சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (04)

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள்

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03

அத்தியாயம் 04

ஆபிதீன்

*

‘Kinds of Knowledge’ கேஸட்டிலிருந்து சர்க்கார் (1975ன் பழைய மூச்சு!) :

‘ஒரு கருவியை வச்சி மூச்சை மாத்தலாம்டு இருந்தா உள்ளத்தை மாத்திடலாம்’

‘அன்றாட வாழ்க்கையில் அருமையான கருவியை, மிக உயர்வான கருவியை, தங்க ஊசியை தரையில் போட்டு தேய்ச்சிக்கிட்டிங்கிறீங்க. அதுவும், ஒங்க ஊட்டு தரையல்ல, ஊரான் வூட்டுத் தரை’.

‘புத்திசாலி யாரு? நல்லதை நேசிக்கிறவன், கெட்டதை தவிர்க்கிறவன்; நல்லதை தேடும் வழியில மத்தவனுக்கு தீங்கு செய்யாதவன். பணம் வேணுமா? மத்தவன் லைஃ·ப்லெ தலைவுடாம , மத்தவனுக்கு பாதிக்காம, தனக்கு தேவைப்பட்டதை அடையிறவன். பேயன் யாரு? நேர் மாத்தம். அது உங்களுக்கே தெரியும்!’

‘கீழே கண்ணாடி இக்கிது.. முகம் தெரியலே.. சூத்தையே காமிச்சுக்கிட்டிக்கிறோம் !’ (மூச்சைக் காட்டியிருக்கலாம்!)

‘அவனவன் வெற்றிக்கு அவனவன்தான் காரணம். அவனவன் தோல்விக்கு அவனவன்தான் காரணம்’ என்று தெரிவது Golden Time (குல்லு நப்ஸின் பிமா கஸபத்)’

*

‘நான் ஓதிப்பாக்க ஆரம்பிக்கும்போது என்ன செய்வேண்டு பாத்துக்கிறீங்களா நீங்க, என்ன செய்வேன்?’ – சர்க்கார்

‘தலையில கை வைப்பீங்க ‘ – சீடர்

‘அதுதான் தெரியுமே..வேறென்னா செய்வேன்?’

‘நார்மலா இரிப்பீங்க. நார்மல்ண்டு சொன்னா….’

‘சாதாரணம் !’

‘இல்லே…’ – சீடர் ரொம்பவும் இழுக்கவே , ‘அட, தெரியலேண்டு சொல்லுங்கங்க…’ என்று அலுத்துக்கொண்டு சர்க்கார் சொல்கிறார்கள் :

‘தலையிலே கை வைப்பேங்க. அது ‘டச்’சுக்கா வைக்கிறது. Body Touchக்காக. கை தலையிலெ பட்டாலும் சரிதான், மயிருலெ பட்டாலும் சரிதான், தொப்பில பட்டாலும் சரிதான், வச்சிக்கிட்டு கண்ணைப் பாப்பேன். அவர் ஏத்துக்கிறமாதிரி இந்தாத்தான் கண்ணைப் பாப்பேன், இல்லே ஃபோர்ஸ் பண்ணனும்டு இருந்தா கண்ணை மூடிக்குவேன். கண்ணை மூடுன உடனேயே மூச்சைப் பாப்பேன். எந்த frequencyலெ ஓடுதுண்டு பார்ப்பேன். அதே frequencyக்கு என் மூச்சைக் கொண்டு வருவேன். அல்லது என் frequencyக்கு அவன் வர்ற வரைக்கும் எதையாச்சும் முணுமுணுண்டு சொல்லிக்கிட்டிருப்பேன். ஓதுறது ரெண்டே ரெண்டு வார்த்தைதான், அல்லது நாலு வார்த்தை . யா ரஹீம், யா ரஹீம், யா ரஹீம், யா ரஹீம். அவ்வளவுதான்! அதுக்கு முன்னாடி என்னா செய்றேன்? மூச்சோட்டத்தைக் கன்ட்ரோல் பண்ணுறேன் நான். Synchronise பண்ணுறேன். உங்க மூச்சையும் என் மூச்சையும் இணைக்கிறேன் நான். Once இணைச்சிட்டேண்டா என்னுடைய Belief, என்னுடைய நம்பிக்கை உங்களுக்கு வந்துடும் – தானாகவே! நான் கொடுக்கிறேண்டு சொல்றபோது நீங்க வாங்க மாட்டேண்டு சொல்ல முடியாது. வாங்கித்தான் தீரனும்! அந்த நிலைக்கி வந்துடுவீங்க. அதுவரைக்கும் கண்ணை ஒரு நிலையில வச்சிக்குறது… ஒண்ணு நீங்க என் ரேங்க்குக்கு வந்துடனும், இல்லே நான் உங்க ரேங்க்குக்கு வந்துடுவேன் -Synchorise பண்ண. நான் உங்க ரேங்க்குக்கு வரனும்டு சொன்னா என் Beliefஐ ஸ்ட்ராங்கா வச்சிக்கனும். இல்லே, உங்க Belief எனக்கு வந்துடும். அப்ப உங்களை தூக்கனும்.. ம்… ஒரு நிமிஷம் ரெண்டு நிமிஷம் ஆகலாம்..கொஞ்சம் தூக்கிவுட்ட உடனே , அந்த frequencyக்கு வந்துடுவீங்க. என்னை மாதிரி மூச்சு வுட ஆரம்பிப்பிங்க. நல்லா தெரியும், தூக்கி வுட்ட உடனே , ‘அஹ பேருக்கு எத்தனை வார்த்தை வருது? இஸ்மாயில் தம்பி ராவுத்தரா? 4.., 5..,7’ ண்டு ஓதி ‘டக்’குண்டு கண்ணை சிமிட்டுவேன். முடிஞ்சவுடனே மொஹத்துல ஓதி ஊதுவேன். மொஹத்துல ஓதி ஊதுறது ஒரு ‘model’க்காக, ஒரு அளஹூக்காக. ஊத வேண்டியதில்லே..’

‘சரி சர்க்கார்.. எதிரிலே இல்லாத ஆளுக்கு?’

‘கற்பனையிலெ வர்றாஹல்லெ? என் மூச்சை அஹலுக்கு அனுப்புறேன்!’

‘நூறு பேருக்கு ஒரே மாதிரி பேரு இக்கிம். அப்ப எப்படி இன்னாருக்குத்தாண்டு அனுப்புவீங்க?’ – அட, புத்திசாலி மாணவரும் இருக்கிறாரா?

‘பொதுவா ஜனங்களுக்கு செய்றோம்..பேருல என்ன இக்கிது? சின்னதம்பிண்டு உங்க பேரு இக்கிது..பேர் தெரியாட்டி ‘ஏய் மனிதனே..’ண்டு கூப்பிடலாமுல்லே?’

‘அப்ப..எந்த மனுஷண்டு..?’

‘அட , நான் யாரை நெனைக்கிறேனோ அவங்களுக்குத்தானேங்க.. ஒரு குரூப்புக்கு நான் ஹெல்ப் பண்றேன். குரூப்புக்கு ஓதிப் பாக்குறேன். அப்ப குரூப்புண்டு ஒண்ணு இக்கிதா இல்லையா?’

‘சர்க்கார் நான் அவநம்பிக்கையிலெ கேக்கலே..தெரியாமதான் கேக்குறேன்’

‘தெரியுது, சொல்லுங்க’

‘ஆளைப்பாக்காம எப்ப…’ – மறுஇழுப்பு. இந்தமுறை பயந்துகொண்டு வருகிறது.

‘நான்தான் ஃபோட்டோவை கேக்குறேன்ல?’

‘ஃபோட்டோவா?’

‘ம்… என்னெட்டெ நெறயா இக்கிது. முக்கியமான வேலைண்டா ஃபோட்டோ கேட்பேன் நான். அதாவது சில காரியம் இக்கிது பாருங்க.. எனக்கே தெரியும், இந்த காரியத்துக்குத்தான் வந்திக்கிறாஹாண்டு. இது ரொம்ப சிம்பிள், கஷ்டமில்லேண்டு. இதை அவங்களே சமாளிக்கலாம். Procedure மட்டும் பட்டும்படாம சொல்லிக் கொடுத்தா போதும். நம்ம அவங்களுக்கு ஹெல்ப் பண்ணித்தான் தீரனும்டு கட்டம் வரும்போது ஃபோட்டோ கொண்டு வாங்கம்பேன். ஃபோட்டோவைப் பாத்தபிறகு , ‘இல்முல் க்யாஃபா’ண்டு ஒரு ‘இல்மு’ ஒண்ணு இக்கிது. மொஹத்தை அத வச்சிப்பாத்தா அவர்ட குணம் என்னாண்டு தெரியும், அதை வச்சி ஃபோகஸ் பண்ணிடுவேன்’

*

இந்த கேஸட் நண்பன் ரவூஃப், ‘Imagination’ என்று தலைப்பிட்டு கொடுத்த கேஸட்தான். ஜெப்பார் நானா , ‘Kinds of Knowledge’ என்கிறார். ஆளாளுக்கு ஒரு தலைப்பா? நான் ‘Frequency’ என்று வைக்க வேண்டியதுதான்! அதுபோகட்டும், தலையில் கை வைத்துத்தான் சர்க்காருக்கு அவன் Negativity புரிய வேண்டுமா? ஊரில் தாவுதுகுட்டி சொன்னார் ஒரு சம்பவம். மத்திய ரயில்வே அமைச்சர் (முன்னாள்!) ஒருவர் தன் குடும்பத்தோடு பார்க்க வந்தாராம் சர்க்காரை – போய்ப் பார்ப்போமே என்று. எல்லோரும் சொல்கிறார்களே என்றிருக்கும். ஆனால் முகத்தில் அவநம்பிக்கைக் களை. சர்க்கார் ஒரு நிமிடம் அவர் மகளைப் பாத்துவிட்டு தன் Calculatorஐ தட்டி , ‘இந்தப் பெண் காலேஜ் விட்டு இன்றோடு 51 நாளாகப் போகிறது’ என்றிருக்கிறார்கள். அப்போதுதான் அமைச்சரும் அவர் குடும்பமும் சர்க்காரைப் படித்திருக்கிறது – ஒரு பக்கம்! சர்க்கார் எத்தனையோ வெளியூரில் உள்ள நபர்களுக்கு ஃபோனில்தான் ஓதி ஊதுகிறார்கள். முக்கியமாய் சில டாக்டர்களின் மனைவிகளுக்கு. Frequency!

*

‘நாம உடுற ஓவ்வொரு மூச்சும் நம்மை control பண்ணுது. இதுக்கு நீங்க Bodyஐ பார்க்க வாணாம். Mindஐ பார்க்க வாணாம். காட்டுக்கு போக வாணாம். ஹபீப்நூர்தீன் வூட்டுக்குப் போவ வாணாம். ஒண்..ணும் செய்யாதீங்க..மூச்சை மட்டும் கண்ட்ரோல் பண்ணுங்க. Only Ten Minutes – Daily!’

*

‘First Golden Time : எனக்கு வந்த வெற்றி தோல்விகளுக்கு நான்தான் காரணம்டு உணர்வது – Understanding.
Second Golden Time : இந்த தோல்வியை வெற்றியாக மாற்ற முடியும், இந்த வெற்றியை ‘டபுள்’ வெற்றியாக மாத்த முடியும், இந்த மூணாவது வெற்றியை Triple வெற்றியாக மாத்த முடியுங்குற நம்பிக்கை’

*

ஒவ்வொரு வெற்றியும் ஒவ்வொரு நஷ்டமும் ஒவ்வொரு இடையூறும் அதற்கு இணையான அல்லது பெரிய நன்மையை அடக்கி இருக்கிறது, மறைத்து வைத்திருக்கிறது – பழமொழி.
உதாரணம் : மொரார்ஜி, நேருவுக்கு வந்த ‘பவர்’ சிறையிலிருந்து! (மூத்திரமல்லவா சர்க்கார்?)
விளக்கமாக : ‘நீச்சோறை திண்டு சதை போட்டவன் எத்தனையோ பேரு , கோழி பிரியாணியை திண்டு ஒட்டிப் போனவன் எத்தனையோ பேரு இக்கிறான்!’

*

‘சர்க்கார் சொன்னாஹாண்டு பண்ணக்கூடாது. சொன்ன மாதிரி பண்ணனும். (Faithfullness வரலேண்டா பயிற்சி பண்ண வேணாம், வேலை செய்யாது!)’ – சொல்லிவிட்டு மெதுவாகச் சொல்கிறார்கள். ‘என்னை நம்பாம பண்ணுனாலும் அதுக்குண்டான பவர் கொஞ்சம் வரத்தான் செய்யும்!’. (உம்.: தொழுகை!)

*

‘நான் சொல்றபடி – உள்ளே உள்ள ஒளி வெளித்தெரியிற அளவுக்கு நீங்க செஞ்சீங்கண்டா ஒரு மாசத்துலெ நான் அல்லாஹ்வெ காட்டுறேன்!’ . ஒரு பாடலும் வருகிறது :’கண்ண மூடு , காதை மூடு , நாவை மூடு, ஆண்டவன் ‘தஜல்லி’ (பிரசன்னம்) ஆகாவிட்டால் என்னைப்பார்த்து சிரி’ என்ற அர்த்தத்தில்.

*

நாம் வளர ஆசைப்படும் குடும்பம், ஊர்:

‘ஒரு கன்று வச்சி வளர்த்தீங்கண்டா ஆடு திங்கிம், மாடு திங்கிம், கோழி திங்கிம், குதிரை திங்கும். நீங்க, கைக்கு வேலையில்லேண்டு சொன்னா பிச்சிப்பிச்சி விளையாடுவீங்க. புள்ளக்கி வெளையாட்டுக் கருவி இல்லேண்டா பூவை பிச்சிக் கொடுப்பீங்க, இந்த தொல்லைகளையெல்லாம் தாண்டிக்கிட்டு அது வளரனும். வளர்ந்து பெரிய மரமா போனிச்சிண்டா அதுட நிழல்லெ போயி, எதுலாம் அழிக்க நினைச்சுதோ அதுலாம் குடியிருக்க ஆரம்பிக்கும்.’

‘ஒரு சக்தி நம்மட்ட வளர்ந்திச்சிண்டா அதை யூஸ் பண்றதுக்குள்ள சூழ்நிலை தனக்குத்தானாகவே உண்டு பண்ணும்’

‘உள்ளூரில் வளர்வது கஷ்டம். பாசம் புடவையை உடுத்திக்கிட்டு வந்து மறைக்கும்!’

‘ஆத்மீகத்துறை எல்லாவற்றையும் கடந்தது. மூளையைக் கடந்தது. அறிவைக் கடந்தது. தர்க்க வாதத்துக்கு அப்பாற்பட்டது. அந்தச் சுவை, அந்த இன்பம், அதை நான் பொதுவா விளக்கிக் காட்டுனா உங்கள்ட்டெ எந்த கருவி இக்கிதோ அத வச்சித்தான் நீங்க பாப்பீங்க. புரிஞ்சிக்கிற பாதை என்னா? நாமாகவே சுவைச்சு பாக்குறது! நாமாகவே சுவைக்கலாம். சொல்லக்கேட்டோ ,புத்தகத்தைப் படிச்சோ, வெறும் கற்பனை பண்ணியோ அந்த சுவையை அடையவே முடியாது. Impossible. காரணம் என்னா? சுவைக்கிற எந்தக் கருவியும் நேரடியா இந்தாத்தான் சுவைக்கிறோம். கற்பனையிலெ சுவைக்கத் தெரியலே!’ ( Imagination பயிற்சி எடுத்தவங்களுக்கு சுவைக்கத் தெரியும் என்கிறார்கள்)

‘Instruction கொடுத்து , விளக்கம் கொடுத்து , இன்னதுதான் இன்னதுண்டு ஷெய்கு (குரு) சொல்லிக்காட்டுனா புரியும். அப்படி சொல்லிக் காட்டுனா மட்டும் எப்படிப் புரியும்டு கேப்பீங்க நீங்க! சொல்லிக் காட்டிட்டு சும்மா வுட்டுட மாட்டாஹலே, சொல்லிக் காட்டி , இறக்கில வுட்டுப்புடுவாஹா!’ (Accidentalஆ சுவற்றை முட்டி, சுவற்றை மோந்து பார்த்ததாகச் சொல்லும் ‘அறிவு’க்கு இது நேர்மாற்றம்)

‘கராமத்’தை நிகழ்த்துறதுக்கோ அதை புரிஞ்சிக்கிறதுக்கோ ஒரு பக்குவம் இருக்கு. அந்தப் பக்குவம் பெரியவங்கள்ட்டெ எப்படி வளர்ந்திச்சீண்டு நீங்க பாக்கனும்’ – புத்தகம் (சரித்திரம்) படிக்கும்போது, கஷ்டப்பட்டபோது அந்த பெரியவர்களின் மனம் எப்படி திரண்டது என்பதை உணர வேண்டும். இதை, அந்த புத்தகம் வார்த்தைகளால் விளக்கியிருக்காது – இயலாததால்’

*

‘சீனா பஸீனா’ (நெஞ்சிலிருந்து நெஞ்சு) : எழுதப்படாத இல்மு , வரையறுக்க முடியாத இல்மு.

‘அறிவு இரண்டு வகை, 1. இல்முல் மக்தூபுன் (எழுதப்பட்ட , வரையறுக்கப்பட்ட அறிவு). 2. இல்முல் மர்க்கூபுன். எழுதப்படாத அறிவு, வரையறுக்க முடியாத அறிவு) எழுதுறதுண்டா என்னா? எழுதி வைக்க முடியாதே, இயலாதே! சீனியோட சுவை இன்னதுண்டு எழுத முடியுமா? மிளகாய்ட உறைப்பு இன்னதுண்டு எழுத முடியுமா?! அப்ப, ‘மக்தூபி’யான ‘இல்மு’க்கும் ‘மர்க்கூபி’யான ‘இல்மு’க்கும் மாறுபட்ட மாதிரி , ‘கைர மர்கூபி’யான ‘இல்மு’ இக்கிது. எழுதப்படாத, Organize பண்ணப்படாத ‘இல்மு’ இக்கிது. அந்த ‘இல்மு’ படிச்சிப் பாக்குறதல்ல, சுவைச்சிப் பாக்குறது. எனவே இது ‘, இல்முல் விஜ்தானி’ண்டு பேரு. ‘விஜ்தா’ண்டா வளர்ந்து பெறுகிற அறிவு. வேணுண்டே கையை நெருக்கி நெருக்கி வச்சு தொட்டுப் பாத்து இதுதான் சூடுண்டு உணர்றது. இதோட ..நாளக்கி நெனச்சிப் பாக்கும்போது சூடு இப்படித்தாண்டு விளக்க நம்மால முடியும். இந்த ‘இல்மு’, எழுதப்படாதது; வரையறுக்கப்படாதது. எந்த கிதாபுலேயும் கிடையாது. யாரும் பச்சையா சொல்ல மாட்டாங்க. உணர்ற பாதையை சொல்வாங்க. மம்மட்டிக்கா தண்ணிண்டு பேரு? ஆனா மம்மட்டியாலெதான் தண்ணி வருது! அதே மாதிரி மம்மட்டிதான் கையில கொடுப்பாஹா. தோண்டுனா வெளி வர்றதுதான் ‘இல்மு’. தோண்டனும். அதனால்தான் சொல்றேன். நீங்க அணுவளவு கூட என்னெட்ட மறைக்கக்கூடாது. நான் ஒரு அணுவளவு கூட தெளிவா சொல்ல மாட்டேண்டு! வஞ்சகம் அல்ல, புரியிற அளவு தூக்கி வைக்கனுங்குறதுக்காக! உங்கள்ட்டேர்ந்து உண்மையைப் பூரா வாங்கிக்குறது (ஆனா) உங்களுக்கு உண்மையே சொல்லாதது வஞ்சகம்தான். எப்ப வஞ்சகம்? Friendஆ இருந்தா வஞ்சகம். ஷெய்கு – சிஷ்யப்புள்ளைண்டா வஞ்சகம் இல்லே. அதுதான் கரெக்ட்டு. இங்கே உண்மையெ சொன்னா வஞ்சகம். ஏன்? புரியாது, குழம்பிடுவான்!’

‘வ அல்லம்னாஹூ மில்லதூனா இல்மா’ (நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம் – எம்மிடமிருந்து (‘இல்ம்’-ஐ). சுலைமான் நபிக்கு இறைவன் கொடுத்த ‘இல்மு’. ‘இல்முல் லஃதுனி’ண்டு இதுக்குப் பெயருண்டு. இந்த ‘இல்மு’வை கொடுக்குறது ஆண்டவன்ற அருட்கொடைண்டு கருதப்படுது. உலகத்தில் உள்ள எல்லா அருட்கொடைகளுக்கும் சிகரம் வச்ச மாதிரி. எல்லாத்துக்கும் அஸ்திவாரம் இதுதான்; உச்சி இதுதான். ‘இல்மு’ண்டு தேடுனா இந்த இல்மைத்தான் தேடனும். இந்த இல்மு ஒரு மனுஷனுக்கு கிடைச்சிடுச்சிண்டா அவன் கொடுத்து வச்சவண்டு சொல்லலாமுலெ? எனவெ இந்த இல்மை ‘ஹிப்பத்’ (அன்பளிப்பு)ண்டு சொல்லலாம். எனவே இந்த இல்முக்கு ‘இல்ம வஹாபி’ண்டு பேரு’

***

07.02.1996 5:15 pm

ரவூஃபிடம் பேசினேன். ஓம்பூர் ‘கோட்’ மாறிவிட்டது. அவன் அனுப்பிய ‘நோட்ஸ்’ வந்து சேர்ந்தது பற்றி உடவே தெரியப்படுத்த வேண்டும் என்று – நாலைந்து நாட்களுக்குப் பிறகு – தொடர்பு கொண்டேன். வெள்ளிக்கிழமை, சர்க்காரை சந்திக்க வந்துவிடுவதால் பாதிக்கட்டணத்தில் நான் இங்கிருந்து தொலைபேசுவதை தவிர்த்து விடுகிறான். அதனால் இந்த புதன். பொன் கிடைத்தாலும் ரவூஃப் கிடைக்க வேண்டுமே!

‘டேய்.., கிடைச்சிடுச்சி ..’ என்றேன்

‘ம்.. யூஸ்ஃபுல்லா இந்திச்சா?’

‘என்னா இந்தாலும் கேஸட் மாதிரி livelyயா இல்லடா. ‘நோட்ஸ்’எழுதியிக்கிறே… ஆனா, கேஸட் கேட்டா நான் அதைவிட அதிகமா புரிஞ்சிக்குவேனில்லையா?’

‘அதுவும் சரிதான். கேஸட் அனுப்ப முயற்சி நடந்துக்கிட்டிக்கிதுப்பா’

‘அப்படியா? லெட்டர் போட்டதுக்கே ஒன்றரை மாசம் கழிச்சி பதில் போடுறே.. ஏன், அப்படித்தான் செய்யனும்டு சர்க்கார் சொன்னாஹலா? இது ஒரு பயிற்சியோ?’

சிரித்தான் ரவூஃப். கேஸட் கேட்டு, பிறகு எழுதி அனுப்புவதில் தாமதமாகிவிட்டதாம்.

‘பரவாயில்லே..இதே மாதிரி அனுப்பு. ‘யூஸ்ஃபுல்’லாத்தான் இக்கிது. நானும்தான் கேஸட் கேட்டு கேட்டு, என் பாணியில எழுத ஆரம்பிச்சிக்கிறேன்’ என்றேன்.

‘ரொம்ப நல்லது. சர்க்கார் அப்படித்தான் செய்யச் சொன்னாஹா’

‘ஆனா என் ‘நோட்ஸ்’ வித்யாஸமானது ரவூஃப்’

‘எப்படி?’

‘உன் ‘நோட்ஸ்’லெ முக்கியமான பாயிண்ட்ஸ் மட்டும் இக்கிம். என் ‘நோட்ஸ்’ வேறமாதிரி. அத தவிர்த்து மத்ததுலாம் இக்கிம்.’

‘ரெண்டும் ஒண்ணுதான்’ என்றான் ரவூஃப். ஆத்மீகம்தான்!

*

‘Kinds of knowledge’ கேஸட்டின் தொடர்ச்சி:

‘இமாம் கஜ்ஜாலி ரஹமத்துல்லாஹி ‘இல்மு லஃதுனி’ பத்தி ஒரு சின்ன புத்தகம் எழுதியிருக்காஹா. அந்த கிதாபுட சாரம் என்ன? ம்… சாரம் என்னா? -சூப்புத் தண்ணி ஊத்துங்களேன், ஆறிடப்போவுது – ‘ராவெல்லாம் தூங்குது.. நான் உன் நினைவா இக்கிறேன் எப்போதும். உன்னுடைய காதல் என் நெஞ்சை எரிச்சிக்கிட்டிக்கிது..’ – தமிழ்லெ சொன்னேன், காதல்னா ஒடனே பயந்துடாதீங்க! ‘இஷ்க்’. காதலைவிட பலமடங்கு மேலே உள்ளது – ‘இஷ்க்’கோட தீ அல்லும் பகலும் எரிச்சிக்கிட்டிக்கிது. ஓயாம ஒழியாம தொடர்ந்த மாதிரி எரிச்சிக்கிட்டே இக்கிது’ண்டு. இன்னொரு சூஃபி சொன்னாஹா, ‘அல்லாஹ்க்கும் எனக்கும் ஒண்ணேகால் வயசுதான் (வித்யாசம்)’டாஹா.. புரியுதா இது? பெரிய சூஃபி அஹ. இப்படி எழுதப்படுற வார்த்தைக்குலாம் ‘சத்தஹ்’ண்டு பேரு. அவங்க ரேங்க்குக்கு யார் வந்தாஹலோ அஹலுக்கு மட்டும்தான் புரியும். ‘மேற்குல பார், பார்வையோட கடைசி எல்லையிலெ நீல நாடா ஒண்ணு ஓடுது, அதுக்கு மேலே எறும்பு ஒண்ணு தத்தளிச்சிக்கிட்டு போவுது..’ அப்படீண்டா, இங்கே அலங்கார வாசல்லேர்ந்து பாக்குறதில்லே.. நீல நாடாவுமில்லே, எறும்புமில்லே.. பெரியமினாராவுக்கு மேலே , ஏழாவது தட்டுலெ நிண்டு பாத்தீங்கண்டா கடல்ங்குற நீல நாடா தெரியும், எறும்புங்கிற கப்பல் ஓடுறது தெரியும். இப்படித்தான் சொன்னாங்க அவங்க. இதெ கிதாபுலெ எப்படி எழுத முடியும்? எழுதுவாஹாண்டு எப்படி எதிர்பாக்குறீங்க? வாங்க வாப்பா.. தொழுவுங்க வாப்பாண்டு சொன்னதுக்கே கட்டிவச்சி தோலை உரிச்சிட்டீங்க! மார்க்கத்துக்கு வாங்கண்டு காசு கேட்டேனா, கூலிதான் கேட்டேனா, இல்லே சூப்பு வாங்கித்தான் கேட்டேனா? மார்க்கத்துக்கு வாங்கண்டு சொன்னதுக்காக கையை உடைச்சி, காலை உடைச்சி பல்லை உடைச்சிப் போட்டீங்க. ஆண்டவனை நெனைங்கண்டு சொல்லிப்புட்டு அரிவாளைப்பாத்து பயந்து மரத்துல போயி பூந்தாஹா ஒரு சூஃபி! மரத்தோட சேத்து வச்சி அறுத்தானுவ! நாசூக்கா சொன்னதுக்கே இப்படீண்டா பச்சை பச்சையா சொன்னா என்னா செய்ய மாட்டிங்க? நீங்க கெட்டவங்களல்ல. மனுஷ இனத்தோட தலையெழுத்து அப்படித்தான். சாக்ரடீஸை விஷம் கொடுத்து சாகடிச்சிட்டுத்தானே இப்ப பாராட்டிக்கிட்டிக்கிறோம்! நாக்கூருக்கு ‘எஜமான்’ வந்தாஹாண்டா.. நாக்-கூருக்கு வரலெ. நாகக்காட்டுக்கு வந்தாஹா. வந்தபிறகு ஊர் வந்திச்சி. ஊரா இருந்திச்சிண்டா ஜனங்க ஏத்துக்கிட்டிக்கமாட்டாஹா. எதிர்ப்பு கோஷ்டி கிளம்பியிக்கிம். இதனாலெ இந்த ‘இல்மு’ எவ்வளவு உசத்தியானதுண்டு நமக்கு தெரியும். இதுக்காக அரைமணிநேரம், ஒரு மணி நேரம் தினமும் பாடுபட்டோமுண்டா நல்ல லைஃப்லெ பாடுபட வேண்டிய அவசியமே இல்லேண்டு தெரிஞ்சிபொய்டும். நாம நெனச்சதுலாம் கிடைக்கும். எல்லா ‘நியமத்’தும் கிடைக்கும். கஷ்டப்படாம (எதுவும்) கிடைக்காது!’

*

கற்பனை :

‘பீடி கடைண்டு நெனைக்கிறவரைக்கும் பீடி கடைதான் அது. லட்சம் லட்சமா கொழிக்கிற இடம்டு நெனைச்சா லட்சம் லட்சமா கொழிக்கிற இடம்தான் அது. நம்ம சக்தியையெல்லாம் ‘இதுக்கு மேலே இல்லே, இதுக்கு மேலே இல்லே’ண்டு குறைச்சி மதிக்க ஆரம்பிச்சிடுறோம். எந்த அளவுக்கு குறைச்சி மதிக்கிறோமா அந்த அளவுதான் கிடைக்கிது! பெரும் பெரும் ‘நியமத்’ கிடைக்க மாட்டேங்குது. ஏன்? மனசு தாங்க மாட்டேங்குது. இதுக்கு என்னா காரணம்? தொடர்ந்த மாதிரி நெகடிவா நெனைச்சி நெனச்சி பழக்கப்பட்டது. நெனைப்பு கற்பனைதானே? இப்ப கற்பனையோட அவசியம் தெரியுதா?’

குழுச் செயல்பாடு :

‘ரெண்டு Mind ஒண்ணா இணைஞ்சி அங்கே மூணாவது Mind ஃபார்ம் ஆகும். அது இந்த ரெண்டு Mindஐ விட ரொம்ப பவர்ஃபுல் ஆனது. ரொம்ப சக்தி மிக்கது. ரொம்ப அறிவானது. ரொம்ப தெளிவு படைச்சது. உங்களுக்கு தேவைப்படுற informationஐ கொடுக்கும். தேவைப்படுற சக்தியை, செல்வத்தைக் கொடுக்கும். எல்லாத்தையும் கொடுக்கும். உட்கார்ந்திருக்கிற முறை, Correct Postureலெ இக்கினும். Mind ஒரே நோக்கத்துல இக்கினும். குழப்பம் இருந்தா உங்க Mind Divert ஆகுறதோட மத்த Mindஉம் divert ஆகும்.’

*

குண்டுமணி :

‘ரஹஸ்யம் என்பது போர்வைக்குள் மறைக்கப்பட்டது. குப்பைக்குள் கிடக்கிற குண்டுமணி மாதிரி. அந்த குண்டுமணிக்கு மேலே ஏன் குப்பை வந்திச்சிண்டா குண்டுமணியை யாரும் recognise பண்ணலே. புரிஞ்சிக்கலே.. புரிஞ்சி கொள்ளாததோட அதோட இடத்துலே வேறொரு பொருளை வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. எனவே , அது குண்டுமணியை மறைச்சிச்சி. அந்த குண்டுமணியை மறைக்கிற பொருளை இன்னொரு பொருள் வச்சி மறைச்சாங்க. இதேமாதிரி பத்து தடவை மறைச்சவுடனே குண்டுமணிக்கு மேலே பத்து திரை வுழுந்திடுச்சி. அந்த திரையை யார் கிழிக்கிறது? இது ஒரு வருஷத்துலெ வந்ததல்லவே.. ஆயிரக்கணக்கான வருஷமா போடப்பட்ட திரையிலெ இது! பயிற்சியாலே இதை களைஞ்சி எறியறதுண்டா கஷ்டம்தானே? களைஞ்சி எறிஞ்சா அப்ப உண்மை தெரியும் நாம கூப்புடுற கூப்பாட்டுக்கு ஆண்டவன் பதில் கொடுத்துக்கிட்டிக்கிறாண்டு. நமக்கு தெரியலே.’

*

‘எனக்கென்னா? சொல்லனும், திருத்தனும், வழிக்கு கொண்டு வரனும். பண்படுத்தனுங்குற வேலைதான். தவிர, இது பொறுப்புதானே தவிர, கவலையோ வேதனையோ துன்பமோ அல்ல இது. இதுல அப்பப்ப வெற்றிகள் வரும்போது எனக்கு ஏற்படுற மகிழ்ச்சி இக்கிது பாத்தீங்களா? அது ரொம்ப பெருசு! எனக்கிப்போ என்னா பிரச்சனை? நான் சொல்றது உங்களுக்கு புரியாட்டி பிரச்னை. விளக்குறதுக்கு எனக்கு பாதை கிடைக்காம போன பிரச்னை. அதைவிட பெரிய பிரச்னை நான் சொல்றதை நீங்க காதுல வாங்கிட்டு , அப்புறம் செய்யாம இக்கிறது’

*

ஒரு ஹதீஸ் : ‘மத்தவங்களுக்கு பணத்தைக் கொடுத்து உதவி செய். உணவைக் கொடுத்து உதவி செய். இல்லே, இனிமையா வார்த்தைகளை சொல்லி மனசை மகிழ வை. அதும் முடியாட்டி மனசாலே துஆ செய்’

*

‘மீண்டும் மீண்டும் ‘ப்ளான்’ பண்ணிக்கிட்டேயிக்கினும். Mindஐ Blankஆ வைக்கக்கூடாது. மேலும் மேலும் போய்க்கிட்டேயிக்கினும்’

*

‘நான் ‘ப்ளான்’ பண்ணி வரையறுத்து வச்சிட்டேன். இன்ன காரியம் இவ்வளவு நாள்லெ முடியும்; அதுக்குப் பிறகு அடுத்த ஸ்டெப் இது; அதுக்கடுத்தது இதுண்டு வரையறுத்து வச்சிட்டேன். எனவே மேற்கொண்டு யோசனை பன்றதுக்கு தேவையில்லைதானே சர்க்கார்?’ – இப்படி ஒரு சீடர் சொன்னதைச் சொல்லும் சர்க்கார், பெண் மாணவியை (சீடி?) , ‘இதுக்கு நான் என்னா பதில் சொல்லியிக்கிறேன்? கேஸட்டை 50 தரம் கேக்குறீங்கள்லே.. சொல்லுங்களேன்’ என்று கேட்கிறார்கள்.

‘ஒண்ணும் இல்லாம இந்தாக்கா வேற ஒண்ணு பூந்துடும்டு..’ – மாணவி முடிக்கிறது.

‘Very Good. Very Good! டீ குடிக்கிறீங்களா, கொத்துபுராட்டா சாப்புடுறீங்களா நீங்க?! ஷோக்கான பதிலு இது. சும்மா இருந்தா நெகடிவ் பூந்துடும். ஆஹா’- சர்க்காருக்கு குஷி.

*

‘Mindஐ Blankஆ வைக்கக்கூடாது. அது ஒரு நிலம். அதுலெ அரிசியை போடுங்க, கோதுமையை போடுங்க, அல்லது இப்ராஹீம் தம்பி ராவுத்தரை போடுங்க! சும்மா இருக்கட்டுமேண்டு வச்சிங்க…விஷ வித்துக்கள்லாம் வளர ஆரம்பிக்கும். அப்புறம் உங்களாலேயே களைஞ்செறிய முடியாது. அதனாலெ Mind எப்பவும் 24Hours work பண்ணிக்கிட்டே இரிக்கினும்ங்குறேன் நான். அதுவும் பாசிடிவா work பண்ணிக்கிட்டேயிக்கினும். சும்மா இருக்கவே கூடாது. சும்மா இருக்குற நேரம் தூங்குற நேரம்தான். அப்ப கூட சும்மா இக்கிறது இல்லே. இன்னும் சொல்லப்போனா முக்கியமான செய்திலாம் தூக்கதுலதான் வரும். அட, கெட்டதை ஏன் நெனைக்கிறா? நல்லதை நினையேன்… வாங்குன கடனை கொடுக்க முடியாம பொய்டுமோங்குறதுக்குப் பதிலா கடனை கொடுத்துப்புட்டு அவனுக்கும் கடன் கொடுக்கலாம்டு நெனையேன். ரெண்டும் ஒண்ணுதான். சொல்லப்போனா இதுலெ சக்தி குறைச்சல்’ (‘வெற்றி அடைபவனை விட தோல்வி அடைபவன் சக்தியை அதிகமா செலவு செய்ய வேண்டியிக்கிம்’)

*

மனசுக்கு பாரம் தேவை :

‘மாற்றமே அடையாத தன் பழைய நண்பனைப் பற்றி சொல்லிவிட்டு சர்க்கார் தொடர்கிறார்கள் : ‘ நான் கம்ப்ளீட்டா மாறிட்டேன்,  ரெண்டு மூணு வருஷத்துக்கு முந்தி மாதிரி இல்லே.. அடிப்படை கண்ணோட்டம் அதே மாதிரி இக்கெலாமே தவிர எவ்வளவோ மாறுதல். இந்த மாறுதலுக்கு காரணம் நான் பட்ட கஷ்டம், வேதனை.. வேதனை மட்டுமல்ல, அந்த வேதனையை சொல்லி வெளிலே ஆற்றிக்கொள்ளாம இருந்தது காரணம். வெளிலெ வேதனையெ சொன்னாக்கா நீங்க சொல்வீங்க ‘சர்க்கார் கஷ்டப்படுறாஹா’ம்பீங்க. எனக்கு ‘ஜில்’லுங்கும். ‘பரவால்லே… நமக்காக அனுதாபப் படுறதுக்கு ஒரு ஆளாவது இக்கிதே’ண்டு சந்தோஷப்படுவேன் நான். மனசுல உள்ள பாரம் குறைஞ்சு போய்டும்! அப்ப தூக்கம் வந்துடும். கொட்டாவி வந்துடும். ‘அல்ஹம்துலில்லாஹ்..’ண்டு குறட்டையை வுட்டு தூங்கிடுவேன். இல்லே, அது சொல்லாமகூட தூங்கிடுவேன்! மனசுல பாரம் இருந்திச்சிண்டா இப்படியிருக்காது நிலைமை. கஷ்டமிருந்தா பாரம் இருக்கத்தான் செய்யும். பாரம் இருந்தா சிந்தனை திரளத்தான் செய்யும். சிந்தனை திரண்டா ஆத்மீகம் வளரத்தான் செய்யும். அது வந்தா வெற்றி வராம இருக்கவே இருக்காது. ஒரு நாள்ல வரலாம். அல்லது பத்து வருஷத்துலெ வரலாம். வராம மட்டும் போகாது!’

மௌலானா ரூமி :

ரூமி அவர்கள் தன் சீடர்களுடன் ‘ஹல்க்’காவாக அமர்ந்து (ஹல்க் : குருவைச் சுற்றி சீடர்கள் வட்டமாக அமர்ந்திருத்தல்) போதித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு சீடரை அழைத்து ஹல்வா வாங்கி வருமாறு சொன்னார்கள். ஹல்வா வந்தவுடன் சீடர்களைப் பார்த்து ரூமி, ‘ஹல்வா தின்ன ஆசைப்பட்டவர் வந்து திங்கலாம்’ என்று சொல்ல அங்கே ஒரு மௌனம் நிலவுகிறது.

‘நானாக இன்னார் வரவும்’ என்று சொல்வதற்குள் அவர் வந்து சாப்பிட்டு விடுவது நல்லது!’ – ரூமி

தயங்கியவாறு ஒரு சீடர் வந்து ஹல்வாவை ‘பிஸ்மில்லா’ சொன்னார்.

சீடர்களுக்கு வியப்பு. ரூமி அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

‘நாப்பது அம்பது வருஷமா இனிப்பை கட்டுப்படுத்தி வரும் எனக்கு திடீரெண்டு இப்போது ஹல்வா மேல் ஆசை வந்தால் அது நிச்சயமாக என் ஆசையாக இருக்காது. உங்களிடமிருந்துதான் வந்திருக்கும்!’ என்றார்கள் ரூமி.

– நெகடிவ் எண்ணங்கள் உள்ளவருடன் பழகுவதால் வரும் தீமையைச் சொல்ல சர்க்கார் சொன்ன உதாரணம்

*

‘நம்மள்ட்ட உள்ள ‘ரஹ்மானியத்’ குழந்தை. New Born Child. இப்பத்தான் தட்டுத் தடுமாறி நடக்குது, மழலை பேசுது. நல்ல எதிர்காலமிக்கிதுண்டு காட்டுது. குழந்தைங்குறது என்னா?’

‘ரஹ்மானியத் சர்க்கார்’

‘மர்ஹபன் மர்ஹபா! நீங்க ஒரு கொத்துப்பரோட்டா சாப்புடலாமே..! ம்…இந்த ‘ரஹ்மானியத்’ இப்பத்தான் பொறந்திருக்கு. பக்கத்துல உள்ள ஷைத்தானியத் ஏழு லட்சம் வருஷமா வந்திக்கிது. பரம்பரை பரம்பரையா..உங்க ‘ரஹ்மானியத்’ எந்த மூலைக்கு காணும்? அது தும்முனா போதும், நீங்க சேர்ந்து பறந்துடுவீங்க. இந்த ‘ஷைத்தானியத்’ எங்கே அதிகமா இக்கிம்? கல்யாணக்கார வூட்டுலெ அதிகமா இக்கிம். நகைநட்டு அதிகமா போடுற இடத்துலெ அதிகமா இக்கிம். ‘ஞானம்’ பேசுற பெண்கள்ட்டே அதிகம் இக்கிம். இவங்கள்லாம் யாரு? கம்ப்ளீட் வைரிகள். அவளும் வாழமாட்டா, உங்களையும் வாழ வுடமாட்டா
*

‘மனுஷனுக்கு மனுஷன் vibration இக்கிது. Negative & Positive. ஒரு ஆளை கண்ணால பார்த்தா போதும். அந்த vibration தாவும். ‘அஸ்மா லைன்’ல எதிரியை தண்டிக்கிற வழி ஒண்ணு இக்கிது’ – எதிரியை மனோதத்துவ ரீதியில் தண்டிப்பதை சொல்லிவிட்டு – ‘இதுதான் மனப்பிணி வாங்காதே’ங்குறது. இதே மாதிரி நல்லதும் செய்யலாமுலெ?’ என்கிறார்கள்.

*

‘கஷ்டப்படுறான் என்றால் அனுதாபத்துக்குரியவன் அல்ல, தண்டனைக்குரியவன். அற்புதமான தன் சக்தியை அவன் misuse பண்ணிட்டான். அல்லது use பண்ணாம கெடுத்துட்டான். எல்லா வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டிருக்க, அந்த ‘நியமத்’ஐ யூஸ் பண்ணாம சாக்கடையில போட்டுட்டான். இவன் குற்றவாளி அல்லவா? அவனை சிலுக்கா குத்தி கைமா பண்ணனும்’ – கவிஞர் ஹலீம் நானாவுக்கு சொன்ன போதனை.

ஹலீம்நானா என்ன செய்திருப்பார்கள்? ‘கைமா கைமா,,நீ இல்லாத உலகே இல்லை’ என்று பாட்டெழுதி இருப்பார்கள். திரைப்படப் பாடல்களில் இஸ்லாமியக் கைமா அவர்கள் போல் யார் செய்ய முடியும்? கொத்துவதற்கு சரியான ஆளை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலிதான். கவாலி பாடகர் அதா அலி ஆஜாத் உதாரணம்…! (‘கத்வு திர்க்காத கற்ணம் என்னெ?’)

*

‘ஹலக்கல்லாஹூ ஆதம் ஹதா சூரத்திஹீ..’ (ஆதமை அல்லாஹ் தன் உருவத்தில் படைத்தான்). அல்லாஹ் என்ன மீசை வச்சிக்கிட்டா உக்காந்திக்கிறான்? அதல்ல அர்த்தம். அவன்ட்டெ உள்ள ‘ரஹ்மானியத்’ பூரா மனுஷன்ட்டெ இக்கிது. அவன்ற அச்சு, முத்திரை, இவன்ட்டெ இக்கிது. அதனாலதான் பிரதிநிதி என்கிறோம். ஆண்டவன்ற கம்பெனிக்கு representativeஆ இந்துகிட்டு கஷ்டப்படுறேண்டு சொல்றதாவுது! எப்படி கஷ்டம் வரும்டு கேக்குறேன். ஆங்..இந்த வார்த்தையை நாம் சொன்னா மதிப்பிருக்காது. ஏண்டா ஏழையாவுல இக்கிறோம்! ஒரு பணக்காரன் சொன்னா மதிப்பிருக்கும். ஏன், பணத்துக்காக நீங்க மதிக்கிற மதிப்பு அது.. அறிவுக்காக அல்ல. அங்கே அறிவு இல்லாட்டிகூட பரவாயில்லே..நான் கேக்குற கேள்வி என்னாண்டா, இவ்வளவு வசதி வாய்ப்பு இருக்கும்போது கஷ்டம் எப்படி வரும்? வருதுண்டா ஒரு solutionக்கு வந்துடுலாம் ஆட்டோமேடிக்கா. எண்ணம்தான் காரணம்! எல்லா ‘இபாதத்’தை விட பெரிய ‘இபாதத்’, ஷைத்தானியத் நெஞ்சில பூராம பாதுகாத்துக்கனுங்க்குறது’

*

‘மனுஷனை மனுஷனா ஆக்குறது அவன்ற கவலையும் பொறுப்பும்தான். பொறுப்பில்லாம வாழ்ந்தாண்டு சொன்னா Mind , blankஆ இருக்கும். Blankஆ இருந்தா என்னா வரும்? Negativity வரும். Negativityக்கு என்னா பேரு? ஷைத்தானியத். ஷைத்தானியத் எப்படியிக்கிம்? இப்ப குடிச்ச தேத்தண்ணி மாதிரியிக்கிம்!’

– இந்த ‘Kinds of தேத்தண்ணி’, இல்லை, Knowledge’ கேஸட்டின் முத்தாய்ப்பு பிரமாதம். தேத்தண்ணியில்லாத ‘நோட்ஸ்’ என்ன ‘நோட்ஸ்’? ரவூஃப், ‘ச்சாய் ஹலீப்’ வேண்டாம், ‘சுலைமானி’கூட கொடுக்கவில்லையென்றால்? அப்படியே கொடுத்தாலும் சீனி போட மாட்டாய்.! சீனியென்றதும் ஞாபகம் வருகிறது. என் மகள் அஸ்ராவின் ஓவியத் திறமை. மகனின் ஓவியத் திறமையை முன்பக்கத்தில் சொல்லியிருக்கிறேன். மகளும் ‘ஒவியள்’தான். அது ஒரு மறக்க முடியாத ஓவியம். Abstract வகை. அவளுக்கு வரைவதில் ஆர்வம் இருக்கிறதை அறிந்து ஒருநாள் வரையச் சொன்னேன். அடுத்த நிமிடமே சிலேட்டை எடுத்து குச்சியால் புள்ளிகள் குத்த ஆரம்பித்து விட்டாள். ரெண்டு நிமிடம். முடிந்தது. சிலேட்டு முழுக்க புள்ளிகள். ‘இந்தாக்க வாப்பா..’ என்று காண்பித்தாள்.

‘என்னா கண்ணு இது? வரையவுலெ சொன்னேன்?’

‘இதுதான் அது வாப்பா’

‘இதா? என்னா இது?’ – குழம்பியவாறு கேட்டேன்.

‘தெரியலே? சீனி!’ -அவள் நிதானமாக பதில் சொன்னாள். இத்தனை தூரத்தில் இந்த நினைப்புதான் இனிப்பு.

***

Secret Symbol-ன் தொடர்ச்சி (15-18.12.955) பேசியது :
————————————————–

‘முக்கோணத்துக்கு ‘பவர்’ இக்கிது. இதுக்கு Dimension கிடையாது. Two Dimensionதான். Dimensionண்டா என்னா? பரிமாணம்ங்க. Depth அல்ல. இதுக்கு நீங்களா ஒரு பேரு வைங்களேன் பாப்போம். எனக்கு பெயர் வைக்கவுலாம் தெரியாது. ‘Pyramid Power’ண்டாக்கா கேக்குறவங்களுக்கு ஒரு மாதிரியா தெரியும். அது மல்லாக்கொட்டை மாதிரியே இக்கெட்டும். புள்ளிங்குற Point.. – அரபிலெ ‘நுக்த’. முப்பது வருஷத்துக்கு முன்னாலெ நான் பேசியிருக்கேன் , ‘அறிவு என்பது ஒரு புள்ளி. முட்டாள்களின் முட்டாள்தனமான கேள்விகள் அதை விரிவுபடுத்தி volume volumeஆ ஆக்கிடுச்சி’ண்டு.. – இந்த கட்டத்துலெ நீங்க புரிஞ்சிக்க வேண்டியது என்னா? என்னெட்ட ஒரு மசுரும் கேட்க வேணாம். நான் சொன்னதை மட்டும் கேட்டா போதும். எனக்கு தெரியும், எங்கே எங்கே எந்தெந்த சந்தேகம் முளைக்கிம், எந்தெந்த சந்தேகம் நாளை மறுநாள் முளைக்கிம்ண்டு. அதுக்கு அப்ப நான் பதில் கொடுத்துடுவேன், பேச மட்டும் வுட்டா போதும். குறுக்கே பாய்ந்து பத்து நிமிஷம் கேள்வி கேட்டாலோ, பத்து நிமிஷம் நான் சொல்ற செய்திக்கு உவமானம் காட்டினாலோ, உங்க experienceஐ சொன்னாலோ பத்து நிமிஷம் என்னை பேசாதடாண்டு சொல்ற மாதிரி அர்த்தம். இத மனசுல வச்சுக்குங்க – அப்புறம் அந்தப் புள்ளி கிளம்பி கீழே வருது. தெய்வத்தன்மை ஆறாவது Dimensionலேர்ந்து மூணாவது Dimensionக்கு வருது. Dimensionண்டா ஒரு புள்ளிக்கு பேரு. மேலேர்ந்து புறப்பட்டு கீழே வருது. கீழேண்டா என்னா அர்த்தம்? புறப்பட்டு ஏன் மேலே போவக்கூடாது? ஏண்டா, Sixth Dimensionங்குறது மேலேயல்லவா? ஏன் வருது, எப்படி வருது, இதோட End Result எது, யாருக்கு லாபம், வரக்கூடிய புள்ளிக்கு லாபமா உருமாறுகிற நமக்கு லாபமா, உதவி செய்ய வருதா அல்லது கறந்த பால் குடிக்க முடியாம பொங்கிவரும்போது வழியுமே..அப்படி வருதா, வருதா வரத்தான் வேணுமா, வேண்டுமென்றே வருதா இல்லே தானாகவே வருதா, அது இங்கே வந்து நாம வளர்றோம். வளர்ச்சிண்டா எதுக்குப் பேரு, ஏன் இத வளர்த்த வேண்டியதா இக்கிது…? கரெக்டா நீங்க வளர்த்தாத்தான் மூணாவது கோடு இங்கே வரும். நீங்க வளர்ந்து மேலே போறதல்ல. முதல்லெ சொன்னது தப்பு. மேலே தண்ணி நிக்கிது.. நீங்க ஆணியை வச்சி குடையிறீங்க. உடைஞ்ச உடனே என்னாவும்? தண்ணி தானா கீழே வந்துடும். கீழே வந்து சில purposeஐ நிறைவேத்துனபிறகு (பயிற்சி செய்யும்) இவன் வளர்றான். வளர்ந்து, ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு போன உடனே அது ‘நீதாண்டா ராஜா’ண்டு கீழே வருது’

***

‘குன்து கன்ஜூ மஃக்ஃபியா ஃப அஹப்து
அன் அ உரஃப ஃகலக்குல் ஃகல்க’

(நான் மறைவான பொக்கிஷமாக இருந்தேன். என்னை அறியவேண்டிய படைப்பினங்களைப் படைத்தேன்) –

***

09.02.1996 வெள்ளி Session (15-18.02.95 கேஸட்டின் தொடர்ச்சி):

‘நீங்க வளர்றதுலேயும் வாழ்றதுலேயும் யாருக்கு நன்மைங்குறீங்க? அல்லாவுக்குத்தான் நன்மை! நீங்க வளரலேண்டா மூதேவிப்பயலை படைச்சேண்டு அவன் கவலைப்படுவான். உங்களைப் படைச்சது அவனுக்காகத்தான். உங்களுக்காக அல்ல. ‘குன்து கன்ஜூ மஃக்ஃபியா ஃப அஹப்து அன் அ உரஃப ஃகலக்குல் ஃகல்க’ (யாருக்கும் தெரியாத மறைபொருளா இருந்தேன், நான் உணரப்பட வேண்டும், அறியப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனவே படைப்பினங்களைப் படைத்தேன் – ‘ஹதீஸ் குத்ஸி’யில் இறைவன்) அப்ப நீங்க மாடி வூட்டை கட்டி ஊருக்கு பெருமை அடிக்கிறீங்களே.. பணம் வச்சிருக்கேண்டு சொல்லி ‘ஜக்காத்’ கொடுத்து ஊருக்கு காட்டுறீங்களே.. பத்து நாள் நான் சைக்கிள் ஓட்டமுடியும்டு ஜனங்களுக்கு காட்டுறீங்களே…அது பெருமை அல்ல. தெய்வத்தன்மை! தடுமாத்தமா இக்கிதா? சரி, இதை ஏன் கூடாதுங்குறேன்? இதிலேயே மலர்ந்து பொய்டுறியே நீ! Self Expression.. தன்னைக் காட்டுறது.. அதை பாசிடிவா செய்யாததனால்தான் அதை கூடாதுண்டு சொன்னேன்’

*

‘God want men to be happy… இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்குண்டு சொன்னேன். ‘என்னா சர்க்கார்.. எவ்வளவோ பேசுறீங்க, இதப் போயி பாராட்டுறீங்களே’ண்டு எவருமே கேக்கலே. உங்களுக்கா வரும்டு பார்த்தேன். உங்களுக்கா வரலே! இப்ப நானா சொல்ற மாதிரி வந்துடுச்சி.. நீங்க வாழுறதுலே ஆண்டவன் பெருமைப்படுறான். தன்னைக் காட்டுறது..கர்வமில்லாம, மத்தவங்களைக் கசக்காம, ‘நான் யார்?’ண்டு காட்டுறது இக்கிது பாத்தீங்களா..அது தெய்வத்தன்மை!’

*

சூ·பியாக்களின் ‘ஜெதபு’:

‘என்கொடி மலைக்கு மேலே பறக்குது.. என் ரஹஸ்யத்தை மலைக்கு சொன்னா மலை தகர்ந்து பொய்டும். கடல்லெ சொன்னா கடல் வத்திப் பொய்டும். நரஹத்துலெ சொன்னா நரஹம் அவுஞ்சி பொய்டும்.. என் ரஹஸ்யத்தை மைய்யத் மேலே போட்டேண்டா ஆண்டவன்ற சக்தியாலெ அது எந்திரிச்சி நிண்டுக்கும்!’ – இதுக்குப் பேரு – சூஃபியாக்கள் சொல்றது ‘ஜெதபு’ (பரவசம்). அதேதான் நாமளும் பேசுறோம் ‘என்னெ யார்ண்டு நெனச்சிக்கிட்டிக்கிறா? தெரியுமா? உன்னை ‘வெலைக்கி’ வாங்கிப்புடுவேன்!’. அதுக்கும் இதுக்கும் என்னா வித்யாஸம்? இது கர்வம். (கீழே உள்ளவனும் தெய்வத்தன்மை கொண்டவன்தான். அவனை விலைக்கு வாங்குவதா?!)’

*

‘Self Expresion இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. தன்னை வெளியில காட்டனும். ஏன்? காட்டத்தான் ஆண்டவன் படைச்சிருக்கான். இதெ எப்படி காட்டுறது? Dressல காட்டுறது. Helathலே காட்டுறது. Family மகிழ்ச்சிலெ காட்டுறது. செல்வத்துல காட்டுறது, தர்மத்துல காட்டுறது, சம்பாதிக்கிற திறமையில காட்டுறது, தொழில் பண்ற நிர்வாகத்துல காட்டுறது..’

*

‘Secret Symbol’ தொடர்கிறது…

‘ம்..என்னா பேரு கொடுக்கலாம் இதுக்கு? என்னமோ ஒண்ணு ‘so and so’ண்டு கொடுக்கலாம். அது மேலே வந்தவுடனேயே -‘டக்’குண்டு Circle ஃபார்ம் ஆகுது. எவ்வளவு தூரம் கோடு வருதோ அவ்வளவு தூரம் Circle ஃபார்ம் ஆகும். Circle ஃபார்ம் ஆனவுடனே நடுக்கோடும் உருவாயிடும். பாதி தெய்வத்தன்மை, பாதி ஷைத்தானியத். பாதி positive, பாதி negative. Circle எல்லாம் ஃபார்ம் ஆனபிறகு ‘ஷைத்தானியத்’ கீழே இறங்க உடாம – controlஆ கீழே இறங்குற மாதிரி , atlest 50%க்கு மேலே ஷைத்தானியத் போனீச்சீண்டு சொன்னா – கீழே வர்ற circle, total ஷைத்தானியத்தா வரும். ஜாக்கிரதை. கீழே வர்ற circleஐ பிரிக்கிற கோடு வெறுமனே பிரிக்கிற கோடுதான். வேற முக்கியத்துவமில்லே. சரி பாதி கொடுக்க ரெடியா இக்கினும். யாருக்கு? எதை? சொல்லுங்க’

‘வாங்குற தகுதி இருக்கிறவங்களுக்கு’

‘மர்ஹபா! வாங்குற தகுதி இந்திச்சிண்டா ஆண்டவன்தான் கொடுத்துடுவானே…நீங்க யாரு கொடுக்குறதுக்கு? நான் சொல்லியிருக்கேன்ல, When we are ready for a thing it is sure to happenண்டு!’

சர்க்கார் இன்னொரு மாணவரை சொல்லச் சொல்கிறார்கள். யாருக்கு கொடுக்க வேண்டும்?

‘பாவப்பட்டவங்களுக்கு’

‘நான் சொல்லியிக்கிறேன், கொடுக்குற ஆளுக்கு தரம் சரியில்லேண்டு சொன்னா அந்த ‘முஸீபத்’ உங்களை ஒட்டிக்கிடனும்டு சொல்லியிக்கிறேனே.. இது புரியுதா? whole circle இதுதான். ஏன் உங்களுக்கு ஆண்டவன் கொடுக்கலே? அதை நீங்க கேட்கவும் கூடாது, நான் பதில் சொல்லவும் மாட்டேன். நான் ‘ஷரீஅத்’ஐப் பத்தி பேசலே.. ‘தரீக்கா’வையும் பேசலே. பணத்தை வச்சிப் பேசுங்க; யாருக்கு கொடுப்பீங்க? யாருக்கு கொடுக்க ரெடியா இப்பீங்க?

‘உதவி கேட்டு வர்றவங்களுக்கு!’

‘கேட்கலைண்டா? கொடுக்க மாட்டீங்களோ? கேட்டுக் கொடுப்பதைவிட கேட்காமல் கொடுக்குறது சிறந்ததுண்டு சொல்லியிருக்கேன்ல..! முழிங்க!…அப்ப நாங்க எவ்வளவு முழிச்சிருப்போம்?!’

இன்னொரு பழம்பெரும் சீடரான மீராமெய்தீன் சொல்கிறார் (இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சரியான விடை வந்து என்னைக் கும்மாளமிட வைக்கிறது. பரவாயில்லை, எனக்கும் வேலை செய்யுது!)

‘சுன்னத் ஜமாவுல, சூஃபிஸத்துல ஈடுபாடு கொண்டு உங்களோடு இக்கிறாஹல்லெ.. அஹலுக்கு – உங்க உத்தரவோடு – கொடுக்கனும்டு நெனைக்கிறேன்’

‘இஸ்மு கொடுக்கும்போது ‘எங்களுக்கு துஆ செய்யுங்க’ண்டு எழுதிக் கொடுத்திருக்கோமே, இப்ப நெனப்புக்கு வருதா?’

நாலைந்து அசட்டு சிரிப்பு சத்தம் கேட்கிறது.

ஒரு சீடர் புத்திசாலித்தனமாக சொல்கிறார் : ‘உங்களுக்குத்தான்!’

‘அப்படீண்டா? எனக்குத் தேவையில்லெ!’

‘நான் பக்கத்துலெ வந்துட்டேனே சர்க்கார்’

‘ஊஹூம். சரியா ‘டச்’ பண்ணனும். Bank கிட்டே போனா பணம் வராது. Cheque கொடுத்து எடுக்கனும். அப்ப என்னா செய்யனும்? எங்கே கொடுக்கனும் , எப்போ கொடுக்கனும், எப்படி கொடுக்கனும். எதை கொடுக்கனும்டு அப்பவும் என்னெட்டெதான் கேட்கனும் நீங்க!’

என் விடை தப்பு!

*

சங்கடம் நேரும்போது சர்க்கார் கேட்கும் துஆ:

‘நாம பாவமில்லாத மனுஷனா இக்கிறதுக்காக முயற்சி பண்ணலே.. ஆண்டவன் எதுக்கு நம்மைப் படைச்சானோ அந்த வேலையை செய்ய முயற்சி பண்ணுறோம். ஒரு ‘துஆ’* இக்கிது.’ஆண்டவனே எதற்கு என்னைப் படைத்தாயோ அந்த வேலையைச் செய்யவிடு. எதற்கெல்லாம் நீ பொறுப்பேற்று இருக்கிறாயோ அதைப்பற்றி என்னைக் கவலைப்படவிடாதே; நான் கேட்டுக்கிட்டே இக்கிறேன், இல்லேண்டு சொல்லிடாதே’ – இதை எழுதி வச்சிக்குங்க. அப்பப்ப ஓதுங்க. பொருள் தெரிஞ்சி இதெ ஓதனும். ‘ரியாலத்’ மாதிரி ஓதுறது அல்ல இது. எனக்கு ரொம்ப மனசு சங்கடமா இருந்திச்சிண்டா ‘புர்தாஷரீஃப்’லெ இதை ஓதுவேன். ரொம்ப என்னாலெ சமாளிக்க முடியாம ரொம்ப வேதனைப்பட்டுக்கிட்டிருந்தாக்கா – ஓதும்போதே வித்யாஸமா இக்கிம் sound – ஓதுவேன்’

துஆ : ‘அல்லாஹூம்ம அஃப்ரிதினி லிமா ஃகலக்தனீலஹூ
வலா தஸ்ஃகல்னி பிமா தகப்பல் தலீபிஹி
வலா தஹ்ரிம்னி வஅந அஸ்அலுக்க
வலா துஅத்திப்னி வஅந அஸ்தஃபிருக்க’

*

Secret Symbol…

‘கீழே வந்து பரிணாமம் எடுத்து வர்றதுக்கு பலகோடி வருஷம் ஆச்சி. அதாவது ஆண்டவன் தன்னுடைய Representativeஐ உலகத்துல முப்பரிமாணம் கொண்ட பொருளாகப் படைச்சி , அதுல தன் சக்தியை திணிக்கிறதுக்கு கோடிக்கணக்கான வருஷமாச்சி. எப்ப First நபி வந்தாஹலோ அட்லீஸ்ட் ஓகே’

‘ஆதம் அலைஹிஸ்ஸலாம்?’

‘ஆதம் அலைஹிவஸ்ஸலாம் நபி அல்ல – நம்ம பிரின்ஸிபில்லெ. அஹ எல்லாத்துக்கும் வாப்புச்சி!’

*

‘அல்லாஹூ ‘கனி’லெ! பணக்காரன்லெ! அப்ப நீங்க வளர்ந்தாத்தான் அவன் Representativeஆ இருக்க முடியும். வளர முடியாதுண்டு சொன்னா தெய்வத்தன்மை கிடைக்காது. அப்ப.. ‘ரூஹானியத்’துக்கும் வறுமைக்கும் சம்பந்தமே கிடையாது. ஏழைக்கு – வளமை இல்லேண்டு அர்த்தம் இல்லை- சம்பாதிக்கத் திறனில்லாம, முடியாம, வழியில்லாம, தெருவுல தூங்குறான்லெ, அவனுக்கு ‘ரூஹானியத்’ இருக்காது. விளங்குதா? ஆண்டவன்ற குணம் பூரா இங்கே வந்தாவனும். வந்தாத்தான் அவன் மேலேர்ந்து கீழே வருவான் பாக்குறதுக்கு. அப்ப ஆல்-ரவுண்டா நாம வளர்ந்தாவனும். இது வேதாந்தமல்ல, life ! அப்ப என்னா நீங்க கற்பனை பண்ணனும்? முதல் புள்ளி ஆரம்பிச்சி மெதுவா லே…சா வரனும். அப்படி கற்பனை பண்ணும்போது ஒரு கோடும் இல்லே அங்கே. நீங்க ஒண்ணுக்கு அம்பது தரம் பார்க்கனும் அந்தக் கோட்டை. படுக்கும்போது நெனைச்சிக்கனும் Fullஆ அப்படியே. பிரிக்க, சேர்க்க, விளக்க கற்பனையில படிச்சுக்கனும். கீழே வந்ததை நாம் வளர்த்தவுடன் மேலேயிருந்து கோடு வரும் – இணைக்க. அந்தக் கோடு எந்த அளவு வருதோ அந்த அளவு Circle ஃபார்ம் ஆகும். அது centreக்கு வந்தவுடனே நடுக்கோடும் form ஆயிடும். அவ்வளவுதான். அப்புறம் கீழே வருது (கோடு) பார்த்தீங்களா, அது நம்ம திறமையைப் பொறுத்தது. நாம கோட்டை உண்டாக்கனும். அது கீழே வந்து service பண்ண ஆரம்பிச்சவுடனேயே Full circle ஃபார்ம் ஆயிடும். அதே சமயத்துலே மேலே உள்ள ‘ஷைத்தானியத்’ 50%க்கு மேலே போகக்கூடாது!’

‘ஒவ்வொடு கோடுக்கும் குறிப்பிட்ட சில நாட்களுக்கிடையிலேயே கலர் மாறும், நீங்க மாத்திக்கிட கூடாது, இந்த கோடு இந்த கலர், இந்த கலர்ண்டு Art பண்ணி தந்துடுறேன். அதை இன்னும் ஜாக்கிரதையா செய்யனும். Blueண்டு சொன்னா Blue அல்ல, நான் சொல்ற Blue !’

*

‘மார்க்கத்தை வுட்டு பொருளாதாரத்தை , குடும்ப மகிழ்ச்சியை, நோயில்லா வாழ்க்கையை பிரிக்கிறது ஹராம் – நம்ம ரூட்டுலெ. ‘இபாதத்’ இருக்கனும். – ‘இபாதத்’துண்டா என்னா? அது தனியா இருக்கட்டும் – பொருளாதார வலிமை இருக்கனும். வலிமைண்டு எதுக்கு பேரு? Health இருக்கனும். ஆமா.. பவலு சோறு உண்ணலே.. உங்கள்ட்டே காசு இல்லேண்டு சொல்ல வெட்கப்படுறீங்களே, சீக்கை மட்டும் ஏன் சொல்றீங்க? சீக்குக்கு ஓதிப்பாக்குறதுலெ என்னா பெருமை?’

*

‘Lifeலெ எத்தனை பகுதி இக்கிதுண்டு சொல்லுங்க பார்ப்போம். 12 செல்வம் வரும். புரியுதா? இந்த பண்ணெண்டுக்கும் ராஜா அல்லாஹ். ‘மாலிக்குல் முல்க்’! ஹதீஸ் சொல்ற மாதிரி இக்கிதோ? இதாங்க ஹதீஸ்ங்குறது!’

*

‘Secret Symbol’க்கு ஒரு பெயர்:

‘ஒரு பெயர் சொல்லுங்க, என்னா பெயர் வைக்கலாம்?’ – சர்க்கார்

‘ரூஹானியத்’ண்டு வைக்கலாம்’

‘கெட்ட வார்த்தை! மத்தவங்களுக்கு விளக்குறமாதிரி ஆவும். பேய்பிசாசுண்டு சொல்லிடுவாளுவ பொம்பளையிலுவ. ஜாமத்துலெ வரும், பவலைக்கி 12 மணிக்கு வரும்டு சொல்லுவாளுவ, ‘ரூஹானியத்’ங்குறது ‘சக்தி’ங்குறது தெரியாது. தமிழ் வார்த்தையை சொல்லுங்க. ஈஸியா புரியிறமாதிரி சொல்லுங்க. சொன்னா ‘டக்’குண்டு புரியுனும். Symbol கண்ணுக்கு வரணும். மேலே வர்ர துண்டுதானே பிரமிட்’ங்குறது. பிரமிட்’ண்டா Three Dimension இக்கினும். இது Two Dimensionதானே.. Pyramid அல்ல இது, Triangle இது’

‘Three Dimensionங்குறது புரியுது, மேலே Sixth Dimensionண்டு சொன்னிங்களே..’

‘அது Pure Metaphysics. அல்லா உதவியாலே இதுல ஓரளவு வளர ஆரம்பிச்சி, வளர்ச்சி தானாகவே உங்களை இழுத்துக்கிட்டு போற காலம் வரும்போது – நான் ஹயாத்தோட இருந்தா – அப்ப நான் சொல்லித் தர்றேன். இல்லேண்டு சொன்னா உங்களுக்கு தேவைப்படாது, புரியவும் செய்யாது’

‘மேலே ரூஹானியத் leftsideலெ இறங்கி, கீழே பரிமாண வளர்ச்சி. அப்புறம் மேலேர்ந்து right sideலெ கோடு இறங்கி வரும்போது, round எந்த இடத்திலே ஆரம்பிக்கிதோ அந்த இடத்திலே – கீழால வருதா, மேலாலே வருதா ?’ – சீடர் குழப்புகிறார். பேசாமல் குழப்பம் என்றே பெயர் வைக்கலாம்!

சர்க்கார் வரைந்து விளக்குவதை புரிந்து கொள்வதுபோல் ஒரு ஆடியோ கேஸட் கண்டுபிடிக்க இயலாதா?!

‘இதை Black Board’ல கற்பனை பண்ணுங்க. இல்லெ White Screenலெ கற்பனை பண்ணுங்க. இல்லே சும்மா ஆஹாசத்துலெ கற்பனை பண்ணுங்க. அதுக்கு Background ஒண்ணும் இருக்கக் கூடாது. தூணுக்கு மேலே வருது, சுவத்துக்கு மேலே வருது, பீரோவுக்கு மேலே வருதுண்டுலாம் கற்பனை பண்ணக் கூடாது. Blankஆ..! இதுக்கு ஒரு டைம் சொல்வேன். இது Heartலெ வர்ற மாதிரி நான் சொல்வேன். அப்ப நேர் மாற்றமா வரும். இப்ப இதைச் செய்யுங்க. செய்யவாணாம், சும்மா கற்பனை பண்ணிக்கிட்டே இரிங்க, செய்யப்போறோம், செய்யப்போறோம்ட்டு’ – ‘S’

Metaphysics – Oxford Dictionary

[metaphysics n.pl. (usu. treated as sing.) 1 branch of philosophy dealing with the nature of existence, truth, and knowledge. 2 colloq. abstract talk; mere theory. [Greek, as having followed physics in Aristotle’s works]

6th Dimensionஐ ‘Metaphysics’ என்று சர்க்கார் சொல்லி , நேரம் வந்து – ஹயாத் இருந்து – சீடர்களுக்கும் தகுதி இருந்து என்று முடித்ததுபோல்தான் November 95 Session ஒன்றில் – அது முடிந்து relaxed ஆக சர்க்கார் இருக்கும்போது – ரவூஃப் கேட்ட கேள்விக்கும் பதில் வந்தது. ரவூஃப் ரொம்ப நாசூக்காக ஆரம்பித்துதான் கேட்டான்: ‘டிவியை பார்த்தேன் மாமா, மனசுக்கு ரொம்ப சங்கடமா இருந்திச்சி.. ஈராக் ஜனங்க அமெரிக்க குண்டுல சாவுறாங்க.. பாதிக்கப்படுறாங்க.. காட்டினான். ஏன் இப்படி? அந்த ஜனங்க ஒண்ணும் செய்யலே..இவங்க ஏன் சாவனும்?’ என்றான்.

‘இது வெளையாட்டு – பெரியவனுவளுக்கு. இதுல ஏன் அப்பாவி ஜனங்க சாகுதுங்குறது Metaphysics.. அதைப்பத்தி நாம பேச வேணாம். புரியாது’ என்றார்கள் சர்க்கார்.

‘Physicsஏ புரிய மாட்டேன் என்கிறது. Meta Physics எப்படிப் புரியும் உனக்கு?’ என்றேன் ரவூஃபிடம். அவன் என்னை ஈராக்கிற்கு தள்ளினான். ஐயோ, அமெரிக்கா…

*

10.02.1996 அதிகாலை 3.30

சர்க்காரைக் கனவில் கண்டேன். துபாய்க்கு வந்து இந்த இரண்டரை மாதத்தில் ஏழெட்டுமுறை அவர்களை கண்டிருக்கிறேன். வெளியில் அப்பியிருக்கிற பனிபோல முழித்ததும் இருந்திருக்கிறது. இப்போது கண்டது தெளிவாகத் தெரியவே தூங்கி எழுந்து , மறப்பதைத் தவிர்க்க உடனே எழுதுகிறேன். சர்க்கார் பக்கத்தில் உட்கார்ந்து எதையோ சொல்ல எழுதிக் கொண்டிருக்கிறேன். நானும் சர்க்காரும் மட்டும்தான் இருக்கிறோம். ஒரு பெஞ்சில் உட்கார்ந்து இருக்கிறோம். இடம் சரியாகத் தெரியவில்லை. எழுதிக் கொண்டிருக்கும்போதே என் மலச்சிக்கலை அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது எனக்கு . அடுத்த நொடியில் அவர்கள் ‘உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கா?’ என்று கேட்கிறார்கள்.

‘ஆமா சர்க்கார்’

‘மனசுல தோணிச்சிண்டா கேட்டுடுங்க. நான் சொல்வேண்டு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காதீங்க!’ என்கிறார்கள்.

மலச்சிக்கல், திண்டது செரிமானம் சரியாக ஆகாமலா? நான் சரியான முறையில் உணவை உண்ணத் தெரியாமல் உண்கிறேனா? இந்தக் கனவிற்கு முன் இன்னொரு குட்டிக் கனவு வந்தது. நான் ஒரு ‘வாட்ச்’ (Watch) தயார் செய்கிறேன். ஏழெட்டு வாட்ச்களிலிருந்து ஒவ்வொரு பாகமாக கழற்றி அதை தயார் செய்கிறேன். கையில் கட்டிப் பார்த்தால் மனதுக்கு திருப்தி படமாட்டேன் என்கிறது. shellன் இடப்புறத்திலுள்ள இரண்டு screwகளில் ஒன்று இல்லை அதில். அது ஒரு குறைபாடுள்ள வாட்ச்… ‘வாட்ச்’ என்பது என்ன, இந்த டைரியா? இருக்க முடியாது, வாட்சுக்கு உயிர் இருந்ததே. அது ஓடியது காலம் காட்டி, ஒழுங்காக..!

‘சஹர்’ செய்துவிட்டு (இரண்டு Bun. தொட்டுக்கொள்ள – இந்த வாரத்திற்கு என்று ஃபரீது பண்ணிக்கொடுத்த – தாழிச்சா. ஒரு வெட்டு!) தூங்கப் போகிறேன். நவைத்து…சோமஹதின்…

(தொடரும்)

*

குறிப்புகள் :

இல்மு – அறிவு
கராமத் – அற்புதம்
எஜமான் – ஷாஹூல் ஹமீது பாதுஷா
நிஃயமத் – அருள்
ரஹ்மானியத் – நல்ல சக்தி
ஷைத்தானியத் – தீய சக்தி
மர்ஹபன் மர்ஹபா – பாராட்டாகச் சொல்வது
‘அஸ்மா’ லைன் – மாந்திரீக ’மை’வேலை
இபாதத் – இறைச்சிந்தனை, தியானம்
ச்சாய் ஹலீப் – பால் கலந்த டீ
சுலைமானி – பால் கலவாத டீ
ஹதீஸ் குத்ஸி – குர்-ஆனில் இடம்பெறாத அல்லாஹ்வின் வசனங்கள்
மைய்யத் – இறந்த உடல்
முஸீபத் – பீடை
ஷரீஅத் – மார்க்கச் சட்டம்
தரீக்கா – (ஞானப்) பாதை
சுன்னத் ஜமா – இஸ்லாமிய நடைமுறை பேணும் ஒரு கூட்டம்/பிரிவு
இஸ்மு – மந்திரம்
ரியாலத் – பயிற்சி
புர்தா ஷரீஃப் – பூஷரி இமாம் இயற்றிய கவிதைகளை ஓதும் சடங்கு
ரூஹானியத் – ஆன்மீக சக்தி
ஹராம் – விலக்கப்பட்டது
ஹயாத் – உயிர்
சஹர் – நோன்பு வைக்கும் நேரம்
நவைத்து…சோமஹதின்… – நோன்பு வைக்கும்போது சொல்வது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s