சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (22)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15 | அத்தியாயம் 16 | அத்தியாயம் 17அத்தியாயம் 18 | அத்தியாயம் 19அத்தியாயம் 20அத்தியாயம் 21

அத்தியாயம் 22

ஆபிதீன்

*

03.02.1996 கேஸட் தொடர்ச்சி :

‘Body கிடக்குது.. Physical Body – இது உடம்பு. அடுத்தது Emotional Body – இது உணர்ச்சி Body; உணர்ச்சிக்கான உடம்பு. அடுத்து மூளைக்குள்ள உடம்பு. இதை பார்க்கும்போது ‘மூளை’, ‘Intellect’ண்டு ஏன் சொல்லனும்டு கேக்குறேன். பார்த்தா தெரியலையா? இதை சூஃபியாக்கள் செய்யும்போது , ‘இது Intellectual Body’, ‘This is Emotional Body..’ அப்படீண்டா சொல்லிக்கிட்டிப்பாங்க? நான் சின்னபுள்ளையில ஒண்ணு செஞ்சேன், அது மாதிரி செய்யிறீங்களோ? தொழுகைக்குள்ள ஷரத்துகளில் ஒண்ணு , நேரம் அறியிறது. நான் மணியை உத்துப்பாத்துப்புட்டுத்தான் போவேன்! அப்பத்தான் ஒத்தஹ சொன்னாஹா , ஒரு நாளு. ‘இப்ப என்னா டைம், என்னா தொழுவப் போறோம்?’ ‘அஸர் தொழுவப் போறோம்’. ‘அதான் வாஹிது சாபு.. என்னா தொழுவப்போறோமோ அதுக்குள்ள நேரம். இதைப் பாக்கனும்டுதான் அர்த்தமே தவிர அலங்காரவாசல் மணிக்கூண்டை பாக்குறதல்ல!’ண்டாஹா. அப்படித்தான் நீங்க செய்யிறீங்க’

‘கரெக்டா வேலை செய்யிது சர்க்கார்.. கலைச்சி , கோர்க்கும்போது உள்ளுறுப்பும் வெளியுறுப்பும் பெர்ஃபெக்டா அமையனும்டு மனசுல நெனைச்சுக்கனும்லெ?’

‘ம்..அப்ப, ‘Perfect’ண்டு சொல்வீங்களோ?! உங்களுக்கு வழிகாட்டுறதுக்குள்ளே என் தலையில உள்ள மயிர்லாம் கொட்டிடும் போலக்கிது’

*

குர்ஆனின் மொழி :

‘உங்களுக்குத் தெரியுமா, குர்ஆன் ஷரீஃபே அரபிலெ வரலே! ‘வஹி’ எப்படி வந்திச்சி?’ – ‘S’

‘ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம் வந்து..’

‘அரபிலெ சொன்னாஹலா? சொன்னதாக தெரிஞ்சிச்சி! அஹ (ரசூல்) மனசுல ஏற்பட்ட தோற்றம்தான் அது. புரியுதா? ஆக்சுவல்லி, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வந்து ‘அஸ்ஸலாமு அலைக்கும்’டு சொன்னாஹாங்குறது ‘குஃப்ர்’ . அல்லாவை அரபி மொழியிலெ கற்றுக்கொடுக்குறதா அர்த்தமாயிடும். அல்லா பேசுற பாஷைக்கு மொழி கிடையாது, எழுத்து கிடையாது, ஒரு செகண்ட்லெ ஆயிரம் ரிகார்டு பேசலாம். அதனாலெதான் ‘வஹி’ இறங்குன உடனேயே இஹ மயக்கம் போட்டு வுழுந்துடுறாஹா… அதே சமயத்துலே, இந்த வஹி இறங்கும்போது அதை எப்படி எடுத்துக்குறது, transact பண்ணி கொண்டு வர்றதுண்டு முயற்சி பண்ணிக்கிட்டிக்கிம்போது , ஆயத் வந்திச்சி: ‘நீ வஹி வரும்போதுலாம் நாக்கை காட்டிக்கிட்டு இருக்காதே, வார்த்தைகளைப் பின்னாதே, எப்படி பாதுகாக்குறது, எப்படி மக்களுக்கு சொல்லவைக்கிறதுங்குறது எங்களுக்குத் தெரியும்’டு! மணியோசை மாதிரிதான் ‘வஹி’ கேட்கும். மறுபடி மொழி மொழிங்குறீங்களே.. ! மொழியால என்னா மயிரையா புடுங்க முடியும்? பொண்டாட்டி மேலே ஏறி உட்கார்ந்துட்டு , ‘தலை’யை வச்சிக்கிறேன், ‘அமுக்கப்போறேன்’,’உள்ளே உட்டுடப் போறென்’,’போய்க்கிட்டிக்கிது’,’வுட்டுட்டேன்’ண்டு சொல்லிப் பாருங்களேன்! ‘Physical Bodyயை நான் பாக்குறேன்’ ‘Physical Bodyயை கலைக்கிறதுக்கு suggestion கொடுக்குறேன்!’ ஹூம்ம்… அப்ப, வேற ஆளு வந்து கலைக்கனும், அதுக்கு நீங்க suggestion கொடுக்குறீங்க.. அப்படியா? அமைதியா உட்கார்ந்து கொஞ்சம் யோசனை பண்ணிப்பாருங்க. எவ்வளவு பெரிய தப்பு நீங்க பண்ணிக்கிட்டிக்கிறீங்கண்டு தெரியும்’

மூத்த சீடர் , கவனித்து செய்வது பற்றி சர்க்கார் சொல்லியிருக்கிறார்களே முதலில் என்று சொல்லவே சர்க்கார் பதில் சொல்கிறார்கள்: ‘கவனிச்சி செய்ய வேண்டியது கரெக்ட். இன்னதை செய்யிறோம்டு வார்த்தையாலே சொல்லிக்கிட்டுத்தான் செய்யனும்தான். அது ஒரு தனி பிராக்டிஸ். இதுக்கு (‘SS’) செய்யக்கூடாது’.

நினைப்பதை சொல்வதாகச் சொன்னதால் வந்த குழப்பம்!

‘ஆனா ஒண்ணு, வார்த்தையை நீங்க போட்டீங்கண்டு சொன்னா தெய்வத்தன்மை வராது அங்கே. வார்த்தைக்கு அப்பாற்பட்டவன் ஆண்டவன். வார்த்தையாலே போட்டு கட்டுப்படுத்துனீங்கண்டு சொன்னா தூரமா பொய்டுவீங்க. ஒரு குழந்தைக்கு முட்டாய் வாங்கிக்கொடுத்தா என்னா சொல்லும்? ‘ஹைய்யா!’ங்கும். ‘முட்டாயி’, ‘தாள் சுத்துன முட்டாயி’, ‘சாக்லெட் கலர் முட்டாயி’, ‘முக்கிப்போட்ட பீ மாதிரி உள்ள முட்டாயி’ண்டா சொல்லுது?!’ – ‘S’

*

‘வார்த்தையை நெனைச்சா உள்ளுக்குள்ளே லேசா நாக்கு ஆடும். கண்ணை மூடிக்கிட்டு பெரிய மினாரா ‘குப்பா’வை பாருங்க. கண்ணு மேலே வரும். வார்த்தையாலே நாக்கசைவு வரும். நாக்கசைவு வந்திச்சிண்டு சொன்னா ‘ரியாலத்’ பலிக்காது. மெயின் நோக்கம் என்னவோ அது கெட்டுப்பொயிடும்’

‘கல்காயில்’ இஸ்மு ஓதும்போது நாக்கு ஆடுது சர்க்கார்’

‘அதெப்படி? அதை கொட்டையாலெயா சொல்லமுடியும்?! ஆனா, கண்ணு பாக்குற இடத்துலே நாக்கு ஏன் அசையனும்?’

‘சில நேரத்துலெ எச்சிலைக் கூட்டுறமாதிரி வருது’

‘இப்ப.. எச்சில் தானா ஊறுதுண்டாக்கா முழுங்கிக்கிடுங்க. எச்சி ஊறுதுண்டா ஊறட்டும். ‘எச்சியாகப்பட்டது ஊறாகப்படுது’ண்டு சொல்லிக்கிட்டிக்காதிங்க! ஓதுற இடத்துலெ – இத்தனை தடவைதான் ஓதனும்டு ‘தலாத்தீன்’, கம்ஸன்’,’சபஅன்’ண்டு சலவாத்துக்கு இடையிலே போட்டிருக்கும். ரொம்பபேரு இதையும் சேர்த்து ஓதுவாஹா! நீங்கள்லாம் இப்படித்தான் செய்யிறீங்க!’ – ‘S’

*

அனல்ஹக் :

‘திக்ரு பண்ணனும். பண்ணிக்கிட்டே வர வர வர அந்த சவுண்ட், க்ராஜுவலா கூடிக்கிட்டே போவனும். அப்ப வெறுமனே நாக்குதான் அசையும். மனசுல அந்த பொருள்தான் நிக்கிம். அப்படி அசையும்போது அந்த பொருளுக்குத் தகுந்தமாதிரி நாக்கு அசைய ஆரம்பிக்கும். ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு தாண்டுன பிறகு நாக்கு அசையாது. உள்ளத்துலே ஓடிக்கிட்டிக்கிம். அப்படி ஓடிக்கிட்டிக்கும்போது வெளிவந்ததுதான் ‘அனல்ஹக்’ங்குற வார்த்தை. அஹ (மன்சூர் ரலியல்லாஹூ அன்ஹூ) விரும்பிச் சொன்னதல்ல’ – ‘S’

*

20.08.1996

தொடர்ந்து 3வது வேளையாக ஈரலைச் சாப்பிட்டுவிட்டு எழுத உட்காருகிறேன். நேற்று இரவு, சஹருக்கு, அப்புறம் கடைசியாக நோன்பு திறந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து , இப்போது. அப்பாடா, இனி மூத்திர நாத்தம் ரூமில் இருக்காது! ஈரல் நல்ல கறிதான். ஆனால் ஊரில் உம்மா பெரட்டிக் கொடுக்க வேண்டும். அந்த மசாலாவே தனி. என்னதான் இங்கே மஸ்தான் மரைக்கான் படாதபாடுபட்டு வேகவைத்து மசாலாவை அள்ளித் தெளித்தாலும் மீறிக்கொண்டு வந்துவிடுகிறது. ஆஸ்திரேலியா மூத்திரமா இந்திய மூத்திரமா? விலை உயர்ந்த இந்திய இறைச்சி விற்கிற கடையில் வாங்கியதாகத்தான் சொன்னான். வாங்கிக்கொண்டிருக்கும்போது ஜெப்பார்நானாவையும் கிட்னி, ‘பல்லுகுத்தி’க்காக பார்த்ததில் , இது ஏதோ சர்க்கார் சமாச்சாரம் என்று விளங்கிவிட்டது அவனுக்கு லேசாக. ‘ஷோக்கான சர்க்கார்ப்பா சாபு’ என்று கிண்டல் பண்ணினான். நான் ஒன்றும் தெரியாத மாதிரி நடித்துச் சமாளித்தேன். நோன்பு வைப்பதை யாருக்கும் சொல்லக்கூடாதே.. வெறும் இஸ்முவும் நோன்பும் இருக்கும் என்றுதான் ஜெப்பார்நானா சொல்லியிருந்தார். சேர்ந்து 14 வருடத்தில் இந்த மாதத்தில் ஏதும் விசேசம் இருந்ததேயில்லை, இது ஏதோ புதிதாக என்று சொல்லியிருந்தார். ஃபேக்ஸ் அனுப்பவேண்டிய கவுஸ் மெய்தீன் இன்னதுதான் செய்யவேண்டும் என்கிற விஷயத்தை சர்க்கார் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தும் ஏனோ தாமதப்படுத்தி விட்டார். அவரும் அலைந்திருப்பாரோ ஊரில்? அங்கே கிடைக்காத சாமானா? இங்கும் என்ன, வந்த ஃபேக்ஸ் ஒருநாள் முன்னதாகவே வந்திருந்தால் ஷரத்துபடி ஈரல், பல்லுகுத்தி, கிட்னி மூன்றையும் மார்க்கெட்டில் ஃப்ரெஷ் ஆக வாங்கியிருக்கலாம். அத்தனை தொழிலாளர்களின் உறுப்புகளும் தனித்தனியாகக் கிடைக்கும்போது ஆட்டு ஈரலுக்கா பஞ்சம்?

நேற்று காலை ஆஃபீஸூக்கு வந்தது ஃபேக்ஸ்.

‘19.08.1996 அன்று இரவு (பிறை 5) , ஆட்டு ஈரல்+ பல்லுகுத்தி+கிட்னி இந்த மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு , அதன் பாதியை அன்றே (20.08.1996) சஹருக்கும் , அன்று நோன்பு திறந்ததும் இரவு உணவுக்கும் சாப்பிடவேண்டும். அன்று மட்டும் உயிருள்ள வேறு எந்த பொருளையும் சாப்பிடக்கூடாது (இதைத் தவிர). ஃபஜர் பாங்கிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும்.ஃபஜர் பாங்கில் , ‘ஹய்ய அலல் ஃபழா’ என்ற வார்த்தையைக் காதால் கேட்டவுடன் , ‘யா ஹக் யா முபீன்’ என்று கிழக்கு நோக்கி அமர்ந்து , 210 தடவை ஓதவேண்டும். தொழுபவர்கள் லுஹர் மட்டும் தொழக்கூடாது. நோன்பு திறப்பதற்கு மணி நேரத்திற்கு முன்பு ஒரு மிஸ்கினுக்கு 5 ஆப்பம் (அ) 5 தோசை (அ) 5 பறாட்டா கொடுக்க வேண்டும் , (ஏதாவது ஒன்று). கொடுத்து, மிஸ்கின் போகத் திரும்பியதும் மீண்டும் மிஸ்கீனைக் கூப்பிட்டு 5 ரூபாய் கொடுத்துவிட்டு நாம் திரும்பி வந்து விட வேண்டும், நோன்பு திறந்ததும் டீ, காஃபி, பழங்கள் சாப்பிடலாம். நோன்பு பிடித்திருப்பதை வெளியே சென்று யாரிடமும் தெரிவிக்கக்கூடாது’

‘அய்யய்யே’ என்றார் ஜெப்பார் நானா – ஃபேக்ஸை நேற்று பகல் அவர் ரூமில் கொண்டுபோய் நான் கொடுத்தபோது. ‘இப்ப என்னா பன்னுறது.. மார்க்கெட்லெ காலைலதான் கெடைக்கிம். பஜாரை நைட் ஒரு சுத்து சுத்துறேன்’ என்றார். மெஹ்பூப் ரெஸ்டாரண்ட், திருச்சி ரெஸ்டாரண்ட், அப்பா கடை, அப்துல் ரஹ்மான் கடை, முகவை ரெஸ்டாரண்ட்.. தமிழ்நாடு சலூன் பக்கமுள்ள தமிழ்நாடு ரெஸ்டாரண்ட் அப்புறம் பலுதியாவுக்கு பயந்து நடுங்கி அவ்வப்போது திறந்து மூடுகிற லெப்பைக்குடிகாடு மெஸ், மதுக்கூர் மெஸ்.. நன்றாகத்தான் அலைந்திருக்கிறார். ஈரல் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. கிட்னி ஒரு வகையாக, ஹைதராபாத் ரெஸ்டாரண்ட்டில் ‘கொஞ்சக்கோனு’ இருந்திருக்கிறது. இந்த ‘பல்லுகுத்தி’..! ‘இது என்னா ஊரா?’ என்று முணுமுணுத்தவாறே ஜெப்பார்நானா சொல்லி ஒரு கிட்னியை கொடுத்தார்..

ஃபேக்ஸ் பேப்பர் வரும்போதே சாம்பிள் சாமான்களும் (உம். ‘பல்லுகுத்தி’) வருவதுபோல கண்டுபிடிக்கத்தான் வேண்டும்!

இது எதற்கு, யாருக்கு? கேட்கத் தேவையில்லை. ஈரல் Physical Bodyக்காக இருக்கலாம். கிட்னி, Intellectual Bodyக்காக இருக்கலாம். ‘பல்லுகுத்தி’தான் Emotional Bodyக்கு! அதைக் கண்டுகொள்வதும் அடக்கி நம் வசப்படுத்துவதும் சாதாரண விஷயமா? மூன்றும் ஒன்றாகக் கிடைக்காதபோது என்ன செய்வது? Astral Body வருத்தப்பட்டுவிடாதோ?

சர்க்காரிடம்தான் கேட்கவேண்டும்.

‘இது மூணுமே ஷரத்தாச்சே! ம்.. ‘ என்று யோசனை பண்ணினார்களாம். பசுநெய், கோதுமை ரொட்டி, சீனியைச் சொன்ன அவர்கள்.. ‘ஆனா உறைப்பு இருக்கனுமே’ என்றும் சொல்லியிருக்கிறார்கள் – குழம்பியபடி. ‘சரி ..கிடைக்கிறதை என்னெட்டெ சொல்லுங்க, நான் பாத்துக்குறேன்’ என்றார்களாம் கடைசியாக. எதுவாக இருந்தாலும், நான் ‘தேரா’தான் போகவேண்டும். இந்தக் காட்டில் சீனிதான் கிடைக்கும். கோதுமை ரொட்டி, குப்ஸ் மாதிரியே அங்கு எல்லா க்ரோசரிகளிலும் இருக்கும். அது இல்லாது போனாலும் சப்பாத்தி வாங்கலாம். நான் சப்பாத்திதான் வாங்கினேன், பெங்களூர் ரெஸ்டாரண்ட்டில். அது சைவ உணவகம் என்பதை மறந்துவிட்டு ‘கிட்னி இருக்கிறதா?’ என்று வேறு கேட்டுத் தொலைத்தேன். ஐயர் முறைத்தார். காசுக்காக துபாய் வரும்போது துலுக்கன் பேச்சை கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் அவர். இந்தியாவுக்கு வா பாய்! சப்பாத்தி+ ஈரல். ஓஹோ!

மஸ்தான் மரைக்கான் துரிதமாக சமைத்துக்கொடுத்தான். ‘நல்லா பெரட்டிக் கொடுப்பா’ என்று சொன்னதும் சட்டுவத்தால் ஈரலை ஒருமுறை தூக்கி , அப்படியெ பெரட்டிப் போட்டான்! பார்சல் கட்டிக்கொண்டு நேற்று இரவே அவீருக்கு திரும்பினேன். Humidityயில் தொப்பல் தொப்பலாக நனைந்து போயிருந்தேன். அறையில் நுழைந்ததும் ஆசுவாசம். இந்த அறைதான் சரி. அங்கே சஹர் நேரத்திற்கு எழுந்து உண்டால் நோன்பு என்று தெரிந்துவிடுமே.. கடைசியில் ‘ஈரல் சாபு’ என்று சர்க்காருக்கு மஸ்தான் மரைக்கான் பெயர்வைத்துவிடப் போகிறான்! ஆபிதீனும் நோன்பு என்று சொல்லாமலிருக்க – இருமுறை டீ போட்டுக்கொண்டு வந்த கப்பமரைக்காரிடம் – ‘வயித்தால போவுது’ண்டு சொல்லவேண்டி வந்தது. அவர் மிக அனுதாபமாய் ‘சுலைமானி’ போட்டுக்கொண்டு வந்து கொடுத்தார்!

*

ஒரு கிலோ ஈரல் 16 திர்ஹம். நான் பாதி எடுத்துக்கொள்வதால் 8 திர்ஹம் தனியே கொடுத்தால் போதும் – மெஸ் காசு என்று இல்லாமல் என்று ஒரு கணக்கு சொன்னான் மஸ்தான் மரைக்கான். எனக்கு கெஸ்ட் என்று இத்தனை வருடங்களில் ஓரிருவர்தான் வந்திருக்கிறார்கள். வாராவாரம் அவனுக்கு கெஸ்ட் வருகிறது. அந்தக் காசையெல்லாம் நானும் பங்கு போடவேண்டும். இப்போது மட்டும் இப்படியொரு கணக்கு!. ஈரல் துடித்தது! காசு சம்பாதிக்கத்தான் துபாய். சகோதரனாவது மண்ணாவது. பெரியம்மாவின் மகன் அவன்.

சின்னம்மா மகன் தௌஃபீக்கிடம்தான் ஃபரீதுக்கு பணம் அனுப்பி வைத்தேன், உண்டியலில். வழக்கமாக ‘MKT’ கமால்காக்காவிடம்தான் அனுப்புவது. கீழக்கரை கடலில் அது சங்கமிக்கும். என்றாலும் பக்கத்திலுள்ள தெரிந்த ஆற்றில்தானே போட முடியும்? அவர் மூன்றாவது முறையாக மூளை பாதிக்கப்பட்டு ஊர் போயிருந்தார். மூன்று முறையும் , நாக்கூர் கம்பெனியில் வேலைபார்த்ததைத்தான் காரணமாகச் சொன்னார்கள். அண்ணன் தம்பி கம்பெனிகள்… விதிவிலக்காக எவர்பிரைட் கம்பெனி மட்டும்தான் இருந்தது. மூன்றுமாதம் போனஸ், மூன்று மாத விடுமுறை, வெள்ளைக்கார வேலை நேரம், நாக்கூர் சாப்பாட்டோடு தங்குமிடம் என்று வேலை பார்த்தவர்கள் அனைவரையும் வயிறு ஊதிப்போகுமளவு தள்ளிவைத்து… தானும் ஒரேயடியாக மயக்கத்தில் படுத்துவிட்டது . எவ்வளவு பெரிய வயிறு! இதைத்தவிர , இங்குள்ள நாக்கூர் கம்பெனிகளுக்கு மூளை மிக அவசியம். எடுத்துக்கொள்வார்கள் மொத்தமாய். அல்லது வேலைநேரம், தொந்தரவு என்று பல கரண்டிகளை உள்ளேவிட்டு குடைந்துவிடுவார்கள். பைத்தியம் பிடிக்காமல் என்ன செய்யும்? தப்பித்து வந்தவன் நான்தான். நான் என்னை இன்னும்கூட உணரவில்லையோ என்னமோ! என்னிடம் தௌஃபீக் சொன்ன கணக்கு , உணரவைப்பதற்காகத்தான் இருக்கும். ‘உங்கள்ட்டெயிலாமா கமிஷன் வைப்பேன் நானா?’ என்று கேட்டான். 1000 ரூபாய்க்கு 97 திர்ஹம் வீதம் வாங்கினான். அவனுக்கு கொடுக்கவேண்டிய 2000 திர்ஹம் வேறிடத்திலிருந்து வராமல் போகவே , ஃபரீதுக்கு ·போன் செய்து அவன் வீட்டிற்கு கொடுத்துவிடச் சொன்னான் – 1000 ரூபாய்க்கு 95 வீதம்!

மிஸ்கீனிடம் புரோட்டாவும் காசும் கொடுப்பது மட்டும் முடியவில்லை. ஊரில்தான் மார்ச் இஸ்முவுக்குக்கூட அஸ்மாவை கொடுக்கச் சொன்னேன். அதேபோல் இப்போதும் செய்தேன். இங்கே எங்கே தேடுவது? மிஸ்கீன்களாக இருந்தாலும் கார் வைத்திருப்பதால் ஒத்துக்கொள்ள வேறு மாட்டார்கள். சம்பளம் தராத கம்பெனிகளில் வேலைபார்ப்பவர்களை மிஸ்கீனென்று சொல்லமுடியாது. ஒரு வருடத்திற்குள் கிடைக்காமலா போகப்போகிறது? பஜாரில் கறுப்பு புர்காவை போட்டுக்கொண்டு சில சமயங்களில் மிஸ்கின்கள் உட்கார்ந்திருப்பாகள். ஆணா பெண்ணா? அரபியா , பங்காளியா? பள்ளிவாசல்களிலும் – வாசலில் – பார்க்கலாம். அவர்களிடம் குப்ஸ் கொடுத்தால் வாங்கிக்கொள்ளக்கூடும். புராட்டாவை வாங்கிக்கொள்வார்களா? எப்படியிருந்தாலும் ஆப்பம், தோசையை வாங்க மாட்டார்கள். அல்லது கொடுத்துப் பார்க்கலாமா? எதற்கு வம்பு? அஸ்மாவிடமே பொறுப்பை ஒப்படைத்துவிடுவோமே!

‘என்னத்துக்கும்மா?’ என்றாள் அவள்.

‘சர்க்கார் சொன்னாஹா புள்ளே. சொன்ன மாதிரியே கொடுத்துடு’

என்னத்துக்கும்மாவா?! யாருக்குத் தெரியும்? (‘நான் சொல்றதை மட்டும் கேளுங்க. உங்க புத்தியை இங்கே காட்டவே காட்டாதீங்க. இங்கே மூளைக்கு வேலையே இல்லை’. – ‘S’. 01-08.12.1995 கேஸட்).

‘என்னத்துக்கும்மா?’வில் வேறொன்று தெரிந்தது. இந்த விசேஷம் , உள்வட்டச் சீடர்களுக்கு மட்டும்தான். அவள் வெளிவட்டத்திற்கு வெளியேயுள்ள வட்டமாயிற்றே.. அப்படியானால் ரியாலத்தோடு இந்த கறிகள் தொடர்பு கொண்டவை. எந்த வகையில்? உங்க புத்தியை இங்கே காட்டவே காட்டாதீங்க. இங்கே மூளைக்கு வேலையே இல்லை!

இல்லை சர்க்கார், ஈரலைப் பச்சையாக சாப்பிடச்சொன்னாலும் சாப்பிடுவேன் நான்.

சிறுவயதில் எனக்கு மஞ்சள்காமாலை வந்தபோது ‘பரவை’க்குப் போய் மூலிகை சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்னால் உம்மா ஆட்டுப்பித்தை நிறையமுறை பச்சையாகக் கொடுத்திருக்கிறார்கள். அதில் மஞ்சள்காமாலை அதிகமானது வேறு விஷயம்! அதிலும்கூட குணமாகியிருக்கும் – இப்போதுள்ள நம்பிக்கை இருந்தால். சர்க்கார் என்கிற சக்தியிடம் ஒப்படைத்துவிடுவதில் ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே ‘இந்தியன்’ சினிமா டிக்கெட்டிற்கு அலைவதை விட ஈரலுக்கு அலைவதில் பிரயோசனமிருக்கிறது. கனவில் கமலஹாசன்கூட வந்து கோபித்துக்கொண்டான்.. போடா, உனக்குத் தடா! ‘அந மர்கஜ் உல் இல்ஹாம்..’

*

இன்று எப்ஸன் பிரிண்டரின் ரிப்பன் மிகப் பழையதென்று , மாற்றுவதற்காக எடுத்து வைத்திருந்தேன். அதைப்பார்க்காமல் , மொயீன்சாஹிப் பிரிண்ட்-அவுட் வரவில்லையென்று சொல்லிக்கொண்டிருந்தார். பாகிஸ்தான் ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்கும் உள்ள பிரச்சனைகளில் உள்ள கவலையாலோ அல்லது தன்னைவிட தன் தம்பி அங்கு ஃபைஸல் பேங்க்-இல் அதிகம் சம்பாதிக்கிற கவலையாலோ , நிதானம் இழந்திருந்தார். ஊர்போய் வந்தவரின் பேச்சில் உம்மாவை விட தம்பிதான் இருந்தான். வீனாபோபானிக்கு ஃபோன் பண்ணச் சொன்னேன். குஜராத்திக் கிழவி. இம்சை பண்ணிய கணவனைத் தூக்கியெறிந்துவிட்டு , தனியாளாக பிரிண்டிங் ஆர்டர் எடுத்து தைரியமாக வாழும் பெண்மணி. துபாய், பெண்களுக்கு தனி தைரியத்தைத்தான் தருகிறது. பகல் சாப்பாட்டுக்குப் போகும்போதுகூட ஒரு அரபிப்பெண் – எங்கள் வேனுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த வேனில் போய்க்கொண்டிருந்தவள் – கதவுக்கு வெளியே கையை நீட்டிக்கொண்டு , நடுவிரலை மட்டும் நீட்டி வைத்துக்கொண்டு மற்ற விரல்களை மடக்கிக்கொண்டாள். நடு விரல் ஆடிக்கொண்டிருந்தது! கந்துரா அணிந்திருந்த பலுச்சி டிரைவரை அரபி என்று நினைத்துக்கொண்டாளோ அல்லது எல்லாருக்கும் அப்படித்தான் காட்டுவாளா? இவள் ‘சின்னத்து’ பண்ணியவள் என்றான் டிரைவர். ஊரில்கூட சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. ஆண்களுக்கு ‘சின்னத்து’ செய்வதில் விஞ்ஞானம் இருக்கிறது – மதத்தையும் தாண்டிக்கொண்டு. பெண்களுக்கு ஏன்? சும்மா ஸ்டைலுக்கு! வீணாபோபானிக்கு சுன்னத் செய்திருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அலிமம்ஜாரிடம்தான் கேட்கவேண்டும்!

வீணாபோபானிக்கு ஃபோன் செய்யச் சொன்ன அடுத்த நொடியில் ஃபோன் வந்தது. ‘ஆபிதீன் சொல்லிட்டாரு. அவளாத்தான் இக்கிம்’ என்றார் கப்பமரைக்கார். அவள்தான்! சர்க்கார்., என்னை என்ன செய்கிறீர்கள்? நேற்றைய விசேஷத்தில் ஒரு தவறு செய்தேன். ‘இஸ்மு’வை மேற்கு நோக்கி அமர்ந்து ஓதி விட்டேன். கிழக்கில் அமர்ந்து ஓதியிருந்தால் நேரிலேயே வந்திருப்பாளோ அல்லது draft printer, laser printerஆக மாறியிருக்கமோ?! எப்படியோ, இந்த சின்னச் சின்ன அதிசயங்கள் போதும் இப்போது. மாற்றங்கள் வந்துகொண்டிருப்பதற்கு அறிகுறி.

‘சரி, மாற்றம் வந்திருக்கு.. வந்துகிட்டே இருக்கா? எதனாலெ வருதோ அது என்னா? மத்தவங்க யாருக்கு வரலையே… 25 வருடங்களுக்கு முன்னாலெ ஒரு ஆளைப் பார்த்தேன். இப்பவும் பார்த்தேன். அதேமாதிரிதான் இருக்கான். இப்ப உங்களுக்கு ஒரு சில வாரங்களுக்குள்ளே மாற்றங்கள் வருதே. காரணம் என்னா?’ – ‘S’ . 01-08.12.19954 கேஸட்.

‘நீங்க இக்கிறீங்க’ – சீடர்கள்

‘நான் இக்கிறேனா?! நான் கொடுத்த ‘ரியாலத்’துண்டு சொல்லுங்களேங்க!’ – ‘S’

இல்லை, ரியாலத்தும் ஈரலும்!

அக்ரிமெண்ட் டைப் அடித்து, மெடிகல் ரிஸல்ட் உள்ள லேபர் ஆஃபீஸூக்கு முதலாளி போக, என் ‘பத்தாகா’வும் வேண்டும் என்று நேற்று கப்பமரைக்கார் கேட்டார். என் பர்ஸ் எங்கே? அதில்தான் வைத்திருந்தேன். அரபுநாடுகள் அத்தனையிலும் அவைகளை உடம்பில்தான் வைத்துக்கொள்ள வேண்டும். ஜெராக்ஸை நம்ப மாட்டார்கள். மூளையைக் கசக்கிக்கொண்டு டென்சனாக ஆனேன். எங்கே வைத்தேன், அல்லது தொலைத்தேன்? சர்க்காரின் உருவம் தெரிந்தமாதிரி இருந்தது. ரிலாக்ஸ் ஆக உடம்பை வைத்துக்கொண்டு , அமைதியாக ஒரு கணம் அமர்ந்தேன். சுத்தமாக பர்ஸ் இருக்கும் இடம் தெரிந்தது. என் ஜோப்பு அல்ல! பேக்-அப் டிஸ்கெட் வைக்கிற அலமாரியில் வைத்திருக்கிறேன். சென்று பார்த்தேன். இருந்தது.

அமைதியாக உட்காரமுடியும் ஓரிடத்தில் , மணிக்கணக்காக இப்போது. இதேபோல் ஒரு சீடரும் சொல்கிறார். அந்த டிசம்பர் முதல்வார கேஸட்டில். ‘அசைவுகளில், எண்ண ஓட்டத்தில் மாறுதல் வரனும்’ என்று சர்க்கார் சொல்வதற்கு. ‘எங்கே, அலங்கார வாசல்லையா?’ என்று சர்க்கார் வெடைக்க ஒரே சிரிப்பு. ‘இல்லை இல்லை மாமா..’ – சீடர்.

‘அதானே பார்த்தேன்..! இங்கே உள்ளவனுவ நாயைப்பத்தி நாலுமணி நேரம் பேசியிருக்கானுவ அங்கே உட்கார்ந்து! இவ்வளவுக்கும், ‘பேச்சைக்குறை’ண்டு நான் மூணு மணிநேரம் பேசுனதை கேட்டுட்டுப் போயி!’ .

*

‘அப்பாற்பட்ட சக்தி ஒண்ணு நம்பள்ட்டெ நிக்கிது. நம்மளை ஏமாற வுடலேண்டு தெரியுது..’ – சீடர்

‘உண்மைதான். அப்பாற்பட்ட சக்திலாம் ஒண்ணுமில்லேங்க. நாமதான் அது! பிராக்டிஸ் வேலை செய்யும்போது , உண்மையான நாம அதுதான்!’ – ‘S’

*

இன்று சுகமாக வெளிக்கு இருந்துகொண்டிருக்கும்போது என் முன்னால் இருந்த பெரிய பிளாஸ்டிக் வாளியில் கண் சென்றது. அதன் மேல் , கைப்பிடி உள்ள குவளையை மாட்டியிருந்தேன். தண்ணீர் வாளியில் நிரம்பிக்கொண்டிருந்தது. அதன் அடியில் தண்ணீர் பட்டு, தண்ணீர் உயர உயர- வாளியிலிருந்து கழன்றுகொண்டு குவளை மிதக்க ஆரம்பித்தது. ஆரம்பத்திலேயே வாளியின் அடியில் அது அமர்ந்திருந்தால் , இவ்வளவு நேரம் மிதக்கும் சுகத்தை , இழக்காமல் இருந்திருக்கலாம். பிடிவாதம் அல்லது விதி. ஆனால் தண்ணீர் அதனைப் பொருட்படுத்தாது தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டது சந்தோஷம்தான். என்ன சுகம்..

**

21.08.1996

கிட்னியுடன் ஒரு பழைய புத்தகத்தின் ஜெராக்ஸையும் ஜெப்பார்நானா கொடுத்தார் அன்று. ‘ஹகீகத்துல் இன்சான்’. இரங்கூன் விக்டோரியா அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது. வருடம் 1902. ஜெராக்ஸ்கூட அப்போதுதான் எடுத்தமாதிரி இருந்தது. ரியாலத்திற்கு சம்பந்தமான பழைய புத்தகம் தன்னிடம் இருப்பதாக முன்பு ஜெப்பார் நானா சொல்லியிருந்தார்தான். அதை எங்கே வைத்தார் என்று தேடிக்கொண்டிருந்தார். ‘உங்கள்ட்டெ உள்ள புத்தகங்கள், சர்க்கார் கேஸட்கள் எல்லாத்துக்கும் ஒரு இன்டெக்ஸ் போட்டு லிஸ்ட் வச்சிக்கிட்டா , எது எது எந்த எந்த இடத்துல இக்கிதுண்டு ‘டக்’குண்டு கண்டுபுடிச்சிடலாம் நானா. நான்லாம் அப்படித்தான் வச்சிக்குறேன்’

‘நல்லதுதான் இப்படி செய்யிறது. அந்த லிஸ்ட்-ஐ கொடுங்களேன். எனக்கு ஏதாச்சும் தேவைப்படுதாண்டு பார்க்கலாம்’

‘அத மறந்துட்டு வூட்டுலெ வச்சிட்டு வந்துட்டேன் நானா!’

அவர் சிரித்தார். ஆனால் மறக்காமல் அன்று எடுத்துக்கொடுத்துவிட்டார். எழுதியது , வழுத்தூரில் அடங்கியிருக்கும் அவுலியாவாம். சர்க்கார் மஷாயிகுல் காமில் செய்து சய்யது அப்துல் காசிம் சாஹிபு காத்ரீகத்தஸல்லாஹூ சிர்ரஜூல்லஜீஜ்யவர்களால் இயற்றப்பட்டது என்று போட்டிருந்தது. அதனுடன் ‘அஸ்றாறுல் புறுஹான் பீ அகுமாலில் இன்சான்’ இருந்தது. இன்சான்கள் அமல் செய்வதற்கு வலுப்பமான ரகசியமென்று பேர் வைத்தார்களாம் அரபியில். (‘ஹகீகத்துல் இன்சா’னுக்கு மானுடர்களின் அடிமுடியை வெளியாக்கும் அறிவென்று அர்த்தம்)

‘அதுல் ஹக்காயிக்குவென்கிற கிதாபில் முகம்மதி புனுயசீறு நஹூமுஹூல்லா அவர்களால் ஒரு கல்பு சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது:-

அல்லாஹூத் தாஅலா (கதீது குதூசியில்) உண்மையான ஆதமுடைய மக்களின் சரீரத்திலொரு தசைக்கட்டியையுண்டு பண்ணியதிலொரு மாளிகையை யெடுத்தேன், அதில் நின்றொரு இதயத்தையெடுத்தேன், அதில் நின்றொரு கல்பையெடுத்தேன், அதில் நின்றொரு சிம்மாசனத்தையெடுத்தேன், அதில் நின்றொரு குகையையெடுத்தேன், அதில் நின்றொரு ‘அக்லை’யெடுத்தேன், அதில் நின்றொரு ‘றூகை’யெடுத்தேன், அதில் நின்றோரறிவையெடுத்தேன், அதில் நின்றொருரகசியத்தையெடுத்தேன், அந்த ரகசியத்தில் நானென்று திருவுளமாயிருக்கிற தாயும்…

அல்லா பட்ட கஷ்டத்தைவிட அதிகம் படவேண்டும் – அந்த புத்தகம் படிக்க. அரதமிஷ்க்ருதத்தில் வேறு எழுதப்பட்டிருந்தது! இந்த டைரியின் எழுத்துகூட நூறுவருடம் கழித்து , தமிழில்லாதது என்று சொல்லப்படலாம். எல்லாம் மாறுகிறது. மாறாதது , மனிதப்படைப்புகளில் மலமொன்றுதான் பாவா!

கல்புகள், இருப்புகள், நட்சத்திரங்கள் போக , இருப்புகள் படமாக வரையப்பட்டிருந்தன. விஷயங்கள் மிகக்கடினமான பாஷையில் சொல்லப்பட்டிருந்தன. அந்த காலத்திற்கு அது சரி. அதைப்புரிந்துகொள்கிற அளவுக்கு சீடர்களும் இருந்திருக்கிறார்கள்.

தளவாய் ம.சின்னவாப்பா மரைக்காயரென்கிற அகுமது பந்தர் மரைக்காயரவர்களும் சீடர்களுள் ஒருவர். அவர் நாக்கூர் என்று போட்டிருக்கவே விசாரித்ததில், ‘அட, நம்ம பர்மா பார்ட்டி’ என்று ஒருவர் பதில் சொன்னார். ஆக, நாக்கூர் ஆள்தான் அவர். சாற்றுகவி ஒன்று சாத்தியிருந்தார்.

‘தேனுகுக்குஞ் சோலை செறிதிரு வழுத்தூரின்
கோனப்துல்காசீமால் கோர்வைசெய்த பானலத்த
அஸ்றாறுல் புறுஹான்பீ அகுமாலுல்லானின்சானில்
விசுவாசம் வைப்பீர் விரைந்து’ என்று வெண்பா. பிறகு ஆசிரிய விருத்தம். பிறகு அறுசீர்க்கழிநெடிலயாசிரிய விருத்தம். விசுவாசம் வைத்தால்?

‘மீமில்லா அஹ்மதைத் தேடு … …மிஃ
றாஜில் நீ ஐனில்லா அறபியைக் கூடு
நீ இல்லாத் தலமெத்த நாடு.. அந்த
நியமம் தெரிந்து நீ நின்று கூற்றாடு’ என்று , பாவாவின் ஆனந்தக்களிப்பு வரலாம் விரைந்து.

‘நபி சல்லல்லாஹூ அலைஹிவசல்லமவர்கள் சைகாகிறவர் நபியைப் போலென்றும், எவனுக்கு சைகில்லையோ அவனுக்கு தீனில்லையென்றும் எவனுக்கு ஷைகு இல்லையோ அவனுக்கு சைகு சைத்தானென்றும் எவனொருவன் காமிலான சைகாயிருக்கவில்லையோ அவனிடத்திலொருவன் முறீதானால் அவனுக்கு அந்த ஷைகு சைத்தானென்றும் எவனுக்கு பைஅத்தில்லையோ அஹ்ல இஸ்லாமில் அவன் முஷ்ரிக்கென்றும் அறிவைத் தேடுவது ஆண் பெண்ணடங்கல் பேரிலும் பறுலாயிருக்குமென்றுந் திருவுளமாயிருக்கிறார்கள்’ என்று பாவா சொல்லியிருந்தார்கள்.

ரசூலுல்லாஹ் அப்படி திருவுளமாயிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் என் ‘சைகு 1996’ சொன்னது ஒன்று உண்டு :

‘அறிவை அடையிறதுக்கு மூணு வழி. ஒண்ணு, யோகம். இன்னொன்னு சூஃபிஸம். மூணாவது நம்ம ரூட். இதுலெ நம்ம ரூட்டு (மட்டும்) ஸ்பெஷல். எப்படி? கைமா போட்ட மசால் வடை மாதிரி!’

‘பர்மா பார்ட்டி’க்கு அந்த காலத்தில் வடை கிடைத்ததா, கிடைத்ததும் வடைதானா என்று தெரியவில்லை. வடையாக இருந்தாலும் இப்போது ஊசிப்போனது. சர்க்கார் சுடுகிற வடை இன்றைய நாக்கிற்கு இன்றே சுடுவது, கைமாவோடு அல்லது ஈரல்+கிட்னி+பல்லுகுத்தியோடு.

*

23.08.1996 வெள்ளி ‘செஷன்’ முடிந்து.

நேற்று இரவு , மஸ்தான் மரைக்கான் ஃப்ளாட் வாசலில் என்னசெய்வது இப்போது என்று நினைத்து நின்றுகொண்டிருந்தேன் ஐந்து நிமிடம். கதவு பூட்டப்பட்டிருந்தது. வியாழன், அரைநாள் ஆபீஸ் இருக்கிற ஆட்கள் வழக்கமாக இருப்பார்கள்தான். ஆனால் இன்று என்ன வேலையோ? மஸ்தான் மரைக்கானும் படத்திற்கு போய்விட்டானோ? இதற்கு மேல் ஹலால்தீன் ரூமுக்கு போவதற்கு அலுப்பு. இப்போது மஸ்தான் மரைக்கான் வந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்த அடுத்த நொடியில் பெரிய குசு சத்தம். மஸ்தான் மரைக்கான் வந்துவிட்டான்! அவன கையிலும் சாவி இல்லை ஆனால். இன்றைக்கு ஏதும் கோபப்பட விஷயமில்லையே என்று கோபப்பட்டு குதிப்பவன் அவன். குதித்தான். 6 வாரமாகிறது தௌஃபீக் கையில் சாவியை கொடுத்து டூப்ளிகேட் போடச்சொல்லி. அதைச் செய்யவில்லை, தன்னுடையதையும் எடுத்துக்கொண்டு ‘சோத்துப் பத்தாகா’வை வைத்துக்கொண்டு வெளியே சுற்றுகிறான்’ என்று. பஜாருக்குப் போய் , எதிர் ரூம் ஆளிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு வந்தான். நான் ரிலாக்ஸ்டாக நின்றுகொண்டிருந்தேன், தௌஃபீக்கைப்பற்றி யோசித்தபடி. மஸ்தான் மரைக்கான் வந்து கதவைத் திறந்ததும் கிச்சன் ஜன்னல் வழியாகக் குதித்து அவன் அறைக்குப் போனால் தௌஃபீக்கிடமிருந்து ·போன். ‘நானா.. டூப்ளிகேட் சாவியைப் போட்டுட்டேன்!’ என்றான். 6 வாரமாகப் போகிறது. நான் நினைத்தது இன்று. வடை!

இந்த வெள்ளி கேட்டது 08.03.1996 கேஸட். டென்சன் பற்றிப் பேசி சீடர்களை படு tensionக்கு உள்ளாக்கினார்கள் சர்க்கார். அது வரும் விதம், பூறும் விதம், அடங்கும் விதம்… நான் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘Tension வரும்போது அசையாதீங்க! ‘Take it in your straight’. Stimulationக்கும் Relaxationக்கும் இடையில் உள்ள நிலையைப்பற்றி பேசுகிறார்களாம்.

‘அந்த ரெண்டுக்கும் இடையிலே உள்ளதுக்கு பேரு என்னா சர்க்கார்?’ கவுஸ்மைதீன்

‘ம்.. இஞ்சிப் பச்சடி!’ – ‘S’

‘இஞ்சிப் பச்சடி’யை -பகல்தான் – மாங்காய்ப்பச்சடி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது உணர்ந்தேன். ஃபாத்திமா, உம்மா மாதிரி செய்திருந்தாள். அவள் வரும் 27-ஆம்தேதி ஊர் போகிறாள். இரண்டு வருடத்திற்கொருமுறை வந்து இரண்டுமாதம் மட்டும் மாப்பிள்ளை ஊரில் இருப்பதில் பிள்ளை தரிக்கவில்லை என்று இங்கே வந்து இரண்டு வருடம் சேர்ந்து இருந்தும் பிள்ளை தரிக்கவில்லை. வருத்தமாய்தான் திரும்பி போகிறாள். வருத்தத்துடனேயே நான் கொடுத்த சில்வர் ‘செட்’டையும்வாங்கிக் கொண்டாள். நெக்லஸ், கைச்செயின், காது தொங்கல்கள் கொண்டது. ஆபீஸில் போனமாசம் வாங்கியது. காஷ்மீரிலிருந்து வருகிறோம் என்று வந்தான். விற்கத் தெரியாத சேல்ஸ்மேன் முக்தார் அப்பாஸூக்கு வந்திருக்கிறானே! ‘ஊத்’ கொண்டு வந்தாலே ஒரணாவுக்கு கேட்கிற அர்பாப்களிடம் வேலை பார்ப்பவர்களிடம் காட்டினால்? ஆனால் டிசைன் மிக அழகாக இருக்கிறது என்று அஸ்மாவுக்காக வாங்கினேன். இப்போது ஊர்போய் , உறவை புதுப்பிக்கப்போகிற (?) தங்கைக்கு ஏதும் வாங்கிக்கொடுக்க கையில் காசில்லாமலேயே அந்த சில்வர்-செட்டைக் கொடுத்தேன். தங்கமாயிருந்தாலே சில்வர்தான் அன்பளிப்பு கொடுக்கிற நிலையில் செம்புக்கு சில்வர் கொடுப்பது மேலல்லவா? முகம் சுளித்தது அவளுக்கு. நான் டென்சன் அடையவில்லை. இதில் அடைய என்ன இருக்கிறது? ஆனால் அவள் ஊர் வரும் விபரத்தை செல்லாப்பா , ஊருக்கு ஃபோன் செய்து தெரியப்படுத்தியபோது உம்மா டெல்லி பிரிட்டிஷ் தூதரகத்திலிருந்து மறுபடியும் அப்ளிகேஷன்களை – பெயர்கள் சம்பந்தமாக – திருப்பி அனுப்பி விபரம் கேட்டிருக்கிறான் என்று சொல்லவே அவன் டென்சன் ஆகி என்னிடம் சொன்னான். நான் மாங்காப்பச்சடியை நிதானமாக சாப்பிட்டேன், அதே சுவையுடன்! நான் ‘H’. தீன்ஆ ‘H’. ஆபிதீனா?

இஞ்சிப்பச்சடி ஆபிதீன் என்று தூதரகத்திற்கு எழுதிப்போடவெண்டும். உடனே பாஸ்போர்ட் அனுப்பி விடுவான்!

*

நான் இஞ்சிப்பச்சடி என்று ரவூஃபுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால்தான் ஆகஸ்ட் முதல்தேதி கடிதம் எழுதும்போது ஜூலை மாதத்தில் ரியாலத்தில் இஸ்மு’வின் மாற்றங்களைச் சொல்லவில்லை போலும். மிக முக்கியமாக ‘ஜம்’ இப்போது 3 மணி நேரத்திலிருந்து 1 1/2 மணி நேரமாக ஆகிவிட்டதையும் தெரிவிக்கவில்லை. கலிஃபா ஆகிவிட்டானோ என்னவோ.. ஊரிலிருந்து வந்த தஸ்தகீர் கொண்டுவந்தது என்று ஜெப்பார்நானாதான் புது இஸ்முகளைக் கொடுத்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாரமாக :

a). பி ஜலாலத்திகல்லாஹூம்ம யா ஹக் யா முபீன் யா வதூது யா கரீம் இர்ரஹ்மி வஃபன்னி
யா முஜீபத்தஃவாத் உஆ கனி யா முக்னி
(19) Times . Body Gap = 6 அடி.

b). பி சத்துவத்திகல்லாஹ¤ம்ம யா வதூது யா கரீம் யா பாஷித் யா ரஹீம் இர்ரம்னி வஃபன்னி
யா முஜீபத்தஃவாத் யா கனி யா முக்னி
(14 ) times. Body Gap = 6 அடி.

c). பி சத்துவத்திகல்லாஹ¤ம்ம வபி ஜலாலத்திகல்லாஹூம்ம யா அஜீஜ் யா கரீம்
யா பாஷித் யா ரஹீம் இர்ரஹம்னி வஃபன்னி
யா முஜீபத்தஃவாத் யா கனி யா முக்னி
யா ஹக் யா முபீன்.. (17 ) times. Body Gap = 6 அடி.

குறிப்பு : ‘b’-இலிருந்து , கற்பனையில் நீரோடை மட்டும்தான். அந்த பசுமையான மலை இப்போது இல்லை.

(தொடரும்)

குறிப்புகள் :

‘S’ – சர்க்கார் என்பதன் சுருக்கம்
ஷரத்து – விதிமுறை
வஹி – இறைச்செய்தி
குஃப்ர் – இணைவைத்தல்
ஆயத் – (இறை) வசனம்
குப்பா (gubba) – மினாராவின் ‘தலை’
ரியாலத் – (‘SS’) பயிற்சி
தலாத்தீன் – 30, கம்ஸன் – 50 , சபஅன் – 70
சலவாத் – ரசூல்(ஸல்)ஐ புகழ்ந்து சொல்வது
அனல்ஹக் – நானே இறைவன்
சஹர்- நோன்பு பிடிக்கும் இரவுநேரம்
பல்லுகுத்தி – ஆட்டின் உள்பகுதிகளில் ஒன்று
இஸ்மு – மந்திரம்
ஃபஜர் – அதிகாலை தொழுகை
பாங்கு – தொழுகைக்கான அழைப்பொலி
லுஹர் – பகல்நேரத் தொழுகை
மிஸ்கின் – பிச்சைக்காரன்
பலுதியா – முனிசிபாலிடி
சுலைமானி – பால் கலக்காத டீ
அந மர்கஜ் உல் இல்ஹாம்.. – நான் அறிவின் மையம் (ஒரு மந்திரம்)
கந்துரா – அரபிகள் அணியும் நீள அங்கி
சின்னத்து – கத்னா எனப்படும் மார்க்கச் சடங்கு
பத்தாகா – ID
அலங்கார வாசல் – நாக்கூரில் ஒரு இடம்
அமல் – செயல்
கதீது குதூசி – குர்-ஆனில் இடம்பெறாத – ஹதீஸில் இடம்பெற்ற – இறைச்செய்தி
கல்பு -இதயம்
ரூஹ் – உயிர்
பாவா – பெரியோர்களை அழைக்கும் விதம். பிச்சைக்காரர்களையும் அப்படி அழைப்பதுண்டு!
சைகு – குரு

2 பின்னூட்டங்கள்

  1. தாஜ்... said,

    25/11/2017 இல் 13:43

    அத்தியாயம் 22
    இன்றைய வாசிப்புதான் வாசிப்பு!
    ஆட்டு ஈரல்+ பல்லுகுத்தி+கிட்னி சுவையோடு ‘கமகமா!’


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s