‘அரசனின் வருகை’ எழுதி அசத்திய பிரபல எழுத்தாள நண்பர் உமா வரதராஜன் ஃபேஸ்புக்கில் சிரிக்க வைத்தார் இன்று. ‘எல்லாம் தெரிந்த’ அரபுநாட்டு ஏகாம்பரம்களிடம் நானும் மாட்டிக்கொண்டு படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல!
***
அபூர்வ சகோதரர்கள்
உமா வரதராஜன்
நீராவி உடலால் வெளியேறும் ,மண்டை கொதிக்கும் இந்தக் கோடை வெயிலில் வயலினுடன் அலையும் ஒருவரிடம் அண்மையில் மாட்டிக் கொண்டேன் . சந்தையிலிருந்து திரும்பும் வழியில் பத்திரிகைக் கடையொன்றுக்குள் நுழைந்த போது அவரைக் கண்டேன். வழக்கத்துக்கு மாறாக அண்ணன் இல்லாமல் அவர் அங்கு தனியாகத் தோன்றியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
சுமார் 25 வருஷங்களுக்கு முன்னர் இந்த அண்ணனும்தம்பியும் என் பக்கத்துக் கடைக்காரர்கள். அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் வாரிசுகள். எதிரும்,புதிருமாக மேஜை-நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கும் இவர்களுக்கு நடுவில் யாராவது போய் மாட்டிக் கொண்டால் பேட் மிண்டன் பூப் பந்து போல் ஆவதைத் தவிர வேறு வழி கிடையாது. மூன்றாம் நபருக்குப் பேச எந்த சந்தர்ப்பமும் வழங்காமல் இரு பக்கங்களிலுமிருந்து சகோதரர்கள் பந்தாடிக் கொண்டிருப்பார்கள்.
காலம் அவர்களில் சின்ன மாற்றத்தயேனும் ஏற்படுத்தியிருக்காதா என்பது என் நப்பாசை.
என் நாக்கில் சனியன் நாட்டியமாடத் தொடங்குவது தெரியாமல் அவரிடம் வலியப் போய் ”நீங்கள் நலமா? அண்ணன் எப்படியிருக்கிறார் ?” என்று கேட்டு விட்டேன்.
அவர் என்னை உற்றுப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். அவர் முகம் அப்படியே மலர்ந்தது. இரை கிடைத்த சிங்கத்தின் சந்தோஷம் அதுவென்பதை அடுத்து வந்த ஒரு மணித்தியாலத்தில் புரிந்து கொண்டேன்.
அந்த ஒரு மணித்தியாலத்தில் அவர் தொடாத விவகாரம் என்று எதுவுமில்லை .அரசியல்,பொருளாதாரம்,,சுகாதாரம் , சரித்திரம், புவியியல், கலை,இலக்கியம் என்ற சகல பிரிவுகளிலும் என் தலையைப் பிடித்து அமுக்கி, முக்குளிக்க வைத்தார்.
தலையை இடம்-வலமாக ,மேலும் கீழுமாக ஆட்டுவதைத் தவிர நான் வேறொன்றும் செய்யவில்லை.குத்துச் சண்டை அரங்கில் பாகம் பாகமாகப் பிய்ந்து கிடந்த என்னை ஏதாவதொரு குப்பை லாரி வந்து வாரியெடுத்துக் கொண்டு செல்லக் கூடாதா என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தேன்.
இவ்வளவு ‘ஞான ஸ்நானத்துக்குப்’ பின் பிரிய மனமில்லாமல் இளைய சகோதரர் சொல்லிச் சென்றதுதான் என்னை இப்போதும் பயமுறுத்துகின்றது.
” அண்ணன் இன்று வரவில்லை .உங்களைக் கண்டிருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பார். அண்ணன் என்னை விட மிகவும் அறிவாளி என்பது உங்களுக்குத் தெரியும்தானே ?”
‘அட பாவிகளா! இந்த ஜென்மத்தில் அப்படி ஒரு தப்பை இனிச் செய்வேனா?’
சந்தையில் வாங்கிய மீன் கருவாடாகி இருந்தது.
***
நன்றி : உமா வரதராஜன் | http://www.facebook.com/umavaratharajan
தாஜ் said,
16/04/2013 இல் 19:12
ஆபிதீன்…
இத்தனைக் குறைவான
வரிகளில்
எத்தனைப் பெரிய சங்கதியை
உமா வரதராஜன் சொல்லிவிட்டிருக்கிறார்!
கொஞ்ச நேரம் வியந்தேன்.
கொஞ்ச நேரம் யோசித்தேன்.
அறிவாளிகளிடம்
அணுகுவதும்தான் எத்தனைப் பெரிய அனுபவம்!
ஆபிதீன் said,
16/04/2013 இல் 21:57
அறிவாளிகள் நம்மை அணுகுவதும் பெரிய அனுபவம்தான் தாஜ்.
தாஜ் said,
17/04/2013 இல் 21:05
இதையேதானே நானும் சொன்னேன்!
ஃபேஸ்புக்கில்
எத்தனை எத்தனை அறிவாளிகள்…!!!
அவர்களிடம்தான்
எத்தனையெத்தனை விசயதானங்கள்!
எத்தனையெத்தனை அவதானிப்புகள்!!!
அலுப்பதும் இல்லை!
பழகிப் போச்சு.
mca fareed said,
26/03/2015 இல் 15:27
அருமையான் கதை அந்த ச்கோதரர்களுடன் நானும் ஒரு முறை எனது காரியாலயத்தில் மாட்டிக்கொண்டு முணுமுணுத்திருக்கின்றேன்