‘எவர்கிரீன்’ சங்கதி – தாஜ் (1996)

‘நம் பத்திரிகைகளால் நமக்கு சாத்தியமாவது எதுவும் இல்லை என்று முற்றாய் மறுத்துவிட முடியாதுதான். ஏதோ அப்போதைக்கு அப்போது கொஞ்சம் பயன் கிட்டத்தான் செய்கிறது. அதனில் நிச்சயமான பயன் என்பது… காலம் கடத்தாது மன நோயாளியாகலாம்!’ என்கிறார் தாஜ்.

இன்னும் ஆகாதவர்கள் அவசியம் படிக்கவும் ! – ஆபிதீன்

***

கடித இலக்கியம்:

//முன்குறிப்பு: இக்கடிதத்திற்கு வயது பதினாறு! சௌதியில் பணியில் இருந்த நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் இது. கடிதத்தில் பெரிதாக பேசப்பட்டிருக்கும்  தமிழக அரசியல் குறித்து இன்றைக்கு இதை வாசித்துப் பார்த்த நிலையில், எனக்கு தோன்றுவதெல்லாம்…  நம் அரசியல் என்றைக்குமான ‘எவர்கிரீன்’ சங்கதியாகவே தெரிகிறது!. போகட்டும், 1996-ல் ஜனவரி மாதம் எழுதிய கடிதம் இது என்பதனை மட்டும் வாசகர்கள் மனதில் நிறுத்தி வாசித்தலே சரியாக இருக்கும் என்பதனை இங்கே சொல்லிக் கொள்ள ஆசை. அவ்வளவுதான். நன்றி. – தாஜ்//

**

Taj – Sirkali, 18/1/1996
——————————-

அன்புடன்

நலம்
நலமெழுதுங்கள்.

எதுவும் எழுத மாட்டேன் என்கிறீர்கள்.
ஆயிரம் கவலை இருக்கலாம்…
அதற்காக…
எழுத்தை கொன்று புதைப்பேனென்றால்… எப்படி?
எழுதுங்கள்.
எழுத்துதான் நமக்கெல்லாம் மாமருந்து.
கைக்கண்ட சர்வநிவாரணி.
மனம் விட்டு எழுதுங்கள்.

எழுதுங்கள்.
நல்லது/ கெட்டது/ நடப்பு என்று எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்.
தோன்றுபவைகளை எல்லாம் எழுதுங்கள்.
குறைந்த பட்சம் எனக்கு கடிதமேனும்
தட்டாது எழுதுங்கள்.

புது வருஷம் பிறந்தாகிவிட்டது.

புது வருஷம் என்பது என் மட்டில்.., இன்னொரு புது வருஷம். அவ்வளவுதான்! என்றாலும், சின்னச் சின்ன சந்தோஷங்கள் இல்லாமலில்லை. பழக்க தோஷத்தில், துளிர்க்கும் சந்தோஷங்கள் அவை. ஆனால், துளிர்த்த அந்தச் சந்தோஷங்களும் கூட, புதிய செய்திகளின் சூட்டால் வாடிவிடுகிறது வாடி.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் பொதுத் தேர்தல் குறித்த செய்தி வந்தாலும் வந்தது, நான் ரொம்பவும்தான் நொடிந்து போகிறேன்.

நாட்டின் சுபிட்சம் தேர்தல்களால் இல்லை என்பதாலா? தெரிந்ததுதானே!

அரசியல்வாதிகளுக்கு நம் மக்கள் மீது எப்பவுமே பிரியத்திற்கு குறைவே இல்லை! எல்லாம் பேச்சால் ஆன பிரியம்! தேர்தல் காலங்களில் அது இன்னும் வழிய செய்யும்தான்!

தமிழகத்து தேர்தல் களம் முன்னே எப்பவும் இல்லாத அளவுக்கு இப்பவே புழுதியை கிளப்ப தொடங்கிவிட்டது. கண் திறந்து பார்க்க முடியவில்லை.

தேர்தலுக்குப் பயந்து எந்த ரூபத்திலும் தப்புதல் என்பதும் முடியாது. இந்தியாவின் எந்தவொரு மூலையில் போய் மறைந்தாலும் அங்கே இரண்டு ஒலிப்பெருக்கிகள் தேர்தல் கால வாக்குறுதிகளை அங்கத்தைய மொழியில் அடித்துப் பேசும். அதன் கதறல் அச்சப்படுத்துவதாகவும் இருக்கும். இந்த மூன்று மாதக்கால வைபவத்தை சிரத்தையாக அனுபவித்தே ஆகணும்.

தமிழக காங்கிரஸ் தனது இருபத்தியெட்டு வருட கால வனவாசத்தை முடித்து கொள்ளவும், சிம்மாசனம் ஏறவும் முடிசூட்டிக் கொள்ளவும் ஆசைன்னா அப்படியொரு ஆசை!

முடிசூட்டிக் கொள்ள சிம்மாசனத்தில் அமரவேண்டும், சிம்மாசனத்தில் அமர அதன் உயரமான படிக்கட்டுகளில் ஏறவேண்டும். படிக்கட்டுகளில் ஏற காலில் வலுவேண்டும். அல்லது… இட்டுச் செல்ல ஏற்ற துணை வேண்டும்.

இட்டுச் செல்லவும் சேவகம் புரியவும் ஆதிக்கபுரிகளுக்கு அடிமைகளா கிடைக்க மாட்டார்கள்? கையசைத்தால் எல்லா சைஸ்களிலும் கிடைக்கவே செய்வார்கள். சூப்பர் ஸ்டார்களில் இருந்து மினி ஸ்டார்கள்வரை பல சைஸ்களில் சாத்தியம்!

நேரடியான உழைப்பில் போட வேண்டிய ஒரு கணக்கை, குறுக்கு வழியில் எளிதாக போட நினைக்கிறார்கள்! என்றாலும் அவர்கள் என்றைக்குமே சரியாய் விடை கண்டதாக சரித்திரமே இல்லை. பெரியவர் காமராஜோடு அந்த சுத்தத் திறன் அவர்களுக்கு போய்விட்டது.

காவேரி தந்த கலைச்செல்வி/ சமூக நீதிகாத்த வீராங்கனை/ ஆதி பராசக்தி/ தமிழ்த் தாய்/ டாக்டர் புரட்சித் தலைவி/ அம்மா/ செல்வி ஜெயலலிதாவுக்கு தேர்தல் என்பது இன்னொரு விளையாட்டு. அதுவும் ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்குமான விளையாட்டு! அவருக்கு வெற்றி சதமென்றாலும்…, தேர்தலுக்குப் பின், வெற்றித் தோல்விகள் அவரை பெரிதாய் சிதைப்பதில்லை. நிரந்தர சுகவாசி அவர்! பத்து நூறு தலைமுறைக்கு சொத்து! சக்கராயுத அமைப்பிலான அரண்! எடுபிடிகளுக்கு வெளியில் இருந்து குடும்ப சகிதமாக வீரத் தமிழ் உறவு! மரியாதைகளுக்கும் பஞ்சமில்லை! அவரின் ஆரிய பாதங்கள் கண்ணெட்டும் தூரத்தில் தெரிந்தாலே போதும், சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க சரித்திரம் கொண்ட திராவிடர்களின் பிரதிநிதிகள் எப்பவும்… எப்பவும் தயார்!

பெரியார் இந்த மண்ணில் மிகப் பெரிய வேஸ்ட்!

*
அந்தப் பக்கம்.., தமிழினத் தலைவர்/ தமிழ் வேள்/ உலக மஹா கவிஞர்/ காவிரி கொண்டான்/ டாக்டர் கலைஞர் கருணாநிதி!

பத்து நூறு தலைமுறைக்கு கவலையில்லாத சொத்து! ‘சக்கராயுத அமைப்பிலான அரண்!’ என்று செல்விக்கு சொன்னது எல்லாமே இவருக்கும் பொருந்தும்!

செல்வியின் சுகவாசி நிலை வெளிப்படை சங்கதிகள் என்றால்… சங்கத் தமிழுக்கு அது திரைமறைவு குடும்ப சகிதமான சங்கதி. மேடைப் பேச்சில் பலரும் அறிந்த லாவகமான சாதுர்யம் கொண்டவர் மட்டுமல்ல இவர்! அரசியல் அரங்கில் தேர்ந்த நம்பர் ஒன் நடிகரும் கூட!

இந்த உலக மஹா கவிஞர், சினிமா துறையில்.. குறிப்பாய் நடிப்பில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தி இருந்தால்.., தன் குணச்சித்திர நடிப்பிற்காக இந்நேரம் குறைந்தது குறைந்தது இரண்டு முறையாவது ‘ஆஸ்கர் அவார்ட்’டை தட்டிச் சென்றிருப்பார்!

இன்றைக்கு அவருக்கு, தனது கூடுதல் தள்ளாமையும்/ மக்களின் ஞாபக மறதியும் மிகப்பெரிய சாதக அம்சங்கள். இந்தச் சமூக நீதிக் காவலர், இப்பவே முதலமைச்சர் ஆகிப்போனார்! சமீபத்திய அவரது பேச்சும், பவனியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது.

தேர்தலுக்கே இன்னும் மூன்று மாதம் இருக்கிறது. தன்னையும் தன் இயக்கத்தையும் மக்கள் ஏற்று, தேர்தலில் வாக்களித்தால்தான் தான் முதலமைச்சர் என்பதனை அவர் பொருட்டாகவே எண்ணவில்லை! இது மக்களை ஜடமெனக் கருதுவதற்கு சமம். 

சாட்டிலைட் வழியே ஒரு T.V. சேனல் தொடங்க சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு கொண்டது! தமிழில் மூன்றும், கன்னடத்தில் ஒன்றும், மலையாளத்தில் ஒன்றுமாக மொத்தம் ஐந்து. ஆக 1500 கோடி முதலீட்டில் ஐந்து T.V.சேனல்கள் நடக்கின்றன! ஒவ்வொரு சேனலுக்கும் தினம் தினம் 5 லட்ச ரூபாய் நிகர வருமானமாம்! அதாவது 25 லட்சம் நாளும் கல்லா கட்டுகிறார்கள்! தமிழினக் காவலர் மறைமுகமான ‘படா’ தொழில் அதிபர் ஆகிவிட்டார்!

இந்த முறை அவரது ஆட்சிக் கனவு பலித்துவிட்டால்…. தங்களது T.V. சேனலுக்காக சொந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட ‘சாட்டிலைட்’களை பறக்கவிட்டாலும் விடலாம்! தமிழ் மக்கள் மீது சதா கவலைக் கொள்ளும் தமிழினத் தலைவரின் இந்த முன்னேற்றத்தை, தமிழ் மக்களின் முன்னேற்றமென நம்ம ஜனங்களே பெருமை பேசினாலும் பேசலாம்! ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.

*
அப்புறம்… வை.கோ.

பாம்பைத் தின்னுகிற ஊரில் நடுத் துண்டை தின்ன நினைப்பவனையே இங்கே புத்திசாலியாகப் பார்க்கப்படுகிறது. இவர் எதிர் கடை நடத்துபவராக இருக்கிறார்! இதையே இன்னும் அழுந்தச் சொன்னால்… கருவாடு சந்தைக்கு எதிராக கத்திரிக்காய் கடை நடத்துபவராக இருக்கிறார்!

அரசியலில் நேர்மைக் குறித்து நிறைய பேசுகிறார். அதனைத் தேடவும் தேடுகிறார். ஓசோனில் ஓட்டை போட்டதே உலக அரசியலின் நேர்மைதான்.

பால்வீதிக்கு பறந்து சென்று, தொலைந்தும் போன அந்த அரசியல் நேர்மையை… இவர் மேடையில் பேசி பேசி மாய்ந்து மாய்ந்து தேடுவதென்பது பேதமை. பரிதாபத்திற்குரியவர்.

நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல், ம.தி.மு.க. நிறுவனரும் தலைவருமான ‘தமிழினப் போர்வாள்’ வை.கோ.வுக்கு விசேஷ பாடத்தை கற்றுத்தரும்.

*

பொதுத் தேர்தலுக்கான நம் பத்திரிகைகளின் பங்கெடுத்து கொள்ளும் பாங்கும், அதையொட்டிய துரிதமும் இப்பவே தொடங்கிவிட்டது. ஏற்கனவே அதுகளின் குதி தாங்காது! இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதியோ குதியென்றுதான் குதிக்கும். தங்களது விற்பனை இலக்கை தொட்டாக வேண்டுமல்லவா? எப்படிக் குதிக்கவும் தயங்க மாட்டார்கள்! ஆக, பத்திரிகைகளைப் படித்துத் தீர்க்கமாய் முடிவெடுப்பதென்பது இப்பொதெல்லாம் ஆகுகிற காரியமில்லை. அதற்கு அதுகள் உதவுமென்பதும் சாத்தியமில்லை.

சில வருடங்களுக்கு முன், சிற்றிதழ்களை நோக்கி என்னையொத்தவர்கள் பாய்ச்சலை நிகழ்த்தியது இலக்கியத்திற்காக மட்டுமல்ல என்பதை இன்றைக்கு யோசிக்கிற போது திண்ணமாய் உணரமுடிகிறது. இப்போது அதுகளும் அரசியல் சார்புகளில் குளிர் காய்கின்றன.

நம் பத்திரிகைகளால் நமக்கு சாத்தியமாவது எதுவும் இல்லை என்று முற்றாய் மறுத்துவிட முடியாதுதான். ஏதோ அப்போதைக்கு அப்போது கொஞ்சம் பயன் கிட்டத்தான் செய்கிறது. அதனில் நிச்சயமான பயன் என்பது… காலம் கடத்தாது மனநோயாளியாகலாம்! அத்தனைக்கு அதன் பயன் வீரியமாகவே இருக்கிறது. நாமெல்லாம் அப்படியான வீரியத்தின் பயனை கூட்டிக் கொண்டே இருப்பவர்கள்.

நம் பத்திரிக்கைகளை இத்தனைக்கு நான் குறைப்படுவதில் அர்த்தம் குறைவென்றே நினைக்கிறேன். இந்த கருமாந்திரத்தை எல்லாம்…, கண்ணிலும் காணாத எங்கள் ஊர் நண்பன் ஒருவன் அறியவகை மனநோயாளியாகப் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறான்!

*
எனதூரில்… விறகுக் கடை நண்பரை நீங்கள் அறிவீர்கள். கடந்த முறை நீங்கள் பயணத்தில் இருந்து ஊர் வந்திருந்த போது, சீர்காழிக்கு வந்திருந்தீர்கள்.   அவனது கடையில் அமர்ந்துதான் நாம் வெகுநேரம் பேசினோம். அப்போது, அவனது அதிகப்படியான மரியாதையைக் கண்டு ரொம்பவும் சிலாகித்தீர்கள்.

‘ஜெண்டில் மேன்’ என்றும் கூறியது நினைவிருக்கிறது. ஆனால், அவனை மனநோயாளியாக நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்! நானும் சொல்லவில்லைதானே.

முதல் முறை அவன் அப்படியான போது, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ காலேஜில், மனநல மருத்துவப் பிரிவில் சேர்த்து

வைத்தியம் பார்த்ததில், பார்க்க சீர்திருத்தம் கொண்டவனாகவே திரும்பினான். இரண்டாவது முறை அவன் அப்படி பாதிக்கப்பட்ட போது… மீண்டும் கடுமையான வைத்தியம். எல்லோரையும் அறிபவனாகவும் தெளிவு கொண்டவனாகவும், பார்க்கப் பார்க்க சராசரி மனிதனாகவும் தெரிந்தான். நிலைக்கவில்லை அது. இப்போது மூன்றாவது முறை! அவனது வீட்டில், அவனுக்கு செலவு செய்து செய்து அலுத்துவிட்டதான நிலை. என்றாலும் பாருங்கள் அவர்கள் அவனை அப்படியே விட்டுவிடவும் முடியாது! அவனது மன நோய் அப்படியானது. தரம் கூடியது!

அப்படியான நேரங்களில் அவன் தன்னை இறைவனாகவே பாவிப்பவனாக மாறிவிடுவான்! சந்தோஷமும் கூடுதலாகிவிடும் அவனிடம். என்ன.., எதிர்ப்படுபவர்கள்தான் ரொம்பவும் சங்கடப்படுவார்கள். எனக்கு அப்படி இல்லை. இறைவனை நேரில் காண்பதும், உரையாடுவதென்பதும் சங்கடப்படுகிற விஷயமாயென்ன?

நீங்கள் நிரம்பத்திற்கு நிரம்ப பக்திமான் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு நிச்சயம் இறைவனைப் பார்க்க ஆவல் இருக்கவே செய்யும். பயணத்திலிருந்து  விரைவில் திரும்பும் பட்சம், இங்கே ஊருக்கு வாருங்கள். உங்களுக்கு இறைவனை காட்டுகிறேன். அவரோடு நீங்கள் பேசலாம், பழகலாம், சேர்ந்து சிரிக்கவும் சிரிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் பட்சம்… அத்தகைய அந்தஸ்தை கூட அடையலாம்.

எப்போது ஊர் வர எண்ணம்?

***

நன்றி : நண்பர் தாஜ் (தமிழ்ப்பூக்கள்) | satajdeen@gmail.com

2 பின்னூட்டங்கள்

 1. 05/08/2012 இல் 15:38

  ஆஹா; சும்மா சும்மா ஏன் தேதியையே ஞாபகப்படுத்திக்கொண்டு?

  //அன்புடன்// க்குக் கீழே,

  “என் ஆபிதீனுக்கு”ன்னு சேத்துக்கிட்டு,
  2016 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னால
  ஆபிதீனுக்கு எழுதி ஆபிதீன் பக்கங்களுக்கு
  அனுப்பிருங்க;

  என்ன பாக்குறீங்க?
  கருணாநிதி நிச்சயம் திருவாரூர்ல நிப்பார்
  நானும் ஆபிதீனும் இருப்போம்
  துபாய்ல – (பணிநிமித்தமா)
  வைகோ எதிர்பாத்த 2 சீட்டு தரலைன்னு
  கூட்டணில இருந்து, தேர்தல்ல இருந்து
  விலகத்தான் போறார்

  என்ன மாறப்போகுது?
  அரசியல் மட்டும் மாற?

 2. mohamed sadiq said,

  06/08/2012 இல் 01:41

  மாறதது மாற்றம் மட்டும்.ஆனா நம்முர் அரசியல் மட்டும் மாறவே மாறதா?ம் என்ன செய்ய,சங்க ஊதி வைப்போம் நமக்கு விடிவே கிடைக்காதா?அல்லது கிடையாதா,


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: