ஃபேஸ்புக்கில் – இமேஜ் ஃபைல்களாக – இதைப் பகிர்ந்த நண்பர் விமலாதித்தமாமல்லனுக்கு நன்றிகளுடன் பதிவிடுகிறேன். இந்த முன்னுரைக்காகவே மீண்டும் இப்போது ’மோக முள்’ளை வாங்கியிருக்கும் அவரிடம் அனுமதியெல்லாம் வாங்க மாட்டேன். டைப் செய்து உடனே இங்கே போடலேன்னா தி.ஜா பிரியனான எனக்கு தூக்கமும் வராது..! சி.ஏ.பாலன் மொழிபெயர்ப்பில் கேரள சாகித்திய அக்காதெமி வெளியீடாக மலையாளத்தில் வெளியான ’மோக முள்’ நாவலுக்குத் தி.ஜானகிராமன் எழுதிய முன்னுரை இதுவென்றும் மலையாளத்திலிருந்து தமிழாக்கியவர் சுகுமாரன் என்றும் குறிப்பு சொல்கிறது. ’தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை’ என்று சொல்லும் தி.ஜா சொல்வதைக் கேளுங்கள். நன்றி. – ஆபிதீன்
***
மோக முள் – மலையாள மொழியாக்கத்தின் முன்னுரை
1956-56 வருஷங்களில்தான் ‘மோகமுள்’ளை எழுதினேன். அப்போது எனக்கு வயது முப்பத்து நாலு.
எனக்குச் சங்கீதம் சொல்லிக்கொடுத்த ஒரு மகா வியக்தியும் எனக்கு நன்கு தெரிந்த பலரும் இந்த நாவலில் இருக்கிறார்கள். உருவத்திலும் பெயரிலும் மாத்திரமே வேறுபாடு.
இந்த நாவலின் பாதி பாகமும் என் சொந்தக் கதை என்று எண்ணுபவர்கள் உண்டு. அது சரியல்ல, சில சம்பவங்கள், மனிதர்கள், விகார விசாரங்களை வாழ்க்கையிலிருந்து எடுத்திருப்பதாகத் தெரியலாம். அப்படி எடுப்பதுதான் இலக்கியப் படைப்பு என்று சொல்வதற்கில்லை.
நான் பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறேன். வாழ்க்கை, இலக்கியம் இரண்டும் இரண்டுதான். இரண்டும் ஒன்றாகத் தெரியலாமென்றாலும் அது வெறும் தோற்றம் மட்டும்தான். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குச் சில சமயங்களில் இலக்கியம் பரிகாரங்களை வைக்கலாம். ஆனால் இலக்கியம் அந்தப் பரிகாரங்களைக் கொடுத்தே தீர வேண்டும் என்ற அபிப்பிராயம் எனக்கு இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனின் அக உலகம், அதிலிருக்கும் சிக்கல்கள், அதன் கடினமான துக்கங்கள், சித்ரவதைகள், அதன் மகிழ்ச்சி இவை எல்லாவற்றின் மொத்தமான அனுபூதிநிலைதான் இலக்கியப் படைப்பின் உந்துசக்தி. எதற்காக, எந்த நோக்கத்துக்காக எழுதுகிறேன் என்று கேட்டால் அந்தக் கேள்வி அநாவசியமானது என்றுதான் சொல்வேன். அது நீங்கள் ஏன் காதலிக்கிறீர்கள் என்று கேட்பதைப் போலத்தான் இருக்கும்.
’மோகமுள்’ளில் சங்கீதம், காதல், கல்வி, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் பார்த்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் மோகங்களும் மோக பங்கங்களும் இப்படி என்னவெல்லாமோ இருக்கின்றன. இவையெல்லாம் நாவலாசிரியனின் திடமும் தீர்மானமுமான முடிவுகளென்றோ அபிப்பிராயங்கள் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாம். தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை.
இந்த நாவலில் கட்டுக்கோப்பான கதை இல்லையென்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு சாமான்யன் ஒரு குழந்தையையோ ஒரு பூவையோ ஒரு நாய்க்குட்டியையோ தன் நெஞ்சோடு வாரியணைத்துக்கொள்வது போல விதவிதமான அனுபூதிகளை – உணர்ச்சிகளை, எண்ணங்களை, கதாபாத்திரங்களை கட்டித் தழுவிக் கொள்வதில் ஏற்படும் ஒரு பிரத்தியேக அனுபூதிதான் எனக்கு இருக்கிறது.
இந்த நாவலில் நாவலின் உத்திகள் இல்லை. பரிணாமம் இல்லை. இத்தியாதி விமர்சனங்களுமிருக்கின்றன, அந்த விமர்சனங்களைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் முன்னால் உந்திய வயிறும் ஒட்டிய பிருஷ்டமும் சூம்பிப்போன கால்களுமாகப் பிறந்துவிட்டது என்பதற்காக தன் குழந்தையை ஒரு பிச்சைக்காரிகூடக் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாளா?
தி. ஜானகிராமன்
புது தில்லை
7.6.1970
***
தொடர்புடைய இரு சுட்டிகள் :
மோகப் பெருமயக்கு – சுகுமாரன்
தாஜ் said,
17/01/2013 இல் 19:48
//’மோகமுள்’ளில் சங்கீதம், காதல், கல்வி, தமிழ்நாட்டின் கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் பார்த்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் மோகங்களும் மோக பங்கங்களும் இப்படி என்னவெல்லாமோ இருக்கின்றன. இவையெல்லாம் நாவலாசிரியனின் திடமும் தீர்மானமுமான முடிவுகளென்றோ அபிப்பிராயங்கள் என்றோ எடுத்துக் கொள்ள வேண்டாம். தராசில் நிறுத்துப் பார்ப்பதற்காக நான் எதையும் எழுதுவதில்லை.//
ஜனகிராம் ஜானகிராம்தான். வேறுயென்ன சொல்ல?
-தாஜ்