The Living Body – Our Extraordinary Life

Thanks : Naked Science & Rajagopal
**

அறிவியலே அனைத்திற்கும் தீர்வு – பில்பிரைசன்

‘புத்தகம் பேசுது’ ஆகஸ்ட் மாத இதழில் வெளியான இந்த நேர்காணலை கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் ஃபேஸ்புக்கில்  பகிர்ந்திருந்தார். இது எங்கள் Ex-Spic Employees குழுமத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்கு நன்றி சொல்லி மீள்பதிவிடுகிறேன். அனுமதி பெறாமல் பதிவிடுவதால் நண்பர் ‘ரா.சு’ என்னை அடிக்கலாம். அறிவியல்பூர்வமாக அடிக்கவும். அதுதான் தீர்வு!

‘A Short History of Nearly Everything’ (PDF) தரவிறக்குவதற்கான சுட்டி பதிவின் அடியில் உள்ளது. மறக்காமல் டவுன்லோட் செய்யுங்கள் , படிக்க வேண்டாம்! – ஆபிதீன்

***

Bill_Bryson_1

நம்புங்கள் – அறிவியலே அனைத்திற்கும் தீர்வு

பில்பிரைசன்

*

விஞ்ஞானம், வரலாறு, மொழியியல் மற்றும் பயண நூல்கள் என பில்பிரைசன் கைபடாத துறைகள் இல்லை. அட்லாண்டிக் சமுத்திர நாடுகளின் அவென்டிஸ் விருது முதல் பல கண்டங்களின் விருதுகளைக் கடந்து சாமுவேல் ஜான்சன் விருது வரை அறிவியல் எழுத்துகளுக்காக இருக்கும் அத்தனை விருதுகளையும் வழங்கி, உலகம் ‘பில்பிரைசன் விருது’ என்றே ஒரு விருதையும் உருவாக்கி அவரது அறிவியல் எழுத்துக்களுக்கு மகுடம் சூட்டி உள்ளது.

ஆனால் ஒரே ஒரு புத்தகத்திற்காக (A Short History of Nearly Everything) 19,000 கி.மீ. பயணம் செய்து 178 நாட்களை பயணத்தில் கழித்து, 176 அருங்காட்சியகங்களைப் பார்த்து 2000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து உலகை அதிர்ச்சி அடைய வைத்தாரே, அந்த பில்பிரைசனின் 25வது புத்தகம் (The Home) சமீபத்தில் வெளிவந்துள்ளது.

லண்டன் ராயல் கழகத்தின் (Royal Society) உறுப்பினராகத் தேர்வாகி இருக்கும் அவர் தனது அறுபதாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘கிராமப்புற இங்கிலாந்தைக் காப்போம்’ எனும் சூழல் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இவை எல்லாவற்றிற்கும் சேர்த்து மனம்திறந்த சமீபத்திய உரையாடல் இது. ராயல் கழகத்தின் 350வது ஆண்டு அனுசரிப்பிற்காக “Seeing Further The story of Science and the Royal Society” எனும் நூலை தொகுத்துள்ளார். ராயல் சொசைட்டியின்
இணைய இதழ் (royalsociety.org)க்காக மாக்ஸ் டேவிட்சனும், ஜுலியன் ஜேம்ஸும் அவரோடு உரையாடுகிறார்கள்.

*

Q: கல்லூரியில் அறிவியல் படிக்காத நீங்கள் இன்று ராயல் கழக விஞ்ஞானி அந்தஸ்த்து பெற்றிருக்கிறீர்களே, இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் பில் பிரைசன்?

A: இது (ராயல்) சொசைட்டி பற்றிய விமர்சனமா பில்பிரைசன் பற்றிய விமர்சனமா? எதுவாக இருந்தாலும் ஏற்கெனவே இப்படி நடந்துள்ளது. உதாரணமாக பதினேழாம் நூற்றாண்டில் எட்மண்ட் ஹாலி கல்லூரிப்பட்டம் பெறுவதற்கு முன்பே ராயல் கல்வியக உறுப்பினரானார்; தனது பரிணாமவியலை வெளியிடுவதற்கு பல வருடங்கள் முன்பு தன் பீகிள் கப்பல் பிரயாணம் முடிந்த கையோடு டார்வின் உறுப்பினராக்கப்பட்டார்.

Q: நீங்கள் உங்களை விஞ்ஞானி என்று அழைத்துக் கொள்வதில்லையே?

A: நான் விஞ்ஞானி அல்ல. விஞ்ஞானத்தை, விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் ச்சியர் லீடர் நான்! அறிவியலின் அசைக்க முடியாத ஆதரவாளன். என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கே தொகுத்து வழங்குபவன். அறிவியல் வரலாற்றாளனின் வேலை அதுதான். என் வாழ்விலிருந்து எனக்கு கிடைத்த பெரிய உண்மை என்ன தெரியுமா, அறிவியலை நீங்கள் புரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு அறிவியல் பட்டமே தேவை கிடையாது! அறிவியல்வாதியாக
சிந்தித்தாலே போதும்.

Q: சிந்திப்பது வேறு, பில், நீங்கள் அறிவியல் வரலாற்றை அதன் சிறுதுளிகள் விடாமல் கரைத்து இடித்து விட்டதாகவே படுகிறது. ‘அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு’ மாதிரி அறிவியலுக்கு வெளியே இருந்து ஒருவர் எழுதமுடியாது என்றே தோன்றுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று?

A: பள்ளிக்கூடத்தில் மிக மோசமான அறிவியல் மாணவன் நான். மிகவும் சுவாரசியமான அறிவியல் உலகத்தை பாடப்புத்தகங்கள் அதிரடியாக துப்பாக்கி முனையில் நிறுத்தி, நம்மை நோக்கி கட்டளைகளாக, ஏன் சுவாரசியமற்ற தொனியில் முன்வைக்க வேண்டும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அறிவியல் ஒரு தொடரும் முடிவற்ற தேடல். அதை ஏற்கெனவே முடிந்துவிட்ட, ஜடத்தனமான, வெட்டிக் கூறுபோட்ட வெற்றுச் செய்திகளால் வகுப்பறையில் கொட்டுகிறார்கள். என் காலத்திலும் அதுவே நடந்தது. அம்மா, அப்பா இருவருமே பத்திரிகையாளர்கள் என்பதால் சொற்களை பற்பல வடிவங்களில் எதிர்கொள்ளுதல் வீட்டின் தன்மைகளில் ஒன்றாய் இருந்தது. ஒரு கால்பந்து போட்டி பற்றி எப்படி எல்லாம் எழுதி வழங்க முடியுமென விளையாட்டாக அவர்கள் விவாதித்ததும் என்னோடு சமஆட்களாக உரையாடியதும் மொழியியலை நோக்கி என்னைக் கொண்டு சென்று விட்டது. ஆனாலும் அறிவியலை அதன் வரலாற்றை எனக்கு பள்ளிக்கூடம் எப்படி வழங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படி எழுதவேண்டும் எனும் தவிப்பும் அதனை நானாகவே சுயதேடல் மூலம் கற்கவேண்டும் எனும் பிடிவாதமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

Q: ஆனால் இப்போது நீங்கள் வளர்ந்து விட்டீர்களே?

A: இருக்கலாம்.. அறிவியல் வகுப்புகள் ரொம்ப போர்… ஆனால் வளர்ந்த ஆளாக மனிதனாக அறிவியலைப் புறக்ககணிப்பது சாத்தியமல்ல. அதனோடு எப்படி அறிந்து இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான எனது தீர்வு அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு “A short history of Nearly Everything.”

Q: பயணம் செய்வதை கல்வி கற்றலின் ஒரு வகைபாடாக ஆக்குவது ஏன்? இணையத்தில், எல்லாம் கிடைக்கிறதே?

A: 1972ல் டிரெக் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டே ஆண்டுகளில் பொறுமை இழந்து வெளியேறி இருந்தேன். எதை வாசித்தாலும் அது அந்த விஷயம் குறித்த யாரோ ஒருவரின் மனப்பதிவாக இருப்பதையே உணர்ந்தேன். சில விஷயங்களில் உண்மை லேசாக வேறுபட்டது. சொந்தமாக கற்க, நேரில் அறிய, பயணிப்பது நல்ல வழி என்றுபட்டது. பயணங்களில் நான் பதிவு செய்ததை ஏற்கனவே புத்தகங்களாக எழுதியும் இருக்கிறேன். அறிவியலுக்காக சுமார் 20,000 கி.மீ. பயணம் செய்ததும் 2000 வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்களை நேரடியாகப் பதிவு செய்ததும், புது அனுபவமாக இருந்தது. அது எந்தப் பள்ளியிலும் பல்கலைக்கழகத்தாலும் அளிக்க முடியாத கல்விஅனுபவத்தை எனக்கு வழங்கியது. என்மாதிரி ஒரு சராசரி ஆர்வம் கொண்ட இன்னொரு மனிதருக்கு கதை மாதிரியே பேச நான் விரும்பினேன்.

Q: இப்புத்தகம் இவ்வளவு பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்த்தீர்களா, பில்?

A: உண்மையில் நான் மிகவும் பயந்தேன். என்னிடம் திரட்டப்பட்டிருந்த செய்திகளில் ஒரு எழுபது சதவிகிதத்தைத் தான் எழுத்தில் வடித்தேன். புத்தகம் கடக்கும் கால மற்றும் பொருள் வெளிக்குப் பொருந்தாத, ஆனால் என்னால் திரட்டப்பட்ட பல விஷயங்கள் மூட்டை கணக்கில் என்னிடமே உள்ளது. உதாரணமாக ஜாக்கப் ப்ரொனொப்ஸ்கி. ஏதோ வில்லியம் பிளேக் கவிதைகள், கவிஞர் வாழ்வு என்றெல்லாம் புத்தகம் எழுதிக் கொண்டிருந்தவர் திடீரென்று டார்வினை உள்வாங்கிக் கொண்டு அடுத்த பத்தாண்டு கடுமையாய் ஆய்வுகள். தி அசெண்ட் ஆஃப் மேன் (The Ascent of man) புத்தகத்தை எழுதுகிறார். அற்புதமான பதிவு. இன்று அது இன்றி டார்வினுக்குப் பின்னான பரிணாமவியலைப் புரிதல் கடினம். ப்ரொனொவ்ஸ்கி மாதிரி பலரை அந்தப் புத்தகம் பதிவு செய்யவில்லை. ஆனால் எனது புத்தகத்தை விஞ்ஞானிகள் மிகவும் கரிசனத்தோடே அணுகி இருக்கிறார்கள்.

Q: பாடப் புத்தக வாதிகள் எழுத்துப் பிழை விடாமல் விமர்சித்துள்ளார்களே?

A: ஆனால் வாசிக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதானே உண்மை? நான்கு பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள், ஏன், புத்தகம் என்னை ஒரு பல்கலைக்கழக கவுரவத் துணைவேந்தராக்கிவிட்டதே! குழந்தைகள் பாட புத்தகத்தைவிட, “A really short history of nearly Everything” புத்தகத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தை வகுப்பறைக்கு தைரியமாக எடுத்துச் செல்கிறார்கள். அறிவியல் எவ்வளவு விறுவிறுப்பானது, சுவையானது, அது நம் வாழ்வை என்னவெல்லாம் செய்யும் என்பதை உணராமல் எந்தக் குழந்தையும் பள்ளிக்கல்வியை முடித்துவிடக்கூடாது.

Q: ஒரு பள்ளி, அறிவியலை எப்படி போதிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

A: தக்க வாழ்வியல் காரணமின்றி, பகுத்தறியும் வாய்ப்பு இன்றி ஒரு கேள்விபதில் அம்சமாக மட்டுமே அறிவியல் இடம் பெறுவதை நாம் நிறுத்த வேண்டும். ஒரு வேதியியலாளரைப்போல பாவித்து மாணவரிடம் மடமடவென்று வேதியியல் பாடவேளை களத்தில் இறங்கிவிடுகிறது. இயற்பியலும் அப்படித்தான். ஆனால் ஒரு குழந்தை அவ்விரண்டாகவும் இன்னும் ஆகவில்லை. என்மாதிரி, ஒருபோதும் விஞ்ஞானி ஆகப் போவதில்லை என்பவருக்கு அதில் மூன்றாவதாக ஏதோ ஒருவகை வாழ்க்கை பிணைப்பு இருக்க வேண்டும். இந்தப் பொதுஆர்வம் அறிவியல் வரலாற்றில் மட்டுமே உள்ளது. அதன் கூறுகளைக் கலந்து தராத கல்வியால் பலனில்லை. அறிவியலின் பெரிய திருப்புமுனைகளை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால் வாழ்நாள் முழுதும் ஏதோ ஒரு சிறிய அறிவியல் விஷயத்தை துரத்தியபடி பெரிய திருப்புமுனை ஏற்படுத்தாத பயணங்களை நாம் அறியும்போது அறிவியல் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வகுப்பறை அப்படிப்பட்ட ‘த்ரில்’ கதைகளின் வடிவமைப்பாக அறிவியலை முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. சுவையற்ற வெற்று வார்த்தைகளால் அறிவியல் என்பது, என்னாலும் உங்களாலும் முன்னெடுத்துச் செல்லமுடிந்த, நமக்கு சம்பந்தமான ஒன்றாக இல்லாமல் அறுபட்டு விடுகிறது. அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்காக உலகெங்கும் மத வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட கண்மூடித்தனமான வன்முறையை ஏன் பாடப்புத்தகங்கள் மூடி மறைக்கவேண்டும்? இன்றைக்கு அறிவியலோடு தங்களைத் தொடர்பறுந்து போக யாராவது விரும்ப முடியுமா? குழந்தைகளுக்கு அறிவியலை போதிப்பதைவிட அவர்களாகவே அதனை தேடிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்காத வகுப்பறை அறிவியலுக்கே எதிரானது. ஒருவர்
விஞ்ஞானி ஆவதற்கோ, அறிவியலாளர் ஆவதற்கோ அறிவியல் பட்டம் (Degree) வாங்கி இருக்கவேண்டும் என்பது அவசியமே இல்லை என்பதுதான் என் கருத்து, செய்தி.

Q: ராயல் கல்வியக உறுப்பினர்களாக இந்த 350 வருடத்தில் சுமார் 8000 பேர் இருந்துள்ளனர். உங்களையும் சேர்த்து, அவர்கள் அனைவரது வாழ்வையும் தொகுத்திருக்கிறீர்கள். உங்களை மிகவும் கவர்ந்தவர் யார்?

A: உண்மையில் அந்த வேலையில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நியூட்டன், கிரிஸ்டோபர் ரென், சார்லஸ் டார்வின், ஆல்பிரட் ஐன்ஸ்டீன் என்று ஜாம்பவான்கள் இதில் இணைந்துள்ளனர். ஆனால் இவர்களில் பாதிரியார் ரெவரன். தாமஸ் பேஸ் (Thomas Bayes) தனித்து நிற்கிறார். இவர் ஒரு கணிதமேதை, பேய்ஸ் தேற்றத்தை வழங்கியவர், கணித சக்ரவர்த்திகளில் ஒருவர். ஆனால் இதை எல்லாம்விட தாம்ஸ் பேய்ஸ், தேவாலயம் அறிவியலாளர்களை தண்டிக்க கிளம்பியபோதெல்லாம், அதன் உள்வட்டத்தில் இருந்தபடி, வெளியில் தெரியாமல் தன் சொந்தச் செல்வாக்கினால் பலரைக் காப்பாற்றி விடுவித்திருப்பதைச் சேர்த்து யோசித்தால் ஆச்சரியமாக இருக்கிறது! இவரது கணிதக் குறிப்பாக ‘நிகழ்தகவு சூத்திரங்கள்’ இல்லையேல் இன்று அறிவியல்மய உலகே சாத்தியமில்லை. பருவநிலை மாறுதல், கணினி, பங்குச்சந்தை, வானியல், இயற்பியல் என அது இல்லாத துறையே இல்லை. ஆனால், பொதுவாக, விஞ்ஞானிகளுக்கு தங்களது கண்டுபிடிப்புகளைச் சுவையாக முன் வைக்கத் தெரியாது. ஐன்ஸ்டீன் மட்டும் ஒரு விதிவிலக்கு. நியூட்டன் தொடங்கி டார்வின், ரூதர்ஃபோர்டு, பாலி, கியூரி, மென்டல்… என எல்லோருமே நகைப்பதற்கு நேரமற்ற, ஆனால் நகைக்கத்தக்க அனுபவங்களுடன் வாழ்ந்தார்கள். ராயல் கல்வியகம் இவர்களுக்கு மேடைபோட்டுக் கொடுத்து, எல்லோரோடும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுத்து, பலருக்கு மீதி ஆய்வைத் தொடர நிதி உதவியும் செய்துள்ளது. நியூட்டனின் பிரின்சிபியாவை ராயல் கழகம்தான் வெளியிட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பாதிரியாராக இருந்த தாமஸ் பேய்ஸ் ஒரு ஜீனியஸ். அவரை அடையாளம் கண்டு உறுப்பினராக அவரை ஏற்ற
ராயல் கழகம், எத்தகைய ஏற்றத்தாழ்வும் பார்க்காமல் இன்றுவரை அறிவுத்தேடலை தனது ஒரே அளவீடாகக் கொண்டுள்ளது என்பது பெரிய விஷயம்தான்.

Q: அறிவியலின் எதிர்காலம் எப்படி இருக்கும், பில்?

A: உலகின் ஒரே நம்பிக்கையான எதிர்காலமாய் அறிவியல் மட்டுமே இருக்க முடியும். வறுமை, பிணி, படிப்பறிவின்மை, சுரண்டல், பருவநிலை மாறுதல், சுற்றுச்சூழல் பிரச்சனை, மனிதநேயச் சிக்கல்கள் என யாவற்றுக்கும் தீர்வு கண்டிப்பாக அறிவியல்தான். அறிவியல் கல்வி சார்ந்த ஒருவர் தீர்வின் முன்மொழிவாளராக இருப்பார். அறிவியலை அதன் கண்டுபிடிப்புகளைத் தாக்குபவர்கள் யார் என்று பாருங்கள்: மனிதத் தன்மையற்ற பழம்பெருச்சாளிகள் தங்களது ஆதிக்க அடையாளத்தை உதிர்க்கும்போது எழும் இறுதிக் கூச்சல் அது. அறிவியலில் பிரச்சனை இல்லாமலில்லை. ஆனால் அவற்றின் தீர்வும் அறிவியலில் உண்டு. அதைக் கைவிடுவதில்லை.

Q: இப்படிப் பேசும் நீங்கள் இங்கிலாந்தின் கிராமப்புறத்தைக் காப்பாற்ற (Campaign to Protect Rural England) என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராக இருப்பது முரணாக இல்லையா?

A: இந்த இடத்தில்தான் மற்றவர்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன். இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வின் மீதே அச்சுறுத்தல் விடுக்கும் எதையும் அறிவியலாக ஏற்க முடியாது. கார் கண்ணாடியை இறக்கி, காலியான பீர் பாட்டிலை, டின் பிராண்டியை விட்டெறியும் ஒருவர் விட்டுச்செல்லும் ஆபத்து புவியை அதன் மண்செழிப்பை விவசாய நிலங்களைப் பாதிப்படைய வைக்கிறது. ஒரு பாலிதீன் பை உங்கள் அணு ஆயுதங்களைவிட ஆபத்தானது, இல்லையா? கிராமப்புறங்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு அதை அறிவியல் என்றழைப்பது தவறான அணுகுமுறை. பசுமையை, இயற்கை வளத்தைக் காப்பாற்ற முடியாத அறிவியல் என்று எதுவும் இருக்க முடியாது. அதற்கு நாம் சாதாரண மக்களின் வாழ்விலிருந்து அறிவியலைக் கற்க வேண்டும். எனது “ஹோம்” (Home) புத்தகத்தின் நோக்கம் அதுதான். வீட்டின் இன்றைய அமைப்பு, அதைக் கண்டுபிடித்த இனம் எது? சமையலுக்கு ஒரு அறை, உணவுக்கு ஒரு இடம், இது இப்படி… அப்படி என உருவான வரலாற்றை அந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறேன். அறிவியல். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்கள் மூதாதையர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதைப் பார்க்கலாம்.

Q: வாழ்வின் மறக்க முடியாத அனுபவம்?

A: டார்வின் போலவே (அதுபற்றி எழுதிட) கப்பல் பிரயாணம் அதே வழியில், 178 நாட்கள் மேற்கொண்டது. காலோஃபோகஸ் தீவு. அதை மானுடம் இறுதி வரை இதேபோல காப்பாற்ற வேண்டும்.

***

Bill_bryson_a_short_history

Download A Short History of Nearly Everything (PDF)

***

Thanks to : Bill Bryson , royalsociety.org , ‘புத்தகம் பேசுது’ , Ex-Spic Employees குழுமம். ராஜ சுந்தர்ராஜன்

« Older entries