எனது பள்ளி இறுதிப் பருவத்திலிருந்து அந்த எழுத்தாளரின் பரம விசிறியாக மாறியிருந்தேன் (நன்றி : பாஸ்கரன்) . இத்தனைக்கும் அவர் எழுத்து எனக்கு முழுக்கவும் புரியாது அப்போது . ஆனால் காந்தமாய் ஈர்க்கும். என்னிடம் இல்லாத அவருடைய புத்தகங்கள் எந்த நூலகத்தில் இருந்தாலும் உடனே சுட்டுவிடுவது ஃபர்ளாக (கடமையாக) இருந்தது. (திருட்டென்று இதைச் சொல்ல முடியாது; காணால் போய் விட்டதென்று சொல்லி அதற்குரிய விலையை நான்தான் நூலகரிடம் கொடுத்துவிடுகிறேனே..!) எந்த பெரிய எழுத்தாளருக்கும் கடிதம் எழுதாதவன், கூச்சத்தை உதறி, கல்லூரியில் படிக்கும்போது ஒரு புத்தகம் கேட்டு அவருக்கு எழுதினேன், 1977ல். அவருடைய மகளாரிடமிருந்து உடன் பதில் வந்தது, அவருடைய கையெழுத்துடன்! பெரிய பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன் இன்றும் அதை. ஊர்போகும் ஒவ்வொரு முறையும் அந்த சகோதரியை , அந்த எழுத்தாளரின் குடும்பத்தாரை பார்க்கவேண்டும் என்று நினைப்பேன். இதுவரை வாய்ப்பு கைகூடியதில்லை. இறைவன் இந்த முறையாவது எனக்கு அந்த வாய்ப்பை அளிப்பான் என்று நம்புகிறேன்.
இந்த கடிதத்தை வெளியிட மிகவும் கூச்சமாக இருந்தது – எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று பந்தா காட்டுவது போல இருக்குமே என்று. வேறு வழியில்லை, பந்தா காட்டத்தான் வேண்டும். அப்போதுதான் வயசைக் காட்ட முடியும்! என்ன சொல்கிறீர்கள்? ஆமாம், யார் அந்த எழுத்தாளர்? ‘தி.ஜா’வா என்று கேட்டிருக்கிறார் நண்பர் பாலகிருஷ்ணன். இல்லை , அந்தப் பேறு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் இதுவும் பெரும் பேறுதான்… – ஆபிதீன்
***
அபிதீன் பாய்க்கு,
சலாம். இன்று தற்செயலாய் அப்பா ஏதோ பழைய காகிதங்களை புரட்டிக்கொண்டிருக்கையில் உங்கள் கடிதத்தை மேல் உறையுடன் என்னிடம் காண்பித்தார். எழுத்தின் அழகைக் கண்டு நான் ஸ்தம்பித்தே போனேன். கறுப்பு மசிக்கும் ஸன்னமான பேனா முள்ளுக்கும் எழுத்தின் வார்ப்பிடம் அச்சு தோற்றது. எனை மீறிய எழுச்சியால் முன்பின் அறியாத உங்களுக்கு எழுத்தின் அழகைப் பாராட்டி எழுதவும் தூண்ட வைத்துவிட்டது. நான் 14 வயது சிறுமி. அப்பாவுக்கு எவ்வளவோ கடிதங்கள் ரசிகர்களிடமிருந்து வந்திருக்கின்றன. வந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் அவர்களில் உங்களுக்குத்தான் நான் முதல் முதலாக எழுதுகிறேன். அப்பா எதிரே உட்கார்ந்துகொண்டு புன்முறுவல் பூக்கிறார்.
உறையிலிருந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தவுடன் அப்பாவின் படம். எனக்கு ப்ரமிப்புக்கு மேல் பிரமிப்பு. அந்தத் தழற் கண்களும் உதட்டின் செதுக்கலும் அவரைப் பாராமலே எப்படி இத்தனை அச்சாக விழுந்திருக்கின்றன? என்னதான் photoவைப் பார்த்து வரைந்ததேயானாலும் இந்த ஜீவகளை – முக்கியமாய் அந்த புன்னகை, உங்கள் கைவண்ணத்திற்கே உரித்ததாய்த்தான் இருக்க முடியும்.
அப்பாவை கடிதத்திற்குப் பதில் போட்டீர்களா என்று கேட்டதற்கு புத்தகங்கள் ஒரு பிரதிகூட இல்லாமல் என்னத்தையம்மா அவருக்குப் போடுவது என்றார்…..
…..
உங்களுக்கு மனத்தாங்கல் இல்லாமல் அப்பாவின் கையொப்பம் இதோ…
***
பொக்கிஷமாய் நான் வைத்திருக்கும் அந்தக் கையெழுத்து உள்ள கடிதத்தைப் பார்க்க – ‘அந்த தழற் கண்கள்’ இன்னும் தெரியாவிட்டால் – இங்கே க்ளிக் செய்யுங்கள். அவர் போல ஒரு வரியாவது நான் எழுத (‘நீயா? ஹூம்ம்ம்..!’ – ஹனிபாக்கா) துஆ செய்யுங்கள். நன்றி.
குறிப்பு : நான் வரைந்து அனுப்பியது ‘வாசகர் வட்டம்’ நூலொன்றில் இருந்த இந்த புகைப்படம் பார்த்துத்தான்.
Nagore Rumi said,
03/05/2013 இல் 20:29
ஆபிதீனுக்கு இருக்கும் மூன்று திறமைகளில் அற்புதமாக வெளிப்பட்ட திறமை இது. ஆபிதீன், நீர் வரைந்த, உம்மிடமுள்ள ஓவியங்களையெல்லாம் இங்கே ஒட்டு மொத்தமாக, அல்லது ஒவ்வொன்றாக, இட்டால் என்ன? நீர் வரைந்த லாசரா பிரதி உம்மிடம் உள்ளதா?
ஆபிதீன் said,
03/05/2013 இல் 21:13
// லாசரா பிரதி உம்மிடம் உள்ளதா?// இல்லையே ரஃபி. அந்தக் கடிதத்திலேயே சிறிதாக வரைந்திருந்தேன். அந்த சகோதரியிடம்தான் கேட்கவேண்டும். இதுபோல் எவ்வளவோ கிறுக்கல்கள். சீசன் ஸ்ட்ரீயோவில் வேலைபார்த்தபோது பெண்டல்’ ஸ்கெட்ச் பேனாவால் வரைந்து எல்லா பாடகர்களின் படங்களும் நம் ஜஃபருல்லாநானாவிடம் போயிற்று, பிலால் மூலம். இப்போது கேட்டால் நானா இல்லையென்கிறார்! பார்ப்போம்…
ஷா said,
05/05/2013 இல் 01:02
பொக்கிஷம்.
ஆபிதீன் said,
05/05/2013 இல் 11:17
ஆமாம் ஷாஜஹான். என் சீதேவி வாப்பாவின் சில கடிதங்களைப் போல் இதைப் பாதுகாத்து வருகிறேன்.
மஜீத் said,
08/05/2013 இல் 17:56
பொக்கிஷமேதான்…
அதிலும் 14 வயதில் இருந்த அந்த முதிர்ச்சியான எண்ண ஓட்டங்களும், மொழிநடையும் பிரமிக்க வைக்கிறது…
என்ன ஒரு வெளிப்பாடு?
//அப்பா எதிரே உட்கார்ந்துகொண்டு புன்முறுவல் பூக்கிறார்.//
லாசராவின் கண்களில் எத்தகைய பெருமையைச் சுமந்துகொண்டு புன்முறுவல் பூத்தாரோ?
இந்தப் பெண்மணியைக் கண்டிப்பாக ஒருமுறை காணவேண்டும்…நீங்கள்…
ஆபிதீன் said,
08/05/2013 இல் 21:45
//கண்டிப்பாக ஒருமுறை காணவேண்டும்// விடுமுறையில் ஒருமுறை சென்னை செல்லும்போதெல்லாம் நூறு வேலைகள், இம்முறையாவது அவசியம் பார்க்கிறேன், இன்ஷா அல்லாஹ் (இதுதான் தொல்லை!).
சோ.வே.செல்வமூர்த்தி said,
18/01/2018 இல் 12:38
பள்ளி நாட்கள் முடிந்து ஜனரஞ்சகப் பத்திரிகை, அரசியல் செய்திகள், இடதுசாரி இலக்கியங்கள் என உலக வாழ்க்கையைத் தொடங்கிய பருவம். தினமணி கதிர் வார இதழில் ‘சிந்தாநதி’ வெளியான போது லா.ச.ரா . அவர்களின் எழுத்து அறிமுகம். அறிந்த மொழியில் அதுவரை அறியாத பொருள் இருப்பதை அறியமுடிந்தது. அதன்பிறகு தேடித்தேடி வாசித்தேன். ஆண்டுகள் பலகடந்து என்னை அன்னாருக்கு அறிமுகம் செய்த சிந்தாநதிக்கு தேசிய அளவில் அங்கீகாரம். ஒரு கணம் மெய் மறந்தேன். இந்த நிமிடமும் அதே உணர்வு. (பொக்கிஷமான கடிதத்தில் தேதி இல்லை. பதிவில் இருந்திருந்தால் பிரமிப்பு இன்னும் கூடுதலாகி இருக்கும்)
ஆபிதீன் said,
18/01/2018 இல் 12:44
ஆமாம் சார், தேதியில்லை. இனி கேட்கமுடியாதே 😦 மறுமொழிக்கு நன்றி.