என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன் – எம்.வி.வி. ஏற்புரை

‘காதுகள்’ நாவலுக்கு – 1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்றபோது எம்.வி. வெங்கட்ராம் நிகழ்த்திய ஏற்புரை. நன்றி : அகரம் பதிப்பகம்.
***

M-V-Venkatramஒரு நீண்ட யாத்திரைதான். ஆயினும் எனக்குச் சோர்வோ விரக்தியோ ஏற்படவில்லை. அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சரியாகச் சொன்னால் 57 ஆண்டுகளாய் என் இலக்கியப் பிரயாணம் நிகழ்கிறது. படைப்பாளிக்கு மரபு ஏது? கைகள் எழுத மறுக்கின்றன, சில ஆண்டுகளாய். எனினும், சிருஷ்டி வேட்கை என்னுள் தகித்துக்கொண்டு இருக்கிறது. போன வருடம்கூட என் புத்தகம் ஒன்று வெளிவந்தது.

வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்துகொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது.

வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்.

மனித சமுதாயம் குற்றம் குறைகள் நிரம்பியதாகத்தான் இருக்கும். அதைக் கண்டு எந்தக் கலைஞனுக்கும் ஆற்றாமையும் ஆத்திரமும் உண்டாவது இயற்கை. சமுதாயத்தைக் கண்டிக்கவும் கேலி செய்யவும் இலக்கியப் படைப்பாளி முனைகிறான். சமுதாயத்தைத் திருத்தவும் புரட்சி செய்யவும் தன் எழுத்தாற்றலையும் படைப்புத் திறனையும் பயன்படுத்துகிறான்.

சொல்லுக்குள்ள வசிய சக்தி மகத்தானது. படைப்பாளியின் சொல் முதலில் அவனையே தன்வசப்படுத்திக் கொள்கிறது. பிறகு மக்களைக் கவருகிறது. அவனுடைய சொல்லினால், சொல் வெளியிடுகிற கருத்தினால் மக்கள் மயங்குகிறார்கள். அவனுடைய கருத்தைப் பின்பற்றி அநீதியற்ற சமூகத்தை நிறுவவும் முற்படுகிறார்கள்.

ஆனால், ஒரு நோயை குணப்படுத்தும் அரிய மருந்து மற்றொரு நோய்க்கு வித்திடுவதுபோல் ஒரு கருத்தினால் உருவாகும் சமூக அமைப்பை மற்றொடு கருத்து குலைக்கிறது. ஒரு கருத்து மற்றொரு கருத்தைக் கொல்லும்போது புதியதொரு கருத்து முளைவிடுகிறது. பகுத்தறிவில் பிறந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு மனிதன் என்றைக்கும் சண்டையிட்டுக் கொண்டேயிருப்பான். சமூகத்தில் குற்றம் குறைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் பஞ்சம் இராது. எனவே கலைஞனுக்கு எல்லாக் காலத்திலும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்த  அடிப்படைத் தத்துவ அமைதியைக் கண்டவன்தான் முழுமையான இலக்கியக் கர்த்தாவாக இருக்க முடியும்.

இந்த மனித வாழ்க்கையே என் இலக்கியப் படைப்புகளின் ஊற்றுவாய். என் புற, அகவாழ்க்கையே என் இலக்கியமாகப் பரிணமித்தது. நான் பார்த்ததையும் கேட்டதையும் பேசியதையும் சுவைத்ததையும் தொட்டதையும் விட்டதையும் அறிந்ததையும் சிந்தனை செய்ததையும்தான் சுமார் அறுபது வருடங்களாய் எழுதி வருகிறேன். என் படைப்புகள் எல்லாவற்றிலும் நான்தான் நிரம்பி வழிகிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘நித்தியகன்னி’ என்றொரு நாவல் எழுதினேன். அக்கதையின் கருவை மகாபாரதத்திலிருந்து எடுத்தேன். ‘பெண் விடுதலை’ என்னும் பீஜத்தை அதில் நான் வைத்தேன். பலப்பல நூற்றாண்டுகளாய்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆண் வர்க்கம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை அதில் நான் விசாரிக்கிறேன். இன்று பெண் விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். ஆண் மனோபாவம் மாற வேண்டும் என்கிறோம்; நியாயம்தான். பெண் மனோபாவம் மாறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

திருமண பந்தத்தை மீறி ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தை சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித் தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன். பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில்  சித்தரிக்கிறேன். பெண் விடுதலை பற்றி மட்டும் அல்ல, எனக்குத் தென்படுகிற வாழ்க்கைப் பிரச்சினைகள் பலவற்றையும் சுட்டிக் காட்டும் பல சிறுகதைகள், நாவல்கள், பல குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறேன்.

பதினாறு வயதில் எழுதத் துவங்கிய நான் இலக்கியப் படைப்பு மட்டும் அல்லாமல் மொழி பெயர்ப்புகள், வாழ்க்கை வரலாறுகள், பொது அறிவு நூல்கள் என சுமார் 200 தமிழ் நூல்கள் படைத்திருக்கிறேன். இன்றைய மனித வாழ்க்கை ஒரு போராட்டமாகக் காட்சி தருகிறது. போராட்டங்களுக்கு இடையில் புதைந்து கிடக்கும் அமைதியைத் தேடுவதாகிறது என் இலக்கியப் படைப்பு.

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது.  மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸ¤ம், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்கவல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

ஆம். தேடல் தொடருகிறது. திரும்பிப் பார்த்தால் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. யாரும் இல்லாத இடத்தில் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தேனோ என்று சில சமயம் சந்தேகம் தோன்றுகிறது. இந்த என் வாழ்க்கையின் ரகசியம்தான் என்ன?

இந்த என் வாழ்க்கை விளங்க மறுக்கும் ஒரு புதிராகவே தோன்றுகிறது. இதனை எனக்குத் தெளிவுபடுத்தும் தத்துவம்தான் என்ன?

நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.

mvv-book

***

தட்டச்சு : ஆபிதீன், பிரதி உதவி : சென்ஷி

***

தொடர்புடைய சுட்டிகள் :

எம்.வி.வி நேர்காணல்

ஜானகிராமனுக்காக ஒரு கதை – எம்.வி. வி

“மணிக்கொடி’ எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் –  பா.முத்துக்குமரன்

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை… – மணி செந்தில்

அடுத்த வீடு – எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.வி.வி. சிறுகதைகள்

4 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  27/11/2013 இல் 01:19

  காதுகளை வாசித்து வியந்திருக்கிறேன்.
  அவரது அரும்பு என்னை அசரடித்திருக்கிறது.
  பொதுவில், எம்.வி.வெங்கட்ராமின்
  ஞானம் மலைக்கவைப்பது…
  அந்த இலக்கிய மேதையை
  வணங்கவே தோன்றுகிறது.

 2. 27/11/2013 இல் 10:24

  கூகுள் ப்ளஸ்ஸில் தம்பி இளவஞ்சி நன்மாறன் :
  ———————————————————————–

  அண்ணே!

  நான் காதுகள் முதலில் படிக்கும் பொழுது எதுவும் புரியவில்லை. ஆனால் அதில் இருந்த காளிக்கும் முருகனுக்கு இடையில் இருண்மைக்கும் நம்பிக்கைக்கும் இடையில் அல்லாடும் வாழ்க்கை ஒரு த்ரில் கதை போலும்தான் இருந்தது. ஆனால் அதில் இருந்த எழுதிச்செல்லும் லாவகமும் நடையும் மீண்டும் சில வருடங்கள் கழித்து படித்தபொழுது அவர் வாழ்க்கையையும் வலிகளையும் உணரமுடிந்தது. இத்தனை போராட்டங்களுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து படைத்துக்கொண்டிருந்தது தேடலாகவும் ஏதோ ஒன்றிலிருந்து தப்பிப்பதற்காககவும் கூட இருக்கலாம் என்று இன்றைக்கு தோன்றுகிறது. வரிகள் அதேதான். ஆனால் நம் காலத்துக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப புரிதலில் எவ்வளவு மாற்றங்கள் ! இன்னும் 10 வருடங்களில் மீண்டும் சில வாசிப்புகளில் அவர் எழுதிசென்ற உலகத்தினுள் நுழைந்து விட முடியும் என்றுதான் நினைக்கிறேன்.

  என் நெருங்கிய சொந்தத்துக்கு காதினுள் குரல்கள் கேட்கும். அவரை சரியானபடிக்கு புரிந்துகொள்ளவும் அரவணைக்கவும் இந்தவாசிப்புதான் உதவியது. அவர் காதின் குரல்களின் கட்டளைக்கு ஏற்ப ஐநா சபையின் கூட்டங்களில் கலந்துகொள்ள விமானடிக்கெட்டு போட்டு காசை குனீசாக்குபவர். அனைவரின் திட்டலுக்கும் எள்ளலுக்கு நடுவிலும் நான் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருப்பேன். என் காதுகளை சிலருக்காக திறந்து வைத்து அவைகளை உபயோகித்த நல்ல தருணங்கள் அவை. அதுசரி. உள்ளே திறக்காமல் வெறுமனே திறந்திருக்கும் காதுகள் எதைத்தான் கேட்டுவிட முடியும்? 😦 சரியான மருந்துகளும் தொடர்ந்த மருத்துவ பராமரிப்பும் மட்டுமே அவரை நாம் இயல்பென நம்பும் வாழ்க்கைக்கு இழுத்துவந்து சிலகாலம் கட்டிவைத்திருக்கும்.

  எம்வீக்கும் இதுபோன்ற மருத்துவவசதிகள் கிடைத்திருந்தால் அவர் வாழ்க்கையில் இவ்வளவு வலிகள் ப்ட்டிருக்கவேண்டாமோ என அங்கலாய்ப்பாக இருக்கிறது 😦

  //நான் என் ஆசானின் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன்.// வாழ்வின் ஆதாரம், ஞானம், குரு கண்டடைதல் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஆராய்ச்சிகளோ கேள்விகளோ இல்லாத நம்பிக்கை எதன்மீதாவது வேண்டும். அந்த நம்பிக்கை நம்மை வழிநடத்தவும் நம்பியிருப்போருக்கு நன்மைசெய்யவுமானதாகவும் அமையும் படி கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் 🙂

  நீங்களும் சென்ஷி சாரும் ஆர்ப்பாட்டமின்றி தேடித்தேடி சேர்க்கும் படைப்புகள் உங்களுக்கு ஆத்மதிருப்திக்காக இருக்கலாம். ஆனால் இவைகளை தேடிக்கிடைக்கும் ஒருவனுக்கே அன்றைக்கான முழுமையான ஆனந்தம்! நன்றியெல்லாம் சொல்லப்போவதில்லை 🙂

  • 27/11/2013 இல் 18:46

   //இன்னும் 10 வருடங்களில் மீண்டும் சில வாசிப்புகளில் அவர் எழுதிசென்ற உலகத்தினுள் நுழைந்து விட முடியும் என்றுதான் நினைக்கிறேன்.//

   சரியாச் சொல்லிருக்கீங்க.
   எம்வீவீ மாதிரி ஆளுமையெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இந்த ஏற்புரையே அதற்கு ஆதாரம்.

   // ஆனால் ஆராய்ச்சிகளோ கேள்விகளோ இல்லாத நம்பிக்கை எதன்மீதாவது வேண்டும். அந்த நம்பிக்கை நம்மை வழிநடத்தவும் நம்பியிருப்போருக்கு நன்மைசெய்யவுமானதாகவும் அமையும் படி கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் //

   ஆஹா…ஆஹா…
   இப்டி பாக்யவானாகத்தானய்யா நான் ரொம்பநாளா ட்ரைப் பண்ணிக்கிட்டே……… இருக்கேன் 🙂

 3. தாஜ் said,

  29/11/2013 இல் 14:53

  முடியாது மஜீத்.
  நாம்
  நமக்கு விதிக்கப்பட்ட ஸ்தலத்தில் இருந்துதான்
  வாசிக்க வேண்டும்.
  கேள்விகள் எழத்தான். செய்யும்,
  அதனை தள்ளிவைத்தே வாசிக்க வேண்டும்.
  இதனை வாசித்தப்பிறகு,
  சுமார் ஐந்து பேர்களுக்காவது
  இப்புத்தகத்தை வாங்கி பரிசளித்திருப்பேன். படிக்கிறவர்களிடம் எல்லாம்
  இந்நாவலை சிபாரிசு செய்திருக்கிறேன்.
  வேள்வித் தீ படித்த போது இல்லாத,
  அவருக்கே இஸ்டமான அரும்புகள் படித்த போது இல்லாத அவரை சந்திக்க நினைத்த ஆசை
  இதனை படித்த போதுதான் ஏற்பட்டது.
  தனிப்பட்ட முறையில்
  அவரது செல்வ வாழ்க்கையும்,
  அதன் சீரழிவையும் அறிந்திருந்ததினால்,
  இந்தக் கதையில்
  அவரது காதும்,
  அவரது வாய்ப்புலம்பலும்
  எனக்கு இரண்டாம் பட்சமாகவே ஆனது.
  கேள்விகளை எல்லாம்
  தள்ளி வைத்தே
  படித்தேன், ரசித்தேன் என்பதுதான் உண்மை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s