கலைஞன் – ஆசிப் மீரான் சிறுகதை

என்ன ஒற்றுமையோ, தாரகை சாண்ட்ரா புல்லாக்கின் தொடையை பார்த்துவிட்டு வந்தபிறகு தமிழ் மன்றங்கள் பற்றிய பேச்சு வந்தது. தங்கள் ஊர் மன்றங்களில் நடக்கும் நாடகத்தைப்  பின்னணியாக வைத்து ‘கலைஞன்’ என்ற சிறுகதை எழுதியிருப்பதாக சொன்னார் ‘அமீரக அண்ணாச்சி’ ஆசிப் மீரான்.  நாகூர்ரூமி பாராட்டிய கதை அண்ணே என்றார் இலக்கியவாதி சென்ஷி (படித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்!). கொடுங்கள் என்றதுமே பிகு பண்ணாமல் அனுப்பிய தம்பி ஆசிபுக்கு ஸ்பெஷல் நன்றி . வாப்பாவின் கதை மாதிரி நெகிழ்ச்சி இல்லை இதில். முடிவு , ரூமியின் மாமா மர்ஹூம் முராதுபெய்க் சொன்ன ஜோக்கை நினைவுபடுத்தி சிரிக்க வைத்தது. இனி உங்கள் பாடு, ஆலிம்ஷாக்கள் பாடு. – ஆபிதீன்

**

asif-2fகலைஞன் 
ஆசிப் மீரான்

அகமது லெப்பைக்கு உற்சாகம் தாங்கவில்லை. தமிழறிவு மன்ற நாடகத்தில் நடிக்கப் போவது என்றால் சும்மாவா? அதுவும் தங்கய்யா அண்ணனே நேரில் கூப்பிட்டு “லெப்பைவாள், நீங்க நாடகத்துல இந்த வாட்டி நடிக்கிறியளா?’ன்னு கேட்டா அதை விடப் பெரிய விசயம் என்ன இருக்கும்?

புளியடி மாரியம்மன் கோவிலில் 10 நாள் திருவிழான்னு சொன்னாலும் ஆறாம் திருநாளைக்குப் பொறவுதான் விசேசம் களை கட்டும். அஞ்சாம் திருநாளைக்கு மாரியம்மன் கோவில் பள்ளிக்கூடப் புள்ளைங்களோட ஆண்டு விழா. ஆறாம் திருநாளைக்குத்தான் தமிழறிவு மன்ற நாடகம். தமிழறிவு மன்ற நாடகம்னா திசையன்விளை, நாசரேத்துலேருந்தெல்லாம் ஆட்கள் வண்டி வண்டியா வந்து குமிஞ்சிடுவாக. குத்தாலம் சாராயத்துல கூட தண்ணியைக் கலந்து விப்பான்னா பாத்துக்குங்களேன்.

வருசா வருசம் தமிழறிவு மன்ற நாடகம் போடும்போது சரித்திரக் கதைதான் போடுவாங்க. சுந்தர பாண்டியனின் வாள், சந்திரமதி, குலோத்துங்க சோழன் என்று எல்லாம் சரித்திர நாடகம். திருவள்ளுவர் கலா மன்றம் போடுறதெல்லாம் சமூக நாடகங்கள்தான். ஒருத்தருக்கொருத்தர் போட்டின்னு சொல்லாமப் போனாலும் ரெண்டு பேருக்கும் இடையில போட்டிதான். சுத்தி இருக்குற ஊர்ல எல்லாம் திருவள்ளுவர் கலா மன்றம்தான் நாடகம் போடுவாங்க. அதையெல்லாம் தூக்கிச் சாப்புடுற மாதிரி வருசத்துக்கு ஒரு நாடகமானாலும் ‘நச்’சுனு போட்டு அசத்திப்போடுவாங்க தமிழறிவு மன்றத்துக்காரங்க. அதுல கணபதி வாத்திக்குக் கொஞ்சம் கடுப்புத்தான்.. திருநெல்வேலி வானொலி நாடகத்துல நடிக்கற ஆளுக எல்லாம் தமிழறிவு மன்ற நாடகத்துலதான் நடிப்பாக. ஒண்ணுக்கு மூணு பொம்பளைங்க நாடகத்துல இருப்பாங்க. நகைச்சுவைக்கு தனியா இன்னொரு பொம்பள ஆளு வேற. செந்தூர் வேணி, நாஞ்சில் நளாயினி, நெல்லை பிரபான்னு எல்லாமே பெரிய ஆளுங்கதான். அதுவும் வேணியைப் பாக்குறதுக்கே கூட்டம் கூட்டமா ஆளுங்க வரும்.

வழக்கமா பின்னணி இசை போடுற தென்றல் இசைக்குழுவுக்குக் கூட வாய்ப்பு குடுக்க மாட்டாங்க. ஆர்மோனியம் பெட்டியோட தூத்துக்குடியிலேருந்து சலாம் பாய் குழுதான் வரும். ஒவ்வொரு காட்சிக்கும் தங்கய்யா அண்ணன் அவரே வாயால ‘தனதன தான்ன்ன்ன்ன்ன்ன்ன்’ அப்படின்னு தாளம் போட்டுì காட்டுவார். ‘இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்’குற மாதிரி சலாம் பாயும் ஆர்மோனியத்துல ஓர் இழுப்பு இழுப்பார். பக்கத்துல துரையரசன் தபலாவை சமயம் பார்த்து அடிப்பார்.. அவ்வளவுதான். உற்சாகம் தாங்காம தங்கய்யா அண்ணன் கெட்ட வார்த்தையாலேயே சலாம் பாயை பாராட்டுவார். இந்த ஒத்திகை சும்மா ஒரு வாரத்துக்கு நடக்கும். வழக்கமா சாயங்கால நாடகத்துக்கு காலையில “ராம் பாப்புலர்”ல வந்து இறங்குற இசைக்குழு மாதிரி இல்லாம ஒரு வாரம் தங்கி வசனத்துக்கு வசனம் பின்னணி இசை போட்டு ஒத்திகை பாப்பாங்க.

இசையோட ஒத்திகை ஒரு வாரம்னா நாடகத்துக்கு ஒத்திகை ஒரு மாசத்துக்கு முன்னால ஆரம்பிச்சுடும். முதல் ரெண்டு வாரம் வசனம் பார்த்து பேசலாம். மூணாவது வாரம் எவனாவது வசனத்தை, பாத்துப் பேசுனா தங்கய்யா அண்ணனுக்குக் கோபம் வந்துவிடும். “நீங்கள்ளாம் என்ன மயித்துக்கு நடிக்க வர்றியளாம்? போயி கழுத மேய்க்கப் போங்கலே. ரெண்டு வாரத்துக்குள்ள பாகம் படிக்க முடியலன்னா நீயெல்லாம் —————” என்று அவர் முடிப்பார். அதன் பின் நாடகத்துல அவன் இருக்க மாட்டான். இதுக்காகவே காத்திருந்தது மாதிரி நடிக்க வேற ஆளுகளும் காத்திட்டிருப்பாங்க. இந்த மாதிரி நாடகத்துலேருந்து வெளிய போறது மாதிரி அவமானம் உலகத்துலேயே கிடையாது. “என்னவேய், தங்கய்யாண்ணன் திட்டி அனுப்பிட்டாராமே?”ன்னு கேட்டு ஊருல ஆளாளுக்கு “எழவு” விசாரிக்க ஆரம்பிச்சிருவாங்க.. அதைக் கேட்டதும் வருத்தத்துல தலை குனிபவர்களும், “அவருக்குப் பெரிய மயிரப் புடுங்கின்னு நெனப்பு. வருசத்துக்கு ஒரு நாடகம்தான் போடுதாரு. அதுக்கே இந்தக் கொழுப்பு. நான் போடுதேன் பாருவேய் நாடகம். அதப் பாத்துட்டு அந்தாளு என் கிட்ட வருதானா இல்லயான்னு பாருவேய்?” என்று வீறாப்பு பேசி அப்படியெல்லாம் எதுவும் நடந்து விடாமல் காணாமல் போனவர்களும் நிறையவே உண்டு.

நாடகம் ஒத்திகை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாது. காசி அண்ணாச்சிக்கு வேண்டப்பட்டவங்க, நாடகத்துல நடிக்கிறவங்க தவிர யாரையும் உள்ள விட மாட்டாங்க. அதுலயும் நாடகத்துல நடிக்க மூணு நாளைக்கு முன்னாலேயே நடிகைகள் எல்லாம் வந்துட்டாங்கன்னா, அப்புறம் அந்தப் பக்கமே போவ முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு. போதாக்குறைக்கு சுக்குக் காப்பி, பருப்பு வடை, சுண்டல்னு தினம் பலகாரமெல்லாம் குடுப்பாங்க. இதுக்காகவே தமிழறிவு மன்ற நாடகத்துல நடிக்கப் பெரிய கூட்டம் காத்திட்டிருக்கும். மன்றத்துல உறுப்பினரா சேர்ந்து ஒண்ணு ரெண்டு வருசம் போயி தங்கய்யா அண்ணன் பார்வை பட்டு, “டேய் நீ நடிக்கிறியாடே?”ன்னு கேட்டுட்டா அதை விட பெரிய விசயம் ஒரு கலைஞனுக்கு இல்லவே இல்லை. அப்படி இருக்கும்போது அகமது லெப்பைக்கு அந்த யோகம் தானா வருதுன்னா அகமது லெப்பைக்கு உற்சாகம் வராமலா இருக்கும்?

அகமது லெப்பைக்கு இன்னமும் திருமணமாகவில்லை. அந்தக் காலமெல்லாம் போய் ரொம்பக் காலமாகி விட்டது. சொக்கலால் பீடியும், ‘தேத்தண்ணி’யும், ‘போயிலை”யும் இருந்தால் வாழ்க்கையில் அதை விட எதுவும் முக்கியமில்லை என்று திடமாக நம்புகிறவர். அது கிடைக்கிற ஒரே காரணத்துக்காகவே நாராயணசாமியில் இடைவேளை நேரத்தில் முறுக்கும் கல்கோனாவும் விற்பவர்.தெரிந்த பையன்கள் வந்தால் மட்டும் முதலாளிக்குத் தெரியாமல் முறுக்கை நொறுக்கி ஆளுக்குக் கொஞ்சம் தானம் செய்பவர். “போயிலை” மட்டும் போட்டு போட்டு பற்களெல்லாம் இற்றுப் போய் அவர் சிரிக்கும்போது ஏனோ விகாரமாகத் தெரியாது. பெயருக்குப் பின்னால் லெப்பை என்று இருந்தாலும் அல்ஹம்து* சூரா கூட உருப்படியாகத் தெரியாது என்று பெத்தா திட்டுவதைக் கண்டு கொள்ளாதவர்.

கொழும்பில் ஒரு காலத்தில் தேயிலை வியாபாரம் செய்து கொழுத்த பணம் சம்பாதித்த இசுலாமியக் குடும்பத்தில் கடைசி வாரிசு. செல்லம் அதிகமானதில் படிப்பு தலைக்கு ஏறாததை எவரும் கண்டு கொள்ளாமல் போக, இலங்கை அரசு திருப்பி அனுப்பிய ஏராளமான இந்தியர்களில் அகமது லெப்பையின் குடும்பமும் ஒன்று. இந்தியா வந்தபோது செல்வச் செழிப்பு அகன்று போய் விட்டது. செழிப்பாக வாழ்ந்து அகதியாக வந்திறங்கியதில் ஏற்பட்ட சோர்வில் அகமது லெப்பையின் பெற்றோர்கள் சீக்கிரமே போய் சேர்ந்து விட, படித்த சகோதரர்கள் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்க்க இடம் பெயந்தார்கள். அகமது லெப்பை மட்டும் அதிகப் பற்றாகி விட அவரைப் பற்றி அக்கறைப்பட எவருக்கும் அவகாசமில்லாமல் போனது. கோட்டையைப் போலக் கட்டி வைத்திருந்த வீடு அடமானம் வைத்து மீட்பதற்கு வழியில்லாமல் போய் விட்டதில், வட்டி போக விற்றுக் கிடைத்த பணத்தில் நூற்றுப் பத்து ரூபாய் அகமது லெப்பையின் கணக்காகக் கிடைத்தது. அந்தப் பணத்தையும் சகோதரர் மக்களுக்குக் கொடுத்து விட்டு ஊரிலேயே தங்கி விட்டார் அகமது லெப்பை.

பள்ளிவாசலிலேயே தங்கிக் கொண்டு பள்ளிவாசலையும், கபருஸ்தானையும் சுத்தம் செய்வது, மீதமுள்ள பகல் நேரத்தில் காசி அண்ணன் உரக்கடையில் உதவி செய்வது என்று அவரது வாழ்க்கை சிரமமில்லாமல்தான் ஓடிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு நாடக ஒத்திகையில், இன்ன பிற விசயங்களில் யார் என்ன சொன்னாலும் சளைக்காமல் சிரித்துக் கொண்டே வேலை செய்வதில் சமர்த்தர் என்பதால் அகமது லெப்பை எல்லோருக்கும் செல்லப் பிள்ளையும் கூட. காசி அண்ணன், தங்கய்யா அண்ணன் உள்ளிட்டவர்கள் ‘மாமா’ என்றும், பிற நடிகர்கள் “லெப்பைவாள்” என்றும் அன்போடுதான் கூப்பிடுவார்கள். குறிப்பாக நடிக்க வரும் பெண்களுக்குத் தேவையானவற்றைக் கவனிக்க அகமது லெப்பைதான் சரியான ஆள் என்று காசி அண்ணன் முடிவெடுத்திருந்தார். நடிகைகளும் அகமது லெப்பையிடம் கனிவாக நடந்து கொண்டு “அகமதண்ணே” என்றுதான் கூப்பிடுவார்கள். நடிகைகள் அகமது லெப்பைக்கு நெருக்கமென்பதாலேயே ‘லெப்பைவாளை’ நெருக்கமானவராகக் காட்டிக் கொள்ள முயன்று, ஒன்றும் ‘நடக்காததால்’ விலகியவர்களும் இல்லாமல் இல்லை.

தங்கய்யா அண்ணன் இப்படி திடீர் கேள்வி கேட்டுவிட்டாலும் அகமது லெப்பைக்கு கலைவாசனை அறவே இல்லையென்று அடித்துச் சொல்லிவிட முடியவே முடியாது. கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழறிவு மன்ற நாடக சுவரொட்டிகளைப் பார்த்தாலே அவரது கலையார்வம் புலப்படும். “வாயிற்காப்போன்- மாமா அகமட் லெப்பை” என்று அச்சிட்ட பிரசுரங்களை அகமது லெப்பை உயில் மாதிரி பாதுகாத்து வைத்திருக்கிறார். தமிழறிவு மன்ற சுவரொட்டிகளில் அவர் எப்போதுமே ‘அகமட் லெப்பை’தான். ஆங்கில வாசனையே இல்லாமல் போனாலும் அந்தப் பெயரில் அறியப்படுவதில் அகமது லெப்பைக்கு மகிழ்ச்சிதான். அவருக்கு இப்போதுதான் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் தேடி வந்திருக்கிறது.

பெத்தா**விடம் வந்து சொன்னபோது பெத்தா அவரளவுக்கு அதில் ஆர்வம் காட்டவில்லை. “போல போக்கத்தவனே.. நாடவம் நாடவம்னு ராவும் பவலுமா கெடந்து சாவாம உருப்படுறதுக்கு வழியப் பாருல” இந்த பதில் அகமது லெப்பைக்குப் பெரிய ஏமாற்றம் தந்ததாகத் தெரியவில்லை. இது பலமுறை கேட்டு சலித்த பதிலேதான்.

“போங்க லாத்தா***, இப்படித்தான சொல்லுதியோ.. பதினோரு வருசத்துக்கப் பொறவு தங்கய்யாண்ணனே கூப்பிட்டிருக்காரு”

“அவனும் உன்ன மாதிரி கோட்டிக்கார பயதானலே? பொம்பளையல கூட்டு வச்சுட்டு கூத்தடிக்குறதுக்குத்தானல நாடவம் போடுதியோ?” பெத்தா முகம் சுளித்துக் கொண்டாள்.

“சரி..சரி.. கோவப்படாதீயோ லாத்தா. கொஞ்சம் போயிலை தாங்கோ”

“மயிராண்டி.. இதுக்கு மட்டும் கொறச்சல் இல்ல. சம்பாதிச்சு குடுத்துருக்கான் பாரு. போயிலை கேக்காரு” பெத்தா சலித்துக் கொண்டாலும் சுருக்குப் பையைத் திறந்து அகமது லெப்பையிடம் கொடுக்கவே செய்தாள்.

“லாத்தா வாயால திட்டதோட சரி.. மனசெல்லாம் தங்கம்தான்”, அகமது லெப்பை தன் இற்றுப் போன பல்தெரியச் சிரித்தார். இதுவும் அன்றாட விசயங்களில் ஒன்றுதான். அகமது லெப்பை எங்களுக்குத் தூரத்துச் சொந்தமென்பதால், அடிக்கடி வீட்டுக்கு வருவார். பெத்தா, அகமது லெப்பையைக் கடுமையாகச் சாடுவது போலிருந்தாலும் உடன் பிறந்தவனிடம் காட்டும் வாஞ்சையைக் காட்டத் தவறியதேயில்லை. வீட்டில் விசேசமென்றால், யாருக்காவது ·பாத்திஹா ஓதினால் அகமது லெப்பையைக் கூப்பிட்டு சாப்பிடச் சொல்லி விட்டுத்தான் பெத்தாவே சாப்பிடுவாள். சாப்பிட்டு முடித்து விட்டு பெத்தா அகமது லெப்பையைத் திட்டுவதும், அவர் முகம் கோணாமல் பல் தெரியச் சிரிப்பதும் பெத்தா அவரைக் குழந்தையாக பாவித்து அறிவுரை சொல்வதும் பக்கத்திலிருந்து பார்க்கச் சுவையாக இருக்கும்.

“சரிலே கிறுக்கா, என்ன வேசம் போடப் போறே?” நாடகத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும்போது அகமது லெப்பையிடம் கேட்டாள் பெத்தா.

“தெரியாது லாத்தா, தங்கய்யாண்ணன் இன்னமும் வசனம் தரல”

“நீயும் கோட்டிக்காரன் அவனும் கோட்டிக்காரன்.. அவன் பாட்டுக்கு வசனம் தராம இருக்கான். நீ பாட்டுக்கு அவன் கிட்ட கேக்காம இருக்கிய… நாளைக்கு வசனம் சரியாச் சொல்லலேன்னு உன்னை நாடகத்தை விட்டுத் தூக்கிறப் போறான்”

பெத்தா இப்படிச் சொன்னதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது எனக்கு. கூத்தடிப்பதற்குத்தான் நாடகம் என்று சொன்னவளே ‘தம்பி’ யை நாடகத்தை விட்டுத் தூக்கி விடக் கூடாதே என்று கவலைப்படுகிறாளென்றால் ஆச்சரியம் எப்படி வராமல் இருக்கும்?!!

“அதப்பத்தியெல்லாம் கவலைப்படாத லாத்தா, தங்கய்யாண்ணன் எனக்கு ரெண்டு வேசம் தர்றதா சொல்லியிருக்காரு.. நாடகத்துக்கு மொத 15 காட்சி வரைக்கும் காவல்காரன். அப்புறமா வேற வேசம்னு சொல்லியிருக்காரு”

பெத்தாவுக்கு அதில் அவ்வளவு நம்பிக்கை வரவில்லை. “உனக்கு நாடகத்துல ரெண்டு வேசமா? என்னல கத வுடுறே முட்டா மாடா”

“சத்தியமாத்தான் சொல்லுறன்.. நீங்க வேணும்னா நாடகத்துக்கு வந்து பாருங்கோ” அகமது லெப்பை ஆர்வமாகச் சொன்னாலும் பெத்தா சம்மதிக்கவில்லை.

“ஆமா, இந்தக் கிறுக்கன் சொல்றதக் கேட்டுட்டு நாடவம் பாக்கப் போறாங்க. போய் வேலயப் பாருலேய்”

நாடகத்துக்கு இன்னும் இரண்டு நாள் மிச்சமிருக்கும்போது ஹம்சா கடையிலிருந்து சீனி மிட்டாய் வாங்கிக் கொண்டு பல் தெரிய வந்தார் அகமது லெப்பை.

“என்ன அதிசயமா இருக்கு.. சீனி முட்டாயெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கே?” பெத்தா கேட்டாள்.

“அன்னிக்கு நீங்க என்ன சொன்னியோ?”

“என்னிக்குலே கிறுக்கா, ஒழுங்கா சொல்லேன்” பெத்தாவுக்கு எரிச்சல் வந்து விட்டது. அவள் அப்படித்தான். யாரும் தாங்கள் சொல்ல வந்ததை ஒழுங்காகச் சொல்லாவிட்டால் கோபம் வந்து விடும்.

“நாடகத்துல ரெண்டு வேசம்னு சொன்னதுக்கு நம்ப மாட்டேன்னு சொன்னியளே. இங்க பாருங்க” அகமது லெப்பை கையிலிருந்த பச்சைக் கலர் காகிதத்தைக் காட்டினார். தமிழறிவு மன்றத்தின் 27வது கலைப் படைப்பான “மாறவர்மனு”க்கான பிரசுரம் அது. எல்லா நடிகர்களின் பெயரும் அவர்கள் ஏற்கப் போகும் பாத்திரமும் அச்சிடப்பட்டிருந்தது. பெத்தா கண்களைக் குறுக்கி வாசிக்கச் சிரமப்படுவதாகப் பாவித்துக் கொண்டு ,”எலேய் சின்னாரு, இதக் கொஞ்சம் சட்டுனு வாசி” என்று எனக்கு உத்தரவிட்டாள். அவளால் ‘சட்’டென்று வாசிக்க முடியாதென்பதை நேரிடையாக ஒப்புக் கொள்ளத் தயக்கம்.

வாசித்தேன் நான். மாறவர்மன் நாடகத்தில் இம்முறை பெரிய பெரிய நடிகர்கள் பெயரெல்லாம் இருந்தது. குறிப்பாக சமீபத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த செந்தூர் ஜெயந்தியின் பெயரும் அதில் இருந்தது. பெரியதாழையில் வைத்து நடந்த சமூக நாடகமொன்றில் குட்டைப் பாவாடை அணிந்து தோன்றியதிலிருந்து ஜெயந்தியை நாடகத்தில் நடிக்க வைக்கப் பெரும் போட்டியென்று நண்பர்கள் வட்டாரம் மூலமாக செய்தி கிடைத்திருந்தது. “லாத்தா, இந்த வருசம் ஜெயந்தின்னு ஒரு பொட்டப்புள்ள வந்திருக்கு. சின்னப் புள்ள.. என் கூட நடிக்குது” என்று அவர் சொன்னபோது எனக்கு அகமது லெப்பை மீது பொறாமையாக இருந்தது.

“அதெல்லாம் சரிலே, நீ என்ன வேசம் போடுதேன்னு சொல்லு” பெத்தா நினைவுபடுத்தினாள்.

“ராஜகுருவா நடிக்கேன் லாத்தா” சொல்லும்போதே முகத்தில் பெருமையும், ஆர்வமும் பொங்கியது அகமது லெப்பைக்கு.

பெத்தா விழி உயர்த்தி என்னைப் பார்த்த பார்வையின் பொருள் எனக்குப் புரிந்தது. செந்தூர் ஜெயந்தியை விட்டு விட்டு மாமா அகமட் லெப்பையின் பெயரைத் தேடினேன். “மாமா அகமட் லெப்பை- வாயிற்காப்போன் மற்றும் ராஜகுரு” என்று அச்சிட்டிருந்ததைக் கண்டதும் அகமது லெப்பை மேல் இருந்த பொறாமை இன்னும் கூடி விட்டது. “பெத்தா, லெப்பை ராஜகுருவா நடிக்கிறதாத்தான் போட்டிருக்கு” அகமது லெப்பை முகமெல்லாம் வெளிச்சமாகி பெத்தாவைப் பார்த்த பார்வையைத்தான் கர்வம் என்று சொல்வார்களோ?

பெத்தாவிடம் பேசி முடித்த கையோடு அகமது லெப்பை ஒத்திகைக்குக் கிளம்ப நானும் அவரோடு ஒட்டிக் கொண்டேன். ஜெயந்தியைப் பார்த்து விட்டு வந்தால் நண்பர்களிடம் கதையளக்க அது ஒன்று போதும். அடுத்த நாடகம் வரை தாங்கும். ஒத்திகைக்குப் போனபோது என்னைப் போலவே பலரும் ஜெயந்தியைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள் என்று புரிந்து போனது. போன வருடம் வேணியக்கா பக்கத்தில் எனை இருத்தி வேர்க்கடலை தந்தது போல இம்முறை ஜெயந்தி பக்கத்தில் இருந்து கடலை சாப்பிடும் எண்ணம் கனவாகிப் போன சோகத்தில் உடனே வெளியே வந்து விட்டேன்.

நாடகத்தன்றுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வீட்டில் உம்மா உட்பட வடக்குத் தெருவே கிளம்பி நாடகம் பார்க்கப் புறப்பட, கூடவே பெத்தாவும் புறப்பட்டாள். “இவ்வளவு நாளா சும்மா காவல்காரன் வேசம்தான் போட்டுக்கிட்டிருந்தான். இன்னைக்குத்தான் பெரிய வேசம் போடப் போறான். எப்படித்தான் நடிக்குறான்னு பாக்கட்டும்லா” என்று காரணம் சொன்ன பெத்தாவைப் பக்கத்து வீட்டுப் பெண்கள் கேலி செய்ததை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

ஒரு வழியாக நாடகம் பதினொன்றரை மணிக்கு சாமி ஊர்வலமெல்லாம் முடிந்து துவங்கும்போது கூடியிருந்த பெருங்கூட்டத்திற்குக் காரணம் தமிழறிவு மன்ற நாடகமா அல்லது செந்தூர் ஜெயந்தியா என்று ஒரு பக்கம் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது. சரித்திர நாடகத்தில் ஜெயந்தி குட்டைப் பாவாடை அணிந்து வலம் வரப் போவது எப்படி என்பதுதான் எனக்குள் இருந்த பெரும் கவலை.

வழக்கமான அறிமுகம், வளவளா பேச்சுக்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் அமர்க்களமான அரண்மனைப் பின்னணியில் நாடகத்தின் முதல் காட்சி துவங்க ஒரு மாதமாக அரங்க அமைப்பிற்காக உழைத்த கண்ணப்பன் அண்ணனின் உழைப்பு பெரும் கரவொலியைப் பெற்றுத் தந்தது. நாடகத்தில் காட்சிகள் மாறிக் கொண்டிருக்க அரண்மனை வாயிற்காப்போனாக அசையாமல் நின்று தனது பதினோராண்டு நாடக அனுபவத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார் ‘மாமா அகமட் லெப்பை’. அதன் பிறகு நடந்த காட்சிகளில் ராஜ குருவாக வந்தவர் நிச்சயமாக ‘அகமட்’ லெப்பையில்லை. நாடகம் அவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்க அகமது லெப்பையை மட்டும் காணவேயில்லை. அது பற்றியெல்லாம் எனக்குக் கவலையுமில்லை. செந்தூர் ஜெயந்தி இளவரசியாக வந்து மாரியப்பனோடு நெருக்கமாகக் காதல் செய்ததில் மனசு வதங்கிப் போனது. எப்படியும் நாடக நடிகனாகி விட வேண்டுமென்ற வைராக்கியம் மனதில் துளிர் விடத் துவங்கியது.

வீட்டுக்கு வந்தும், பெத்தா திட்டிக் கொண்டிருந்தாள். நாடகம் மூன்றரை மணிக்கு முடிந்தது. “இந்தக் கிறுக்கன் பேச்சைக் கேட்டு ராத்தூக்கத்தைத் தொலைச்சுட்டனம்மா”ன்னு புலம்பிக்கொண்டிருந்தாள். வீட்டில் மற்றவர்களுக்கு அது பற்றியெல்லாம் வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. அகமது லெப்பை இன்னமும் வீட்டுக்கு வரவில்லை. நாடகம் முடிந்து நடிகைகளையெல்லாம் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு, அரங்கப் பொருட்களையெல்லாம் சரி பார்த்து அனுப்பி வைத்து விட்டு சாயங்காலம்தான் இனி அவரைப் பார்க்க முடியும். ஓரிரு சமயங்களில் மன்றத்திலேயே ராத்தூக்கமும் போட்டு விட்டு மறுநாள் காலையில்தான் வருவார். அதுவரைக்கும் பெத்தா தொணதொணத்துக் கொண்டுதான் இருப்பாள்.

“ராசாவுக்கு மந்திரியா நடிக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டானம்மா.. இந்த முகரக் கட்டக்கு எப்படி அந்த வேசம் குடுப்பான்னு நெனக்காமே நான் வேற போயிட்டு வந்துட்டேனே” பெத்தா தெருவீட்டுக்கும், முற்றத்துக்குமாக நடந்து கொண்டும் முணுமுணுத்துக் கொண்டுமிருந்தாள். ராஜகுரு என்று சொல்லத் தெரியவில்லை அவளுக்கு. “கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன்” என்று சொன்னவர்களுக்கு ‘மூதேவி’ பட்டத்தை ஏதோ டாக்டர் பட்டம் கொடுப்பது போல இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் அகமது லெப்பை வந்ததும் பெத்தா முழுநாள் வசவையும் மொத்தமாகப் பொழிய ஆரம்பித்து விட்டாள். “ஹரவாப் போறவனே!! உம பேச்சைக் கேட்டு நாடகம் பார்க்க வந்தேன் பாரு!! என்னமோ ரெண்டு வேசத்துல நடிக்கிறேன். அதுவும் ராசாவுக்கு மந்திரியா நடிக்கிறேன்னு பொய்யால சொன்ன?”

“மந்திரி இல்ல லாத்தா.. ராஜகுரு”

“என்ன எழவோ, நீதான் ஒரு எழவுலயும் வரலையே அப்புறம் என்னல ராசகுரு?”

“அப்போ நீங்க சரியா பாக்கலியோ”

“என்னத்தைப் பாக்கலியோ? வெள்ளனே மூணு மணிவரைக்கும் உக்காந்துட்டு வந்திருக்கேன். வூட்டுக்குள்ள நுழையும்போது சுபுஹ¤ பாங்கு**** சொல்லிட்டாங்க. நீ என்ன கதையா சொல்லுற, பே மாடா!!”

“லாத்தா, நெசம்மா நான் நடிச்சேன். என்னைப் பாக்கலியா நீங்க?”

அகமது லெப்பை முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கேட்க எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“லாத்தா, நம்புங்கோ, ராஜகுரு செத்துப் போனாருதானே.. அப்போ ராஜகுருவோட பொணமாக் கிடந்தது நாந்தான்” என்றார் உற்சாகத்தோடு. பெத்தாவின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிக்கு என்ன பொருள் தருவதென்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்த வருடம் தமிழறிவு மன்றத்தில் நாடகத்தில் நடிக்க இளமாறனாக என்னைத் தங்கய்யா அண்ணன் அழைத்தபோது எந்த வேடத்தில் நடிக்கவும் அகமது லெப்பை இல்லை.

***

குறிப்புகள் :

* அல்ஹம்து சூரா- திருக்குரானின் முதல் அத்தியாயம். தொழுகைக்காக சிறுவர்/ சிறுமியர்களுக்கு முதன் முதலில் சொல்லிக் கொடுக்கப்படும், மனனம் செய்விக்கப்படும் அத்தியாயம்

**பெத்தா- பாட்டி (பெரும்பாலும் தாய்வழியில். சில இடங்களில் உம்மம்மா. உம்மாவின் உம்மா)

*** லாத்தா- அக்கா (தென் தமிழகத்து இசுலாமியர்களிடம் மட்டுமே இது அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது)

**** பாங்கு- தொழுகைக்கான அழைப்பு. சுபுஹு பாங்கு என்பது விடிகாலை தொழுகைக்கான அழைப்பு இதெல்லாம் போக, “ஹரவாப் போறவனே” என்றால் இந்தக் கதையை வாசித்து விட்டு நீங்கள் என்னைப் பார்த்து மனதுக்குள் சொல்லிக் கொள்வது!! (நாசமாப் போறவன்)

***

நன்றி : ஆசிப் மீரான் | asifmeeran@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. 28/10/2013 இல் 19:43

  தஹஜ்ஜத்து வரை முளு நாடவம் பார்த்த ராஹத்து நெரஞ்சு இருக்கு மனசுலெ…..!

 2. ராஜசுந்தரரஜன் said,

  28/10/2013 இல் 22:51

  அருமையான நகைச்சுவை எழுத்து. இறுதித் திருப்பத்திற்கான முன்தொடுப்பும் பாராட்டப்பட வேண்டும். நெல்லை பிரபா, செந்தூர் வேணி எல்லாம் எனக்கும் தெரிந்த ஆட்களாய் இருக்கிறார்களே!

  • 29/10/2013 இல் 07:33

   வாங்க ரா.சு. சார். ‘நாடோடித் தட’த்தில் நீங்கள் காட்டும் சத்தார்பாயைப் பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தபோது (இங்கே எழுதினால் உதைப்பார்கள்) ஸ்பிக்நகர் நாடக அனுபவங்கள் பற்றியும் பேசினோம். உங்களின் கால் – மன்னிக்கவும், கை – படாத இடமே இல்லை போலிருக்கிறது! ஆசிப் சார்பாக நன்றி.

 3. அனாமதேய said,

  01/09/2018 இல் 11:00

  அருமை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s