சீதேவி வாப்பாக்கள்…

’ஒவ்வொரு பிள்ளைக்கும் அவனவன் தகப்பன் போல் ஆத்மார்த்தமான அன்பன் இந்த உலகில் வேறு யாருண்டோ?’  என்று உருகும் ஹனீபாக்காவின் கடிதம்… என் சீதேவிவாப்பாவின் நினைவு நாளிலோ அல்லது செல்லப் பிள்ளைகளின் பிறந்தநாளிலோ பதிவிட்டிருக்கலாம். அப்போது நான் இருப்பேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்போதே அழுதுவிடுகிறேன்… – ஆபிதீன்

***

அன்புள்ள ஆபிதீன்,
என்னைக் கடந்து இருபது வருடங்கள். எனக்கே தெரியாமல் போய்விட்டது. மனசு ஏன் இவ்வளவு துக்கிக்கிறது. நான் ஏன் எழுதாமல் விட்டேன்.
இதென்ன பெரும் பழி?
யார் என் தலையில் சுமத்தினார்கள்?
உடல், உயிர், ஆன்மா என்றெல்லாம் ஆலாய்ப் பறந்தேனே.
உறவுகள் யாரும் இதற்குப் பொறுப்பில்லையா?
வீடு, பொருள், பண்டம் தேடலில் நான் காணாமல் போனேனா?
பூட்டிய அறைக்குள் நான், திறப்பு யார் கையில் சிக்கியது?
கடற்கரை எனது தளம், கையில் நூற்பந்து, வானில் பட்டம். நூலறுந்து… யார் அறுத்தார்கள்?
இன்றா, நேற்றா? இருபது வருடங்கள்.
நேற்றிரவு கைபேசியில் நளீம் சொன்னான்.
காணாமல் போன எனது பட்டத்தைக் கண்டதாக.
அவன் ஓவியன்.
மேகங்களை விதவிதமாக விரல்களில் தவழ விடுபவன்.
மேகக் கூட்டங்களெல்லாம் பெண்டுகளாக மாறி…
எனது பட்டத்தைச் சுற்றி நின்று – முத்தமிட்டு முத்தமிட்டு உயிர்விடுவதாகச் சொன்னான்.
பெண் தேவதைகளால் நிறைந்து பட்டம் மூச்சுத் திணறி…
என் அருமைப் பட்டமே!
உயிர் விட்டு, உயிர் பெற்று ஆடு புலியாட்டம்!
மேகப் பெண்களின் முத்த மழையில் மூர்ச்சையாகி வீழ்ந்து கிடக்கும் எனது பட்டம்.
எனது ஒரு துளி வியர்வையில் பட்டம் உயிர்பெற்று விடும் என்கிறான் மகன் ஸபீர்.
பட்டத்தை மீட்பதுதான் நான் பறப்பதற்கான ஒரே வழி என்கிறான் கவிஞர் நபீல்.
நாலு கால் பாய்ச்சலில் எனது குதிரை.

மெய்தான்,
சென்ற வாரத்தில் ஒரு நாள்,
உன்னுடைய சீதேவி வாப்பாவின் கடிதத்தைப் படித்தேன்.
இரண்டு மூன்று தடவை படித்தும் மனசு அடங்காமல், இன்று பிரிண்ட் எடுத்து படித்தேன்.
கொஞ்சம் ஆறுதல்.
உள்ளே பெருஞ்சுழியின் அசையும் தருணங்கள்.
ஆபிதீன், உனது சீதேவி வாப்பாவின் அதே மரணந்தான், எனது வாப்பாவையும் என்னிடமிருந்து பறித்தது, 53 வயதில். 1973ல் என்னைப் பெருந்துயர் சப்பித்துப்பிய நாள்.
ஹார்ட் அட்டாக்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் அவனவன் தகப்பன் போல் ஆத்மார்த்தமான அன்பன் இந்த உலகில் வேறு யாருண்டோ?
உனது தகப்பனாரின் கடிதம் எத்தனை சேதிகளைச் சொல்கிறது!
அன்பு மகனார், தம்பி வாப்பாவுக்கு என்று அவர் கடிதத்தை ஆரம்பிக்கும் வாஞ்சை மிகு நாலுவரிகளும் அல்லாஹ்வுடைய அர்ஷிலிருந்து வெளிப்பட்ட அச்சரங்களோ.
இயற்கை எழிலை ரசிக்க சிங்கையும் மலேயும் சிறந்த இடங்கள் என்கிறார்.
அந்த தேசத்தின் சட்டதிட்டங்களை அனுசரித்து எழுதுகிறார்.
உனது மகள் பிறந்த நாள்களில் அவர் மூச்சு முட்டும் சிரமத்தில் தவித்ததாகவும் பின்னர் ஆசுவாசமடைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
உனது மனைவி பற்றிய அவரின படப்பிடிப்பு எவ்வளவு அச்சொட்டானது என்பதை உனது மனைவியை நான் பார்த்த தருணத்தை இந்தக் கணத்தில் ஞாபகத்தில் மீட்டிப் பார்க்கிறேன்.
அந்தக் கடிதம் உனது வாப்பாவின் ஆளுமையையும் தமிழறிவையும் துலங்கச் செய்கிறது.
அவரின் உதிரத் துளியில் துளிர்த்த பிள்ளை நீ.
உனது ஆளுமையைத் தேடி நான் அங்கு வந்த போது…
உனது தாயார் ஒரு சீமாட்டி போல் ஊஞ்சலில் அமர்ந்து…
உனது தகப்பனார் சீமாந்தாரிதான்.
உன்னை விட அவருக்கு வேறு செல்வம் ஏதடா கண்ணா.
நீ கொடுத்து வைத்த பிள்ளை.
எனது வாப்பாவைப் பற்றியும் நான் எழுத ஆயிரம் ஆயிரம் உண்டு.
மக்கத்துச் சால்வையில் நானும் ஒரு முன்னீடு எழுதினேன்.
அங்கே சில காட்சிகள்.
எங்களூரில் அந்தக் காலத்தில் அஞ்சாப்பு வரை படித்த நான்கைந்து பேரில் வாப்பாவும் ஒருவர்.
அவர் எழுத்து குண்டு குண்டாக அழகாக இருக்கும்.
நாள் தவறாமல் பத்திரிகை வாசிப்பார்…
வாசலில் தெங்குகள்
காற்றில் கலையும் ஓலைக் கீற்றுகளுக்கிடையில் நிலவு துண்டு துண்டாக கோட்டுப் பாயில் கோலம் போடும்.
காசிம் படைப்போர், சீறாப்புராணம், பெண்புத்தி மாலை, ராஜநாயகம் என்றெல்லாம் வாப்பா ராகமெடுத்துப் படிப்பார்.
வாப்பாவைச் சுற்றி பெண்டுகள் வட்டமிட்டிருப்பர்.
வாப்பாவிலும் பார்க்க அதிகமாக வாசிக்கும் பழக்கம் எனக்குமுண்டு.
வாப்பா பெரும் உழைப்பாளி
வெள்ளாப்பில் எழும்பி விடுவார், ஊரிலிருந்து ஏழு மைல்களுக்கப்பால் கடற்கரை. அங்கேதான் வாப்பா மீன் வாங்கி வரப் போவார்.
அவர் தோளில் கமுகு வைரத்தில் காத்தாடி.
அதன் இரு முனைகளிலும் கயிற்று உறியில் பிரம்புக் கூடைகள் தொங்கும்.
கிறீச் கிறீச் என்ற ஓசையுடன் வாப்பாவின் தோளில் கிடக்கும் காத்தாடியின் கூடைகளிரண்டும் கூத்துப் போடும்.
கூடைக்குள் பொன்னி வாகை இலையை நீக்குப் பார்த்தால்…
வெள்ளித் துண்டுகளாக மீன்கள் மினுமினுக்கும்.
ஊர்ச் சந்தையில் வாப்பா கூவி விற்பார்.
இந்த உழைப்பில்தான் நாங்கள் ஆறு பிள்ளைகள் வளர்ந்தோம்.
மூத்த பெண் ராத்தா (அக்கா), இரண்டாம் பிள்ளை நான். நான் படிக்க வாப்பா பட்ட பாடு, கொஞ்ச நஞ்சமில்லை. எங்களூரிலிருந்து தொலை தூரமிருந்த யாழ்ப்பாணத்திற்குப் படிக்கப் போன முதற்பிள்ளை நான். நான் படிப்பிலும் விளையாட்டிலும் படுசுட்டி.
1961ல் All Iland meet ல் 100 மீற்றர் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் சாதனை படைத்தவன்.
அதே ஆண்டில் என்று நம்புகிறேன், மலேசியாவில் ஜெகதீசன் என்பவர் சாதனை படைத்தார்.
உத்தியோகம் கிடைத்து நாலு பணம் கையில் சேர்ந்த போது, வாப்பா இருக்கவில்லை.
எனது வாப்பாவுக்கு நிறைய இந்துக்களும் பௌத்தர்களும் நண்பர்கள்.
உசுக்குட்டிப் பருவத்தில் வாப்பாவோடு நானும் சில நாட்கள் கடலுக்குப் போவேன்.
அங்கு சிங்களத் தமிழும் சிங்காரத் தமிழும் காது கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.
இன்று 67 வயதில் எனது வாப்பா எனக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் மீண்டும் ஒரு தடவை படித்துப் படித்து மாய்ந்து போனேன்.
46 வயதில் வாப்பா எனக்கு எழுதிய கடிதங்கள். 67 வயதில் மகன் நான் படிக்கிறேன்.
“நம்ம புள்ளைங்க, நம்மளக் கவனிச்சிக்குமா?” என்று நண்பர் இஸ்மாயீலிடம் நீ கேட்ட கேள்வியும் அவர் சொன்ன –
“நம்ம வாப்பாவை நாம கவனிச்சோமா?”
நெஞ்சில் ஈட்டியை சொருகியதைப் போல், அந்த வார்த்தைகளில் நான் அடிபட்டுப் போனேன்.
ஆபிதீனுடைய சீதேவி வாப்பாவுக்காகவும், என்னுயிர் வாப்பாவுக்காகவும் அல்லாஹ்விடம் பிழை பொறுக்கப் பிரார்த்திக்கிறேன்.
“நம்ம புள்ளைங்க நம்மளக் கவனிச்சிக்குமா?”

அன்புடன்

ஹனீபா காக்கா (E-Mail :  slmhanifa22@gmail.com  )

***

இணைப்பு : ஹனீபா காக்காவின் சீதேவிவாப்பாவின் கடிதம் (jpg file)

***

நன்றி :  ஹனீபாக்காவுக்கும்  ஓவியம் வரைந்த தம்பி நளீமுக்கும்

7 பின்னூட்டங்கள்

 1. 16/01/2012 இல் 12:16

  ஹனிபாக்கா உருகி/உருக்கிட்டார்.

  என்ன செய்ய?
  நம் பிள்ளைகள் வாப்பா ஆன பிறகுதான்
  நமக்கு நம் வாப்பா அருமை தெரிகிறது.

  அவர்களுக்காவது
  தாம் வாப்பாவாகும்போதாவது
  தமது வாப்பா நினைவு வரட்டும்!

  நளீம் ஓவியங்களைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.
  அற்புதமான படைப்புக்கள்.
  நிச்சயம் உலகத்தரம் என்று சொல்லத் தகுதி படைத்தவை.
  (ஒரே ஒரு பிரச்சினை: எனக்கே புரிறமாதிரிக்கிது எல்லாம் 🙂 )

 2. தாஜ் said,

  16/01/2012 இல் 21:16

  ‘சீதேவி வாப்பா’க்களின்
  சங்கதிகளைப் படிக்கவும்
  எனக்கு என் ‘அத்தா’வின்
  நினைவுகள் மேலோங்கி விட்டது.
  என்ன செய்ய…
  இயற்கையின் நியதிகளை
  மனிதர்களால் என்ன செய்ய இயலும்?

  ஹனிபாக்கா…
  தனது வாப்பாவைப் பற்றி
  இன்றைக்குப் பார்த்து எழுதி இருப்பது பெரிதல்ல
  இத்தனை வயதில்
  எழுதி இருப்பதுதான்…
  பெரிதினும் பெரிது!

  உடம்பைப் பார்த்து கொள்ளுங்கள்
  ஹனிபாக்கா.
  -தாஜ்

 3. 17/01/2012 இல் 00:03

  ஆபிதீன் நானாவை உச்சி முகரும் தந்தை பாசம். தந்தையின் மடல் வாசித்து நெக்குருகும் அன்பு மகன் அள்ள குறையாத அன்பு ஹனிபாக்கா நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ இறைவனை இறைஞ்சுகின்றேன்.

 4. 17/01/2012 இல் 19:53

  எஸ்.எல்த்தின் வாப்பாவின் நினைவுகளும்,ஆப்தீன் காக்காவின் வாப்பாவின் கடிதமும் இந்த உலகிற்கு சொல்லும் செய்தி. இது தான். தந்தையின் மகிழ்ச்சியே அல்லாஹ்வின் திருப்தி. அவரின் கோபம்தான் அல்லாஹ்வின் போபம் (நபி மொழி)
  நண்பர் நழீமின் ஓவியம் மனிதனின் உழைப்பின் உன்னதத்தையும் வாழ்வின் துயரத்தையும் சொல்கிறது.அவரின் தூரிகை அழகியலை எவ்வளவு உயிர்ப்புடனும் துயரத்துடனும் சொல்கிறது.

 5. 18/01/2012 இல் 21:42

  // அப்போது நான் இருப்பேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்போதே அழுதுவிடுகிறேன்.//

  அழவெல்லாம் வேண்டாம். என்னுடைய வயதில் பத்தை வேணும்னால் உமக்கு எடுத்துகொள்ளுமே!! என்ன போச்சு இப்போ! வந்து தந்து விட்டுப் போகவா? இல்லை அங்கிருந்தே எடுத்துக்கிறியுமா? இப்ப மட்டும் என்னவாம்?? :-))

 6. lawyerajaaz said,

  31/07/2016 இல் 16:02

  இதையெல்லாம் படிக்கும் போது நான் அழுது கொண்டிருக்கிறேன்… நான் குடும்பத்தில் மூத்த பிள்ளை தம்பி 4 தங்கைகள் 4, அப்போது எனக்கு வயது 19, நழீமியாவில் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது என் வாப்பா திடீரென மரணம் அடைந்து விட்டார் … என் மூலம் அவர்கள் எந்த ஒரு சுகத்தையும் காணும் வாய்ப்பே கிடைக்கவில்லை … ஆனாலும் அவரது ஸ்த்தானத்தில் இருந்து என் தம்பி தங்கைகளைக் கவனித்து ஆளாக்கி விட்டேன் ஆனால் நான் இன்று கொஞ்சம் துவண்டு போயிருக்கும் இக் கட்டத்தில் அவர்கள் யாரும் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை… எனக்கு ஒன்றுமே புரியவில்லை …!!!

 7. Dr,W.Mohamed Younus said,

  20/10/2018 இல் 05:40

  என்ன செய்ய? உத்தியோகம் கிடைத்து நாலு பணம் கையில் சேர்ந்த போது, வாப்பா இருக்கவில்லை என் வாப்பா திடீரென மரணம் அடைந்து விட்டார்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s