‘பரிக்ஷா’ ஞாநியோடு கருத்துப் பரிமாற்றம் – தாஜ்

நேர்மையோடு ஒரு பதிவு.  நான் செய்யலாமா? தாராளமாக. இந்த 6 வருடங்களில் பல நண்பர்கள் தங்களின் புதிய கதை/ கட்டுரைகளை இந்த வலைப் பக்கத்தில் வெளியிட அனுப்பியிருக்கிறார்கள். நான் அவர்களின் பெயரிலேயே அதை வெளியிட்டேனே! . சரி, இந்த கருத்துப் பரிமாற்றம் ஃபேஸ்புக்கில் ஓரிரு நாள்களுக்கு முன்பு நடந்தது. பிடித்திருந்தது. பகிர்கிறேன். இரண்டு மீசைகளில் ஞாநியின் மீசையே எனக்கு அதிகம் பிடிக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன். நன்றி. – ஆபிதீன்

***

கடற்கரய் அவர்கள்  ‘நேர்மை – மிகக் கொடிய நோய்’ என்று பதிவேற்றியிருந்தார்.  இந்தச் சிறிய வாசகம் தந்த அதிர்வில் நிறைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். நான், பெரிதும் மதிக்கும் ‘பரிக்ஷா’ ஞாநி அவர்களும் தனது கருத்தை எழுதியிருந்தார். தற்செயலாக அப் பதிவை காண நேர்ந்ததில் நானும் அதில் கலந்து கொண்டேன். எப்பவுமே ஞாநியின் எழுத்தை படித்து உள்வாங்கிக் கொள்ளும் நான், இந்த முறை அவரை மறுத்துக் கூறும்படிக்கு ஆகிவிட்டது. ஞாநி திரும்பத் திரும்ப என் கருத்தையொட்டி அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி எழுதினார். நானும் திரும்பத் திரும்ப என் நிலைப்பாட்டில் நின்றபடிக்கே எழுதிக் கொண்டிருந்தேன்.  இருவருமே அவரவர் நிலையில் இருந்து பிறழாதபடிக்கு அந்த விவாதம் ஓர் எல்லையில் முற்றுப் பெற்றுவிட்டது. அதனை இங்கே இப்ப உங்களது பார்வைக்கு வைக்கிறேன். தொடர்ந்து நீங்கள் இப்போது எங்களது சரி, தப்பு குறித்து உங்களது கருத்தை பதிவு செய்யலாம். நன்றி. –  தாஜ்

***

Gnani Sankaran:
மன அழுத்தத்தைத் தருவது நேர்மையல்ல. நேர்மையின்மைதான். இன்னொருவரின் நேர்மையின்மை நமக்கு மன அழுத்தத்தைத் தரும். நம்முடைய நேர்மைதான் நம் மனதை அதன் அழுத்தத்தை லேசாக்கும்.

Taj Deen:
அன்பிற்குறிய ஞாநிக்கு…நேர்மையா இருந்து அந்த நோயின் கொடுமையை அனுபவிக்கிறதால்தான் சொல்றேன்… ‘நேர்மை மிகக் கொடிய நோயேதான். எந்த மன அழுத்தம் வந்து, எந்த அரசியல்வாதி/பணவாதி/ கோணல் கருத்துவாதி/ அபத்த பத்திரிகை முதலாளிவாதி/ மதவாதி/ ஆன்மீகவாதி/ சாமியார்வாதி/ பெண்களை சிதைக்கும்வாதி..என்று இப்படி நாம் காணும் சமூகத்தில் எவனாவது செத்தான் என்று செய்தியுண்டா? என் ஞாநிதான் விளக்கணும்.

Gnani Sankaran:
தாஜ்.. திரும்பவும் சொல்றேன், குழப்பிக்கறீங்க. உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது. இன்னொருத்தருடைய நேர்மையின்மைதான் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துது. இன்னொருத்தருடைய நேர்மை எங்கயாவது உங்களுக்கு மன அழுத்தம் தருமா? தராது. மகிழ்ச்சியைத்தான் தரும். நீங்க சொல்ற பட்டியல்ல இருக்கற நேர்மையற்றவர்களுக்கு ஏன் நேர்மையானவங்களால மன அழுத்தம் வரப்போகுது ? அவங்களாலதான் நமக்கு மன அழுத்தம் வரும். இன்னி வரைக்கும் நான் நேர்மையா இருக்கறதப்பத்தி எனக்கு எந்த ஸ்டெரெஸ்ஸும் இல்லை. இன்னொருத்தர் நேர்மையில்லாம இருக்கரதப்பத்தின கோபம்தான் என் பி.பிக்குக் காரணம்..

Taj Deen:
அன்பிற்குறிய ஞாநிக்கு… நான் என் சின்ன வயசு தொட்டு பலரிடம் பல நல்லவைகளை, உயர்ந்தவைகளை கற்றவன். அந்த வகையில் உங்களிடமும் எழுத்தில் நேர்மையை இன்னும் சிலவும் கற்றிருக்கிறேன். அதுபோகட்டும். //உங்களோட நேர்மையால உங்களுக்கு மன அழுத்தம் வராது// இதைப் பற்றி பேசுவோம். வருதே. இப்படியே நேர்மை நேர்மைன்னு அழிந்து கொண்டிருக்கிறோம்… உருப்படாமல் போகிறோம்… அடுத்தவர்கள் நம் பார்வையை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்களே… போன்ற இத்தியாதிகளால் மன அழுத்தம் வரத்தானே செய்கிறது. ‘ரிஃபேஸ்-50’ தினம் ஒண்ணு தின்கிற நிலையில்தான் இன்றைக்கு நான் இருக்கிறேன். அதிகத்திற்கு ஞாநி மன்னிக்கணும்.

Gnani Sankaran:
தாஜ்..நாஎனக்கு தினசரி காலையில் ஐந்து மாத்திரைகள், இரவிலும் ஐந்து, தவிர மூன்று வேளை இன்சுலின் ஊசி. என் நோய்களுக்கு என் நேர்மை நிச்சயம் காரணமே இல்லை. என் நேர்மையைப் பற்றி எனக்கு துளியும் வருத்தமோ சுயபரிதாபமோ கிடையாது. அது தேவையுமில்லை. சூழலில் இருக்கும் தவறுகள், அவை குறித்து நம்முடைய இயலாமை முதலான மன உளைச்சல்கள்தான் நம்மை பாதிக்கின்றன. ஆனால் நாம் நம் மனசாட்சிப்படி சரியாக இருக்கிறோம் என்பது பற்றிய மகிழ்ச்சியே இதற்கு மருந்து.

Taj Deen:
அன்புடன் ஞாநிக்கு.. சூழல் கிடக்கிறது. அது என்றைக்குமே திருந்தாது. ஒரு தவறு இல்லாவிட்டால் இன்னொரு தவறை நிகழ்த்தியபடிக்குத்தான் இருக்கும்.(மன்னிக்கணும், உங்களுக்குத் தெரியாது என்கிற அர்த்தத்தில் இதனை இங்கே குறிப்பிடுவதாக கருதிவிடாதீர்கள்) அது திருந்தணும் என்றுதான் விரும்புகிறோம். அதற்காக நம் ஆயுதமான எழுத்தை உபயோகிக்கிறோம். அப்படி எதையொன்றை எழுதும் போதே தெரியும் நாம் எண்ணம் சபையேறாது என்று. அதை எழுதிய கஷ்டத்திற்காக கிடைக்கும் பொழுதுகளில் பாட்டு, நகைச்சுவை, நல்ல உணவு என்று ஆற்றிக்கொள்கிறோம். வேறு வழியில்லை. இப்படி இதனால் நேர்மை நேர்மைன்னு பேசிப் பேசியே வாழ்வோடு நாமும் சிதைகிறோமே என்கிற சுய கோபம்தான் அதிகத்திற்கும் அதிகம் வருகிறது. குறைந்த பட்சம் நேர்மையாளனை எவன் ஸார் மதிக்கிறான்? சில நேரம் உங்கள் மீது கூட கோபம் வரும். இவரையெல்லாம் படிக்காமல் இருந்திருக்கலாமோ… அப்படியே படித்திருந்தாலும் மண்டையில் ஏற்றிக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே என்றும் கூட எரிச்சல் வரும். போகட்டும். நீங்கள் தினம் உபயோகிக்கிறதா எழுதி இருக்கிற மாத்திரை மருந்துகள் எனக்கு கவலையே தருகிறது. இதுதான் சமூகம் நமக்குத்தரும் பரிசு. இப்பவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… அதிகத்திற்கு மன்னிக்கவும்.

Gnani Sankaran:
நாம் விரும்பும் விஷயங்கள் எல்லாம் நம் வாழ்க்கையில் கிடைக்காமல் போகலாமே தவிர, நேர்மையினால் நாம் வாழ்வில் சிதைகிறோம் என்ற உணர்ச்சி எனக்கு எப்போதும் இல்லை.

Taj Deen:
அன்புடன்.. ஞாநி. உங்களை நான் மறுக்க மாட்டேன். நீங்கள் பாரதியையும்/ பெரியாரையும் முன்வைத்து பாதை நடக்கிறவர். நானும் அப்படியே என்றாலும்.. எனக்கு அந்தச் சிதைவு குறித்து சுய வருத்தம் உண்டு. என் பாரதி, என் பெரியார், என் ஞாநி எல்லாம் நின்று வாழ்வார்கள் என்றாலும்…, வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்கள் எனக்கு பெரிய விசயம். அவர்கள் உண்மை பேசுகிறார்கள் என்று இந்தச் சமூகம் அவர்களுக்கு தொந்தரவு தரவில்லையா என்ன? அதனால் அவர்கள் மனம் நொந்திருப்பார்களா இல்லையா? இதெல்லாம் நேர்மையால் விளையும் சங்கடங்கள் தானே. என்னமோ போங்கள் நான் இப்படிதான். மீண்டும்.., அதிகத்திற்கு மன்னியுங்கள். நன்றி.

***

நன்றி : தாஜ் ,  ஞாநி

7 பின்னூட்டங்கள்

 1. 22/07/2012 இல் 13:16

  http://thesanthri.blogspot.com/ கடற்கரய் புதிய வலைப்பூ முகவரி

 2. தாஜ் said,

  22/07/2012 இல் 13:19

  ஞானி அவர்களோடு நான் கருத்து பறிமாறியதையொட்டி, திரு அரவிந் சுவாமிநாதன் அவர்கள் என் கருத்துக்கள் மீது கருத்து வைத்தார். அவருக்கு நான் பதிலளித்தேன். வாசகர்கள் நேரம் கிடைக்குமெனில் இதனையும் சேர்த்து வாசிக்கலாம். நன்றி.
  -தாஜ்

  *
  Arvind Swaminathan
  /நேர்மை – மிக கொடிய நோய்’// நேர்மை – மிக கொடிய நோய்தான். நேர்மை என்பது இயல்பாக அல்லாமல், சூழல்களால் இருக்க நேரும் போது.

  Arvind Swaminathan
  நேர்மையற்று வாழ்ந்து வாழ்வில் ஜெயித்துக் கொண்டே இருப்பவர்களைப் பார்க்கும் போது, நாம் மட்டும் நேர்மையாக இருந்து என்ன பயன் என்று நினைக்கும் போதும் நேர்மை மிகக் கொடிய நோயாகிறது.

  Arvind Swaminathan
  நேர்மை என்பது கொள்கையல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. அதை கொள்கையாகக் கருதி வாழும் போது சமயங்களில் அது கொடிய நோயாகிறது

  Arvind Swaminathan
  இவை என் கருத்துக்கள். ஆனால் அடிப்படையில் ஒருவன் உண்மையாக, நேர்மையாக, மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்தால் ஒருபோதும் நேர்மையை நோயாகக் கருத மாட்டான். அப்படிக் கருதவும் முடியாது.

  ‎Taj Deen
  அன்பு அரவிந்…, என் பார்வையில்.. நேர்மை என்பது ஒரு பழக்கம். பழகிவிட்டப்பின் விட முடியாத, தவற விடும் போது உறுத்தல் தருகிற அளவில் பழகிவிட்ட பழக்கம். சிகிரெட் பழகியவனுக்கு அது நோய்யூட்டுவது மாதிரிதான் நேர்மையும். அதனை மகத்துவப் படுத்துகிற போதுதான் ‘அது ஒரு வாழ்க்கை முறை’ அது இதுவென்று பூச்சூட்டுகிறோம். தவிர, அடுத்தவன் நேர்மை இன்மையாக வாழ்ந்து காசு பணம் சம்பாதிப்பதை கண்டு நாம் தவற விட்ட வாழ்க்கையை எண்ணி கொள்ளும் வருத்தவல்ல என்னுடையது. நேர்மையாக வாழணும் அது இதுவென்று என்னை அழித்துக் கொண்டதை ஒரு நிலையி யோசிக்கிற போது ஏற்படும் சுய விமர்சனம். பாரதி எத்தனையோதரம் தனது இல்லாமை குறித்து புலம்பி இருக்கிறான். ஆனால், அவன் தன் நேர்மையால் வந்தடைந்தது என்று சொல்ல வில்லைதான். அவன் பெரிய மனிதன். ஞானியும் அப்படித்தான். நான் சராசரி. நான் வெளிப்படையாக சொல்கிறேன் அவ்வளவுதான். எனக்கு அடியெடுத்து கொடுத்த கடற்கராயை யாரும் கண்டுகொள்லவே மாட்டேன் என்கிறீர்களே! நன்றி அரவிந். இத்தனை எழுதவைத்தமைக்கு இன்னொரு முறை நன்றி.

  Arvind Swaminathan
  Taj Deen சார். எனக்கும் அந்த வருத்தம் உண்டு. ஆனால் வருத்தங்கள் வேறு நோய் வேறு அல்லவா? வருத்தங்கள் நீங்கி விட வாய்ப்புண்டு. ஆனால் கொடிய நோய்? நேர்மை வருத்தம் தரலாம். ஆனால் என்றும் (கூடுமானவரை) நேர்மையாக இருப்பது நிம்மதியையே தரும் என்பது என் கருத்து. நன்றி

  Taj Deen
  நேர்மையை யார் சொன்னாலும் விட முடியாது. காலேஜில் காமராஜை தேடிய காலத்தில் இருந்து, அதற்கும் முன் என் பாட்டி என்னை வளர்த்த காலத்தில் இருந்து ரத்தத்தோடு ஊரிப் போனது அது. சிகிரேட்டை யார் சொல்லியும் கூட விட இயலாதவனா நேர்மையை விட்டுவிட. என் பலமே அதுதான். எழுத்திலும் அதுதான் மிகைத்து நிற்கும். இதலாம் இப்படி யென்றால், அதற்காக சுயவிமர்சனம் செய்து கொள்வது வேண்டாததாகிவிட முடியுமா? நான் நிஜத்தில் நிற்க ஆசைப் படுவன். அதனால்தான்.. என் ஞானியிடம் நான் சுயம் சார்ந்த நிஜத்தைப் பேசினேன். மற்றப்படிக்கு நான் நேர்மைக்கு பங்கம் வராது நடப்பேன் என்று அரவிந்திடம் உறுதி செய்கிறேன். உங்களுக்கு தெரியுமா? நம்மிடம் நிஜமில்லாது போனால்… இந்த உலகத்தை விமர்சனம் செய்வதென்பதும்தான் எப்படி?

  Arvind Swaminathan
  சரி விடுங்க Taj Deen ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. நம்பிக்கை தான் வாழ்க்கை

  Taj Deen
  நம்பிக்கை தான் வாழ்க்கை.

  ***

 3. 22/07/2012 இல் 16:46

  அன்புள்ள தாஜ், நேர்மை, நேர்மையின்மை கிடக்கட்டும். ஏதோ ஒரு மாத்திரை தினமும் சாப்பிடுவதாகச் சொன்னீர்கள். முதலில் அதை நிறுத்துங்கள். கால் மணி நேரம் ஆழமாக மூச்சு விட்டு அதை கவனிக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

 4. அனாமதேய said,

  22/07/2012 இல் 18:07

  தன்னையே அறிந்தவன் ஞானி இரண்டு ஞானிகள் கலந்துரையடலில் எங்களை எங்களுக்கு காண்பித்து கொடுத்த ஆபிதின் எந்த பக்கம் மிசை பக்கமா?

 5. 22/07/2012 இல் 20:00

  நேர்மை என்றும் நிலைத்திருக்கிறது. நேர்மையின்மை நிலைப்பதுபோல் காண்பித்து நிலையாமைக்கு இட்டுச்சென்று நேரமின்மையாக்கிவிடுகிறது. ஆக நேர்மை இனமை நிலைக்க வேறொரு நேர்மையின்மைத் தேவைப் படுகிறது.

 6. 23/07/2012 இல் 14:57

  தாஜ் உங்கள் ஹெல்த்தை கவனியுங்கள்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: