சே, இந்த புரோக்கர்களின் தொல்லை தாங்க இயலவில்லை…! – ஆபிதீன்
***
நேற்று…
என் தொழில் சார்ந்து
பக்கத்து டவுனான
மாயூரம் என்கிற மயிலாடுதுறைக்கு
என் சீனியருடன் சென்றேன்.
மாயூரத்தில்..
நாங்கள் விலை பேசச் சென்ற
நீள அகலம் கொண்ட மூன்றுகட்டு வீட்டையும்
அதன்
ஏழாயிரம் சதுரஅடி கொண்ட பரப்பையும்
ஒரு கண்ணோட்டம் விட்டுவிட்டு
எங்களை மாயூரத்திற்கு அழைத்த
அந்த ஊரின் பிரபல மீடியேட்டருடன்
அவ் வீட்டின் திண்ணையில் அமர்ந்து
பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம்.
‘பொக்கையும் பொல்லையுமாக’
அழுக்கும் படிந்த அத்திண்ணையில்
அமர்ந்திருந்தது
உறுத்தல்தர என்னவோ போல் இருந்தது.
ஒரு காலத்தில் ஒதுக்குப்புறமான
அமைதி கொண்ட
காவேரிக் கரையோரமான
அவ் வீடு…
இன்றைக்கு
நகர முன்னேற்றத்தின்
அளவுகோல்படி
நகரின்
முக்கிய கேந்திர இடத்தை
அடைத்துக் கொண்டு
சிறப்பு பெற்றுவிட்டது!
வீட்டைக் குறித்த
எங்கள் பேச்சில்..
‘முக்கிய கேந்திரமான இடம்’தான்
முக்கிய இடத்தை வகித்தது.
அழைத்த அந்த பிரபல மீடியேட்டர்
அதனைத்தான்
திரும்பத் திரும்ப
அழுத்தி அழுத்திப் பேசினார்.
பின்னர்,
பெரிய லக்கணத்தில் விலையும் சொன்னார்.
எங்க சீனியருக்கும் அவருக்குமான
தொழில் சார்ந்த
விலை நிர்ணய சங்கேதப் பேச்சு நீண்டது.
மறுபடியும் அந்த மீடியேட்டர்
வீட்டின் புற மதிப்பீடுகளின்
பட்டியலை வாசித்தார்…
நாங்கள் கவனமாக
கேட்டபடி அமர்ந்திருந்தோம்.
அப்படி
கவனமாகக் கேட்டால்தான்…
நாளை நாங்கள்
எங்கள் ‘Buyer’இடம்
அதனையே
இரண்டு மடங்காக சொல்ல முடியும்.
தொழிலாச்சே!
“வீட்டின்…
தூண், உத்திரம், கதவு, நிலை,
கதவு என்றெல்லாமே பர்மா தேக்குங்க!
இன்னைக்கு வித்தாலும்
வீட்டின் தேக்கு மட்டும்
பத்து ரூபாய்க்கு(லட்சம்) போகும்…
கொல்லைப் புறத்தில்
இல்லாத மரங்களே இல்லை!
பக்கத்தில் காவேரி வேறு!
ஸ்தலத்து தண்ணீர் இளநீர் மாதிரி இருக்கும்!
பதினைந்து அடியில்
தண்ணீர் கிடைச்சுடும்னா பாருங்களேன்!” என்றார்.
காந்தி தமிழகத்திற்கு வந்திருந்தபோது
ஒருமுறை
இந்த வீட்டில்தான் தங்கினாராம்.” என்றார்
நான் உடனே எழுந்துவிட்டேன்.
“எங்கே போறே.. உட்கார் என்றார்” என் சீனியர்.
சிகரெட் பிடிக்க
இடையிடையே நான் எழுந்து வெளியே போவது
என் சீனியருக்குப் பிடிக்காது.
“இல்லண்ணே…
நீங்க பேசுங்க, நான் ஒரு போன் பேசிட்டு
வந்துவிடுகிறேன்” என்றபடி
வெளியே வந்து
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து
புகைத்தபடி
காந்திஜி தங்கியிருந்த அந்த வீட்டை
விசேஷப் பார்வை கொண்ட
கண்களால்
ஆசை தீரப் பார்த்தேன்.
கொஞ்ச நேரம் முன்
உட்காரவே உறுத்திய
அந்தப் பழைய வீடு
இப்போது மலைக்கவைத்தது!
விலைக் கொடுத்து வாங்குபவன் புண்ணியவான்!
***
நன்றி : சீர்காழி ஏஜெண்ட்!
***
தொடர்புடைய பதிவு : காந்திஜியின் நாகூர் விசிட்! – அப்துல் கையூம்
மஜீத் said,
03/07/2013 இல் 14:50
இவ்வளவு சொல்லிட்டு காந்தி தங்குனவீடு எத்தன சின்னு சொல்லல பாத்தியளா?
‘ஒரு பிரபல சைட்டுல’ எழுதும்போது அதையும் சொல்லிருந்தா ஆன்லைன்லயே ஆஃபர் அள்ளிருக்கும்ல?
(சைட்டு ஓனருக்கும் ஸைடு பிசுனசு 🙂 )
ஆபிதீன் said,
03/07/2013 இல் 15:26
காந்திஜியின் பெருமை தெரியுமளவுக்கு கணக்கு சொன்னார்தான். நாம் வாழ்வதாலேயே நாளும் தேயும் நம் வீடுகளை எண்ணி குறிப்பிடவில்லை. பிசுனசாம் பிசுனசு…!
தாஜ் said,
03/07/2013 இல் 16:38
தலைவரே….
அது என்ன குஷ்பு வந்து தங்குன வீடா…
மகின்மைக் கொள்ள?
அப்படிங்கிறது உண்மைனா…
நாமும் பெருமைப்பட தண்டோரா போடலாம்.
கட்சிக்காரங்களும்
தலைவரை சந்தோஸப் படுத்தவாவது
அதை வாங்க
நீ முந்தி, நான் முந்தின்னு நிப்பாங்க!
காலக்கொடுமை….
காங்கிரஸ்காரர்களே
மறந்து போன காந்தில தங்கி இருந்திருக்காரு.
இன்றையக் கணக்கில்
மீடியேட்டர்களை அந்த மகான்
சந்தோஸப்படுத்தவில்லை என்பதுதான் நிஜம்.
ஆபிதீன் said,
04/07/2013 இல் 10:09
சரிசரி, கமிஷனை வெட்டுங்க (மஜீதுட்ட சொல்லவேணாம்).
தாஜ் said,
04/07/2013 இல் 15:17
எழுதுபவன்
எழுதுவதெல்லாம்
நிஜம் என்று
நீங்களும் நினைப்பதுதான்
ஆச்சரியம்!!!
ஆபிதீன் said,
04/07/2013 இல் 15:21
இது ஒண்ணாவது உண்மையாக இருக்கும் என்று நினைத்தேன் தாஜ்பாய்.
மஜீத் said,
04/07/2013 இல் 18:20
என்ன? கமிஷன் போச்சோ? 😉
தாஜ் said,
05/07/2013 இல் 22:16
உண்மையை எழுதனும்னு
ஆசை இல்லாமல் இல்லை.
வாசிக்கிறவங்க ‘வா’ கூறினா?
அதான் பயமா இருக்கு.. தல.
kulachal yoosuf said,
14/07/2013 இல் 10:02
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நானும் ஒரு பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னால ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணிட்டிருந்தேன். சொன்ன நம்புவீங்களான்னு தெரியலை. ஒரு மாதம் கேன்வாஸ் பண்ணின முயற்சியில ஒரு மூணு வருஷ பொழப்பு ஓடிச்சு. அப்புறம், அந்த ரியல் எஸ்டேட் முதலாளிங்க அஞ்சே முக்கா ஏக்கர் நிலத்துக்கு என்னை பவர் ஏஜென்டா நியமிச்சாங்க. மட்டுமில்லை, தினமலர்ல என்னுடைய நாஞ்சில் ரியல் எஸ்டேட் நிறுவனம்பேர்ல விளம்பரமும் கொடுத்தாங்க. கடைசியில என்ன ஆச்சுன்னா, பணம் கொடுத்த ஒரு தலைமையாசிரியருக்கு ஒரு பிளாட்டை கிரயம் பண்ணி கொடுக்குறதுக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சு. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இதுக்கு நல்ல ஒரு பதிலையாவது சொல்லியிருக்கலாம். “என்ன சார் உங்ககூட பெரிய நியூசென்ஸா போச்சி”ன்னு சொல்லிட்டாங்க. ஆசிரியர் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டார். நமக்கு வேற அஷ்டமத்து சனியா? கெரகப்பிழை சும்மாவா விடும்? ரியல் எஸ்டேட் காரங்ககிட்ட விட்டேனா பார்னு நின்னுட்டு போங்கடா நீங்களும் உங்க ரியல் எஸ்டேட் பிசினெஸும்னு சொல்லிட்டு வந்துட்டேன். இப்ப பாருங்க மலையாளத்தான்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். so, நான் என்ன சொல்ல வரேன்னா, அந்த மயிலாடுதுறை வீட்டுக்கு மறைமுகமான but, மிகமுக்கியமான தரகர்களின் நானுமொருவன். துபாய்ல இருக்குற ஆபிதீனுக்கே கமிஷன் கொடுக்குற நீஙக, என்னை மறந்துட மாட்டீங்கங்குற பெருத்த நம்பிக்கை எனக்கு இருக்கு. பணத்துக்கு ரொம்ப சிக்கலான நேரத்திலதான் மாயூரம் வீடு விலையாடுதுன்னு நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் கொடுக்குறதை மனுஷன் தடுத்துடவா முடியும்? அப்புறம் சொல்லுங்க வேறென்ன விசேஷங்கள்? வீட்டுல எல்லாரையும் கேட்டதாச் சொல்லுங்க.
ஆபிதீன் said,
14/07/2013 இல் 13:16
கமிஷனா?! ஊர்போனால் ஒரு உளுந்துவடைதான் கொடுப்பார். வயித்தெறிச்சலை கெளப்பாதீங்க குளச்சல்..