இஸ்லாமிய சாயம் பூசாதீர்கள்… – ஹமீது ஜாஃபர்

அப்ப ஏன் நானா பச்சை கலர் கட்டுரைகள் மட்டும் எழுதுறீங்க?! – ஆபிதீன்

***

ஹமீது ஜாஃபர் :

நமக்கு நாமே பெருமைப்பட்டுக்கொள்வதிலும் பாராட்டிக்கொள்வதிலும் நம்மை யாரும் விஞ்சிடமுடியாது. அருட்கொடையாளர்களைப் பற்றி எழுதுவதற்காக தமிழ் இணையதளத்தில் சஞ்சரித்தபோது சில அரிய செய்திகள் கிடைத்தன. அவைகள், என்னை வியப்பில் ஆழ்த்தின. இரத்தம் உடலில் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை, இறைச்செய்தியை முதலில் உலகுக்கு எடுத்துரைத்தவர்கள் ரசூல்(சல்) அவர்கள் என்ற தகவலை, ’அல்லாஹுக்கு கால் இருக்கிறது’ என்ற உலகமகா உண்மையைக் கண்டுபிடித்த TNTJ யின் பாளையங்கோட்டை கிளை தனது வலைத்தளத்தில் கடந்த செப்டம்பர் 2009 ல் வெளியிட்டிருந்தது. அதே செய்தியை சுதி தப்பாமல் அஸ்ஃபர் – இலங்கை, தமிழ் வேல்டு நியூஸ்  , ஆஷிக் அன்வர்  தமிழ் வெப் இஸ்லாம் ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்துகொண்டு  கோரஸாக பல்லவி பாடுகிறார்கள்

அவர்கள் காட்டும் ஆதாரமும் அதியற்புதமான விளக்கமும் இதோ:-

’………………ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலில் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா? இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038

ஸஃபிய்யா (ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)

அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.’###

ஆகா…! ஆணித்தரமான விளக்கம் இல்லையா? ரசூல்(சல்) அவர்கள் அறிவிப்பதற்கு முன்பு யாருக்குமே இரத்த ஓட்டம் தெரியாது, இரத்தம் இருப்பதுகூட தெரியாது (என்று பொருள் கொள்ளவேண்டியதாகிறது). வேறுவகையில் பார்த்தால் பெருமானார் காலத்துக்கு முன் எங்கேயும் யுத்தங்கள் நடந்தது கிடையாது, யாருக்கும் காயம் பட்டது கிடையாது, இரத்த ஆறு ஓடியது கிடையாது, வைத்தியம் கிடையாது (என்றெல்லாம் பொருள்கள் தொடர்கின்றன).

 ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றான்” என்பது ஹதீஸின் சாரம். இதன் பொருள் என்ன?  அவர்கள் சொன்ன சூழல் என்ன? எப்படி விளக்கம் தேடுவது? எல்லோருடைய இரத்தத்திலும் ஷைத்தான் ஓடிக்கொண்டிருக்கின்றானா?

ஒரு பெண்ணைப் பார்க்கிறாய், அவள் அழகை ரசிக்கிறாய். அத்துடன் நின்றுகொண்டால் நால்லது. உன் பார்வையின் கோணம் மாறுகிறது அவளை அடைந்தால் என்ன என்று மனம் பேசுகிறது, மனத்தின் குரல் கேட்டவுடன் இரத்தம் சூடேறுகிறது, செயலில் இறங்க முயற்சிக்கிறாய்.
இங்கே கண் ஒரு கற்பழிப்பு, மனம் ஒரு கற்பழிப்பு, உடல் ஒரு கற்பழிப்பு செய்கிறது. இதைத்தான் அந்த ஹதீஸ் சொல்கிறது.  இதையே இப்படி திருப்பிப்பார். அன்னியப் பெண்ணைப் பார்க்கிறாய், அவள் அழகைக் கண்டதும் உன் மனம் இப்படி பேசுகிறது, “அஹா..! இத்தனை அழகாய் இருக்கும் அவள் தன்னை கணவனுக்கு அர்பணித்து, குழந்தைகளுக்காக தன்னையே தியாகம் செய்கிறாளே.! அந்த அழகு, அறிவு இவையெல்லாம் அந்த தாய்மைக்கு முன்னால் நிகராகுமா? என நினைத்தால் ஷைத்தான் ஓடும் இடத்தில் ரஹ்மான் ஓடமாட்டானா? அடுத்து, அன்னியப் பெண் இருந்த இடத்தில் உன் மனைவியை வைத்துப்பார்த்தால் அந்த எண்ணம் வருமா? இல்லை ஷைத்தான்தான் ஓடுவானா?

உலகத்திலேயே மிகப்பெரிய சக்தி sex-பெண்ணின்பம், அதற்கு எந்த வகையிலும் குறையாதது கோபம். பெண்களினால் எத்தனையோ ராஜ்யங்கள் கவிழ்ந்திருக்கின்றன, எத்தனையோ அரசர்களின் முடி காணாமல் போய்விட்ட வரலாறு உண்டு. இது முடிவற்ற தொடர். எனவே பெண்களினால் தன்னுடைய உம்மத்துக்கள் சீரழிந்துவிடக்கூடாது என்ற கருத்தில் ஷைத்தானை முன்வைத்து அந்த வார்த்தையை சொல்லியிருக்கிறார்கள். உண்மைப் பொருள் அறியாமல் இரத்த ஓட்டத்தை முதலில் பெருமானார்தான் அறிவித்தார்கள் என்றால்……..? இவர்கள் பெருமானார் அவர்களை மதித்துப் பாராட்டுகிறார்களா இல்லை…….. ஒன்றுமே புரியவில்லை.

இது பாமரர்களிடமிருந்து வந்ததல்ல, நல்ல உள்ளம் படைத்த இந்த மாதிரியான ஒரு சில (அரைவேக்காடு) மார்க்க அறிஞர்களிடமிருந்து பரவியது. இது படித்தவர்களிடம்கூட தொற்றி நிற்கிறது. சாதனையாளர் முஸ்லிமாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை, இஸ்லாமியப் பெயர் இருந்தால் போதும் இவர்கள் பெருமையடித்துக்கொள்வார்கள். ஆம், ஒபாமா தேர்தலில் நின்றபோது சில இஸ்லாமியப் பத்திரிக்கைகள் “பாரக் ஹுசைன் ஒபாமா, பாரக் ஹுசைன் ஒபாமா” என்று வரிக்கு வரி எழுதி புளகாங்கிதம் அடைந்தன. “நான் True Christian”  என்று அவர் பகிரங்கப் படுத்திய பின்னர் பாரக்கும் ஹுசைனும் ஓடிப் போய்விட்டார்கள்.

ஒரு அறிஞரோ, ஆய்வாளரோ, விஞ்ஞானியோ, நிபுணரோ முஸ்லிமாக இருப்பது பெருமையல்ல, அவர்கள் மார்க்கப் பற்றுள்ளவர்களாக இருக்கலாம், அவர்கள் மார்க்க சட்டங்களை கற்றறிந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் குர்ஆனை மனனம் செய்தவர்களாக இருக்கலாம், ஹதீஸில் விற்பன்னர்களாக இருக்கலாம், இறைமொழியும், நபிவழியும் தூண்டலாக இருந்திருக்கலாம் ஆனால் அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு குர்ஆனும் ஹதீஸும்தான் காரணம் என்பதும் உண்மையல்ல; அவை சொல்லித்தான் இவர்களுக்குத் தெரியும் என்பதும் உண்மையல்ல. “அறிவுள்ளவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன” என்கிறது, மேலும் “சிந்தியுங்கள், சிந்தியுங்கள்” என்று வலியுறுத்துகிறது குர்ஆன். நாம் என்ன செய்கிறோம்? ‘மூக்கை சிந்துகிறோம்.’

“மன் அமல பிமா அலிம அல்லமல்லாஹு மாலம் யஃலம்” –  உள்ள அறிவைக்கொண்டு செயல்பட்டால் உனக்குப் புரியாத அறிவுகளையும் அல்லாஹ் சொல்லித்தருவான் என்று ஹதீஸ் குதுஸியில் இறைவன் கூறுவதாக நபிகள்பிரான் சொல்கிறார்கள். அவர்களின் அறிவு, ஆர்வம், உழைப்பு, தீர்க்கதரிசனம்  இவைகள் கண்டுபிடிப்புகளுக்குத் துணை நின்றன. அவர்களிடம் மார்க்கமும் இருந்தது மார்க்கப் பற்றும் இருந்தது, ஆனால் மதங்களைக் கடந்து நின்றார்கள், அறிவைத் தேடி அலைந்தார்கள், இந்தியாவிலும் கிரேக்கத்திலும் எகிப்திலும் சீனத்திலுமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டார்கள். பெற்ற அறிவை தன்னுடைய உடமையாக்கிக்கொள்ளாமல் உலகுக்கு வாரி இறைத்தார்கள். அதன் பயனால் உலகு இன்றும் பலனடைந்து வருகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, அறிவை அதன் வடிவிலேயேப் பாருங்கள், தயவு செய்து அதற்கு இஸ்லாமிய சாயம் பூசாதீர்கள். உங்களிடமும் அவர்களிடமும் இருக்கும் இறைவன், ஒருவனே……!

### 400 years before Rasul (s.a), GALEN , a greek physician described blood circulation 

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

3 பின்னூட்டங்கள்

 1. தாஜ் said,

  15/09/2011 இல் 15:12

  //ஒரு சில (அரைவேக்காடு) மார்க்க அறிஞர்களிடமிருந்து பரவியது. இது படித்தவர்களிடம்கூட தொற்றி நிற்கிறது. சாதனையாளர் முஸ்லிமாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை, இஸ்லாமியப் பெயர் இருந்தால் போதும் இவர்கள் பெருமையடித்துக்கொள்வார்கள்.//

  *
  //ஒரு அறிஞரோ, ஆய்வாளரோ, விஞ்ஞானியோ, நிபுணரோ முஸ்லிமாக இருப்பது பெருமையல்ல, அவர்கள் மார்க்கப் பற்றுள்ளவர்களாக இருக்கலாம், அவர்கள் மார்க்க சட்டங்களை கற்றறிந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் குர்ஆனை மனனம் செய்தவர்களாக இருக்கலாம், ஹதீஸில் விற்பன்னர்களாக இருக்கலாம், இறைமொழியும், நபிவழியும் தூண்டலாக இருந்திருக்கலாம் ஆனால் அவர்களது கண்டுபிடிப்புகளுக்கு குர்ஆனும் ஹதீஸும்தான் காரணம் என்பதும் உண்மையல்ல; அவை சொல்லித்தான் இவர்களுக்குத் தெரியும் என்பதும் உண்மையல்ல. “அறிவுள்ளவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன” என்கிறது, மேலும் “சிந்தியுங்கள், சிந்தியுங்கள்” என்று வலியுறுத்துகிறது குர்ஆன். //

  *
  சபாஷ் நாநா.
  மிகச் சரியான சங்கதியை சொல்லி இருக்கிறீர்கள்.

  தவிர,
  மேலே நீங்கள் குறிப்பிட்டு இருப்பதும்தான்
  எத்தனைச் சரி.
  மேற்குலக இஸ்லாமிய நாடுகளில் வாழும்
  இஸ்ரேலியர்களின் பெயர்களும்
  கிருஸ்த்துவர்களின் பெயர்களும்
  இஸ்லாமியப் பெயராக….
  (அதாவது…
  அவர்கள் சொல்கிறார்கள்:
  இதெல்லாம் அரபி பெயர்கள்.
  நாங்கள் பிற மதத்தவராக இருப்பினும்
  நாங்களும் அரபிகளே!)
  இருப்பதால்,
  அவர்களது கண்டுப்பிடிப்புகளில் மகிழ்ந்து
  அவர்களும் இஸ்லாமியர்கள் என்கிற பார்வையில்
  நம்மவர்கள் ‘இனக் கீர்த்திப் பாடுவதும்தான்’
  எத்தனை பேதமை!
  இந்தக் கூத்து அவ்வப்போது நடப்பதால்
  இதனை
  இங்கே குறிப்பிடும்படி ஆனது.
  -தாஜ்

 2. Malik M said,

  16/09/2011 இல் 08:58

  இந்த மாதிரி போலியாக புலங்காகிதம் அடையும் அளப்பறைகளால் மதம் கடத்தப்பட்டு அவர்கள் அகந்தையை வணங்கும் தவ்ஹீத் வாதிகளாகிறார்கள்

 3. 17/09/2011 இல் 17:25

  மார்க்கமும் தெரியாது – மெடிசினும் தெரியாது – மெத்தப்பேச்சு மட்டுமே தெரியும் இந்த உளறாளிகளுக்கு… இஸ்லாமியர்களிடையே இருந்த கட்டுக்கோப்பை உடைத்தெறிந்தாகிவிட்டது… இனி இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் (அப்படி இருந்தால்) அதையும் கெடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கும் இந்த ஆணவம் பிடித்த கூட்டத்திற்கு அறிவி விமோசனமே கிடையாதா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s