மூன்று வகை முஸ்லிம்கள்!

ரமலான் ஸ்பெஷல்.  எங்கள் ஹஜ்ரத் மர்ஹூம் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள் 1972-ல் எழுதிய ‘ஏகத்துவமும் எதிர்வாதமும்‘ நூலிலிருந்து இந்தப் பதிவு.

ஏகத்துவத்தின் உச்சியில் நின்று விளக்கம் கொடுத்த மார்க்க மேதைகள் மவ்லானா ரூமி, இமாம் கஸ்ஸாலீ, ஜுனைதுல் பக்தாதி, இப்னு அரபி போன்றோரின் எழுத்துக்களைப் படித்து தன் மனத்தில் உருவான உணர்வே இப்படியொரு நூலாக உருவெடுத்தததாக தன் முன்னுரையில் ஹஜ்ரத் குறிப்பிட்டிருக்கிறார்கள். மூன்று படித்தரங்களாகப்  பிரிக்கிறார்கள். இதன்படி, ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ சிறுகதை எழுதிய அப்-பாவி நான்,  மட்டமான முதல் படித்தரத்தில் வரலாம் (ஆமாம், ‘முனாஃபிக்’ என்று என்னைத் திட்டி சில மாமேதைகள் மெயில் அனுப்பியிருந்தார்கள்). என் இறைவனே எல்லாம் அறிவான். மற்ற 99 விழுக்காடு பாமர முஸ்லிம்கள் இருக்கிறார்களே… இவர்கள் நடுவிலுள்ள – 2ஆம்- படித்தரத்தில் இருப்பவர்கள் (இந்த படித்தரத்தில் குறைந்தது மூணு லட்சம் உட்பிரிவுகள் இருக்கின்றன. இது விளக்கப்படவில்லை). மூன்றாவதாக வரும் முக்கியமான ஸூபி படித்தரத்திற்கு சதா இறைவனைப் பற்றி குறை கூறும் சீர்காழி தாஜும் , இவரைக் குறை கூறும் ஜாஃபர்நானாவும் வர முயற்சிப்பார்களாக!

‘ஏகத்துவத்தின் படித்தரங்கள்’ உங்கள் சிந்தனைக்கு…

***

haz-qa1

வினா : ஏகத்துவத்திற்கு நீங்கள் படித்தரங்களை உருவாக்குகிறீர்கள் அல்லவா? அவற்றை இப்போது விளக்குவீர்களா?

விடை:……. ‘முனா·பிக்’குகளை (உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகர்கள்) முஸ்லிம்கள் என்று குறிப்பிட முடியாது. என்றாலும் இவர்கள், ‘இறைவன் ஒருவனே. அண்ணலார் அவனுடைய திருத்தூதர்’ என்று வாயளவிலேனும் கூறுவதால், இவர்களை ஆரம்பப் படித்தரத்திலுள்ள ஏகத்துவ வாதிகள் எனலாம். எனினும் இந்தப் பெயரை விடப் பச்சோந்திகள் எனும் பெயர் இவர்களுக்குப் மிகப் பொருத்தமானது. எனவே இவர்களை இத்துடன் நாம் மறந்து விடுவோம்.

அடுத்த படித்தரத்திற்கு வருகிறவர்கள் ஏகத்துவத்தை வாயால் கூறுவதோடு மனத்தாலும் நம்புகிறார்கள். இறைவன் ஒருவன்தான் என்பதிலோ அண்ணலார் இறுதித் தூதர்தான் என்பதிலோ இவர்களுக்குச் சந்தேகம் கிடையாது. இதனை வெளியில் கூறுவதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள்தான் முஸ்லிம்களில் அதிகம். இமாம் கஸ்ஸாலி குறிப்பிடுவதைப்போல், பாமர முஸ்லிம்கள் அனைவரும் இந்த இனத்தை சேர்ந்தவர்களே.

இவர்கள் திருக்குர்ஆன் ஒளியில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகல் முழுவதும் செயலாற்றுகிறார்கள். ஐங்காலத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருந்தாலும் பள்ளி வாசலிலிருந்து வெளியே வந்ததும் அவர்களில் பலர் இறைவனை மறந்து விடுகிறார்கள்; அவனன்றி அணுவும் அசையாது என்பதை எண்ணிப் பார்க்கத் தவறி விடுகிறார்கள்.

இவர்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் கிடையாது. என்றாலும் இஸ்லாத்தின் கலீஃபாக்கள் அடைந்திருந்த படித்தரத்தை இவர்கள் இன்னும் அடையவில்லை என்று துணிந்து கூறலாம். உலகத்திற்கே வழிகாட்டிய அந்தப் பெருந்தகைகளின் வரலாற்றைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அவர்களின் சொல்லிலும் செயலிலும் ஆழ்ந்த ஏகத்துவம் தெரிந்தது. அவர்கள் இறை வணக்கத்தில் ஈடுபட்டால். உலகிலுள்ள அனைத்தையும் மறந்து விடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் நம்மைக் கூட நினைத்துப் பார்ப்பதில்லை.

வினா : இந்த நபித் தோழர்கள் பாமரர்களை விடப் படித்தரத்தில் உயர்ந்து நின்றார்கள் என்பதுதானே உங்கள் கருத்து?

விடை : ஆம். அவர்கள் அடைந்திருந்தது மூன்றாம் படித்தரம்; பாமரர்கள் அடைந்திருந்த படித்தரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. காணும் பொருள்கள் அனைத்திலும் அவர்கள் இறைவனின் ஆற்றலைக் கண்டார்கள்.

வினா : தொழுகை முடிந்த பிறகு பாமரர்கள் இறைவனை நினைத்துப் பார்ப்பதில்லை என்று கூறினீர்கள் அல்லவா?

விடை : ஆம். பாமரர்கள் பலர் தொழுகையின்போதுகூட இறைவனை மறந்து விடுகிறார்கள். இஸ்லாமியச் சட்டப்படி குனிந்து நிமிரும் இவர்கள் தம் மனத்தை வேறு ஏதோ ஒன்றில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வினா : இந்த மூன்றாம் படித்தரத்தவர்கள் தொழும்போது மட்டுமின்றி தொழுகை முடிந்த பிறகும் இறைவனை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?

விடை : ஆம்.

வினா : அப்படியானால்  அவர்கள் வேறு எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லையா?

விடை : உங்கள் வினா என் மனத்தில் ஆச்சரியத்தைத் தோற்றுவிக்கிறது. எப்போதும் இறைவனைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பவர்களால் மற்ற வேலைகளைச் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? மனிதனின் வேலைகளுக்கு இறைவனைப் பற்றிய எண்ணம் துணை செய்யுமே தவிர , தீங்கு செய்யாது. தவிர, இறைச் சிந்தனையின் ஈடுபட்டிருப்பவர்கள் வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று எந்தச் சட்டமும் கிடையாது.

இதோ மெய்ஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்: “ஸூபிகள் மார்க்கத்துக்கு முரண்படாத எல்லா வேலைகளையும் செய்யலாம். அவர்கள் கடைவீதிக்குப் போகலாம்; கடையில் உட்கார்ந்து விற்பனை செய்யலாம். ஆனால், ஒரே ஒரு வினாடி கூட அவர்கள் இறைவனை மறக்கக் கூடாது.”

வினா: ஸூபிகள் என்றால் யார்?

விடை : மேற்குறிப்பிட்ட மூன்றாம் படித்தரத்தவர்களையே நாம் ஸூபிகள் என்று குறிக்கிறோம்.. உலகில் தோன்றிய தோன்றுகிற மெய்ஞ்ஞானிகள் அனைவரும் இந்தப் படித்தரத்தைச் சேர்ந்தவர்களே. ‘அவ்லியா’ எனப்படும் நல்லறிவாளர்கள் அனைவருக்கும் இது சொந்தமான படித்தரம். இமாம் கஸ்ஸாலீ குறிப்பிட்டதுபோல், இது ஆழம் காண முடியாதொரு தலைப்பு. இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது.

***

நன்றி : அன்ஸார் பப்ளிஷர்ஸ்

***

தொடர்புடைய பதிவு :

சென்ற ரமலானில் ஒரு நோன்பாவது பிடித்தவர்கள் இதை வாசிக்கலாம்.  இதை மட்டும் வாசிக்கக் கூடாது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s