குளச்சல் மு. யூசுபுக்கு குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

முதலில் பார்க்கவும்  : இன்னொரு மோசடி இன்னுமொரு எழுத்துத் திருட்டு

**

 kulachal-yusuf1

விழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இலக்கிய உலகம்

 என். சுவாமிநாதன்

தமிழ் படைப்பாளி குளச்சல் மு.யூசுப்புக்கு அறிமுகம் தேவையில்லை. நாவல்கள், சுய சரிதைகள், அனுபவம் பகிர்வுகள் என 28 நூல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக இவர், சங்க இலக்கிய நூலான ’நாலடியாரை’ மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருந்தார். அந்த நூலை, பிழைத்திருத்தம் செய்து தருவதாகக் கேட்டு வாங்கிய மலையாளஎழுத்தாளர் ஒருவர், அதை தனது பெயரிலேயே வெளியிட்டு விட்டார், இச் சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை, தமிழ் இலக்கிய உலகில், அது ஒரு விவாதத்தைக் கூட ஏற்படுத்தாதுதான் சோகம்.

மு.யூசுப்பை நாகர்கோயில் அருகே உள்ள புத்தன்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

 பொதுவாகவே இலக்கிய உலகில் புத்தகங்கள் எழுதியதும் சக இலக்கியவாதிகளில் பிழை திருத்தம் செய்யக் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மலையாள எழுத்தாளரும், வழக்கறிஞருமான விஜயன் கோடாஞ்சேரியிடம், நான் எழுதிய நாலடியார் மலையாளப் பதிப்பை திருத்தம் செய்யக் கொடுத்தேன். அதை அவர், அவரது நண்பரான கோழிக்கோட்டை சேர்ந்த முண்டியாடி தாமோதரனிடம் கொடுத்திருக்கிறார்,.

 ஆனால், அந்தப் புத்தகத்தை தானே எழுதியதாக முண்டியாடி தாமோதரன் வெளியிட்டு விட்டார். காவல் துறையில் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. முண்டியாடி தாமோதரன், விஜயன் கோடாஞ்சேரி இருவருக்கும் தமிழே தெரியாது. இவர்களால் எப்படி ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய முடியும்?

 நான் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். என் கல்வித்தகுதி குறித்தும், இலக்கிய ரசனை குறித்தும் அண்மையில் ஒரு மலையாள நாளிதழ் என்னை நேர்காணல் செய்தது.

 அதை அடித்தளமாக வைத்து, கல்வித்தகுதியே இல்லாத உனக்கு எப்படி செம்மொழி நிறுவனம் நாலடியாரை மொழிபெயர்ப்பு செய்யும் பணியை தந்தது. அதில் ஏதோ ஊழல் நடந்திருக்கிறது என்று மலையாள எழுத்தாளர்கள் மிரட்டுகிறார்கள்.

 செம்மொழி நிறுவனத்துக்கு, நான் அனுப்பிய விண்ணப்பத்தை தமிழ், மலையாள பண்டிதர்களும், அதிகாரிகளும் நேர்காணல் செய்து சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்யும் தகுதி இருப்பதாக அனுமானித்து எனக்கு தந்த பணி இது. இதெல்லாம் என் மனதை சஞ்சலப்படுத்தி விட்டது. இதனால் சமீபகாலமான மனம் ஒடிந்து என் எழுத்துப் பணியும் தொய்வுற்றதை உணர்கிறேன்.

நிலப்பரப்புகள் சார்ந்து மனித மனங்களில் உறைந்து போய் கிடைக்கும் தவறான புரிதல்கள்தான் அவர்களுக்கு தவறு செய்யும் தைரியத்தை கொடுத்திருக்கிறது.

 ஒரு படைப்பாளியாய் என்னால் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. வறுமையின் விளிம்பில் வாழும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் கூட, என்னை ஏய்ப்பதற்கான மனவலிமையை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். இப்போது அவர்கள் என் கல்வி பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.

 இந்த இலக்கிய மோசடி விவகாரத்தில் தமிழ் எழுத்துலகம் நடந்து கொள்கிற விதம் மிகுந்த ஏமாற்றத்தை விதைத்து விட்டது.

நான் எழுத்துலகில் எந்த குழுவையும் சார்ந்தவன் அல்ல. இதனால் கூட எனக்கு ஆதரவுக் குரல்கள் ஒலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆமினாவதூத் நிகழ்வில், உடனடியாக பறந்துவந்த கண்டனக் கணைகள், என் விவகாரத்தில் கூர் மழுங்கிப் போனதை என்னவென்று சொல்ல?

 புத்தகத்தை வெளியிட்ட நிறுவனம், முண்டியாடி தாமோதரன், விஜயன் மூன்று பேரையும் விசாரணைக்கு வரச் சொல்லி, தமிழக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது. தவறு செய்தவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை. மிரட்டும் தொனியில் தனிப்பட்ட வகையில் என்னிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தார்களே தவிர, சட்ட நடவடிக்கையை உதாசீனப்படுத்தினர் என்கிறார் சோகத்துடன்.

தமிழ் இலக்கியவாதிகள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!

Click to enlarge the Image

kulachal-news2

**

குளச்சல் மு. யூசுப் மேலும் சொல்கிறார்:

நான் அனுப்பி வைத்த ஒரு விண்ணப்பத்தை முன்வைத்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், நேர்காணலுக்கு அழைத்து, சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான நாலடியார் கவிதை நூலை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணிக்கு என்னைத் தேர்வு செய்தது.

இதன்படி நான், நாலடியாரை மலையாளத்தில் மொழிபெயர்த்தேன். இதன் ’ஒரு பகுதி’ யை நண்பர் என்ற முறையில், தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வழக்கறிஞரும் பதிப்பாளருமான  விஜயன் கோடஞ்சேரியின் பார்வைக்கு  அனுப்பி  வைத்தேன்.

இரண்டு தொகுப்புகளாக அனுப்பிவைக்கப்பட்ட இதில், மலையாள லிபியிலான தமிழ்க் கவிதைகள், தமிழ்ச்சொற்களுக்கான மலையாள அர்த்தம், மலையாளத்தில் விளக்கவுரை, F.J. Leeper எனும் ஆங்கிலேயர் எழுதிய ஆங்கில விளக்கம், ஆகியவற்றுடன் மொழி பெயர்க்கப்பட்ட  மாதிரிக் கவிதைகளும்  ஒரு  கடிதமும்  இணைத்திருந்தேன்.

இதை அனுப்பி வைத்ததன் நோக்கம், தமிழே தெரியாத ஒருவர், மேற்கண்ட விளக்கங் களின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு, மலையாள மொழியில் இதைக் கவிதையாக எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்வதுதான். ஆகவேதான் ஒரு பகுதியை அனுப்பி வைத்தேன்.  இலக்கியப் பணிகளில்  இதுபோன்ற  நிகழ்வுகள்  வழக்கமானவை.

இதைத் தொடர்ந்து, நடந்த தொலைபேசித் தொடர்புகளின்போது விஜயன், ”நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததை, நான் எனது நண்பரும் கவிஞருமான முண்டியாடி தாமோதரன் என்பவரிடம் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

”முண்டியாடி தாமோதரனை எனக்கு முன்பின் தெரியாது. நான் உங்களுக்கு அனுப்பியதை என் அனுமதியில்லாமல் நீங்கள் அவரிடம் கொடுத்தது தவறு. ஆகவே அதை வாங்கி உடனே எனக்கு அனுப்பி விடுங்கள்” என்றேன். “அவர், அதில் நூறு கவிதைகள் எழுதி விட்டார்” என்றார் விஜயன். “நான் அவரிடம் எழுதச் சொல்லவில்லை. ஆகவே, அதை வாங்கித் திரும்ப அனுப்பி விடுங்கள்” என்றேன். “மிச்சமிருக்கும் நூறையும் எழுதாமல் அனுப்பிவிடவா?” என்று கேட்டார். “அவர் எழுதத் தேவையில்லை. நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன். ஆகவே, உடனே அதை அனுப்பி வைத்து விடுங்கள்” என்றேன்.

இதைத் தொடர்ந்து, தாமோதரனைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை விஜயன் என்னிடம் உருவாக்க ஆரம்பித்தார். ”முண்டியாடி தாமோதரன் ரொம்ப நல்ல மனிதர். பல வருடங்களாக மலையாளத்தில் எழுதி வருகிறார். பாவம், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்பை நீங்கள் மலையாளத்தில் வெளியிடும்போது அவரது பெயரையும் சேர்த்துக்கொண்டால் அது அவருக்கு அங்கீகாரமாக இருக்கும்” என்றெல்லாம் சொன்னார்.

”முழுவதும் நான் எழுதிய மொழிபெயர்ப்பில் இன்னொருவர் பெயரைச்சேர்த்துக்கொள்ள இயலாது. வேண்டுமென்றால் அவர் பெயரை நான் நன்றிக்குறிப்பில் சேர்த்துக்கொள்கி றேன்.” என்றேன்.

”சரி, அப்படியே செய்யுங்கள். ஆனால், ஆர்வத்துடன் நூறு கவிதைகளை எழுதியதால் நீங்கள் எழுதிவைத்திருப்பதைப் பார்க்க விரும்புகிறார். கூடவே, பிழை இருந்தால் திருத்தி யும் தருவார். எனவே, அதை அவரது முகவரிக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்.

இதன் பிறகு, விஜயன், தன்னிடம் இருந்ததையும் முதல் எதிரியிடம் கொடுத்திருந்ததையும் சேர்த்து, ஒரு கடிதத்துடன் எனக்குத் திருப்பியனுப்பினார். ஏற்கனவே தொலைபேசியில் சொல்லி, நான் மறுத்த விஷயத்தை,  இந்தக் கடிதத்திலும் வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து, நடந்த தொலைபேசித் தொடர்புகளின்போது, தாமோதரனிடம், ”நீங்கள் எழுதி அனுப்பிய 100 கவிதைகளை, நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் 400 கவிதைகளுடன் சேர்க்க இயலாது. நீங்கள் ஆர்வத்துடன் கேட்பதால், உங்கள் பெயரை நான் இந்த நூலில் நன்றிக்குறிப்பில் வேண்டுமானால் சேர்த்துக்கொள்கிறேன்.” என்று சொன்னேன்.  ”சரி, அப்படியே செய்யுங்கள். இருந்தாலும், நீங்கள் எழுதியிருப்பதை நான் பார்க்க விரும்புகி றேன். கூடவே, பிழைதிருத்தமும் பார்த்து அனுப்புகிறேன். ஆகவே, அதை என் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்”  என்றார்.

தாமோதரனின் இந்த வேண்டுகோள்படி, மேற்கண்ட 400 கவிதைகளையும் அவர் பணி யாற்றும், கோழிக்கோடு, பி.எஸ்.என்.எல். அலுவலக முகவரிக்கு, கூரியர் தபாலில் அனுப்பி வைத்தேன். இத்துடன், தொலைபேசியில் சொன்னதை வலியுறுத்தி ஒரு கடிதமும் இணைத்திருந்தேன்.

400 பக்கங்கள்கொண்ட இந்த, நான்குத் தொகுப்புகளில், நான் மலையாளத்தில் மொழி பெயர்த்த 400 கவிதைகளும், மலையாள எழுத்து வடிவிலான 400 தமிழ்க்கவிதைகளும், தமிழ்ச்சொற்களுக்கான மலையாள அர்த்தமும், மலையாள விளக்கவுரையும், F.J. Leeper எழுதிய ஆங்கில விளக்கமும் இருந்தன. இவை அனைத்தும், நாகர்கோயில் இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உட்பட ஏற்கனவே பலர் திருத்தியது.

நடந்த இந்த மோசடியின் முக்கியமான பகுதி:  29-09-2011 அன்று நான் கூரியர் தபால் மூலம் முதல் தாமோதரன் பணியாற்றும் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைத்த இந்த நான்கு தொகுப்புகளையும் அவர், 05-10-2011 அன்று கைப்பற்றியிருக்கிறார். இதை நகல் எடுத்து வைத்து விட்டு, ஒரு சில குறிப்புகள் மற்றும் தனது கையொப்பங்களுடன், 11-10-2011 தேதியிட்ட ஒரு கடிதத்துடன் ஐந்தே நாட்களில் திருப்பி அனுப்பினார். இதையே, நாலடியார் என்ற பெயரில், மலையாள மொழிபெயர்ப்பு முண்டியாடி தாமோதரன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். 

நான் மொழிபெயர்த்த, இந்நூலை செம்மொழி நிறுவனத்தில் சமர்ப்பித்தேன். இதில் பயன் படுத்தப்பட்ட சமஸ்கிருதச் சொற்களை நீக்கவும், ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் முன்னுரைகள் எழுதவும், பாடல் முதல் குறிப்பு அகராதி, கலைச்சொல் அகராதி போன்ற வற்றைச் சேர்க்கவும் சொல்லி, செம்மொழி நிறுவனம்  கடிதம் மூலம் பரிந்துரை செய்தது. இந்தத் திருத்தங்கள் அனைத்தையும் செய்து, மீண்டும்  சமர்ப்பித்தேன்.

இந்நிலையில், ஒருநாள், நான் திருவனந்தபுரத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு புத்தகக் கடையில் நாலடியார் எனும் தலைப்பில் ஒரு மலையாளப் புத்தகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அது, என்னிடம் பிழைதிருத்தித் தருவ தாகக் கேட்டு வாங்கிய அச்சுப்பிரதி. ”முண்டியாடி தாமோதரனுக்கு இதை அனுப்பி வையுங்கள், அவர் பிழைதிருத்தித் தருவார்” என்று கடிதம் மூலம் கேட்ட விஜயனின் முன்னுரையுடன் நூலாக வெளிவந்திருந்தது. நான் அனுப்பி வைத்த வரிசையை மாற்றிய துடன் தவறான உள்நோக்கத்துடனான சில திருத்தங்களுடனும் இந்நூல் வெளிவந்திருந் தது. நான் எழுதிய புத்தகத்தின் முதல்பிரதியை நானே விலைக்கு வாங்கினேன்.

புத்தகத்தின் முன்னுரையில்:  ”நாலடியார் என்மூலம் வெளிவருவதற்கான வழியமைத்தவர் தமிழின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான குளச்சல் மு. யூசுப்.” என்றும், ”அரசு தொடர்பான ஒரு திட்டத்திற்காக இந்தப் புராணப் படைப்பின் தமிழ் ஒரிஜினலும் வார்த்தைகளுக்கான மலையாள அர்த்தங்களும் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை யும் சேகரித்து அவர் எனக்கு அனுப்பித் தந்தார்.” என்றும் ”மற்றொருவரிடமிருந்து விஷயம் வேண்டியதுபோல் நடக்காத சூழ்நிலையில் இப்படிச் செய்ததாக நான் புரிந்துகொண் டேன்.” என்றும், ”எனக்கென்றால் தமிழ் இலக்கியப் பின்னணியும் புராணங்களும் பெரிய அளவில் தெரியாது. மொழியே கஷ்டம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “யூசுப் அனுப்பி வைத்ததில் ஒரிஜினல் தமிழ்க்கவிதைகளும் இருந்தன. முதலில், நான்கைந்து கவிதைகளை கேஷுவலாக எழுதி யூசுபுக்கு அனுப்பினேன். பிறகு இரண்டு வாரம் மெனக்கெட்டிருந்து முதலிலுள்ள நூறு கவிதைகள் அடங்கிய ஒரு வால்யூமை மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். இதை ஏற்றுக்கொள்கிறேன். மீதி மூன்று வால்யூமையும் அனுப்புகிறேன். சீக்கிரம் செய்து தாருங்கள் என்று சொல்லி, முன்னூறை யும் அனுப்பித் தந்தார். இதைச் செய்து முடிக்க எனக்கு ஒன்றரை மாதங்கள் வேண்டி வந்தது. இதிலுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு, ஐரோப்பியரான, டாக்டர் போப் 19 ஆம் நூற்றாண்டில் எழுதியதாக நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட முன்னுரையில் குறிப்பிட்டபடி, ஒரிஜினல் தமிழ்க்கவிதைகளை நான் அனுப்பி யதாகவும், நான்கைந்து கவிதைகளை கேஷுவலாக எழுதி அவர் எனக்கு அனுப்பி யதாகவும்  மீதி மூன்று வால்யூமை சீக்கிரம் செய்து தாருங்கள் என்று சொல்லி முன்னூறு கவிதைகளை நான் அனுப்பியதாகவும் இதைச் செய்ய ஒன்றரை மாதங்கள் வேண்டி வந்தது என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இதிலுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பு டாக்டர் போப் எழுதியதாக நினைக்கிறேன் என்பதும் தவறு.

மேலும், இதுபோன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பவர்கள், ஆய்வாளர் களுக்கும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஏற்படுகிற பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். சங்க இலக்கியங்கள் குறித்தோ  தமிழ்மொழி குறித்தோ எதுவும் தெரியாத, இதற்கு முன் எந்த நூலையும் மொழிபெயர்க்காத நிலையில்,   பதில் சொல்வதிலிருந்துத் தப்பிப்பதற்காக மட்டுமே இந்த நூலில் எனது பெயரைக் குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

இந்த மொழிபெயர்ப்பிற்கான, பார்வைநூல்களாக நான் எடுத்துக்கொண்டவை: சென்னை சுந்தரம் அச்சுக்கூடம் 1928இல் வெளியிட்ட நாலடியார் நூலும், 1892இல் கலாரத்நாகரம் அச்சுக்கூடம் வெளியிட்டு, 2004இல் சந்தியா பதிப்பகம் மறுவெளியீடு செய்ததுமான நாலடியார் நூல்களாகும். இதிலுள்ள ஆங்கில விளக்கம் F.J.Leeper எழுதியது. இதை, பிழைதிருத்துபவர்களின் கவனத்திற்காக மட்டுமே சேர்த்துக்கொண்டேன்.

அனைத்துக்கும் மேலாக, நாலடியார் நூலின் மிக முக்கியப் பகுதியும் முதல் கவிதையுமான கடவுள் வாழ்த்தை, நான் எதிரிகளுக்கு அனுப்பி வைக்காததால் மோசடியாக வெளிவந்த நூலிலும் இது  இடம்பெறவில்லை.

நான், மலையாளத்தில் மொழிபெயர்த்ததும், 1500 வருடங்களுக்கு முன்புள்ளதுமான இந்த தமிழ்ப்படைப்பை, விஜயனின் உதவியுடன், நயவஞ்சகமாகக் கேட்டு வாங்கி, தமிழே தெரியாத தன் பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் தாமோதரன்.  இது, சம்பந்தமாக நான், தாமோதரனுக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பினேன். இதற்கு, தாமோதரன், தான் செய்தது மோசடியென்பதை மேலும் நிரூபிப்பதுபோல், தான் எழுதிய முன்னுரைக்கு முரண்பாடாகவும், பிரச்சினையைக் குழப்புகிற நோக்கத்துடனும் எட்டுப் பக்க பதில் எழுதியிருக்கிறார்.

நான் மொழிபெயர்த்த நூலைப் பிழைதிருத்தித் தருகிறோம் என்று கேட்டு வாங்கி, பிரதி எடுத்து விட்டுத் திருப்பியனுப்பினார்கள் என்பதற்கு, குறிப்பாக, ஐந்தே நாட்களில்  திருப்பி அனுப்பினார்கள் என்பதற்கு, கூரியர் ரசீதிலுள்ள எடையும்,  இப்போதும் என் கைவசமிருக்கும் அந்தத் தொகுப்புகளிலுள்ள அவரது கையெழுத்துகளும் தேதியும் அவர் கள் கைப்பட எழுதிய கடிதங்களும்  ஆதாரம்.

மேற்கண்ட தனது பதிலில் தாமோதரன்: ”நான் மொழிபெயர்த்து உங்களுக்கு அனுப்பி யதை நீங்கள் செம்மொழிக்கு அனுப்பினீர்கள். அதை அவர்கள் நிராகரித்ததாக அறிந் தேன்.”  என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  செம்மொழி நிறுவனம், பிற்சேர்க்கைகளுக்காக வும் சமஸ்கிருதச்சொற்களை நீக்கவும் சொல்லிப் பரிந்துரைத்த, வழக்கமான ஒரு நிகழ்வை நான், மலையாளியும் தமிழ்க்கவிஞருமான ஒரு நண்பரிடம் சொல்லியிருந்தேன். இதை இவர் மூலம் அறிந்து, அரைகுறையாகப் புரிந்து கொண்ட முதல் எதிரி, தனக்குச் சம்பந்த மில்லாத இந்த நிகழ்வையும் சாதகமாக்க முயற்சி செய்திருக்கிறார்.  இத்துடன் அதில் இடம் பெற்றுள்ள ஆங்கில விளக்கம், டாக்டர் போப் எழுதியது அல்ல, F.J. Leeper எழுதியது என்பதுகூட நான் சொன்ன பிறகுதான் அவருக்குத் தெரியும்.

நான் எழுதிய கடிதத்திற்கு மூன்றாம் எதிரியான புத்தக நிறுவனத்தார்: “இதை நீங்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்க்கப் பாருங்கள்” என்று பதில் எழுதியிருந்தார்கள்.

தாமோதரன் தனக்குத் தமிழ் தெரியாதென்று முன்னுரையில் ஒப்புக்கொண்ட நிலையிலும்  புத்தக நிறுவனத்தார், மொழிபெயர்ப்பு முண்டியாடி தாமோதரன் என்று குறிப்பிட்டுள்ளார் கள். இது, தங்களிடம் வெளியிடுவதற்காக மோசடி யான முறையில் வந்த மொழிபெயர்ப்பு நூல் என்பது நன்றாகத் தெரிந்ததால்தான், 1,25,000 ரூபாய் பெற்றுக்கொண்டு இதை வெளியிட்டிருக்கிறார்கள்.  மேலும், இம்மோசடிக்கு மூல காரணமாக இருந்த விஜயன், ஒரு புத்தக நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தும் மற்றொரு பதிப்பகம் மூலம் வெளியிடுவதற்கான காரணமும்  இதுதான் என்று பதிப்பகத்தாருக்குத் தெரியும்.

ஒலிவ் பப்ளிகேஷன் எனும் ஒரு மலையாள பதிப்பகம் இதை வெளியிட என்னிடம் எழுத்து பூர்வமாக அனுமதிகேட்ட விஷயத்தை, விஜயன்மூலம் பதிப்பகத்தார், நிச்சயமாக அறிந்திருப்பார்கள். ஆகவேதான், புத்தக முன்னுரையில் குறிப்பிட்டதுபோல், அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

புத்தக வியாபாரம் மிகவும் செழித்தோங்கும் கேரளத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் சங்க இலக்கிய நூல்களின் விற்பனை என்பது மிகப் பெரிய  இலாபம் தருவது. கல்லூரிகளில் இது பாடமாக வைக்கப்படுமென்றால் இந்த இலாபம் பலமடங்காக உயரும். ஆகவே,  இந்த மூவர் குழு, திட்டமிட்டு இந்த மோசடி யைச் செய்திருக்கிறார்கள்.

நான், தமிழில் பிழைதிருத்துபவனும் எடிட் பார்ப்பவனாக இருந்தும் நான் எழுதுகிற தமிழ் நூல்களைக்கூட பலரிடம் கொடுத்து பிழைபார்க்கச் சொல்பவன். எனது 27–வது மொழி பெயர்ப்பு நூலைக்கூட அதை எழுதிய, எர்ணாகுளத்திலுள்ள நாவலாசிரியர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஒப்பிட்டுப் பார்த்தேன். முழுத்திருப்தியை விரும்பும் ஒரு எழுத்தாளன் என்பதால்தான் ஒரு பேராசிரியர் உட்பட சிலர் திருத்திய பிறகும் எதிரிகள் பிழை பார்த்துத் தருவதாகச் சொன்னதும் அனுப்பி வைத்தேன். ஒரு நண்பர் எழுத்து மூலம் இப்படிக் கேட்கும்போது சந்தேகப்படுவதற்கான காரணங்களும் இல்லை. தமிழில் பல நூல்களை முழுவதுமாகச் செம்மைப்படுத்திக்கொடுத்த நான்,  இப்படியான ஒரு மோசடி யைக் குறித்து, அப்போது சிந்திக்கவுமில்லை.

ஒன்றரை வருடகாலம் நான் மிகக் கடினமாக உழைத்தும் செலவு செய்தும் இதற்கான ஆதார நூல்களையும் குறிப்புதவி நூல்களையும் தேடியலைந்திருக்கிறேன்.  தமிழ்நாடு மற்றும் கேரளம் முழுவதும் கால்நடையாகவும் பேருந்துகளிலும் இதற்காகப் பயணம் செய்து இந்த நாலடியார் நூலை மொழிபெயர்த்தேன். இதை, திட்டம் போட்டு மிகச் சுலபமாக ஏமாற்றி, தன் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எதுவும் செய்ய இயலாதவனாக, இப்போது, வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறேன். மலையாள மொழியில் என்னுடைய முதல் முயற்சியைப் பாழடித்துவிட்டதன் மூலம் இனிமேல் இது போன்ற நல்ல முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் முற்றிலும் இல்லாமல் செய்து விட்டார்கள்.

எஸ். ரமேஷன் நாயர், திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்து, மலையாள இதழ் ஒன்றில், ஐந்து வருடங்களாக வாரம்தோறும் வெளியிட்டதுபோல், இந்த நாலடியார் கவிதைகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும், பிறகு, நூலாக வெளிவரும் ஏற்பாடு களையும் செய்து வைத்திருந்தேன். இதற்கான அனுமதியை செம்மொழி நிறுவனத்திட மிருந்து  பெறுவதற்கான  கால அவகாசத்திற்காகக்  காத்திருந்தேன். இந்தச் சூழ்நிலையில் தான்  மோசடி  நிகழ்ந்திருக்கிறது

(இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடமுள்ளன.)

 ***

நன்றி : குளச்சல் மு. யூசுப்

16 பின்னூட்டங்கள்

 1. 08/10/2013 இல் 19:37

  இதெல்லாம் “அவர்கள்” கண்ணில் படுமா?
  பட்ரும்…

  யாராவது சொல்லாமலா இருக்கப்போகிறார்கள்?
  கேட்டதும் கொஞ்சமாவது வருத்தப்பட்டால் சரிதான்…
  படுவார்களா?

 2. 09/10/2013 இல் 16:25

  புல்லாங்குழலில் மீள்பதிவு செய்து தமிழ்மணத்திலும் எனது ஃபேஸ் புக் பக்கத்திலும் இணைப்பு கொடுத்துள்ளேன்.

 3. தாஜ் said,

  10/10/2013 இல் 22:53

  குளைச்சல் நடத்தும்
  இந்த அற போராட்டம் வெல்ல வேண்டும்.
  – தாஜ்

 4. 10/10/2013 இல் 23:22

  இந்தப் போராட்டம் கைவிடப்படக் கூடாது ,எல்லா வழியிலும் முயற்சி செய்யுங்கள் ,அல்லாஹ் உதவி செயவான்

 5. 11/10/2013 இல் 09:35

  நண்பர் குளச்சல் மு.யூசுப் அவர்களுக்கு நேர்ந்த இந்த அநீதி மிகுந்த வருத்தத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. “வறுமையின் விளிம்பில் வாழும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் கூட, என்னை ஏய்ப்பதற்கான மனவலிமையை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம்….” என்ற வரிகளில் பொதிந்திருக்கும் துயரம் நெஞ்சை அறுக்கிறது. எளியராய் இருப்பதே ஏமாற்றப்படுவதற்குத்தான் என்றால் நீதி, அறம் என்பதற்கெல்லாம் என்னதான் பொருளிங்கு…? தமிழ் எழுத்தாளார்கள் ஒருமித்து குரலெழுப்பினாலும்கூட இந்த மோசடிப்பேர்வழிகள் அசரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்கள்மீது யூசுப் வழக்கு தொடுப்பதுதான் இப்போதைக்கு பலளிக்கும்.

  • 11/10/2013 இல் 10:35

   வருகைக்கு நன்றி ஆதவன். //அவர்கள்மீது யூசுப் வழக்கு தொடுப்பதுதான் இப்போதைக்கு பலளிக்கும்// இதற்கு ஏற்பாடு நடப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்பு குளச்சல் சொன்னார். மேலதிக விபரங்களை அவர் இங்கு தருவார் என்று நம்புகிறேன்.

 6. 11/10/2013 இல் 21:16

  ஃபேஸ்புக்கில் நண்பர் சுரேஷ் கண்ணன் இந்தப் பதிவை ஷேர் செய்தபோது சகோதரர் Joe Milton , பதிவின் தலைப்பு குழப்புவதாக (குளச்சல் துறைமுகம் அமைப்பதற்காக குரல் கொடுக்க சொல்றாங்க போல-ன்னு) குறிப்பிட்டிருந்தார். மன்னியுங்கள், என் தவறுதான். குளச்சல் மு. யூசுபை ‘குளச்சல்’ என்றே நானும் நண்பர்களும் அழைப்பதால் அப்படி தலைப்பிட்டுவிட்டேன். இப்போது மாற்றிவிட்டேன். இனி குரல் கொடுக்கலாம்.

 7. குமரிபையன் said,

  12/10/2013 இல் 18:42

  நய வஞ்சனை, முதுகில் குத்துவது, நம்பிக்கை துரோகம் இவை எல்லாம் ஒன்றாய் கலந்த கலவைதான் “மலயாளி” என்ற பிறவி..! போதிய கல்வி அறிவு இல்லை என்றால் ஏன் காவியம் படைக்க முடியாது..! திருவள்ளுவர் படித்த கல்லூரி யார் சொல்லுவார்..? இதெல்லாம் விதண்டா வாதம்..! தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் குரல் கொடுக்க வில்லை என்றால் நாளை மலையாளத்தில் இருந்துதான் பல காவியங்கள் தமிழில் மொழி பெயர்க்க பட்டது என்று சொல்வார்கள்..!

  குமரிபையன்

  • 12/10/2013 இல் 20:46

   தமிழன் Vs மலையாளி என்று பிரச்சனையை குறுக்காதீர்கள் தயவுசெய்து. குளச்சல் விரும்ப மாட்டார்.

 8. 13/10/2013 இல் 14:34

  //சகோதரர் Joe Milton , பதிவின் தலைப்பு குழப்புவதாக (குளச்சல் துறைமுகம் அமைப்பதற்காக குரல் கொடுக்க சொல்றாங்க போல-ன்னு) குறிப்பிட்டிருந்தார். மன்னியுங்கள், என் தவறுதான். குளச்சல் மு. யூசுபை ‘குளச்சல்’ என்றே நானும் நண்பர்களும் அழைப்பதால் அப்படி தலைப்பிட்டுவிட்டேன். இப்போது மாற்றிவிட்டேன்.//

  மேன்மக்கள் மேன்மக்களே .. நான் சொன்னதை நல்ல கோணத்தில் எடுத்துக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா!

 9. SLM. Hanifa said,

  13/10/2013 இல் 17:18

  எல்லா இடங்களிலும் ஊழல் துரோகத்தனங்கள் மலிந்து கிடக்கிறது. குளச்சல் யுசுபை நேரில் கண்டு கதைத்திருக்கிறேன். அருமையைான மனிதா் அவருக்காக கவலைப்படுகிறேன் நியாயம் கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

 10. குளச்சல் யூசுஃப் said,

  18/10/2013 இல் 11:23

  பின்னூட்டம் எழுதியவர்களில், எஸ்.எல்.எம். ஹனீஃபா அவர்களைத் தவிர பிற நண்பர் கள், அவர்களது எழுத்துவழி யாக மட்டுமே எனக்கு அறிமுகமானவர்கள். அனைவருக் கும் நன்றிகள்.

  வழக்குத் தொடுப்பதில் பிரச்சினைகள் எதுவுமில்லை. இதற்கான அனைத்து உதவிகளை யும் எழுத்தாளரும் வழக்கறிஞருமான நண்பர் டி.வி. பாலசுப்ரமணியம் அவர்கள் செய்து வருகிறார். எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல். ஆனால், மோசடியாளர்கள் சட்ட நடவடிக்கைகள் எதற்கும் பயப்படுபவர்கள்போல் தெரியவில்லை. கிட்டத்தட்ட, கட்டப் பஞ்சாயத்து முறையில் மட்டும்தான் தீர்வுகாண முன் வருகிறார்கள். எங்களை மீறி சட்டம் எதுவும் செய்துவிட இயலாது என்ற வகையில்தான் மிரட்டலாகப் பேசுகிறார் கள். அவர்களது நாட்டிலுள்ள ஒருவனை அவர்களால் இப்படி மிரட்ட இயலாது. ஆகவே, எனக்குத் தெரிந்தவரை அவர் களது மிரட்டல் தமிழ்ச்சமூகம் சார்ந்த உண்மையைப் பிரதி பலிப்பதாகவே அமைந்திருக்கிறது.

  முறைப்படி கல்வி கற்றவர்கள் எவ்வளவோ பேரிருக்க, கல்வித்தகுதியற்ற குளச்சல் யூசுஃப்புக்கு செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியத்தை இன்னொரு மொழியில் மொழியாக்கம் செய்யும் பணியை எப்படி ஒப்படைத்தது என்ற நியாயமான சந்தேகமும் அவர்களிடம் இருந்தது. ஒரு முனிசிபாலிட்டி கௌன்சிலரைக்கூட அறிமுகமில்லாத நான் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இதைப் பெற்றிருப் பேனோ என்ற சந்தேகமும் அவர்களிடமிருந்தது. இதற்காக அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக செம்மொழி நிறுவனத்திடம் தகவல் கேட்டிருக்கிறார்கள். பத்துப்பனிரெண்டு பேராசிரியர் கள் சூழ அமர்ந்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன பிறகு, இதை என்னால் நன்றாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணியை என்னிடம் ஒப்படைத்த செம்மொழி நிறுவனம், இதற்குச் சரியான பதிலைச் சொல்லியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

  அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட்த்தைப் பயன் படுத்தியதை முன்வைத்து செம்மொழி நிறுவனம் என்னுடைய மற்றொரு விண்ணப்பத்தை நிராகரித்ததன் அடிப்படையில் நம்முடைய தமிழ்ச்சமூகம் பற்றிய அவர்களது புரிதலில் ஆழத்தை மேலும் விளங்கிக்கொள்ள முடியும். (பெரும்பாலான, தமிழ் எழுத்தாளர்களும் மிகச் சரியாகவே நம்முடைய சமூகத்தைப் பிரதிபலிக்கிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்)

  இந்த மோசடி விஷயம் தெரியவந்ததும் முதல்வேலையாக நான் செம்மொழி நிறுவனத் திற்கு நடந்த உண்மைகளைக் குறிப்பிட்டு ஒரு பதில் எழுதினேன். இன்றைய தேதிவரை அவர்கள் என்னை அழைத்து விசாரிக்கவோ பதில் எழுதவோ இல்லை. அவர்கள் என்னிடம் ஒப்படைத்தப் பணியை நான் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து அவர்களிடம் ஒப்படைத்த பிறகுதான் இந்த மோசடி நடந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். (இது குறித்து எழுத ஏராளமான கசப்பனுபவங்கள் உள்ளன. தற்போதைக்கு முடிக்கிறேன்.)

 11. தாஜ் said,

  19/10/2013 இல் 15:34

  உங்களது இக் குரலை கேட்க வருத்தமாகத்தான் இருக்கிறது.
  போராட்டத்தை நம் எழுத்தாளர்கள் முன் எடுத்தால், முன் வரிசையில் நிற்பவர்களுல் நானும் ஒருவனாக இருப்பேன். வேறென்னச் சொல்ல?
  -தாஜ்

 12. 20/01/2014 இல் 12:08

  குளச்சலின் ஃபேஸ்புக்கிலிருந்து….

  இன்றைய (20-01-2014) ’மாத்யமம்’ மலையாள நாளிதழில் நாலடியார் மோசடி குறித்த செய்தி வெளிவந்துள்ளது. – குளச்சல்

  Ashroff Shihabdeen ….. இந்த விளையாட்டுக்களைப் பார்த்தால் புத்தகம் வெளியிடுவது என்ன, ஒரு சஞ்சிகைக்கு ஒரு படைப்பை அனுப்புவதற்குக் கூடப் பயமாக இருக்கிறது குளச்சல்!

  Kulachal Mu Yoosuf ”களவிலக்கியக் குழுமம்” அப்பிடிங்கிற பேர்ல ஒரு சங்கம் அமைச்சி, ஆளாளுக்குத் திருட வேண்டியது தான். ஒருத்தனும் புரூஃப் பாக்க அனுப்பக்கூடாது,


ஆபிதீன் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s