14-9-1949 : காயிதே மில்லத் பேச்சு

எனது சின்னமாமா நிஜாமுக்கு மிகவும் பிடித்தவரான கவிஞர் தா. காசிம் அவர்களைப் பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது அண்ணன் ஹிலால் முஸ்தபாவின் வலைப்பதிவு மூலம் கவிஞரின் நாத்திகம் , காயிதே மில்லத்-ன் ராஜநடையால் சிதறிப் போனதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.  நேற்றிரவு தர்ஹாவுக்குள் நுழைந்தால் , ‘கவ்மின் காவலர்’ நூல் கிடைக்கிறது!  இரண்டாம் பதிப்பு (1983). அனுபந்தத்தில் சேர்க்கப்பட்ட காயிதே மில்லத்தின் உரையைத்தான் முதலில் படித்தேன்.  நண்பர்கள் சிலர் சொல்வதுபோல , காயிதே மில்லத் அவர்கள் தமிழ்மொழியை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரவில்லை,  தொன்மை என்று வரும்போது பெருமிதத்தோடு தமிழை அவர் குறிப்பிட்டாலும் ‘அதிகம்பேர் பேசக்கூடிய இந்திய மொழி’யாக ஹிந்துஸ்தானியையே (இது ஹிந்தியா உருதா?) முன்மொழிந்திருக்கிறார் என்றுதான் என்னால் முடிவுக்கு வர முடிந்தது. அன்னாரின் பிறந்த தினத்தில் பதிவிடுகிறேன். ‘காப்பி மாஸ்டர்கள்’ கண்டிப்பாக சுட்டி கொடுக்கவும்!

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களைப் பற்றி நண்பர் சீதையின் மைந்தன் விரிவாக எழுதிய இந்தப்  பதிவையும் படியுங்கள். ‘காயித்’ என்பதன் அர்த்தம் விளங்கும். நன்றி. – ஆபிதீன்

***

qaiidemillth-book-cover2A.K. ரிபாயி அவர்கள் எழுதி வெளியிட்ட ‘கவ்மின் காவலர்’ நூலிலிருந்து.. (பக்: 207-214)

14-9-49 அன்று அரசியல் நிர்ணய சபையில், தேசீய மொழி பிரச்னை விவாதத்திற்கு வந்தபொழுது.. காயிதே மில்லத் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம்  வருமாறு :-

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் (மதறாஸ் , முஸ்லீம்) :-  அவைத் தலைவர் அவர்களே! இத் திருத்தங்களின் மீது நான் பேச விரும்புகிறேன். இப் பிரச்னை மீது விவாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருகிறது. விவாதம் முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே எனது திருத்தங்களைப் பற்றி நான் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இத்திருத்தங்கள் ஏற்கனவே என்னால் சமர்ப்பிக்கப்பட்டவை; அவை சபை முன்பு இருக்கின்றன.

ஒரு உறுப்பினர் :- அப்படியானால் மற்ற திருத்தங்கள்?..

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில் :- ஏற்கனவே நான் நோட்டிஸ் கொடுத்துள்ள திருத்தங்கள் சபை முன்பு இருப்பதாலும் அதுபற்றி விவாதங்கள் இன்னும் முடிவுக்குக் கொண்டுவரப் படாததாலும் விவாதம் மீண்டும் தொடங்கப் பட்டு விட்டதாலும் எனது திருத்தங்கள் மீது பேச எனக்கு உரிமை இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

அவைத்தலைவர் : உறுப்பினர் கூறுவது சட்டப்படி சரிதான்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:-அவைத் தலைவர் அவர்களே! எனது கருத்தைத் தெரிவிக்குமுன்பு முதலாவதாக, திரு K.M. முன்ஷி சமர்ப்பித்துள்ள திருத்தங்களை நான் எதிர்க்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தேவநகரி லிபியிலும் உர்தூ லிபியிலும் எழுதப்படும் ஹிந்துஸ்தானி என்ற மொழியே தேசீய மொழியாக இருக்கவேண்டும் என்றும் சர்வதேச “எண்”கள்தான் (Numerals) அரசாங்கப் பழக்கத்தில் இருந்து வர வேண்டும் என்றும் எனது திருத்தங்கள் கோருகின்றன. அத்துடன், மத்திய ஆரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே 15 ஆண்டுகளுக்கு இருந்துவருவது என்ற விதியை, பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தங்களது பெரும்பான்மை மூலம் வேறு விதமாகக் கருத்துத் தெரிவிக்காத வரையில் , ஆங்கிலமே இந் நாட்டின் தேசீய மொழியாக நீடிக்க வேண்டும் என்று அந்த விதியை மாற்ற வேண்டும் என்றும் எனது திருத்தங்கள் கோருகின்றன. இவைதான் எனது திருத்தங்களின் சாரம்.

அவைத் தலைவர் :- அவற்றின் நம்பர் என்ன?

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- தலைவர் அவர்க்ளே! நேற்று இச்சபையில் பிரதம மந்திரி அவர்கள் மிக முக்கியமானதொரு உரையை நிகழ்த்தினார். அச்சமயம் மூன்று அம்சங்களை அவர் வலியுறுத்தினார். முதலாவதாக இப்பிரச்னை குறித்து மஹாத்மா காந்தியின் கருத்துக்களை அவர் மேற்கோள் காட்டினார்; அவரை ஆதாரமாக எடுத்துச் சொன்னார். இரண்டாவதாக நாம் பின் நோக்கிச் செல்லக்கூடாது என்றார்; வெகுதூரம் பின்நோக்கிப் பார்ப்பது நமது எதிர்கால முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்று எடுத்துச் சொன்னார். மூன்றாவதாக,  உலகம் இன்று மிகவும் சுருங்கிக் கொண்டுவருகிறது என்பதை நாம் உணரவேண்டும் என்று சொன்னார். மணிக்கு மணி நம்மை எப்படி உலகம் சுற்று வளைத்துக்கொண்டு வருகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என அறவுரை கூறினார். மேற்கூறிய மூன்று அம்சங்களையும் மனதில் கொண்டு இப்பிரச்னையை நாம் ஆராய முற்பட்டால் பிரச்னையை இலகுவில் தீர்த்துவிட இயலும் என்பதுதான் எனது கருத்தாகும்.

நாட்டின் தேசீய மொழியாகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய மொழி ஒரு இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அத்துடன் நாட்டிலுள்ள மக்களில் அதிகப்படியானவர்கள் பேசக்கூடிய மொழியாகவும் அது இருக்கவேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. நமது தேசீய மொழி தற்கால போக்குகளையும் நவீன கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அவற்றை நன்கு பிரதிபலிக்கும் வகையிலும் அந்த மொழி இருக்க வேண்டும் என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த அம்சங்களைக் குறித்து கருத்து முரண்பாடு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

அப்படியானால், அப்படிப்பட்ட மொழி எது? எல்லா அம்சங்களிலும் திருப்திதரும் மொழி எது? இதுதான் இன்றைய பிரச்னை; விவாதம். இது குறித்து மஹாத்மா காந்தியை நான் மேற்கோள் காட்டுவதை விட வேறு எதுவும் சிறப்பாகக் கூறிவிட முடியாது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“டில்லியில் என்னை தினசரி ஹிந்துக்களும் சந்திக்கிறார்கள். முஸ்லிம்களும் சந்திக்கிறார்கள். ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இவர்கள் பேசுகிற மொழியில் ஒரு சில சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. அரபி, பார்ஸி வார்த்தைகளும் அதில் அதிக அளவில் இல்லை. இந்த மக்களுகு அல்லது அவர்களில் பெரும்பான்மையினருக்கு, தேவநகரி லிபி தெரியாது. அவர்கள் எனக்கு எழுதும்பொழுது அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள்; ஒரு அந்நிய மொழியில் எழுதுவதற்காக அவர்களை நான் கடிந்துகொள்ளும் பொழுது, அவர்கள் உர்தூ லிபியில்தான் எழுதுகிறார்கள். நமது நாட்டின் தேசிய மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும் என்றும் அது தேவநகரி லிபியில்தான் எழுதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டால், மேலே நான் குறிப்பிட்ட ஹிந்துக்களுடைய நிலை என்ன? கதி என்ன?”

இது மஹாத்மா காந்தி எழுப்பிய கேள்வி: அதிக நாட்களுக்கு முன்பு அல்ல; 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எழுப்பிய வினா. டில்லியையும் அதை சுற்றிலுமுள்ள பகுதிகளைத்தான் அவர் இங்கு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அதே கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகிறார். அவர் வார்த்தைகளை அப்படியே நான் இங்கு படிக்கிறேன்.

“இந்தியாவிலுள்ள கிராமங்களில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு புத்தகங்களை வாசிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் பேசுகிற மொழி ஹிந்துஸ்தானி. இதை முஸ்லிம்கள் உர்தூ லிபியில் எழுதுகிறார்கள். ஹிந்துக்கள் தேவநகரி லிபியில் எழுதுகிறார்கள். எனவே, என்னையும் உங்களையும் போன்ற மக்களின் கடமை என்னவென்றால், அந்த இரண்டு லிபிகளையும் கற்றுக்கொள்வதுதான்.”

அவைத் தலைவர் அவர்க்ளே! மஹாத்மா காந்தியின் கருத்து இதுதான். பெரும்பாலான மக்கள் பேசுகிற மொழி ஹிந்துஸ்தானி என்று அவர் மிகவும் தெளிவாகக் கூறி இருக்கிறார்; அதற்காக மக்கள் பயன்படுத்தும் லிபிகள் தேவநகரியும் உர்தூவும் என்று அவர் வலியுறுத்தியிருகிறார். எனவே, இந்தியாவினுடைய தேசீய மொழிக்கு உர்தூவையும் தேவ நகரியையும் லிபிகளாக ஏற்றுக் கொள்ளும்படி எனது நண்பர்களுடன் சேர்ந்து நானும் இச்சபையை வேண்டிக்கொள்கிறேன்.

ஹிந்துஸ்தானி ஒரு அந்நிய மொழி அல்ல; இது நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான். இது முழுக்க முழுக்க ஒரு சுதேசி மொழி. இந்நாட்டில்தான் இது பிறந்து வளர்ந்தது. இம்மொழியைப் பற்ரிய மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், நவீன கால தேவைகளுக்கு ஏற்ற தருணத்தில் இது பிறந்தது; சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை வளர்த்துக்கொண்டது. தற்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையிலும் இது உள்ளது. எனவே, நவீன கருத்துக்களை வெளியிடவும், தற்கால சூழ்நிலைகளைப் பூர்த்தி செய்யவும் ஏற்ற மொழி இதுதான் என்று நான் கூறுகிறேன். ஏற்கனவே நான் சுட்டிக் காட்டியபடி இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பேசக்கூடிய மொழியும் இந்த ஹிந்துஸ்தானிதான்.

முன்காலங்களில் வழக்கில் இருந்த விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டது. மிகப் பழமையான காலங்களிலுள்ள நடைமுறைகள்தான் பின்பற்றப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டால் , அது குறித்து தர்க்க ரீதியான ஒழுங்குமுறையைக் கையாள வேண்டும் என நான் சொல்ல விரும்புகிறேன். பழமையை ஏற்றுக்கொள்ள நாம் ஏன் விரும்புகிறோம்? நமது நண்பர்களில் சிலர், ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகவும் பழமையான மொழியாகவும் அது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசீய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கூறினார்கள்.

இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், நான் ஒரு உண்மையை இச்சபை முன்பு தைரியமாகக் கூற விரும்புகிறேன். ** இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும் , ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான்; அதாவது திராவிட மொழிகளே இந்நாட்டின் புராதன மொழி என நான் துணிந்து கூறுகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட முதல் மொழி திராவிட மொழியே என்ற  எனது கூற்றை எந்த வாலாற்றாசிரியராலும் மற்க்க முடியாது. எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும் நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது மிகவும் புராதனமான மொழி. இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

என்றாலும், ஒரு உண்மையை நானோ அல்லது இதர தமிழர்களோ மறந்துவிடவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இந்நாட்டின் மிகப் புராதன மொழியாக தமிழ் இருந்தபோதிலும் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களால் இது பேசப்படவில்லயாதனால் இம்மொழியைத்தான் நமது தேசீய மொழியாக வேண்டும் என நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கவில்லை;  நாங்கள் நிலைமையைப் புரிந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால், பழமைக்குத்தான் செல்லவேண்டுமென்றால், புராதனமானதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இந்நாட்டின் தேசீய மொழியாக தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அம்மொழியைப் பேசுபவர்கள் அக்கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருக்கவில்லை.

பழமையை நாம் மறந்து விடுவதற்கில்லைதான்; அதன் செல்வாக்கிற்குள்பட்டுத்தான் நாம் இருந்து வருகிறோம். தாண்டன்ஜீ அவர்கள் விளக்கிக் கூறியதைப் போல, பழமையிலிருந்து நாம் முழுவதுமாக விடுபட்டுவிட முடியாதுதான். பழமைச் சங்கிலியால் நாம் பிணைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பிணைப்பு அசைவற்றதாக, உயிரற்றதாக இருக்கக் கூடாது. அது விட்டுக்கொடுக்கக் கூடியதாக இருக்கவேண்டும்; நெளிவு சுழிவுகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லாமே வேர் பாகமாக அமைந்துவிட்டால் , மரம் முழுமை பெறுமா? வேர்களும் இருக்க வேண்டும். கிளைகளும் இருக்க வேண்டும். மலர்கள் இருக்க வேண்டும்; கனிகளும் இருக்க வேண்டும். எனவே தற்கால சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

திரு ராம்நாத் கோயங்கா (மதறாஸ், பொது) :- அவைத் தலைவர் அவர்களே! இந்த விவாதத்தை முடிவுக்கொண்டு வரவேண்டுமென ஏற்கனவே நான் பிரரேபித்துள்ளேன். கனம் உறுப்பினரும் தமது பேச்சை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரரேபணை செய்கிறேன்.

அவைத்தலைவர் :- கனம் உறுப்பினர் தமது பேச்சை முடித்துக்கொள்ள நான் அனுமதிக்கிறேன்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- அவைத் தலைவர் அவர்களே! விவாதத்தை முடிக்க வேண்டும் என பிரரேபணை செய்யப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்படுமானால், அதன்பிறகு இங்கு என்னால் ஏதும் கூற இயலாது. அது அவ்வாறு செய்யப்படவில்லை. விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. எனக்குள்ள உரிமையின்படி நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

திரு ராமநான் கோயங்கா:-  உறுப்பினர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவைத் தலைவர் : கனம் உறுப்பினர் சீக்கிரம் முடித்துக் கொள்ளலாம்.

மிஸ்டர் முஹம்மது இஸ்மாயில்:- அவைத் தலைவர் அவர்களே! எண்கள் (Numerals) குறித்து ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். சர்வ தேச வழக்கில் பழக்கத்தில் இருகும் எண்களையே நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்தியாவிலுள்ள பழ மொழிகளும் இந்த எண்களையே கடைப்பிடித்து வருகின்றன.

தேசீய மொழி பிரச்னை போல எண்கள் பிரச்னையும் நெடுங்காலமாக இருந்து வரவில்லை என்று சொல்லப்படுகிறது. தேசிய மொழி பிரச்னை வேறு. எண்கள் பிரச்னை வேறு என்பதை மக்கள் புரிந்துதான் வைத்திருக்கிறார்கள். இந்நாட்டின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இப்பொழுது இருந்து வருகிறது. என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அம்மொழி அவ்வளவாக ஊடுருவவில்லை; எல்லோரிடமும் பழக்கத்தில் இல்லை. ஆனால் எண்கள் பிரச்னை அப்படி அல்ல. பாமர மக்களும் கூட “ஆங்கில” என்களையே கடைப்பிடித்து வருகிறார்கள்; உபயோகித்து வருகிறார்கள். அவர்களது அன்றாட வாழ்க்கையில் இந்த எண்கள் புழக்கத்தில் இருந்து வருகின்ற. கை வண்டி இழுப்பவர்கள், தினக் கூலிகள் எல்லோருமே இந்த எண்களையே உபயோகிக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் இந்த எண்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே இந்த எண்களையே நமது தேசீய மொழியிலும் நிரந்தரமானதாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இந்த நாட்டில் எது நடைமுறையில் இருக்கிறதோ அதையே நாமும் ஏற்றுக்கொண்டதாகவும் பிரதிபலிப்பதாகவும் அமையும்.

எண்கள் விசயத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்ய நாம் முற்பட்டால், நிறைய குழப்பங்கள் உண்டாகும்; பணச் செலவாகும்; உழைப்புகள் வீணடிக்கப்படும். அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது போல, இந்த “எண்கள்’ அந்நிய நாட்டைச் சார்ந்தவையல்ல. நமக்குச் சொந்தமானவைதான்,. எனவே, நமது தேசீய மொழியில்  இந்த எண்கள் நிரந்தரமான அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நான் மீண்டும் வேண்டுகோள் விடுகிறேன்.. சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த எண்களை கைவிட்டுவிட்டு புதிய எண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதாவது, தேவநகரி லிபியிலும் உர்தூ லிபியிலும் இந்துஸ்தானி மொழியே தேசீய மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் சர்வதேச ரீதியில் வழக்கில் இருக்கும் ‘இந்திய எண்களே’ நமது தேசீய மொழியில் நிரந்தர அம்சமாக இருக்கவேண்டும் என்பதும் எனது கோரிக்கைகளாகும்.

————-

**
from the Draft Costitution – Part XIV A Languages – Page : 1471 to 1474 – Date 14th September 1949 – Vol : IX

Mr. Mohamed Ismail (Madras, Muslim) :- .. Some friends of ours want to have an ancient language of the country to be the official language of the Union. If it were granted then I make bold to say that Tamil, or to put it generallay, the Dravidian languages are the earliest among the languages that are spoken on the soil of this coutry. No historian or archaelogist will contradict me when I say that it is the Dravidian language that was spoken first here on the soil of this country, and that is the eralier language. Tamil language has got a rich literature of a high order. It is the most ancient language. It is, I may say, my mother tongue. I love and I am proud of that Language.

8 பின்னூட்டங்கள்

 1. 05/06/2013 இல் 23:19

  Thanks : thoothuonline.com

  மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அறிஞர் அண்ணா அவர்கள் இந்தி மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக பெரும்பான்மையான மக்கள் பேசுகின்றார்கள் என்ற அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட பொழுது, “ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே” என ஜனநாயகத்தின் பெரும்பான்மை தத்துவத்தைக் குறித்து கிண்டலாக குறிப்பிட்டார்.

 2. தாஜ் said,

  06/06/2013 இல் 00:22

  கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகளை/ அங்கே அவர் ஆற்றிய உரைகளை நான் நிரம்பவும் கேள்விப் பட்டிருக்கிறேன். அவை அத்தனையும் நம்மை பெருமை கொள்ள வைப்பது.

  *
  காயிதே மில்லத் பிறந்த தினத்தையொட்டி, இங்கே நண்பர் ஆபிதீன் சிரத்தையோடு 14-9-49 அன்று அரசியல் நிர்ணய சபையில், தேசீய மொழி பிரச்னை விவாதத்தில் காயிதே மில்லத் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை தட்டச்சு செய்து நமக்கு வழங்கி இருக்கிறார். மிக சிறப்பானதோர் உரையாகவே இதனை பார்க்கிறேன்.

  *
  //‘அதிகம்பேர் பேசக்கூடிய இந்திய மொழி’யாக ஹிந்துஸ்தானியையே (இது ஹிந்தியா உருதா?) முன்மொழிந்திருக்கிறார் என்றுதான் என்னால் முடிவுக்கு வர முடிந்தது.//
  என்று தன் குறிப்பில் குறிப்பிட்டிருக்கும் ஆபிதீனுக்கு சின்ன குழப்பம். நிஜத்தில் அவர் வாசித்த கட்டுரையில் அதற்குறிய தெளிவில்லை என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது.

  கீழே உள்ள மஹாத்மாவின் உரையை, காயிதே மில்லத் சுட்டிக் காமித்து பேசுவதைப் பார்ப்போம்.

  //“டில்லியில் என்னை தினசரி ஹிந்துக்களும் சந்திக்கிறார்கள். முஸ்லிம்களும் சந்திக்கிறார்கள். ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இவர்கள் பேசுகிற மொழியில் ஒரு சில சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கின்றன. அரபி, பார்ஸி வார்த்தைகளும் அதில் அதிக அளவில் இல்லை. இந்த மக்களுகு அல்லது அவர்களில் பெரும்பான்மையினருக்கு, தேவநகரி லிபி தெரியாது. அவர்கள் எனக்கு எழுதும்பொழுது அவர்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள்; ஒரு அந்நிய மொழியில் எழுதுவதற்காக அவர்களை நான் கடிந்துகொள்ளும் பொழுது, அவர்கள் உர்தூ லிபியில்தான் எழுதுகிறார்கள். நமது நாட்டின் தேசிய மொழியாக ஹிந்திதான் இருக்க வேண்டும் என்றும் அது தேவநகரி லிபியில்தான் எழுதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டால், மேலே நான் குறிப்பிட்ட ஹிந்துக்களுடைய நிலை என்ன? கதி என்ன?”//

  இந்த மஹாத்மாவின் உரையின்படிக்கு விளங்கவருவது, அதிகப்படியான மக்கள் பேசும் மொழியான இந்திக்கு அடிப்படையில் வரிவடிவம் கிடையாது. இந்தியாவில் பழமை வாய்ந்த தேவநகரி-யின் வரிவடிவத்தை இந்திக்கு பயன் படுத்தலாம் எனில் பலருக்கும் அது தெரியாமலேயே போய்விட்டது. அவர்கள் அன்றைக்கு உருதுவின் வரிவடிவத்தை பயன் படுத்தினார்கள்.

  (இங்கே ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் உருதுமொழி காஷ்மீரத்திலும் உத்திரப் பிரதேசத்திலும்தான் பேசப்படுகிறது என்பதையும், அது அந்த மாநில மொழியாக மட்டும் இருந்தும் வருகிறது என்பதையும் நினைவில் கொள்வது தகும்.)

  இந்தியாவில் பெருவாரியான மக்கள் பேசும் (நான்கு மாநில மக்கள் என்று அறிகிறேன்) இந்தி மொழிக்கு வளமான சேர்க்கையாக உருது லிபியுடனும் உருது கலப்புடனும் உருபெறும் மொழியையே ‘இந்துஸ்தானி’ என்று இங்கே சுட்டப்படுகிறது. அன்றைக்கு அது வழக்கிலும் இருந்தது. காலப் போக்கில் இந்தி மொழி தேவநகரி லிபியையே வரிவடிவமாக கொண்டு விட்டது.

  பழைய இந்தி சினிமா பார்க்கக் கூடுமெனில், அந்த திரைப்படத்தின் ‘டைட்டில்கள்’ தேவநகரி லிபியிலும்/ உருது மொழியிலும் காட்டப்படும். படத்தில் பெரும்பாலான வசனங்களும்/ பாடல்களும் கட்டாயம் (‘மொழி வளம் கருதி’) அதிகத்திற்கும் அதிகமான உருது கலப்பாகவே இருக்கும்.

  இன்றைக்கு நாம் விரும்பும் ‘இந்துஸ்தானி இசை’யும் கூட இதே ரகம் கொண்டதுதான். மேம்பட்ட இந்தியின் இசை வடிவாக அதைக் கொள்ளல் தகும்.

  உருது மொழி கலப்பையும் / அதன் வரிவடிவத்தையும் இந்திய தேசிய மொழிக்குள் கொண்டு வரவேண்டும் என்று காயிதே மில்லத் கருதினார். இதன் மூலம் இந்திய இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு கூட இதன் மூலம் மறைமுகமாக அவர் அஸ்திவாரமிடவும் விரும்பி இருக்கலாம்.

  -தாஜ்

  *

  • 06/06/2013 இல் 07:42

   நன்றி தாஜ் – என் குழப்பத்தை அதிகப்படுத்தியதற்கு!

   • தாஜ் said,

    06/06/2013 இல் 13:16

    நன்றி தல…
    இப்படி நன்றி சொன்னா….
    நான் என்னத்தைச் சொல்வது?
    நன்றியைத் தவிர.

 3. 06/06/2013 இல் 17:09

  சும்மா சொன்னேன் தாஜ். நீங்கள் தந்த விளக்கம் பலருக்கும் பயன்படும். இங்கே சகோதரர் அதிரைவாசி பதிவில் பார்த்த ஒரு செய்தி. அந்த ‘கண்ணியமிகு’ பட்டம் எப்படி வருகிறது என்பதை நண்பர்கள் தெரிந்துகொள்ள :

  நபிகள் நாயகம் விழா! காயிதே மில்லத் பேச இருக்கிறார். அதற்கு முன், திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் பிள்ளையார் பற்றிய கதையைக் கூறிக் கேலி செய்தார். காயிதே மில்லத் தமது பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல, பேச்சாளரின் பேச்சு அதோடு முடிக்கப்படுகிறது!
  காயிதே மில்லத் பேசும்போது சொன்னார்… ”இது புனிதமான மீலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றிப் பேச மட்டுமே அனுமதிக்கப்படும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றிக் கேலி செய்து பேசக்கூடாது. இஸ்லாமிய மார்க்கம், ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று கூறியிருக்கிறது.”

  • தாஜ் said,

   07/06/2013 இல் 13:55

   அந்த மாதிரியான
   பெரிய மனிதர்கள்
   வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்து
   முடித்திருக்கலாம் வாழ்வை.
   இப்போது கூட
   ஃபேஸ்புக்கில்
   கிருஸ்துவ மத வாசகத்தை கிண்டல் செய்த
   ஓர் இஸ்லாமியரை
   கண்டித்தேன்.
   வேறு ஒண்ணும்
   செய்ய முடியவில்லையே ஆபிதீன்!

   ஆயிரத்தில் ஒருவன் படத்தில்
   ஓர் அர்புதமான வசனம் வரும்.
   எம்.ஜி.ஆரை. பார்த்து
   விளங்காத
   வில்லன் கூட்டத்துகாரன் ஒருவன் கேட்பான்:
   “திருந்து திருந்து என்று சொல்கிறாயே…
   திருந்துறதுன்னா என்ன?”

   • 07/06/2013 இல் 14:42

    பிரமாதமான கேள்வி. எனக்கும் பதில் தெரியாது!

 4. 09/06/2013 இல் 10:49

  சகோதரர் ஆபிதீன், காயிதேமில்லத் பிறந்த தின செய்தியாக பதிவு செய்திருக்கும் செய்தி எனக்கு மகிழ்சியைத் தருகிறது. இந்திய தேசிய மொழிப் பிரச்சனையில், இந்திய பாராளுமன்ற நிகழ்வுகளில் ஒரு துணுக்கைப் பதிவு செய்திருக்கிறார்.

  தேசிய மொழிக்கு அந்த தேசத்தின் அதிக மக்கள் அறிந்திருக்கக்கூடிய மொழி வர வேண்டும் என்ற விவாதம்

  ஏற்றுக் கொல்லப்பட்ட நிலைக்கு வந்த போது அதை காயிதே மில்லத் ஒப்புக் கொண்டு கருத்துச் சொல்லுகிறார்கள்.

  அவர்களின் விளக்கத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது:-

  எண்ணிக்கையில் அதிகம் பேர் என்று வந்தால் ஹிந்தி அந்த இடத்தைத் தொடமுடியாது. தேவநகரி, உருது கலந்த ஹிந்துஸ்தானிக்குத் தான் அந்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது பின்னுக்குத் தள்ளப் பட்டு ஹிந்தியை முன் நிறுத்துவதை காயிதே மில்லத் எதிர்த்து

  தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிந்துஸ்தானிக்கு அந்த உரிமை தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

  தொன்மையான தேசிய மொழிக்கு அந்த உரிமை தரப்பட வேண்டும் என்றால், அந்த தகுதி இந்திய எல்லைக்குள் என் தாய் மொழி தமிழுக்கு மட்டுமே உண்டு. என்ற கருத்தினை, திருநெல்வேலி பேட்டையில் பிறந்து வளர்ந்த முஹம்மது இஸ்மாயில் என்ற இஸ்லாமியத் தமிழர் தன்

  கருத்தினைப் பாராளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் இன்னும் பல தமிழர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள் அவர்களில் எவரும்

  இதைப் பதிவு செய்யவில்லை என்பது தான் இதில் கவனிக்கத்தக்கது. மாறாக அந்தத் தமிழர்களில் பலர் ஹிந்திக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பது தான் முக்கியம்.

  தேசிய மொழி ஹிந்தியாக பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெறுவதற்காக நடந்த வாக்கெடுப்பில்

  ஒரே ஒரு ஓட்டில் தான் வென்றது. அதுவும் சபா நாயகர் வாக்கு.

  ஆபிதீன் குறிப்பிடுவது போல தமிழ் மொழிதான் ஆட்சி மொழியாக வர வேண்டும் என்று பேசியது போல

  சில நண்பர்கள் இங்கே கூறிக்கொண்டு இருப்பதில் முழு உண்மை இல்லைதான்.

  இப்படி காயிதே மில்லத் பேச்சை தமிழகத்தில் கொஞ்சம் திரித்துக் கூறியது அண்ணா பாராளுமன்ற

  உறுப்பினராகி வந்த பின்னால் தான். அண்ணாவுக்கு முஸ்லிம் வாக்குகளை தி.மு.க.வுக்கு கொண்டு வர இந்த சாதுரியம் தெரிந்திருந்தது.

  தி.மு.க -முஸ்லிம் லீக் கூட்டணிக்குப் பின்னர் தி .மு .க . ராஜ நடை போட்டதும் முஸ்லிம் லீக் கூட்டணி தர்மத்தால் அமைதி காத்ததும் தொடர்ந்து நடந்து வருவது தான்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s