பொங்கல் வாழ்த்துகள், தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யுடன்…

தலைவர்கள் வாழ்த்தியதை – குறிப்பாக ஜி.ராமகிருஷ்ணன் சொன்னதை – வழிமொழிந்து, ‘வெட்டுப்புலி’ நாவலின் ‘எழுபதுகள்’ பிரிவின் ஆரம்பத்தில் வருகிற இந்தப்பகுதியை தேர்வு செய்தவர் ‘அல்கூஸ் அறிஞர்’ சாதிக்பாய். நண்பர் தாஜூக்கு இவர் நெருக்கமானவர் என்பதுதான் பிரச்சனையே தவிர மற்றபடி ரொம்ப நல்ல பிள்ளை. தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்வதே அவர் பணி. வாழ்க. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! – ஆபிதீன்

***

அதான் பெரியாரு…! – – தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’யிலிருந்து…

periyar-line1…பெரியார் இறந்து விடுவார் என்பதை அவர் (லட்சுமண ரெட்டி) அதற்கு முன் எப்போதும் யோசித்ததில்லை. மணி நாயுடு சொன்ன தொனியினாலா அல்லது அவருடைய வயது திடீரென்று மூளைக்குள் அப்போதுதான் உறைத்ததா என்று சொல்லத் தெரியவில்லை. உலகநியதி அப்போதுதான் அவருக்கு எட்டியதுபோல இருந்தது. அவர் நிரந்தரமாக மனிதகுலம் பற்றிச் சிந்தித்துக்கொண்டே இருப்பார், எல்லோருக்காகவும் அவர் ஒருவரே யோசித்துக்கொண்டிருப்பார் என்பதுபோல லட்சுமண ரெட்டியாருக்கு ஒரு மூடநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. நாளை முதல் நாமெல்லாம் என்ன செய்வது என்பது போல பதறினார். அதனால்தான் பெரியாரை உடனே போய்ப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். திடலுக்குப் போய்விட்டால் எந்தத் தகவலும் உடனுக்குடன் தெரிந்துவிடும் என்று விரைந்தார். பூக்கடையில் இறங்கி, பூந்தமல்லி சாலையில் செல்கிற ஏதோ ஒரு பஸ்ஸைப்பிடித்து தினத்தந்தி ஆபீஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கினார். போன செப்டம்பர் மாதம் அவருடைய பிறந்த நாளுக்கு வந்து போனதோடு சரி. தி.மு.கவில் இருந்து பிரிந்தபின்பு  எம்.ஜி.ஆரும் வந்திருந்தார். இந்த வயசில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று அவருடைய படத்துக்குத் தலைப்பு வைத்திருப்பதாகச் சற்று கேலியாக பேசிக்கொண்டிருந்த தோழர்களும் அவரை நேரில் பார்த்தபோது வாலிபன் என்று சொல்வது அத்தனை பெரிய குற்றமில்லை என்று கருத்தை மாற்றிக்கொண்டார்கள். ‘நல்ல நேரம்’னு தலைப்பு வைக்கிறாரே..அதுதான்யா புடிக்கல’ என வேறு குறையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்குக் கருணாநிதியை விட்டுப் பிரிந்து வந்த கோபமும் இருந்தது.

தி.மு.கவுக்காக எம்.ஜி.ஆரும் பாடுபட்டுத்தான் இருந்தார். கருப்பு வேட்டி, சிவப்பு சட்டையெல்லாம் போட்டு நடிப்பதும் ஒருவகை பிரசாரம்தானே? கருப்புச் சட்டை, சிவப்பு பேண்ட் என யாராவது  போடுவார்களா? போட்டால் சகித்துக்கொள்ளத்தான் முடியுமா? அண்ணா இறந்த பிறகு கருணாநிதிக்கு ஆதரவாக இருந்தவரும் அவர்தானே? என்ற யோசனைகள் லட்சுமண ரெட்டியாருக்கு அடுத்தடுத்து வந்துகொண்டிருந்தது.

திடலுக்குள் நுழையும்போதே பதட்டம் இரண்டு மடங்காகிவிட்டது. பெரியார் நல்லபடியாக இருக்கிறார் என்று யாராவது ஓடிவந்து தெரிவிக்க மாட்டார்களா? ஆங்காங்கே இருவர் மூவராக தோழர்கள் நின்று கொண்டிருந்தனர். அரங்கம் இருக்கும் இடத்துக்கு முன்புறம் விசாலமாக இடம் விட்டு பரந்து கிடந்தது. மணல்வெளி. அதில் நின்றிருந்தவர்களின் முகங்களில் சோகம் அதிகமாக இருந்தது. ஒருவேளை செய்தி வந்துவிட்டதா என்று சந்தேகமாக இருந்தது. ஏற்கனவே திடலில் நிலவிய மனஓட்டத்தோடு புதிதாக உள்ளே வந்த இவருடைய மன ஓட்டம் இணைவதற்குச் சற்றே தயக்கம் இருந்தது. நாமாக சென்று ஆரம்பிக்கலாமா, அவர்களாக ஆரம்பிப்பார்களா என்ற தயக்கம்.

நல்லவேளையாக அங்கே சௌந்தர பாண்டிய நாடார் இருந்தார். திடலுக்கு வந்தால் போனால் அருகில் வந்து வாஞ்சையாகப் பேசக் கூடிய தோழர்களில் ஒருவர் லட்சுமண ரெட்டியாரின் மன ஓட்டத்தை வாசித்துவிட்டதாலோ, என்னவோ கண்ணை நிதானமாக மூடித்திறந்து ஒன்றுமில்லை, கவலைப்பட வேண்டாம் என்றார் சைகையாலேயே.

இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. ஈசல் பூச்சிகள் பறந்து மொய்த்தன. ‘வேலூர் சி.எம்.சி.க்குக் கொண்டு போயிருக்காங்க.. ஒண்ணும் ஆகாது உக்காருங்க அண்ணாச்சி’. அரங்கத்தின் படியில் பேப்பரைத்தட்டி சுத்தம் செய்துவிட்டு அமர்ந்த சௌந்திர பாண்டியன், லட்சுமண ரெட்டியாரையும் உட்காரச் சொல்லி பணித்தார். உட்காரும் முன்பே மறுகையில் இருந்த சஞ்சிகையைக் காட்டி, ‘பார்த்தீங்களா இதை’ போல கண்ணைச் சிமிட்டினார்.

அவருடைய கையில் இருந்த சஞ்சிகையின் பெயர் நாடார்குல மித்ரன் என்றிருந்தது. ‘மொத மொதல்ல பெரியாரோட பேச்சை முழுசா இதிலதான் போட்டுருக்காங்க.. நீங்க வந்தா காட்டிடலாம்னுட்டுதான் கொண்டாந்தேன்’ என்றவாறே நீட்டினார். ‘அப்படியா?’ என்று ஆசையோடு வாங்கியவர், அது உடைந்துவிடும்படிக்கு இருந்ததால் மீண்டும் அவரிடமே கொடுத்து, ‘நீங்களே வாசிங்க, கேக்கறேன்.. நான் படிச்சா நிதானமாத்தான் படிப்பேன்’ என்றார்.

‘நானும் உங்க கேஸ்தான்.. முழுசா வேணாம்…சிலதைக் குறிச்சி வெச்சிருக்கேன் அத மட்டும் படிக்கிறேன்.. பெரியார் காங்கிரஸ்ல இருந்தபோது பேசினது.. இருபத்து நாலுல..’

‘அடேங்கப்பா.. அம்பது வருஷத்துப் பத்திரிக்க..’

‘திருவண்ணாமலையிருக்கும் தகரக் கொட்டைகையில் சுமார் 2.30 மணிக்கு மகாநாடு ஆரம்பமாயிற்று. அவ்வமையம் இந்து, முஸ்லிம், கிருஸ்துவ மதங்களின் சார்பாகக் கடவுள் வணக்கம் செய்யப்பட்ட பின்பு உபசரணக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ காவ்ய கண்ட கணபதி சாஸ்திரிகள் வரவேற்புப் பத்திரம் வாசித்து முடித்ததும் ஸ்ரீமான் இராமசாமி நாயக்கரவர்கள் அக்கிராசனராகப் பிரேரித்தார்..’

‘பெரியார் கலந்துகிட்ட கூட்டமா இது? மாத்திகீத்தி படிச்சிடப்போறீரு’

‘அட.. தமிழ் மாகாண மகாநாடு நடந்திருக்கு.. அப்பல்லாம் பெரியாரு கடவுள் சம்பந்தமா தீவிரமாகல. அதான் விசயம்.. அப்ப கான்கிரஸ்ல இல்ல இருக்காரு? மேல படிக்கிறன் கேளுங்க.. சுயராஜ்யம் என்பதற்கு பலர் பலவாறு பொருள் கூறுவது வழக்கம். சுயராஜ்யத்தின் உண்மைப் பொருளை உள்ளங்கொண்டு நோக்கும்போது உலகில் எந்தத் தேசமுஞ் சுயராஜ்யம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு தேசம் மற்றவர்களால் ஆளப்படாமல் தன்னைத்தானே ஆண்டுகொள்வது சுயராஜ்யமென்று சொல்லப்படுவதும் எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை. ருஷ்யாவில் ஜார் காலத்தில் நடைபெற்ற அரசாட்சி அந்நிய அரசாட்சியா?..’

‘எப்படி கேள்வி போட்ராறு பாருங்க.. அதான் பெரியாரு’

‘இன்னொரு எடத்தில பாருங்க.. சுயராஜ்யத்தில் ஊக்கங்கொண்டுழைக்க முற்பட்டுள்ள காங்கிரஸ் ராஜ்யத்திலாவது சுயராஜ்யமிருக்கிறதாவென்றால் அங்குமிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் எனக்குற்ற அனுபவம் காங்கிரஸிலும் இன்னும் சுயராஜ்யம் ஏற்படவில்லை என்றே சொல்லும்.. தேசத்தில் செல்வர் இறுமாப்பும் ஏழைகள் இழிவும் ஹிந்துக்கள் அச்சமும் முஸ்லிம் ஐயமும் தாழ்ந்த வகுப்பார் நடுக்கமும் ஒழியுமாறு முயல வேண்டும். இக்குறைகள் ஒழியப் பெற்றால் சுயராஜ்யமென்பது ஒருவர் கொடுக்க நாம் வாங்குவதல்லவென்பதும் அது உம்மிடமேயிருப்பதும் செவ்வனே விளங்கும்.’

‘இதுமாதி யோசிக்கிறதுக்கு இவர வுட்ட வேற யாரு இருக்கான் இந்த இந்த உலகத்தில? சுயசிந்தனை. எதனா புக்க பாத்து படிச்சுட்டு பேசற பேச்சா இது?’

லட்சுமண ரெட்டியார் சிலாகிப்பதற்கு அவகாசம் தந்துவிட்டு மேலே படிக்கலானார் சௌந்திர பாண்டி. ‘ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை தேசத்துக்கு மிக அவசியமானது. அவ்வொற்றுமைப் பேச்சும் நமது தமிழ்நாட்டுக்கு வேண்டுவதில்லை. கடவுளை வாழ்த்துகிறேன்.. கடவுளை வாழ்த்துறது யாரு..? பெரியாரு. எதுக்காக வாழ்த்திறாரு..? அடுத்த வரியப் பாருங்க.. கோயில்களை இடிப்பதும் மசூதிகளைக் கொளுத்துவதும் பெண்மக்கள் கற்பை வலிந்து குலைப்பதும் மனிதர்கள் செயல்களாக. சுயராஜ்யத்துக்கு அடிப்படையாக உள்ள ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கே கேடு நிகழ்வது கண்டு மகாத்மா இருபத்தொரு நாள் உண்ணாவிரதமிருந்தார். அவர் முயற்சி வெற்றியடைய வேண்டுமென்று நாம் கடவுளை எப்பொழுதும் வாழ்த்திய வண்ணமிருப்போமாக..’ கடவுளை வாழ்த்துறது இதுக்குத்தான் ரெட்டியாரே புரியுதா?’

‘புரியுது…புரியுது..’

‘இன்னொரு முக்கியமாக இடம் படிக்கிறன் கேளுங்க.. சில பிராமணரல்லாதவர் – ஜஸ்டிஸ் கட்சியார் – கூடி ஒரு பிற்போக்கான இயக்கத்தைக் கிளப்பியதும் அதை ஒடுக்கப் பிராமணரல்லாதார் – காங்கிரஸ் கட்சிக்காரர் – புறப்பட்டதும் கனவில் தோன்றிய நாடகங்களல்ல. காங்கிரஸ் சார்பாக டாக்டர் வரதராஜலூ நாயுடுவும் ஸ்ரீமான் வி.கல்யாண சுந்தர முதலியாரும் வேறு சிலரும் மேற்கொண்ட பேருதவியால் ஜஸ்டிஸ் கட்சி முளையாகவும் நின்று வெம்பி காய்ந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று நாடோறும் பிரார்த்தனை செய்பவருள் நானும் ஒருவன்.’

‘இது இன்னாயா புதுக்கதையா இருக்குது.. ஏம்பா நாடார் குல மித்ரன்ல ஒண்ணுகெடக்க ஒண்ணு எழுதி வெச்சிருக்கப்போறாம்பா..’

‘முடிக்கிறதுக்குள்ள அவசரபட்றீங்களே..? காங்கிரஸ்வாதியாயிருந்த டாக்டர் நாயர் திடீரென ஜஸ்டிஸ் கட்சியை தோற்றுவிக்கக் காரணங்களாக நின்றவை எவையோ, அவை இன்னும் நிற்கின்றனவா, இல்லையா என்பதை நேயர்களை கவனிப்பார்களாக. அக் காரணங்கள் அழிந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. அவை தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும்வரை பிராமணர் – பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுதலரிதே. தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டிக் காங்கிரசில் காரியதரிசியாகவும் தலைவனாகமிருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாக்கிக்கொண்டே  நான் இன்று பேசுகிறேன்.. இப்ப புரியுதா? நாடார் குல மித்ரன்ல சரியாத்தான் போட்டுருக்கனும்னு?.. இன்னும் ஒரு பத்தி படிசிர்றேன்.. அவருடைய பேச்சு சாமர்த்தியத்துக்கு இது உதாரணம்.. தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசில் உள்ள பிராமணரல்லாத தலைவர்கள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு காங்கிரஸ் தொண்டு செய்து வருகிறார்களாதலால் எக்குறை முறையீடும் வெளிக்கிளம்பாது கிடக்கிறது. மகாத்மாகாந்திக்குத் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்குள் உள்ள குறைகள் பெரிதும் தெரியா. தெரிவிப்போருமில்லை. உண்மை நிலை தெரிந்தால் அவர் எத்துணை நாள் உண்ணாவிரதம் கொள்வாரோ தெரியாது.. எப்பிடி?.. உனக்குப் பெரியார்னா உசுராச்சே.. அதான் படிச்சுக் காட்டலாம்னு கொண்டாந்தேன்.. டீ சாப்புடுவமா தோழர்?’

‘ஆனைமுத்து வருவார்னு பாத்தேன். அவரு, பெரியார் பேசுனது எல்லாத்தையும் புத்தகமா போடப்போறதா சொன்னாங்க. ‘ பேசியபடியே டீக்கடை வாசலுக்கு வந்து நின்றபடி ‘ரெண்டு டீ போடுங்கய்யா’ என்றார் லட்சுமண ரெட்டி.

‘அவரு.. வீரமணி, மணியம்மை எல்லாருமே வேலூர்லெதான் இருக்காங்க இப்போ’

‘ஓ..’

பஸ் பிடித்து நிம்மதியாக ஊர்வந்து சேர்ந்தார். லட்சுமணரெட்டியார். மீண்டும் திடலுக்கு வந்ததும் பெரியாரைப் போய்ப்பார்த்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையாக இருந்தார், மூன்றாம் நாள் பெரியார் இறந்துவிட்டதாக ரேடியோவில் செய்தி வாசித்தார்கள்.

***

tamilmagan1

நன்றி : தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், (தட்டச்சு செய்த) ஆபிதீன்!

***

சில சுட்டிகள் :

விமர்சனங்கள் : 1. கவிஞர் மதுமிதா  , 2. அருணகிரி , 3. யுவகிருஷ்ணா

பறக்கும் குதிரை!  – ‘தென்கச்சி’ பற்றி தமிழ்மகன்

5 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  14/01/2013 இல் 16:45

  ஐய்யாவை
  மீண்டும்
  உயிரூட்டி எழுப்பாமல்
  தமிழனுக்கு விமோசனம் இல்லை.

  முன்மாதிரியான தமிழகம்
  இன்றைக்கு
  பிற்போக்குவாதிகளாலும்/
  அரசியலில் கொழுக்க நினைப்பவர்களாலும்…
  முகவரி அற்று போய்கொண்டிருக்கிறோம் என்பதை
  நம் மக்கள் உணர வெகுநாள் ஆகாது.

  பெரியார் என்றால்…
  கடவுள் இல்லை என்று சொன்னவர்..
  பாவி/ ஹராமி/ என்றுதான்
  சட்டென நினைக்கிறார்களே தவிர
  தமிழகத்தின் நூறுவருட வரலாற்றையோ
  குறைந்தப் பட்சம்
  அவரது தீர்க்கமான பேச்சின்/ செய்கைகளின்
  எந்தவொரு பக்கத்தையோ
  நேரம் எடுத்து
  நம் மக்கள் வாசிக்க மாட்டேன் என்கிறார்கள்.

  பாபர் மசூதி தகர்ப்பின் போது
  இந்தியாவே கலவரம் பூண்டெழ
  தமிழகம் அமைதி காத்தது என்றால்….
  அது பெரியாரால்!

  காஞ்சி சங்கராச்சாரியை கைது செய்த போது
  இந்தியாவின் பல பகுதிகள் கொதிக்க
  தமிழகம் அமைதி காத்தது என்றால்…
  அது பெரியாரால்!

  குறிப்பாய்…
  இந்தியாவின் எல்லா மாநிலங்களும்
  பாரதிய ஜனதா வளர்ந்து செழிக்க
  தமிழகத்தில் மட்டும்
  அது முளைவிட்ட நிலையிலேயே நிற்கிறது என்றால்…
  அது பெரியாரால்!

  காலம் சுழற்ச்சிக் கொண்டது.
  சுழழும்
  தமிழக மக்கள்
  தூக்கத்தில் இருந்து கட்டாயம் விழிப்பார்கள்.
  பெரியார் எழுவார்.

  தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’க்கும்
  நண்பர் சாதிக்கிற்கும்
  தலை ஆபிதீனுக்கும்
  நன்றி.
  -தாஜ்

  • 14/01/2013 இல் 16:52

   ரொம்பச் சரியா சொல்லிருக்கீங்க.
   மக்கள் விழிப்பார்கள்
   பெரியாரும் எழுவார்..

 2. 14/01/2013 இல் 16:51

  நன்றிக்கே நன்றியா?

 3. அனாமதேய said,

  15/01/2013 இல் 07:41

  அவருக்கு பெரியார் என்று பெயர்

  வைத்த தீர்க்கதரிசி யார்?

  • தாஜ் said,

   15/01/2013 இல் 08:44

   ஏன்..???
   அதில் என்ன குழப்பம்???
   நம்மைவிட வயது கூடியவர்கள் எல்லாம்…
   நமக்கு பெரியார்கள்தானே!?
   தமிழன் பண்பாடு போற்றுவதும் அதுதானே?

   தலைவர்/ தளபதி/ புரட்சி அடைமொழி/
   ஸ்வாமி அடைமொழி…கொண்டவர்களை காட்டிலும்
   பெரியார் என்று விளிக்கும் அடைமொழி
   எளிமையான யதார்த்தமல்லவா அது?

   அவரை பெரியார் என்று விளிப்பதிலான
   தீங்கை/ முரணை/ இகழ்வை….
   இப்படியான
   ஏதேணும் ஒன்றை சுட்டுங்கள்.
   நான் உங்களோடு இன்னும் பணிவாய்
   நிறைய பேசுகிறேன்.

   குறிப்பாய்…
   இந்த பெயரற்ற பெயரில்
   பதிவிடும் வேடிகையான
   அல்லது
   சிறுப்பிள்ளைத்தனமான
   விவேகத்தை
   முதலில் கலையுங்கள்.

   பெரிய கேள்வியையெல்லாம்
   கேட்க விரும்பும் நீங்கள்
   விவேகமுடன் இருப்பதுதான் அழகு.
   சந்தோஷம்.
   நன்றி.
   -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s