எப்டியிருக்கீங்க – ‘யாத்ரா’ செந்திலின் கவிதை

நண்பர்  ‘யாத்ரா’ செந்திலின் இந்தக் கவிதையை இன்றுதான் பார்த்தேன் , ’கும்க்கி கும்க்கி’யின் (இந்தப் பெயர் இன்னொரு கவிதை!) ப்ளஸ்-ல்.  அற்புதம். நம்ம கூட்டாளிங்க ஏன் இப்படி கவிதை எழுத மாட்டேங்குறாங்கன்னு தெரியலே.. (தாஜை சொல்லவில்லை!). மன்னிக்கவும், இந்த வேர்ட்பிரஸ் themeல் வார்த்தைகள் மேலும் உடைகின்றன.  அசலான அமைப்பை இங்கே சென்று பாருங்கள். நன்றி.  – ஆபிதீன்

***

எப்டியிருக்கீங்க

மணவாழ்க்கை எப்டியிருக்கு
விஷேஷம் ஏதாவது
தம்பதி சமேதரா விருந்துக்கு வரணும்
வீட்ல எப்டியிருக்காங்க
ஆடிமாசம் கொலபட்னியா
புரிதல் எப்டியிருக்கு
புதுமாப்ள தொந்தரவு பண்ணாதீங்கப்பா போகட்டும்
குடிக்க்கூடாதுன்னு கன்டிஷனா
சிகரெட்டாவாது பிடிக்கலாமா
என்ன சொல்றாங்க வீட்டுக்காரம்மா
வீட்ல எங்க ஊருக்கா
பொண்டாட்டி கால் பண்றாங்களா
வீட்ல கூட்டிட்டு வரணும் கல்யாணத்துக்கு
புதுமாப்ள என்ன பண்றீங்க இந்த நேரத்துல சேட்ல
பொண்டாட்டி சமையலா
தலைதீபாவளி வாழ்த்துகள்
போன்ற இன்னபிற தருணங்களை கேள்விகளை
புன்னகையோடு கடந்துவிடுகிறேன்
நிலைக்கண்ணாடி சட்டக விளிம்பிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள்
விழுந்த புத்தகமெடுக்க குனிய கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி
ஜன்னல் விளிம்பிலிருக்கும் ஏர்பின்கள்
முந்தானை மடிப்பு குத்தப்பட்ட அரைஞான் கயிறிலிருக்கும் சேப்டிபின்
பீரோவில் சட்டைகளுக்கிடையில் விடுபட்டுப்போன உள்ளாடை
ஆர்எம்கேவியில் எடுத்த பட்டு வேட்டி சட்டை
கறை படிந்த உள்ளாடை வேட்டி
சுகித்த மெத்தை சீதனங்கள்
மோதிரம் அணிந்திருந்த மெட்டி
நலங்குமஞ்சள் பூசியிருந்தபடி
வரவேற்பறையில் நின்றபடி
நண்பர்கள் உறவினர்களோடு நின்றபடி கைகோர்த்து திரும்பிப்பார்த்தபடி
என் காதலிகளுடன் நின்றபடி
அவள் காதலர்களுடன் நின்றபடி
முதுகுகளில் சாய்ந்தபடி
உணவுமேசையில் ஊட்டியபடி
மெட்டியணிவித்தபடி மாலைமாற்றியபடி
மாங்கல்ய முடிச்சிட்டபடி தலைசுற்றி திலகமிட்டபடி
யாரையோ பார்த்து சிரித்தபடி தோளில் சாய்ந்தபடி
நெற்றிசரியுமவள் முன்கேசம் ஒதுக்கியபடி
கழுத்தில் கைகோர்த்தபடி
பரிசுப்பொருட்களை பெற்றபடி
யாகநெருப்புக்கு நெய்வார்த்தபடி
குட்டிப்பிள்ளையாரை தொட்டிலாட்டியபடி
பாதபூசை செய்தபடி பொறிமோதிரம் அணிவித்தபடி
நீர்க்குடத்தில் மோதிரம் துழாவியபடியிருக்கும்
இறந்த கணங்களின் பிணக்குவியலான ஆல்பம்
சங்கத்தில் பாடாத கவிதை ஆயிரம் மலர்களே மலருங்கள்
ராஜாமகள் ரோஜாமலர் கோடைகாலகாற்றே குளிர் தென்றல் பாடும்பாட்டே
ராஜராஜசோழன் நான் என் இனிய பொன்நிலாவே
பூவண்ணம் போலநெஞ்சம் ஓ வசந்தராஜா தேன்சுமந்த ரோஜா
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
பொத்திவச்ச மல்லிகமொட்டு ஆயிரம் தாமரை மொட்டுக்களே
அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம்
ஆனந்த ராகம் கேட்கும்காலம் கீழ்வானிலே
அழகிய கண்ணே உறவுகள் நீயே
அழகே அழகு தேவதை ஆயிரம் பாவலர்
கொடியிலே மல்லிகப்பூ ஆத்தாடி பாவாட காத்தாட
மதுர மரிக்கொழுந்து வாசம் மேகங்கருக்கையிலே தேகங்குளிருதடி
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
அடியே மனம் நில்லுனா நிக்காதடி
புத்தம்புது காலை பொன்னிறவேளை
பூங்காவியம் பேசும் ஓவியம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
சோளம் வெதக்கயிலே சொல்லிப்புட்டு போன புள்ளே
தம்தனதம்தன தாளம் வரும் புதுராகம் வரும்
தேவதை போலொரு பெண்ணிங்கு வந்த்து நம்பி
மெட்டியொலி காத்தோடு என் நெஞ்சை தாலாட்ட
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பிவந்தேன்
உறவெனும் புதியவானில் பறந்ததே இதய மோகம்
வெள்ளிக்கொலுசுமணி வேலான கண்ணுமணி
சிறுபொன்மணியசையும் அதில் தெறிக்கும் புதுஇசையும்
ஏ ராசாத்தி ரோசாப்பூ வாவா தேவதையே திருமகளே
பூங்கதவே தாழ்திறவாய் பூவாய் பெண்பாவாய்
ஒருகிளி உருகுது உரிமையில் ப்ழகுது ஓ மைனா மைனா
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்துவர நெனக்கலயே
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும்நேரம்
மணநிகழ்வின் காட்சிகளுக்கு பொருத்தமாய் கோர்க்கப்பட்ட
மூன்றுமணிநேர மூன்று குறுந்தகடுகளை
கணினியில் அலைபேசியில் சேமித்திருந்த நிழற்படங்கள்
அலைபேசியெண்ணை எண்களை
அவ்வப்போது தட்டுப்படும் அழைப்பிதழ்கள் வாழ்த்தட்டைகள்
பெயர் அச்சிடப்பட்ட மஞ்சள் பைகள்
போல்டரில் சேமித்திருந்த வாழ்த்து மின்னஞ்சல்கள்
தூர நண்பர்களுக்கு பகிர்ந்த பிகாசா புகைப்படங்கள்
சுவரில் அலமாரியில் மேசையில் டிவிமேல்
சமையலைறையில் உணவு மேசையில் இருந்த அன்பளிப்புகள்
அன்பளிப்பு விவரங்களடங்கிய நோட்டு
அழைப்பிதழ் கொடுக்க தயாரித்த பட்டியல்
மாமா எழுதி வைத்திருந்த பார்க்கச்சென்ற
முதல் நாள் டிராவல் செலவுமுதல்
சத்திரச்செலவு வரையிலான கணக்குடைரி
சகல தடயங்களையும் அப்புறப்படுத்தியாகிவிட்டது
இன்னும் இன்னும் எங்கெங்கிருந்தோ
முளைத்துக்கொண்டேயிருக்கின்றன அழிக்க அழிக்க சுவடுகள்
முதலில் சந்தித்த கோயில் நிச்சயம் மணம் நிகழ்ந்த மண்டபம்
அழைத்துச்சென்ற மருத்துவனை சினிமா தியேட்டர்
பூ வாங்கும் கடை ஒரேமுறை நேப்கின் வாங்கிய கடை
இருக்கும் வீதி சாலை வழி கவனமாக தவிர்க்கிறேன்
பின்னால் இருத்தி அழைத்துச்சென்ற இருசக்கரவாகனத்தை
கல்லாலடித்து உடைத்துவிட்டேன்
நின்ற அமர்ந்த இடம் கோலம் நடந்த தடம் சுமந்த
அனைத்தையும் நீங்கி வந்துவிட்டேன்
சாவதற்கும் சாமர்த்தியம்வேண்டும்
என்ன செய்வது
பரிமாறப்பட்ட வார்த்தைகள் பார்வைகள் புன்னகைகள் வசைகள் சம்பவங்கள்
பூச்சிகளாய் பறக்கும் மனதை
கூந்தல் கோதியிபடியிருந்த விரல்களை
தழுவிய கரங்களை அணைத்து புரண்டுருண்ட அங்கங்களை
சுவைத்த நாக்கை ஊர்ந்த உதடுகளை
புணர்ந்த குறியை

***

நன்றி : யாத்ரா செந்தில் , கும்க்கி கும்க்கி

4 பின்னூட்டங்கள்

 1. 10/02/2013 இல் 16:25

  எனக்குப் பிடித்த கவிதை.. நன்றி அண்ணே!

  //நம்ம கூட்டாளிங்க ஏன் இப்படி கவிதை எழுத மாட்டேங்குறாங்கன்னு தெரியலே..// அதனால்தான் உங்களோடு கூட்டாளிகளாக இருக்கிறார்களோ என்னவோ!? :)))

  • abedheen said,

   10/02/2013 இல் 16:30

   //அதனால்தான் உங்களோடு கூட்டாளிகளாக இருக்கிறார்களோ என்னவோ!? // என் திறமையை சரியா உணர்ந்த கூட்டாளி நீங்கதான் சென்ஷி! செந்திலின் புகைப்படம் கிடைத்தால் அனுப்புங்கள். பதிவில் இணைத்துவிடுகிறேன்.

 2. தாஜ் said,

  12/02/2013 இல் 19:16

  இந்தக் கவிதை
  எங்க தலையை எப்படி கவர்ந்தது?
  கவிதைனாலே காததூரமாச்சே!

  ஒரு கவிதை
  வாசிப்பவனை எங்கே? எப்படித்தாக்கும்?
  என்பது பிடிப்படாததுதான்
  கவிதையின் உயிரோட்டமான அம்சம்!
  எல்லாக் கவிதைகளுக்கும்
  இந்த உயிரோட்டம் உண்டா? என்பது
  வேறொரு சர்ச்சை.

  நிஜத்தில்…
  இந்தக் கவிதை
  கவிதைப் பாங்கற்ற கவிதை!
  இதில் சொல்ல முனைந்திருக்கிற நிஜம்
  சொல்லப்பட்டிருக்கும் முறை
  தொங்கி நிற்கும் கேள்வி
  என்பனவெல்லாம் கூடி
  எழுதப்பட்டிருக்கும்
  வார்த்தைகளுக்கும் வரிகளுக்கும்
  கவிதை அந்தஸ்த்தை தந்துவிடுகிறது!

  ஒருவனின்
  அழுத்தமான மனத்துயரம்
  கவிதையாகிற போதெல்லாம்
  கவிதையைவிட
  அதனை எழுதிய கவிஞனைத்தான்
  நினைத்துப் புழுங்குவதென்பது
  என் பழக்கம்..
  இதிலும் அது நடந்திருக்கிறது..
  இதனை மறக்க
  இன்னும்
  எத்தனை நாளாகும் என்று தெரியவில்லை?

  புதுக்கவிதையின் தொடக்கமாக
  பாரதி பிள்ளையார் சுழிப்போட்டது
  இப்படியான
  வசனக் கவிதைக்குத்தான்..
  பின்னர் நாளாவட்டத்தில்
  கவிதை பல பல ரூபங்கள்
  எடுத்துக் கொண்டே இருந்த போதும்
  வசனக் கவிதை இருக்கத்தான் செய்தது..

  இன்றைக்கு வைரமுத்து
  கவிதை உலகில் ஜெயிப்பது
  இந்த வசனக் கவிதைகளால்தான்.
  நாள்தோறும் இன்றைக்கு
  ஃபேஸ்புக் பூராவும்
  வழிந்தோடுவதே
  இதையொத்தக் கவிதைகளால்தான்.
  என்ன…
  99.99 சதம் அவைகள்
  காதலைப் பேசி திரியக்கூடியவைகள்.
  இது வாழ்க்கையை, அதன் நசுங்களை பேசி
  நம்மையும் பேசவைக்கிறது.

  //தாஜை சொல்லவில்லை!//
  ஏன் சொன்னால் என்ன?
  விமர்சனம் வரவேற்க்கவேண்டிய ஒன்றல்லவா?
  நான் கேட்டத் கேட்டிற்கு
  யார் யாரையோ
  வம்பிற்கிழுத்துக் கொண்டிருக்கிறேன்!
  தவிர
  நான்
  குறைந்த பட்சம் தாடிக்கூட வைக்காத முஸ்லீம்!
  பத்வா தருவதற்கு!

  நான் பல கட்டுரைகளை
  உடைத்து
  அடுக்கில் எழுதென்பதும் கூட
  அதற்கு
  கவிதை சாயம் பூசத்தான்..
  என்றாலும், பல நேரம்
  அப்படியன முயற்ச்சியில்
  நான் எதிர்பார்த்த உயரத்தை எட்டியதில்லை.
  என்றாலும்…
  நான் எப்பவோ எழுதிய
  ‘ஆகஸ்ட்-15’ போன்ற சில முயற்ச்சிகளில்
  திருப்தியும் உண்டு.

  இப்படியெல்லாம்
  எழுதவைத்த(கவனிக்கணும்…. கவிதையாக)
  எங்க தலைக்கும்
  சென்ஷிக்கும் நன்றி.
  -தாஜ்

  • abedheen said,

   13/02/2013 இல் 09:55

   தாஜ், தலையாவது காலாவது.., ராஜசுந்தரராஜன், நேசமித்ரன், பொன்வாசுதேவன் போன்றோர் போற்றிய கவிதை எனக்கும் பிடித்தது; பகிர்ந்தேன் அவ்வளவுதான். ’ஏன்?’ என்றால் காரணம் தெரியாது. கன்றாவியான என் கதைகளைக்கூடத்தான் சமயத்தில் பிடிக்கும் எனக்கு. காரணம் சொல்ல இயலுமா? பகிர்ந்ததால்தானே உங்களிடமிருந்து பதிலும் வந்தது. சரி, நம்ம ’கூட்டாளி’ சென்ஷி உங்களுக்கு பதில் சொல்வார், இன்ஷா அல்லாஹ்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s