சீர்காழிக்கு நான் வருவதாக ஃபேஸ்புக்கில் அமர்க்களப்படுத்திய நண்பர் தாஜை , ‘ஆமா… வந்து என்னா பெருசா செய்ஞ்சுடப் போறாக, மரஞ்செடி கொடிகளைக் கொஞ்ச நேரம் முறைச்சுப் பாத்துட்டுத் திரும்பிடப் போறாக அவ்வளவுதான்’ என்று கிண்டல் செய்திருந்தார் குளச்சலார். ரொம்ப ரசித்தேன். அவர் சொன்னது சரி. ஆனால் முறைத்தது செடிகொடிகளையல்ல, ‘கி.ரா பக்கங்கள்‘ எனும் ஒரே ஒரு புத்தகத்தைத்தான். கவனித்து விட்டார் போலும், ஊர் திரும்பும்போது ‘இந்தாய்யா..’ என்று அதை அன்போடு வழங்கினார் தாஜ். அதிலிருந்த ‘அம்மாவின் நாட்கள்’ கட்டுரையிலிருந்து பதிவிடுகிறேன், அஸ்மாவின் இடைஞ்சல்களையும் மீறி. கண்கலங்காமல் படியுங்கள். நன்றி. ஆபிதீன்
***
1946ஆம் ஆண்டு. நாகர்கோவில் புத்தேரியிலுள்ள காதரின் பூத் ஆஸ்பத்திரியில் காசநோயாளியாக சேர்க்கப்பட்டிருந்தேன். சமைத்துப் போடவும் என்னை கவனித்துக்கொள்ளவும் அம்மா வந்திருந்தாள்.
மத்தியானம் சாப்பாட்டின் போதெல்லாம் வழக்கமான அந்த சச்சரவு வரும். தட்டு வைத்து சாப்பாடு போட்டு வைத்தாள். தன்ணீர் வைக்கவில்லை. கோபமாகச் சொன்னேன். “தண்ணி எடுத்து வை”. தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள்.
நான் சாப்பாட்டின் முடிவுக்கு வந்ததும் அம்மா அவசரமாய் சாப்பிடத் தொடங்குவது வழக்கம். முதல் கவளத்தை விழுங்குவதற்கும் விக்கல் எடுப்பதற்கு சரிய்யாக இருக்கும். விக்கிக்கொண்டே எங்கள் பக்கத்தில் உள்ள தண்ணித் தம்ளருக்கு அவள் கை நீளும். சிரித்துக்கொண்டே எடுத்துக் கொடுப்போம். சில சமயம் மட்டும் கொஞ்சம் கிராக்கி பண்ணி பிறகு தருவோம். எப்பவாவது சில நாள் “எண்ணைக்காவது ஒருநா நீ விக்கித்தான் சாகப்போறே” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் தருவோம்.
வழக்கம்போல அன்றைக்கும் விக்கல் வந்தது. தண்ணீருக்குக் கை நீட்டினாள். தரமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னேன்.
இரண்டாவது விக்கல் வந்தது. நீட்டிய அவள் கை மேலும் நீண்டது.
முடியவே முடியாது என்றேன்.
அவள் முகம் சிரிக்க முயன்றது.
“இதெல்லாம் என்னிடம் நடக்காது. ஒண்ணு நீ சாகணும் அல்லது நாளையிலேர்ந்து சாப்பிடறப்போ குடிக்கத் தண்ணீர் வைக்கிற வளக்கம் வரணும்” என்றேன்.
மூன்றாவது விக்கல் எடுத்தது. பேச முடியலை அவளால்.
ரசத்தையாவது குடிப்போம் என்று ரசத்தின் பக்கம் அவள் கை போனது. ரசவாளியையும் எடுத்து வைத்துக்கொண்டேன். அவள் கண்கள் சொருக ஆரம்பித்தது. அவளறியாமலேயே அவள் உடம்பு ஒரு நெடுமூச்சு எடுத்தது. தொண்டையில் சிக்கியிருந்த சாத உருண்டை உள்ளே இறங்கிவிட்டது. ஒரு சின்ன ஆசுவாசம்,. மளமளவென்று அவள் கண்களிலிருந்து கண்ணீர்.
தண்ணித் தம்ளரை அவளிடம் நீட்டினேன். வாங்கி வைத்துக் கொண்டாள்; குடிக்கவில்லை. சாப்பாட்டையும் சாப்பிடவில்லை.
கண்ணீர் வழிய என்னைப் பார்த்து “ராஜய்யா, இந்த அத்துவானயிடத்துலெ ஏதும் எனக்கு ஆயிட்டா ஒத்தையிலே என்னடா பண்ணுவெ; உதவிக்கு யாரு இருக்கா?”
நம்ம பிள்ளை தவித்துப் போய்விடுவானே என்றுதான் அப்பவும் நினைக்கிறாள்.
***
நன்றி : கி.ராஜநாராயணன், அகரம் பதிப்பகம், தாஜ்
மறுமொழியொன்றை இடுங்கள்