந்ததற்குக் காரணம் , ஊரில் தனக்கு இதுபோல் அமையாததாலென்கிறாரா? சரி நானா, இங்கே தங்கிக்கொள்ளுங்கள், என் வேலையை எடுத்துக்கொண்டு ; நான் நாவப்பட்டினம் தாசில்தார் ஆஃபீஸில் இருக்கிறேன்!

‘ஊர்லேயே இருந்துக்கிட்டு உங்க புள்ளைய ஒரு முச்சம் வுடுறதுக்கு ஈடாகுமா இந்த அரபுநாட்டு வாழ்க்கைலாம்?’ என்று சர்க்கார் கேட்டார்கள் – பயணம் கிளம்பிய அன்று. அனீஸையும் அஸ்ராவையும் அஸ்மாவையும் முத்தமிட்டுக் கிடைக்கும் பவர்-ஐ விட இந்த அறை கொடுக்கப்போகிறதா? ஆனாலும் , துபாயில் ‘SS’ பண்ண இந்த அறையை விட சிறந்த அறை கிடைக்காதுதான். அதில் வந்த பவர்தான் 3 நாள் இழுத்தடிக்கிறதா? ஊரில் ‘S’ கொடுக்கிற ‘ஸ்டெப்ஸ்’ இங்கே குழப்பமாகக் கிடைப்பதைக் காரணமாகச் சொல்லலாமா? வந்த தஸ்தகீர் ஒன்றை உறுதிப்படுத்தினார்.

ரியாலத்தின் இப்போதைய ஸ்டெப்ஸ்-ல் Astral Body கீழே பார்க்கும்போது மற்ற மூன்று Bodyகளும் தரையில்தான் படுத்திருக்கின்றன. ஒன்றின்மேல் ஒன்றாக அல்ல, ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக, 6 அடி இடைவெளியில். ரவூஃப் எழுதியது சரிதான் ஆனால் அவன் வரைந்த முறை தப்பு. நான் வரைந்து அவனிடம் தெரியப்படுத்திய கடிதத்திற்கு இன்னும் பதிலில்லை. அப்புறம்.. தஸ்தகீர் நானா , ‘முக்கோணத்தின் வண்ணம் க்ரீம் அல்ல’ என்றார். வெள்ளையாம். ’பவர்’ கூடத்தான் செய்யும்! ‘சுமையை தூக்குண்டா தூக்கிட்டு போவாங்க இவங்கள்லாம். எதுக்காக தூக்கனும், யாருக்கு கொடுக்கனும் அல்லது எங்கே இறக்கி வைக்கனும்டுலாம் இவங்களுக்கு தெரியாது’ என்று ஜெப்பார் நானா கூட குறைபட்டார் ஃபோனில்.

‘இதுலாம் ஏன் தெரியனும் நானா? சர்க்கார் சொல்றாஹா, செய்றோம். அவ்வளவுதானே?’

‘அட நீங்க ஒண்ணு ஆபிதீன். இவங்கள்லாம் தெளிவுக்கு கேள்வி கேட்காம ஊமையா உட்கார்ந்து குழப்புறதுனாலதான் இப்படி குழப்பம்லாம் வருது’ – ஜெப்பார் நானாவுக்கு கோபம்.

சீடர்கள்தான் என்ன செய்வார்கள்? இவ்வளவு சீனியர் ஆன ஜெப்பார்நானாவுக்கு ஜனவரி 1996 கேஸட் கேட்டபிறகுதான் – ரிலாக்சேஷனுக்கு மூச்சு விடுவதற்கு – கண்டிப்பாக தொண்டையில் அடக்கக்கூடாது என்று தெரிகிறது. சர்க்காரும் 25 வருடங்களுக்கு முன்பு சொல்லியிருக்கலாம். அவர்களும் என்ன செய்வார்கள்? இதெல்லாம் சொல்ல வேண்டுமா என்று நினைத்திருக்கலாம். சூத்தால் மூச்சுவிடும் சீடர்களின் தகுதிகள் அவர்களுக்கு தெரியாதது வியப்புதான்.

ரிலாக்ஸ்!

*

15.08.1996

ரவூஃபின் கடிதம் வந்தது. என் Diagramதான் சரி. தரையில்தான் மூன்று Bodyகளும் இருக்கின்றன. ஆனால் ஜெப்பார்நானா சரியா, ரவூஃப் சரியா என்றெல்லாம் கேட்பது ‘UnAbedeenic’ ஆக (ரொம்ப ரொம்ப) இருந்ததாம். ‘ஒன்று ஜாஃபரைக் கேள், அல்லது என்னைக் கேள்’ என்றிருந்தான். அப்படியா? சரி சர்க்கார்! அவனுக்கு இப்போது சனி, ஞாயிறு விடுமுறை. ஆகவே மாதத்தில் ஒருமுறைதான் வெள்ளி செஷனை அட்டெண்ட்பண்ண முடிகிறது. மாதம் ஒருமுறை சர்க்காரை நேரில் பார்க்க முடிகிறதே உன்னால் ரவூஃப், எங்களின் கஷ்டங்களை நீ புரிந்து கொள்வது கஷ்டம் என்று பதில் போட்டேன் – Abedeenicஆக இல்லாமலும், UnAbedeenicஆக இல்லாமலும். அப்போதுதான் ரவூஃப்தனமாக அவன் எழுதமாட்டான்!

ரவூஃபுக்கும் ‘பவர்’ கூடியிருக்கிறது. ஏப்ரல் மாத சர்க்காரின் பேச்சை எனக்கு பார்சல் அனுப்பியிருக்கிறான். அனுப்பும்போது , ‘டெஸ்ட்’டுக்கு என்று நினைத்து அனுப்பியிருக்கிறான். அது எனக்கு கிடைக்காததால் இனி கேஸட்கள் அனுப்பப் போவதில்லையாம். கடிதங்களை டெஸ்ட்டுக்கு என்று எழுதுவதில்லை அவன். சப்ளை கோளாறு!.

*

17.08.1996

நேற்று காலை சரியாக 6 மணிக்கு உட்காரமுடியாதோ செஷன்-ல் என்றிருந்தது. ரியாலத் பற்றிய கேஸட்களில் இது முக்கியமானது என்று 23.02.1996 கேஸட்டை ஜெப்பார்நானா கொடுத்திருந்தார். கேட்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்தப்பக்கம் என்னை வழக்கமாக இறக்கிவிடுகிற ‘ஹத்தா’ பஸ் மிகத்தாமதமாக வந்தது. ‘கோல்டு ஸூக்’ பக்கம் வந்திருக்கிற புது பஸ் ஸ்டாண்டுக்கு இனி அப்படித்தான் வருமாம். பழையபடி ‘சப்கா’ பஸ்ஸில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு , கோல்டு ஸுக் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து , புறப்படுமாம். அதுபற்றிய எந்த அறிவிப்பும் இல்லை போர்டில். மாற்றத்தின் காரணம் பாஸஞ்சர்கள் நிறைய ஏறவில்லை. ஏன் ஏறவில்லை என்று பலுதியாவில் மீட்டிங் கூட நடந்ததாம். டிரைவர்கள் ரூட்டை மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் டிரைவர்களையும் பஸ்ஸையும் மாற்றச் சொல்லியிருக்க வேண்டும். துபாய் to அபுதாபி ரூட்டுக்கு வாங்கப்பட்ட அதி நவீன பஸ்கள். அரசுகளுக்கிடையில் உள்ள ஆயிரம் அபிப்ராய பேதங்களுக்கிடையே மாட்டிக்கொண்டு நாலைந்து மாதமாக ஓடாமலே தூங்கவே, ‘ஹத்தா’வின் மேல் கரிசனம். டிரைவர்களின் மூலச்சூட்டின் வேகத்தில்தான் அவைகளின் ஏசிகளும் பழுதாகியிருக்க வேண்டும். வேலைக்கு எடுக்கும்போது முக்கியத் தகுதியாக, எரிந்துவிழும் தகுதிதான் ஏற்கப்பட்டிருக்கிறது. ஏனோ துபாயில் உள்ள டிரைவர்களுக்கு தன்னுடைய டிரைவிங் லைசன்ஸ் தகுதி என்பது மட்டுமே உலகத்தின் அற்புதமான விஷயம் என்று நினைப்பு. மூலத்தைக் கொடுப்பதாலா? சௌதி , மற்ற அரபு நாடுகளில் கொடுக்கப்படுவதை விட சம்பளம் கூட என்பதாலா? ‘மாதர் சோத்’ என்று சொன்னான் அந்த டிரைவர். இன்னும் வார்த்தைகள் அத்துமீறின. ‘இது இந்தியா’ என்ற நினைப்பா? ‘உன் அக்காளின் சாமானா?’.

அந்த பங்காளி கொண்டுவந்திருந்த பையிலிருந்து சமையல் எண்ணெய் பாட்டில்கள் மேலிருந்து கீழே விழுந்து சிதறியதில் பாஸஞ்சர்கள் நடக்கும் இடம் -பஸ்ஸினுள் – வழவழ என்று ஆகிவிட்டது. அதற்குத்தான் ‘மாதர்சோத்’. கேட்டவர்கள் உறைந்து போனார்கள். சில பட்டான்களும் இருந்தார்கள். ஆனால் என்னைப்போல சோதாக்களோ என்னவோ. இல்லையேல் கழுத்தைப் பிடித்து உயரே தூக்கியிருப்பார்களே.. ஆனால் எந்த ஜாம்பவான்களும் அரசு இயந்திரம் சம்பந்தப்பட்டதில் சண்டையை வளர்த்தால் தனக்கு வரும் பிரச்சனைகளை உணர்ந்தவர்கள். ‘இது உன் அம்மாவின் சாமான் அல்ல. பத்து லட்சமாக்கும்’ என்றான் அவன். அப்படியானால் சொல்பவனின் அம்மாவின் சாமான். அதனால்தான் அழைப்பு மணி இல்லை போலும் – நிறுத்த. தட்டினால்தான் கதவு திறக்கப்படும்! பத்துலட்சம் உள்ளே போன சாமானாயிற்றே..பத்துலட்சம் தடவை தட்டுங்கள்.

சில பேர் லேசாக முணுமுணுத்தார்கள், இந்த வார்த்தைகள் சரியில்லை என்று. முணுமுணுப்புகளுக்கு நாயாய் குரைத்தான். ஆனால் ஏழெட்டு மொழிகளில் குரைத்தான் அந்த நாய். பங்காளி, தன் சட்டையைக் களைந்து எண்ணெய்க்கரையை வெளியேற்ற பிழிந்து பிழிந்து மறுபடி சுத்தமாக துடைக்கும் வரை ஓரத்தில் நின்றது பஸ். ரூட் மாறிய பஸ். ஷேக்முஹம்மதுவின் மாளிகை பக்கம் போகவில்லை. டிரேட் செண்டர் வழியாக சுற்றிக்கொண்டு… Golden Falcon Round-about லிருந்து Bank Street வழியாக Wafi Shopping Centre .. AlWasal Hospital. இடையில்தான் எண்ணெய் சிந்தியது. AlWasalக்குப் பிறகு அந்த சாமானில் பழுது. வேறொரு பெரிய சாமான் வந்து நின்றது. எல்லோரும் அதில் ஏறினார்கள். டிரைவர்களுக்கு இதனால் சூடோ? ஆனால் மௌனமாகக் கவனித்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன். இதற்கு ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதவேண்டும் என்ற நினைப்பு மட்டும் இருந்தது. ஆனால் ஆக்ரோஷமாய் டிரைவரின் மென்னியைப் பிடிக்கவில்லை. கம்ப்ளெயிண்ட் கொடுத்தால் உடனடியாக டிரைவர் பாதிக்கப்படுவான். நிர்வாகம் கடுமையானது. இது தேவையா? சரி, இதில் என் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? இது ‘ஜம்’ டைம்.

சர்க்காரை மனசுக்குள் வரவழைத்து கேள்வி கேட்டேன். ஒரு ஜன்னலை , என் ஜன்னலாக பாவித்து, வேகமாய் ஓடி மறையும் மரங்களையும் கட்டிடங்களையும் ரிலாக்ஸாக பார்த்தபடி Productivityஐ உண்டு பண்ணினேன்.

அந்த டிரைவருக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? ‘மாதர்சோத்’துக்கும் ‘பெஹன்சோத்’துக்கும் உள்ளதா? நான் குழம்பியபடி கேட்டுக்கொண்டிருந்தேன். தட்டிவிட்டாலும் அதேதான் வந்தது. எப்போது நாத்-அல்-ஷிஃபா வந்தது? எப்போது ’எப்கோ பெட்ரோல் ஸ்டேசன்’ வந்தது என்பதெல்லாம் தெரியாது. திடீரென்று யாரோ தட்டி விட்டாற்போல இருந்தது. எழுந்து நின்று , என்னையறியாமல் ‘பத்துலட்ச’த்தின் மேற்கூரையை தட்டினேன் பலமாக. சரியாக நான் இறங்கும் இடம். 20 நிமிடம் நான் எங்கோ இருந்திருக்கிறேன்!

சற்று அசந்திருந்தால் ஹத்தாவில் ஒருமணி நேரம் கழித்து என்னை இறக்கிவிட்டு , ‘மாதர்சோத்’ என்றிருப்பான் அந்த டிரைவர். நான் அசந்தாலும் என் இஸ்மாயில்தம்பி ராவுத்தர் அசர வேண்டுமே.. ராவுத்தர் கெட்டிக்காரர். பளபளப்பு காட்டி டிக்கெட் விலையை ஏற்றிவிட்டு பழுதான சாமானைக் காட்டினால் அவர் ஏமாறமாட்டார். இதில் ‘மாதர்சோத்’தையுமா அவர் கேட்பார்? அவருக்கு நிறைய வேலை இருக்கிறது. பஸ்ஸில் விழுந்த கதை மாதிரி ஆபிதீனுக்கும் எண்ணெய்பிசுக்கும் அழுக்கும் நிறைய இருக்கிறது. அதைக் கழுவ வேண்டும். அதற்காகத்தான் தட்டிவிட்டார். அவர் ஆபிதீனுக்கு நண்பர். முதலில் அவருடன் எல்லாம் பழக்கம் வருமா என்று ஆபிதீனுக்கு அவநம்பிக்கை. இப்போது ஆபிதீன் சின்னவன் அல்ல.

‘எதைவிட நீங்க பெருசுண்டு நெனைக்கிறீங்களோ அது உங்களுக்கு வரும். எதைவிட சின்னது நாமண்டு நெனைக்கிறீங்களோ அது லேசுல வராது. எதையுமே பெருசா நினைக்கக்கூடாது. அதுக்கு மனசு அமைதி இருக்கனும். Proper தூக்கம் இருக்கனும். டயட் கண்ட்ரோல் வேணும். உணர்ச்சி கண்ட்ரோலா இருக்கனும். ‘ரஹ்மானியத்’ நம்மளை கண்ட்ரோல் பண்ணனும். வேற வார்த்தையில் சொன்னா, ‘குளிப்பாட்டப்படுகிற மைய்யத் குளிப்பாட்டுகிறவன் கையில் எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கனும்’. that means, உங்க ஒவ்வொரு அசைவும் உங்களுக்கு மேம்பட்ட, உங்களைவிட ஆழமான, உங்களை விட பவரான ஒரு சக்தியினுடைய இயக்கமாகத்தான் நீங்க அசையனும். ஒப்படைச்சிடனும். எப்பவுலாம், ‘ஆண்டவனை என்னை எதற்காகப் படைத்தாயோ அதைச் செய்யவிடு’ங்குற வார்த்தை கரெக்டா இருக்கும். அவனுக்குத் தெரியும், பிள்ளைக்கு என்னா வேணும்டு தாய்க்குத்தான் தெரியும்’ – ‘S’

– 03.02.1996 கேஸட். இதில் , கற்பனையின்போது – கற்பனை செய்கிறோம் என்ற உணர்வுடன் – பேசிக்கொள்கிற சீடர்களை வெடைக்கும் உதாரணங்கள் இருக்கின்றன. கற்பனையில் மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள் நூல்கடைதெரு வீட்டில் இருந்தபோது – இருபது வருடங்களுக்கு மேல் இருக்குமா? – சீடருக்கு ரசூலுல்லாவை காட்டிய அதிசய நிகழ்ச்சி வருகிறது. பிறகு ஏன் அந்த சீடர் இன்னும் சீடராகவே இருக்கிறார் இப்போது – ‘SS’ பயிற்சியில் சேர்ந்துகொண்டு? ரசூலுல்லாவை பார்க்கிற நொடிக்கும் முன்னால் அவருக்கு ‘தண்ணி’ வந்துவிட்டது! அப்படியானால்..முக்கியமான கேஸட்தான். சர்க்காரின் பேச்சும் வேகமாக இருந்தது. அவைகளை முழுதாக பின்னர்தான் எழுத வேண்டும். இப்போது குறிப்புகள் மட்டும். இல்லை, முக்கியமானவைகள் மட்டும். ‘Alien force’ பற்றியுள்ள கேஸட்..! Step 31ன் போது Astral Body, பிற Bodyகளை கலைத்து, சேர்த்து உருவாக்கும்போது அவைகள் தன் கண்ட்ரோலில் இருப்பதாக நினைப்பதாக சீடர் சொல்கிறார் (அப்படி சர்க்கார் சொன்னதாக அவர் விளங்கியது!).

‘பனியான்.. முட்டைபுராட்டாண்டு இருந்தாக்கா ‘பனியான்’டு சொல்லிட்டுத்தான் திம்பிங்களோ? ‘பனியான்’ அல்லது இங்கிலீஸ்லெ ‘ப்பேன்யான்’. ஆங்.. வெளங்கலையே.. நினைக்கிறது மொழியல்லவே!. ‘Physical Body, Emotional Body, Intellectual Bodyங்குறது இங்கிலீஷ்காரன்ற சொத்தா? வெள்ளைக்காரன் சுன்னிக்குப் பொறந்ததா அது?’ – ‘S’

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார்’ஐ சுருக்கமாக குறிப்பிடுவது
ஜம் – ஒரு பயிற்சி
’சுன்னத்’ – ஆண்குறியின் முன்தோலை அகற்றும் ’கத்னா’ எனப்படும் மார்க்கச் சடங்கு.
மாஃபி? – இல்லையா?
ஹிந்தி – இந்தியன்
ரஃபீக் – தோழன்
ரியாலத் – (‘SS’) பயிற்சி
ரசூலுல்லா – நபி (ஸல்)

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (20)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19

 

அத்தியாயம் 20

ஆபிதீன்

*

1996diary - img0102.08.1996. வெள்ளி ‘செஷன்’ முடிந்து…

அந்த 24.11.95தான் நான் ஊரில் கடைசியாக – முழுதாக – அமர்ந்த செஷன். அடுத்த செஷனன்று (01.12.95) துபாய் பயணம். மாலையில்தான் சேத்தபொண்ணுக்கு அக்ரிமெண்ட் போட்டோம். அது நல்லபடியாக முடியவேண்டும் என்று பரபரப்பு அடைந்திருந்தது மனது. இனி எப்போது சர்க்காரைப் பார்க்கப்போகிறோம்? பயணத்திற்கும் ஆசிவாங்க வேண்டியிருந்தது. காலையில் அவர்களைப் பார்க்கச் சென்றேன்.

‘இன்னக்கி ராத்திரிதானே?’ என்றார்கள்.

ஆமாம் என்று சொல்லக்கூட வாய் வரவில்லை. உள்ளே ஏதோ உடைந்து கொண்டிருந்தது.

‘எனக்கும் எப்படியோதான் இக்கிது, நீங்க போறத நினைச்சா..’ என்றார்கள்.

அவ்வளவுதான். சத்தமாக அழுதேன் அவர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு. தலையில் அவர்களின் கை மெதுவாக வருடிக்கொண்டிருந்தது.

‘ராத்திரி செஷனுக்கு வாங்க; கொஞ்சநேரம் உட்கார்ந்துட்டு போங்க..’

சேத்தபொண்ணின் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்ததும் உடனே செஷனுக்கு பறந்தேன். உட்கார்ந்திருந்தேன். அழுகை வரவில்லை. மனது சலனமில்லாமல் இருந்தது. எல்லாவற்றைய்ம் காலையிலேயே இறக்கி வைத்துவிட்டார்களா? ஆசீர்வாதம் வாங்கி விடைபெற்றுவந்து , அஸ்மாயையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரியும்போதும் மனதில் முந்தைய சபர்களின் அழுகை வரவில்லை. Face the Truth! அஸ்மாவுக்கும் தெரிந்துவிட்டது போலும். அல்லது பழக்கமாகிவிட்டது. இப்போது பெருங்குரலெடுத்து அவள் அழவில்லை. அலுப்போ? ஆனால் அப்படித்தான். அடுத்தமுறை சிரித்துக்கொண்டே வழியனுப்பச் சொல்லும். கடைசி இரண்டு ‘செஷன்’கள் என்னமோ , எனக்காகவே சொன்னமாதிரி , ஆரம்பத்திலிருந்து (‘SS’ன் ஆரம்பம்) அவர்கள் சொன்னதை சுருக்கிச் சொன்னார்கள். எனக்கென்றே சில பயிற்சிகளும் தந்தார்கள். கறுப்புவட்டத்தின் விளிம்பைச் சுற்றி clockwise, anticlockwise பார்க்கச் சொன்னது முதலிலேயே சொல்லிவிட்டதுதான். அந்த செஷனில் மேலும் மூன்று பயிற்சிகள் – எனக்காக மட்டும்.

1. கண்களை , முடிந்தவரை வலது முனை, இடது முனையைப் பார்க்க மெதுவாக உருட்டுவது. கிட்டத்தட்ட இருபக்கக் காதுகள் வரை நேராக சுற்றிலும் பார்த்துவர வேண்டும்.

2. ஒரு பொருளை (உம்.: ஊதுபத்தி) எடுத்துக்கொண்டு அதனை முக அசைவுகளால் பலபக்கமும் போகச்சொல்வது போன்ற பாவனை – ஆர்டர் கொடுப்பதுபோல.

3. ஏதேனும் ஒரு சிறுபொருளை எடுத்துக்கொண்டு அதை எல்லாக் கோணங்களிலும், பக்கங்களிலும் பார்க்க வேண்டும்.. முகத்தை மேலே தூக்கி பார்க்கும்போது அதன் எல்லைவரை போய் பார்க்கவேண்டும் , கண் புருவத்தில் ஒளிந்துவிடுவது போல். பார்வை எந்தகோணத்திலும் அந்த பொருளிலிருந்து மாறக்கூடாது..இப்படி..

மூன்றிலும் முகத்தைத் தவிர உடம்பின் எந்த பாகமும் அசையக்கூடாது. மனதை தட்டிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் பத்து பதினைந்து நிமிடம். நான் ‘ஜம்’மில் இதைச் செய்வேன். இது எதற்கு? concentrationனுக்காக இருக்குமோ? அந்தக் கேள்வி தேவையில்லை. சர்க்கார் சொன்னார்கள்; செய்ய வேண்டியது. எனக்கு மட்டும் பயிற்சிகள் ஸ்பெஷலாக கொடுத்ததுபற்றி பெருமையாக இருந்தது கொஞ்சநாள். அப்புறம்தான் ஊனமுற்றவர்களின் தனி இருக்கை ஞாபகம் வந்தது! Intensive Care Unit.. அல்லது சோமாலியா பஞ்சம்… கிழிந்த புத்தகத்தின் binding…கழுவாத சூத்து…

*

06.08.1996

இன்று திடீர் விடுமுறை. வருடாவருடம் வருவதுதான். ஆனால் நாம் எதிர்பாராமல் அது வந்து நிற்கும்போது சந்தோஷம்தான்.சந்தோஷம்-தான் என்ன, சர்க்காரின் கேஸட்டைக் கேட்கலாம். இந்த டைரியை கொஞ்சம் எழுதலாம். 30th Anniversary of the accession of the President, His Highness Sheik Zayed Bin Sultan Al Nahyan, as Ruler of AbuDhabi… பாலைவனத்தை சோலைவனமாக்கிய அபுதாபி அப்பா வாழ்க! இந்தமாதிரி விடுமுறைகளை சௌதியில் இருந்தபோது நினைக்கவே இயலாது. ஹஜ்ஜுப் பெருநாளைக்கும் நோன்புப் பெருநாளைக்கும் மட்டும் அங்கே விடுமுறை. அது மொத்தமாக மற்றவர்களுக்கு வேண்டுமானல் இருக்கலாம். கடையில் (அரபி கோபித்துக்கொள்வான், கம்பெனியில்!) வேலைபார்த்த என்னைப் போன்றவர்களுக்கு ஒரு நாளே அதிகம்தான். என்னைவிட மிக மோசமாக , அல்-கர்ஜ் என்ற ஊரில் இருந்த ஸ்டேசனரி கடையில் மாட்டிக்கொண்ட இப்ராஹீம், ஒருவகையாக தப்பிப்பிழைத்து ஊரில் நாயடி பட்டு துபாய்க்கு வந்து , ‘ஃபரூக் ஸ்டேஷனரி’யில் சேர்ந்து..

3 வருடம் சௌதி அனுபவம் – ஸ்டேசனரி கடையில் என்றதும் ‘ஃபாருக்’கில் உடனே சேர்த்துக்கொண்டான். விசாவும் கொடுத்தான். நம்பமுடியாத விஷயம் அவருக்கு. அதைவிட நம்பமுடியாத விஷயம் வெள்ளிக்கிழமையெல்லாம் அவருக்கு விடுமுறை கிடைத்தது, 10 மணி நேரத்திற்குள் வேலை முடிந்து விடுவது.. கேஷியர் என்றுதான் போட்டான். ஆனால் கேஷியர் டிரைனிங்கிற்கு ‘அமாலி’யாக ஓரிருவருடம் இருக்க வேண்டும் என்று, சேர்ந்த பிறகுதான் தெரிந்தது. ஆனாலும் துபாயின் ஆப்ரா காற்று வலிகளை மாற்றும் வல்லமை கொண்டது. இனி இப்ராஹீம் புலம்பிக்கொண்டு இருக்க மாட்டார்! இல்லை, அவருக்கு இன்க்ரிமெண்ட் கிடைக்கிறது – அபுதாபி போனால். இன்க்ரிமெண்ட் என்று தனியாக அல்ல, அபுதாபியில் ரூம் வாடகை அதிகம் என்பதால் ஒரு ‘பெட்’டுக்கு 300 திர்ஹம் கொடுத்தது கம்பெனி. துபாயில் உள்ளவர்கள் தன் சம்பளத்தில்தான் ரூம் வாடகை கொடுக்க வேண்டும். எனவே இப்றாஹீமுக்கு அபுதாபி மாற்றம் ஆனந்தமாக இருந்தது. ‘ஓய்..உம்ம கூட இக்கிறதுதாங்கனி சந்தோஷம்’ என்றவர் , ‘என்ன பன்றது.. கம்பெனி கொடுக்கறத தட்ட முடியுமா? அந்த எமினி முதலாளி பொல்லாத பெத்தயா ஓலி’ என்றார். மாற்றம் நல்லதாக அமையட்டுமாக..

எல்லா மாற்றங்களும் நல்லவைகளல்ல. ஆனால் மாறுதல் என்பது இயற்கையானது. இப்ராஹீம் புலம்புவதும் இயற்கையானது. அபுதாபி கடையிலிருந்து ஃபோன் செய்யக்கூட முடியவில்லை. இத்தனைக்கும் கடை இன்-சார்ஜ் இந்தியன் அல்ல, மலையாளி (இப்ராஹீம் அப்படித்தான் சொல்கிறார்!). அவருடைய சௌதி அனுபவங்கள் கண்ணீர் வரவழைப்பவை – பெரும்பாலானோரைப் போல. நிறைய கடிதம் எழுதியிருக்கிறார் அப்போது. திடீரென நேற்று இபுராஹிடமிருந்து கடிதம் வந்ததும் – இதற்கு சௌதியே பரவாயில்லை என்று – போய்விட்டாரோ, அல்லது சொல்லாமல் கொள்ளாமல் தப்பித்து ஓடிவிட்டாரோ என்றுதான் நினைத்தேன். அபுதாபியிலிருந்து துபாய்க்கு கடிதம்! ஒருவேளை என்மேல் கோபமா?

இறையருள் நிறைக.

அபுதாபி / 03.08.1996

என் பிரிய நண்பர் ஆபிதீனுக்கு

நலம். என்ன, ‘மூட்டை’க் கடியிலும் தூக்கமின்மையிலும் மாதம் ஒரு ரூம் மாறிக்கொண்டு நலம் என்று கூற வெட்கமாக உள்ளது. பற்றாக்குறைக்கு வேலைபளு. பளு தூக்கும் பளு. வேலை கிடைக்காத சூழலில் நானாக மாட்டிக்கொண்ட வேலை. என்ன செய்வது?

(ஒரு பக்கம் புலப்பம்)

ஆபிதீனுடன் பேசலாம் , அருகில் இருக்கலாம் என்று எண்ணித்தான் துபாய் வந்தேன். சதி செய்ததுபோல் ஆகிவிட்டது. ஃபோனில்கூட உங்கள் குரலைக் கேட்க இயலவில்லை. 300 திர்ஹம் அதிகம் கிடைக்கிறது என்று அபுதாபி வந்தால் திடீர் என்று அரசு கட்டளை. ஒரு ரூமுக்கு 2 பேர்தான் என்று. ரூம் வாடகை 1200 திர்ஹம். நான் வாங்கும் சம்பளத்தில் ரூம் வாடகை 800 போக மீதி எதற்கு பத்தும்? நான் வாங்கிவந்த கடனோ என்னை பயமுறுத்துகிறது.

நண்பரே ஒரு வழி சொல்லுங்கள். வந்து 4 மாதத்தில் 4 இடம் மாறியாகிவிட்டது. இந்த மாதமும் இடம் மாறவேண்டும். ஒரு பாத்ரூமில் 20 பேர் என்றால் சூத்து தாங்குமா? இதுதான் தலைநகர்.

இரண்டு வருடம் இந்த கம்பெனியில் இருந்தால் கிடைக்கும் பலன்கள் : வருடம் ஒருமுறை 50 திர்ஹம் சம்பள ஏற்றம், டிக்கெட், போனஸ். அவ்வளவுதான். 10, 15 வருடம் இருந்தால் ஒருக்கால் 2000த்தை எட்டலாம். மற்றபடி எந்த நன்மையும் இல்லை.

(1/2 பக்கம் புலப்பம்)

தங்களின் அன்பு,

இப்ராஹீம்.

4-ஆம் தேதி போஸ்ட் செய்து , 5-ஆம் தேதியே கிடைத்தது ஆச்சரியம். எப்படியும் லோக்கலுக்கு 10 நாள் எடுக்கும். ஒருவேளை 30th anniversaryக்காக அரசு சுறுசுறுப்பாக இயங்குகிறதா? முடிந்ததும் ஆஃபீஸில் ‘கஹ்வா’ குடித்துக்கொண்டு கதையளத்தலா? இதெல்லாம் ஆச்சரியமா? இங்கே ஆயிரக்கணக்கான பேர்களுக்கு , ஊர்போக கம்பெனி டிக்கெட் தருவதில்லை. தங்குமிடத்திற்கும் ஏற்பாடு செய்வதில்லை. இப்ராஹீம் இதைப் பார்க்கவேண்டாம்தான். ஒவ்வொருவரும் மாட்டிக்கொள்வதற்கு அவரா பொறுப்பு? ஆனால் எனக்குப் போய் சம்பள ஏற்றம், போனஸ் என்கிற வார்த்தைகளையெல்லாம் எழுதுகிறாரே… இறையருள் நிறைக!

ஒரு ரூமுக்கு 2 பேர் என்று அறிவிக்கும் அரசு ரூம் வாடகையை குறைக்குமா? அல்லது கம்பெனிகளை நம்பிவந்த தொழிலாளர்களின் சம்பளத்தை ஏற்றுமா? குறைந்தபட்சம் , சம்பளம் தராத ஆயிரக்கணக்கான கம்பெனிகளை இழுத்து உடன் மூடுமா? முதலில், இங்குள்ள விசா முடிந்தும் ஊர்போகாத நபர்கள், குடும்பங்களை வெளியேறச் சொல்கிறது அரசு. சென்ற மாதம் 7 ஆம் தேதி (ஜூலை)யிலிருந்து செப்டம்பர் 7 வரை கெடு. அதற்குள் வெளியாகவில்லையேல் கடும் தண்டனை. (எங்கள் கம்பெனி பலுச்சி டிரைவர்கள் ஓரிரு பேர் இப்படி வெளியேறினார்கள் தங்கள் குடும்பங்களோடு – 15 வருடத்திற்கு மேல் எந்த விசாவும் இல்லாமல் இருப்பது மரியாதையல்ல என்று!). ஒரு விசாவில் வந்து , வேறு கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கும் கடும் தண்டனை. இது முன்பே தண்டனைக்குரியதுதான். இப்போது கடும்… 10,000 திர்ஹம் பெனால்டி- சிறை வாசத்தோடு. சிறைவாசம் 3 வருடத்திலிருந்து 15 வருடம் வரை. பிறகு நாடு கடத்தப்படுவார்கள். எல்லா கம்பெனிகளையும் தங்குமிடங்களையும் அரசு அலசப் போகிறது. உண்மையில் தனக்கோ கம்பெனிக்கென்றோ வேலையாட்களே தேவைப்படாத நிலையில் , விசாக்களை அரசிடமிருந்து பெற்று விலைக்கு விற்றுப் பிழைக்கிற – விசிட் விசாவில் வரவழைத்து அரசு தொந்தரவில்லாமல் அந்த ஆள் நிரந்தரமாக (விரும்பும் வரை!) தங்க தனிகாசு வாங்கிக்கொள்ளும் – அரபிகளின் வீடுகளிலும் அரசு தன் சமீபத்திய கெடுபிடிகளை அமுல்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால் அரசுக்கு தெரிந்துதான் இருக்கிறது.

Most illegal workers at the construction sites are earning fewer than Dhs. 600 a month without any housing allowances or any other benefits.. – Khaleej times / 4th Aug’1996. சரி, முறையான விசா உரிமை உள்ளவர்களின் சம்பளம், மற்ற படிகள் முறையாக உள்ளனவா அரசே?

‘கல்லிவல்லி ஹஜ்ரத்’ என்று ஒருவர் இருக்கிறார். எப்போது U.A.Eக்கு வந்தோம் என்று தெரியாத ஒரு ஹஜ்ரத். இத்தனை வருடங்கள் இருந்தால் குடியுரிமை தரவேண்டும் என்று போராடிய பெரும் கம்பெனிகள் (அதுவும் காஃபிர்..!) கடுமையான தொந்தரவுகளுக்குள்ளாகும்போது தான் ஏதும் கேட்கக்கூடாது என்று சும்மா இருக்கிறாரோ? ‘முஸ்லீம்கள்’ என்று இந்து டைரக்டர்கள் காட்டுவதுபோல ஒரு உருவம் அவருக்கு.

‘ஏன் ஹஜ்ரத், இத்தனை நாளா இக்கிறீங்களே ‘கல்லி வல்லி’ கேசுலெ.. இப்ப ரூல்ஸ் பயங்கரமா வரப் போவுதாமுலே?’ என்றான் மஸ்தான் மரைக்கான் அவரைப் பார்த்து.

‘அதனாலெ என்னா வாப்பா? அல்லா இக்கிறான்!’

‘ஜெயில்’லையுமா?!’

‘ஆமா..சோறு கொடுப்பானுவல்லெ? ஊர் போனா சோறு கொடுப்பானுவளா எவனாச்சும்? ஏன், நீங்க கொடுப்பீங்களா?’

இதென்ன வம்பு? மஸ்தான் மரைக்கான் ஓடிவிட்டான். ஜெயிலில் போட்டால் ஹஜ்ரத் தன் குடும்பத்தை வரவழைத்து கூடவே வைத்துக்கொள்கிறேன் என்பார். அல்லா , ஃபேமிலி விசாவிலும் இருக்கிறான்!

ஆனால், அல்லா பெரும்பாலும் கசையடியில்தான் இருப்பான்!

*

உம்மாவின் 20.07.1996 கடிதத்திலிருந்து:

அன்புள்ள மகனார் ஆபிவாப்பாவுக்கு,

…. ….. …..

ஹலீமாவின் பிரசவ செலவு 11000 ஆயிரம் வந்துவிட்டது. முதல்பிள்ளையாக இருப்பதால் மாமியார் வீடு ’40 சடங்கு’ செய்யச்சொல்லி சாப்பாடும் கேட்கிறார்கள். அவர்களும் பிள்ளைக்கு நகை செய்து இருக்கிறார்கள். நானும் பதிலுக்கு கைச்செயின் செய்யக் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கும் நம் குடும்பத்தாருக்கும் சாப்பாடு கொடுக்கலாம் என்று இருக்கிறேன். உன்னால் இயன்றதை உடன் அனுப்பு.

அன்புடன்

தாயார்.

*

அஸ்மாவின் 24.07.1996 கடிதம்:

அஸ்ராவுக்கு 4 நாளாக சளி, ஜூரம். அதிக சளியால் இரு காதுகளிலும் வலி. மருந்து கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அனீஸ் 15 நாள் ஜுரம். சளியில் மெலிந்து விட்டான். வயிற்றுக்கு ஒன்றுமே சாப்பிடுவது இல்லை. இருவருக்கும் இந்தமாதம்தான் மஞ்சள் காமாலை ஊசி போட்டேன். ஒரு ஊசி 300 ரூபாய். அடுத்த மாசமும் ஊசி போடனும். நீங்கள் அனுப்பும் பணம் பத்தவில்லை மச்சான்.

இன்னும் 5 நாளில் ஹலீமாவுக்கு பிள்ளை பெற்ற ‘நாப்பது’ வருகிறது. சடங்கு செய்வார்களாம். பிள்ளைக்கு நான் என்ன செய்யலாம்? ·போனில் உடன் சொல்லுங்கள்.

…. ….

ஏக்க முத்தங்களுடன்,

அஸ்மா.

*

‘கல்லிவல்லி ஹஜ்ரத்’தின் உண்மையான பெயர் என்ன? ஆயிரக்கணக்கான பேர்களுக்கு (லட்சம்?) ஒரே பெயரும் வைக்கக்கூடாதுதான்!

*

எனக்கு வருகிற நன்மைகள் என்பது என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வருவதை சேர்த்துத்தான் எனும்போது நண்பர் இப்ராஹிமின் கடிதமும், அஸ்மாவின் கடிதமும் மாறுபாடாகத் தோற்றமளிக்கிறது. ஆனால் தோற்றம்தான். அஸ்மாவுக்குரிய பிரச்சனை என்பது என் வேலையில் உள்ள பிரச்சனை; வேலை இல்லாத பிரச்சனை அல்ல. இப்ராஹிமிடம் கேட்டால் துபாய் வந்து இரண்டு விசிட்விசா வரை வேலை கிடைக்காமல் அவர் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை விட இப்போதைய பிரச்சனை பெரிதல்ல என்றுதான் சொல்வார். அஸ்மாவுக்கு ஒரு மாதம் கூட பணம் அனுப்பாமல் நான் விட்டதில்லை. ஆனால் அதற்காக இங்கேயே இருந்தால்தான் மாதாமாதம் சரியாக பணம் வரும் என்று அவள் நினைக்கவும்கூடாது! இம்மாத சம்பள வவுச்சர்களில் கையெழுத்திட முதலாளி மறுத்துவிட்டார். மறுத்துவிட்டாரா? தூக்கியெறிந்து விட்டார். செக்’குகளை டிரைவர் தாமதமாக கொண்டுவந்தான் என்று காரணம் சொன்னாராம் அர்பாப். உண்மை அவருக்கும் எங்களுக்கும் தெரியும். இது முதன்முறையாக நடக்கிறது என்ற கப்பமரைக்கார். அவருடையை ஃபேமிலி விசாவையும் புதுப்பித்துத் தர மறுத்துவிட்டார். 3000 திர்ஹம் இருந்தால்தான் குடும்பம். அக்ரிமெண்ட்டில் 3000 போட்டுக்கொள்கிறேன், சம்பளம் 600 திர்ஹம் வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லும் ஆட்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்தான். ஆனால் முஹம்மது முக்தார் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர். ‘அரசாங்க ஆட்கள் வந்து கேட்டால் என்னை பொய்சொல்லவா சொல்கிறாய்?’ என்று பொய் சொன்னார். பொய் இல்லாமல் அரசாங்கம் ஏது? பொய் இல்லாமல் வாழ்க்கையும் ஏது? ஆனால் உண்மை இருந்தால்தான் பொய். கம்பெனி இருக்கும் என்பது உண்மை. சம்பளம் என்பது பொய்!

*

மானேஜர் மொயீன்சாஹிப் சென்ற 2-ஆம் தேதி பாகிஸ்தான் போனார். தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லையென்று. 4 வருட லீவ் சம்பளம் 20000த்தை எடுத்துக்கொள்ள தாயாருக்கு உடம்பு முடியாமல் போனால்தான் உண்டு. கம்பெனியின் நிதி நிலைமை தெரிந்தும் பொம்பளை ஷோக்கில் லட்சக்கணக்காக வாரி இரைக்கிற ஹஸன்முக்தார் அப்பாஸும், மகன்களுக்கு BMW வாங்கிக்கொடுக்கிற முஹம்மது முக்தார் அப்பாஸும், தன் ரியல் எஸ்டே வியாபாரத்திற்கு மில்லியனில் புடுங்குகிற அலிமுக்தார் அப்பாஸும் தன் விட்டு வேலைக்காரர்களுக்கு செருப்பு வாங்கிக்கொடுக்காமல் ஈரானில் இருந்து வருகிற துதிபாடிகளுக்கு பணத்தைக் கொட்டும் பெரியவர் முக்தார் அப்பாஸும் இருக்கும்போது மொயீன்சாபின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் வியப்பில்லை. இனி எல்லாத் தொழிலாளர்களின் தாயார்களுக்கும் அப்படித்தான் ஆகும். 1994 வியாபார லாபத்தில் ஒரு மில்லியன் எடுத்து 1995-ல் போட்டு நஷ்டமில்லை என்று காட்டியாகி விட்டது. 1996க்கு என்ன செய்வது என்று ஆடிட்டரைத்தான் கேட்கவேண்டும். அவர்கள் ஏதாவது ஒரு வழி சொல்லத்தான் செய்வார்கள். வருடத்தில் 2500 திர்ஹம் அவர்களுக்கு கொடுத்தாகிறது. இந்த வருடம் ஆடிட்டிங் வேண்டாம் என்று மேனேஜர் அபிப்ராயப்பட்டார். இந்த நிலையில் கப்பமரைக்காருக்கு ஃபேமிலி விசாவுக்கு உதவுவதாவது? ‘இப்போது வேண்டுமானாலும் போய்க்கொள்ளலாம் ‘மாஸலாமா ‘ என்று கறாராக சொல்லி கைகுலுக்கினாராம் முஹம்மது முக்தார். ‘அபி..தஃப்தர்மேங் இத்னா காம் நஹீ ஹை. ஆபிதீனும் மொயீன்சாபும் போதும்’ என்றாராம். எனக்கு வந்த புதுப் பாதுகாப்பு ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் ‘மாங்குமாங்’கென்று உழைப்பவர் ஆஃபீஸில் கப்பமரைக்கார்தான். இது முதலாளிக்கும் தெரியும். எனக்கு அதிக வேலையில்லை. செய்து கொடுத்து , வாயில் பிஸ்கட் வைத்துக்கொண்ட புரோக்ராம்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டும் அக்கவுண்ட்ஸை ‘போஸ்ட்’ பண்ணிக்கொண்டும் இருப்பதுதான். ஆனால் கப்பமரைக்காரை விட ஆபிதீன் முக்கியம்! கம்பெனியின் நஷ்டக்கணக்கை சரியாகச் சொல்வேன் என்றா? ஆனால் நான் ஃபேமிலியை வரவழைக்க அல்லது 10 திரஹம் சம்பளம் கூடக்கேட்க நாடினால் இப்போது வேண்டுமானாலும் போகலாம், கப்பமரைக்காரும் மொயீன்சாஹிபும் போதும் என்பார் முதலாளி. அவருக்கும் புரோகிராம்களின் லாஜிக் தெரியும். அதனால்தான் சொந்த செலவுகளை கம்பெனி தலையில் போடுகிறார் – தலையில்லாத கம்பெனியில்!

*

07.08.1996.

FoxPro Programmingம் Visual Basicம் நன்றாகத் தெரியும். C கற்றுக்கொள்ள நினைத்தென். அது உலகமகா கடி என்றார் C புரோகிராமர் ஒருவர். இருந்தாலும் ஆசைப்பட்டேன். என்னிடம் Borland C++ Disketteகள் இரண்டு வருடமாக இருக்கிறது. அதை இன்ஸ்டால் செய்து டெஸ்ட் பண்ண தயக்கம். இல்லை, அச்சம்.. இரண்டு நாளைக்கு முன்பு இன்ஸ்டால் செய்து துணிச்சலாக உட்கார்ந்தேன் – compactஆக ஒரு exe file உருவாக்க C தேவையாக இருந்தது. சில Cயின் சாம்பிள் புரோக்ராம்களை முயற்சி செய்தேன். தோல்வி. compiling-ன்போது ஏகப்பட்ட தவறுகள். முக்கிய தவறு Return (0) என்று போடாதது என்று தெரிந்து போனது – என்னிடம் உள்ள புரோக்ராம்களில் ஏதோ ஒரு file corrupt ஆகியிருக்கிறது என்று தவறுதலாக நினைத்து , வேறொருவரிடம் மறுபடியும் Borland C++ வாங்கி முயன்றபோது. நீதி : ஒரு சக்தி இல்லையென்றால் அது நம்மிடம் இல்லை என்று பொருளல்ல. அந்த சக்தியை இதுவரை பயன்படுத்தவில்லை, உணரவில்லை என்று பொருள். அப்படித்தானே டென்னிஸ் எம்.ரிச்சி?

இன்று காலை அழகாக ஒரு பாஸ்வேர்ட் ப்ரோக்ராமை தயார் செய்தேன் C++ல். ஆச்சரியம் இல்லை. எந்த நிறுவனத்தில் சேர்கிறோமோ/இருக்கிறோமோ அந்த நிறுவனத்திற்கான எந்த தேவைக்கும் உபயோகப்படுவதுபோல ப்ரோகிராம்கள் எதில் எழுதினால் என்ன? Cக்கு மட்டும் என்ன புதுக்கொம்பு? இதை வானளாவ புகழ்ந்த புருவந்தூக்கிகள் (இவர்கள் அநேகமாக ப்ரோக்ராமராக இருக்க மாட்டார்கள்) இன்றைய ‘ஜாவா’வுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? Sentry Market Rsearchன் சமீபத்திய சர்வே client /server developmenக்கு உபயோகிப்பவர்கள்/விரும்புவர்களின் சதவீதத்தைச் சொல்கிறது. 23% Visual Basic, Cobol 21%, C++ 18%, C 15%, மீதி… 4 GLS (Arabian Computer News – 05.05.1996). நாள்தோறும் புதுப்புது கொம்புகள் முளைக்கின்றன. எதை தலையில் வைத்து சீவிக்கொள்வது? முஹம்மது முக்தார் அப்பாஸுக்கு நான் ஆரக்கிள்-ல் பண்ணினாலும் ஒண்ணுதான் அண்டியில் பண்ணினாலும் ஒண்ணுதான். அண்டியில் பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்தான், ஆனால் பண்ணலாம். எந்த காரியமும் ஆரம்பத்தில் தோன்றும் தோற்றம் வேறு. அதைப்பற்றி எண்ணஎண்ண அது சிறுத்துக்கொண்டே போகும். 13 ஆயிரம் வரிகள் கொண்ட யூனிக்ஸ் என்ற மாபெரும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆணைத்திரள்களில் 12 ஆயிரத்து 200 வரிகள் உயர்தனிச் செம்மொழியாம் C-இல் எழுதப்பட்டதுதான். இன்று, ‘அட , இதுதானா’ என்று ஆகிவிட்டது. குறைந்தபட்சம் இதற்குப்போயா இத்தனை தயக்கமும் பயமும் என்றாகிவிட்டது.

CC இந்தப்பழம் புளிக்கும்-ஆ? C ஒரு பெரிய காடு. ஒரு மிகச்சிறந்த மரவேலை செய்யும் தச்சனாக , பொருத்தமான மரத்தைத் தேர்ந்தெடுத்து , செதுக்கி, தேவையான சாமான்களாக உருமாற்ற எனக்கு காலமும் நேரமும் போதாது. உயர்தரமான மரச்சாமான்களும் சிற்பங்களும் விற்கிற கடையில் போய் வாங்கிக்கொள்வதுதான் எவ்வளவு சுலபமான வேலை! தமிழகத்தின் சிறந்த பொறியாளரான சர்க்காரிடம் ஒப்படைத்துவிட்டால் என் வீடு அழகாக உருவாக்கப்பட்டுவிடும்.

ஒப்படைத்து விட்டேன்!

*

இன்னொரு பிரச்சனை, நடன்யாஹூவும் யாஸர் அரஃபாத்தும் கை குலுக்கிக் கொள்வது. மச்சான் அலாவுதீன் காலையில் ஃபோன் செய்து, வரும் 27-ஆம் தேதி ஊர் போவதாகவும், போய் அடுத்த பத்துநாளில் தான் புதுவீடு குடிபோவது பற்றியும் சொன்னார். சந்தோஷம். ஏன் சொன்னார்? அஸ்மா வரவேண்டுமாம. ‘ஃபாத்திமாவும் நீங்களும் கூப்பிட்டால் கண்டிப்பாக வருவாள் , ஆனால் ஃபாத்திமா இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே’ என்றேன்.

‘இல்லே.. ரெண்டுபேர் சண்டையால குடும்பத்துல பெரிய பிளவு வந்துடுச்சிண்டு எடுத்துச் சொன்னேன். கேட்டுக்கிடுச்சி. கூப்பிடும்’ என்றார். அஸ்மாவும் ஃபாத்திமாவும் சுமுகமாக உறவாடும் காலம் நெருங்கி விட்டது. ஆனாலும் உடனே மகிழ்ச்சியடைந்து விடக்கூடாது. உறவாகும்வரை உறுத்தலை வைத்துக்கொண்டிருக்க வேண்டும் , யாரிடம் சொல்லாமல்..

யாரிடமும் சொல்லமுடியாத விஷயங்களும் உண்டு. கொழுந்தியாள் சேத்தபொண்ணின் கணவரான காசிமின் மருமகன், மஸ்தான் மரைக்கான் ரூமில்தான் இருக்கிறார். இது சொல்லமுடியாத விஷயம் அல்ல, அவருக்கு டிகிரி சர்டிஃபிகேட் வாங்கிக்கொடுத்ததைச் சொல்கிறேன்! பொதக்குடி இர்ஃபான் என்னிடம் முன்பு சொல்லியிருந்தார். ‘அண்ணே ..யாருக்காச்சும் டிகிரி சர்டிஃபிகேட் வேண்டும்டா ஆளை அனுப்பு.. செஞ்சி கொடுத்துடலாம்’என்று. சென்னைப் பல்கலைக்கழகத்தில் யாரோ ஒரு உபகாரி , 10,000 ரூபாய் வாங்கிக்கொண்டு செய்து கொடுக்கிறாராம். முன்பெல்லாம் பம்பாயில் மிகக்குறைந்து விலைக்கு கிடைத்துக்கொண்டிருந்த விஷயம். டாக்டர் , இஞ்ஜினியர் பட்டங்கள் பற்றி தெரியவில்லை. மற்றவைகள் தாராளமாக அரபுநாடு போகிறவர்களுக்கு கிடைத்தன. பெரிய பெரிய கம்பெனிகளில் இந்தியாவில் வேலைபார்த்ததாக சர்டிஃபிகேட்கள் வைத்திருப்பவர்கள் இதிலும் ஓரிரண்டு வாங்கிகொள்வதுதான். அந்த அந்தந்த கம்பெனிகளுக்கு தகுந்தமாதிரி பயோடேட்டா. ஒரு கம்பெனிக்கு B.Com., சர்டிஃபிகேட்டும் B.Sc., (Chemistry) சர்டிஃபிகேட்டும் சேர்த்து – ஜெராக்ஸ் காப்பி – அனுப்பினாலும் பரவாயில்லை, தவறுதலாக. வேலை உறுதி. ‘நம்ம ஆள்’ என்று பிரியப்பட்டு , வேலைகொடுப்ப்பவர் கூப்பிட்டுவிடுவார். மச்சான் வேலை செய்கிற துபாய் கோ-ஆப் சொஸைடியில் இண்டர்வ்யூவின்போது ஒரு ‘பாரா’ ஆங்கிலத்தில் படித்துக்காட்ட வேண்டும். 2 ‘சூரா’ ஓதிக்காட்ட வேண்டும். ஏதோ ஒரு வேலை நிச்சயம். அங்கே டிகிரியை சொல்லிக்கொண்டிருப்பதும் மரியாதைக் குறைச்சல். எவ்வளவு வருடங்கள் படித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். பெரிய யூரோப்பியன் & அமெரிக்கன் கம்பெனிகளுக்கும் அரசாங்க வேலைகளுக்கும்தான் டிகிரி அல்லது படித்த சர்டிஃபிகேட்கள். அசலை விட நேர்த்தியாக முத்திரைகள் இருக்கும்.இருக்க வேண்டும். நான் சம்பாதிக்க ஆசைப்பட்டேன். ஏன், எனக்கு வில்லங்கங்கள் வராதா? இத்தனை வருடமாக துபாயில் இருக்கிறேன். போதாதா? தவிர, இதை வில்லங்கம் என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்த சர்டிஃபிகேட்டை மேற்பதவிக்கு வர உபயோகிப்பதற்கு நிறைய பேர் விரும்புகிறார்கள் அவர்கள் மேலே வந்தால் அவர்களும், அவர்களின் குடும்பங்களும் ( ஏன், சென்னைப் பல்கலைக்கழகமும்!) நன்றாக இருக்கும்தானே.. எனக்கு ஒரு ஆளுக்கு 200 திர்ஹம் கமிஷன் போதும். இதுபோல் , சௌதியிலிருந்து ஒரு மாமா ஒருவர் தன் நண்பருக்கு (?) எடுத்துக்கொடுக்க முடியுமா என்று கேட்டபோது – பத்துவருடங்களுக்கு முன்பு – கொதித்தெழுந்து , உறவை அறுத்த எனக்கு இன்று என்ன ஆனது?

இப்படித்தான் ‘பார்ட் டைம் ஜாப்’, அல்ல, ‘சோசியல் வொர்க்’ பண்ண வேண்டுமா? இதில் மிஞ்சி மிஞ்சி என்ன கிடைத்துவிடும்? ஆமாம், இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் உண்டியல் வியாபாரம் கூட பண்ண முடியவில்லை. துபாயில் ஒரு ரூமில் நாலு பேர் இருந்தால் ஐந்துபேர் உண்டியல் செய்கிறார்கள் என்பதல்ல. இதில் என்ன கிடைத்துவிடும்? இது ஒரு வியாபாரமா? சீ! ஆனால், ஒரு முறை மஸ்தான் மரைக்கானிடம் சொன்னேன் ஒருநாள். அவன் தனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டான். அதாவது இம்மாதிரி சில்லறைப் படிப்புகள்!

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர் – பிஸ்தாமரைக்கார் – இரண்டுநாள் கழித்து , தனியாக என்னிடம் , தன் ‘படிப்பார்வத்தை’ச் சொன்னார். ஐயோ, இவரிடம் கமிஷன் வாங்க முடியாதே.. ஈடுபட்டு, வாங்கித்தர முடியவில்லையேல் குடும்பப் பிரச்சனையாக வேறு வந்துவிடுமே.. ஆனால் அவரால் இதுதான் பிரச்சனை என்று சொல்லமுடியுமா வெளியில்? சொல்வதற்கெல்லாம் வெட்கம் தேவைப்படுகிறது! அவருடைய வற்புறுத்தல் தாங்காமல் போகவே ஈடுபட்டேன். ஈடுபடும் முன்பு , ‘சுபுஹானக்க லா இல்மலனா’ ஓதி முடிவெடுத்தேன். ‘இதில் ஈடுபடக்கூடாது – நேரிடையாக ‘ என்று வந்தது. இர்ஃபான்-ஐ கைகாட்டி விட்டேன். கொடுத்து இரண்டுமாதம். விலையும் இரண்டு மடங்கு கூட. புது அரசு காரணமாம்! பிஸ்தாமரைக்காரைப் பார்க்கும்போதெல்லாம் பகீர் பகீர் என்றது இரண்டுமாதமாக. ஐயோ, இதிலெல்லாம் இனிமேல் செத்தாலும் மறைமுகமாகக்கூட ஈடுபடக்கூடாது. மனசின் கஷ்டத்தை கசங்காமல் உணர்ந்த பலன், நேற்று பிஸ்தாமரைக்கார் படித்து முடித்து விட்டார்! 3 வருஷ மார்க் லிஸ்ட்களுடன் சர்டிஃபிகேட் இருந்தது. ஒரிஜினல் அப்படித்தான் இருக்குமாம். பிஸ்தாமரைக்கார் சொன்னார்! B.Com. அடுத்து பிஸ்தாமரைக்கார் M.Com படிக்கப்போகிறாரா , M.B.Aவா? எத்தனை வாரங்களில்? உயர்படிப்புகளுக்காக இர்ஃபான் வேறொரு மலையாளியை முன்பு சொன்னார்தான். இனி இர்ஃபானையே இதற்கு நெருங்கக்கூடாது எனும்போது அவன் எதற்கு? ஆனாலும், பிஸ்தாமரைக்காருக்கு வழிகாட்டலாம். சொந்தக்காரராயிற்றே!

*

ஊர் போயிருக்கிற ஃபரீதுக்கு 50000 ரூபாய் அனுப்ப வேண்டியிருந்தது. சௌதியில் ஒரு அரபியிடம் மாட்டிக்கொண்ட அவருடைய பணத்தின் முதல் தவணை வந்து சேர்ந்ததில் அனுப்ப முடிந்தது. இரண்டுநாளைக்கு முன் ஃபரீதுக்கு பணம் கிடைத்த தகவலை ஹவாலா ராஜ்ஜியம் சொல்லவில்லையே என்று நினைத்த அடுத்த நொடியில் ஃபரீதிடமிருந்து ஃபோன். ‘ஓய்.. பணம் இப்பதான் கிடைச்சிச்சி..!’. பணம் கிடைத்ததை விட ஆச்சரியம் , ஃபரீது உடனே ·போன் செய்து சொன்னது. சர்க்காரின் ‘மாலி’ ஜோக்கை ஒருமுறை மஸ்தான் மரைக்கான் ரூமில் சொன்னேன். அனைவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தார்கள். ஃபரீது மட்டும் சிரிக்காமல் இருந்தார். சிரிக்க அலுப்பு! அவரா? நினைத்தால் யாரையும் மாற்றலாம் ஒரு நொடியில் ஆபிதீனும்தான் எவ்வளவு மாறிவிட்டான்! அவனுடைய சக்திகள் சர்க்காரைப் பார்ப்பதற்கு முன் எங்கு இருந்தன? பிரச்சனைகள் இருந்தாலும், தெரிந்தாலும் விரைவில் மறைந்து விடுகின்றன – சம்பளம் கிடைப்பது போன்று. ரியாலத்தை விடக்கூடாது ஊர்போனாலும்..

‘நான் சொல்றது சைக்காலஜியா, ஃபிலாசஃபியா , மெட்டா பிசிக்ஸா அல்லது deeper than all these thingsஆ?’ என்று கேட்கிறார்கள் ஒரு கேஸட்டில்.

‘deeper than all these things’

‘அப்ப..எவ்வளவு உயிரா மதிக்கனும் இதை? அப்படி மதிச்சி செய்யிறீங்களா, ‘ஜம்’மையும் ரியாலத்தையும்?’ – ‘S’

*

சர்க்காரின் டிசம்பர்’95 பேச்சுகளிலிருந்து :

என்ன மாதிரி வாழ்க்கையில் தோல்வி அடைஞ்சவன் எவனும் இல்லேங்க. என் கதை உங்களுக்குத் தெரியுமா? எத்தனை இடர்பாடு, எத்தனை தொல்லை, எத்தனை கல்லு முள்ளு..எவ்வளவு கஷ்டம்..! நீங்கள்லாம் ராஜா மாதிரி இக்கிறீங்க. என் இதையெல்லாம் தாண்டிக்கிட்டு நான் வளர்ந்திக்கிறேண்டா நீங்கள்லாம் எப்படி இருக்கனும்!

பெரும்பாலானோரை விட இப்ப நல்லா இக்கிறோம், நல்லா இருப்போம், நல்லா இருக்கப்போற பாதையிலே ஸ்டெப்-ஐ தவற விட மாட்டோம், கண்டினியூ பண்ணுவோம்.’ – இதை auto suggestionல் use பண்ணுங்க. லட்சியமாக வைத்து இந்தப்பாதையை விட்டு எந்தக்காரணம் கொண்டும் நழுவவிடக்கூடாது. ‘cosmic habit force’ சீக்கிரம் பிக்-அப் பண்ணனும் இதை.

மத்தவன் பூராம சுவத்தைக் கட்டுவதற்குப் பதிலா, சுவத்தை சுவத்தைக் கட்டுவதற்காக ஸ்ட்ராங்கா கட்டுங்க.

காசு, வெற்றி, மகிழ்ச்சி நம்மை அடிமையாக்கிடக்கூடாது. நம்ம way of life & course of actionஐ மாத்திடக்கூடாது. மாத்த வுட்டுடக்கூடாது.

எண்ணம் விந்தைவிட உசத்தி.

The privilage of wishing what you want out of your life …- பெரிய நியமத்.

‘பேச்சு என்பது வெள்ளிக்கு நிகர் என்றால் மௌனம் என்பது தங்கத்திற்கு நிகர்’ – சுலைமான் நபி.

கிடைக்கும்டு நெனைச்சி ‘ரியாலத்’ பண்ணக்கூடாது. கிடைக்காவிட்டாலும் நீங்க பண்ணனும். நீங்க பண்ணுறது உங்களுக்கு நல்ல. ‘சர்க்கார் சொன்னாஹா’ங்குறதுக்காக பண்ணனும். அது நஷ்டப்பட்டாலும் , அதால நஷ்டம் வந்தாலும் பண்ணனும். அப்பதான் மேலும் மேலும் பெரிய லட்சியத்தை அடைய முடியும். கற்பனைக்கு எட்டாத வெற்றிகள்! ‘சர்க்கார் சொன்னாஹா, பண்ணுறோம்’. அவ்வளவுதான். அப்பதான் ஃபுல் ‘பவர்’ கிடைக்கிம்

நான் எதை நினைக்கிறேனோ அப்படியே நடப்பீங்க. நான் எப்படி இழுத்துக்கிட்டு போவனுமோ அப்படி ஈடுபட்டு நீங்க வருவீங்க. உங்களுக்கே தெரியாது! இதெல்லாம் வேஸ்ட். இருந்தாலும் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்கனும்லெ? அதுக்காகத்தான் நான் சொன்னதை செய்யுங்க , மரியாதையா ‘ஜம்’ பண்ணுங்கண்டு கண்டிக்கிறேன். நாளைக்கு ‘ஜம்’மும் வாணாம் ‘கம்’மும் வாணாம், பேசாம உட்காருங்கண்டு சொன்னாலும் சொல்லுவேன். என்னக்கி?ண்டு மட்டும் கேட்டுடாதீங்க!

இந்த சிஸ்டம் வெறும் ஹதீஸ் சொல்ற சிஸ்டமல்ல. பெரிய இயக்கத்துக்கு ஃபவுண்டேஷன். அதுக்கு சில தகுதிகள்லாம் வேணும். அதை வளர்த்தாக்கா நான் சந்தோஷமா செத்துப்போவேன்

நாம் செய்யிற செயல்லெ அல்லா வெளிப்படட்டும். இப்படி செஞ்சா இஸ்லாத்துலெ எவ்வளவு பவர் இக்கிதுண்டு ஜனங்களுக்கு தெரியும்

*

05.01.1996 கேஸட்டிலிருந்து :

‘அல்லா இக்கிறான்’ங்குறதுக்கு என்னா ஆதாரம்?’டு கேட்டான் ஒருத்தன். ‘முட்டாள்தனமான கேள்விய இக்கிதே..! ‘குல்ஃபு அல்லாஹூ அஹது’ண்டு அல்லாஹ்வே (குர்ஆன்ல) சொல்லியிக்கிறானே..!’ என்றானாம் ஒரு அறிவாளி’ – ‘S’.

சீடர்களைக் கிண்டல் செய்கிறார்களோ?!

*

எண்ணம் என்பதிலே எல்லாமே அடக்கம். மனசுல தோணுகிற எல்லாமே எண்ணம்தான். தோற்றுவிக்கிற எல்லாமே எண்ணம்தான். தோற்றுவிக்கப்படுகிற எல்லாமே எண்ணம்தான்

Intution – இல்ஹாம்

குளத்தங்கரையிலெ நின்னு காத்து வாங்கிற மாதிரிதான் midway. ஆனா குளிச்சித்தான் ஆகனும். அதுதான் purpose. காத்து வாங்குறதல்ல!

தூக்கம்ங்குறது பெரிய பாதுகாப்பு. இல்லேண்டா continuous கவலை , insane நிலைக்கி கொண்டு போயிடும். (தூக்கம்) சரியான, அளஹான define mechanism. இந்த தூக்கத்தோட forceஐ midwayயில கொண்டுவர முடிஞ்சிச்சிண்டு சொன்னா உங்க லைஃபை கண்ட்ரோல் பண்ணுற சக்தியை கையில வச்சிக்கிட்டீங்கண்டு அர்த்தம்.

வெளிப்புலனை நல்லா வச்சி, இயக்கத்தை குறைச்சி, Bodyஐ ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு, ஸ்ட்ராங்கா- with emotions – உணர்ச்சியோட நெனைக்கிறதுதான் Auto Suggesion.

வியாபாரம் பண்ணும்போது , எப்படி பண்ணுறது வியாபாரம்டுதான் பார்க்கனும். இதனாலெ ‘அந்த காசு வந்தா இங்கே பங்களா கட்டலாம். அங்கே தோட்டம் வாங்கலாம்’டு நெனைச்சீங்க.. தோட்டத்துக்கு காவல்காரனாத்தான் இருப்பீங்க! அது வெற்றிக்குப் பாதை அல்ல. இது ஆரம்பிச்ச பிறகு, ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நம்மள்ட்டெ என்னா குறை இக்கிதுண்டு பாரு. பாத்து , (அதை) நீக்க முயற்சி பண்ணு. நீக்கிக்கிட்டிக்கும்போதே தனக்குத்தானா பாதை திறந்திட்டு போய்க்கிட்டிக்கிம். முதல்லெ வித்தைப் போடு!

(தொடரும்)

குறிப்புகள் :

ஜம் – ஒரு பயிற்சி
அமாலி – கூலி
கஹ்வா – பால் கலக்காத காஃபி
காஃபிர் – ஓரிறையை மறுப்பவர்
கல்லி வல்லி – விட்டுத் தொலை. (விசா காலாவதியாகியவரையும் குறிக்கும்)
நாப்பது – (நாற்பது நாள் கழித்து நடத்தப்படும்) ஒரு சடங்கு
அர்பாப் – அரபி முதலாளி
மாஸலாமா – ‘குட்பை’ என்று சொல்வது
ரியாலத் – (‘SS’) பயிற்சி
நியமத் – அருள்
ஹதீஸ் – நபி (ஸல்)-ன் சொல், செயல், அங்கீகாரம்
குல்ஃபு அல்லாஹூ அஹது – அல்லாஹ் ஒருவனே
Midway – தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயுள்ள இடைவெளி

« Older entries