கிணறு (குறுநாவல்) – ஆபிதீன்

இன்று எனது பிறந்த நாள் (அறுவது வயசு!) & திருமண நாள். வார்த்தை இதழில் வெளியான நெடுங்கதை ஒன்றை இங்கே பகிர்கிறேன்.   வாசித்துப் பாருங்கள்;  இயன்றால் வாழ்த்துங்கள் . நன்றி! – AB

*

abed-dxb-oonay-23oct2015-DSC_0015

கிணறு (குறுநாவல்) – ஆபிதீன்

‘பல்லி எப்படி தலைகீழாக சுவற்றில் ஊர்கிறது ?’ என்ற கேள்விக்கு ‘அது அல்லாஹ்ட ஹொஜ்ரத் (அற்புதம்) சார்’ என்று அந்தகாலத்தில் பதிலெழுதினான் அப்துல் அஜீஸ். அம்பி சாரிடம் பத்துக்கு பத்து மார்க்கும் வாங்கினான். அவனிடம்தான் என் கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்தேன், நடுக்கத்தோடு. ‘ஊரோட இக்கினும்டு சொல்ற பொண்ணா இக்கினும்’ என்ற நிபந்தனையைக் கேட்டு , ‘இந்த ஜென்மத்துல ஒமக்கு கல்யாணம் நடக்காதுங்கனி’ என்று ஏற்கனவே வெடைத்துக் கொண்டிருந்த வில்லங்கம் இப்போது என்ன சொல்லப் போகிறது தெரியவில்லையே…

‘ஊருல எப்பவும் தோட்டத்துல குளிக்கிற ஆளாச்சே… கல்யாணத்துக்கு போறியுமேங்… என்னாங்கனி செய்வா?’ – இழுத்தாற்போல கேட்டான்.

‘அந்தப் புள்ளெ அஸ்மா வூட்டுலதான் கெணறு இக்கிதே’ என்றேன் குழம்பியபடி.

‘அப்படியா?’

‘ம்’

‘அப்ப ஏன் அதுல தள்ளி வுடாம ஒமக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்குறாஹா?’

ஹொஜ்ரத்தான கேள்விதான். பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு. ‘ஆகட்டும்’ என்று பொருள்படும் ‘ஆயிக்கொட்டே’ஐ மலையாள நண்பர்கள் சொல்லும்போது ‘ஆயிக்கு ஏதுடா கொட்ட?’ என்று வினா எழுப்புபவனிடம் பதில் பேச இயலுமா? கோலாகலமாக , அத்தனை பேரும் புலம்ப, என் கல்யாணம் நடக்கத்தான் செய்தது. ஆமாம், கல்யாணத்திற்கு நாலு நாளைக்கு முன் மாமனார் மவுத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி…

‘அல்ஃப் மப்ரூக் யா’ என்று ஆயிரம் வாழ்த்துக்கள் சொன்னான் அரபி முதலாளி. அப்துல்லா-அல்-கால்தி. தபாலாபீஸில்தான் அப்போதெல்லாம் கூப்பிட்டு வரும். நான் ஊரில் கால் வைத்த அன்றே ஒரு மவுத் நிச்சயம் என்று சொல்லிக் கொண்டிருந்த அஜீஸ் , செய்தி தெரிந்து , என் அரபியிடம் சொல்லியிருக்க வேண்டும். ‘இதோ வலீதும், அவாதும் கூட வாழ்த்துச் சொல்கிறார்கள், கேள்’ – அப்துல்லா தன் சகோதரர்களிடம் வேறு கொடுத்தான். ‘மப்ரூக், தொல்லை விட்டது யா அஃகீ… ஃப்ளூஸ் (பணம்) இல்லாத, உடம்பும் சரியில்லாத, மாமனாரால் பலன் என்னப்பா? கலாஷ். பாத்து செய்…சுவய் சுவய். ஓகே?’ என்றார்கள். ‘சுவய் சுவய்…’ என்றால் ‘லேசா , கொஞ்சமா…’ என்று அர்த்தம். மூலத் தொந்தரவில், என்னை மீறி குசு ‘தர்ராட்…புர்ராட்’ என்று பீறிட்டு வெடிக்கும்போதும் அப்படித்தான் தமாஷாகச் சொல்வார்கள். கம்பெனி அக்கவுண்டண்ட் என்று கம்பீரமாக வந்து , கார் கழுவிக்கொண்டிருப்பவனை சிரிக்க வைக்கிறார்களாம்.

இந்த அரபிப் பயல்களுக்கு எல்லாமே நகைச்சுவை. ‘அமெரிக்கி’ சிணுங்கினால் மட்டும் அழுகை வந்துவிடும். பாலஸ்தீன்? ஸூ ஹதா மஷ்கரா.

‘என்ன இது அப்துல்லா , மவுத் நேரத்தில் புண்படுத்திக் கொண்டு…’ என்று நான் கலங்கியபடி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்களின் தாயார் நூரா ஃபோனைப் பிடுங்கை தன் பிள்ளைகளைச் சபித்தபடி எனக்கு ஆறுதல் கூறினார்கள். சவுக்கடி சவுதியில் காலத்தை சற்று ஓட்டினேன் என்றால் அன்னை நூராதான் காரணம். அரபித் திமிரே இல்லாத அபூர்வப் பிறவி. ‘ஹிந்தி மிஸ்கீன்கள்’ கல்யாண செய்தியோடு போனால் லட்சத்தில் பரிசு கொடுக்கும் மனம். நிலைமையை புரிந்து கொண்டு, இன்னும் ஒரு மாதம் சேர்த்து ஊரில் தங்கிவிட்டு வா என்றார்கள். அவர்கள் கொடுத்த Cartier வாட்ச் எப்போதும் அஸ்மாவின் கையை அலங்கரிக்க வேண்டுமாம். ஓடாமல் இருந்தால் என்ன?

கல்யாணம் நடந்தால் அல்லவா? நடக்குமா என்று அனைவருக்கும் குழப்பம். என் வாப்பா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்கள். ‘ஆம்பள மாதிரி தஹிரியமா இக்கெனும்ங்கனி’ என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள். மவுத்செய்தி கேள்விப்பட்டு வந்த , மாமனாரின் ஒரே தம்பியும் தமிழக அரசின் மிக உயர்ந்த பதவியில் (ஏன், டெல்லி கூட போனார்) இருப்பவருமான டாக்டர்மாமாவோ – அடுத்த நாள் இரவு பக்கத்து ஊரில் நடக்கப்போகிற கம்பன்கழக விழாவைப் பற்றிய கவலையில் – பிடி கொடுக்காமல் பேசுகிறாrர்.

வாப்பாவிற்குப் பெருமையே இவரது சம்பந்தி என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில்தான் முதலில் இருந்தது. எனக்கு கல்யாணம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை. இதற்காக என் உம்மாவைக்கூட கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்திருப்பார்கள். ‘சரியான பீடை புடிச்ச வூடாவுல இக்கிது. நல்ல நா பெருநா அன்னைக்கி மவுத் ஆயிக்கிட்டு..’ என்று உம்மாவும் மாமியும் புலம்பியது எனக்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. பேசாமல் , அல்லாஹூத்தஆலா என் உம்மாவைக் கேட்டுத்தான் இனி யார் மரணமும் என்று உத்தரவு போட்டு விடலாம். ஒரே ஒரு பிரச்சனை, அவர்களையும் அவர்களின் மகள்களின் குடும்பத்தையும் தவிர துனியாவில் எல்லோரும் போய்ச் சேர வேண்டியதுதான்.

அல்லது , மருமகள் மட்டும் மவுத்தானால் போதும்…

சம்பவத்திற்கு வருகிறேன், அஜீஸ் குறிப்பாகச் சொன்னது அஸ்மாவைத்தான். மவுத்தானதோ பவுன்மாமா.. உடம்பைப் பார்த்தால் தங்கத்தில் செய்தாற்போல்தான் இருக்கும். அப்படியொரு பளபளப்பு. இறந்துதான் விட்டாரா என்று தெரியாதபடிக்கு இன்னும் இருந்தது. அதே சிரித்த முகம். யாரைப் பார்த்து சிரிக்கிறீர்கள் மாமா?

எத்தனையோ முறை பவுன்மாமாவை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவர்கள் தர்ஹாவுக்கு ஜியாரத்திற்கு போய்விட்டு திரும்பும்போது – என் உம்மா உட்பட – எல்லா வீட்டுப் பெண்களும் வாசல் கதவு வழியாக எட்டிப் பார்ப்பதுண்டு. ‘ராஜா மாதிரி போறாஹா பாரு’ என்பார்கள். ‘உருவிவுட்டா போல ஒரு ஒடம்பு..’ என்று பெருமூச்சு விடுவார்கள். பேரழகரான யூசுஃப் நபியின் சட்டையை, காமம் தாங்காமல் துரத்திக் கிழித்த ஜூலைஹாவின் சரித்திரம்தான் [1] ஞாபகம் வரும். கனவின் நாயகரான எங்கள் யூசு·ப் நபியே, ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் ஏன் தின்கின்றன? காளைகள் கிடைக்காததால்தான்.

பார்க்கும்போதெல்லாம் பவுன்மாமா எனக்கு நெருங்கிய சொந்தம் என்றும் தோன்றும். அது எந்த மாதிரி அதிசய உணர்வு என்று ஆன்மீக வியாபாரிகளைத்தான் கேட்க வேண்டும்.

‘இப்ப போய் பார்க்கக்கூடாது; அது வாழுற வூட்டுக்கு நல்லதில்லே’ என்ற உம்மாவின் முட்டாள்தனமான பிடிவாதத்தையும் அவர்களுக்கு பயப்படும் வாப்பாவையும் (கல்யாணவீட்டில் வாப்பாக்களுக்கு என்ன வேலை, பணம் கொடுத்து முழித்துக் கொண்டிருப்பதைத் தவிர?) அலட்சியப்படுத்திவிட்டு , கோஷாத்தெருவிலுள்ள மைய்யத்தைப் பார்க்கப் போனேன். ‘மாப்புள வர்றாஹா…’ என்று அந்த வீடு பரபரப்பானது. மைய்யத்து, மாப்புள்ளை… பெயரைச் சொல்லாமல் உடம்பை அழைக்கும் வாழ்வின் இரு பெயர்ச்சொற்கள் ஒன்றான வீட்டில், மயக்கமடைந்திருந்த மச்சினனை கட்டிக்கொண்டு உடைந்து அழுதேன். ‘இவ்வளவு குணசாலி மாப்புள்ள கூட இருந்து வாழ கொடுத்து வைக்க¦லையே..’ என்று கூட்டம் அழுதது. ‘இப்படி பேரு வாங்கத்தான் அழுவுனியுமோ?’ என்று குசுகுசுத்து எரிச்சல்படுத்தினான் ஒரு மாப்பிள்ளைத் தோழை. ‘இந்த மூஞ்சிக்கு இப்படி ஒரு பொண்ணா?’ என்றும் யாரோ குசுகுசுத்தார்கள்.

யாரையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. பவுடர் அப்பி பள்ளம் மறைத்த என் முகம் அப்படித்தான். இந்த முகத்தையும் ஒரு பெண் காதலித்ததுதான். ‘மவுலாஇஸ்லா’மாகி சமையலறைக்கு வந்த ராவியத்துநாச்சியா. மதம் மாறி (சரியாக , மாற்றப்பட்டு) இஸ்லாத்திற்கு வந்தவர்களை ‘மவுலாஇஸ்லாம்’ என்பார்கள். சமமாக, ஏன், உயர்வாகவே மதிக்கப்படும் இனம் – பணமிருந்தால். ‘உங்க ‘ஆப்பம்’ எனக்கு பிடிக்கும்’ என்று அந்தபெண்ணிடம் நான் உளறித் தொலைய, ‘நீயும் உன் பன்டிமூஞ்சியும்’ என்று தூக்கியெறிந்து விட்டது. நல்லவேளையாக உம்மாவிடம் போட்டுக்கொடுக்கவில்லை. நல்ல பெண். கல்யாண சமயத்தில் பழசெல்லாம் ஏன் நினைவுக்கு வருகிறது? நினைக்கக் கூடாது. ஆணாலும் சரி, பெண்ணானாலும் சரி. ஹராம்.. அப்படித்தானே அஸ்மா?

வாழ்வில் ஒரேயொருமுறை அணிவதற்காக தைத்த கோட்டுசூட்-ஐ கம்பீரமாக போட்டுக் கொண்டு , எழுத்தாள நண்பனான ரகுவின் மனைவியிடம் ‘எப்படி இருக்கு அண்ணி’ என்று கேட்டபோது ‘கழுத்துக் கீழே ரொம்ப பிரமாதம்’ என்று சொன்னது சாட்சி. ‘அவளுக்கு வாய்க்கொழுப்புடா… டெல்லி குளிருக்கு அலம்பலான காஷ்மீர் போர்வை ஒன்னு வாங்கி பந்தாவா போத்திக்கிட்டு எப்படி இருக்குடிண்டு கேட்டேன். பிரமாதமா இருக்கு ரகு – ராப்பிச்சை மாதிரிங்குறா , தேவடியா, என்னமோ பெரிய ரதி மாதிரி. இதுக்குலாம் நீ நொந்து போவாதே’ என்றான் நண்பன்.

‘Thanksடா’.

‘முதுகுப்பக்கம் ரகளையா இருக்குங்குறேன் – ரகுவின் சாட்சி.

ஆண்சாட்சியும் பெண்சாட்சியும் ஒன்றுதான் எனக்கு.

அஸ்மா பேரழகியென ஊரில் பெயர் எடுத்திருந்தாள். அந்தப் பட்டம் கூட அவளுக்கு சாதாரணமானதுதான். சிறுவயதில், சிவன் கோயிலுக்கு பின்புறம் இருக்கிற எங்களுக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் குளிக்க , வீட்டுப் பிள்ளைகளுடன் ஒன்றாக போகும்போது தெருக்கோடியிலுள்ள வீட்டுத் திண்ணையில் அவள் ‘தோந்து’ எனப்படும் பாவாடையுடன் ‘டப்பாக்கோடு’ விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன் பலமுறை. ஒரு ஜுவாலை நடனமாடுவது போல் இருக்கும் அது. கூடவே அவள் அண்ணன் – பிரகாசமாக எரியும் பெட்ரோமாக்ஸ் லைட் போல. பிறகு , அவள் சடங்காகி, தன் உம்மாவுடன் தர்ஹாவுக்கு போகும்போதுகூட ஓரிருமுறை அவளுடைய கண்களையும், துப்பட்டியைத் தூய்மைப்படுத்தும் தொடை அசைவுகளையும் வெறித்திருக்கிறேன். என்னமோ டாக்டர்மாமா குடும்பத்து பெண் நமக்குரியவள் அல்ல என்ற ஒரு எண்ணம் எனக்கு.

‘எடு’ என்று சொன்னால் ‘படு’ என்று புரிந்து கொள்ளும் எதிர்வீட்டு ஃபாத்திமாக்கள் எனக்கெல்லாம் கிட்டாதவர்கள். அவர்களும் கூட ‘இப்ப சடங்காயிட்டேன்’ என்று முக்கியமான நேரத்தில் ‘அங்கே’ பொத்திக் கொள்கிறார்களாமே… இவர்களை நினைத்து சதா முட்டியடிப்பதை விட்டுவிட்டு பிழைக்க வெளிநாடு செல்ல பம்பாய் ஏஜெண்ட்டுகளை முட்டுவதே கொஞ்சமாவது ‘மருவாதி’ தேடிக்கொள்ளும் வேலை. ‘மனுஷ ஜாதி’ என்று குடும்பத்தில் பெயர் எடுக்க அதுதான் செய்ய வேண்டும். போய்ப் பட்டு, இதோ முப்பத்தாறு வயதில் கல்யாணத்திற்கென்று திரும்பும்போது இந்த மாதிரி கேள்விகள்.
கிணறு…

இந்த முறை கூட உம்மாவுக்கு நான் ஊர்வருவதில் பிரியமில்லைதான்…

‘என்னட வாப்பாவு… சின்னவ காரியத்தையும் முடிச்சுட்டா என்னட கடமை முடிஞ்சிடும்’

‘அப்புறம் வாப்பாவோட ஹஜ்ஜுக்கு போவனும்பியே’

‘நீ புள்ளெ குட்டி பெத்த பொறவு போயிக்கிறேன் தம்பி..’

இப்படியே விட்டால் , நாம் மவுத்தான பிறகுதான் நமக்குப் பெண் பார்ப்பார்கள் என்று உஷாரானதில் – அதுவும் எல்லா நண்பர்களும் வெடைத்ததில் – கல்யாண அதிர்ஷ்டம். ‘கல்யாணம் , அதிர்ஷ்டமா?’ என்று கேள்வி கேட்கக் கூடாது. அஸ்மா அதிர்ஷ்டம்தானே? தவிர, திருமணம் செய்வது நபிவழிகளில் ஒன்று. நபியின் வழிகள் அத்தனையும் – உதாரணமாக அவர்கள் ஈச்சம்பாயில் படுத்ததைப் போன்றும் பசித்திருந்ததைப் போன்றும் – செய்வது சிரமமென்றாலும் திருமணம் சுலபம்தான். சொல்லப்போனால் அது மட்டும்தான் சுலபம்.

நான் அதிர்ஷ்டசாலிதான்.

பாங்காக்கில் கடை வைத்திருந்த அஸ்மாவின் வாப்பா , வியாபாரம் நொடித்துப் போய் , வாதமும் அடித்து, ஊர் வந்த பிறகு… அவளை மணமுடிப்பதாக இருந்த சொந்தக்கார பணக்காரன் மறுத்து விட்டதால் அந்த அதிர்ஷ்டம். வேறு முக்கியமான ஒன்றும் உண்டு. அஸ்மாவை கல்யாணம் செய்பவரின் குடும்பத்தில் ஒரு பெரிய தலை விழும் என்று கவுஸ்ஹஜ்ரத் ‘கணக்கு’ போட்டு சொல்லியிருந்தது. சொல்லிவிட்டு , தன் பெரிய தலையோடு ஹஜ்ரத் மவுத்தாகி விட்டாலும் அந்தக் கணக்கு ஊராரை பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்புறம் , அந்த ‘தக்தீர்’ ‘தக்தீர்’ என்றழைக்கப்படும் விதி. அது ரொம்ப வலியது. ‘கட்ட குட்டையா ஆளு பாக்க ஒரு மாதிரி இந்தாலும் நல்ல குணசாலி’ என்று அது சொல்லி அஸ்மாவை என்னிடம் தள்ளி விட்டது.

சரியாகத்தான் அஜீஸ் சொன்னானா?

டாக்டர்மாமா , கம்பன்விழாவுக்கு போய் அங்கிருந்த கம்பத்தில் ஏறி கம்போடியாவுக்கும் உடனே பறக்கவேண்டியிருந்ததால் – மைய்யத்தை அடக்கிய அடுத்தநாள் காலை – நிக்காஹ் மட்டும் நிச்சயமானது. மஜ்லிஸில் உட்கார்ந்திருந்த அத்தனை ஆண்களும் , அறைகளில் அடைந்தபடி அதை பார்த்துக் கொண்டிருந்து அத்தனை பெண்களும் அன்று அழுது கொண்டிருக்க , யாரோ ஒரு கிழவி மட்டும் ‘மாப்புள்ளையோட சூத்தாமட்டை பால் காச்சுறு ஆப்பை மாதிரில இக்கிது, தட்டுப்பலா (முறம்) மாதிரி இக்கெ வாணாம்?’ என்று லேசான குரலில் சொல்லி என்னை நெளிய வைத்தது. தலையாட்டிக்கொண்டே இருக்கும் இந்தக் கிழவிகளைப் பற்றி ஒரு வேடிக்கை இருக்கிறது. பிறகு சொல்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

அதென்ன இன்ஷா அல்லாஹ், இப்போதே சொல்லிவிடுகிறேன். கிழட்டு அல்லாஹ்தானே கிழவிகளைத் தனியாகப் படைத்தான். தெரியாதா உங்களுக்கு?

சுலைமான் என்ற எமனி (ஏமன் நாட்டவன்) சவுதியில் சொன்னான், ‘கிழவிகளைப் பார்த்திருக்கிறாயா? அவர்களின் தலை மேலும் கீழும் ஆடிக் கொண்டிருக்கும், ‘அது’ இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று. கிழவர்களின் தலை? நல்லா கவனி இந்தியனே, பக்கவாட்டில்தான் ஆடும். அல்லாவே…இனிமேல் வேண்டாம், என்னால் முடியாது..விட்டுவிடு…’ . அவன் சொன்னது சரியா என்று அன்றிலிருந்து பல இடங்களில் ஊன்றுகோலாடு நடப்பவர்களை நானும் உற்றுப் பார்த்திருக்கிறேன். இன்றுவரை சரிதான். அட, தலையை ஆட்டித் தொலையாதே வாசகி…

‘உஸ்ஸ்’ என்று கூட்டத்தில் யாரோ அந்த கிழவியை அடக்கினார்கள். சுப நிகழ்ச்சியை அசிங்கப்படுத்துகிறது என்பதற்காக அல்ல, மரியாதை வேண்டும்.

டாக்டர்மாமா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. சதா குரைக்கும் காவல்நாய்கள் கூட சாந்தியும் சமாதானமும் நிலவ கைகட்டி நிற்கிறதே… மேலும் எத்தனை அரசாங்க அதிகாரிகள் அவரது விரல் அசைவுக்காக சுற்றிலும் காத்திருக்கிறார்கள். தவிர, அவர் அழுதுகொண்டிருக்கும்போது யாரும் அவரை இடைஞ்சல் செய்யக் கூடாது. அவர் அழுவது கம்பனுக்காக இருக்கலாம். அல்லது அஸ்மாவுக்காக இருக்கலாம். நிச்சயமாக எனக்காக இருக்காது.

‘ஒலி’ சொல்லிக்கொடுக்கிறேன் என்று டவுன்ஹாஜி என்னென்னமோ அரபியில் சொல்ல விளங்காத நானும் திருப்பிச் சொன்ன வேடிக்கை முடிந்த பிறகு (மாப்பிள்ளையின் பேண்ட் கிழிந்திருப்பதைப் பார்த்து ‘கிழிஞ்சிருக்கு’ என்று டவுன்ஹாஜி சொல்ல, ‘கிழிஞ்சிருக்கு’ என்று மாப்பிள்ளை – அதுவும் ‘மைக்’கில் சொன்ன கூத்தும் எங்கள் ஊரில்தான் நடந்தது. மாப்பிள்ளை அஜீஸாக இருக்கலாம்) ‘அல்லிகுத்து பைனஹூமா நெல்லு குத்தி சோறாக்கி’ என்று நிக்காஹ் ஓதி முடிக்கப்பட்டது. பிறகு தனியறையில், அஸ்மாவின் கையை நான் பிடிக்க எங்கள் இருவரின் கைகளையும் மேலும் கீழுமாக சம்பந்திகள் பிடித்தபடி சாபு ஃபாத்திஹா ஓதும் ‘கையழைப்பு’ என்ற சடங்கு. மணமக்களின் துடிப்பு கைகளில் பரஸ்பரம் பாய்ந்து கொண்டிருக்கும் அந்த முக்கிய தருணத்தில் – ஃபாத்திஹா ஒதப்பட்டுக் கொண்டிருக்கும்போதே – வயதில் பெரியவர்களின் புத்திசாலித்தனம் வழக்கம்போல கரைகடந்து ஓடியது.

‘வரையிறது மட்டுமல்ல, ரொம்ப எலக்கிய ஆர்வம் உள்ளவரு’ என்று என்னைப் பற்றி டாக்டர்மாமாவிடம் வாப்பா சொன்னார்கள்.

‘கம்பனுக்கு பிறகு யாரும் சரியா எழுதறதில்லையே இங்கே.. ம்ம்ம்.. நீங்க எழுதுவேளா? ‘

‘சுத்தமா வராது மாமா, ஆனா அமுதாபிரபாகர்ண்டா ரொம்ப புடிக்கும்’

‘Kamban sang the story of Rama as of God come down on earth to suffer, chasten, uplift, help and guide men. Apart from this difference in the treatment of the hero, there is considerable difference in the poetic form between Valmiki and Kamban…’

‘இங்லீஸ்ல மாத்தி சொல்லுங்க தம்பிக்கு’ என்றார்கள் வாப்பா.

‘டக்’கென்று கையை எடுத்துவிட்டார் டாக்டர்மாமா . ஒன்றுமில்லை, சாபு ஓதிமுடித்து விட்டார்.

எங்களை தனியே விட்டுவிட்டு கதவும் சாத்தப்பட்ட அடுத்த ஐந்து நிமிடத்தில் (மீதி ‘எல்லாம்’ அப்புறமா…), ‘சலாம்’ சொல்லிவிட்டு அஸ்மாவின் அழுத முகத்தை பார்க்க அநியாயமாக பிரயத்தனப்பட்டேன். பதில் சலாம் சொல்லி ஒரு நொடி முகம் காட்டினாள். ‘இவனா…இவனிடமா?’ என்று அவள் கண்கள் கேட்ட கேள்வியை எப்படி எடுத்துச் சொல்வேன்? இந்த மகத்தான கணத்திற்காக எத்தனை எத்தனையோ கனவுகள் கண்டிருந்த – சவுதியின் பல கேம்ப்களில் , ‘முத்தவா’ பயத்துடன் மூச்சை அடக்கியபடி , பல்வேறு நீலப்படங்களை கண்டு கொதிப்பேறியிருந்த – நான், அந்தரங்கத்தின் கசிவை உணரவேண்டி ஆசையாக நீண்ட நடுவிரலை ‘மவுத்’ என்று கண்டித்தேன். மவுனமாக வெளியில் வந்தேன்.

நிகழ்ச்சிகளை முன்பின்னாக குழப்பிய டாக்டர்மாமா அழுதுகொண்டே என்னைத்தழுவி விடைபெறும்போது, முகத்தில் பெருமிதம் பொங்க என் வாப்பா சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை.

மச்சினன் மட்டும் கண்ணீரோடு வந்தான். ‘நானாவ மவுத்தாக்கிட்டு போறாரு…’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு டாக்டர்மாமாவை திட்டினான்.

‘என்ன முத்துதம்பி, அப்படிலாம் பேசக்கூடாது பெரியவங்கள’

‘சும்மா இரிங்க மச்சான். ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்க பச்சக் குழந்த மாதிரி. எங்க வாப்பாட மவுத்துக்கு இவருதான் காரணம். தாய்ப்புள்ளைங்க பணக்காரஹலா இந்தா அஹ வூட்டு சடங்குலுவ அத்தனைக்கும் ஊருக்கு வந்து பந்தா காமிச்சிட்டு போறது…. இப்ப , சொந்த நானா மவளுக்கு கல்யாணம்…நாங்க ‘மிஸ்கின்’ஆ போனதால கல்யாணத்துக்குகூட வர முடியாதுண்டுட்டாரு – கடைசி நேரத்துல. அதை தாங்கமுடியாமத்தான் வாப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்திச்சி. நல்லா தெரியும் எனக்கு. கடைசி நிமிஷம் வரை கேட்டுக்கிட்டிந்தாஹா, பத்திரிக்கையில பேரு போட்டுட்டேனே, தம்பி வந்துடுவானாண்டு’

‘எப்பவுமே இப்படித்தானா?’ என்றார்கள் என் வாப்பா நம்ப முடியாமல்.

‘ஆரம்பத்துல நல்லாத்தான் இந்தாரு. வாப்பா பாங்காக்குலேர்ந்து வரும்போதுலாம் முக்கா பொட்டி முளுக்க தன்னோட தம்பிக்குண்டு மெட்ராஸ்ல கொடுத்துட்டு, அப்புறமாத்தான் ஊருக்கு வரும்’.

‘அவர் வூட்டுலதானே நீங்க தங்கி படிச்சிங்கண்டு சொல்றாஹலே தம்பி’ .

‘அத்தனையும் வாப்பாட காசு. அஹலுக்கு ஒடம்பு சரியில்லாம போனப்புறம் , மோரையூர் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு கழட்டி வுட்டுட்டாறு எங்களை. ஒரு ஃபோன் கூட போடறதில்லே’ – தேம்பிக்கொண்டே சொன்னான்.

‘ஓ, பொண்டாட்டி வேலையா? சரி, இப்ப வந்துட்டாரு இல்லையா, வுடுங்க’ .

‘வரலேண்டா ஊருல அவரு இமேஜ் போயிடும் மச்சான், தெரியுமா?’ என்றார்கள் அங்கு வந்த அவன் தோழர்கள். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றானது.

மதப்பற்று அதிகமில்லாதவரான , இதனால் என் பெரும் மரியாதைக்குரிய, டாக்டர்மாமாவை பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன். ‘ஆய்வுகள் செய்வதற்கும் அரும்பொருள் சொல்வதற்கும் குர்ஆனை விடுத்து , கம்ப ராமாயணத்தை எடுத்துக் கொண்ட அறிவாளர். அன்றாட வாழ்வில் ஆலிம்களுக்குப் பதிலாக ‘அவாள்’களையே அதிகமாகச் சந்தித்து உரையாடும் ஒப்பற்ற உணர்வாளர்…’ என்று ‘உணர்வு’ பத்திரிக்கை ஒருமுறை அவரைக் கிழித்திருந்ததையும் அறிவேன். ‘எனது ஆற்றலுக்கு முன் உனது ஊர்மாற்றல் எம்மாத்திரம்?’ என பதவியைத் தூக்கியெறிந்து தன் சுயமரியாதையால் ஒரு முதல்வரையே ஜெயித்துக் காட்டிய அந்த துணிச்சல் டாக்டர்மாமாவைத்தவிர யாருக்கு ஊரில் இருந்திருக்கிறது?’ என்று பெருமையாக கடிதத்தில் என்னிடம் கேட்ட என் வாப்பா இப்போது முத்துதம்பியின் முகத்தைப் பார்க்க பயந்தார்கள்.

ஆக, மாமனாரின் மவுத்திற்கு நான் காரணமில்லை. அப்பாடா…

முத்துதம்பியை தைரியப்படுத்தினேன். குடும்பத்தின் வறுமையை நன்றாக உணர்வதாகவும் அதைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னேன்.

நான் சொல்லாவிட்டால்கூட அஸ்மா காண்பித்த அஸ்மாவேலைகள் என்னை சொல்ல வைத்திருக்கும். ‘அஸ்மா வேலை’ என்றால் மை போட்டுப் பார்க்கும் மாந்திரிக வேலை. அப்படித்தான் என் வீட்டில் அபிப்ராயப்பட்டார்கள். உம்மாவின் முகம் பீயில் தோய்த்ததுபோல் இருந்தது. ஹல்வா, குலாப்ஜான் என்று அமர்க்களப்படும் ‘ஜாமப்பசியாற’லுக்கு உப்புரொட்டி வைத்த ஒரே உம்மாவாயிற்றே… காணாததைக் கண்ட மாதிரி ஒரே நாள்ல மாறிட்டானே’ என்று புலம்பித் தள்ளினார்கள். காணாததைத்தான் கண்டேன் என்று விளக்க இயலுமா? என் எழுத்தாள நண்பன் ஒருவன் முதலிரவு முடித்து வெளியே வரும்போது ‘பாத்தாச்சா?’ என்று அவன் பாட்டியா கேட்டார்களாம் வாய்கொள்ளா சிரிப்போடு. அப்படியல்லவா கேட்கவேண்டும்? கட்டுண்டு கிடந்தேன் அஸ்மாவின் அப்பழுக்கற்ற பிரியம் காரணமாக. புதுமாப்பிள்ளைக்கு ஒரு பெண்வீட்டார் செய்கிற செலவு ஒன்று கூட அவளது குடும்பத்திற்கு இல்லை. நாற்பது நாளைக்கும் பிரியாணியும் புலாவ்சோறுமா? வேண்டாம். சாதாரண சோறும் காய்கறியும் , அல்லது நீச்சோறும் மாசி சம்பாலும் போதும் சகியே… வெறும் குப்ஸூம் ஜாத்தரும் தின்றே காலத்தைக் கழித்திருக்கிறேன் சவுதியில். ‘மாப்பிள்ளை பவுன்’ போட வேண்டுமா? இந்தா பணம். தோழ சாப்பாடா? இந்தா பணம். பணியாரப் பணமா? இந்தா பணம். செப்பு, சீர் செனத்தி வகைகளா? இந்தா பணம்… என் உம்மாவை மட்டும் சமாதானப்படுத்து.

ஏன், மவுத் வீட்டின் பலவித ஃபாத்திஹா விருந்துகளுக்கும் மாப்பிள்ளை என் பணம்தான். பாவம், ஏழை அவர்கள் எங்கே போவார்கள்? ஏற்கனவே , வரதட்சணையையும் மறுத்திருந்தேன் ( என்னைக்கேட்காமல் உம்மா இருபதாயிரம் ரூபாய் கறந்து விட்டு – பிரமாதமான புத்தியோடு – இருபது பவுன் நகையை அஸ்மாவின் உம்மாவிடம் இழந்தது தனி கதை, சரி, கட்டுரை). முக்கியமாக, வீடும் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.

அதற்காக , இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு எதிராக பெண்வீட்டார் விரும்புவதையெல்லாம் – உதாரணமாக , தாலி போன்ற ‘கரியமணி’ என்று சொல்லப்படும் மணிகள் கோர்த்த பவுன்மாலையை அஸ்மா
கழுத்தில் அவர்கள் போடுவதற்கு – அனுமதிக்கும் முட்டாள் அல்ல நான். நானே அவளுக்குப் போட்டுவிட்டேன். பவுனுக்கு பணமும் கொடுத்தேன். இந்தக் கரியமணியை நாவூரில் நிக்காஹ் அன்றே போடுவார்கள். சில ஊர்களில் நாற்பது (நாள்) கழித்து. ஏனாம்? ‘ஆட்டம்’ அதிகமாயிருக்கும் என்றுதான் என்று அடிக்கிறார் ஒரு மூத்தாநல்லூர் அன்பர். ஆட்டம் Bottom…

புரட்சிக்காரன் ரகு உலக உண்மையைச் சொன்னான் , ‘நீ ஒன்னாம் நம்பர் கூமுட்டைடா’

‘உன் கூட்டாளியா போனதாலயா?’

‘அதல்ல, நீயும் வாப்பாவும் சம்பாதிச்ச பணம் உன் ரெண்டு லாத்தா(அக்கா) கல்யாணத்துக்கு போயிடிச்சி… சின்னலாத்தா மச்சான் வேற ‘விசா’க்கு காசு கொடுக்காட்டி ‘தலாக்’ண்டு தகறாறு பண்ணிக்கிட்டிருக்கான். காலேஜ் படிக்கிற தங்கச்சி காத்துக்கிட்டிருக்கா… சொல்லு, அவளுக்கு என்னா செய்வே? நம்மள குப்பி அடிக்கிற இந்த சமூகத்துலேர்ந்து அத திருப்பி வாங்கித்தான்டா ஆவனும். இல்லேண்டா நீ பிச்சைக்காரனை விட கேவலமாயிடுவே. ஆச்சி சொல்றதுதான் கரெக்ட்’

‘நாமளே இப்படி செஞ்சா எப்படிறா? பாரு, இன்ஷா அல்லாஹ், ஆம்பளையா லட்சணமா நான் சம்பாதிப்பேன், வூடும் கட்டுவேன்’

‘எது? இந்த எட்டு வூடு நாலு வூடுண்டு கோதாவுல வெறும்பயலுவ வூடு கட்டுவானுங்களே, அதா? நீ சவுதில வாங்குற சம்பளத்துல மசுருலதான் செய்ய முடியும். எப்ப உன்னையெ அரபி வெரட்டுவாண்டு வேற தெரியலே…’

நிச்சயமற்ற பிழைப்பு பற்றி நிஜம் சொல்லும் அவனுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தவிர, காதலித்து கல்யாணம் செய்யலாமென்றால் அதற்கென்று ஒரு அழகு முகம் தேவைப்படுகிறது. நான் எங்கே போவேன் ? முஸ்லீம் இயக்கங்கள் சில போராடத்தான் செய்கின்றன , முகத்தை அழகுபடுத்த அல்ல , ‘கக்கிலி’ (கைக்கூலி) கஷ்டம் ஒழிவதற்கு. அதன் தலைவர்களோ தங்கள் மகன்களுக்கு எளிமையான முறையில் பள்ளியில் நடத்தி, எழுந்து போகும்போது அந்தப் பள்ளியை மட்டும் எழுதி வாங்கி விடுகிறார்கள்.

அஸ்மாவின் தாயார் , ‘தன் கண்ணுக்குப் பொறவு’ வீட்டில் பாதி எழுதிவைப்பதாக சொன்னார்களாம் – எனக்கல்ல, அஸ்மாவுக்கு. மவுத்தானபின் எப்படி எழுதுவது என்று கேட்கக் கூடாது; தன் மவுத்திற்குப் பிறகு அனுபவிக்கட்டும் என்று அர்த்தம். அதற்குமுன் நாங்கள் மவுத்தானால்? அது அல்லாஹ்வின் நாட்டம். அவன் நாட்டமே அனைவரையும் மவுத்தாக்குவதுதான். பேலன்ஸ் பண்ணுகிறான் சார்… போகட்டும், அஸ்மாவின் வீட்டில் புகுந்தேன். எங்கள் ஊர் வழக்கம் அதுதான். சொந்தவீட்டில் கிடைக்காத மரியாதை புகுந்தவீட்டில் கிடைக்குமென்று நிச்சயமாக நம்பலாம். மாப்பிள்ளை சபராளியாக (பயணம் போகிறவராக) இருக்க வேண்டும், அவ்வளவுதான். என் வாப்பா, சின்னாப்பா, பெரியாப்பா, லாத்தா மாப்பிள்ளை , ஊரின் வெளியூர் மாப்பிள்ளைகள் எல்லோரும் உதாரணம்.

பிறந்தவீடே புகுந்தவீடாகும் வினோதங்களும் ஊரில் உண்டு – இறந்தே பிறக்கிற குழந்தைகள் மாதிரி.சமூகப் புரட்சிகள் சாகட்டும், என்னை சகித்துக்கொண்ட அஸ்மாவுக்கு, இத்தனை வருடங்களாக காய்ந்து கிடந்த எனக்கு திகட்டத் திகட்ட,வகைவகையாக, உடலின்பத்தின் உச்சங்களைக் காட்டும் என் அஸ்மாவுக்கு என்னதான் செய்யக் கூடாது? தோளைப்பற்றியபடி தொடையில் உட்கார்ந்து அடிக்கும் அடிக்காகவே ஆயிரம் பொற்காசு கொடுக்கலாம். யாரங்கே..?

அநாவசிய ‘கற்பு’ பிராண்ட் வெட்கமெல்லாம் அஸ்மாவுக்கு கிடையாது. ‘தொட்டவுடனேயே படுத்துக்கிட்டியடி…’ என்று முதலிரவு பற்றி கிண்டல் செய்தால் ‘ஆமா.. எப்படியிந்தாலும் அதுலதான் முடியப்போவுது. அப்புறம் எதுக்கு நேரத்தை வேஸ்ட் செய்யனும்டுதான்’ என்பாள். சபராளிகள் ஊரில் தன் பெண்டாட்டியுடன் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பு மிக்கது என்பதைப் புரிந்தவள். அதற்காக ‘ஃபுல் செட்’ நெக்லஸ் வாங்கிக் கொண்டாள். ‘கட்டிலேறும் பவுன்’ (காரணப் பெயர்தான்) – என் உம்மாவால் – கால்வாசி குறைந்ததை பொறுத்துக் கொண்டாள்.

‘சோத்துக் களறி’ (அபாரமான வீரவிளையாட்டுக்குரிய பெயர்) மட்டும் போதும் என்று – பெருந்தன்மையாக – என் வாப்பாவுடைய கடைசி சேமிப்பின் அடிவயிற்றிலடித்தது ஊர். பக்கா பிரியாணி. ‘மெடிகல்’ தட்டே முன்னூறு போயிற்று பார்த்துக் கொள்ளுங்கள். ‘மெடிகல்’ என்றால் சகோதர மதத்து NonVegகாரர்களைக் கிண்டல் செய்வது. மற்றபடி, பாட்டுக் கச்சேரியில்லை, பரவசக் குலவைகளில்லை, பைத்சபா இல்லை, பையில் காசுமில்லை. ஜேம்ஸ் Band வைத்து, ‘குதிரை மேல் ஊர்வலம்’ விடவேண்டுமென்று உம்மாவுக்கு பெரும் ஆசை இருந்ததுதான். குதிரை பிழைக்கட்டும் என்று தடுத்து விட்டேன். உபநன்மையாக என் குறியும் தப்பித்ததை குறிப்பாகச் சொல்ல வேண்டும்.

‘மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு – எங்கள்
மாநபிகள் நாயகத்தின் மாண்புகளைப் பாடு
ஈமான் கொள்ளு முன்னாலே மற்ற எல்லாம் அதன் பின்னாலே’

– என்று பாட்டு ‘கட்டிய’ (எந்த படத்து மெட்டு , ஞாபகம் இருக்கிறதா?) பைத்சபா தலைவர் பஹதூர்மாமா மட்டும் ‘கல்யாண வூடு இப்படி ஆயிடிச்சே தம்பி..’ என்று புலம்பினார். அதற்காக நூறு ரூபாய் வாங்கிக் கொண்டார். தப்ஸில் இதற்கு ‘சுத்துஅடி’ என்று பெயர். தப்ஸை தலைக்கு மேலே கொண்டுவந்து முகத்தை சுற்றியபடி ஓங்கி ஒரு அறை அறைவது. தொம்…

மவுத் வீடு… இப்படி எங்கள் கல்யாண வீட்டை சொல்வது நன்றாகத்தான் இல்லை. மவுத் என்பது வேறு. மகத்தான சுதந்திரம் அது. எப்படித் தெரியும்? ம்… மவுத்தானவர்கள்தான் என்னிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் கல்யாணம் செய்திருந்தார்கள்.

நிஜமான கல்யாண தினத்தன்று நடந்த ‘தாலிக்கட்டு’ நிகழ்ச்சியில் , ‘மணவறை’யில் (இது பள்ளியறை அல்ல. கள்ளிப்பல¨கை மற்றும் அட்டையில் வர்ணக் கண்ணாடி சில்லுகள், ஜிகினாக்கள் பொருத்திய ஒரு அலங்கார மேடை. ஊஞ்சலும் இருக்கும்) நடக்கும் பல்லாங்குழி, மணமகளை பிரமாணப்பெண் போல மாற்றும் ‘பார்ப்பன’ கோலம் , நெத்தியில் காசு வைப்பது என்று எந்த விளையாட்டுக்களும் இல்லாதிருந்தும் (பெண்ணைத் தூக்கிப் போவது மட்டும் இருந்தது; விழுந்தேன்) பயங்கரமான தமாஷானவளாக அஸ்மா இருக்கிறாள் என்பது தெரிந்து விட்டது – முதல் இரவு முடிந்த காலையிலேயே. நான் நகைச்சுவையாகப் பேசுவதாகச் சொன்னாளே, எவ்வளவு பெரிய தமாஷ் அது… பரிகாசம் செய்வதை பிறப்பிலேயே கொண்ட இந்தப் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒருநாள் என் வீட்டில், மகா மட்டமான குஸ்தி வீடியோ கேஸ்ஸட்டை போட்டு சிரிசிரியென்று சிரித்துக் கொண்டிருந்த , கத்தார் சபராளியான, சின்னமாமாவுடன் பட்டிக்காட்டு மாமியும் சேர்ந்து சிரித்தது. இரவு நடத்திய ‘குஸ்தி’யில் வந்த சிரிப்போ? மாமி தனியாக இருக்கும்போது சந்தேகத்துடன் கேட்டேன், ‘என்னா தெரிஞ்சி அப்படி சிரிச்சி மாஞ்சீங்க?’

‘மாப்புள சிரிச்சா பொண்டாட்டியும் உடனெ சிரிக்கனும்ப்பா’

அதேபோல், மூத்த பெண்களால் சொல்லிக் கொடுக்கப்பட்ட ரெடிமேட் சிரிப்பு சிரிக்கிறாளோ அஸ்மா? இல்லை. காகிதக் கப்பல் ஒன்று செய்து அதன் நடுவிலுள்ள அந்த முக்கோண முனையை நெருடிக் கொண்டே அவளை குறும்பாகப் பார்த்ததில் என்னை உணர்ந்து கொண்டாள் போலும்.

இன்பமலையின் எட்டா சிகரத்தின் மேலே சிறகடித்துப் பறந்த சிச்சிலிப் பறவையையும் பின்னர் அது புகுந்த சிறு பொந்தையும் நினைவுபடுத்தும் இரவு அனுபவம் பற்றி , சுருக்கமாகவும் பூடகமாகவும் , இரண்டே எழுத்தில் , கையில் எழுதிக் காட்ட வேண்டும் என்று ஒரு புது விளையாட்டு தொடங்கினோம். நான் அவள் கையில் ‘சி. பு’ என்று எழுதினேன். பதிலுக்கு அவளோ ‘சி. சு’ என்று எழுதுகிறாள்.

‘என்னா புள்ளே இது. நான் ‘சிகரம், புன்னகை’ண்டுதானே சொன்னேன்?’

‘சிறப்பு , சுகம்’டுதான் நானும் எழுதுனேன் மச்சான்’

கச்சடா சிறுக்கி… ‘பெ.சு’ பார்த்திருந்தால்தானே ‘சி.சு’ சொல்ல முடியும் என்று சந்தேகம் சட்டென்று தோன்றியது. நல்லவள் என்று நம்பிக்கொள்ள வேண்டியதுதான். நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்களே தகுதியானவர்கள் என்று அல்லாமியான் சொல்கிறான்[2]. எல்லா இறை வசனங்களையும் நம்புவது போல இதையும் நம்பு மனமே. அப்படியே , அவளது சொந்தங்கள் பைத்தியம் அல்ல என்றும் நம்பித் தொலை.

அபாண்டமாக நான் பொய் சொல்வதாக நினைப்பவர்கள் இந்த சம்பவத்தைக் கேளுங்கள். ‘செய்மரைக்கார்’ என்று அழைக்கப்படும் தன் பெரிய மாமா வீட்டுக்குப் போகச் சொன்னாள். ‘செய்யாமல் இருப்பதால் மாமி வைத்த பெயரோ? என்று அவளை கிண்டல் செய்துவிட்டுப் போனேன். அரம் போட்டு ராவிக்கொண்டே இருக்காமல் அறவழியிலும் கொஞ்சம் நடந்து பார்ப்போமே… செய்மரைக்கார் செய்யும் அறிவுபூர்வமான விஷயங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன். ‘முந்தா நாளு கடல்தண்ணி ரெயில் தண்டவாளத்தை தாண்டி ஊருக்குள்ளே வந்திடிச்சி ; காரணம் என்னா? எல்லாம் அல்லாஹ்ட கோபம்’ (பின்னே ஊரில் இவர்போல் ஒருவர் இருந்தால் அவனுக்கு கோபம் வராதா?) என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே – ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை – இடையிடையே ‘ஹலால்தீன்…’ என்று சப்தம்போட்டுக் யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த ஹலால்தீன் பூதம் டீயோ காப்பியோ கொண்டு வருகிறார் போலில்லை. ஒருவேளை , கோவைக்காய் ஜூஸில் காப்பி டீ இரண்டையும் கலந்து ஒரு பானம் தயாரித்துக் கொண்டிருக்கிறானா? எந்த வருடத்தில் முடிப்பான்? இல்லை, இந்த கஞ்சன் சும்மா நடிக்கிறார்…

அரைமணி நேரத்திற்கு மேல் தாங்க முடியாமல் நான் வெளியேறி அஸ்மாவிடம் வந்து வீட்டில் அவருக்கு இருக்கும் மதிப்பைச் சொன்னேன். ஒரு சொந்தக்காரனோ வேலைக்காரனோ கூட அவர் கூப்பிட்டால் ஏன் என்று கேட்க மாட்டேங்குறான் புள்ளே…

‘நீங்க ஒன்னு மச்சான், செய்மரைக்காமாமாவுக்கு அந்த மாதிரி ஒரு கோளாறு ரொம்ப நாளா இக்கிது. சும்மா அப்படித்தான் அடிக்கடி கத்துவாஹா. சைக்கூன் பொண்டாட்டி செவுனை செஞ்சிட்டாளாம்’ என்கிறாள்.

இரண்டு நாள் , ஐந்து நிமிடத்திற்கொருமுறை ‘ஹலால்தீன்…’ என்று மனசுக்குள் அலறிக்கொண்டிருந்தேன், பார்த்துக் கொள்ளுங்கள்.

எதைப் பேசினாலும் ‘பணம்’ என்று முடிக்கும் , ஆபத்துக்கு உதவாத ஹைவான்கள். பணம் என்று முடியாவிட்டால் ‘உண்டியல்’ என்று முடியும். விதிவிலக்கும் உண்டுதான் – ஜப்பார்மாமா மாதிரி . நிறைய புத்தகங்கள் படிப்பவர். இலக்கியம் எதையும் நான் படைத்துவிட மாட்டேன் என்பதை தெளிவாக அறிந்திருந்ததால் அளவற்ற பிரியமாக இருப்பார். என்னைப்பற்றி பவுன்மாமாவுக்கு நல்லபடியாக எடுத்துச் சொன்னவரும் கூட. வயதான அவரைப் பார்க்கப்போனால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். ‘வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாது. கல்யாணமும் செய்ய வேண்டி
இருக்கும்’ என்று ஆரம்பித்ததிருந்தது முதல் வரி. ஓடி வந்து விட்டேன்.

எதற்கு வெளியில் போக வேண்டும்? வந்தது அதற்கா? ‘லோலோ’ என்று வெளியில் அலைவதற்கு அஸ்மாவின் மேலோ கீழோ இருப்பதே கூலானது. அதுவும் அவள் வீட்டு கொல்லைப்புறம்… அதற்குமுன் , மெட்ராஸூக்கு போய் வந்து விடலாமே? சிற்றுந்து, பேருந்தை விட ‘தொடர்உந்து’தான் சிறந்தது. பெண்டாட்டியை மடியில் வைத்துக் கொள்ளும் (என் பெண்டாட்டியைத்தான்) சுகமும் கிட்டலாம் – எனக்கு. மாயவரம் தாண்டியபின் இஞ்ஜினின் உந்துசக்தியே அலாதியல்லவா…

வாப்பாதான் எங்களை வற்புறுத்தி மெட்ராஸ் போகச் சொன்னார்கள். மறக்காமல் டாக்டர்மாமாவை போய் பார்க்கச் சொன்னார்கள். பின்னால் எந்த ரீதியிலாவது அவர் உதவுவாராம். அதற்கு நான் அவருக்கு முன்னால் ‘போக’ வேண்டும். போனேன். சோகம் கொஞ்சமும் இறங்காமல், ‘இத்தா'[a]வில் இருக்கும் மாமியையும், பல்லைக் கடிக்கும் மச்சினனையும் கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி – அஸ்மாவுக்கும் ஒரு மனமாற்றமாக இருக்கும் என்ற பெயரில் – அழைத்துப் போனேன். சபராளி மாப்பிள்ளைகளுக்கு இந்த மாதிரி சலுகைகள் கிடைக்கும், பாவம் இந்த ஜந்து எந்த சமயத்தில் அரபுநாடு ஓடி விடுவோமோ என்று..

வெளியூருக்கு எங்கேயும் போகாத பெண்களை நாம்தானே சுற்றிக் காட்ட வேண்டும்? தவிர , இந்த ஒரு பிரயாணத்தை சொல்லியே வாழ்நாள் முழுவதும் ஓட்டி விடலாம்; வதையும் படலாம் – வாப்பா மாதிரி.

வாப்பா ஒருமுறை தன் சொந்த ஊரான அறந்தாங்கி போயிருக்கிறார்கள் – உம்மாவை கூட்டிக்கொண்டு. ஏதோ மவுத் காரியம். திரும்பிவரும்போது பஸ்ஸில் நின்றிருந்த சொந்தக்காரப் பெண்கள் ‘எந்த ஊர் வழியா வந்தீங்க மச்சி?’என்று உம்மாவைக் கேட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை வழியாக என்று உம்மாவுக்கு சொல்லத் தெரியவில்லை. முன்னெ பின்னே வெளியூர் போயிருந்தால்தானே? உம்மாவின் பே முழியைப் பார்த்ததும் ‘மச்சான் எங்கேயும் கூட்டிக்கிட்டு போவலாயாக்கும்’ என்று பெண்கள் கேலி செய்ய உம்மாவின் முகம் ரத்தக் குலையாக வெட்கத்தில் சிவந்து போய்விட்டதாம். வாப்பாதான் பெரிய சத்தத்தைப் போட்டு பெருமையை மீட்டிருக்கிறார்கள் , ‘அட, கோலாலம்பூர் கூட்டிக்கிட்டுப் போனதை சொல்லுங்களேன் புள்ளே..’. உம்மா இன்றுவரை பொருமுவார்கள் வாப்பாவின் பெரும் பொய்யை நினைத்து. தன் கல்யாணத்திற்குப் பிறகு சொந்தங்களைப் பார்க்க வாப்பா சென்றது அந்த ஒருமுறைதான். என் உம்மாவின் ‘கவனம்’ அப்படி.

அரபு நாட்டுச் சபராளிகள் யாரும் ‘கன்ஜூஸ்’ (கருமி) ரகமல்ல. பெண்டாட்டிக்கு தாராளமாக செலவு செய்வார்கள். செலவு செய்ததை எடுக்க பல சபர்களும் செய்வார்கள்.

டாக்டர்மாமாவின் நுங்கம்பாக்கம் வீட்டில் ஒருநாள் தங்கினோமே தவிர அவரைப் பார்ப்பது அவ்வளவு சிரமமாக இருந்தது. பெருந்தலைகளின் கூட்டம். ‘அனுஷ்டானம், நியம நிஷ்டைகள்’ என்றெல்லாம் ஆவிகடனில் எழுதும் டாக்டர்மாமா அலறவைக்கும் தமிழில் புரண்டு கொண்டிருந்தார். ஐயகோ, அரசவைக் கவிஞர் தமிழ்பூதமும் ஆங்கிருந்தார். ‘பொண்டாட்டிய போடும்போது கூட ‘புணர்வோமா பொற்கொடி?’ என்றுதான் கேட்பான்’ என்று ரகு பயங்கரமாக வெடைக்கும் ஆள். கடுப்பாகி மாடிக்குப் போனதும் நல்லதுதான். டாக்டர்மாமாவின் மிகப்பெரிய நூலகத்தைப் பார்த்தேன். அல்லாவே…. அத்தனையும் கம்பன் , கம்பன். நான் அஸ்மாவைப் புரட்ட ஆரம்பித்தேன் ஆனந்தமாக. ஆஹா, ஒவ்வொரு வரியும் உன்னதம். வரிகளுக்கு நடுவேயுள்ள எழுத்தைக் கண்டு எழும்பிய என் கம்பம் சாயவேயில்லை.

ஒருவகையாக , மாமாவைப் பார்க்க பத்து நிமிட அனுமதி கிடைத்தது. சின்னவயசு டாக்டர்மாமா போல இருந்த அவரது மகன்கள் வந்து அழைத்துப் போனார்கள். ‘மச்சான்’ என்று நான் அழைக்கப்பட்டதாகக்கூட ஞாபகம். என் கல்யாணத்திற்கு அவர்கள் வராதிருந்ததும் ஞாபகம்தான்.

இந்தமுறை டாக்டர்மாமாவை அசர வைத்துவிட வேண்டும்.

என் சூட்கேஸைத் திறந்ததுமே மலர்ந்த முகத்துடன் நீட்டிய டாக்டர்மாமாவின் கை , சுருட்டிய ஒரு கார்ட்போர்ட் பேப்பரை கொடுத்ததும் பின்வாங்கியது.

‘என்ன பண்ணியிருக்கேள்…?’.

‘உங்களை வாட்டர்கலர்ல வரைஞ்சிருக்கேன் மாமா’.

இரண்டு கைகளையும் அறையிலிருந்து ராஜ்பவன் வரை நீட்டி ஓவியத்தைப் பிடித்துப் பார்த்தார்.

‘கிட்டெவச்சி பாருங்க மாமா, டீடெய்ல் தெரியும்’.

‘அதெயும் டிராயிங் கீழேயே எழுதிவச்சிடச் சொல்லு அஸ்மா, ஹா..ஹா.’

அட, ஹாஸ்யம் வருகிறதே. இவரை மடக்குவது சுலபம்.

‘பாக்க அப்படியே கம்பன் மாதிரியே இக்கிறீங்க மாமா அதுலெ’ என்றேன். நிஜமாகவே, கம்பனுக்கு கோல்டு பிரேம் கண்ணாடி போட்டால் டாக்டர்மாமா போல்தான் இருப்பான். ‘இப்படி அடிக்கடி சொல்லுவாஹா என்னெட்டெ’ என்று அஸ்மாவும் எனக்கு தூக்கிக் கொடுத்தாள். அதில் அவள் கில்லாடி. மாடி ஊஞ்சலில் அதுதான் நடந்தது.

‘சரியா சொன்னேள். ரொம்ப நன்னாருக்கு… இவ்வளவு டேலண்ட்-ஐ வச்சிக்கிட்டு ஏன் சவுதிக்குப் போறேள்? டே அம்பி, மாப்புள்ளக்கி காப்பி கொடு’ என்று மகனிடம் சொல்லிவிட்டு அரசாங்க வேலையாக அமெரிக்கா பறந்தார். ஐயனுக்கு வந்த காய்ச்சல் கம்பனுக்குத் தொற்றி அது முண்டாசு கட்டியவனையும் முட்டி விட்டதாம். வாசலுக்கு வெளியே வரும்போது ‘அடிக்கடி வாங்க மாப்புளே’ என்று அவர் மனைவியின், அஸ்மாவின் பெரியம்மாவின், குரல் கேட்ட மாதிரி இருந்தது. பிரமை என்றாள் அஸ்மா.

வெளியில் காப்பி நன்றாக இருந்தது. அமிர்தம் போங்கோ…

ஊர்வந்து , கொல்லையில் அமர்ந்ததும்தான் நிம்மதி. அவரை வேலைமெனக்கெட்டு வரைந்ததற்கு கிணற்றருகே அஸ்மா நிற்பதுபோல் அருமையாக வரைந்திருக்கலாம். இயற்கையோடு இயல்பாகப் பொருந்துவாளாதலால் கெஞ்சிக் கூத்தாடி அவளை அரைநிர்வாணமாக்கி ஒரு கோட்டோவியம் விறுவிறுவென்று வரைந்தேன் (கொல்லைக் கதவை சாத்திவிட்டுத்தான்). முறை என்றெல்லாம் பார்க்காமல் என் வழக்கப்படி வலக்கண்ணில் தொடங்கி அதைத் திறந்துவிட்டு கிகிடுவென்று தொப்புள் வரை வந்தவன் ‘தொபுக்கடீர்’ என்று வழுக்கி விழுந்தேன்.

அம்சமான கிணறு…

கொஞ்சம் தண்ணீருடன் இருந்தது அது. அதைச் சுற்றி நிறைய கொய்யா மரங்களும் எனக்கு பிடித்த ஜம்புக்கா பழ மரங்களும் இருந்தன. ஜம்புக்காவிற்கு சரியான தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை. ஜம்புக்காவின் வடிவம் அஸ்மாவின் மூக்கு போல இருக்கும் என்றுதான் சொல்ல முடிகிறது. ஜம்புக்காவின் மென்மையும் வெளிர் பச்சை நிறமும் கொல்லை முழுதும் சூழ்ந்து , அங்கே எப்போதும் குளிர்ச்சி நின்றிருந்தது. கொல்லையை ஒட்டினாற்போல் பிள்ளையார் கோயிலின் பின் பக்கச் சுவர் இருந்தது. அங்கிருந்து பெரிய பெரிய கீரிகள் வரும் என்று அலட்சியமாகச் சொன்னாள் அஸ்மா.

‘ஆ, கீரியா?’ – பயந்து அலறினேன்.

‘பாம்பு இக்கிற எடத்துல கீரியும் இக்கிம் மச்சான்’ – நெஞ்சை இதமாகத் தடவி பயம்போக்கினாள்.

பழைய அடி-பைப் ஒன்று இருந்தது. ‘சகடை’ வீணாகிக் கிடப்பதாக சகடைர்மினி சொன்னதாலும், கிணற்றின் ஆழம் அதிகமானதால் வாளியைவிட்டு கலக்கவேண்டாமென்றும் பைப்பில் அடித்துதான் குளித்தேன். என்ன குளிர்ச்சி…. சிவன்கோயில் குளம், பால்குளம், வண்ணாத்திகுளம், அமராவதி குட்டை என்று தேடித்தேடி குளிக்கப் போன காலங்கள் ஞாபகம் வந்தன. பக்கத்து கிராமமான
மஞ்சக்கொல்லையின் பள்ளிக் குளம்தான் எத்தனை அழகு, பிரமாண்டம்..

தோட்டத்துக் கிணற்றில் வழக்கமாக குளிக்கப் போகும் பிள்ளைகளை, சபர் முடித்து வரும் வீட்டுப் பெரியவர்கள் ஆறு குளங்களுக்கு இழுத்துப் போவார்கள். அதி காலையில் கிளம்பும் பிள்ளைகள் நாங்கள் கும்மாளமடித்துக்கொண்டு, சமயத்தில் குளிக்காமல் , அப்படியே பீசூத்தும் கழுவாமல் , திரும்ப வருவோம். அந்த காய்ந்த சூத்தாமட்டையோடு சுலைமான்பாய் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கைலியை அதக்கிவிட்டுக் கொண்டு தேத்தண்ணி குடித்தபடி…

மணக்கும் பொற்காலம்…எங்கள் வீட்டுக் கிணறோ இப்போது சுத்தமாகத் தூர்ந்து போயிருந்தது.

கட்டாறு பெருக்கெடுத்தோடிய ஊரின் நிலைமை இப்படியாகிப் போனது பக்கத்து கிராமத்தில் பெட்ரோல் எடுக்கும் வடநாட்டுக் கம்பெனிகளால்தான் என்று ஊரில் சொல்வார்கள். இருக்கலாம், பத்து ஊருக்கு சப்ளை செய்யும் என்று புகழப்பட்ட கம்பாகிணறு கூட வற்றி விட்டதாமே… தர்ஹா தோட்டத்திலிருந்த பெரிய கிணற்றிலிருந்துதான் ‘காண்டா தண்ணி’ என்று நல்ல தண்ணீரும் விலைக்கு வந்து கொண்டிருந்தது, மாட்டுவண்டிகளில். தர்ஹாவை வெறுக்கும் நஜாத்காரர்களும் அதன் தண்ணீரை ருசியோடு குடித்தார்கள், ‘எதிர்ப்பு வேறு உயிர்வாழ்வது வேறு’ என்று சமாதானம் சொல்லியபடி. முனிசிபாலிட்டி தண்ணீர் என்ற ஒன்று இருக்கிறதுதான். அது மூன்று மாசத்துக்கொமுறை, முறையாக மூன்று நிமிடம் வரும். ஒழுங்காக மக்கள் வரியைக் கட்டுவது அரசாங்கத்தின் தவறா?

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை…

விதியின் பிழையால் , மூன்று மாதங்கள் மூன்று விநாடிகள் போல் ஒடியது. இடையில் எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்கள், சம்பந்தி & கொழுந்தியா சண்டைகள் நிகழ்ந்தாலும் அதையெல்லாம் இங்கே சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். மாமியார் மருமகள் சண்டையையும் நான் விளக்க வேண்டியதில்லை; அது உலகப் பிரச்சனை. என் சௌதி முதலாளி சொன்ன கதை உதாரணம். கதைதானா அது?

தீயில் மாட்டி முகம் கருகிப்போன அரபி ஒருவன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை அழகாக்கலாம் என்று பார்த்தால் , என்ன கொடுமை, அவன் பெண்டாட்டியின் பிருஷ்ட பாகத்து தோல்தான் மிகச் சரியாக பொருந்துகிறது. அவளிடம் கெஞ்சிக் கூத்தாடுவதற்கு முன்பே ‘அதற்கென்ன அன்பே, தாராளமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று அவள் சொல்லி விட்டாளாம்.

‘எப்பேர்ப்பட்ட தியாகம், உனக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லையே என் இதயமே’

அவள் சொன்னாளாம், ‘நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். என் மாமியார் உன்னை அன்பாக முத்தமிடும்போதெல்லாம் என் சூத்தைத்தான் முத்தமிடுகிறாள் என்று நினைக்கும்போது… எனக்கு ஏற்படப் போகும் அந்தப் பரவசம்…ஆஹா…’

உடனே அரபியென்றால் இப்படித்தான் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது. பளபளவென்ற முகத்துடன் இருக்கும் அப்துல்லா அல் கால்தி அருமையான ஆன்மிகக் கதைகளும் சொல்வதுண்டு. ஆயிரத்தொரு இரவு கதையில் வரும் மன்னர் ஹாருன்-அல்-ரஷீது பற்றி அவன் சொன்னதை இங்கே சொல்லிவிடுகிறேன். மாமன்னர் ஹாருன்-அல்-ரஷீது ஒரு சூஃபியை எதற்கோ நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். அவர் அடிபணியாவிட்டால் தன் அரச அதிகாரத்தைக் காட்டப் போவதாகவும். சூஃபி , மன்னரிடம் சொன்னாராம் , ‘இரண்டு கேள்விகள் கேட்பேன், நீ பதில் சொல்ல வேண்டும். ஒன்று, நீ வேட்டைக்குப் போய் தனியாக மாட்டிக் கொள்கிறாய்; உயிர் போவது போல் தாகமெடுக்கிறது; தண்ணீர் கிடைக்காவிட்டால் செத்துவிடுவாய்; அந்த நிலையில் ஒரே ஒருவனிடம் குவளையில் தண்ணீர் இருக்கிறது; அதற்கு விலையாக என்ன கொடுப்பாய் நீ?’. ‘இதென்ன கேள்வி, என் சாம்ராஜ்யத்தில் பாதியைக் கொடுப்பேன்’. ‘சரி இரண்டாவது… அந்தத் தண்ணீர் உடலிலேயே தங்கிவிடுகிறது – வெளியேறாமல்; மூத்திரம் பெய்தால்தான் உயிர் வாழ முடியும் என்கிற நிலை; தண்ணீர் தந்தவன் அதற்கு சரியான மருந்து கொடுப்பதாக சொல்கிறான்; இப்போது?’. ‘மீதி பாதி ராஜ்யத்தையும் அவனுக்கே தந்து விடுவேன்’. சூஃபி சொன்னாராம் , ‘மூத்திரமாகப் போகும் ஒரு குவளை தண்ணீருக்குக்கூட பெறுமானமில்லாத கேவலமான அரசாட்சியை வைத்துக்கொண்டு என்னை அதிகாரம் செய்கிறாய். இறைவனுக்கு அஞ்சி நட’.

ஆன்மீகம் நன்றாக இருக்கிறதல்லவா? கதையை சொல்லிமுடித்த அடுத்த நொடியில் , ‘ஏ இந்தியக் கழுதையே.. கக்கூஸூக்கு தண்ணீர் ஊற்றி ஏன் கழுவவில்லை?’ என்று அவன் காட்டுக் கத்து கத்துவதும் ‘ஹூக்கும் கரோ ஷேக்..’ என்று அதற்கு நான் தலை வணங்கி பதில் சொல்வதும் அதே ஆன்மீகத்தில்தான் அடக்கம். அவனை விடுங்கள், நான் ஊருக்கு வருகிறேன், தேயிலைத்தூளும் பாலும் சொட்டுக்கூட சேர்க்காமல் அஸ்மா போடும் அற்புதமான டீயின் சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மலாய்மாமாவிடமிருந்து வந்த கடிதத்தின் சில வரிகளை மட்டும் இப்போது உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நீண்டநாட்கள் கழித்து அவர்கள் எழுதும் கடிதம் அது.

மலாய்மாமாவுக்கு என் கடிதம் என்றால் உயிர். திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) கல்லூரியில் சேர்ந்திருக்கும்போது ஒரு முட்டையை வரைந்து , ‘இந்த ஊர்அரிசியின் சைஸ் இது; இதில் நாவூர் அரிசி நானூறு சரியாகக் கொள்கிறது’ என்று முடித்திருந்ததைப் பார்த்து, ‘மச்சான் , உங்க மவனா புத்திசாலியா எழுதுறான்’ என்று வியந்து போனார்களாம். பின்னே, வாப்பா எவ்வளவு குமுதம்-கல்கண்டு வாங்கிக்கொடுத்து இருக்கிறார்கள். ‘மருமவனே..அந்தப் பக்க அரிசி மட்டுமல்ல, அங்கேயுள்ள நம் சொந்தங்களின் மனசும் அவ்வளவு பெரிது, போய் பாருங்கள்’ என்று எழுதியிருந்தார்கள். தன் மகளை எனக்கு கட்டிவைக்கக் கூட பிரியம் அவர்களுக்கு…

‘சோவாய் சுஜாதாவாய் சுடர்விட்டெரிந்து மூவாத் தமிழில் முன்னேற வாழ்த்துகிறேன்’ என்று வாழ்த்தும் மலாய்மாமா… தான் கட்டிய வீட்டுக்கு ‘தாருர் ரஹ்மத்’ எனும் பெயரை ஒதுக்கி ‘அருளகம்’ என்று அழகாகப் பெயர் வைத்ததால் அராஜக ஜமா-அத்தின் வெறுப்புக்கு ஆளான மாமா…

‘அறிவார்ந்த மாப்பிள்ளைக்கு..
…..

அன்பு செய்வதற்கும், அரவணைத்துப் போவதற்கும் அப்படி என்ன இடைஞ்சல் இப்போது வந்திருக்கிறது உங்களுக்கு?

ஒரு தாய் எப்படிப்பட்டவளாக இருந்தாலும் நாம் திருப்திப்படுத்தியே ஆக வேண்டும் – அங்கீகரிக்கப்பட்ட முறையில். 1. பணத்தைக் கொண்டோ 2. பணிவிடைகள் செய்தோ 3. பேச்சின் மூலமாகவோ (புத்திசாலி இவன்). புதிதாக ஒன்றும் உங்கள் வீட்டில் நடந்து விடவில்லை. இதெல்லாம் ஏற்படக் காரணமே , மகனுக்குத் தாயின் பெருமையை பல இடங்களில் சொன்ன இறைவனின் பெருமையை அந்தத் தாய் தன் மகனுக்குச் சரியாகச் சொல்லாததுதான். புரிந்து நடந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதுதான் இந்த வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் உகந்தது.

குடும்பத்தின் முதல் ஆண்பிள்ளையான நீங்கள் அந்தத் தகுதியை மட்டும் தற்காத்துக் கொள்ளும்படி தாழ்மையோடு வேண்டுகிறேன்.

உங்களை நம்பித்தான் எல்லோரும்..

வஸ்ஸலாம்’

அஸ்மாவும் தாய்தானே மாமா…. இடைஞ்சலாக இப்போது இருப்பது உம்மாவா அஸ்மாவா என்ற பட்டிமன்றத்தில் மனம் செல்லவில்லை. அஸ்மா வந்ததிலிருந்து எதிர்(பார்)ப்புகள் அதிகமானது மட்டும் தெரிந்தது. நண்பன் ரகு திருமண அன்பளிப்பாகக் கொடுத்த அருமையான ·போட்டோ ஃப்ரேம்-ல் நானும் அஸ்மாவும் சேர்ந்து இருந்ததைக் கூட பொறுக்காமல் வீசியெறிந்து உடைத்த உம்மா… புதிராகத்தான் தெரிந்தார்கள். என்ன ஆயிற்று உம்மாவுக்கு? இவர்களிடமிருந்து – வாப்பா வழியாக – குறைகள் பரவும் வேகம் கோபத்தை வரவழைத்தாலும் அஸ்மாவை கடிந்து கொள்ள மனம் ஏனோ ஒப்பவில்லை. அவள் வயிற்றில் இன்னொரு சபராளியோ அவன் மனைவியோ உருவாகியிருந்தார்கள். ஏதோ என்னால் முடிந்தது..

‘பிஸ்மி’ சொல்லி உள்ள வுட்டா பிச்சிக்கிட்டு புள்ள வரும்புளே…’ என்பார் பாவன்னா ஆலிம் தன் பயானில். (எடுக்கும்போது ‘அல்ஹம்துலில்லாஹ்’ சொல்லியிருக்க வேண்டும் அதற்கு என்று நினைக்கிறேன்). உடலுறவுக்கு முன் செய்யும் பிரார்த்தனை இதுதான், ‘பிஸ்மில்லாஹி அல்லாஹூம்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா’. ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பாம். பெண்ணா வெறும் பொறியா? ‘காமப் பாழி கருவிளை கழனி தூமைக் கடைவழி தொளைபெறு வாயில்’ என்று புலம்பும் சித்தனும் எதிலிருந்து வந்தான்? கடுப்பில், ‘சொல்லி முடிப்பதற்குள் புள்ளை வந்துடாதா?’ என்றேன். ‘ஹலக்னா ஹலக் மாஹலக்’ண்டா ‘கலக்குனா கலக்கு மாவ கலக்கு’ண்டு சொல்றியே நீ , நரஹத்துக்குத்தான் போவா’ என்று ஃபத்வா கொடுத்துவிட்டார். ‘பத்துபைசா பெறாத’ ஃபத்வா. ச·பர் நிச்சயமாகி விட்டது.

அது கிடக்கட்டும், கோஷாத்தெரு மாப்பிள்ளைகள் ‘கோஷா’வாக இருக்கக் கூடாது. ‘கோஷா’ என்றால் துப்பட்டிப் பெண்ணைக் குறிப்பது மட்டுமல்ல, ‘ஆண்மை’யற்றவனையும் ஊரில் அப்படிச் சொல்வார்கள். இந்தத் தெருவில் யாரோ ஒரு மரைக்காயர் எப்போதோ அப்படி இருந்ததால் அந்தப் பெயர் வந்ததா என்றால் ‘இல்லை’ என்பதுதான் பதில். இது ‘கோஷா’த்தெருவே அல்ல, அஜ்மீர் அவுலியாவான ஹாஜாவைக் குறிப்பிடும் ‘க்வாஜா’ தெருதான் அப்படித் திரிந்து விட்டது , பணக்காரர்கள் வாழும் ‘ஏழை லெப்பைத் தெரு’ , சங்கடப்பட்ட பணக்காரர்களால் ‘ஏழு லெப்பை தெரு’ என்று மாற்றப்பட்டது மாதிரி. சரி, ‘லெப்பை’ என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? ஏய்…இந்த விவரிப்பெல்லாம் யாருக்கு தேவை, பளிச்சென்று சொல்லுடா என்று நீங்கள் பண்போடு பகர்ந்தால், கழுதை என்று எழுதும்போதெல்லாம் அது என் கதையாகுவது போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கோஷாத்தெரு கிணற்றைப் பற்றி நான் சொல்லும்போது கோஷாத்தெருவையே குறிப்பிடுகிறேன். கோஸ்லாதெருவையல்ல. ஊரின் மேற்குப்புறத்திலுள்ள சுடுகாட்டுப் பக்கமிருக்கும் கோஸ்லாதெருவிலுள்ளது மரணக்கிணறு. மிகப்பெரியது. ஹந்திரி, ஹத்தம் போன்ற திருவிழா காலங்களில் உபயோகப்படுவதற்காக நிரந்தரமாகவே வைத்திருக்கிறார்கள்.

பெருந்துளைகள் குறித்து அதிகம் கவனம் தேவை. அவைகள் ‘கருந்துளை’களை விடவும் மர்மம் பொருந்தியவை. அவ்வளவு தூரம் பெரிதாகப் போவானேன்? ஒரு நல்ல கேமராவின் – Aperture எனப்படுகிற – ஒளி புகும் சின்னஞ்சிறு துளையை எடுத்துக் கொள்வோம். சுருக்கி , விரியவைத்து , ஒளியை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தலாம் தெரியுமா? மனிதர்கள் நடமாட்டமுள்ள மியூசியம் போன்ற அசையா கட்டிடங்களை , Tripod வைத்து, சரியான (slow) Shutter Speedல் ‘க்ளிக்’கினால் , அசைந்து நகரும் மனிதர்களை அப்படியே மறைய வைத்து விடலாம்; நிலையானவை மட்டும் நிற்கும். ‘முட்டைஓட்டில் பிரிண்ட் செய்வதெப்படி?’ என்று முதல்பாடம் ஆரம்பிக்கும் புகைப்படக்கலை பற்றிய புத்தகத்தில் கண்ட ‘டெக்னிக்’ அது. இதைவைத்து ‘சுஜாதாவாய்’ ஒரு கதை எழுதிப்
பார்த்தேன். கலையில் மன்னனாகி, தஞ்சை பெரியகோவிலை எடுக்க முயற்சியும் செய்தேன். கேமரா மறைந்து விட்டது – கதையோடு.

காலத்தையும் நேரத்தையும் குழப்பும் மாயத்துளைகள்.

இன்னும் ஓரிருநாளில் அரபுநாடு திரும்ப வேண்டும் – புதிதாகச் சேர்ந்த பெரும்கடன்கள் அடைக்க. எந்தக் கடனை அடைக்க பிறந்து தொலைத்தோம் என்பதுதான் தெரியவில்லை. ஊரில் இருந்து முயற்சிக்கலாம் என்று நினைத்தால் சத்யன்அந்திக்காடின் சினிமாவான – ‘வரவேழ்ப்பு’ (திரைக்கதை : சீனிவாசன்) சிரிப்பும் கண்ணீருமாய் உண்மை சொல்லி உதைத்து அனுப்புகிறதே.. ஏழு ‘கொல்லம்’ (வருடம்) கழித்து அரபுநாட்டிலிருந்து வரும் மோஹன்லால் தன் சொந்தங்களின் துரோகங்களால் படும் துயரத்தையும், ‘ப்ரதீசிச்சவரிலின்னும் எனிக்கொன்னும் கிட்டியில்லா – ஸ்நேகம் போலும்’ என்றபடி அவன் திரும்புவதையும் மறக்க ஏழேழு ஜென்மம் வேண்டும்; ஓ, நான் முஸ்லிமா, மறுமைநாள் வரை மனதில் நிற்கும். தயவுசெய்து பாருங்கள் . லட்சக்கணக்கான தமிழர்கள் ‘துளைகுடா வளைகுடா’வில் இருந்தும் அவர்தம் துயரம் சொல்ல ஒரு தமிழ்சினிமா கூட இதுவரை வந்ததில்லை. ஏன்? நான் எடுக்கப் போவதால்தான் – மறுமையில்.

சென்றமுறை ஊர் வந்து திரும்பும்போது ரயிலடியில் வழியனுப்ப வந்த கூட்டத்தைப் பார்த்து விட்டு , ஜலால்நானாதான் ‘டக்’கென்று ஒரு தாளில் கிறுக்கினார். கவனித்த நான் அதைப் பிடுங்கிப் பார்த்தால்… கவிதை. கிறுக்குவது கவிதை என்றும் வைத்துக் கொள்ளலாம் அல்லது புடுங்குவது கவிதை என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் புண்ணாக்கு இலக்கியங்களும் அதன் வடிவங்களும் பெயர்களும், உதட்டைப் பிதுக்கிக்கொண்டு ‘இது இப்படித்தான் இருக்கவேண்டும்’ எனும் விமர்சனப் பார்வைகளும்… அசப்பில், ஒரு சபராளிப் பேயனின் முகம் போலவே இருக்கிறது.

கோபிக்கவேண்டாம் கவிஞர்காள், பிரிவின் வலியில் ஏனோ பிறாண்டி விட்டேன்.

‘பரோலில் வந்து
போவது போல
வாழ்க்கை…
மீண்டும்
சிறைச்சாலைக்கு
பயணம்…
அட
இதற்கும்
வழியனுப்ப
இத்தனை மனிதர்களா?’

படித்த வினாடியில் வீட்டுக்கு ஓடி விடலாம் என்றுதான் மனது துடித்தது. கவிதை எழுதியவரே என்னைத் தூக்கி ரயிலுக்குள் எறிந்து விட்டார். பின் யாரிடம் புலம்ப? துக்கப்பட்டு எழுதலாம்; அதற்காக விதியை மாற்றலாமோ? நாவூர் முஸ்லீம்களின் பெருமை என்னாவது; அவர்களுடைய மனைவிகளின் திரவம், இல்லை, ‘திரவியம்’ என்னாவது?

குடும்பத்துடன் வாழ துபாய் ஏற்றது என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வருடம் வரை என்று சொல்லவில்லை. இதற்கு வேறு செலவு செய்தா போக முடியும்? பின், அந்த செலவை எந்த ஜென்மத்தில் அடைப்பது? ‘பேண்ட்’டோடு தூங்குபவர்கள் காலையில் எழுந்ததும் , ‘யார்ரா எனக்கு லுங்கி மாட்டியது?’ என்று கேட்கிற ‘சுதந்திர’ துபாய்க்கு போய்த் தொலைந்தாலும் , ‘என்னா இருந்தாலும் சவுதி சம்பாத்தியத்துல ஒரு ‘பரக்கத்’ இருந்திச்சி’ என்று புலம்பும் துர்ப்பாக்கியசாலிகள் இல்லையா அங்கே? எத்தனை ஆயிரம் பேரை நான் காட்ட?

எல்லா அரபு நாட்டு மன்னன்களுக்கும் மூன்றாம் உலக மனிதர்களை பன்றிக் கூட்டத்தில் சேர்த்துவிட்டு வெள்ளைக்காரன்களுக்கு சொர்க்கத்தைக் காட்டும் போக்கு. முன்னூறு ரியால் சம்பளத்திற்காக பொசுக்கும் வெயிலில் உழைக்கும் – கண்டெயினர்களில் வாழும் – லட்சக்கணக்கான பேர்கள் , மூவாயிரம் ரியாலுக்கு ஒரு ‘ஷூ’ வாங்கும் திமிரும் திறனும் படைத்த ஆயிரமாயிரம் அமெரிக்க பிரிட்டிஸ்காரன்களை சகித்தே தீர வேண்டுமென்று வேதங்கள் அனைத்தும் வெட்கமே இல்லாமல் சொல்கின்றன (அதற்காக , ‘எல்லா காலத்திற்குமேற்ற’ இறைவசங்களில் ‘கண்டெயினர்’ ‘ஷூ’ என்றெல்லாம் தேடக்கூடாது).

பொறுமையாக இருக்கவாம், மண்ணாங்கட்டி… எதைப்பற்றி நமக்கு முழுமையான ஞானம் இல்லையோ அதில் நாம் பொறுமையோடு இருப்பது அவசியமாம்; குர்-ஆன் அப்படித்தான் சொல்கிறது. மூஸாநபி அவர்கள் ஹிலுறு நபியின் செயல்களைப் புரிந்து கொள்ள இயலாமல் தடுமாறும் அந்தக் கதை நான் அடிக்கடி ரசித்துப் படிப்பதுதான் [3]. அற்புதமான கதை. கதைக்குள் கதை. அத்தியாயத்தின் பெயர் ‘கஹ்ஃபு’ (குகை) என்று அமைந்திருப்பதையும் ரசிப்பேன்.

இனியொரு விதி செய்வோம்; இன்னொரு அரபுநாடு போவோம்.

இந்தவகையில் , சொந்த நாட்டில் கஷ்டப்பட்டுப் படித்து (தெருவிளக்கில் படித்ததாகச் சொல்வார்கள் , எரியும்போதுதான்) அங்கேயே இவ்வளவு தூரம் உயர்ந்த டாக்டர்மாமா உண்மையிலேயே ‘கிரேட்’தான். இஸ்லாமிய இளைஞர்களுக்கு வழிகாட்டி என்று கூட சொல்லலாம் (‘படிப்பு விஷயத்தில் மட்டும்’ண்டு பிராக்கெட்ல சொல்லுப்பா என்கிறார் ஒரு மவுலவி). அதற்காகவே நான் சல்யூட்டும் வைக்கலாம். அவருக்கும் கூட வாழ்வின் வலிகள் உண்டு. யாருக்குத்தான் இல்லை?

கவுஸ் ஹஜ்ரத்-ஐ ஒருமுறை பார்க்க வந்து ஒரு கேள்வி கேட்டாராம் டாக்டர்மாமா , ‘ஹஜ்ரத்.. மவுலவிகள் மாதிரி கொழப்பாம பதில் சொல்லுங்கோ…’

‘இன்னும் கேள்வியே நீங்க கேக்கலையே’

‘சரி , ‘எதையும் தாங்கும் இதயத்தைத் தா இறைவனே’ண்டு எங்க தோப்பனார் மாதிரி பிரார்த்தனை பன்னுறேன்… எல்லாத் துன்பங்களையும் வா வாண்டு கூப்புடற மாதிரி இது போய்டாதோ?

சிரித்துக் கொண்டே ஹஜ்ரத் சொன்னார்களாம் , ‘அப்படி ஒரு துஆவே இருக்கு குர்-ஆன்ல. வாஸ்தவம்தான். எது வந்தாலும் தாங்க ரெடியா இரிக்கனும். எதெ மாத்த முடியுமோ அத உசுரை வுட்டு மாத்தனும். அடைய முடியாததை மறந்துடனும்; ஏத்துக் கொள்ளனும். எது எது மாத்த முடிஞ்தது, மாத்த முடியாததுண்டு தெரிஞ்சிக்குற அறிவும் தாங்குற ஒரு இதயமும் வந்துட்டா , வர்ற துன்பம் துன்பமாகவே இரிக்காதுங்க. தாங்க முடிஞ்சா அது துன்பமே அல்லவே.’

‘கம்பன் கூட ஒரு பாட்டுல…’

‘ஒங்க எலக்கியத்தையெல்லாம் தூக்கி குப்பையில போடுங்க. சாதாரண பொம்பளை சொல்லுவா ‘கண்ணு கசங்காம இக்கினும்’டு. நமக்கு உள்ளம் கசங்குறதுதான் அவளுக்கு கண்ணு கசங்குறது. எதுக்கெடுத்தாலும் கண்ணீர் வந்தா உள்ளம் திரளாது. யாருக்கு உள்ளம் திரளவில்லையோ அவருக்கு சக்தி திரளாது. அதனால நெனைச்சத அடைய முடியாது. மனசுல பாரம் வந்தா கல்லு மாதிரி இருந்துட்டு ஆண்டவண்ட்டெ கேளுங்க; பாரத்தை தாங்குற வலிமை கெடைக்கும்’

தாங்கமுடியாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டு எழுந்து போயிருக்கிறார் டாக்டர்மாமா. என்ன வேதனையோ, யாருக்குத் தெரியும்? அது ஹஜ்ரத்திடம் போதனை கேட்கவந்த வேதனையாகவும் இருக்கலாம். எல்லோருக்கும் கஷ்டம் கொடுக்கும் இந்த இறைவன் மாபெரும் சூழ்ச்சிக்காரன். ‘வ மக்ருவ் மக்ரன் வ மக்கர்னா மக்ரன்'[4] என்று ஓதும்போதே இவன் ரொம்ப மக்கர் பண்ணுகிறவன் என்று தெரியாமல் போவது நம் தப்பு. அவனே உண்டாக்குவதும் பிறகு புலம்புவதும் எச்சரிக்கை விடுவதும்… ‘வைகைப்புயல்’ வடிவேலு கெட்டான்.

இந்த அளவில் நம்மை வைத்திருக்கிறானே என்று நானும் பெருமூச்சு விட்டபோது மச்சினன் வந்தான்.

இவனைப்பற்றி நான் அதிகம் சொல்லவில்லையல்லவா?

அஸ்மா போலவே நகைச்சுவை உணர்ச்சி முத்துதம்பிக்கும் உண்டு. சின்னவயதில் , அம்மி குத்துகிறேன் என்று இவன் மண்டையில் அஸ்மா விளையாடிய ‘விளையாட்டு’க்கு அப்புறம்தான் அது வந்ததாம். இதை அவள் சொன்னதிலிருந்து இரும்புத் தொப்பி போட்டுக்கொண்டுதான் நான் இணைவதே வழக்கம்.

முத்துதம்பியுடன் நான் ஒருமுறை – அஸ்மா வீட்டுக்கு டி.வி பொட்டி வாங்குவதற்காக – நாகப்பட்டினம் பேங்கிற்குச் சென்றேன் (இதோடு என் சேமிப்பு காலி). அரசாங்கம் மாதிரியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் காட்டும் ஒரு அடப்பு சேனலைப் பார்க்கும் ஆர்வம் எங்களுக்கு. எப்போதாவது தெரிந்தால் அது லென்ஸை துடைத்து எடுத்ததாக இருக்கும். ‘வறுமைக்கோட்டுக்கு கீழே இக்கிற சேனல் – நம்மைப்போலவே’ என்று முத்துதம்பியால் வெடைக்கப்படும் அந்த சேனைலைக் காட்டும் வினோதமான பொட்டியை வானத்திற்கு இணைப்பு கொடுக்கும் ஆண்டெனாவுடன் வாங்கிவிட்டு வெளியாகும்போது, அந்த பேங்க் இருந்த லாட்ஜின் மூன்றாம் மாடியிலிருந்து காதுகுடையும் காட்டன் பட் ஒன்று காற்றில் மெ ள் ள… மெ ள் ள மிதந்து வந்து எங்கள் காலடியில் விழுந்தது. மஞ்ச மஞ்சேண்டு பஞ்சு….

நாகரீக மனிதர்களான நாங்கள் அதை கவனிக்காதது மாதிரி இருந்தால் அடுத்த ஐந்து நிமிடத்தில் மறுபடியும் ஒரு காட்டன் பட். இந்த முறை கரும் பழுப்பு நிறத்தில்… முத்துதம்பி என்னிடம் தன் சந்தேகம் கேட்டான் , ‘காதுலதான் உடுறானா ? அல்லது…’

மவுத் வீட்டின் துக்கம் இவனுடைய கலகலப்பால்தான் மாறிற்று. இவனுடைய நண்பர்களுக்கோ என்னைக் கண்டால் ஏக மரியாதை. தெருவில் நின்று பேசிக் கொண்டிருப்பவர்கள் என்னைப் பார்த்ததும் சடாரென்று உட்கார்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் குடிப்பார்கள். அத்தனை தோழமை என்று சொல்ல வருகிறேன்.

என்னுடைய நண்பர்கள் ஊரில் பெரிய படிப்பு படித்தவர்களாகவும், இங்கிலீஷ் பேசுபவர்களாகவும் இருந்ததுதான் மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கவே முத்துதம்பியைத் தூண்டிற்று என்று – அவன் வாயாலே கேட்டபோது – ஆச்சரியமாகத்தான் இருந்தது. நிஜமாகவே ஆங்கிலம் தெரிந்தவர்களுடன் என் தோழர்கள் , பேச மாட்டார்கள் என்பது இவனுக்குப் புரியவில்லையே…. நான் விளம்பர பேனர்கள் எழுதுவதையும் பார்த்திருக்கிறான். குடும்பத்தைக் காப்பாற்ற எந்த ஏணியிலும் மச்சான் ஏறுவார் என்று தோன்றிவிட்டது. உயரமான அஸ்மாவிடம் கேட்க , அவளுக்கும் சம்மதம். கபுல் (சம்மதம்)? கபுல்.

ஏறு.

கொடுத்து வைத்தவன்தான் நான். நண்பன் அஜீஸின் ஞாபகம்… அவனுடைய மச்சினன் – ஊரிலிருந்து தன் மச்சானுக்கு – ‘கடற்கரைப் பக்கத்தில் பத்து ஃப்ளாட் வருது.. அதிலொன்னு கண்டிப்பா நீங்க வாங்குங்க’ என்று தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். என்னா புரியமும் பொறுப்பும் என்று அஜீஸ் புளகாங்கிதமடைந்தபோதுதான் தெரிந்தது, இவன் அதை வாங்கினால் மச்சினனுக்கு கிடைக்கும் பெரிய கமிஷன். ஒரு ஃப்ளாட் ஃப்ரீ… எங்கே அப்படியென்று அடித்துப்பிடித்துக்கொண்டு ஓட வேண்டாம், பத்து ஃப்ளாட் விற்றுக் கொடுத்தால் ஒன்று அவனுக்கு ஃப்ரீ என்று அர்த்தம். பத்துபேரை ஹஜ்ஜுக்கு அனுப்பி ஒரு ஹஜ் செய்யும் அல்லது ஒரு லட்சம் கமிஷன் வாங்கும் ஹஜ்ரத்கள் போல ஒரு ஏற்பாடு, அவ்வளவுதான். நீங்களும் உங்களும் தேடலும்…

‘நானே வில்லங்கம்; என்னையே மிஞ்சிட்டானே’ என்று அதிர்ந்து விட்டான் அஜீஸ். ஆயிக்கொட்டே.. என் முத்துதம்பி அப்படியல்ல. நான் பிரியப்போகும் துக்கம் இப்போதே அவன் கண்ணில் தெரிய ஆரம்பித்து விட்டது.

‘மச்சான்’

‘சொல்லுங்க முத்துதம்பி, பணத்தேவை ஏதாச்சும்? ‘லோன்’ எடுத்துக்கலாம்; டாக்டர்மாமாவெ தூக்கிப் போடுங்க, நான் இக்கிறேன்’

அஸ்மா என்னை பெருமையாகப் பார்த்தாள். இன்று உண்டு இரட்டிப்பாக…

எப்போது பார்த்தாலும் இதே நினைப்புதானா என்று என்னை ஏசுபவர்கள் , இதற்கு அல்லாஹ் சிறந்த வெகுமதி அளிப்பதாக ஏந்தல் நபி சொன்ன ஹதீஸை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ள வேணும். விலக்கப்பட்ட வழியின் மூலமாக தன் இச்சையைத் தீர்ப்பவன் பாவம் செய்தவன் என்றால் சட்டபூர்வமான வழியில் செய்பவன் வெகுமதி பெறுபவன்தானே என்று தர்க்கம் செய்த எங்கள் தாஹா நபி… இந்த உலக இன்பங்களில் அவர்களுக்கு மிகவும் விருப்பமானவை நங்கையும் நறுமணமும்… சித்தரை நேசிக்காதவர் சிந்தனையாளராகார் என்பதுபோல அத்தரை நேசிக்காதவர் ஆன்மிகவாதியாகார்.

எனக்கும் நறுமணம் பிடிக்கும். ரொம்பவும் குள்ளமான நான் கொண்டுவந்திருந்த பெருவிரல் சைஸ் செண்ட் பாட்டிலைப் பார்த்து ‘ஹை… மச்சான் மாதிரியே இக்கிதே…’ என்று கேலி செய்த மச்சினனின் மனமும் பிடிக்கும்.

‘அதில்லே மச்சான், அடுத்த மாசம் எனக்கு கல்யாணம்’.

‘அட, மர்ஹபன் மர்ஹபா’

‘முன்னாலே சொல்லலாம்னுதான் நெனைச்சேன், அடுத்த வருஷம் கல்யாணம் வச்சிக்கலாம்டு அட்வான்ஸ் கொடுத்தாஹா.. இப்ப , பொண்ணு லண்டன்லேர்ந்து வர்றா.. அடுத்த மாசம்டு நெருக்குறாஹா’

‘அட்வான்ஸா, என்னா சொல்லுறாரு இவரு?’ – குழப்பத்துடன் கேட்டேன்.

அஸ்மா மவுனமாக நின்றாள்.

‘பெங்களூர்லெ ஒரு பங்களா எளுதி, இருவது லட்சம் பணமும் கொடுத்தாஹா மச்சான்; பேங்க்லெ இக்கிது அது… மீதி இருவது , கல்யாணம் முடிஞ்சி…’

நானூறு பவுன் வேறு பெண்ணுக்கு போடுகிறார்கள் . லண்டனில் மாப்பிள்ளை பார்த்தால் டபுள்பங்கு ஆகும் என்ற கணக்கில் இப்படி விழுந்தார்களாம். ஆயிரம் குமர்களை கரையேற்றும் செலவை தங்கள் வீட்டு ஒரு கல்யாணத்திற்கு செலவழிக்கும் பணக்கார முஸ்லீம்கள் ஒரு காரியம் மட்டும் உருப்படியாகச் செய்வார்கள்; ஒரு ஏழைப்பெண்ணை வீட்டிலேயே வளர்த்து அதற்கு கல்யாணம் செய்துவிடுவது…  சந்தோஷப்படும் அல்லாஹ்வும் மேலும் செல்வத்தை அளித்து விடுவான்.

‘நேரம் பாத்து சொல்லு மச்சான்ட்டெ’ என்று அஸ்மாவின் உம்மாதான் சொன்னார்களாம்.

கோடி ரியால்களை ‘மஹர்’ எனப்படும் மணக்கொடையாகக் கொடுத்து (நாவூரில் , ஈஸாநபி காலத்திலிருந்து ‘மஹர்தொகை’ 900 ரூவாதான். இப்போதுதான் மாற்றம் வந்திருக்கிறது. 901) கல்யாணம் செய்தும் குப்புறப்படுத்துக் கொள்ளும் தன் பெண்டாட்டியால் ‘உம்’மென்று வரும் என் சவுதி முதலாளி ஒரு பழமொழி சொல்வான். ‘பெண்கள் செய்யும் நல்ல செயல் ஆண்களை 200 வருடம் பின்னால் தள்ளி விடும்’. சொல்லிவிட்டு, ‘அப்படியானால் மோசமான செயலை சற்று சிந்தித்துப் பார்’ என்பான். நிச்சயமாக அங்கிருந்து 200 வருடம் முன்னால் – கண்டிப்பாக கிணற்றருகே – தள்ளும் அப்துல்லா. கணக்கு சரியா? இவனைப்பற்றி ‘அப்து’ பாடல்களை பாடியபடி வரும் ஹாமத் சொல்வது வேறுமாதிரி. பத்து இஞ்ச் நீள சாமானுள்ள அப்துல்லா பம்பாய் போனானாம் , ஏஜெண்ட் ஏற்பாடு செய்திருந்த ஒரு பெண்ணைப் புணர. கண்டிப்பாக அது ஏஜெண்டின் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். முதல்தடவை அவள் செத்தாள். இரண்டாவது முறை முயற்சிக்கலாம் என்று பார்த்தால் பயங்கரமாக
அழுகிறாள் அவள், ‘ஓ ஷேக்… என்னால் தாங்கமுடியவில்லை, விட்டுவிடேன்’ என்று. ‘பொறுத்துக்கொள் பெண்ணே, இப்போது பாதியை மட்டும் விடுகிறேன்’ என்று சொல்லி வழக்கம்போல முழுசாக இரண்டாம் முறை அழுத்தியிருக்கிறான். ஒரே களேபாரம். அப்துல்லாதான் சமாதானப்படுத்தினானாம், ‘மேல் பாதியை சொன்னேன் என் தேனே’. எப்படி?

ஆனானப்பட்ட அந்த அப்துல்லாவையே பெண்டாட்டிகள் அடக்கிவிடுகிறாள்களே… ‘தாங்கள் தவறு செய்தால் கணவர்களை மன்னித்து விடுவார்கள் என்று பெண்களைப் பற்றிச் சொன்ன மேதைதான். அரபுக்காரிகள் பற்றி தெரியுமோ என்னவோ. நாவூர்காரிகளும் அப்படித்தாங்கனி…

‘நானா லண்டன் போவுது , கல்யாணத்துக்கப்புறம்’ என்று மெதுவாகச் சொன்னாள் அஸ்மா. ‘ஒருவருக்கொருவர் ஆடையாக இருங்கள்'[5] என்ற இறைவசனத்தை உள்ளபடியே கடைப்பிடிப்பவள் இவள்தான். என்ன ஒன்று, இவள் அணிவிக்கும் அழுக்கும் கிழிசல்களும் நிரம்பிய ஆடை என்னைக் கிழித்துப்போடும். அவ்வளவுதான். நான் அணிவிக்கும் ஆடை அவளையும் கிழிக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. துகிலின் மகளே…

எனக்கு ரொம்பவும் பிடித்த ‘ஆயத்’ அது. நோன்புகால தம்பதிகளின் உடலுறவு குறித்துச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் சகோதர மதங்களுடனுள்ள உறவு பற்றியும் குறிப்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு என்னைப் பாராட்டியபடி ஆடையை கிழித்துக் கொள்வது வழக்கம். நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாக இருந்தால் அது ரசூலுல்லாஹ் சொன்னதாக பொய் சொன்னாலும் தப்பில்லை என்பார் ஜலால்நானா.

‘ஆதாரம் கேட்டா?’

‘கனவுல வந்து சொன்னாஹாண்டு சொல்லிடறது; எவன் கேப்பான்?’

எந்த நபியும் நல்லவற்றை எடுத்துச் சொல்லாமல் போயிருக்க முடியாது என்பது அவர் வாதம். சரிதானே அது? ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிகள் தோன்றி மறைந்தும் , கெட்டவைகள் உலகினின்றும் மறைந்துவிடாததை நினைத்து அல்லாஹ் விடும் கண்ணீர்தான் என் மனதை வருத்துகிறது.

கடலே அல்லாஹ்வின் கண்ணீர்தான்.

‘கடன உடன வாங்கி கல்யாணத்த நடத்து; கடங்காரன் வந்தா…’ என்று நிறுத்தி, ‘வந்தா’ என்று ஆர்வமாகக் கேட்டதும் ‘கைலியை வழிச்சிக் காட்டு’ என்று ‘சொலவடை’ சொல்லும் எங்கள் வீட்டுக் கிழவிகளின் ஞாபகம். ஒன்றும் சொல்லத் தோன்றாமல் கிணற்றுப் பக்கம் பார்த்தவாறு இருந்தேன். ‘கிணற்றை உற்றுப் பார் என்றால் உற்றுப் பார்த்துவிட்டு வந்துவிடுவதல்ல, தூர் எடுத்து தூய்மைப்படுத்த வேண்டும்’ என்பார்கள் ஹஜ்ரத்.

கிணற்றின் வலதுபக்கத்தில் ‘எடுப்பு கக்கூஸ்’ இருந்தது. மனித அநாகரீகத்தின் உச்சம் அதுவென்றாலும் ஒரேயொரு வகையில் ‘வசதியான’ ஏற்பாடு. யார் யாருக்கு என்னென்னெ வியாதி , யார் பேண்டது என்று பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். வெள்ளை நிறத்தில் மலமா? அது ‘சுனை’. அதாவது, மஞ்சள் காமாலையின் அறிகுறி. மரவள்ளிக் கெழங்கு சைஸில் ஒரு துண்டா? மச்சானின் ‘கொழா’ போட்டது. இப்படியாக… ‘மஞ்சபீயும் மணமணக்குது எனக்கு முன்னாலே’ என்று பாடிக்கொண்டே அங்கே போன முத்துதம்பி, யாரோ பெய்து பெரும் ஓடைபோல் அங்கே தங்கிநின்ற மூத்திரத்தைப் பார்த்துவிட்டு ‘பர்வீன்பீவி பேஞ்ச மாதிரில இக்கிது’ என்று வியப்பாகச் சொன்னான் ஒருநாள். ஐயோ, அவள் யார், எங்கே பார்த்தான் என்றால் ‘பர்வீன்பீவி’ என்பது தர்ஹா யானையின் பெயராம். பெயர் வைக்கும்போது லட்டெல்லாம் பவுந்தார்களாம் – யானைக்கு (சோற்றை) உருட்டிக் கொடுக்கிறேன் என்று தங்கள் வாயில் போட்டுக் கொள்ளும் தர்ஹா டிரஸ்டிகள்.

ஏதும் பேச இயலாமல் குரல் கம்மிற்று. ‘சங்கூதி.. பன்னீர் தெளிச்சி.. வந்து எறங்குனாரு செட்டியாரு…’ என்று அஸ்மா போடும் ஒரு விடுகதையின் விடை குசு, மூத்திரம், பீ என்று வரும். செட்டியாருக்கு பதிலாக சபராளி மாப்பிள்ளை என்றுதான் வர வேண்டும். இல்லை, பீயை கேவலப்படுத்த வேண்டாம்.

என் முகத்தில் இப்போது ஊற்றப்படும் மூத்திரம் யாருடையது என்றுதான் தெரியவில்லை.

‘என்னெட்ட சொல்லவே இல்லையே…, எப்ப ஏற்பாடாச்சி’? என்றதற்கு ‘சின்னாப்பாதான் ஏற்பாடு பண்ணுனாஹா , ஆறு மாசத்துக்கு முன்னாடி’ என்றான்

‘அ, டாக்டர்மாமாவா?’ – என் குரலில் இருந்தது மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். எவ்வளவு பெரியவர் டாக்டர்மாமா… தன் சொந்தமகனுக்கு ஒரு பைசாகூட வரதட்சணை வாங்காத பெருமை பெற்றவர். ‘அஹ மூத்த மருமவளுக்கு தங்கச்சிதான் முத்துதம்பிட பொண்ணு’ – அஸ்மா மேலும் விளக்கினாள்.

மனைவியிடம் சிறந்தவராக நடப்பவரே மனிதரில் சிறந்தவர் என்று ஹதீஸ் இருக்கிறது… அந்த மனிதருக்கு முதுகெலும்பு இருக்குமா? இருந்தால் கோணல்மாணலாக உடைக்கப்பட்டுவிடும்… விலா எலும்பு பற்றியும் சொல்லியிருக்கிறார்கள் ரசூலுல்லாஹ், ‘(கோணலான) விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கும் பெண்ணுடன் நீ மகிழ்வுற விரும்பினால் அந்த கோணல் நிலையிலேயே அவளிடம் மகிழ்வுறுவாயாக'[b]. என்ன ஒரு நேரான ஹதீஸ், இப்போது என் பொசிஸன்தான் என்ன?

உருவப்பட்ட விலா எலும்பினால் உருவானதாம் பெண்ணினம். அதனால்தான் உயிர்போகும்வரை உருவுகிறார்கள் போல. ‘புடிமானத்திற்கு’ வசதியாகத்தான் இந்த ஆண்களுக்கும் இருக்கிறது.

திடீரென்று வந்த கோபத்தில் – அவளை உதறிவிட்டு – கிணற்றருகே போய் அதன் கைப்பிடிச்சுவரைப் பிடித்துக்கொண்டு உற்றுநோக்கியபடி நின்றேன். கலங்கிய நீரில் , பக்கவாட்டில் ஆடியபடி தெரிவது என் முகம்தானா? உள்ளே இருப்பது கூட தண்ணீராகத் தெரியவில்லையே… ஆமாம், தண்ணீரல்ல, மூத்திரம். பொங்கிக்கொண்டு மேலே வருகிறது அது. ஊரெங்கும் வழிந்தோடி கடலோடு சேரும்; நாறும்; கடலும் பொங்கும்.

இது என் இரண்டாவது கோபம். முதல் கோபம் எதற்கோ ஒருநாள் என் முகத்தில் தெரிந்தபோது ‘சடார்’ என்று எதையோ எடுப்பவள்போல குனிந்து தேட ஆரம்பித்து விட்டாள் அஸ்மா. கவிழ்ந்திருந்த வெள்ளைக்குடங்கள் கலங்கடித்து விட்டதில் காணாமல் போனது கோபம். இந்தமுறை கண்டிப்பாக ஏமாந்துவிடக்கூடாது…. குர்-ஆனை முன்வைத்து அவளை (ஜோராக) அடித்து விட வேண்டியதுதான்  பின்பக்கத்தில் – குர்-ஆனாலேயே. பயமா எனக்கு, உடம்புதான் கொஞ்சம் உதறுகிறது. ஒரே ஒருமுறை மாமியை அடித்த பவுன்மாமாவை, ‘வெளிலே தள்ளி கதவை சாத்திடுவேன், இது என் பேருல உள்ள வூடு’ என்று மாமி மிரட்டினார்களாமே… எனக்கும் அப்படியொரு நிலைமை அஸ்மாவால் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம், எங்கே போய் படுப்பது? அடக்கஸ்தலத்திலா?

முடிவு என்ன?

கல்யாணம் செய்வதற்கு முன் – திருமண ஒப்பந்தம் போடுவதை – ‘முடிவு செய்யிறது’ என்றுதான் ஊரில் சொல்வார்கள். ‘எவ்ளவு அளஹா முன்னாலேயே ‘முடிவு’ தெரிஞ்சிடுது – நம்ம ஜனங்களுக்கு’ என்று தன்னைக் கிண்டல் பண்ணிக் கொள்ளும் பைத்தியக்கார ஊர். பைத்தியக்காரச் சடங்குகள்… ‘தாலிகட்டு’ நிகழ்ச்சியில் நடக்கும் ஒரு சடங்கு உதாரணம். ‘விளைநிலம்’ என்று பெண்ணைக்
‘கவிநயத்துடன்’ (அடிவாங்க தெம்பில்லைங்க..) குறிப்பிடும் வேதத்தில் [6] அவைகள் இல்லை. அபத்தமின்றி, ஆடம்பரமின்றி கல்யாணம் செய்யச் சொல்லும் ஹதீஸ்களும் ஏராளம் உண்டு. நாவூர் ஜனங்களுக்கு அதெல்லாம் தெரியாது. தொப்புள்கொடிச் சடங்குகளோ? அல்லது , ஒருநாளாவது உற்சாகம் இருக்கட்டுமே என்ற – நெருக்கம் உண்டுபண்ணும் – விளையாட்டா? விளையாட்டேதான். அப்படியென்றால் சரிதான். சந்தோஷமாக வாழத்தானே சாகிறோம்? தானாக அது வராவிட்டால் நாமாக உத்திகளை கண்டுபுடிக்கத்தான் வேண்டும். அதில் ஒன்று , நீண்ட அட்டைக்கத்தி வாள் ஒன்றின் ஒரு முனையை மணமகனும் மறுமுனையை மணமகளும் பிடித்துக் கொள்ள வேண்டும். ‘வாள வுடு நாயே’ என்று மணமகன் சொல்வான். மணமகள் விடமாட்டாள். விடவே மாட்டாள் – ‘வாள வுடு நாச்சியா’ என்று மணமகன் மரியாதையாக சொல்லும் வரை. பெண்களின் உற்சாகம் குலவையுடன் உயரப்போகும் தருணம் அது. எனக்குத் தோன்றுவது, சபராளி மணமகன் உண்மையில் சொல்வது ‘வாழ விடு’ என்றுதான். நிஜமான வாளின் கைப்பிடியை நாவூர் பெண்கள் வைத்திருக்கிறார்கள்.

குதித்து விடலாம் என்று மனசும் உடம்பும் துடித்தது.

‘குள்ளப்பா… ‘கடுக்கா தண்ணி’ வேணுமா?’ என்று காதோரம் சொல்லியபடி கரம்பற்றி இழுத்தாள் அஸ்மா – படுக்கைக்கு. பச்சையான ஜோக் ஒன்றும் அடித்தாள், கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் முத்துதம்பிக்கு கேட்காதபடி. பற்றிக்கொண்டு வந்தது. ‘அம்மா..’ என்று தன் சாமியார் கணவனை பக்தியோடு கும்பிடும் பெண்மணியைப் பற்றி ‘ஒருவேளை.. கொட்டய கடிச்சி எடுத்துட்டாளோ மச்சான்?’ என்று சொல்லி முன்பு என்னை சிரிக்க வைத்தவள்தான். இப்போதா? எடுத்துட்டியடி… பசப்பலுக்கு ஆட்படாமல் இறுகிய முகத்துடன் நின்றேன். ‘வாங்க இப்படி.’ என்று அதட்டியபடி அணைத்து இழுத்துக் கொண்டு அறைக்குப் போய் , இலக்கு தெரியாமல் எழுதும் எனக்கு இலக்கைக் காட்டினாள்.

தொப்…

(முற்றும்)

குர்-ஆன் வசனங்கள் :[1] – (12 : 25) , [2] – (24 : 26) , [3] – (18 : 60 to 82) , [4] – (27 : 50) , [5] – (2 : 187) , [6] – (2 : 223)
[a] இத்தா – கணவன் இறந்தபிறகு மனைவி (குறிப்பிட்ட மாதங்கள்) தனித்திருத்தல்
[b] ‘முஸ்லிம்’ ஹதீஸ் தொகுப்பிலிருந்து (ரியாளுஸ்ஸாலிஹீன்/273)

*

நன்றி : மதுமிதா, பி.கே. சிவகுமார்

11 பின்னூட்டங்கள்

 1. 14/03/2018 இல் 11:19

  கதை அற்புதமாக வந்திருக்கிறது. (நாவூர்க்காரனுஹதான் இப்படின்னா, நாரோல்
  காரனுஹளும் இப்படித்தான் போலிருக்கிறது) வாசித்துப் பார்த்த பிறகு ’எல்லா
  நலனும் பெற்று வாழ்க’ என்று வாழ்த்துவதற்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. நல்ல
  அம்சமான கிணறுகள் தவிர்த்த பிற எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ
  வாழ்த்துகிறேன்.

  எல்லாக் கிணறுகளும் தூர்ந்துதான் போகின்றன என்னும் தகவலை அறிந்த
  மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும்…

  Mobile No. : 9994923926

  2018-03-13 17:00 GMT+05:30 ஆபிதீன் பக்கங்கள் :

  > ஆபிதீன் posted: ” இன்று எனது பிறந்த நாள் (அறுவது வயசு!) & திருமண நாள்.
  > வார்த்தை இதழில் வெளியான நெடுங்கதை ஒன்றை இங்கே பகிர்கிறேன். வாசித்துப்
  > பாருங்கள்; இயன்றால் வாழ்த்துங்கள் . நன்றி! – AB * கிணறு (குறுநாவல்) –
  > ஆபிதீன் ‘பல்லி எப்படி தலைகீழாக சுவற்றில் ஊ”
  >

 2. Hameed Jaffer said,

  18/03/2018 இல் 21:34

  கிணறு
  வீட்டில் இருந்தால் அது கொல்லைக் கிணறு
  தெருஓரத்தில் இருந்தால் அது ஊர் கிணறு
  கோயில்களில் இருக்கும் அது கோயில் கிணறு
  இப்படி இருக்குமிடத்தை வைத்து காரணப்பெயர்கள் பல உண்டு
  இது போதாதென்று ஆழ் கிணறு, குழாய் கிணறு என்றும் பல வந்துவிட்டன
  அவற்றுக்கு அடிபைப்பும் பம்பு செட்டும் வேண்டும் தண்ணீர் இரைக்க
  உற்றுப்பார்த்தால் முகம் தெரியும்
  சுவையான நீரைத் தரும்
  சில உவர்ப்பான நீரைத் தரும்
  கோடை காலத்தில் குளிர்ந்த நீரைத் தரும்
  குளிர் காலத்தில் இதமான சுடு நீரைத் தரும்
  எக்காலத்தும் வற்றாமல் நீர் சுரக்கும்
  ஊற்றுக் கண் பல அடியில் உண்டு
  இரைக்க இரைக்கத்தான் நீர் ஊறும்
  இரைக்காமல் விட்டால் நீர் பாழ்படும்.
  இரைத்தால் மட்டும் போதுமா
  தூர் வாரவேண்டும் வருடம் ஒருமுறையாவது
  தவறாமல் செய்துவிடுவேன் எனவே
  என் வீட்டு கிணறு எப்போதும் நன்றே

 3. Hameed Jaffer said,

  18/03/2018 இல் 22:05

  ஒரு சின்ன திருத்தம்
  கடைசி வரி கடைசி வார்த்தை நன்றே என்பதை ‘ஜம் ஜம்’ என்று திருத்திகொள்ளவும்

 4. Dr.Prof.w mohamed younus said,

  19/03/2018 இல் 20:54

  Dear brother ஆபிதீன் இன்னும் ஒருஅறுவது வயசுட ன் எல்லா நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.வாழ்க.. வாழ்க .

 5. அனாமதேய said,

  31/03/2018 இல் 07:50

  எப்ப பாரு அஸ்லாமும் இஸ்மாவும் …..
  சேச்சேச்சே….
  கதை எழுதும்யான்னா ஒரே கவிச்சி.
  மூக்கை புட்சிகினு பட்சாச்சு.

  நல்லா இருந்து தொலையும்.

 6. அனாமதேய said,

  31/03/2018 இல் 07:52

  அன்புடன் சோமன்…

 7. அனாமதேய said,

  15/05/2018 இல் 17:36

  ஆபிதீன், உங்கள் மெயில் படித்தேன் சந்தோசம்.
  எல்லா வீட்டிலும் ஆண்கள் தோற்றுப்போக பெண்கள் வெற்றிவாகை சூடுகிறார்கள். அவர்கள் பூவைப்போல சூடிக்கொள்ளட்டுமே…

  நாம் தோற்பதில்தான் வாழ்வுநிறைவுறும்.

  கிணறுக்குள் இன்னும் இறங்கவில்லை. மகன் சபீர் ஹாபிஸிற்கு பதிலாக இப்பொழுது மருமகன் அஸீஸ் எனக்கு வாய்த்திருக்கிறார். இந்தவேளையில் கிணறு கதையை தறைவிறக்கம் செய்து கொண்டு போகிறேன்.

  புனித ரமழானின் தலைப்பிறையில் அதைப் படிப்போம்…

 8. அனாமதேய said,

  15/05/2018 இல் 17:43

  ஆபிதீன், கிணறு குறுநாவல் 20 பக்கமடா..!

  இந்த வருடத்திற்குரிய பித்ரா 100 ரூபாயை உனக்கு அன்பளிப்பு செய்துவிட்டேன். அஸ்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் இந்த மேலான செய்தியை தெரியப்படுத்தவும்.

  • 16/05/2018 இல் 13:34

   ஹாஹா, ரமலான் கரீம்! உங்களிடமிருந்து ஒரு ரூபாய் கிடைத்தாலும் போதும் காக்கா. அனைவருக்கும் என் ஸலாம்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: