மறக்கவொண்ணா மாமேதை

ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் மறைவின்போது ‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன் அவர்கள் எழுதிய கட்டுரை இது (முஸ்லிம் முரசு – நவம்பர் 2002).

ஹஜ்ரத்சிலர் பிறந்த ஊரினால் சிறப்படைவார்கள். வேறு சிலர் பிறந்த ஊருக்குச் சிறப்பு சேர்ப்பார்கள். வெகுச்சிலர் சீரிய சிந்தனையாலும் செம்மையான செயல்பாட்டினாலும் தானும் புகழ்பெற்று, பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள். இத்தகு மேன்மக்களில் ஒருவர் நம்மிடையே வாழ்ந்து கடந்த 9.9.2002 அன்று இறைவனின் நாட்டப்படி மறுமைப் பேறு அடைந்த மார்க்க அறிஞர் , பன்னூலாசிரியர், மௌலானா மௌலவி ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு காதிரி ஆவார். கூடுதல் சிறப்பு நாகூரில் அடக்கம் பெற்றுள்ள இறைநேசச் செல்வர், கருணைக் கடல் செய்யிது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வழித்தோன்றல் அவர்.

1933ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் கே.எஸ். முஹம்மது கௌஸ் சாஹிபு. தாயார் பெயர் செல்ல நாச்சியார்.

வேலூர் பாக்கியத்துல் சாலிஹாத் அரபிக் கல்லூரியில் மாணவராக ஞானம் பயின்ற காலத்திலேயே எழுத்துத்துறை அவரைக் கவர்ந்து ஈர்த்தது. அப்போதே எழுத்துலகப் பிரவேசம். ஆரம்ப காலத்தில் விந்தியன், எஸ்யே.பி ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள் எழுதினார். தமிழகத்தின் வார, மாத இதழ்களில் அவை இடம் பெற்றன. பின்னர் மணிவிளக்கு இதழில் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன. அவருக்கு சமுதாயத்தில் தனி மதிப்பையும் மேன்மை சிறப்பையும் பெற்றுத் தந்த எழுத்தாற்றல், மொழித் திறன், சிந்தனைச் செறிவு வெளிப்பட்டது. ஆரம்ப காலத்திலேயே தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் அங்கீகாரம் அவருக்கு உரித்தானது!

அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் ‘இஹ்யாவு உலுமித்தீன்’ பேரறிவுப் பெட்டகமான பெருநூலினை இனிய-எளிய- எல்லோருக்கும் படிக்கக் கூடிய, மொழி நடையில் தமிழுருவாகக் கொணரும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தனித்துவம் அதில் ஒளிர்ந்தபோது முத்திரை பதித்து முழுவெற்றியையும் ஈட்டினார். எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெருகினர். வாசகர் வட்டம் உருவானது. அது காலப்போக்கில் விரிந்து பரந்து தமிழ் கூறும் நல்லுலகம் எங்கனும் அவரது பெயர் ஒலிக்க வழி கோலியது.

மார்க்க அறிஞர் என்ற மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவரான அவர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், நூலாசிரியர், வரலாற்று விற்பன்னர் என்றெல்லாம் புகழ்ந்துரைக்க பெற்றமைக்குரிய தெளிவான சரியான காரணம் அவர் பெற்றிருந்த பன்முகத் திறனே ஆகும்.

இஹ்யா நூல் வரிசையில் முதல் நூலாக 1957ஆம் ஆண்டு ‘பாவமன்னிப்பு’ அச்சில் வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் 2000 ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற தலைப்பிலான நூல்வரை அத்தனையும் பொற் குவியல்கள். போற்றுதற்கும் புகழுதற்கும் உரிய அவர் நம் காலத்தில் வாழ்ந்தது நாம் பெற்ற பேறு எனில் அது பொய் அல்ல.

அறிவுக்கோட்டையின் தலைவாயில் ஹலரத் அலீ (ரலி) அவர்கள் எழுதிய கடிதங்களையும், கருத்துக்களையும் ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதிய நூலின் தலைப்பு ‘மகனுக்கு’ என்பதாகும்.

பாரசீகம் தந்த ஞான வள்ளல் மௌலானா ரூமி அவர்களில் அறிவுக் கருவூலங்களையும் தமிழுரு கொடுத்துள்ளார். அவை முறையே ‘மௌலானா ரூமியில் தத்துவங்கள்’ மற்றும் ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்’ ஆகும்.

ஆத்மீகத் தந்தை ஹலரத் இமாம் ஜாபர் சாதிக் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக – தெளிவாக தமிழில் தந்த தனிச்சிறப்பு இவருக்கு உரியது.

மணிவிளக்கு இதழில் தொடர்ந்து கட்டுரையாக வந்த ‘மக்கா யாத்திரை’ பின்னர் அத்தொகுப்பு ‘அரேபியாவில் சில நாள்’ என்னும் நூலாக வெளிவந்தது. மணிவிளக்கில் கட்டுரைத் தொடராக வந்தபோதும், தனி நூலாக வந்தபோதும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இஹ்யாவு உலுமித்தின் பெருநூலின் மொழிபெயர்ப்பாளர் என்ற மதிப்பீட்டிலிருந்து விடுபட்டு அல்லது அந்த அளவுக்கோட்டைக் கடந்து இஹ்யாவின் விரிவுரையாளர் என்ற அளவில் உயர்ந்தார். அப்படித்தான் அறிஞர் பெருமக்கள் கருத்துரைத்து அடையாளம் காட்டினார்கள்.

அவருடைய எழுத்துக்களால் உருப்பெற்ற நூல்களைப் பதிப்பிக்கவும் வெளியிடவும் பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் முனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் போட்டிபோட்டுக்கொண்டு முன் வந்தன. அப்படி ஆர்வத்துடன் முதலீடு செய்தவர்கள் யாரும் இழப்பிற்குள்ளாகவில்லை. ஏமாற்றம் அடையவும் இல்லை. அத்தனை நூல்களும் பல பதிப்புகளைக் கண்டது.

அவருடைய நூல்களுக்குரிய வாசகர் வட்டம் உலகளாவியது என்று சொன்னால் கூட அது தவறு அல்ல. தமிழ் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவருடைய நூல்களை விரும்பிப் படிக்கிறார்கள். கடந்த அரை நூற்றாண்டாக அப்படியொரு நிலை நீடிக்கிறது. நிலைத்த பயன் தருகிறது.

இஹ்யா வரிசையிலான நூல்கள் அனைத்தும் அற்புதமானவை. அவற்றுள் ‘இறைவணக்கம்’, ‘பக்தர்களின் பாதை’ , ‘தர்க்கத்துக்கு அப்பால்’ ஆகிய மூன்று நூல்களும் தமிழ் முஸ்லிம் வாச்கர்களையும் கடந்து முஸ்லிம் அல்லாத தமிழர்களும் வாங்கி விரும்பி படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள். நாம் பெருமையும், பெருமிதமும் கொள்ள வழி அமைத்துள்ளது.

மாண்பமை ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் சாஹிபு பாகவி அவர்கள் எழுதிய ஜாபர் சாதிக் (ரலி) வரலாற்று நூலின் முதற்பதிப்பு (1965) 209ஆம் பக்கத்தில் இமாம் அவர்களின் ஈடுகட்ட முடியாத இழப்பை விவரித்த நூலாசிரியர், “…ஒவ்வொரு நாளும் விளக்கு ஏற்றி வைத்தார்கள், உறவினர்கள். அணைந்த விளக்கினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இந்தப் புதிய விளக்கினால் நிரப்ப முடியவில்லை” என்று எழுதியுள்ளார்.

அது இவருக்கும் – எங்கள் ஹஜ்ரத் அவர்களுக்கும் – பொருந்தும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

*

Jafer Mohiyudeen1

‘சொல்லரசு’ மு. ஜாபர் முஹ்யித்தீன்
*

நன்றி : முஸ்லிம் முரசு

Advertisements

ஆறுதல் தரும் ஆன்மீகப் பொக்கிஷம் (pdf)

சத்தியமாக இது சாதிக், தாஜ், மஜீதுக்கு அல்ல; மனிதர்களுக்கு!.  சூஃபிஸத்தில் நாட்டம் உள்ளவர்கள் சுலபமாக தரவிரக்கலாம் , அனுமதி வாங்கியபிறகு. சுட்டி அனுப்பிய அன்பரிடம், ‘மாபெரும் ஆன்மீகப் பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறீர்களே சீதேவி.. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே… எழுதுங்கள். நூல்களை மொழிபெயர்த்த ஹஜ்ரத் அப்துல் வஹாப் பாக்கவியின் பெயர் ஒரு பிடிஎஃப்-லும் இல்லை; காரணத்தைக் குறிப்பிடுங்கள்.  Public Access கொடுத்தால் எல்லா அன்பர்களும் தரவிறக்கம் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் வலைப்பக்கத்தில் செய்தியை வெளியிடவா? சொல்லுங்கள்’ என்று கேட்டேன். ‘அல்லாஹுக்காகவும், நமது நாயகம் நபி (ஸல்) அவர்களுக்காகவும் செய்தேன். என்னை அறிய முற்பட வேண்டாம். நீங்கள் அறிந்த உண்மையை பிறரும் அறிவதற்கு உதவுங்கள். அல்லாஹ் நமக்கு போதுமானவன்.’ எனும் சுந்தர பதில் வந்தது. நல்லது, நாயன் தந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி : Sufi Islam அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் (ஷரியத்,தரீக்கத்)

***

bgnd-11b

ஆன்மா பரிசுத்தபடுத்தும் ஆத்மீக (SUFISM) பாதைகாக்க ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்‘ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பார்ஸி (PERSIAN) மொழியில் எழுதி முடித்த இஹ்யா உலூமித்தீன்நூல் தமிழில்.

 விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்-PART-1.pdf

​​ விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்-PART-2.pdf

 திருமணம்.pdf

 நாவி்ன்-விபரீதங்கள்.pdf

 பாவ மன்னிப்பு.pdf

 கோபம் வேண்டாம்.pdf

 ஏகத்துவம்.pdf

​​ பொறுமையாய் இரு.pdf

 உள்ளத்தின் விந்தைகள்.pdf

 இம்மையும்-மறுமையும்.pdf

 சிந்தனையின் சிறப்பு.pdf

​​ உளத்தூய்மை.pdf

 இறையச்சம்.pdf

 இறை நம்பிக்கை.pdf

 இறையன்பு.pdf

 தனிமையின் நன்மைகள்.pdf

 தொழுகையின் இரகசியங்கள்.pdf

 பொருளீட்டும் முறை.pdf

 செல்வமும் வாழ்வும்.pdf

 பயணத்தின் பயன்.pdf

 பொறாமை கொள்ளாதே.pdf

 முகஸ்துதி.pdf

 பெருமை.pdf

 நோன்பின் மாண்பு.pdf

 நல்லெண்ணம்.pdf

 புறம்பேசாதே.pdf

 பதவி மோகம்.pdf

நாயகத்தின் பேச்சும் சிரிப்பும்

இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாவு உலூமித்தீ’னிலிருந்து ஒரு பகுதி ‘நாயகத்தின் நற்பண்புகள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. தமிழாக்கம் : எங்கள் ஹஜ்ரத் மௌலவி எஸ், அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்கள். நான்காம் அத்தியாயத்தின் முடிவில்  இருக்கும் பெருமானாரின் அற்புதமான பிரார்த்தனை போன்று நாமும் கேட்கவேண்டும் என்பதற்காகவே பதிவிடுகிறேன். நாயன் நல்லருள் புரியட்டும். நேரம் கிடைக்கும்போது மற்ற அத்தியாயங்களையும் பதிவிட முயல்கிறேன், இன்ஷா அல்லாஹ். இப்படியும் செய்வான் எழுத்தாளன்! – ஆபிதீன்

***

naayaham-gazali-hazrathபெருமானாரவர்கள் மற்றவர்களை விடச் சுத்தமான அரபி மொழி பேசினார்கள். எல்லோரையும் விட இனிமையாக உரையாடினார்கள். “அரபி மக்களிலேயே நான் சுத்தமாகப் பேசுகிறவன்” என்று அவர்களே கூறியிருக்கிறர்கள். ஏனெனில் சுவனவாசிகள் முஹம்மது பேசிய முறையை ஒட்டியே பேசிக் கொள்கிறார்கள்.

தெளிவான கருத்துடன் அவர்கள் நிறுத்தி நிறுத்திப் பேசுவார்கள். தம் கருத்தை அவர்கள் மெது மெதுவாக வெளியிடுவார்கள். அவர்களின் பேச்சில் தேவையில்லாத எந்த விஷயமும் கலக்காது. அந்தப் பேச்சு கோர்வை குலையாமல், சிக்கல் இல்லாமல் அமைந்திருக்கும். கோர்க்கப்பட்ட பளிங்கு மணிகளைப் போன்று அவர்களின்  கருத்துக்கள் தெளிவாகத் தெரியும்.

“நீங்கள் துரிதமாகப் பேசுகிறீர்கள். முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாதபடிப் பேசுகிறீர்கள். ஆனால் பெருமானாரவர்கள் அப்படிப் பேசமாட்டார்கள். அமைதியுடன் நிறுத்தி நிறுத்திப் பேசுவார்கள்” – இது அன்னை ஆயிஷாவின் விளக்கம்.

திருத்தூதரவர்கள் எதையும் சுருக்கமாகவே பேசுவார்கள். இதையே வானவர் ஜிப்ரயீல் போதித்துச் சென்றார். சுருக்கமாகப் பேசினாலும் தம் கருத்துக்கள் அனைத்தையும் அவர்கள் ஒன்று சேர வெளியிட்டு விடுவார்கள். அவர்களின் பேச்சில் தேவைக்கதிகமான விரிவுரை இடம்பெறாது. சில விஷயங்களைப் பேசி நிறுத்திக் கொள்வார்கள். நண்பர்கள் கவனிக்கிறார்களா , இல்லையா என்று பார்ப்பார்கள். பின்னர் மீண்டும் தொடர்வார்கள்.

அவர்களுக்குக் கம்பீரமான குரல் அமைந்திருந்தது. அதில் மனத்தை ஈர்க்கும் இனிமையும் கலந்திருந்தது.

அவர்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருந்தார்கள். தேவையில்லாமல் அவர்கள் பேசுவதேயில்லை. பேசத்தகாத எதையும் அவர்கள் பேசமாட்டார்கள். சினம், திருப்தி, முதலிய நன்மைகளின் உண்மையைப் போதித்தார்கள். விரசமாகப் பேசுபவர்களை வெறுத்தார்கள். விரசமான கருத்துக்களை விளக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் சூசகமாகவே சுட்டிக் கட்டுவார்கள்.

திருத்தூதர் பேசாத நேரத்தில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள்; வாதம் புரிவார்கள். இந்த வாத அரங்கத்திற்குத் திருத்தூதரே நீதிபதி. அவர்களுக்கு எதிரில்தான் தர்க்கம் நடைபெறும். தர்க்கம் முடிந்ததும் அண்ணலாரின் உபதேசம் நடைபெறும். “திருக்குர்ஆனின் கருத்துக்களை ஒன்றோடொன்று கலந்து குழப்பாதீர்கள். திருமறை எத்தனையோ நோக்கங்களுக்காகஅருளப்பட்டிருக்கிறது.” என்று அவர்க்ள் கூறுவார்கள்.

பெரும்பாலும் அவர்களின் முகத்தில் புன்னகையே நிலவும். நண்பர்களைப் பார்த்து சிரிப்பார்கள். நண்பர்களின் பேச்சைக் கேட்டு அதிசயப்படுவார்கள். நண்பர்களோடு தாமும் கலந்து உரையாடுவார்கள். கடைவாய்ப்பல் தெரியும்படியும் அவர்கள் சிரித்திருக்கிறார்கள்.

அண்ணலாருக்கு முன்னால் நண்பர்கள் இரைந்து சிரிக்க மாட்டாரக்ள். புன்முறுவல் பூப்பார்கள். இது திருத்தூதருக்குக் கொடுக்கப்படும் மரியாதை. திருத்தூதர் அவர்களே அநேக சமயங்களில் புன்முறுவல்தானே செய்கிறார்கள். நண்பர்கள் அதைப் பின்பற்ற வேண்டாமா?

ஒருநாள் கிராமவாசி ஒருவர் வந்தார். அவர் முகம் சினத்தின் காரணமாக விகாரமடைந்திருந்தது. எனவே நபித்தோழர்கள் அவரை வெறுத்தார்கள். திருத்தூதர் முகமலர்ச்சியோடு பழகும் பண்பு படைத்தவர்களல்லவா? அதே மனிதர் திருத்தூதரிடம் ஏதோ கேட்கத் துடித்தார்.

“நீர் ஒன்றும் கேட்க வேண்டாம்! போய்விடும்! உம்மை நாங்கள் வெறுக்கிறோம்” என்று நண்பர்கள் கூறினார்கள்.

திருநபியவர்கள் இடைமறித்துப் பேசினார்கள். “அவரை விடுங்கள். அவர் கேட்கட்டும். இறைவன் மீது ஆணை. அவர் சிரிக்கும்வரை நான் அவரை விடப் போவதிலை.”

வந்தவர் வினவினார். “தஜ்ஜால் என்பவர் ரொட்டியைக் கொண்டு வருவானாம். நான் கேள்விபட்டேன். மக்கள் உணவின்றி மடிந்து போவர்களாம். அந்த ரொட்டியை நான் தொடமாட்டேன். கட்டுப்பாட்டுடன் செயலற்றுவேன். அல்லது அதனைப் பறித்து வயிறு முட்டச் சாப்பிட்டு விடுவேன். இறைவனை நான் நம்புகிறேன். தஜ்ஜாலை வெறுக்கிறேன்..”

இந்தக் கட்டத்தில்தான் அண்ணலவர்கள் கடைவாய்ப்பல் தெரியும்படிச் சிரித்தார்கள். “முஸ்லிம்களுக்குச் செய்கிற உதவியை இறைவன் உமக்கும் அவசியம் செய்வான். நீர் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

முயற்சியின் அபார சக்தி குறித்து அவர்கள் பிரசங்கம் செய்தார்கள். இறைவனுக்காகவே சினமுற்றார்கள். சினத்தின் காரணமாக விபரீதம் எதையும் செய்துவிட மாட்டார்கள். இப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.

ஒரு காரியத்தில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதன் முழுப் பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அவர்கள் செவ்வையாகச் செயலாற்றுவார்கள். “வல்லவனே! நேர்மையை எனக்கு நேர்மையாகக் காட்டுவாயாக! அதை கைக் கொண்டு நடக்கும் ஆற்றலைத் தந்தருள்வாயாக! அற வழியைப் பின்பற்றியொழுகும் மனப்பக்குவத்தை எனக்குக் கொடுத்தருள்வாயாக! முரண்வழியை எனக்கு முரண்வழியாகவே காண்பிப்பாயாக! முரண் வழியை ஒதுக்கித் தள்ளும் துணிவைத் தந்தருள்வாயாக! அபிப்பிராய பேதமுள்ள பிரச்சினைகளில் எனக்குத் தெளிவைக் கொடுத்தருள்வாயாக! உன் அன்பிற்குரியவர்களுக்கு நீ நேர்வழியைக் காட்டுகிறாய்” என்று பிரார்த்திப்பார்கள்.

**

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்

இறை திருப்தியும் இரு பெண்களும்

Great_Mosque_of_Samarraமுன் குறிப்பு : முதலில் வரும் பெண் என் அஸ்மா அல்ல! ஆனாலும், இரண்டாவதாக வரும்  ராபியா பஸ்ரியா குறிப்பிடும் ஓர் அரிய குணம் அஸ்மாவுக்கு இருக்கத்தான் செய்கிறது. நான் நாகூர் வந்தாலும் சந்தோஷம். துபாய் போனாலும் சந்தோஷம். இரண்டுமே அவளுக்கு இறை தீர்ப்புகளே! நல்லது, இந்தப் பதிவு இமாம் கஸ்ஸாலியின் ‘இஹ்யாவு உலூமித்தீ’னிலிருந்து உருவான ‘இறை திருப்தி’ என்ற நூலிலிருந்து வ்ருகிறது. தமிழாக்கம் : எங்கள் ஹஜ்ரத் மௌலவி எஸ், அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்கள்.

***

1

பக்தர் ஒருவர் வெகுநாட்கள் இறைவனை வணங்கினாராம். அவரது தவப் பயணால் ஒரு நாள் தெளிவான கனவு ஒன்று கண்டார். அதில் ஒரு பெண்மணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டாள். “இவள்தான் சுவனத்தில் உமக்குத் துணைவி!” என்று அறிவிக்கப்பட்டது.

தூக்கத்திலிருந்து கண் விழித்த பக்தர் அந்தப் பெண்மணியைத் தேடியலைந்தார். கடைசியில் அவளைக் கண்டு பிடித்தார். அவளைத் தன்னோடு மூன்று நாட்கள் தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனின் பேரன்பைச் சம்பாதிக்கும் அளவுக்கு அப்படி இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்க்க ஆசை அவருக்கு.

அவள் சம்மதித்து விட்டாள், ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அவள் ஒன்றும் நல் வணக்கம் புரியவில்லை. அவர் இரவு முழுவதும் நின்று வணங்கினார். அவளோ இரவு முழுவதும் நிம்மதியாகத் தூங்கினாள். அவர் பகல் முழுவதும் நோன்பு பிடித்தார். அவளோ முழுவதும் வாய் ஓயாமல் தின்று தீர்த்தாள்.!

இப்படி மூன்று நாட்கள் கழிந்தன. பக்தருக்கு ஒரு புறம் ஆச்சரியம். மறுபுறம் கோபம். “என்ன இது? தின்பதும் தூங்குவதும் தானா? உனக்கு வேறு எந்த வேலையும் தெரியாதா?” என்று இரைந்து கத்தினார்.

அந்தப் பெண்மணி இறைவனை வம்புக்கு இழுத்தாள். “இறைவன் மீது ஆணை” என்று, “எனக்கு வேறு எந்த வேலையும் தெரியாது. எந்த வணக்கமும் செய்வதில்லை. உங்களைப் போல் நான் இரவையும் பகலையும் தொழுகையிலும் நோன்பிலும் கழிப்பதில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் செய்து வருவதெல்லாம் இது தான்…”

பக்தர் ஆச்சரிய மிகுதியால் அசந்தே போய் விட்டார். அப்படியானால் இவளுக்கு இத்தனை பெரிய சிறப்பு எப்படிக் கிடைத்தது? சிறந்த இறை பக்தனான தமக்குத் துணைவியாகும் பேறு எப்படிக் கிட்டியது?

“நீ வேறு ஏதேனும் நல்ல காரியம் செய்து வருகிறாயா?” என்று விநயமாகக் கேட்டுப் பார்த்தார்.

“அறவே கிடையாது!” என்று சொல்லி விட்டார் அவள். அவர் விடவில்லை. நச்சரித்துக்கொண்டேயிருந்தார். கடைசியில் ஒருவாறு உண்மை வெளிப்பட்டது.

“என்னிடம் ஒரு குணமுண்டு. அதன் அடிப்படையில்தான் நான் இயங்கி வருகிறேன். துன்பம் குறுக்கிடும்போது நான் இன்பத்தை எண்ணிப் பார்ப்பதில்லை. இன்பம் கிட்டவில்லையே என்று வருந்துவதில்லை. வியாதி வந்தால் ஆரோக்கியத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைப்ப்பட மாட்டேன். ஆரோக்கியம் ஏற்பட்டு விடாதா என்று நான் ஏங்குவதில்லை. இதுதான் என் குணம். இதன்படியே நான் நடந்து வருகிறேன். மற்றபடி நீங்கள் இந்த மூன்று நாட்களாகப் பார்த்ததுதான் என் செயல்முறை. வெய்யிலின் கடுமையில் நான் நிழலின் குளுமையை எண்ணிப் பார்த்ததில்லை. எனவே திருப்தியோடு உண்டு களித்து திருப்தியோடு உறங்கி மகிழ்கிறேன்.”

இதைக் கேட்ட பக்தர் தலையில் கையை வைத்துக்கொண்டு இடிந்து போய் உட்கார்ந்து விட்டார். “இந்தக் குணத்தின் சிறப்புத் தானா இத்தனையும்! உண்மையிலேயே சிறந்த குணம்தான் இது. பக்தர்களால் கூட இதைச் செயல்படுத்த முடியாது!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

***

2

சுப்யான் சௌரி ஒருநாள் ராபியா பஸரிய்யாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். “இறைவனே! என்னைத் திருப்தியோடு ஏற்றுக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்.

ராபியாவுக்குக் கோபம் வந்து விட்டது. “உங்களுக்கு வெட்கமில்லை? உங்களைத் திருப்தியோடு ஏற்றுக்கொள்ளுமாறு இறைவனிடம் கேட்கிறீர்களே, அவனை திருப்தியோடு நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்களா அவன் தீர்ப்புகளைத் திருப்தியோடு ஏற்கப் பழகிக் கொண்டு விட்டீர்களா?”

சௌரீ தம் குற்றத்தை உணர்ந்தார். உடனே இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அனைத்தையும் கேட்பவனல்லவா அவன்!

அப்போது ஜாபர் பின் சுலைமான் என்ற பெரியார் அங்கு இருந்தார். “ஒரு மனிதன் எப்போது இறை திருப்தி கொண்டவானாகிறான்? அதற்கு அறிகுறி ஏதும் உண்டா?” என்று ஒரு கேள்வியைப் போட்டார்.

சுப்யான் சௌரீ வாய் திறக்கவில்லை. மாதர்குலத்தின் அறிவுச் சுடர் பதில் கொடுத்தது. “நல்லது நடந்தால் மகிழ்வதும் கெட்டது நடந்தால் வருந்துவதும் மானிட குணங்கள். இதைத் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் இன்பம் வரும்போதுஎப்படி மகிழ்கிறானோ அப்படியே துன்பம் வரும்போதும் மகிழ்ந்தால் அவன் இறை திருப்தி கொண்டவன். இன்பம் துன்பம் என்ற இரண்டிற்குமிடையில் அவனுக்கு வேற்றுமை தெரியாது. ஏனெனில் இரண்டு இறை தீர்ப்புகளே!”

***

நன்றி : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்.

***

Image Courtesy : http://en.wikipedia.org/wiki/Great_Mosque_of_Samarra

« Older entries